பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, July 17, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 13

துப்பு, செயல், வெகுமதி என்ற இந்த அடிப்படையான சூத்திரத்தைக்கொண்டு யார் வேண்டுமானாலும் அவர்களுக்குத் தேவையான பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும். உடற்பயிற்சியில் இறங்க வேண்டுமா? அதற்கான துப்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன், உடற்பயிற்சிக்கான ஷூக்களை கண் எதிரில் படும்படி வைத்திருங்கள். உடற்பயிற்சி முடிந்ததும் உங்களுக்கு ஒரு வெகுமதியையும் தயார் செய்துகொள்ளுங்கள். அது ஒரு சுவை மிகுந்த ஜூஸ் ஆகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த வெகுமதி உண்மையில் உங்களிடம் ஒரு ஏக்கத்தை உண்டாக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அந்த ஜூஸை நினைத்தாலோ அல்லது உடற்பயிற்சிக்குப் பின் கிடைக்கும், சாதித்தோம் என்ற நினைவை நினைத்தாலோ உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வரவேண்டும். காலம் செல்லச் செல்ல நீங்கள் உடற்பயிற்சி என்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவிடுவீர்கள். ஏக்கம் பழக்க வளையத்தை, சுழற்சியை உறுதிபடுத்துகிறது.


நிறுவனங்களில் ஏக்கங்கள் ஏற்படுவதற்கான அறிவியல் உண்மைகள் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. தினம் தினம் நாம் சில செயல்களை செய்துவந்தாலும் அனைத்து செயல்களும் தானாகவே பழக்கமாகிவிடுவதில்லை. நீரை அதிகம் பருகவேண்டும்; உணவில் உப்பைக் குறைக்கவேண்டும்; அதிக காய்கறிகளை உண்ணவேண்டும்; எண்ணையில் வறுத்த பண்டங்களை உண்பதைக் குறைக்கவேண்டும்; வெயிலில் செல்லுமுன் சன் க்ரீமை பூசிக்கொள்ளவேண்டும், பூசிக்கொள்ளாவிட்டால் கான்சர் வர வாய்ப்புகள் அதிகம் போன்ற உண்மைகளை நம்மில் பெரும்பாலோனோர் அறிவர். நம்மில் 90 சதவிகித்த்தினர் தினம் பல் துலக்குகின்றனர். ஆனால் அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் சன் க்ரீமை உபயோகிப்பதில்லை. ஏன்?


ஏனெனில் சன் க்ரீமை தடவிக்கொள்ளவேண்டுமென்ற ஏக்கம் நம்மிடம் உருவாகவில்லை. சில நிறுவனங்கள் பற்பசையைப்போல சன் க்ரீமிலும், பற்பசையில் உள்ளது போன்ற புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வேதிப்பொருளை சேர்த்துப்பார்த்தனர். அது சன் க்ரீமை உபயோகிப்பவர்களுக்கு ஒரு வெகுமதியாக அமையும் என்று எதிர்பார்த்தனர். இதனைப்போன்று பல்வேறுபட்ட பொருட்களில், தேவையில்லாத ஆனால் ஏக்கத்தைத் தூண்டும் பொருட்களை சேர்த்துள்ளனர்.

பற்பசையைப் பொறுத்தவரை நுரைத்தல் என்பது அவசியமில்லாத ஒன்று. அதற்கு எந்தவிதமான தூய்மைப்படுத்தும் குணமும் கிடையாது. ஆனால் பற்பசையில் அது வேண்டுமென்றே தோற்றுவிக்கப்படுகிறது. மக்கள் அதனை ஒரு வெகுமதியாகப் பார்க்கிறார்கள். நுரைப்பது பற்களைத் தூய்மைப்படுத்துவதாக நம்புகிறார்கள். பற்பசையில் நுரைப்பதற்காக “சோடியம் லாரெ சல்பேட்” -sodium laureth sulfate என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது – என்று சின்க்ளைர் என்ற “Oral-B” பற்பசையின் நிறுவன அதிகாரி கூறுகிறார்.


ஏக்கங்களே பழக்கங்களைத் தொடர்வதற்கான முக்கிய இயக்க சக்தியாகிறது. ஒரு பழக்கம் உண்டாவதற்கு, எப்படி அதற்கேற்றபடி ஏக்கத்தை உருவாக்குவது என்று அறிந்துகொண்டால் எளிதாக பழக்கத்தை உருவாக்கிவிடமுடியும். தினம் தினம் மக்கள் பல்துலக்குவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும், அதனை செய்ய வேண்டும் என்று தோன்றும் ஏக்கங்களே முக்கிய காரணம்.


அதனைப்போலவே மாலையில் வீட்டுக்குத் திரும்பியவுடன், வீட்டை சுத்தம் செய்துவிட்டு, சிலர் ஃபிப்ரீஸ் ஸ்ப்ரே செய்யத் தோன்றுவதையும், அந்த ஏக்கமே இயக்குகிறது.


சாண்டியாகோ நகரில் இருந்த விளையாட்டுத்திடலில், நவம்பர் 17, 1996 ஞாயிற்றுக்கிழமை, காலம் மாலையை நெருங்கிக்கொண்டிருந்த்து. அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டு புக்கனர் குழுவுக்கும், சார்ஜர் குழுவுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த விளையாட்டு முடிய இன்னும் எட்டு நிமிடங்கள், பதினெட்டு வினாடிகள் இருந்தன. புக்கனர் குழு கிட்டத்தட்ட பதினாறு வருடங்களாக தொடர்ந்து தோற்றவண்ணமே இருந்தது. அந்தக் குழுவின் புது பயிற்றுவிப்பாளராக டோனி டங்கி சேர்ந்திருந்தார். புக்கனர் குழுவை ஒரு “மிதியடி குழு” என்று செய்தித்தாள்கள் எழுதிக்கொண்டிருந்த காலம் அது.


டங்கி தனது குழுவினர் விளையாடுவதைக் கவனித்துக்கொண்டிருந்தார். இறுதியாக சூரியனை மூடியிருந்த மேகம் விலகியதைப்போல அவர் உணர்ந்தார். விளையாட்டு நிகழும்போது அவருக்குத் தன் உணர்வை வெளிக்காட்டும் வழக்கம் கிடையாது. தனது திட்டங்கள் வெற்றிபெறுவதை அவர் கண்கூடாகக் கண்டார்.

டோனி டங்கி பயிற்றுவிப்பாளர் வாய்ப்புக்காக பல வருடங்களாகக் காத்திருந்தார். கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் துணைப்பயிற்றுவிப்பாளராக உழைத்தார். நான்கு முறைகள் நேஷனல் ஃபுட்பால் லீக் – பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இன்டர்வியூ-க்கு சென்று வந்திருக்கிறார். நான்கு முறையும் தோல்வியையே சந்தித்துள்ளார். தேர்ச்சியடையாமல் போனதற்கு டங்கியுடைய பயிற்றுவிக்கும் கொள்கைகளும் ஒரு காரணமாகக் கூறலாம்.


ஒவ்வொருமுறை தேர்வின் பொழுதும், ஆட்டக்காரர்களின் பழக்கங்களே, அவர்களை வெற்றியடைய வழிவகுக்கும் என்ற அவர் கொள்கையை யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆட்டத்தின்பொழுது முடிவு எடுக்கும் முறையை, ஆட்டக்காரர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இயல்பாகவே ஆட்டக்காரர்கள் முடிவெடுக்கவேண்டும், ஆனால் அது பழக்கத்தினால் அமையவேண்டும் என்று அவர் விரும்பினார். சரியாக, தெளிவாக இப்படித்தான் விளையாடவேண்டும் என்ற பழக்கத்தினை ஆட்டக்காரர்களிடம் ஏற்படுத்திவிட்டால், வெற்றி நிச்சயம் என்று அவர் கருதினார்.


“வெற்றியாளர்கள் அசாதாரண செயல்களையே செய்வார்கள் என்று கூறமுடியாது. சாதாரணமான செயல்களையே செய்வார்கள்.  ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள், எதிராளிகளுக்கு அவகாசம் தராத அளவுக்கு விரைவாக தன்னிச்சையாக நிகழும். அவர்களது செயல்கள் பழக்கத்தில் வந்ததாக இருக்கும்.” என்று கருதுவதாக டங்கி பேட்டியில் கூறினார்.


“அப்படியென்றால் அவர்களுக்கு விளையாட்டில் புதிய பழக்கத்தைக் கற்றுத்தரப் போகிறீர்களா?”

“இல்லை. புதிய பழக்கத்தைக் கற்றுத்தரப் போவதில்லை.” பல்லாண்டு காலமாக நேஷனல் ஃபுட்பால் லீக் – க்காக திறமையை வளர்த்து குழுவில் சேர்ந்துள்ளனர் விளையாட்டாளர்கள். ஒரு பயிற்றுவிப்பாளர் சொல்வதற்காக அந்த்த் திறமையை அவர்கள் கைவிட்டுவிடமுடியாது.


புதிய பழக்கங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, முன்னமேயே உள்ள பழக்கங்களை சரியாகக் கொண்டுவரவே டங்கி விரும்பினார். பழக்க வளையமானது தூண்டுகோல் (துப்பு), செயல்முறை, வெகுமதி என்ற மூன்று படிகளைக் கொண்டது. டங்கி அதில் நடுவில் இருந்த செயல் முறையையே சரியாக மாற்றியமைக்க விரும்பினார். ஆரம்பமும் முடிவும் (துப்பும், வெகுமதியும்) முன்னமேயே தெரிந்திருந்தால் புதிதாக ஒரு பழக்க வளையத்தை ஒருவருக்கு உண்டாக்குவது எளிது என்று டங்கிக்கு அனுபவத்தின் மூலம் தெரியும். ஒரு தீய பழக்கத்தை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என்றும் டங்கி அறிந்திருந்தார். ஒரு பழக்கத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு பதிலாக, பழைய தூண்டுகோலையும் வெகுமதியையும் மாற்றாமல் ஒரு புதிய செயலை அறிமுகப்படுத்த அவர் விரும்பினார்.


டங்கியின் பழக்கத்திற்கான விதியின்படி, தூண்டுகோலையும், வெகுமதியையும் மாற்றாமல், செயல் முறையில் மட்டும் மாற்றங்கள் செய்வதன்மூலம் பழக்கத்தை மாற்றிவிடமுடியும். எந்தவிதமான பழக்கத்தையும் இந்த முறையில் மாற்றியமைக்கமுடியும்.


டங்கியின் மேற்கண்ட பொன்விதியினால் மதுப்பழக்கம், உடல்பருமன், மனதை அலைக்கழிக்கும் சீர்கேடுகள் என்று பல அழிவு நடவடிக்கைகளை மாற்றியமைக்கமுடியும்.  எந்தவிதமான செயலையும் உண்டுபண்ணாமல், புகைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்றிவிட முயல்வது தோல்வியையே தரும். நிக்கோட்டினுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு புகைபிடிக்கவேண்டுமென்ற உணர்வு தோன்றியவுடன், ஏதாவது செயலில் ஈடுபடவேண்டிய அவசியம் உள்ளது. அப்படி செயலில் ஈடுபடாவிட்டால் அவர்களால் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வருவது கடினம்.


நான்குமுறை தேர்வாளர்களுக்கு தன்னுடைய செயல்முறைகளையும், கொள்கைகளையும் எடுத்துரைத்தபின், டங்கி தோல்வியையே சந்தித்தார். அவருக்கு பதிலாக வேறொருவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இறுதியாக 1996-ல் பக்கனர் குழுவுக்கு, அவர் நேர்காணலுக்கு வந்தார். அந்த தேர்வாளர்களிடமும், டங்கி தன் கொள்கைகளையும் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். ஒரு வழியாக பக்கனர் குழுகுவுக்கு பயிற்றுவிப்பாளராக டங்கி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


-தொடரும்



நம்புங்கள் சென்னையில்தான் இது நிகழ்கிறது :




முன்பே தெரிந்திருந்தாலும் இன்னொருமுறை பார்க்கவும் முடியும்.










12 comments:

  1. சாதாரணமான செயல்களை அசாதாரணமாக செய்தால் வெற்றி தான்...

    என்னது சென்னையிலா...?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
      ஆமாம் சென்னையில்தான்!

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. டோனி டங்கி எவ்வாறு புக்கனர் குழுவின் கால் பந்தாட்ட ஆட்டத்தில் அவர்களது செயல் முறையை மாற்றி வெற்றிக்கு வழிகோலினார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.


    காணொளியைப் பார்த்தேன். சென்னையில் அதுவும் சந்தடி மிகுந்த இராயப்பேட்டையில் தினம் காலையும் மாலையும் ஆயிரம் கிளிகள் வந்து திரு சேகர் தரும் அரிசியை சாப்பிட்டு செல்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அரிசி விற்கும் விலையில் தினம் 12 கிலோ அரிசி வாங்கி கிளிகளுக்கு உணவளிக்கும் மெக்கானிக் சேகரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அருமையான காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      ஆங்கிலத்தில் “ six degrees of seperation “ என்று சொற்றொடர் உண்டு. அதாவது ஆறுமனிதர்கள் தொடர்புகளை, தொடர்ந்து செயல்படுத்தினால் உலகம் முழுவதும் தெரிந்தவர்களாகிவிடுவார்களாம். இந்த கிளிகள் அதுபோல தொடர்புகளை ஏற்படுத்தி எத்தனைபேர்களை அழைத்துக்கொண்டு வந்துவிட்டது என்று ஆச்சரியமாக உள்ளது. திரு.சேகர் இன்றும் தொடர்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் இது மிகப்பெரிய தொண்டுதான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. அருமையான காணொளிக்கு நன்றி. இதைக் குறித்து இன்றே அறிந்தேன். டோனி எவ்வாறு வெற்றி அடையப் போகிறார் என அறியக் காத்திருக்கிறேன். மிச்சப் பதிவுகளையும் மெல்ல மெல்லப் படிக்கணும். :)

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்!

      நேரம் கிடைக்கும்பொழுது படித்துப்பாருங்கள்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. வணக்கம்
    டோனி எவ்வாறு வெற்றியடையப் போகிறார் என்பதை அறிய காத்திருக்கேன் வீடியோ மிகஅருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.ரூபன் அவர்களே!
      இயற்கை என்றுமே அழகுதானே!

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. டோனியின் வெற்றி வழிகைய் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
      வரும் பதிவுகளில் எப்படி வெற்றியடைந்தார் என்று தெரிந்துவிடும்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  6. டோனியைப் போன்றே செயல்படும் பயிற்சியாளர்களால்தான் தங்களுடைய அணி விரர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வர முடியும் என்று எண்ணுகிறேன். அணி வீரர்கள் அதுவரை கற்றிருந்ததை முழுவதுமான தன் பாணியில் மாற்ற முயலும் எந்த பயிற்சியாளரும் தோல்வியையே சந்திப்பார் என்பது நிச்சயம்.

    காணொளி வியப்பை அளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      ஆமாம். பயிற்சியாளர்கள் திறமையை வெளிக்கொணரத்தான் முடியுமே தவிர உண்டாக்கமுடியாதுதான். அதாவது அவர்காரியம் வைரத்தை பட்டைதீட்டுவது போலத்தான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete