பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Wednesday, December 25, 2013

கண்டுபிடிப்புகள் – 2 : டைனமைட்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.


டைனமைட் (ஒருவகை பயங்கரமான வெடிமருந்து) :

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை வெடிமருந்துகள் கொண்டு காண்பிக்கப்படும் வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை காண்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த வெடிமருந்துகளை, போருக்கு பயன்படுத்துவதற்காகவே கண்டுபிடிக்க மக்கள் முயன்றிருக்கிறார்கள். “கிரேக்க நெருப்பு” என்ற பெயருடைய தீப்பிழம்புகளை உருவாக்கி போர்கள் நடந்திருப்பதாக வரலாறு தெரிவிக்கிறது. கிரேக்க நெருப்பின் மூலப்பொருட்களை ரகசியமாக பாதுகாத்து வந்திருக்கின்றனர். நீரில்கூட தீப்பிடிக்கும் கிரேக்க நெருப்பின் ரகசியம், ஒருகட்டத்தில் யாருக்கும் தெரியாவண்ணம் அழிந்தேவிட்டது. யாருக்குத் தெரியும், அந்த ரகசியத்தை அறிந்தவரும் போரிலேயே மடிந்திருக்கக்கூடும். கிரேக்க நெருப்பு தீச்சுவாலையாகவே இருக்கும். அது வெடிப்பது கிடையாது.

ரசவாதிகள் கிரேக்க நெருப்பு தொடர்பான ஆயுதங்களை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருந்தபொழுது 1249-ல் பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பேக்கன் என்ற விஞ்ஞானி முதன் முதலில் வெடிமருந்துக்கான கலவையைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. ஏழு பங்கு வெடியுப்பு  (பொட்டாசியம் நைட்ரேட்), ஐந்து மடங்கு கரி, ஐந்து மடங்கு சல்ஃபர், இவற்றைக் கலந்து அவர் வெடி மருந்தை உருவாக்கினார்.  வெடி மருந்து தயாரிக்கும் நுட்பத்தை அவர் அரபு நாட்டிலிருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. கெமிஸ்ட்ரி (வேதியியல்) என்ற வார்த்தை “ அல்கெமி“ என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. “அல்கெமி“ -  “அல் கெமியா“ என்ற அரபு வார்த்தையிலிருந்தும், இந்த அரபு வார்த்தை “கீமியா” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தும் உருவாகியுள்ளது. கீமியா என்றால் கிரேக்க மொழியில் “உலோகத்தை தங்கமாக மாற்றுதல்” என்று பொருள்படும். தமிழிலும் ரசவாதம் என்று சித்தர்கள் உலோகங்களை தங்கமாக மாற்றியிருப்பதாகத் பாடல்கள் உள்ளன. சீனர்களும் வெடிமருந்தை உபயோகப்படுத்தியுள்ளது அறியவந்துள்ளது. சீனர்களும் அரபு நாடுகளிலிருந்து வெடிமருந்து தயாரிக்கும் வித்தையை கற்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

1832-ல் ஃப்ரெஞ்ச் விஞ்ஞானி ஹென்றி ப்ரகோனாட் நைட்ரின் அமிலத்துடன், மரத்தூள்களை சேர்த்தால் சைலோஅயோடின் என்ற வேதிப்பொருளாக மாறி உடனடியாகத் தீப்பிடித்து வெடிப்பதைக் கண்டறிந்தார். 1938-ல் இன்னொரு விஞ்ஞானி நைட்ரமிடைன் என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தார். 1860-வாக்கில் ஜெர்மனி-ஸ்விஸ் விஞ்ஞானி நைட்ரோசெல்லுலோஸ் என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தார்.

சைலோஅயோடின், நைட்ரமிடைன், நைட்ரோசெல்லுலோஸ் ஆகிய அனைத்து வெடிபொருட்களும் மிகவும் ஆபத்தானவைகள். நிலையில்லாமல் எக்கணமும் வெடிக்கக்கூடிய தன்மையைக் கொண்டவைகள்.

1847-ல் இத்தாலியின் அஸ்கானியோ சோப்ரெரோ நைட்ரோகிளிசரின் என்ற திரவ வடிவமான வெடிபொருளைக் கண்டுபிடித்தார். அதுவும் மிகவும் ஆபத்தான வெடிபொருள். கண்டுபிடித்தவரையே காலம் முழுவதும் அச்சுறுத்தும் வகையில் வெடித்து அது பழிவாங்கியுள்ளது. “எத்தனை பெயர்களுடைய உயிர்களை பழிவாங்கிவிட்டது! எதிர்காலத்தில் இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கப்போகிறதோ? இதனை நான்தான் கண்டுபிடித்தேன் என்று வெளியில் கூறவும் வெட்கப்படுகிறேன்” என்று அந்த இத்தாலிய விஞ்ஞானி கூறியிருக்கிறார். அத்தனை கொடூரமான வெடிமருந்து இந்த நைட்ரோகிளிசரின்.

அஸ்கானியோவைவிட, அதிகம் வெட்கப்படவேண்டியவரை (வெடிமருந்து தொடர்பாக) உலகம் விரைவிலேயே கண்டுகொண்டது. அவருடைய பெயர் ஆல்ஃப்ரெட் நோபல். அவர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை இம்மானுவேல் நோபலும் ஒரு கண்டுபிடிப்பாளரே. அவர் பிளைவுட்டைக் (plywood) கண்டுபிடித்தார். ஆனால் அதனை தொழிற்படுத்தியதில் பெருத்த நஷ்டமடைந்தார். ஆனால் ஆல்ஃப்ரெட் நோபலின் கண்டுபிடிப்பு அவருக்கு பெருஞ்செல்வத்தைத் தேடித்தந்தது.

டைனமைட் பிறக்கும்பொழுதே சோகத்தைக் கைகோர்த்துக்கொண்டே பிறந்தது. 1864-ல் ஆல்ஃப்ரெட் நோபலின் தம்பி எமில் நோபல் நைட்ரோகிளிசரினால் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார். இருந்தாலும் ஆல்ஃப்ரெட் நோபல் மனம்தளர்ந்துவிடாமல் பாதுகாப்பான நைட்ரோகிளிசரினை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தே தீருவேன் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டார். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நைட்ரோகிளிசரின் கைசெல்கர் என்ற ஒருவகையான களிமண்ணைக் கலந்து தயாரிக்கையில் அது உடனடியாக வெடிப்பதில்லை என்று  கண்டுபிடித்தார். 1867-ல் “டைனமைட்” என்ற பெயரில் தன்னுடைய கண்டுபிடிப்பைப் பேட்டன் செய்தார். டைனமிஸ் என்ற கிரேக்க சொல் “சக்தி” என்று பொருள்படும். அதன்பிறகு 1876-ல் ஜெலாட்டின் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

டைனமைட் வெடிமருந்து போரிலும், கட்டுமானத்துறையிலும், சுரங்கத்தொழிலிலும் அதிகமாக உபயோக்கிக்கப்பட்டது. இது ஆல்ஃப்ரெட் நோபலை கோடீஸ்வரர் ஆக்கியது. 1888-ல் ஆல்ஃப்ரெட் நோபலுடைய சகோதரர் லட்விக் நோபல் இறந்துவிட்டார். அவருடைய மரணச்செய்தி பத்திரிக்கையில் வந்தபோது தவறுதலாக ஆல்ஃப்ரெட் நோபலின் மரணச்செய்திபோல் வந்துவிட்டது. பத்திரிக்கைகள் “மரண வியாபாரி” மறைந்து விட்டார் என்ற தலைப்புடன் தகவலை வெளியிட்டது. மரண வியாபாரி என்ற அடையாளத்துடன் தன்பெயர் வெளிவந்தது ஆல்ஃப்ரெட் நோபலை வருத்தமடையச் செய்தது. தன்னுடைய அடையாளத்தை அவர் நல்லவிதமாக மாற்ற விரும்பினார்.

1895, நவம்பர் 27-ல் தன்னுடைய சொத்துக்களில் அதிகமான பகுதியை நோபல் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அந்த அறக்கட்டளைக்கு அர்ப்பணித்துவிட்டார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி என்ற துறைகளுக்கு நோபல் என்ற பெயரில் பரிசுகள் வழங்குவதற்காக அந்த அறக்கட்டளையை உருவாக்கினார். ஆல்ஃப்ரெட் நோபல் கணிதத்துறைக்கு நோபல் பரிசை அளிக்கவில்லை. அதற்கு ஒரு கணிதப்பேராசிரியருடன் இருந்த பிணக்கு முக்கியமான காரணம் என்று தெரிகிறது. 1968-ல் ஸ்வீடன் வங்கி நோபல் நினைவாக பொருளியல் பிரிவிலும் நோபல் பரிசினை அறிவித்தனர். 1901 முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கானவர்கள் நோபல் பரிசினை பெற்றுள்ளனர். நோபல் அறக்கட்டளையின் வட்டியில் மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. நோபல் பரிசு 10 மில்லியன் (1 கோடி) ஸ்விஸ் க்ரோனார் (இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட 14 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பானது). பாவத்தின் சம்பளம் அவ்வளவு குறைவாக இல்லை என்று தோன்றுகிறது.


மனம் நெகிழவைக்கும் ஒரு காணொளி :
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 


Thursday, December 19, 2013

கண்டுபிடிப்புகள் - 1 : பணம் (நாணயம்)

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.


பணம் (நாணயம்) :


பணம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

அப்படியிருந்தால், மாம்பழங்களைக் கொடுத்து பசுக்கள் வாங்கவேண்டியிருக்கும். அதாவது பண்டமாற்று முறையில்தான் பரிவர்த்தனை செய்ய வேண்டும். தேவையானவைகளை வாங்குவதற்கு எப்பொழுதும் மாம்பழங்களையோ பசுக்களையோ எடுத்துச் செல்வதைவிட பணத்தை எடுத்துச் செல்வது மிகவும் எளிதானது.

மேலும் மாம்பழத்தை மட்டுமே விளைவிக்கும் ஒருவருக்கு தேவைப்படும் பொருட்களை விற்பவர்கள் அனைவருக்கும், மாம்பழத்தின் தேவையில்லாமல் இருக்கலாம். அதனால் எப்பொழுதும் மாம்பழத்தைக் கொடுத்து பண்டமாற்றம் செய்வதென்பது அவரால் முடியாது. எனவே அனைவரும் பரிவர்த்தனை செய்ய ஏதுவாக, பொதுவான ஒரு குறியீட்டின் தேவையை இங்கு காணமுடிகிறது. அந்த பரிவர்த்தனை குறியீட்டின் அடையாளமாக உருவானதே பணம் எனப்படுகிறது

ஒரு பொருள் என்ற கண்ணோட்டத்தில் பணத்துக்கு எந்தவிதமான உபயோகமும் கிடையாது. பணத்தை சாப்பிட முடியாது. காகிதத்தில் இருந்தால் உடுத்தவாவது முயற்சிக்கலாம். ஆனால் பணம் வளமையின் அடையாளம். அதைக் கொடுத்து அதனையும் வாங்க முடியும். பணத்தின் மதிப்பு என்பது அரசாங்கத்தாலும், உலகாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவே ஆகும். முதல் உலகப்போருக்குப்பின் ஜெர்மனியில் அதிக அளவில், அதனுடைய பணம் அச்சடிக்கப்பட்டது. அதனால் அதன் மதிப்பு குறைந்தது. மக்கள் பணத்தை விறகாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த அளவுக்கு அது மதிப்பிழந்தது. இந்தியாவில் ஆயிரம் ரூபாய் மதிப்பிழந்ததும் ஒருமுறை நடந்தது.

பணத்தை முதன்முதலில் வரலாற்றில் உண்டாக்கியது யாரென்று தெரியவில்லை. சீனாவிலும், ஆப்பிரிக்காவிலும் சோழிகளை, பழைய காலத்தில், நாணயமாக உபயோகித்திருப்பது தெரிகிறது. “மாயன்” நாகரிகத்தில் ஒருவகை பஞ்சவர்ணக்கிளியின் இறகுகள் நாணயமாக புழக்கத்தில் இருந்திருக்கிறது. இவற்றைத்தவிர மக்கள் பவளம், வைரம் மற்றும் உலோகங்கள் போன்றவைகளையும் நாணயமாக உபயோகித்திருக்கிறார்கள்.

நாணயங்களை மக்கள் உபயோகித்திருப்பது, அவர்களுடைய வரவு செலவு கணக்கு எழுதுவதைக் காண்பதன் மூலமாகவே வரலாற்றில் தெரியவந்திருக்கிறது. மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்கில்) கி.மு 3100-ல் அரசாங்கத்தில் மக்கள் இன்னும் எவ்வள்வு வரி செலுத்தவேண்டும் என்பதுபோன்ற ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த காலகட்டத்தில் நாணயம் புழக்கத்தில் உள்ளது தெரிகிறது.

கி.மு  640-ல் லிடியாவில் (இன்றைய துருக்கியின் ஒரு பகுதி) முதன்முதலாக நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய தங்கமும் வெள்ளியும் கலந்த உலோகத்தால் இந்த நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது. கி.மு 350-ல் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் 10 மடங்கு வெள்ளி, ஒரு மடங்கு தங்கத்துக்கு இணையானது என்ற வகையில் நாணயங்களை வெளியிட்டதும் தெரிகிறது.
முதலில் பணம், உலோகத்தில் நாணயமாகவே தயாரிக்கப்பட்டது. ரோமப்பேரரசுகள் தங்களது நாணயத்தை கிட்டத்தட்ட 1000 வருடங்கள் மேற்கத்திய நாடுகளில் மதிப்பான நாணயமான வைத்திருந்தார்கள். தாங்கள் கைப்பற்றிய ஒவ்வொரு நாட்டிலும் தங்களது நாணயத்தையே அனுமதித்தார்கள்.

கி.பி 700-ல் சீன நாடு முதன்முதலாக காகிதத்தில் பணத்தை அச்சடித்தது. அரசாங்க அச்சகத்தில், அரசாங்க முத்திரையிட்ட பத்திரங்களாக அவை அச்சடிக்கப்பட்டன. அந்த காகிதத்தில், எவ்வளவு தங்கத்துக்கு அந்தப் பத்திரம் சமானம் என்று அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தில் தங்கத்தின் மதிப்புக்கு சமமான அளவுக்கே, பணம் அச்சடிக்கப்பட்டது. இதனால் அச்சடிக்கும் பணத்தின் அளவுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது. பணத்தட்டுப்பாடும் நிலவியது. ஆனால் ஸ்பானியர்கள், உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து அவர்களுடைய தங்கத்தின் இருப்பு அதிகமானபொழுது, அதற்கு சமமான பணத்தை அச்சடித்தார்கள். அதனால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகமானது.

1694-ல் இங்கிலாந்தில் “பேங்க் ஆஃப் இங்க்லேண்ட்” என்ற பெயரில், முறையான வங்கி ஒன்று தொடங்ககப்பட்டது. ஐசக் நியூட்டனால், தங்கத்துக்கும், பணத்துக்கும் ஒப்பீடு செய்யப்பட்டு பேங்கில் உள்ள தங்கத்துக்கு இணையான அளவுக்கு, 1884-ல் பணம் அச்சடிக்கப்பட்டு விநியோகத்துக்கு வந்தது. அதாவது, இந்தப் பணத்தைக் கொடுத்து, இந்த அளவுக்கு தங்கம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உத்திரவாதத்துடன் பணம் வெளிவந்தது. அதன் பின்னர் ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றுக்குப்பிறகு
“ஃபியட்” முறையில் பணம் அச்சடிக்கும் பழக்கம் வந்தது. இதன்படி பணம் அச்சடிக்கும் அளவுக்கு தங்கம் இருப்பு வைத்துகொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. லத்தீன் மொழியில் ஃபியட் என்றால், “அப்படியே இருக்கட்டும்” என்று பொருள். 1971-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன், தங்கத்துக்கு ஒப்பாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பை நீக்கிவிட்டு, அமெரிக்க டாலரை முற்றிலுமாக ஃபியட் பணமாக மாற்றினார். இந்த நிகழ்ச்சி “நிக்ஸன் அதிர்ச்சி” என்று அழைக்கப்படுகிறது.

1988-ல் ஆஸ்திரேலியா முதன் முதலாக ப்ளாஸ்டிக்கில் பணத்தை அச்சடித்தது. இன்றுவரை ப்ளாஸ்டிக் பணம் அச்சடிக்கும் தொழில் நுட்பத்தில் ஆஸ்திரேலியாவே முதலிடம் வகிக்கிறது.

காகிததில் பணம் அச்சடித்த நாட்களில், பணம் மரத்தில் விளைகிறது என்று கூறியிருக்கலாம். இன்று பணம் பெட்ரோலில் விளைகிறது. ப்ளாஸ்டிக் பெட்ரோலியத்தின் துணைப்பொருளாகக் கிடைக்கிறது. ப்ளாஸ்டிக்கில் மற்றுமல்லாது இன்று இணையத்திலும், சிலிக்கான் சில்லுகளிலும், தகவல் தொடர்புகளால் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

பணம் என்பது வெறும் நம்பிக்கைதான். இப்போது “பிட் காயின்” என்று இணையத்தில் உபயோகப்படுத்தும் பணமும் வந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் அதன் மதிப்பு அதிகமாகக் கூடிவிட்டது. பிட் காயினைப் பற்றி பிரிதொரு பதிவில் காணலாம். பணம் என்பது நம்பிக்கை மட்டுமே. அப்படியே இருக்கட்டும்.

என் கருத்து: ஃபியட் பணம் என்பது மிகப் பெரிய ஏமாற்று வேலை. இதனால் அமெரிக்காவுக்குத்தான் அதிகமான பலன். எந்தக் கரன்ஸி உலகில் அதிகமாக உபயோகிக்கப்படுகிறதோ அதற்கு எப்பொழுதும் தேவை அதிகமாகவே இருக்கும். அச்சடிக்கும் பணத்துக்கு இணையாக அந்த நாடு எதனையும் இருப்பு வைத்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரகள் மட்டுமே அந்த நாணயத்தை அச்சடிக்க உரிமை உணடு. அந்த கரன்ஸி அந்த நாட்டில் மட்டுமே புழக்கத்தில் இருந்தால்தான் அங்கு பணவீக்கம் ஏற்படும்.  என்னைப்பொறுத்தவரை இது ஒரு அரசாங்ககத்துக்கு கள்ள நோட்டு அடிக்க உரிமை கொடுத்ததுபோல் உள்ளது. நான் முதலில் வெளிநாட்டுக்கு சென்றபொழுது, நான் சென்ற நாட்டுக்கான கரன்ஸி எடுக்காமல், அமெரிக்கன் டாலரில் முதலில் பணம் எடுக்க வேண்டியிருந்தது. அதிகமாக சிந்தித்தால் நிம்மதிதான் குறையும் என்று நினைக்கிறேன்.

மூலம் : கூகுள் மற்றும் Brilliant Ideas ( Xavier Waterkeyn)
சிறிது சிரித்து மகிழ :


நாம் எத்தனை முறை தோல்விகளை சந்தித்தாலும் அதனால் குறையொன்றுமில்லை; ஆனால் எப்பொழுதும் முயற்சியைக் கைவிட்டு தோற்றவர்களாகிவிடக்கூடாது.
-    மாயா ஏஞ்சலா


Thursday, December 12, 2013

கதம்பம்-18

சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-9

ஃப்ராய்ட் பற்றிய பொதுவான விமர்சனங்கள்:

ஃப்ராய்டின் கருத்துக்களை கண்மூடித்தனமாக ஒத்துக்கொள்பவர்களும், அதே விதத்தில் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு முனைகளுக்கும் செல்லாமல் இடைப்பட்ட நிலையில் அவருடைய கருத்துக்களை அளவிடுவதே சரியானதாக தோன்றுகிறது.

ஃப்ராய்ட் பாலுணர்வை அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரமாகக் கருதுவதையே, அவர் மீதான பொதுவான விமர்சனமாக இருக்கிறது. நன்மை, தீமை என்று அனைத்து பண்புகளுக்கும் அதீதமான பாலுணர்வு அல்லது அழுத்தப்பட்ட பாலுணர்வே காரணம் என்று அவர் கூறுகிறார். பாலுணர்வைத் தவிர வேறொன்றும் இல்லையோ என்ற கேள்வியினால், பொதுவாக அவருடைய கருத்துக்களில் ஐயம் ஏற்படுகிறது. பிற்காலங்களில் இறப்பதற்கான உணர்வும் இருப்பதாக, ஃப்ராய்ட் கூறியுள்ளார்.
உண்மையில் சொல்லப்போனால், நமது அதிகமான செயல்களுக்கு பாலுணர்வே முக்கியமான தூண்டுதலாக அமைகிறது. விளம்பரங்கள், ஊடகங்கள் அனைத்தும் பாலுணர்வைச் சுற்றியே கண்ணாமூச்சு விளையாடுகிறது. இருப்பினும், பாலுணர்வைத் தழுவியே வாழ்க்கை அமைவதாக நாம் உணர்வதில்லை.

ஃப்ராய்டின் காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடையே நினைக்க முடியாத அளவுக்கு சமூகத்தில் மாற்றங்கள் வந்துவிட்டது. ஃப்ராய்டின் காலத்தில் பாலுணர்வு என்பது ஒரு பாவமான செயலாக கருதப்பட்டது. அத்தகைய எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தியதன், பெரும்பங்கு ஃப்ராய்டையே சேரும். ஃப்ராய்டின் குருவான ஃப்ரூயரும் கூட, ஃப்ராய்ட் அளவுக்கு நோயாளிகளின் பிரச்சனைகளை அணுக முடியவில்லை. ஃப்ராய்டின் முக்கியமான தவறானது, அனைத்து விஷயங்களையும், மக்களுடைய நாகரிகங்களைப் புரிந்துகொள்ளாமல் பொதுமைப்படுத்தியதே ஆகும்.

அவர் மீதான மற்றொரு விமர்சனமானது, ஆழ்மனது உணர்வுகளை, இயல்பு மனதுக்கு மாற்றினால், அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுவதாகும். ஆய்வாளர்கள், ஆழ்மனது மறைப்பதற்கான காரணமே, அவை தெரிந்துகொள்ளத் தேவையில்லை என்பதனால்தான் என்று கருதுகின்றனர்.

ஒருவருடைய செயல்களுக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்ற எண்ணம் இருந்த காலத்தில், சமூகத்துக்கும் அதில் முக்கிய பங்கு உள்ளது என்று ஃப்ராய்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆணும் பெண்ணும் இறைவனால் படைக்கப்பட்டு, கடமைகளும், செயல்களும் வரையறுக்கப்பட்டுவிட்டது என்று நினைத்த காலத்தில், சூழ்நிலைகள் அவர்களை மாற்றியமைக்கின்றன என்று ஃப்ராய்ட் கூறியுள்ளார்.

இரண்டாவதாக சில பிர்ச்சனைகளுக்கு, மூல காரணத்தைக் கண்டுபிடித்து உணர்வதால், பிரச்சனைகள் விலகுவதும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவயதில் சரியாக நடத்தப்படாத குழந்தைகள், பெரியவர்களான பிறகு அதற்குரிய பிரச்சனைகளோடு வளர்கிறார்கள். இந்த பிரச்சனைகளை உணர்ந்துகொள்ளும்பொழுது அவர்கள் இயல்பு நிலைக்கு மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மூன்றாவதாக, இயல்பு மனதின் தற்காப்புக்கான செயல்களை நம்மையறியாமலே நாம் மேற்கொள்வது உண்மையே. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதையும் நாம் உணரமுடியும்.

இறுதியாக மனோவியல் சிகிச்சை முறைகளை ஒரு வரைமுறையாக ஒழுங்குபடுத்திய பெருமையும் ஃப்ராய்டையே சாரும். ஃப்ராய்டின் கருத்துக்களை ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட, அவருடைய மருத்துவ முறைகள் மற்றும் நோயாளிக்கும் மனோவியலாளருக்கும் நல்ல ஒத்துழைப்பு இருப்பதன் அவசியத்தை மறுப்பதில்லை.

ஃப்ராய்டின் கருத்துக்களை அவர் வாழ்ந்த காலகட்டத்துக்கும், நாகரிகத்துக்கும் இணைத்து பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய கருத்துக்களின் தாக்கத்தை நன்கு உணரமுடியும். இன்றைய ஆராய்ச்சியாளர்களும், தங்களது கருத்துக்களை ஃப்ராய்டுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். மனோவியலில், ஃப்ராய்டைக் கலக்காமல் ஆராய்ச்சிகளைத் தொடர்வது என்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

முற்றும்.
திருவள்ளுவரின் பத்து கட்டளைகள் – கற்றல் (கேள்வி)
  
கடந்த நூற்றாண்டில், தத்துவவாதி  (Bertrand Russell)  பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அவர்களின் பத்து கட்டளைகளை சென்ற பதிவில் எழுதியிருந்தேன். அவற்றுள் சில கட்டளைகள் இன்றைய சூழலுக்கு, நடைமுறைபடுத்துவது பிரச்சனையை அதிகமாக்கும். கேள்வி அதிகாரத்தில், ரஸ்ஸல் கட்டளை போன்று, திருவள்ளுவரின் கட்டளைகளை இங்கே காணலாம். இன்றைக்கும் ஒத்துக்கொள்ளக் கூடிய வகையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மண்ணில், இந்த அளவுக்கு சிந்திக்கும் சான்றோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்க பெருமிதமாக உள்ளது.

1) அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத
உட்கோட்டை.

2)
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக்
காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

3)
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி
ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான்
அறிவுடைமையாகும்.

4)
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு
சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே
அறிவுடைமையாகும்.

5)
உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக
மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது
அறிவு.

6)
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும்
அப்படியே வாழ்வது அறிவு.

7)
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்
சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

8)
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது
அறிவாளிகளின் செயல்.

9)
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர்
நடுங்க வரும் துன்பமே இல்லை.

10)
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்,
அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். 


கற்பது தொடர்பான மிக முக்கியமான இணைய தளங்கள்:

இணையத்தில் இலவசமாக, படிக்க விரும்புபவர்களுக்கு இவை உதவும்.


Thursday, December 5, 2013

கதம்பம்-17


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-8

ஃப்ராய்டின் சிகிச்சை முறைகள்:

ஃப்ராய்டின் கருத்துக்கள், சிகிச்சை முறைகளில், மனோவியலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை அவருடைய சிகிச்சை முறைகளே. அவற்றின் முக்கிய பகுதிகளை இங்கே காணலாம்.

ஆசுவாசமான சூழல் : சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்களுடைய உணர்வுகளை மனன்விட்டு பகிர்ந்துகொள்ளக் கூடிய சூழல் மிகவும் முக்கியமானது. சிகிச்சைக்கான சூழலில், நோயாளிகள் மற்றவர்கள் தம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணி கலங்கக்கூடாத சூழ்நிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். உண்மையில் சொல்லப்போனால், ஃப்ராய்டின் சிகிச்சை முறைப்படி, சிகிச்சையளிப்பவர்கள் என்று ஒருவர் இருப்பதாகவே நோயாளிகள் நினைக்கக்கூடாது. மென்மையான படுக்கை, குறைவான வெளிச்சம், சத்தம் ஊடுருவாத அறை, ஆசுவாசமான மனநிலை என்றதாக சிகிச்சை நடக்கும் இடம் இருத்தல் அவசியம்.

தோழமையான பிணைப்பு: நோயாளி மனம்விட்டு பேசுமளவுக்கு சிகிச்சையளிப்பவர் இருக்கவேண்டும். அப்படி அமையும்பட்சத்திதான், ஆழ்மனத்திலுள்ள எண்ணங்கள் வெளீப்படும். கிட்டத்தட்ட இது கனவு காணும் நிலை. சிகிச்சையளிப்பவர்கள், அந்த நிலையில் கிடைக்கும் துப்புகளைக்கொண்டு, பிரச்சனையைத் தீர்க்கமுடியும்.

எதிர்க்கும் மனநிலை: சிகிச்சையின்பொழுது, நோயாளியிடம் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு மிகவும் முக்கியமான துப்பாகும். நோயாளிகள், பேச்சை திசை திருப்ப முயற்சித்தல், தூங்கிவிடுதல், திட்டப்படி சந்திக்க வருவதை தவிர்த்தல் போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து மனோவியளாலருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. சிகிச்சையளிப்பவர், ஆழ்மனப் பிரச்சனையை அணுகியதை அறிந்து அதற்கு நோயாளிகள் தம்மை அறியாமலே எதிர்ப்புகளை தெரிவிக்க முயல்வர்.

கனவுகளை ஆராய்தல்: தூக்க்கத்தில் ஆழ்மனதுடன் சிறிது எளிதாக உரையாட முடிகிறது. ஆழ்மனது கனவில் தன்னுடைய எணணங்களை குறிப்புகளாக வேறொரு நிகழ்ச்சியில் ஏற்றி வெளிப்படுத்துகிறது. இது மனோவியலாளர்களுக்கு இன்னும் துப்புக்களைக் கொடுக்கிறது. சிகிச்சை முறைகளில் நோயாளிகளின் கனவுகளும் உதவிகின்றன. ஆனால், ஃப்ராய்ட் அனைத்து கனவுகளையும் பாலுணர்வுடன் சம்பந்தப்படுத்தி தீர்வுகாண விழைகிறார்.

தவறுதலாக செய்யும் செயல்கள், சொல்லும் வார்த்தைகள்: இவை ஃப்ராய்டின் தவறுகள் என்றும் ஆழைக்கப்படுகின்றன. ஃப்ராய்ட் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உண்டு என்று கூறுகிறார். தவறான எண்ணுக்கு ஃபோன் செய்தல், தவறான வார்த்தையைக் கூறுதல், சென்று கொண்டிருக்கும்பொழுது தவறான பாதையில் சென்றுவிடுதல் என்று செய்யும் அனைத்து செயல்களுக்கும் அர்த்தங்கள் உண்டு என்று அவர் கருதினார். ஆனால், அவருடைய மாணவர்கள், அவரிடம் தாங்கள் புகைக்கும் சுருட்டுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு “ சில சமயங்களில் சுருட்டு, வெறும் சுருட்டு மட்டுமே” என்றும் கூறியுள்ளார்.


இடமாற்றுதல் (Transference) : நம்மையறியாமலே, சில சமயங்களில், சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு, குறிப்பிட்ட முடிவுகளையே நாம் எடுக்கக்கூடும். அத்தகைய முடிவுகள், சிறுவயதிலிருந்தே நமக்குள் ஏற்பட்டிருக்கும் சிந்தனைகளின் வெளிப்பாடாகும். இத்தகைய வெளிப்பாடுகள் மனோவியலில் நோயாளியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிகிச்சையளிப்பவர், இதன்மூலம், நோயாளிகளின் சிந்தனைப்போக்கை, தனது எண்ணப்படி மாற்றி, நோயாளிகளின் ஆழ்மனதிலிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், இந்த முறையில் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிப்பவர்களுக்கும் உள்ள உறவு, ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் அவசியம்.

தூய்மைப்படுத்தல்: ஆழ்மனதில் புதைந்திருக்கும், பிரச்சனைகளில் உள்ள மன அழுத்ததை வெளியேற்றுவதே தூய்மைப்படுத்துதல் என்றழைக்கப்படுகிறது. பிரச்சனையுடன் வாழாமல், அவைகளுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்தி வெளியேற்றுவதே நல்லது என்று ஃப்ராய்ட் கூறுகிறார். இந்த சிகிச்சை Catharsis”  அதாவது தூய்மைப்படுத்தல் என்றழைக்கப்படுகிறது.

பிரச்சனையை உணர்ந்துகொள்ளுதல்: மனதிலுள்ள பிரச்சனைக்கான நிகழ்ச்சியை புரிந்துகொள்வதே “Insight என்றழைக்கப்படுகிறது. தூய்மைப்படுத்துதலும், பிரச்சனையை உணர்ந்துகொள்ளுதலும் நிகழ்ந்துவிட்டால், சிகிச்சையின் முக்கியமான பகுதிகள் முடிந்துவிட்டதாகக் கூறிவிடலாம். எப்பொழுதோ, நிலைமையை சமாளிக்க முடியாத வயதில் நிகழ்ந்த பிரச்சனையை, இப்பொழுது உணர்ந்துகொண்டால், அது ஒருவரை மகிழ்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று ஃப்ராய்ட் கருதுகிறார்.

ஃப்ராய்ட் சிகிச்சையின் முக்கியமான இலக்கு ஆழ்மனதின் எண்ணங்களை, இயல்பான மனதின் எண்ணங்களாக மாற்றுவதே ஆகும்.


--- தொடரும்.கற்றலின் பத்து கட்டளைகள் :

1. இதுதான் இறுதியான உண்மை என்று எந்த விஷயத்தையும் நம்பிவிடாதீர்கள்.

2. ஆதாரங்களை மறைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு தாவிவிடலாம் என்று என்ணாதீர்கள்; என்றாவது ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும்.

3. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை குலைக்கும் எந்த சிந்தனையையும் ஊக்குவிக்காதீர்கள்.

4. அதிகாரத்தால் கிடைக்கும் வெற்றி உண்மையான வெற்றி அல்ல. எந்த மாற்றுக் கருத்தையும் அதிகாரத்தால் வெல்ல முயற்சிக்காதீர்கள்.

5. அதிகாரத்துக்கு தலைவணங்கி கருத்தை மாற்றாதீர்கள்; மாற்றுக்கருத்துகளைக் கொண்டவர்களும் அதிகாரத்துக்கு வரலாம்.

6. பதவியை உபயோகித்து எதிர்க்கருத்துகளை அழிக்க நினைத்தால், அந்த எதிர்க்கருத்துகளுக்கு பயந்தே நீங்கள் வாழவேண்டியிருக்கும்.

7. பைத்தியக்காரத்தனம் என்று எந்தக் கருத்தையும் ஒதுக்காதீர்கள்; ஒரு காலத்தில் பைத்தியக்காரத்தனமாக இருந்த கருத்துக்கள் இன்று உண்மைகளாகவும் மாறியிருக்கின்றன.

8. அறிவு பூர்வமான எதிர்க்கருத்துக்கள், முட்டாள்தனமான இணக்கத்தைவிட மகிழ்ச்சி தரும்;. அறிவு பூர்வமான கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருந்தால், அவர்கள் ஒரு காலத்தில் மனப்பூர்வமாக உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

9. பிரச்சனை தருவதாக இருந்தாலும், உண்மையாகவே நடந்துகொள்ளுங்கள்; உண்மையை மறைக்க முயல்வது அதைவிட அதிக பிரச்சனையைத் தரும்.

10. முட்டாள்களின் இன்பத்தைக் கண்டு பொறாமைப்படாதீர்கள்; முட்டாள்களே அது இன்பமயமானது என்று எண்ணுவார்கள்.


 --- தத்துவவாதி  (Bertrand Russell)  பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (1872-1970)

   கருத்துக்கள் நல்ல கருத்துக்கள்தான். ஆனால் இன்றைய நடைமுறைக்கு அனைத்து கருத்துக்களையும் உபயோகிக்க முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதனைவிட சிறந்ததாகவும், இன்றும் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு நமது வள்ளுவர் கூறியதை பதிவிடுகிறேன்.நம்புங்கள், இப்படியும் விளம்பரங்கள் வந்த காலம் இருந்தது :