பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, November 28, 2013

கதம்பம்-16

சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-7

மனிதனின் வளர்ச்சி நிலைகள்:

முன்பே கூறியதைப்போல ஃப்ராய்டைப் பொறுத்தவரை, மனித சமுதாயத்தின் முக்கியமான உந்துசக்தி பாலுணர்வே ஆகும். வாலிபப் பருவத்தின் முன்பான விடலைப் பருவம், மற்றும் பச்சிளம் பருவம் என்று அனைத்து பருவத்துக்கும், உண்மையான உந்துசக்தி பாலுணர்வே என்று ஃப்ராய்ட் நம்புகிறார். பருவ வயதினர்களைப் பற்றிய பாலுணர்வு கருத்துக்களை, அறிவியளாலர்கள்கூட வெளிப்படையாக பேசிக்கொள்ளாத காலகட்டத்தில், வியன்னாவில் பச்சிளம் பருவத்தின் பாலுணர்வு தூண்டுதல்களைப் பற்றி அறிவித்து அனைவரையும் ஃப்ராய்ட் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அறிவியலின்படி, உடல்சேர்க்கையின்பொழுது ஏற்படும் மனக்கிளர்ச்சி மனிதன் பிறந்ததுமுதல் இருக்கிறது என்பது உண்மைதான். இருப்பினும் ஃப்ராய்ட் அதனைப் பற்றி கூறவில்லை. ஃப்ராய்டின் கூற்றுப்படி பாலுணர்வு என்பது, உடல் சேர்க்கையை மட்டும் சார்ந்தது கிடையாது. தொடு உணர்ச்சி சார்ந்த அனைத்து, இன்பமளிக்கும் உணர்வுகளையும் பாலுணர்வு என்று அவர் குறிப்பிடுகிறார். அணைத்துக்கொள்ளுதல், முத்தமிடுதல், ஸ்பரிசம் போன்ற அனைத்தும், குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று அனைத்து பிரிவினருக்கும் இன்பமளிக்கக் கூடியதுதான் என்று எவரும் ஒத்துக்கொள்வர்.

ஃப்ராய்ட் மனிதனின் வளரும் பருவங்களில் ஒவ்வொரு பருவத்தின் பொழுதும், தோலில் இன்பத்தை அளிக்கும் பகுதி மாறுபடுகிறது என்று கூறுகிறார். ஃப்ராய்டுக்கும் பின்பு வந்த அறிவியளாலர்கள் இதனை கிளர்ச்சியூட்டும் பகுதிகள் என்று குறிப்பிடுகின்றனர்.

பிறந்ததுமுதல் பதினெட்டு மாதங்கள் வரை உள்ள பருவத்தை முதல் நிலை என்று ஃப்ராய்ட் கூறுகிறார். அந்தப் பருவத்தில் வாயின் வழியே குழந்தைகள் இன்பத்தை விரும்புகின்றன என்கிறார். பதினெட்டு மாதங்கள் முதல் நான்கு வயதுவரை அடுத்த நிலை என்று ஒவ்வொன்றாக ஃப்ராய்ட் வகைப்படுத்தி, இறுதியாக இனப்பெருக்கத்திற்கான சேர்க்கைநிலை என்று கூறுகிறார்.

 

மனிதனின் குணங்கள்  :

ஃப்ராய்டின் கூற்றுப்படி இளம்பிராயத்தில் ஏற்படும் அனுபவங்களே ஒருவருடைய குணநலன் களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இளம் பிராயத்தில் ஏற்படும் அதிர்ச்சியளிக்கும் அனுபவங்கள் அவர்களுடைய குணங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுகளும் அதனுடைய தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மனிதனுடைய வளரும் நிலைகள் அனைவருக்கும் பொதுவானதால், அத்தகைய தாக்கங்களில், அனைவருக்கும் ஒரு பொருத்தமான இசைவு இருப்பதைக் காணமுடிகிறது.

வளரும் நிலைகளில் இயல்புக்கு மாறான அனுபவங்கள் அமையப்பெற்றவர்கள், சில குறிப்பிடத்தக்க பிரச்சனைக்குறிய குணங்களைப் பெற்றிருப்பார்கள். அத்தகைய குணங்களை Fixation, Obsession அதாவது ஆட்டிப்படைக்கும் தன்மையுடைய குணங்கள் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

மழலைப் பருவத்தில் பால்குடிக்கும் அனுபவத்தைப் போதுமான அளவு பெறாதவர்கள் மந்தமான வாய் உணர்வு பெற்றவர்களாக இருப்பார்கள் என்று ஃப்ராய்ட் கூறுகிறார். அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் அடுத்தவர்களை சார்ந்திருப்பர். மற்றும் புகை, குடி போன்ற பழக்கங்களும் கொண்டவர்களாக இருக்கக்கூடும் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். அவர்கள் மழலைப்பருவத்தில் இழந்த இன்பத்தைத் தேடுவதாக கூறுகிறார்.

இதனைப்போலவே பல் முளைக்கும் பருவத்தில் கடித்துப் பழகும் இன்பத்தை இழந்தவர்கள் ஆக்ரோஷமான வாய் உணர்வு பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும் ஃப்ராய்ட் கூறுகிறார். அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு பேனா, பென்சிலைக் கடிப்பது போன்ற பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்றும் ஃப்ராய்ட் கூறுகிறார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப ஒரு முனைக்குத் தள்ளப்பட்டவர்கள் தீவிரமாக எதிர் நிலைக்கு மாறிவிடவும் வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட அதிர்ச்சிக்கு ஆளானவர்களுக்கு அதன் விளைவாக சில குறிப்பிடப்பட்ட குணங்கள் தோன்றுவதற்கு சாத்தியங்கள் உள்ளது. அல்லது அதற்கு எதிர் மாறாகவும் குணங்கள் தோன்றவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அறிவியலாளர்களுக்கு ஒரு திடமான பாதையை சரியென்று தேர்ந்தெடுப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் எப்பொழுதுமே, இதுவே இயற்கையின் குணமாக அமைந்துவிடுகிறது.

--- தொடரும்.
ப்ளாட்டோவின் பொன்மொழிகள் :


நல்ல வேலைக்காரனாக இல்லாதவனால், நல்ல முதலாளியாகவும் இருக்க முடியாது.

தேவையே புதிய படைப்புகளுக்கு தாயாகிறது.

சிறிய கற்களின் உதவியின்றி பெரிய கற்கள் நிற்பதில்லை.

மௌனம் சம்மதமாகும்

நற்செயல்கள் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது; ஏனையவர்களுக்கு அது நற்செயல் புரிய தூண்டுகோலாகிறது.

அரசியலில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கான தண்டனை, அவர்களைவிட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவதே.

அறியாமையே அனைத்து பாவங்களுக்கும் வேராகிறது.

நல்லவர்கள் நேர்மையாக, பொறுப்புடன் நடந்துகொள்ள சட்டம் தேவையில்லை; தீயவர்களுக்கு சட்டம் இருந்தும் பயனில்லை.

வெற்றிகளிலேயே பிரதானமான வெற்றி, தன்னைத்தானே வெற்றி கொள்வதேயாகும்.

மரணமடைந்தவர்களே போரின் முடிவுவரை பார்த்திருப்பார்கள்.

 

 
 
 

Thursday, November 21, 2013

கதம்பம்-15

சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-6

தவிப்பு தொடர்ச்சி:

தன் முனைப்பு மனம் தன்னைக் காத்துக்கொள்ள பல்வேறுபட்ட தற்காப்பு முறைகளை கையாள்கிறது. உண்மையில் தன்முனைப்பு நிலை மனமானது, கீழ் மனதுக்கும், மேல் மனதுக்கும் ஒத்துவரக்கூடிய அளவுக்கு சமரசம் செய்ய முயல்கிறது. அப்படி இயலாத பட்சத்தில், நிலைமையை சீரமைக்க அப்படிப்பட்ட ஒத்துவராத நிலை இல்லாததுபோல காட்டுவதற்கு முயற்சிக்கிறது.

எப்படியிருப்பினும், எல்லாவிதமான தற்காப்பு முறைகளும், ஒருவகையில் உண்மைக்குப் புறம்பான நடவடிக்கைகளே. நாம் நம்முடைய சுய உணர்வின்றி மேற்கொள்ளும் அனைத்து தற்காப்பு முறைகளும் பொய்யைத்தவிர வேறில்லை. பொதுவாக ஒரு பொய்யை மெய்ப்பிக்கவேண்டுமென்றால், அதிகமான பொய்களை தொடர்ந்து வெளிப்படுத்தவேண்டும். இப்படிப்பட்ட பொய்களின் சங்கிலி, ஒருநிலையைக் கடந்துவிட்டால், தன்முனைப்பு நிலை மனம், தன் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அத்தகைய சூழலில் தவிப்பு நிலை அதிகமாகி, ஒருவர் தன் மனதினை இழந்த நிலைக்குத் தள்ளப்ப்டுவார்.

இருப்பினும் ஃப்ராய்ட் தற்காப்பு முறைகளை, ஒரு தேவையான விஷயமாகவே பார்க்கிறார். ஒருவரை நாம், வாழ்நாள் முழுவதும், பிரச்சனைகளை எண்ணியே வாழ்ந்துகொண்டிருக்குமாறு கட்டாயப்படுத்துதல் சரியான செயல் கிடையாது. எனவே பிரச்சனைகள் இருந்தாலும், அப்படி எதுவும் இல்லாததுபோல் மனம் நினைத்துக்கொண்டு இருப்பது, வாழ்க்கையை சிறிதளவாவது மேம்படுத்தும். ஃப்ராய்டின் வழி வந்த மனோவியலாளர்கள், சில தற்காப்பு முறைகளை நேர்மறையாக செயல்படுத்தலாம் என்று கூறினர்.  ஃப்ராய்டும் “உயர் நிலையை அடைதல்” என்ற தற்காப்புமுறை, நேர்மறையாக செயல்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.

உயர் நிலையை அடைதல் (Sublimation)  :

தன்முனைப்பு நிலை மனம், தவிர்க்க நினைக்கும் உந்துதல்களை, வேட்கைகளை (பாலுணர்வு, கோபம், அச்சம் போன்று அனைத்தையும்) சமுதாயத்துக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில், சில சமயங்களில் ஆக்க சக்தியாகவும், வெளிப்படுத்தும் தற்காப்பு முறையை “உயர் நிலையை அடைதல்” என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

எப்பொழுதும் அடக்கமுடியாத கோபம் கொண்டுள்ளவர், தன்னுடைய உணர்வுகளை தனது தொழிலில் செலுத்தி, ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவோ, வேட்டைக்காரராகவோ, போர்த்தளபதியாகவோ மாறி, ஏதோ ஒருவிதத்தில் சமுதாயத்தில் இணைய முற்படலாம். பாலுணர்வு பிரச்சனைகளால் துன்பப்படுபவர்கள், தனது சிந்தனைகளை படைப்புத்திறன் மிக்க கலைகளில் செலுத்தி சமுதாயத்துக்கு பலன் தரும் வகையில் மாற்றியமைக்க முற்படலாம்.

ஃப்ராய்டைப் பொறுத்தவரை, நேர்மறையான, படைப்புத்திறன் மிக்க எல்லாவிதமான செயல்களும், பாலுணர்வின் தற்காப்பாக விளையும், உயர் நிலையை அடைதலான தற்காப்பு முறையாகும்.

--- தொடரும்.நினைவில் நின்ற சிறுகதை:
 
பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பாசன் (Maupassant, Guy de)
எழுதிய சுவீகாரப் புத்திரன் சிறுகதையை எப்பொழுது படித்தேன் என்று
நினைவில் இல்லை. ஆனால் கதையின் சாரம் மனதிலேயே தங்கிவிட்டது. தமிழில் அகிலன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டதாக ஞாபகம்.  பல குழந்தைகளையுடைய, இரண்டு ஏழைப் பெற்றோர்களில் ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுக்க மறுத்துவிடுகிறார். வாய்ப்பு அடுத்த பெற்றோர்களுக்கு போய்விடுகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன் பெரிய கனவானாக, உண்மையான பெற்றோரை சந்திக்க வருகிறான்.

சுவீகாரத்துக்கு மறுக்கப்பட்டவன் இப்பொழுது இளைஞன். வறுமையில் வாடும்
அவன், செல்வந்தனான சுவீகாரமான இளைஞனைக் காண்கிறான். தன பெற்றோரிடம், சுயநலத்துடன் எனக்கு வரவேண்டிய நல்ல வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள், என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான்.

எந்தப் பெற்றோர்கள் தவறிழைத்தார்கள்? சுயநலத்துடன் இருந்தது எந்தப்
பெற்றோர்கள்? சுவீகாரம் கொடுத்த பெற்றோர்களே சுயநலமற்ற பெற்றோர்கள் என்று நான் கருதுகிறேன். அனைவருக்கும் அப்படித் தோன்றுமென்று நான் நினைக்கவில்லை.


மனம் நெகிழ சில காணொளிகள்:


 
 
 

Thursday, November 14, 2013

கதம்பம்-14


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-5

தவிப்பு, படபடப்பு, ஆன்ஸைட்டி:

ஃப்ராய்ட் வாழ்க்கை சுலபமானது அல்ல, என்று கூறுகிறார். யதார்த்தத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தன்முனைப்பு நிலை மனமானது, கீழ் மனதுக்கும், மேல் மனதுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளைக் குறைக்கத் தன்னால் முடிந்தவரை முயற்சிக்கிறது. ஆனால் வேறுபாடு அதிகமாகி தவிப்பு அதிகமானால், தன் முனைப்பு மனம் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

தன்முனைப்பு நிலை மனமானது எதிர்மறையான இரண்டு சக்திகளுக்குமிடையில் சிலசமயங்களில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. சில நேரங்களில் அதிக அளவுக்கு அச்சமுற்றாலோ, ஆவேசப்பட்டாலோ ஒருவர் தன்னிலையை இழப்பதை இதனால் ஏற்படுகிறது. இது தவிப்பு நிலை (ஆன்சைட்டி) என்றழைக்கப்படுகிறது. சில நேரங்களில் அப்படிப்பட்ட நிலை வந்துவிடுமோ என்ற சிந்தனை வந்தாலே ஆன்சைட்டி அட்டாக் வந்துவிடவும் சாத்தியங்கள் உள்ளது. இது தன்முனைப்பு நிலை மனதுக்கு ஒரு உயிர், உயிர்வாழத் தேவையான ஆதாரங்களுக்கு ஆபத்து உள்ளது என்ற சிக்னலை இதன் மூலம் அனுப்புகிறது.

ஃப்ராய்ட் தவிப்பை மூன்றாக வரையறுக்கிறார். யதார்த்தமான தவிப்பு – இது பொதுவாக வரக்கூடிய பயம் ஆகும். ஒருவர் அருகில் ஒரு பாம்பினைத் தூக்கிப்போட்டால் வரக்கூடிய பயத்தினை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது வெளியிலிருந்து வரக்கூடியத் தவிப்பு.

அடுத்தது தார்மீகத் தவிப்பு. இது மேல் மனதிலிருந்து வரக்கூடியத் தவிப்பாகும். அவமானம், குற்றவுணர்ச்சி போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய தவிப்பு வெளியிலிருந்து வருவதில்லை.

மூன்றாவதாக நரம்பியல் தவிப்பு. இது ஒருவரது கீழ்மனதிலிருந்து வரக்கூடிய தவிப்பாகும். ஒருவர் கோபத்தினால் தன்னை இழக்கும் நிலையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும், ஏதோ காரணத்தினால் தாம் அனைத்தையும் இழக்கப்போகிறோம் என்று தோன்றும் எண்ணத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஃப்ராய்ட் இந்த மூன்றாவது வகைத் தவிப்பில் அதிக ஆர்வம் காகர். இன்றைய கால கட்டத்தில், இத்தகைய தவிப்புகளே “ஆன்சைட்டி” என்று கூறப்படுகிறது.

தவிப்பு நிலையை தன்முனைப்பு நிலை மனம் எதிர்கொள்ளல் :

இத்தகைய தருணங்களில், தன்முனைப்பு நிலை மனமானது, தவிர்க்க நினைக்கும் உந்துதல்களை திசைமாற்றி வேறு வடிவங்களாக, செயல்களாக ஒத்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்துகிறது. இந்த உத்திகள் தன்முனைப்பு மனதின் தற்காப்பு முறைகள் என்றழைக்கப்படுகிறது.

சில தற்காப்பு முறைகள்:

மறுத்தல்: பிரச்சனைகள், நிகழ்வுகள் கட்டுப்பாட்டை மீறி இருக்கும்பொழுது, மனம் அவ்வாறு பிரச்சனைகள் இருப்பதை முற்றிலுமாக மறுத்துவிடுகிறது. இது மனித சமுதாயத்தில் ஆரம்பகாலம் தொட்டே இருக்கும் தற்காப்புமுறை. ஆனால் நீண்ட காலங்களாக மறுக்க இயலாது. அப்படி மறுப்பது வேறு வடிவங்களில் தலைகாட்டுகிறது. மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பை ஒத்துக்கொள்ள மறுப்பதும், மாணவர்கள் தேர்வின் முடிவினை வாங்கிக்கொள்ளாமல் இருப்பது போன்றவைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

வேண்டுமென்றே மேற்கொள்ளும் மறதி: சிறு வயதில் நீரில் மூழ்கி மீண்ட சிறுவன், அப்படி ஒரு சம்பவம் நினைவில் இல்லை என்று கூறுவது இதற்கு எடுத்துக்காட்டாகும். இருப்பினும் திறந்த வெளியில் தண்ணீரைக் கண்டு பயம் இருப்பதாக அந்த சிறுவன் கூறியதாக தெரிய வந்தது. குடிபோதையில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர், போதை தெளிந்ததும் தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று கூறுவதும், வேண்டுமென்றே மேற்கொள்ளும் மறதிக்கு எடுத்துக்காட்டாகும். இப்படி மறக்கடிக்கப்பட்ட தற்காப்பு முறையினால் ஃபோபியா தோன்றுவதாக ஃஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

எளிமையை மேற்கொள்ளல்: அநேகமாக நீக்கப்பட்ட இந்தத் தற்காப்பு முறை இப்பொழுது ஒத்துக்கொள்ளப்படுகிறது. சில இச்சைகளிலிருந்து தப்பிக்க துறவி போன்று எளிமையான செயல்களை மேற்கொள்ள சிலர் விழைகின்றனர். அனராக்ஷியா (உண்ணாமல் உடல் மெளிதல்) வியாதியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பெண்கள் இச்சைகள் இருப்பதை நீக்குவதற்கு, உணவைக் குறைத்து இந்த நோய்க்கு ஆளாகிறார்கள். ஆண்களோ தற்காப்புக் கலைகளில் ஈடுபடுகின்றனர்.

பிரச்சனைகளிலிருந்து விலகி தோற்றமளித்தல், பிரச்சனைகளை அடுத்தவர்களுக்கு இடமாற்றம் செய்தல், பிரச்சனைகளை தன் மீதே இடமாற்றம் செய்து துன்புறுத்திக்கொள்ளுதல் என்று பல்வேறுபட்ட தற்காப்புகளை தன் முனைப்பு நிலை மனம் செயல்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால் பிரச்ச்னைகள் வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.

--- தொடரும்.

 

அன்புக்கும் உண்டோ அடக்கும் தாழ்:

அநேகமாக தெரிந்த காணொளிகள்தான் என்று நினைக்கிறேன். ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும் அதிசயிக்க வைக்கிறது.


Thursday, November 7, 2013

கதம்பம்-13


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-4

மேல்நிலை மனம்:

தன்முனைப்பு நிலைமனம் தரகுவேலைப் பார்த்தாலும், அதனுடைய செயல்திறனை ஒரு நீதிபதியின் பொறுப்பில் இருந்து மேல் நிலைமனம் கண்காணித்துக் கொண்டே உள்ளது. மேல் நிலை மனதை மனசாட்சி என்றும் அழைக்கலாம். அது தன்முனைப்பு நிலை மனம், சக்தியுடன் இச்சைகளை அடக்கி யதார்த்ததை நோக்கி செலுத்த எதிர்பார்க்கிறது. இச்சைமனம் அடுத்த கட்ட நடவடிக்கையான வெறியை நோக்கி செல்லாவண்ணம், தன்முனைப்பு நிலைமனம் கட்டுப்படுத்துகிறதா என்று இது கண்காணிக்கிறது.

பொதுவாக நமது மனசாட்சி, நமது பெற்றோர்களிடமிருந்தோ, நம்மை வளர்ப்பவர்களிடமிருந்தோ நம்மை அடைகிறது. நாம் வளர வளர, அவர்களிடம் நம்மை ஒப்பிட்டு குற்றவுணர்ச்சி வராவண்ணம் செயல்களைப் புரிகின்றோம். ஆனால் மனசாட்சி என்று ஒன்று அனைவருக்கும் இருக்கிறதா? தொடர் கொலைகளைப் புரிந்தவர்களும், சொல்லொண்ணா குற்றங்களைப் புரிந்தவர்களும் பூமியில் இருக்கின்றனரே? அத்தகையவர்களுக்கு குற்றவுணர்ச்சி கொள்ளும் மனநிலை இல்லை என்று கூறலாம். குற்றங்களைத் தடுப்பதற்கான மேல்நிலைமனக் குறைபாடு என்று குறிப்பிடலாம்.

நல்ல மனிதர்கள் கனவுகளால் மட்டுமே காண்பதை, தீய மனிதர்கள் செயல்களால் வெளிப்படுத்துகிறார்கள் என்று மனோவியலில் ஒரு சொற்றொடர் உண்டு.

 

வாழ்வதற்கான இயல்புணர்வு மற்றும் இறப்பதற்கான இயல்புணர்வு:

மனிதனுடைய நடத்தை உள்ளுணர்வுகளால் ஊக்குவிக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிறது. ஒருவரின் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்ய நரம்பியல் மண்டலங்களின் வெளிப்பாடாக அத்தகைய உள்ளுணர்வுகள் தோன்றுகின்றன. ஆரம்பதில் ஃப்ராய்ட் இவற்றை வாழ்வதற்கான உள்ளுணர்வுகள் என்று வருணித்தார். இத்தகைய உணர்வுகள், முதலாவதாக, ஒரு தனிமனிதனை அவனுக்குத் தேவையான உணவு, நீர் முதலானவற்றை தேடுவதற்கு ஊக்குவிக்கிறது. இரண்டாவதாக ஒரு இனத்தைப் பெருக்குவதற்காக உடல் இச்சைகளையும் ஊக்குவிக்கிறது. வாழ்வதற்கான இந்த இயல்புணர்வு சக்திகளை அவர் Libido என்று குறிப்பிடுகிறார். லத்தீன் மொழியில் Libido என்பதற்கு “நான் விரும்புவது” என்று பொருள்படும்.  

ஃப்ராய்ட், தனது ஆய்வுகளின் அனுபவங்களின் மூலம், வாழ்வதற்கான இயல்பு உணர்வுகளில் உடல் இச்சையே பிரதான இடத்தை வகிக்கிறது என்று எண்ணினார். மனிதன் ஒரு சமூகமாக இயங்கும் விலங்கு. அதில் காமமே முதலிடம் வகிக்கிறது என்று குறிப்பிடுகிறார். எப்படி இருப்பினும் ஃப்ராய்டினால் Libido என்ற சொல்லுக்கு, “நான் விரும்புவது” என்ற பொருள் திரிந்து இன்று “உடல் இச்சையில் ஆர்வம்” என்று பொருள்படுகிறது.

வாழ்வின் பின்னாட்களில் ஃப்ராய்ட், இயற்கை உந்துதல்கள் ஒரு தனிமனிதனின் ஆளுமையை (Personality) முழுமையாகக் கூறுவதில்லை என்று கருதினார். காமம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் அனைத்திலும் திருப்தியடைந்ததும் அடுத்தது என்ன? அமைதிதான், என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். வாழ்வதற்கான இயல்பு உணர்வுபோலவே ஒவ்வொருவரிடமும் இறப்பதற்கான இயல்பு உணர்வும் இருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும், இறக்கவேண்டும் என்ற அவா இருக்கிறது என்றார்.

ஆரம்பத்தில் வித்தியாசமான கருத்தாகத் தோன்றினாலும் ஃப்ராய்ட் கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை என்பது மிகவும் கடுமையானது; கால ஓட்டத்தில் அது ஒருவரை களைப்படையச் செய்துவிடும். நாம் ஒத்துக்கொள்ள மறுத்தாலும், உலகில் உள்ளவர்களில் அதிகமானவர்களுக்கு வாழ்க்கை ஒரு சுமைதான். இறப்பு என்பது அந்த சுமையிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது.

ஃப்ராய்ட் இதனை “நிர்வாணம் அடைவது” என்று குறிப்பிடுகிறார். நிர்வாணம் அடைவது என்பது முக்தி அடைதல் என்று பொருள்படும். உண்மையில் அது வெறுமை நிலையை அடைதல் என்ற அர்த்தத்தை அளிக்கிறது. எதுவும் இல்லாத வெறுமை நிலையை அடைவதே புத்த மதத்தின் நோக்கம் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

நமது தினசரி வாழ்விலிருந்தே இறப்பதற்கான இயல்பு உணர்வு, அதாவது நிர்வாணம் அடைவதற்கான உணர்வு இருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். அமைதியை நாடியே போதைப் பொருட்களையும், திரைப்படங்களையும், ஓய்வையும், தூக்கத்தையும் நோக்கிச் செல்கிறோம். சிலரிடத்தில் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் இறப்பதற்கான இயல்பு உணர்வே காரணம். சில சமயங்களில், இந்த உணர்விலிருந்து தப்பிக்க நினைப்பதால் அது கோபம், கொடூரம், கொலை போன்ற பாதகங்களைச் செய்யத் தூண்டுகிறது.

--- தொடரும்.

 
 
விதியா, மதியா,ஊழ்வினையா:
விதி, அதிர்ஷ்டம் ஆகியவற்றில் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் சில சமயங்களில் அவையும் கைகொடுக்கும். பிடிக்காத ஒருவர், எதிர்பாராத வெற்றியை அடைந்துவிட்டால், அந்த சமயத்தில் உபயோகப்படுத்தவாவது உதவுமே.
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிகளுக்கு வேறென்னதான் சொல்வது?
 


துணுக்கு:

அறிவியல் எனப்படுவது ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு; ஞானம் எனப்படுவது ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வு.

உங்கள் ஒவ்வொரு செயலும், ஒருநாள் உலகளாவிய நெறியாகத் திகழக்கூடிய அளவுக்கு வாழுங்கள்.

-       இமானுவேல் கேண்ட் (1724–1804)
 

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; நன்மை செய்வதே என் மதம்.

-       தாமஸ் பைன் (1737–1809)

தாமஸ் பைன் கூறியது எங்கோ கேட்டதுபோல் உள்ளது.