பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 27, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 9 : பகுதி - 2


கேத்தரின் மீண்டும் முணக ஆரம்பித்தாள் “கிடியன் . . . . . கிடியன் என்பவன்

என்னுடன் பேசமுயற்சிக்கிறான்”

“என்ன கூறுகிறான்?”

“அவன் எங்குமிருக்கிறான். அவன் ஒரு காக்கும் தேவதையைப் போன்றவன். இப்பொழுது என்னுடன் விளையாடுகிறான்.”

“உன் பாதுகாப்பாளர்களில் ஒருவனா?”

“ஆம். என்னுடன் விளையாடுகிறான். . . . . அவன் எனக்காக எப்பொழுதும் இருக்கிறான் என்று என்னை உணரவைக்க முயற்சிக்கிறான் என்று நினைக்கிறேன்.”

“கிடியன்?” மீண்டும் வினவினேன்.

“அங்கே சென்றுவிட்டான்.”

“அவனுடன் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறாயா?”

“ஆமாம். எனக்குத் தேவைப்படும்போது அவன் என்னை காப்பான்.”

“நல்லது. உன்னை சுற்றி ஆன்மாக்கள் உள்ளனவா?”

“ஆம். . . . . நிறைய ஆன்மாக்கள். அவர்கள் விருப்பப்படும்போது மட்டுமே இங்கு வருவார்கள். . . . . எப்பொழுது விரும்புகிறார்களோ அப்பொழுது வருவார்கள். சிலர் சரீர நிலையிலும், சிலர் ஸ்தூல நிலையிலும் இருப்பார்கள். சிலர் காக்கும் தேவதைகளாக செயல்படுவார்கள். நாமும் காக்கும் தேவதைகளாக இருந்திருக்கிறோம்.”

“நாம் ஏன் கற்பதற்காக சரீர நிலைக்குத் திரும்பவேண்டும்? ஸ்தூல நிலையில் நாம் கற்றுக்கொள்ள முடியாதா?”

“கற்பதற்கு பல்வேறுபட்ட நிலைகள் உள்ளன. சில விஷயங்களை சரீர நிலையில் மட்டுமே கற்றுணரமுடியும். உடல்வலியும் உறவுகளும் ஸ்தூல நிலையில் கிடையாது. இவற்றை சரீர நிலையில் மட்டுமே கற்றுணரமுடியும். ஸ்தூல நிலையில் ஆன்மா புதுப்பிக்கப்படுகிறது. ஸ்தூல நிலையில் மகிழ்ச்சியை மட்டுமே உணரமுடியும். நலமாக உணரமுடியும். ஆனால் அது நம் ஆன்மாவை புதுப்பித்துக்கொள்ளும் காலம். ஸ்தூல நிலையில் அடுத்தவர்களுடன் தொடர்புகொள்வது, சரீர நிலையில் தொடர்புகொள்வதிலிருந்து மாறுபட்டது. சரீர நிலையில் உறவுகளை கொண்டிருப்போம்.”

“எனக்குப் புரிகிறது.” என்றேன். மீண்டும் அமைதியானாள். நிமிடங்கள் கழிந்தன.

“நான் ஒரு வண்டியைக் காண்கிறேன். . . . . நீலநிற வண்டி.” மீண்டும் துவங்கினாள்.

“குழந்தைகளை எடுத்துச் செல்லும் வண்டியா?”

“இல்லை. நாம் அமர்ந்து செல்லும் வண்டி. . . . . . . நீல நிறத்தில் உள்ளது. நீலநிறத்தில் வெளிப்புறம் காணப்படுகிறது.”

“குதிரைகள் இழுத்துச்செல்லும் வண்டியா?”

“ஆம். ஆனால் யாரையும் வண்டிக்குள் பார்க்கமுடியவில்லை. பெரிய சக்கரங்களை உடைய வண்டி. இரண்டு குதிரைகள் இதனை இழுக்கின்றன. பழுப்பு நிற குதிரையும், சாம்பல் நிற குதிரையும் உள்ளன. சாம்பல் நிற குதிரையின் பெயர் ஆப்பிள். எனக்கு ஆப்பிள் குதிரையைப் பிடித்திருக்கிறது. மற்றொரு குதிரையின் பெயர் டியூக். மிகவும் அழகான குதிரைகள். அவை என்னை கடிக்காது. அந்த குதிரைகளுக்கு பெரிய கால்கள் உள்ளன.”

“நீ அங்கு இருக்கிறாயா?”

“ஆமாம். அவன் என்னைவிட மிகவும் பெரியவனாக இருக்கிறான்.”

“நீ வண்டிக்குள் அமர்ந்திருக்கிறாயா?” அவள் கூறுவதைப் பார்த்து, அவள் குழந்தையாக இருக்கிறாள் என்று யூகித்தேன்.

“குதிரைகள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் இருக்கிறான்.”

“உன்னுடைய வயது என்ன?”

“நான் குழந்தை. வயது தெரியவில்லை. எனக்கு எண்களைப் பற்றி தெரியாதென்று நினைக்கிறேன்.”

“அந்த சிறுவனை உனக்குத் தெரியுமா. உன் நண்பனா? உன் சகோதரனா?”

“அவன் என் வீட்டுக்கருகில் வசிப்பவன். ஏதோ விழா கொண்டாடுகிறார்கள். திருமணம் போன்று ஏதோ விழா.”

“யாருக்குத் திருமணம் என்று தெரிகிறதா?”

“இல்லை. அழுக்காகிக்கொள்ளாமல் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு பழுப்பு நிற முடியுள்ளது. காலணியில் பொத்தான்கள் மேல்நோக்கியுள்ளன.”

“விழாவிற்காக புதிய உடை அணிந்திருக்கிறாயா?”

“வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறேன். முன்பக்கத்தில் அழகுபடுத்தப்பட்டு பின்புறம் கட்டப்பட்டுள்ளது.”

“உன் வீடு அருகில் உள்ளதா?”

“ஆமாம் மிகப்பெரிய வீடு.” சிறுமியின் குரலில் கூறினாள்.

“அங்குதான் வசிக்கிறாயா?”

“ஆமாம். சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.”

“உன்னால் நுகர முடிகிறதா? உள்ளே சென்று பார்த்துச் சொல்.”

“ஆமாம். ரொட்டி சுடுகிறார்கள். மாமிசமும் சமைக்கிறார்கள். எங்களை வெளியே போகச் சொல்கிறார்கள்.” இந்த பதில் என்னை வியப்புக்குள்ளாக்கியது.

“உன்னை எப்படி கூப்பிடுகிறார்கள்?”

“மாண்டி . . . . . மாண்டி, எட்வர்ட்”

“எட்வர்ட், அந்த சிறுவனா?”

“ஆமாம்.”

“உன்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையா?”

“இல்லை. வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள்.”

“அனுமதிக்காதது குறித்து என்ன நினைக்கிறாய்?”

“ஒன்றும் நினைக்கவில்லை. அழுக்காகாமல் இருப்பது மிகவும் கடினம். ஒன்றுமே விளையாட முடியவில்லை.”

“நீயும் திருமணத்திற்கு செல்கிறாயா?”

“ஆமாம். நிறைய மனிதர்களைக் காண்கிறேன். இந்த அறையில், மிகவும் கூட்டமாக இருக்கிறது. மிகவும் வெப்பமான நாள். ஒரு மதகுருவும் இருக்கிறார். அவருடைய தொப்பி வேடிக்கையாக உள்ளது. கறுப்பு நிற தொப்பி. அவரது முகம் முழுவதும் தொப்பி மூடுவதுபோல் தோற்றம் அளிக்கிறது.“

“உன் குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படுகிறதா?”

“ஆமாம்”

“யாருக்குத் திருமணம்?”

“எனது சகோதரிக்கு.”

“உன்னால் அவளைப் பார்க்க முடிகிறதா? திருமண ஆடை அணிந்திருக்கிறாளா?”

“ஆமாம்.”

“மிகவும் அழகாக இருக்கிறாளா?”

“ஆமாம். அவளுடைய கூந்தலைச் சுற்றி நிறைய மலர்களை அணிந்திருக்கிறாள்.”

“அவளை உற்றுப்பார். அவளை உனக்கு அடையாளம் காணமுடிகிறதா?”

“ஆமாம். அவள் பெக்கி . . . . . ஆனால் சற்று சிறிதாக காணப்படுகிறாள்.” பெக்கி கேத்தரினுடைய சக ஊழியர். நல்ல சினேகிதி. மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும், கேத்தரினுக்கு தன் வாழ்விலும், எடுக்கும் முடிவுகளிலும் பெக்கி அளவுக்குமீறி உள்நுழைந்து அறிவுரை கூறுவதாக நினைக்கிறாள். பெக்கியுடைய எதிர்மறையாக கணிக்கக்கூடிய இயல்பும் கேத்தரினுக்குப் பிடிக்காது. என்னதான் சினேகிதியாக இருந்தாலும், குடும்ப அங்கத்தினர் இல்லையே. ஆனால் குடும்ப அங்கத்தினரையும் சினேகிதர்களையும் எப்படி வேறுபடுத்துவது என்று சரியாக புரியவில்லை.

“அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் முன்வரிசையில் நிற்கிறேன். ஏனென்றால் அவளும் அங்குதான் நிற்கிறாள்.”

“நல்லது. உன்னைச் சுற்றிப் பார். உன் பெற்றோர்களைக் காணமுடிகிறதா?”

“ஆமாம்.”

“உன்னை அவர்களுக்குப் பிடிக்கிறதா?”
 
“ஆமாம்.”

“நல்லது. அவர்களையும் நன்றாகப் பார்த்து அடையாளம் கூறு. முதலில் உன் அம்மாவைப் பார்.”

கேத்தரின் பெருமூச்சு விட்டாள். “எனக்கு யாரென்று தெரியவில்லை.”

“சரி. உன் அப்பாவைப்பார். நன்கு உற்றுப்பார்த்து யாரென்று சொல்.”

“அது ஸ்டுவர்ட்.” உடனே பதிலளித்தாள். நிகழ்கால காதலன். மீண்டும் வந்திருக்கிறான். இதைப்பற்றி ஆராய்வது ஏதாவது பயனளிக்கக்கூடும்.

“உங்கள் உறவு எப்படி உள்ளது?”

“எனக்கு என் அப்பாவை மிகவும் பிடிக்கும். . . . . என்னிடம் நன்றாக நடந்துகொள்கிறார். ஆனால் தொந்தரவாக நினைக்கிறார். குழந்தைகள் அனைவரையும் தொந்தரவாக நினைக்கிறார்.”

“உண்மையிலேயே அப்படி நினைக்கிறாரா?”

“இல்லை. எங்களுடன் விளையாடுவார் . . . . . நாங்கள் கேள்விகள் அதிகம் கேட்போம். எங்களிடம் நன்றாகப் பழகுவார். ஆனால் நாங்கள் கேள்விகள் கேட்பது மட்டும் பிடிக்காது.”

“அது உன்னை எரிச்சலூட்டுகிறதா?”

“ஆமாம். நாங்கள் ஆசிரியர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் பள்ளிக்குச்செல்கிறோம். அவரிடம் கேள்விகள் கேட்கக்கூடாது.”

“உன்னிடம் அவர் அப்படி கூறினாரா?”

“ஆமாம். அவருக்கு அதைவிட முக்கியமான வேலைகள் இருக்கிறது. அவர் ஒரு பண்ணையை நிர்வகிக்கவேண்டும்.”

“மிகப் பெரிய பண்ணையா?”

“ஆமாம்.”

“அது எங்கிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?”

“இல்லை.”

“நீங்கள் வசிக்கும் ஊரைப்பற்றி எதுவும் காதில் விழுகிறதா? உங்கள் ஊரின் பெயர் உனக்குத் தெரியுமா?”

உற்றுக் கேட்பதுபோல் தோன்றினாள். “எதுவும் காதில் விழவில்லை.” மீண்டும் மௌனமானாள்.

“இன்னும் இந்த பிறவியில் எதுவும் தெரிந்துகொள்ள விரும்புகிறாயா? காலத்தில் முன்னோக்கிச் செல்லலாமா?”

“இது போதும்.” என்னை இடைமறித்தாள்.
 

கேத்தரினுடைய சிகிச்சையின்போது ஏற்பட்ட வினோதமான நிகழ்வுகளையும் செய்திகளையும் குறித்து நான் எந்த நிபுணர்களிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. என் மனைவி கரோலினிடமும் மற்றும் சில நம்பகமானவர்களிடமும் மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். கேத்தரினுடைய ஹிப்னாடிஸ அமர்வின் வழியாகக் கிடைத்த தகவல்கள், அறிவுரைகள் உண்மையானவைகள் என்றும் மிக முக்கியமானவைகள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் இதனை வெளியிட்டால் என்னுடைய தொழில் சம்பந்தமான நிபுணர்களிடமிருந்தும், பிற துறையைச் சார்ந்த நிபுணர்களிடமிருந்தும் கிடைக்கப்போகும் வரவேற்பு குறித்து மிகவும் கலக்கமாக இருந்தது. அதனால் நான் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து வந்தேன். மேலும் என்னுடைய தொழில் மற்றும் மதிப்பு சம்பந்தமாக இந்த தகவல்கள் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களைக் குறித்தும் நான் சிந்திக்கவேண்டியிருந்தது.


என்னுடைய சந்தேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொருவாரமும், கேத்தரினுடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் விலகிகொண்டிருந்தன. மீண்டும் மீண்டும் அந்த ஹிப்னாடிஸ ஆடியோ டேப்புகளைக் கேட்டு அந்த அனுபவங்களை நன்கு புரிந்துகொண்டேன். ஆனால் அடுத்தவர்கள் என்னுடைய அனுபவங்களைக் கேட்டுதான் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு சொந்த அனுபவம் கிடையாது. எனவே நான் இன்னும் நிரூபணங்களை சேகரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக கருதினேன்.
 

கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைக்கும் செய்திகளை ஒத்துக்கொள்ள ஆரம்பித்ததால், என் வாழ்க்கை எளிமையானதாகவும் திருப்திகரமானதாகவும் மாறிக்கொண்டிருந்தது. யாருக்காகவும் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கத் தேவையில்லாமல் நான் நானாக இருக்க முடிந்தது. என்னுடைய உறவுகள் நேர்மையானதாகவும் சுற்றி வளைத்து பேசவேண்டிய தேவையில்லாததாகவும் மாறியது. குடும்ப வாழ்க்கை குழப்பமில்லாமல் நிம்மதியாக கழிந்தது. கேத்தரினிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகளை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சங்கோஜம் குறைய ஆரம்பித்தது. ஆச்சரியமாக, அனேக மக்கள் விரும்பி செவிமடுத்தார்கள். மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். பலர் தங்களுக்கும் ஏற்பட்ட விவரிக்க முடியாத, வெளியில் சொல்லாத,  உடலைவிட்டு ஆன்மா செல்லுதல், முன்ஜென்ம நினைவுகள் போன்ற நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் அடுத்தவர்களிடம் இதைப்பற்றி கூறினால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற பயத்தால் வெளியில் சொல்லாமல் இருந்ததாகக் கூறினார்கள். இதைப்போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் நினைப்பதைவிட அதிகமாக நிகழ்வது புரிந்தது. அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொண்டவர்கள் குறைவாக இருப்பதனால்தான், இத்தகைய நிகழ்ச்சிகள் அபூர்வமாக நடப்பதுபோல் தோன்றுகிறது. முக்கியமாக நன்கு பயிற்சி மேற்கொண்ட மனோவியலாளர்களே அடுத்தவர்களிடம் எதையும் பகிர்ந்துகொள்ள மறுக்கிறார்கள். 

உலக அளவில் மதிப்பு பெற்ற ஒருவர் எங்கள் மருத்துவமனையில் ஒரு சோதனைப் பிரிவிற்கு தலைமை பதவி வகித்தார். இறந்துவிட்ட அவரது தாத்தா இறந்தபிறகு அவரை பயங்கரமான விபத்திலிருந்து காப்பாற்றியதாகக் கூறினார். இன்னொரு பேராசிரியர் தன்னுடைய ஆராய்ச்சியின் தீர்வுகள், தனக்கு கனவில் கிடைப்பதாகக் கூறினார். கனவில் கிடைக்கப்பட்ட தீர்வுகள், சரியான தீர்வுகளே என்றும் கூறினார். இன்னொரு டாக்டர், ஃபோன் ஒலித்ததும், யாரிடமிருந்து ஃபோன் வருகிறது என்று கண்டுபிடிக்கும் திறமை தனக்கு இருப்பதாகக் கூறினார். ஒரு பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ பிரிவின் தலைவருடைய மனைவியும் மனோதத்துவத்தில் டாக்டரேட் பெற்றவர். சிறந்த ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்டவர். அவர் ஒருமுறை ரோம்நகரைச் சுற்றிப்பார்க்க இத்தாலி சென்றார். மேப் இல்லாமலே அந்த நகரின் அனைத்து இடங்களையும் முன்பே அறிந்ததுபோல் உணர்ந்தார். அவர் அதற்குமுன் இத்தாலி சென்றதில்லை. உள்ளூர் மொழியும் தெரியாது. ஆனால் அங்கே இருந்த இத்தாலியர்கள், அவரை அங்கே வசிப்பவர் என்று நினைத்து மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார்கள். இத்தாலியில் நிகழ்ந்த அனுபவத்தை அவரால் புரிந்துகொள்ள முடியாமல் திணறியிருக்கிறார்.


நன்றாக கற்றுணர்ந்த நிபுணர்கள், இதுபோன்ற நிகழ்வுகளை ஏன் வெளியிட தயங்குகிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. நானும் அவர்கள் ஒருவன். நமக்கு ஏற்படும் அனுபவங்களையும், உணர்வுகளையும் நாம் மறுக்க இயலாது. ஆனால் நாம் கற்றுத் தேர்ந்த பாடங்களும், நம்பிக்கைகளும், கல்வி முறைகளும் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு முற்றிலும் எதிரானது. ஆதலால் நான் வாய்மூடி மௌனமாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்
 

--தொடரும்.
 

 

மனிதக் கேமரா:

ஸ்டீஃபன் வில்ஷையர் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டடக்கலை, வரைபட நிபுணர். எந்தவிதமான கட்டடங்களையும், காட்சிகளையும் ஓரிருமுறை பார்த்துவிட்டு, மனதில் நிறுத்திக்கொண்டு அழகுற நகலாக வரைந்துவிடும் ஆற்றல் பெற்றவர். அந்த ஆற்றலால் அவர் மனிதக்கேமரா என்று அழைக்கப்படுகிறார். அவருடைய திறமைக்காக 2006-ல் பத்மஸ்ரீ விருது போன்று பிரிட்டனில் வழங்கப்படும் MBE விருது பெற்றார்.

ஸ்டீஃபன் 1974-ல் லண்டனில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள். வெஸ்ட் இண்டீஸிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அவர் சிறுவயதில் ஊமையாக அறியப்பட்டார். மூன்று வயதில் அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருப்பதும் தெரியவந்தது. ஆட்டிஸம் என்பது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. ஆட்டிஸம் உள்ளவர்களுக்கு, மூளைக்கு தகவல் அனுப்பக்கூடிய நரம்புகள் சரியானபடி தகவல்கள் அனுப்புவது கிடையாது. அதனால் அவர்களுக்கு அடுத்தவர்களுடன் பழகுவதற்குத் தெரியாது. சில சமயங்ககளில் செய்வதையே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பார்கள்.  ஸ்டீஃபன் மூன்று வயதிலேயே தன் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டார்.  

ஐந்துவயதில் சிறப்பு பள்ளியில் பயின்றபொழுது, அவருக்கு படம் வரைவதில் ஆர்வமிருப்பதை அறிந்த ஆசிரியர்கள், அவருக்கு தேவையான உதவிகள் செய்து ஊக்குவித்தனர். ஆசிரியர்களின் உதவியால் ஸ்டீஃபன் ஐந்து வயதுக்குப்பிறகு பேச ஆரம்பித்தான். பத்துவயதில் லண்டனில் உள்ள முக்கிய கட்டடங்ககளை படமாக்கி, ஒவ்வொரு ஆங்கில எழுதுக்கும் ஒரு படம் என்று, ஒரு ஆல்பமாக தயாரித்தார். அந்த ஆல்பத்துக்கு லண்டன் அல்ஃபபெட் என்று பெயரிட்டார்.  

எந்த காட்சியையும் ஒருமுறை மட்டுமே பார்த்துவிட்டு அதனை பிரதியெடுத்த்துபோல் படம் வரைவது ஸ்டீஃபனுக்கு கைவந்த கலை. பதினைந்து நிமிடங்களுக்கு, ஒருமுறை மட்டும் லண்டன் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிவந்துவிட்டு, பார்த்தகாட்சிகளை அழகாக ஓவியமாக வடித்துவிட்டார். கிட்டத்தட்ட நான்கு சதுரகிலோமீட்டர் அளவுக்கான இடங்களை ஓவியத்தில் தீட்டிவிட்டார். பத்தொன்பது அடி நீளமுள்ள ஓவியத்தை, நியூயார்க் நகரை, இருபது நிமிட ஹெலிகாப்டர் பயணத்தில் மனதில் பதிந்து சித்திரமாக வரைந்துள்ளார். கற்பனை ஓவியங்கள் பலவும் அவரால் தீட்டப்பட்டிருக்கிறது.
 

ஸ்டீஃபன் வரைந்த ஓவியப்புத்தகங்கள் சண்டே டைம்ஸ்-ல் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் இடம்பிடித்திருக்கின்றன. 2005-ல் உலகின் மிகநீளமான, காட்சிகளை நினைவில் நிறுத்தி வரையும் ஓவியத்தை, ஸ்டீஃபன் வரைந்திருக்கிறார். ஏழு நாட்கள் டோக்கியோவை சுற்றிவிட்டு, அந்த நகரை ஓவியமாக 10 மீட்டர் நீளத்துக்கு வரைந்து அந்த சாதனையைப்புரிந்துள்ளார். ரோம், ஹாங்க்காங்க், துபாய், ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன், நியூயார்க், ஜெருசேலம் என்று அனைத்து நகரங்களையும் சித்திரமாக தீட்டியிருக்கிறார். ரோம் நகரை ஹெலிகாப்டரில் சுற்றி வந்து வரைந்த கட்டடங்க்களின் ஓவியங்களில், தூண்களின் எண்ணிக்கையக்கூட சரியாக வரைந்திருக்கிறார்.


2011-ல் எழுபத்தாறு மீட்டரில் நியூயார்க் நகரை அவர் வரைந்தது, கென்னடி ஏர்ப்போர்ட்டை இன்றும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.


1987-ல் BBC - ல் முட்டாள்தனமான அறிவாளிகள் (The foolish wise ones) என்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வருடமே அவருடைய ஓவியங்கள் புத்தக வடிவில் பிரசுரமாகின. அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று.


அவர்பெற்ற விருதுகள்: 

2006 : Member of the Order of the British Empire (MBE)

2008: American broadcasting company – Person of the week on 15 February.

2009: ambassador of the Children's Art Day in the United Kingdom

2011: honorary Fellow of the “Society of the Architectural Illustration”
 

முட்டாள்தனமான அறிவாளிகள் இணைப்பு கீழே உள்ளது. இரண்டாவது வீடியோவில் ஸ்டீஃபன் வில்ஷையர் இருக்கிறார். அவருடைய ஓவியங்களைக் காண கூகிள் இமேஜில் “Stephen Wiltshire“ என்று தேடுங்கள்.  

 

துணுக்கு:

சலூன் வைத்திருக்கும் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டுவதற்கு 100 ரூபாய் வசூலித்து வந்தார். அவர் பிஸினஸ் நன்றாக நடந்தது. அவருக்கு போட்டியாக ஒருவர் கடைவிரித்து, முடி வெட்டுவதற்கு 50 ரூபாய் என்று கடைக்கு முன் ஒரு போர்டையும் வைத்துவிட்டார். முதலில் கடை வைத்திருந்தவருடைய கஸ்டமர்கள் புதியகடைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். அதனால் கடையை மூடவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அவருடைய நண்பர் ஒருவர் ஒரு யோசனை கூறினார். கடைக்கு எதிரே சில வாசகங்கள் எழுதி ஒரு போர்டு வைக்குமாறு கூறினார். அந்த விளம்பர வாசகத்துடன், கட்டணத்தையும் 100-லிருந்து 120-ஆக அதிகப்படுத்தி அந்த போர்டில் வாசகம் எழுதிவிட்டார். அதன் பிறகு கூட்டம் பழையபடி அவர்கடைக்கே வர ஆரம்பித்துவிட்டது.

அப்படி என்னதான் அந்த போர்டில் எழுதிவிட்டார்?
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/ 

போர்டில் எழுதிய வாசகம்:
முடி வெட்டுவதற்கு கட்டணம் :  120 ரூபாய்
50 ரூபாய்க்கு வெட்டிய முடியை சரிசெய்வதற்கு கட்டணம் : 100 ரூபாய்.

Thursday, June 20, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 9


மனோவியாதியால் பதற்றமும், பயமும் கொண்டிருந்த கேத்தரினுடைய நிலையில், ஒவ்வொரு வாரமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிந்தது. அவள் மிகவும் பொறுமைமிக்கவளாகவும், அமைதியுடனும் காணப்படுவதும் தெரிந்தது. புதியவர்களை சந்திப்பதை பிரச்சனையாக நோக்கிய கேத்தரின், இப்பொழுதெல்லாம் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர்களை எதிர்நோக்க ஆரம்பித்தாள். புதியவர்களிடம் அன்பையும் பரிமாறிக்கொண்டாள். அவளுள் ஒளிந்திருந்த, அவளுடைய தனித்தன்மை வாய்ந்த நற்குணங்களை அவளைச் சுற்றி இருப்பவர்கள் உணரும்படி, அவளால் எந்தவித பயமுமின்றி வெளிப்படுத்த முடிந்தது.

ஹிப்னடைஸ் அமர்வின்பொழுது கேத்தரினுடைய பிறவி நினைவுகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னோக்கிச்சென்றன. ஒவ்வொரு முறை சிகிச்சையின்பொழுதும் அவள் எந்த பிறவியை அடைவாள் என்பது எனக்குப் புரியாத புதிரானது. கற்கால மனித நிலைக்கும், புராதன எகிப்து கலாசாரத்துக்கும், நவீன யுகத்துக்கும் மாறிமாறி சென்று கொண்டிருந்தாள். ஒவ்வொரு பிறவியிலும் வழிகாட்டி ஆவிகள் அவளை அன்புடன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது. இன்றைய அமர்வின்பொழுது அவள் இருபதாம் நூற்றாண்டுக்குள் வந்திருக்கிறாள். ஆனால் கேத்தரினாக பிறவி எடுக்கவில்லை. வேறொரு பிறவி எடுத்திருக்கிறாள். 

“நான் விமானம் ஓடுதளத்தின் ஒரு பகுதியைப் பார்க்கிறேன்.” மென்மையாக முணகினாள்.
“எந்த இடம் என்று அறியமுடிகிறதா?”
“இல்லை. . . . . . அலாஸ்டியன்? . . . . ஆம் அலாஸ்டியன்.”
“பிரான்ஸ் நாட்டிலா?”
“தெரியவில்லை. அலாஸ்டியன் என்றுதான் உணர்கிறேன். . . . . வோன் மார்க்ஸ்  என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மாதிரியான தலைகவசம் . . . . . தொப்பி, பாதுகாப்பு கண்ணாடியுடன் உள்ள தொப்பி. சேனை அழிக்கப்பட்டுவிட்டது. இந்த இடம், மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்போல் தோன்றுகிறது. பக்கத்தில் எந்த ஊரும் இருப்பதுபோல் தோன்றவில்லை.”
“வேறு என்ன தென்படுகிறது?”
“இடிந்த கட்டிடங்களைக் காண்கிறேன். . . . . குண்டு மழைகளினால் இந்த இடம் மிகவும் சேதமடைந்துள்ளது. . . . இந்த இடம் மிகவும் மறைந்து, ஒதுக்கப்பட்ட இடம் போல் தோன்றுகிறது.”
“நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”
“நான் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறேன். மற்றவர்கள் அவர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.”
“உன்னையும், உன் ஆடைகளையும் பற்றி விளக்கமாகக் கூறு?”
“நான் ஒருமாதிரியான சீருடைபோன்ற சட்டையை அணிந்திருக்கிறேன். என் முடி மஞ்சள் நிறத்தில் உள்ளது. நீலநிற கண்களைப் பெற்றிருக்கிறேன். என் சட்டை மிகவும் அழுக்காக உள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.”
“நீ காயப்பட்டவர்களை உதவி செய்வதற்கு எதுவும் பயிற்சி பெற்றிருக்கிறாயா?”
“இல்லை.”
“நீ அங்கு வசிக்கிறாயா? அல்லது அழைத்து வரப்பட்டாயா? நீ எங்கு வசிக்கிறாய்?”
“தெரியவில்லை.”
“உன்னுடைய வயது என்ன?”
“முப்பத்தைந்து.” கேத்தரினுடைய நிகழ்கால வயது இருபத்தொன்பது. பழுப்பு நிற கண்களை உடையவள். நீல நிற கண்கள் உடையவளல்ல. நான் கேள்விகளைத் தொடர்ந்தேன்.
“உன் பெயரென்ன? உன்னுடைய சட்டையில் அது எழுதப்பட்டுள்ளதா?”
“என் சட்டையில் இறக்கைகள் உள்ளன. நான் ஒரு பைலட். . . . . . . ஒரு வகையான பைலட்.”
“உன்னால் விமானத்தை இயக்கமுடியுமா?”
“ஆமாம். நானே இயக்க வேண்டும்.”
“நீ குண்டுகளைப் பொழிவாயா?”
“விமானத்தில் அதற்கான குழு உள்ளது. விமான வழிகாட்டியும் இருக்கிறார்.”
“எந்த வகை விமானத்தை ஓட்டுகிறாய்?”
“ஒரு வகை சிறிய விமானம். அதற்கு நான்கு எஞ்ஜின்கள் உள்ளன. நிலையான இறக்கைகள் உள்ளது.” வியந்து நின்றேன். ஏனென்றால், கேத்தரினுக்கு விமானங்களைப் பற்றி எதுவும் தெரியாது. “நிலையான இறக்கை” என்றால் அவள் என்ன நினைக்கக் கூடுமென்று எண்ணினேன். வெண்ணெய் உருவாக்கும் முறை, இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் முறை போன்று சமாதி நிலையில் அவளுக்கு ஏகப்பட்ட விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க முடிந்துள்ளது. நான் தொடர்ந்தேன்.
“உனக்கு குடும்பம் உள்ளதா?”
“ஆமாம் ஆனால் அவர்கள் என்னுடன் இல்லை.”
“அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா?”
“தெரியவில்லை. எனக்கு அவர்கள் திரும்பி வந்துவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது. என்னுடைய நண்பர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.”
“யார் வந்துவிடுவார்களென்று அச்சப்படுகிறாய்?”
“எதிரிகள்.”
“யார் அவர்கள்?”
“ஆங்கிலேயர்கள் . . . . . . அமெரிக்கப் படையினர் . . . . .  ஆங்கிலேயர்கள்.”
“உன்னுடைய குடும்பத்தினரை நினைவுகூற முடிகிறதா?”
“இல்லை, மிகவும் குழப்பமாக இருக்கிறது.”
“இந்த வாழ்வில் மகிழ்ச்சியான நாட்களுக்குச் செல்வோம். போருக்கு முன், உன் குடும்பத்துக்குச் செல். உன்னால் முடியும். கடினமானதென்று எனக்குத் தெரியும். ஆசுவாசப்படுத்திக்கொண்டு முயற்சி செய். நினைவுகூற முயற்சி செய்.”
கேத்தரின் மௌனமானாள். முணக ஆரம்பித்தாள். “எரிக் . . . . எரிக் என்ற பெயரைக் கேட்கிறேன். மஞ்சள் நிற கூந்தலையுடைய ஒரு சிறுமி.”
“அது உன் மகளா?”
“அப்படித்தான் இருக்கவேண்டும். . . . மர்காட்”
“உன் அருகில் இருக்கிறாளா?”
“என்னுடன்தான் இருக்கிறாள். பிக்னிக் வந்திருக்கிறோம். இன்று மிகவும் இனிமையான நாள்.”
“மர்காட்-ஐத் தவிர யாராவது உன்னுடன் இருக்கிறார்களா?”
“பழுப்பு நிற கூந்தலையுடைய பெண் அமர்ந்திருக்கிறாள்.”
“அது உன் மனைவியா?”
“ஆமாம். . . . . அவளை யாரென்று எனக்குத் தெரியவில்லை.” (நிகழ்காலப் பிறவியில்)
“மனைவி யாரென்று தெரியவில்லையா? நன்றாகப் பார்த்துச்சொல். அவளை உனக்கு அடையாளம் காணமுடிகிறதா?”
“தெரிந்தவள்போல் உணர்கிறேன். எப்பொழுதோ பார்த்ததுபோல் தோன்றுகிறது.”
“உன்னால் முடியும். முயற்சி செய். அவள் கண்களைப் பார்.”
“அவள் ஜூடி.” பதிலளித்தாள். ஜூடி கேத்தரினுடைய நெருங்கிய சினேகிதி. முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒத்துப்போகிவிட்டது. மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வார்த்தைகளால் பகிர்வதற்கு முன்னரே இருவருடைய எண்ண அலைகளும், தேவைகளும் ஒரே அலைவரிசையில் இருப்பதை உணர்ந்திருந்தனர்.
“ஜூடி?” மீண்டும் கேட்டேன்.
“ஆம். ஜூடிதான். அவளைப் போலவே இருக்கிறாள். புன்னகை புரிகிறாள்”
“நல்லது. உன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா?”
“மகிழ்ச்சியாக உள்ளது.” மௌனம் “ஆனால், இப்பொழுது நாட்டில் அமைதி நிலவவில்லை. ஜெர்மன் அரசாங்கத்திலும், அரசியலிலும் பெருங்குழப்பம் நிலவுகிறது. மக்களின் சிந்தனைகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. அது எங்களை ஒட்டுமொத்தமாக பிரித்துவிடும். நான் எனது நாட்டுக்காகப் போரிடவேண்டும்.”
“உனது நாட்டை மிகவும் நேசிக்கிறாயா?”
“எனக்கு யுத்தமென்பதே பிடிக்கவில்லை. கொலை செய்வது தவறான செயல். ஆனால் நான் என் கடமையைச் செய்யவேண்டும்.”
“மீண்டும் விமானம் இருந்த இடத்துக்குச் செல். யுத்தம் ஆரம்பித்துவிட்டது. ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் நீங்கள் இருக்கும் இடத்தில் குண்டு வீசுகிறார்கள். திரும்பிச் செல். விமானத்தைக் காணமுடிகிறதா?”
“ஆமாம்.”
“இப்பொழுது யுத்தத்தில் கொலை செய்வது உன் கடமையென்று உணர்கிறாயா?”
“ஆம். நாங்கள் உயிரையும் தரத்தயாராக இருக்கிறோம். எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், உயிரையும் தருவோம்.”
“நீங்கள் உங்கள் பிரியமானவர்களுக்காக உங்கள் நாட்டை காப்பாற்ற போரிடவில்லையா? இல்லாத ஒன்றிற்கு ஏன் உயிரைத் தரவேண்டும்? அதில் என்ன திருப்தி இருக்கிறது?”
“சிலரின் கொள்கைகளை நாங்கள் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவோம்.”
“அவர்கள் உங்கள் நாட்டின் தலைவர்களாக இருக்கலாம். இருப்பினும் அவர்கள் கூறுவது தவறாகவும் இருக்கக்கூடும் அல்லவா?”
“அவர்கள் தலைவர்கள் கிடையாது. அவர்கள் தலைவர்களாக இருந்திருந்தால், உள்நாட்டு குழப்பங்கள் குறைந்திருக்கும். . . . . . அரசாங்கத்திலும் சச்சரவுகள் இருந்திருக்காது.”
“சிலர் அவர்களை பதவிவெறி பிடித்தவர்கள் என்றும் கூறுவார்கள். உனக்கு அப்படி தோன்றவில்லையா?”
“எங்களை ஆட்டிவைக்கும் அளவுக்கு அவர்களால் நடந்துகொள்ள முடிகிறது. எங்களுக்கும் வெறிபிடித்துள்ளது. . . . . . கொலை செய்யும் அளவுக்கு வெறிபிடித்துள்ளது. நாங்களே ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு வெறிபிடித்துள்ளது.”
“உன் நண்பர்கள் உயிருடன் இருக்கிறார்களா?”
“ஆம் சிலர் உயிருடன் இருக்கிறார்கள்.”
“குறிப்பிடும் அளவிற்கு உனக்கு யாராவது நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்களா? உன்னுடைய விமானக்குழுவில் யாராவது இருக்கிறார்களா? உன் விமான வழிகாட்டி, மற்றும் குண்டு வீசுவோர் உயிருடன் இருக்கிறார்களா?”
“அவர்களைக் காணவில்லை. ஆனால் என் விமானம் சேதமடையவில்லை.”
“மீண்டும் உன்னால் அந்த விமானத்தில் பறக்கமுடியுமா?”
“ஆம். எதிரிகள் திரும்புவதற்குள் நாங்கள் விரைவில் புறப்படவேண்டும்.”
“உன் விமானத்துக்குச் செல்.”
“எனக்கு அங்கு செல்ல விருப்பமில்லை.”
“ஆனால் உன் விமானம் புறப்பட்டாக வேண்டுமே?”
“அது அறிவுப்பூர்வமானதாகத் தோன்றவில்லை.”
“யுத்தத்துக்கு முன் என்ன தொழில் செய்துகொண்டிருந்தாய்? உனக்கு நினைவிருக்கிறதா? எரிக் என்ன தொழில் செய்துகொண்டிருந்தான்?”
“நான் பொருட்கள் எடுத்துச்செல்லும் விமானத்தில் பணி புரிந்தேன். விமானத்தில் இரண்டாவது தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தேன்.”
“நீ பைலட்டாகத்தான் வேலை செய்திருக்கிறாய்.”
“ஆமாம்.”
“அதனால் குடும்பத்தைவிட்டு அடிக்கடி விலகி இருந்திருப்பாயல்லவா?”
“ஆமாம்.” மென்மையாக வருத்தத்துடன் கூறினாள்.
“காலத்தில் முன்சென்று, வேறு விமானத்துக்குச் செல்.”
“வேறு விமானத்திற்குச் செல்ல முடியாது.”
“ஏன்? உனக்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டதா?”
“ஆம்.” அவளுக்கு மூச்சிரைத்தது. அமைதியிழந்து காணப்பட்டாள். எரிக் மரணமடையும் தருணத்தை அடைந்துவிட்டான்.
“என்ன நிகழ்கிறது?”
“தீயிலிருந்து காத்துக்கொள்ள ஓடுகிறேன். என்னுடைய குழுவினர் தீயினால் பிரிந்துவிட்டார்கள்.”
“உன்னால் உயிர்பிழைக்க முடிகிறதா?”
“யாரும் உயிர் பிழைக்கவில்லை. . . . . யுத்தத்தில் யாரும் பிழைப்பதில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன்.” அவளுக்கு மூச்சிரைத்தது. “ரத்தம் எல்லா இடங்களிலும் ரத்தம். வலிக்கிறது. எனது நெஞ்சில் அடிபட்டுள்ளது. என் கால்களில் . . . . . . என் கழுத்தில் . . . . . வலிதாங்க முடியவில்லை.” வலியால் துடித்தாள். சிறிது நேரத்தில் அவள் சுவாசம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. மீண்டும் சாந்த நிலைக்குத் திரும்பினாள். இறப்புக்கும், பிறப்புக்கும் இடையில் காணப்படும் சாந்தமான நிலையை அவள் அடைந்ததை நான் உணர்ந்தேன்.
 

“நீ அமைதியாகக் காணப்படுகிறாய். பிரச்சினைகள் முடிந்துவிட்டனவா?” சிறிது மௌனத்திற்குப் பிறகு மென்மையாக பதிலளித்தாள்.
“நான் மிதக்கிறேன். என் உடலைவிட்டு தூரத்தில் மிதக்கிறேன். எனக்கு சரீரம் இல்லை. மீண்டும் ஸ்தூல நிலையை அடைந்துவிட்டேன்.”
“நல்லது. ஓய்வெடுத்துக்கொள். மிகவும் கடுமையான வாழ்க்கையை கடந்து வந்திருக்கிறாய். உன் மரணமும் மிகவும் கொடியதாக அமைந்திருந்தது. உனக்கு ஓய்வுதேவை. சக்தியை மீண்டும் பெற்றுக்கொள். உன்னுடைய பைலட் வாழ்வில் என்ன கற்றுக் கொண்டாய்?”
“வெறுப்பு . . . . . அறிவுக்கு ஒவ்வாத கொலைகள் . . . . . திசை மாறிய வெறுப்பு . . . . . . ஏன் என்று அறியாமலேயே, அடுத்தவர்களை வெறுக்கும் செயல். அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் . . . . . . சரீர நிலையில் இருந்தபோது தீயசக்திகள் எங்களை ஆட்கொண்டிருந்தது.”
“நாட்டுக்கு செய்யவேண்டிய கடமைகளைவிட, சிறப்பான கடமைகள் உள்ளனவா? உன் விருப்பத்தை மீறி செயல்படுவதற்கு ஏதாவது ஒருசக்தி உன்னை தடுத்திருக்கவேண்டும். உன் பிறவிக்கென்று கடமைகள் இருக்கின்றனவா?”
“இருக்கிறது.” அவள் விளக்கமாகக் கூறவில்லை.
“எதற்காவது காத்திருக்கிறாயா?”
“ஆம் . . . . . புதுப்பிக்கப்படுவதற்காக காத்திருக்கிறேன். நான் காத்திருக்கவேண்டும். எனக்காக வருவார்கள். . . . . அவர்கள் வருவார்கள்.”
“நல்லது. அவர்கள் வந்ததும் அவர்களிடம் பேச விரும்புகிறேன்.” நிமிடங்கள் கழிந்தன. திடீரென்று கரகரப்பான குரலில் பேச ஆரம்பித்தாள். கவிதைமொழியில் பேசக்கூடிய ஆன்மா வரவில்லை. முதன்முதலில் வந்த ஆன்மாவின் குரல்போல் ஒலித்தது.
“சரீர நிலையில் இருப்பவர்களுக்கு, இதுதான் தகுந்த சிகிச்சை என்று நீ நினைத்தது மிகவும் சரியானது. அவர்கள் மனதில் இருக்கும் அச்சங்களைப் போக்க வேண்டும். அச்சம் மனதில் இருக்கும்பொழுது சக்தி வீணாகும். எதற்காக இங்கு அனுப்பப்பட்டார்களோ, அதனை அது தடுத்துவிடும். உன் சுற்றுப்புறங்களிலிருந்து தடயங்களைப் பெற்றுக்கொள். அவர்கள் சரீரத்தை உணரமுடியாத சூழ்நிலைக்குச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களை நீ அடையமுடியும். பிரச்சனைகள் மிகவும் மேலோட்டமாகவே அமைந்துள்ளது. அவர்கள் ஆழ்மனதில் எங்கு எண்ணங்கள் உதித்தனவோ, நீ அந்த இடத்தை அடையவேண்டும். சக்தி . . . . . சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. நிறைய சக்திகள் வீணடிக்கப்படுகின்றன. மலைகள் . . . . . மலைகளின் உள்ளே மிகவும் அமைதியாக இருக்கிறது. ஆனால் வெளிப்புறத்தில் குழப்பம் நிலவுகிறது. மக்கள் வெளிப்புறத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் நீ இன்னும் ஊடுருவி செல்லவேண்டும். அப்பொழுதுதான் எரிமலையை காணமுடியும். அதற்காக நீ உள்ளே ஊடுருவி செல்லவேண்டும். சரீர நிலை நெறிபிறழ்வான நிலை. ஸ்தூல நிலையே இயல்பான நிலை. தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ளவே சரீர நிலைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதற்கு அவகாசம் பிடிக்கும். ஸ்தூல நிலையில் நீ புதுப்பிக்கப்படுவதற்காக பொறுத்திருக்க வேண்டும். மற்ற பரிமாணங்களைப் போல அதுவும் ஒரு நிலை. நீ கிட்டத்தட்ட அந்த நிலையை அடைந்துவிட்டாய். 

நான் மிகவும் வியப்படைந்தேன். நான் எப்படி ஸ்தூல நிலையை அடையமுடியும்? கிட்டத்தட்ட நான் ஸ்தூல நிலையை அடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. சந்தேகத்துடன் நான் என்னையே கேட்டுக்கொண்டேன். 

“ஆம். உனக்கு மற்றவர்களைவிட அதிகமாகத் தெரியும். புரிந்துகொள்ள முடியும். அவர்களிடம் பொறுமையைக் கடைபிடி. உனக்குக் கிடைத்த ஞானம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உனக்கு உதவுவதற்கு ஆன்மாக்கள் அனுப்பப்படுவார்கள். நீ செய்வது மிகவும் சரியானது. . . . . . தொடர்ந்து செய். சக்தி வீணடிக்கப்படக்கூடாது. அச்சத்தை அறவே நீக்க வேண்டும். அதுவே உனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆயுதம்.” வழிகாட்டி ஆன்மா மௌனமானது. நான் நம்புவதற்கரிய தகவல்களின் அர்த்தங்களைக் குறித்து சிந்தித்தேன். கேத்தரினின் பயத்தை நீக்கியதில் வெற்றியடைந்தது எனக்குத் தெரியும். ஆனால் தெரிவிக்கப்பட்ட தகவல் உலகளாவியதாக உள்ளது. அது ஹிப்னாடிஸ சிகிச்சை, சரியான சிகிச்சைதான் என்று உறுதிகூற மட்டும் வந்த செய்தியல்ல. உலக மக்கள் அனைவருக்கும் இத்தகைய சிகிச்சை அளிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமல்ல. இது மரணத்தைப் பற்றிய பயத்தைப் போக்குவதற்காக வந்த தகவலாக இருக்குமென்று நம்புகிறேன். மரணத்தைப் பற்றிய அச்சம் செல்வத்தாலோ, பதவியாலோ நீக்கமுடியாதது. 

ஆனால் வாழ்வு முடிவற்றது. நாம் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை என்று மக்கள் உணர்ந்தால் மரணத்தைப்பற்றிய அச்சம் நீங்கிவிடும். எண்ணிக்கையிலடங்காத அளவு பிறவிகள் எடுத்திருக்கிறோம், மீண்டும் எடுக்கப் போகிறோம் என்று அவர்கள் உணர்ந்தால், அவர்களுக்கு மரணத்தைப்பற்றிய அச்சம் இருக்கப்போவதில்லை. சரீர நிலையிலும், ஸ்தூல நிலையிலும் நமக்கு ஆன்மாக்கள் எப்பொழுதும் உதவக் காத்திருக்கின்றன. மேலும் ஸ்தூல நிலையில் நம் அன்புக்கு பாத்திரமானவர்களையும் காணமுடியும் என்று அவர்கள் உணர்ந்தால், எவ்வளவு நிம்மதியடைவார்கள்? உண்மையிலேயே “காக்கும் தேவதைகள்” இருக்கிறார்கள் என்று அறிந்தால் மிகவும் பாதுகாப்பாக உணர்வார்கள். புரியும் பாவங்களுக்கும், அநீதிகளுக்கும் இன்னொரு பிறவியில் பரிகாரம் தேடவேண்டியிருக்கும் என்று அறிந்தால் பழிபாவங்களை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்களே? “ஞானத்தால் இறைவனை அடைவோம்” என்று அறிந்தால் நாம் தேடும் செல்வங்களும், பதவிகளும் செல்லாக் காசாகிவிடும். பேராசைகளுக்கும், பதவி வெறிகளுக்கும் இடமிருக்காது.  

ஆனால் இந்தத் தகவலை நான் எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது? ஆன்மா அழிவில்லாதது என்று கூறும் கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் போன்ற வழிபாட்டுத்தலங்களில் மக்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் பிராத்தனைக்குப்பிறகு தன்னலம், பேராசை, போட்டிமனப்பான்மை கொண்ட தினசரி வாழ்வில் மூழ்கிவிடுகிறார்கள். எனவே இத்தகைய செயல்கள் ஆன்மா முன்னோக்கி செல்வதை தடைபடுத்தி விடுகின்றன. எனவே தெய்வ நம்பிக்கைகள் மட்டும் போதுமானதல்ல; அறிவியலும், ஆன்மாவும் துணைபுரியக்கூடும்.  

கேத்தரினுக்கும், எனக்கும் இந்த சிகிச்சையின் விளைவாக ஏற்ப்பட்ட அனுபவங்களை ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதவேண்டும். மனநல அறிவியல் பயிற்றுவிப்பாளர்களிடம் இதனை முறைப்படி எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் நான் இத்தருணத்தில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கோ, புத்தகங்களை எழுதுவதற்கோ எந்தவிதமான சாத்தியமுமில்லை. என் மனதில் அதைப்போன்ற எண்ணம் எதுவுமில்லை. ஆன்மாக்கள் எனக்கு உதவி செய்ய மீண்டும் அனுப்பப்படுவார்கள் என்ற தகவலும் வந்தது. எனக்கு என்ன உதவி செய்யப்போகிறார்கள்? 

--தொடரும்.

  

 

சேட்டன் பகத் BBA பட்டப்படிப்பு முதல் வருட மாணவர்களுக்கு அளித்த உரையின் சாரம்:

இளைஞர்களாகிய உங்களிடம் வாழ்க்கையை எதிர்நோக்கி புத்துணர்ச்சியுடன் ஒளிரும் கண்களைக் காண்கிறேன். முதியவர்களிடம் இத்தகைய ஒளியினைத் தேட வேண்டியிருக்கிறது. வயது ஏறஏற இந்த ஒளி மங்கத்தொடங்கிவிடுகிறது. ஒளி மயங்கி, வாழ்க்கை கசப்பாகி, எந்தவித இலக்குமின்றி மனதளவில் தங்களை இழந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
 
வாழ்வின் புத்துணர்வை, ஓளியை ஒரு விளக்கின் தீபத்துடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அந்த தீபத்தை எப்படி அணையாமல் காப்பது? அந்த தீபம் தொடர்ந்து எரிவதற்கு, ஒளிவீசுவதற்கு எரிபொருள் தேவை. எரிபொருள் மட்டுமன்றி அதனை காற்று அணைத்துவிடாமல் காக்கவும் வேண்டும். 

வாழ்க்கைக்கு எரிபொருளாக, எப்பொழுதும் நமக்கு இலக்கு இருக்கவேண்டும். வாழ்க்கையின் முழுப்பயனையும் அனுபவிப்பதற்கு முயற்சி செய்வது மனித இயல்பு. உண்மையில் அதுவே ஒரு வாழ்வின் வெற்றியாகும். ஒருவர் பெறும் பொருள் செல்வத்தினால் அவற்றை அளக்க முடியாது. அப்படியிருப்பின் அத்தகைய வெற்றியை அடைந்துவிட்ட மனிதர்கள் தினமும் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அவர்களும் தினசரி வேலைக்கு செல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒருபடியிலிருந்து அடுத்த படிக்கு செல்வது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கடுமையாக முயற்சி செய்வதனால் ஒருவர் டெண்டுல்கர் ஆகிவிட முடியாது. ஆனால், தங்களுடைய நிலையில் கிரிக்கெட்டில், முன்னேற்றம் அடையமுடியும். இருந்தநிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவது மிகவும் முக்கியமானது. 

இயற்கை நம்மை வேறுபட்ட மரபணுக்கூறுகள் மற்றும் வேறுபட்ட சூழ்நிலையுடனும் படைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக வாழ, இயற்கை நமக்களித்த இடத்தை முதலில் நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொள்வது மட்டுமல்லாமல், இயற்கை நமக்களித்த திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழவும் பழகவேண்டும். இலக்கை நிர்ணயிப்பது அத்தகைய மகிழ்ச்சிக்கு நம்மைக் கூட்டிச்செல்லும். இலக்கு என்பது படித்து பட்டம் பெறுவதாக மட்டுமே என்று இருக்கக் கூடாது. சமமான, சீரான வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே அந்த இலக்கை நிர்ணயிக்கவேண்டும். நல்ல உடல்வளம், இதமான உறவுகள், மனஅமைதி என்று அனைத்தையும் சமமாகப் பாவித்து இலக்கை நிர்ணயிக்கவேண்டும். 

சுற்றங்களைப்பிரிந்து, தொழிலில் முன்னேறுவதால் எந்தவிதப் பயனுமில்லை. தூக்கத்தை இழந்து மெத்தை வாங்குவதில் எந்தவித அர்த்தமுமில்லை. சிறுவயதில் கனியும் கரண்டியும் விளையாடியிருப்போம். கனிவீழ்ந்த நிலையில், முதலில் ஓடிவந்தாலும் அது வெற்றியாகாது. வெற்றியின் மதிப்பே இணக்கமான வாழ்வில்தான் இருக்கிறது. இல்லையேல் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில்லாமல் வெறும் வெற்றி என்ற பெயரே மிஞ்சும். வாழ்வின் புத்துணர்வு ஒளி நீங்கிவிடும். 

வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டுமென்று தீவிரமாக அணுகாதீர்கள். ஆனால் திறந்த மனதுடன் உண்மையுடன் அணுகுங்கள். நாம் இந்த பூமியில் நிரந்தரமாக இருந்துவிடப்போவதில்லை. குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே நமக்கு இங்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில நேர்முகத்தேர்வுகளில் தோற்றுவிடுவதாலோ, சில வகுப்புகளுக்கு மட்டம் போடுவதாலோ, காதலில் வீழ்வதாலோ, தோற்பதாலோ ஒன்றும் குடிமுழுகப்போவதில்லை. நாம் மனிதர்கள். இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ப்ரொக்ராம் செய்யப்பட்ட பொம்மைகள் கிடையாது. 

நியாயமான இலக்குகள், அனைத்தையும் இணைத்துக்கொண்ட சமச்சீரான உண்மையான வாழ்வு, எந்தத் தோல்வியையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் அனுபவமாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் ஆகிய மூன்றுமே நம்மிடம் புத்துணர்வு ஒளியைத் தக்கவைத்துக்கொள்ள நாம் பின்பற்ரவேண்டிய பழக்கங்களாகும். புத்துணர்ச்சி என்ற ஒளிச்சுடரை, தோல்வி, ஏமாற்றத்தினால் எரிச்சல், அநீதி மற்றும் தனிமை என்ற புயல்களிலிருந்தும் நாம் அணையாமல் காத்துக்கொள்வதும் மிகவும் அவசியம். 

தோல்வியேயில்லாமல் வெற்றிமட்டுமே நாம் பெற்றுவந்தால், வாழ்க்கையில் என்ன சவால் இருந்துவிடப்போகிறது? சவால் இல்லாத வாழ்க்கை எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். தோல்வியைக்கண்டு துவளாதீர்கள்.  

எரிச்சலடையாதீர்கள். எரிச்சலடைந்தால் வாழ்க்கையை மிகவும் தீவிரமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறீர்கள் என்று அர்த்தம். டிராஃபிக் ஜாம், ரிசர்வேஷன் கிடைக்காதது, என்று அனைத்துக்கும் எரிச்சலடையாமல் வாழ்க்கையை சுலபமாக எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் நம் அமைதி குலையும். 

உங்களைவிட சிலர் அதிகம் சிரமப்படாமல் முன்னேறுபவர்களைக் காணும்பொழுது, உங்களுக்குக் கீழே உள்ளவர்களையும் சற்று நினைத்துப்பாருங்கள். நம்மை அதிர்ஷ்டசாலி என்று நினைப்பவர்களும் இருப்பார்கள்.  

சிறுவயதில் விளையாட்டில் சாதனை புரிந்து பதக்கம் பெற்றவர்கள், மத்திய வயதில் அந்த விளையாட்டைப்பற்றி நினைப்பதுகூட இல்லை. வயதான பிறகு கடமைகள், நம் விருப்பங்களை மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. அது நமக்குள்ளிருக்கும் ஒளியை அணைத்துவிடுகிறது. உங்களை நேசியுங்கள். உங்களுக்குப் பிறகுதான் மற்ற விஷயங்கள். நீங்கள் நேசிப்பதை தணித்துக்கொண்டு சமரசம் செய்து வாழ்வில் ஏமாறாதீர்கள். உங்கள் உடல்நிலை, மனநிலை, மகிழ்ச்சி ஆகியவற்றை கவனித்துக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. 

சேட்டன் பகத் ஒரு எழுத்தாளர், பேச்சாளர். 2010-ல் உலகில் இளைஞர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முதல் நூறு பேர்களில் ஒருவராக – டைம்ஸ் பத்திரிக்கை இவரைத் தேர்வு செய்திருக்கிறது. டெல்லி IIT-ல் பி.டெக் மற்றும் IIM – அஹமதாபாத்-ல் MBA படித்தவர்.
 

அவர் எழுத்தில் திரைவடிவம் பெற்ற படங்கள்:
Three idiots (நண்பன்),  Hello , Kai Po Che & 2 States

 
 

 

கணிதப்புதிர்:

மூன்று நண்பர்கள் தவறு செய்துவிட்டு மன்னனிடம் தண்டனைக்காக காத்திருந்தனர். மன்னன் அவர்களுக்கு மரணதண்டனை அறிவித்தான். மூவரும் மன்னனிடம் கருணைமனு செய்தனர்.  மன்னன் தன்னுடைய புதிருக்கு விடை தந்தால் மூவருக்கும் விடுதலை தருவதாக வாக்களித்தான். 

மன்னன் ஐந்து தொப்பிகளை கொண்டுவரச் செய்தான். அவற்றில் மூன்று கறுப்பு நிறத்தொப்பிகள், இரண்டு வெள்ளை நிறத்தொப்பிகள். அவர்களை ஒருவர்பின் ஒருவராக நிற்கச் செய்தான். ஐந்து தொப்பிகளையும் அவர்களிடம் காட்டியபிறகு, அதிலிருந்து இரண்டு தொப்பிகளை (எந்த தொப்பிகள் என்று அவர்களுக்குத் தெரியாது) மறைத்துவிட்டு, மீதமுள்ள தொப்பிகளை அவர்களுக்கு அணிவிக்கச் செய்தான்.  

அவர்கள் ஒருவர்பின் ஒருவராக நின்றதால், கடைசியில் நின்றவரால் மற்ற இருவருடைய தொப்பியின் நிறங்களைக் காண முடிந்தது. இரண்டாமிடத்தில் நின்றவரால் முதலில் நின்றவருடைய தொப்பியைக் காணமுடிந்தது. முதலிடத்தில் நின்றவரால் யாருடைய தொப்பியின் நிறத்தையும் காணமுடியாது.

மன்னன் பதினைந்து நிமிடங்களில் உங்களில் யாராவது, உங்கள் தலையில் அணிந்துள்ள தொப்பியின் நிறத்தை சரியாக கூறினால் அனைவருக்கும் விடுதலை என்றான்.
 

முதலில் நின்றவர் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, தன்னுடைய தொப்பியின் நிறத்தை சரியாக கூறிவிட்டார். எப்படி?
 

எப்படியிருந்தாலும் உயிர் போகப்போகிறது என்று, ஏதோ சொல்லப்போக சரியாக வந்துவிட்டது என்பது சரியான பதில் இல்லை.