பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, July 25, 2013

பிறவி மர்மங்கள்: 11-2 (உண்மை நிகழ்வுகள்)

இறுதியாக கேத்தரின் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“நகைகள் சென்றுவிட்டன. . . . . . ஒளியும் மறைந்துவிட்டது. . . . . . . எல்லாம் மறைந்துவிட்டன.”
“அசரீரிகளும் சென்றுவிட்டனவா?”
“ஆமாம். என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.” தலையை பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள்.
“ஒரு ஆன்மா என்னை நோக்குகிறது.”
“உன்னையா?”
“ஆமாம்.”
“அது யாரென்று அடையாளம் காணமுடிகிறதா?”
“சரியாகத் தெரியவில்லை. . . . . . அது எட்வர்ட் என்று நினைக்கிறேன்.” எட்வர்ட் ஒரு டாக்டர். சென்ற வருடம் இறந்துவிட்டார். எப்பொழுதும் கேத்தரினுக்கு உதவி செய்வதற்காக அவளுடன் அவர் இருப்பதுபோல் தோன்றுகிறது.
“அந்த ஆன்மா எப்படி தோற்றமளிக்கிறது?”
“வெண்மையான ஒளிபோல் தோன்றுகிறது. . . . . ஒளிபோல் தோன்றுகிறது. . . . . . அதற்கு முகம் எதுவும் இல்லை. ஆனால் அது எட்வர்ட் என்று என்னால் உணரமுடிகிறது.”
“உன்னுடன் பேசுகிறாரா?”
“இல்லை. என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்.”
“நான் பேசுவதை அவர் கேட்கிறாரா?”
“ஆமாம். ஆனால் இப்பொழுது அவர் சென்றுவிட்டார். நான் நலமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்பியிருக்கிறார்.” நாம் அனைவரும் கூறக்கூடிய பாதுகாக்கும் தேவதைகள் (Guardian Angels ) குறித்து சிந்தித்தேன். எட்வர்ட் அதுபோலவே வாஞ்சையுடன், கேத்தரினை, ஒரு பாதுகாக்கும் தேவதையாக கவனித்துக் கொண்டிருப்பது புரிந்தது. முன்பே கேத்தரின் பாதுகாக்கும் தேவதைகளைக் குறித்து கூறியுள்ளாள். குழந்தைகளாக இருக்கும்பொழுது நமக்குத் தோன்றும் கற்பனைகள், எந்த அளவுக்கு நமது பூர்வஜென்ம நினைவுகளை கொண்டிருக்கிறது என்று எண்ணி வியந்தேன்.

மேலும் ஆன்மாக்களிடம் அமைந்திருக்கும் வேறுவேறு நிலைகளும் எனக்கு வியப்பை அளித்தன. சில ஆன்மாக்கள் பாதுகாக்கும் தேவதைகளாக உள்ளன. சில வழிகாட்டும் நிலையில் உள்ளன. சில இன்னும் கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றன. ஆன்மாக்களுக்கு இருக்கும் அனுபவம் மற்றும் ஞானத்தைப் பொறுத்து அவைகளின் நிலைகள் அமைகின்றன என்று யூகிக்கிறேன். இறைவனுக்குரிய குணநலன்களுடன், இறைவனுடன் இரண்டற கலப்பதுதான் அவைகளின் இறுதி இலக்காக இருக்கிறது என்பதையும் உணர்கிறேன். இறைவனுடன் ஒன்றுகலந்து பேரின்பம் அடைந்து முக்தி பெறுவதைத்தான் ஆன்மீகவாதிகள் இறுதி இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டியிருப்பது புரிகிறது. அத்தகைய அனுபவ அறிவு அமையாமல் இருந்தபோதிலும், கேத்தரின் ஒரு ஊடகமாக செயல்பட்டு, அவள் மூலமாக கிடைக்கப்பெறும் ஞானம் உண்மையைத் தெள்ளத் தெளிவாக்குகிறது.

எட்வர்ட் மறைந்ததும் கேத்தரின் மௌனமானாள். அவள் மிகுந்த அமைதியுடன் இருப்பது அவள் முகத்தில் தெரிந்தது. பிறவிக்கப்பால், இறப்புக்கு அப்பால் சென்று இறைவனிடம் உரையாடி, அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய, என்ன ஒரு அருமையான பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாள்! நாங்கள் ஞானத்தின் ஊற்றிலிருந்து இனிமேலும் தடைசெய்யப்படாத ஆப்பிள் கனிகளை உண்கிறோம். இன்னும் எவ்வளவு ஆப்பிள்கள் மிச்சமிருக்கின்றன என்று என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

கேத்தரினுடைய அன்னை மின்னட்-க்கு மார்பக புற்றுநோய் கடந்த நான்கு வருடங்களாக உள்ளது. தற்சமயம் அது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத நிலையை அடைந்துள்ளது. கேத்தரினுடைய அன்னை மிகுந்த மனோதைரியத்துடன் நோயை எதிர்கொண்டிருக்கிறாள். ஆனால் நோய்பரவும் வேகம் அதிகரித்து மரணவாயிலில் இருக்கிறாள்.

கேத்தரின் தனது சிகிச்சையின் விவரங்களை தன் தாய் மின்னட்-இடம் பகிர்ந்திருக்கிறாள். மின்னட்டும் கேத்தரின் கூறுவதை மிகுந்த நம்பிக்கையுடன் கேள்வியில்லாமல் ஒத்துக்கொண்டது எனக்கு சிறிது ஆச்சரியத்தை அளித்தது. அவளுக்கு ஆன்மீகம் தொடர்பான புத்தகங்களை அளித்தேன். நானும் என் மனைவி மற்றும் மின்னட் மூவரும் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான “கபல்லா” என்ற யூத ஆன்மீக கருத்துக்குகளை கற்பதற்கு மின்னட் ஏற்பாடு செய்தாள். அவை இன்றைய நாகரிக யூதர்களுக்கு தெரியாத விஷயங்கள். மறுபிறவி கருத்துகள், வேறுபட்ட பரிமாணங்கள் ஆகியவைகள் கபல்லாவின் கோட்பாடுகள் ஆகும். மின்னட்டின் மனோபலம் அதிகரித்தது. அதே நேரத்தில் அவளது உடல்நிலை மோசமடைந்துகொண்டேவந்தது. அவள் இறைவனுடன் கலக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆன்மா அழிவில்லாததென்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாள். அந்த நம்பிக்கை அவளது உடல் உபாதைகளை மறக்க வைத்தது. அவளது மகள் “டோனா”-வின் முதல் குழந்தையின் வரவுக்காக உயிரைக் கையில் பிடித்துவைத்திருந்தாள். காத்தரினுடைய ஹிப்னாடிச அமர்வுக்கு ஒருமுறை வருகையளித்தாள். காத்தரினுடைய நேர்மையும், உண்மையான பரிவும், மின்னட்-ஐ இறப்புக்குப்பின் ஆன்மா இருப்பதை நம்ப வைத்தது.

மரணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மின்னட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நானும் என் மனைவியும் மின்னட்–டுக்காக நேரத்தை ஒதுக்கி, பிறப்பு மற்றும் இறப்புக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது என்றும் உரையாடினோம். மிகுந்த சுயமரியாதையுடைய மின்னட், கௌரவத்துடன் தாதிகளுடைய அரவணைப்பில், மருத்துவமனையிலேயே உயிர்நீக்க விரும்பினாள். அவள் மகள் “டோனா” ஆறுவார குழந்தையுடன், தாயை சந்தித்து இறுதிவிடையளித்தாள். நானும் என் மனைவியும் மின்னட் உடன் அதிக நேரம் செலவழித்தோம். மின்னட் மரணமடைந்த இரவு, மாலை ஆறு மணிக்கு நானும் என் மனைவியும் ஏதோ ஒருவிதமான உந்துதலால் மருத்துவமனை செல்ல விரும்பினோம். மருத்துவமனைக்குச் சென்று மின்னட் உடன் பொழுதைக் கழித்தோம். அந்த ஆறுமணி நேரங்களில், அந்த அறை முழுவதும் அமைதி மற்றும் ஆன்மீக ஒளியினால் நிறைந்திருந்தது. மின்னட் சுவாசிக்க சிரமப்பட்டாலும் வலி எதையும் உணரவில்லை. இறப்புக்குப் பிறகு, காணக்கூடிய பிரகாசமான ஒளி, இடைப்பட்ட நிலை மற்றும் ஆன்மாக்களின் வரவு குறித்து உரையாடினோம். மின்னட் தான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் கண்ணோட்டமிட்டாள். வாழ்வில் நேர்ந்த சில தவறுகளை அவளுக்கு ஒத்துக்கொள்வதில் சிரமமிருந்தாலும், ஒத்துக்கொள்ளும்வரை அந்த செயலாக்கம் நிறைவு பெறாது என்று அவள் உணர்ந்துகொண்டதுபோல் தோன்றியது. அவள் குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருப்பதை உணர்ந்தோம். அந்த நேரம் வருவதற்குள் அவள் பொறுமையிழப்பது தெரிந்தது. அதிகாலையில் அவள் ஆன்மா உடலை விட்டு பிரிந்தது. நான் ஒருவரை மரணத்தை நோக்கி வழிநடத்துவதென்பது இதுதான் முதல்முறை. மன உறுதியுடன் அவள் ஆன்மா பிரிந்தது எங்கள் வருத்தத்தைத் தணித்தது.

நோயாளிகளை குணப்படுத்தும் திறமை என்னிடம் குறிப்பிடதக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். பதற்றங்களையும், அச்சங்களையும் போக்குவது மட்டுமல்லாது, மரணம் குறித்து மனக்கலக்கங்களையும் என்னால் நன்கு களையமுடிகிறது. என்ன நோய், எப்படிக் குணப்படுத்த வேண்டும் என்று என் உள்மனது தன்னிச்சையாக எனக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. தன்னம்பிக்கையூட்டுவதும், அமைதி வழிக்கு நோயாளிகளைத் திருப்புவதும் எனக்கு மிகவும் எளிதான செயலாக மாறியுள்ளது. கேத்தரினுடைய அன்னையின் மறைவுக்குப் பிறகு, மரணவாயிலில் இருப்பவர்களை சாந்தப்படுத்தவும், வழிநடத்தவும் எனது உதவிகேட்டு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன. அப்படிப்பட்டவர்களும்கூட கேத்தரினுடைய அனுபவத்தைக் கேட்கவோ, இறப்புக்குப்பின் ஆன்மாவின் பயணத்தை அறியவோ விருப்பமில்லாதவர்களாக இருந்தனர். இருப்பினும், என்னால் ஓரளவுக்கு அவர்களுக்கும் ஆன்மீகத்தைப் புகட்ட முடிந்ததாக உணர்கிறேன். அன்பான வார்த்தைகள், அடுத்தவர்களுடைய அச்சங்களையும், கலக்கங்களையும் நன்கு புரிந்துகொள்ளுதல், கனிவான பார்வை, வாஞ்சையுடனான ஸ்பரிசம், இனிமையான ஒரு சொல் – மறந்துவிட்ட மனிதநேயத்தையும், ஆன்மீகத்தையும், எதிர்கால நம்பிக்கையையும்,  மற்றனைத்தையும் சரியாகப்பற்றிவிட இவை போதும். மேலும் அறிய விருப்பப்பட்டவர்களுக்கு தேவையான புத்தகங்களைப் பரிந்துரைத்தேன். காத்தரினுடைய அனுபவங்களையும் கூறினேன். அது அவர்களின் வாழ்வில் ஒரு புதிய ஜன்னலைத் திறந்ததை அறிகிறேன். விருப்பப்பட்டு கற்றவர்கள் புத்துணர்ச்சி அடைந்தனர். வாழ்வைப்பற்றிய புரியாத புதிர்களையும், அதற்கான பதில்களையும் விரைவில் கண்டறிந்தனர்.
மனோவியலாளர்கள் இன்னும் திறந்த மனதுடன் செயல்பட வேண்டுமென்று எண்ணுகிறேன். காத்தரினுடைய சிகிச்சையை அறிவியல் முறைப்படி, ஆவணப்படுத்தியதுபோல் முக்கியமான அனைத்து சிகிச்சைகளையும் ஆவணப்படுத்துதல் மிகவும் அவசியம். அதே சமயத்தில் மனோவியலாளர்களின் அனுபவங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். இறப்புக்குப்பின் உள்ள நிலைக்கான வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு மனோவியலாளர்கள் சிகிச்சை அளித்தல் நலமென்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் நோயாளிகளின் பழைய நினைவுகள் அனைத்தையும் கிளற வேண்டுமென்ற அவசியமில்லை. இருப்பினும் நோயாளிகளின் அனைத்து அனுபவங்களையும் கருத்தில்கொண்டு, தங்களது அனுபவத்தையும் உபயோகித்தால் நல்ல பயன் கிடைக்கும்.

மக்கள் மரணத்தை நினைத்து அச்சம் கொண்டிருக்கிறார்கள். அணுஆயுதப் பேரழிவு, எய்ட்ஸ், பயங்கரவாதம், நோய்கள் ஆகிய ஆபத்துகளை எப்பொழுது வேண்டுமானாலும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். பதின்மவயதிலேயே சிலர், எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய எண்ணங்கள் முழுமையான சமூகத்தின் மன அழுத்ததைக் காட்டுகிறது.

தனிப்பட்ட முறையில் மின்னட், காத்தரினுடைய சிந்தனைகளை புரிந்து ஏற்றுக்கொண்டது மன நிம்மதியை அளிக்கிறது. அவளுடைய நம்பிக்கையின் பலம் அதிகரித்தது. அது உடல் உபாதைகளை பொறுத்துக்கொள்ள வழிவகுத்தது. நம் அனைவருக்கும் இதனால் கிடைக்கும் செய்தி, எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்வதே ஆகும். காத்தரினுக்கு நேர்ந்துபோல் வேறு சிலருக்கும் நேர்ந்திருக்கலாம். அதனை மனோவியலாலர்களும், அறிவியலாளர்களும், பொதுமக்களும் வெளிக்கொணர வேண்டும். நமது ஆன்மா அழிவில்லாதது. நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது. நாம் எப்பொழுதும் இணைந்தே இருப்போம்.

--தொடரும்.


உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்:

பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரியவந்திருக்கிறது. இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக்கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது. ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக்கூடுமா?

வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குணநலன்களைப்பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம். இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்.
1970-ல் “கிளாரியா சில்வியா” என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன. தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார். ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை A change of heart என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது. எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வதுபோன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன. மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.  உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக சில வீடியோக்கள் உள்ளன. முதல் பகுதி வீடியோவின் லிங்க்.


தர்க்கவகைப் புதிர்:

அநேகருக்கும் தெரிந்த புதிர்தான். ஒருவர் சொர்க்கத்துக்கு செல்லும் வழியில் இரண்டு பாதைகளைக் காண்கிறார். ஒன்று சொர்க்கத்துக்கு செல்லும் பாதை. மற்றொன்று நரகத்துக்கு செல்லும் பாதை. எந்தப்பாதை எதற்கு இட்டுச்செல்லும் என்று அவருக்குத்தெரியாது.

அங்கு இருவர் உள்ளனர். அந்த இருவருக்கும் சரியான பாதை எதுவென்று தெரியும். அந்த இருவரில் ஒருவர் நூறு சதவிகிதம் உண்மையை மட்டுமே சொல்லுவார். மற்றொருவர் நூறு சதவிகிதம் பொய்யை மட்டுமே சொல்லுவார். பொய் சொல்பவருக்கு இன்னொருவர் உண்மையே சொல்வாரென்று தெரியும். அதுபோல உண்மை சொல்பவருக்கும் இன்னொருவர் பொய் மட்டுமே சொல்வாரென்றும் தெரியும். இருவருக்கும் வழிதெரியுமென்று உண்மை பேசுபவருக்கும், பொய் பேசுபவருக்கும் தெரியும்.

வழிகேட்டு வருபவருக்கு யார் பொய் சொல்லுபவர், யார் உண்மையை சொல்லுபவர் என்று தெரியாது.அவர் அந்த இருவரில், ஒருவரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு வரும் பதிலைக் கொண்டு, சரியான வழியைக் கண்டுபிடித்து சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும்.

அவர் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு சரியான வழியைக் கண்டுபிடித்துவிட்டார். அவர் கேட்ட கேள்வி என்ன?
Thursday, July 18, 2013

பிறவி மர்மங்கள்: 11 (உண்மை நிகழ்வுகள்)


சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடீரென்று நடுக்கத்துடன் விழித்தெழுந்தேன். மீண்டும் மீண்டும் கேத்தரினுடைய முகம் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. மிகுந்த சோகத்துடன் அவளது முகம் காணப்பட்டது. அவளுக்கு என் உதவி தேவைப்படுவது போன்ற எண்ணம் தோன்றியது. மணியைப் பார்த்தேன். அதிகாலை 3:36. வெளியிலிருந்து எந்த ஓசையையும் கேட்டு நான் எழுந்ததாகத் தோன்றவில்லை. மனைவி கரோல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். நடந்ததை சற்று மறந்துவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தேன். சரியாக அதே நேரத்தில், 3:30 மணியளவில், கேத்தரின் பயங்கர கனவு கண்டு பயத்துடன் தூக்கத்தில் இருந்து விழித்திருக்கிறாள். உடல் முழுவதும் வியர்த்து விட்டது. நாடித்துடிப்பு உச்சவேகத்துக்கு சென்று விட்டது. கேத்தரின் தியானம் செய்து இயல்பு நிலைக்கு திரும்ப முடிவெடுத்திருக்கிறாள். எனது உருவத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, என் குரலொலியைக் கேட்பதுபோல் கற்பனை செய்து, சிறிது சிறிதாக உறக்கத்துக்குச் சென்றிருக்கிறாள்.

 

கேத்தரினுடைய ஆருடம் கூறும் திறமை வளர்ந்துகொண்டே இருந்தது. எனக்கும் அந்த திறமை ஒட்டிக்கொண்டது. மனோவியலில் எண்ணங்களின் இடமாற்றம், மற்றும் இடமாற்றத்தின் எதிர்விளைவு என்று இரு நிகழ்வுகள் இருப்பதாக என்னுடைய பேராசிரியர்கள் பேசிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எண்ணங்களின் இடமாற்றம் என்பது, நோயாளி தன்னுடைய நினைவுகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை தன்னுடைய மனோதத்துவ நிபுணரிடம் இடமாற்றம் செய்வதாகும். இடமாற்றத்தின் எதிர்விளைவானது, இடமாற்றத்தின் காரணத்தினால், மனோதத்துவ நிபுணரின் தன்னிச்சையற்ற, உணர்வுமயமான செயல்கள் ஆகும். ஆனால் அன்று அதிகாலை 3:30 மணியளவில் நிகந்த நிகழ்வு, இந்த விளைவுகளைச் சாராது. இது இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு டெலிபதி தொடர்பு போல், இயல்பான அலைவரிசைகளுக்கு அப்பால் நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் ஹிப்னாடிஸ சிகிச்சை ஏதோ ஒரு பாதையை திறந்துவிட்டிருக்கிறது. அல்லது எங்களை கவனித்துக் கொண்டிருக்கும், வழிகாட்டி ஆன்மாக்கள் அல்லது காக்கும் தேவதைதான் இந்த நிகழ்வுக்குக் காரணமா? நான் வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

 

அடுத்த ஹிப்னாடிஸ அமர்வின்பொழுது, கேதரின் வெகுவிரைவில் சமாதி நிலைக்குச் சென்றுவிட்டாள். சென்ற சில நிமிடங்களிலேயே பதற்றத்துடன் அவள் குரல் ஒலித்தது. “மிகப்பெரிய மேகக்கூட்டத்தைக் காண்கிறேன் . . . . . . எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது. இங்கே இருக்கிறது.” அவளது சுவாசத்தின் வேகம் அதிகரித்தது.

“இன்னும் இருக்கிறதா?” நான்.

“தெரியவில்லை. வந்தவுடன் மறைந்துவிட்டது. . . . . மலைமேல் சென்றுவிட்டது.” வேகமான சுவாசத்துடன், பதற்றத்துடன் காணப்பட்டாள். வெடிகுண்டு தாக்குதலை பார்த்திருக்கிறாள் என்று எண்ணினேன். அவளால் எதிர்காலத்தை பார்க்க முடியுமா? என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.

“மலையைக் காணமுடிகிறதா? ஏதேனும் வெடியோசைபோல தெரிகிறதா?”

“தெரியவில்லை.”

“பின் ஏன் அஞ்சுகிறாய்?”

“திடீரென்று நிகழ்ந்து விட்டது. அங்கேதான் நடந்தது. மிகவும் புகைமூட்டமாக உள்ளது. மிகவும் பெரியது. பக்கத்திலேயே உள்ளது. ஆ . . . . . .” அலறினாள்.

“நீ பாதுகாப்பாகத்தான் இருக்கிறாய். உன்னால் இன்னும் அருகில் செல்ல முடிகிறதா?”

“நான் அருகில் செல்ல விரும்பவில்லை.” உறுதியாக மறுத்தாள். இவ்வளவு உறுதியாக அவள் இதுவரை மறுத்ததில்லை.

“அருகில் செல்ல ஏன் அஞ்சுகிறாய்?”

“ஏதோ கெமிக்கல்போல் தோன்றுகிறது. பக்கத்தில் சென்றால் மூச்சு திணறுகிறது.” மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது.

“ஏதாவது எரிவாயுபோல் உள்ளதா?” மலையிலிருந்து வருகிறதா? எரிமலை வெடித்துள்ளதா?”

“அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு பெரிய நாய்க்குடைபோல் உள்ளது. வெண்மையாக உள்ளது.

“வெடிகுண்டு இல்லை அல்லவா? அணுகுண்டுபோல ஏதாவதா?”

“எரிமலை வெடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். மிகவும் அச்சமாக உள்ளது. மூச்சுவிட சிரமமாக உள்ளது. காற்றில் தூசி அதிகமாகிவிட்டது. எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை.” சிறிது சிறிதாக இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தாள். அந்த பயங்கரமான இடத்திலிருந்து வெளிவந்து விட்டாள்.

“இப்போது நன்றாக சுவாசிக்க முடிகிறதா?”

“ஆமாம்”

“இப்போது என்ன காணமுடிகிறது?”

“ஒரு நெக்லசைக் காண்கிறேன். யார் கழுத்திலோ உள்ளது. சில்வர் நிறத்தில் உள்ளது. அதில் நீலநிற கல் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதன்கீழே சிறுசிறு கற்களும் தொங்குகின்றன.”

“நீலநிற கல்லில் வேறு எதுவும் தென்படுகிறதா?”

“இல்லை. கண்ணாடிபோல் அதனை ஊடுருவி பார்க்க முடிகிறது. அதனை அணிந்திருக்கும் பெண்ணுக்கு கூந்தல் கருமையாக உள்ளது. நீலநிற தொப்பி அணிந்திருக்கிறாள். . . . . . அந்த தொப்பியில் சிறகுகள் காணப்படுகின்றன. வெல்வெட் உடை அணிந்திருக்கிறாள்.”

“அந்த பெண்ணை யாரென்று உனக்குத் தெரிகிறதா?”

“இல்லை.”

“நீதான் அந்த பெண்ணா? நீ அங்குதான் இருக்கிறாயா?”

“தெரியவில்லை.”

“ஆனால் உன்னால் பார்க்கமுடிகிறது அல்லவா?”

“ஆமாம். ஆனால் நான் அந்த பெண் இல்லை.”

“அவளுக்கு என்ன வயது இருக்கும்?”

“சுமாராக நாற்பது இருக்கலாம். ஆனால் மிகவும் வயதானவராக தென்படுகிறாள்.”

“என்ன செய்துகொண்டிருக்கிறாள்?”

“மேசை பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். மேசையில் வாசனை திரவியம் உள்ள பாட்டில் உள்ளது. வெண்மையும் பசுமையும் கலந்த மலர்கள் அதில் இருக்கின்றன. தலைவாரும் பிரஷ்ஷும், சில்வர் நிறமுடைய கைப்பிடி கொண்ட சீப்பும் உள்ளது.” அவளது நுணுக்கமான விவரணைகள் என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.

“அது அவளுடைய அறையா? அல்லது ஏதாவது கடையா?”

“அவளுடைய அறைதான். அங்கு ஒரு கட்டில்; பழுப்பு நிற கட்டில் உள்ளது. அதன் கால்கள் நான்கு தூண்கள்போல் கட்டில் மேலேயும் சென்றுள்ளது. மேசைமேல் ஒரு படம் உள்ளது.”

“படமா?”

“ஆமாம். அதைத்தவிர அந்த அறையில் வேறு படங்கள் இல்லை. வேடிக்கையான திரைச்சீலைகள், கருமையான திரைச்சீலைகள் உள்ளன.”

“வேறுயாரும் இருக்கிறார்களா?”

“இல்லை.”

“உனக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு?”

“நான் அவளுக்குப் பணிபுரிகிறேன்.” மீண்டும் வேலைக்காரியாக பிறந்திருக்கிறாள்.

“அவளுடன் நீண்ட நாட்கள் பழகியிருக்கிறாயா?”

“இல்லை. சிலமாதங்களாகத்தான் தெரியும்.”

“உனக்கு அந்த நெக்லஸ் பிடித்திருக்கிறதா?”

“மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் அழகாக, நளினமாக இருக்கிறது.”

“நீ எப்பொழுதாவது நெக்லஸ் அணிந்திருக்கிறாயா?”

“இல்லை.” அவளுடைய ஒரு வரி பதில்கள், என்னுடைய கேள்வி கேட்கும் முறையை மாற்றியமைக்க வேண்டிய எண்ணத்தைத் தோற்றுவித்தது. அவளுடைய பதில்கள் என்னுடைய பதின்மவயது மகனை நினைவுபடுத்துகிறது.

“இப்பொழுது உன்னுடைய வயது என்ன?”

“பதின்மூன்று, பதினான்கு இருக்கலாம். . . . .” என் மகனின் வயதையொத்துதான் இருக்கிறது.

“உன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாயா?”

“இல்லை. வெளியேறவில்லை.” என்னை திருத்தினாள். “நான் இங்கு வேலை செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன்.”

“அப்படியானால் உன் வீட்டுக்கு திரும்பிவிடுவாயா?”

“ஆமாம்.” அவளுடைய பதில்கள் கேள்விகள் கேட்க உகந்ததாக இல்லை.

“அருகில்தான் வசிக்கிறாயா?”

“பக்கத்தில்தான் வசிக்கிறோம். . . . . நாங்கள் ஏழைகள். நாங்கள் வேலை செய்தால்தான் பிழைக்க முடியும். . . . . வேலை செய்தாகவேண்டும்.”

“உன் எஜமானியின் பெயரென்ன?”

“மெலிண்டா.”

“உன்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்களா?”

“ஆமாம்.”

“உன் வேலை கடுமையானதா?”

“அப்படியெல்லாம் இல்லை.” பதின்ம வயதினர்களுடன் உரையாடுவது சுலபமானது கிடையாது. சந்தர்ப்பவசமாக எனக்கு அதில் அனுபவமிருக்கிறது.

“சரி. இப்பொழுதும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?”

“இல்லை.”

“எங்கிருக்கிறாய்?”

“வேறொரு அறையில் இருக்கிறேன். கருப்புத் துணியால் மூடிய மேசை இருக்கிறது. . . . . அதன் ஓரங்களில் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட பச்சிலைகளின் மணம் வீசுகிறது. . . . . . கடுமையான மணம். “

“அவை உன் எஜமானியைச் சேர்ந்ததா? அவர்கள் அதனை அதிகமாக உபயோகிக்கிறார்களா?”

“இல்லை. இது வேறு ஒருவருடைய அறை.”

“யாருடைய அறை?”

“இது வேறு கருப்புப் பெண்ணுடைய அறை.”

“கருப்பு நிறம்? உன்னால் அவளைக் காணமுடிகிறதா?”

“தலையில் முக்காடு அணிந்திருக்கிறாள். தலையை நன்றாக மூடியிருக்கிறாள். வயதானதால் அவள் தோல்களில் அதிக சுருக்கங்களைக் காண்கிறேன்.”

“உனக்கும் அவளுக்கும் என்ன உறவு?”

“நான் இப்பொழுதான் அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்.”

“எதற்காக?”

“அவள்தான் காகித அட்டைகளைப் பார்த்துக் கூறுவாள்.” கேத்தரின் ஆருடம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள் என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது. இது ஒரு முக்கியமான திருப்புமுனை. என்னை அறியாமலே இருநூறு வருடங்களுக்குமுன், கேத்தரினுடைய வாழ்க்கையில் என்ன நிகழ்கிறது என்று எனக்கும் தெரிந்திருக்கிறது. அவள் ஆருடம் பார்க்கச் சென்றிருப்பதை உணர்ந்திருக்கிறேன். நிகழ்கால பிறவியில் கேத்தரின் ஆருடம் பார்க்கச் சென்றதில்லை. ஜோதிடம் போன்றவைகளைப் பற்றி அவளுக்கு அச்சம் அதிகம்.

“அவள் எதிர்காலம் பற்றிக் கூறுவாளா?”

“அவளால் அவற்றைப் பார்க்க முடியும்.”

“நீ அவளைக் கேள்விகள் கேட்க வேண்டுமா? எதைப்பற்றி தெரிந்துகொள்ள விழைகிறாய்? உனக்கு என்ன தெரியவேண்டும்?”

“ஒரு ஆடவரைப் பற்றி. . . . . . அவரை நான் மணந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.”

“அவள் அந்த அட்டைகளைப் பார்த்து எப்படி கூறுவாள்?”

“சில காகித அட்டைகள் வைத்திருக்கிறாள். . . . . அதன்மேல் சில குச்சிகளும், பூக்களும் உள்ளன. . . . . குச்சிகள், பூக்கள், அம்புகள், ஏதேதோ கோடுகள் தென்படுகின்றது. இன்னொரு அட்டை ஒரு கிண்ணத்தில் உள்ளது. . . . . ஒரு அட்டையில் ஒரு மனிதன், இல்லை, ஒரு சிறுவன் கவசத்துடன் இருக்கிறான். நான் மணமுடிப்பேன் என்று கூறுகிறான். ஆனால் அந்த ஆடவரை அல்ல. வேறொருவரை. . . . . . வேறொன்றும் தெரியவில்லை.”

“அந்த வயதானவளைப் பார்க்கிறாயா?”

“சில நாணயங்களைப் பார்க்கிறேன்.”

“இன்னும் அங்கேதான் இருக்கிறாயா?”

“ஆமாம்.”

“அந்த நாணயங்கள் எப்படி இருக்கின்றன?”

“தங்க நாணயங்கள். சதுர வடிவில் உள்ளது. அதன் ஒரு பக்கத்தில் கிரீடம் தென்படுகிறது.”

“அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?”

“ஏதோ அயல்மொழியில் எண்கள் உள்ளன. ரோமன் எழுத்துக்கள் பத்து மற்றும் ஒன்று போலவும் உள்ளது.”

“எந்த வருடத்தில் இருக்கிறாய்?”

“எந்த வருடம் என்று தெரியவில்லை.” மௌனமானாள்.

“அந்த வயதானவள் கூறிய ஆருடம் பலித்ததா?”

“அவள் போய்விட்டாள். . . . .  அவள் போய்விட்டாள். எனக்குத் தெரியவில்லை.”

“இப்பொழுது ஏதாவது பார்க்க முடிகிறதா?”

“இல்லை.”

அவள் பதில் என்னை வியப்புக்குள்ளாக்கியது. எங்கே இருக்கிறாள் என்று புரியவில்லை. “உன் பெயர் என்ன?” ஏதாவது பிடி கிடைக்குமா என்று முயற்சித்தேன்.

“அந்த இடத்தைவிட்டு வந்து விட்டேன்.” அந்த பிறவியை முடித்து விட்டாள். மரணத்தின் அனுபவத்தை இம்முறை கடக்கவில்லை. ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். இந்த பிறவியில் முக்கியமான விஷயங்கள் எதுவும் தென்படவில்லை. நுணுக்கமான விவரணைகள் கிடைத்தது. ஆருடம் பார்க்க சென்றிருந்தது ஒரு வித்தியாசமான தகவல். நிமிடங்கள் கழிந்தது.

“இப்பொழுது ஏதாவது காணமுடிகிறதா?”

“இல்லை.”

“ஓய்வெடுக்கிறாயா?”

“ஆமாம். . . . . பல வண்ணங்கள் கொண்ட நகைகள்.”

“நகைகளா?”

“ஆமாம். உண்மையில் அவை விளக்குகள். நகைகள் போல காட்சியளிக்கின்றன.”

“வேறென்ன காண்கிறாய்?”

“நான் . . . . . “ மௌனமானாள். அவள் குரல் கணீரென்று ஒலிக்க ஆரம்பித்தது. வழிகாட்டி ஆன்மாக்கள் வந்திருப்பதை அது உணர்த்தியது. “பல்வேறுபட்ட சிந்தனைகளும் வார்த்தைகளும் எங்கும் ஒலிக்கின்றன. . . . . இணக்கமாக சேர்ந்து வாழ்வதற்காக . . . . . சமநிலையை பெறுவதற்காக.”

“ஆமாம். நான் இதைப்பற்றி அறிய விரும்புகிறேன்.”

“இப்பொழுது அனைத்தும் வார்த்தைகள் அளவிலேயே உள்ளது. ஆமாம். இணக்கமாக வாழ்வது என்பது வார்த்தைகள் அளவிலேயே உள்ளது.” புலமையுடன் பேசும் வழிகாட்டி ஆன்மாவின் குரலைக் கேட்டு நான் சிலிர்ப்படைந்தேன்.

 

பதில் தொடர்ந்தது. “அனைத்து உயிர்களும், இயக்கங்களும் ஒருங்கினைந்து சமச்சீருடன் இருக்க வேண்டும். இயற்கை சமநிலையில் இயங்குகிறது. விலங்குகள் ஒருங்கிணைந்து வாழ்கின்றன. மனிதன் இன்னும் அவற்றை கற்றுக்கொள்ளவில்லை. தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். இணக்கமின்றி இருக்கிறார்கள். அதற்கான திட்டங்களும், எண்ணங்களும் இல்லை. இது இயற்கைக்கு மாறானது. சக்தியும், வாழ்க்கையும் இயற்கையில் புதைந்திருக்கின்றன. மனிதன் இயற்கையை அழிக்கிறான். சக மனிதர்களை அழிக்கிறான். முடிவில் அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள நேரிடும்.”

இது ஒரு முன் அறிகுறியான எச்சரிக்கைக் கொண்ட ஆருடம். உலகம் எல்லா காலகட்டங்களிலும் பிரச்சனைகளையும், குழப்பங்களையுமே கொண்டிருக்கிறது. அதில் நல்ல மாற்றம் ஏற்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். “எப்பொழுது இந்த நிகழ்வு நடைபெறக்கூடும்?” வினவினேன்.

“நீ நினைப்பதைக் காட்டிலும் விரைவில் ஏற்பட்டுவிடும். இயற்கை அழியாது. தாவரங்களும் அழியப்போவதில்லை. ஆனால் மனிதகுலம் தப்பிக்கப்போவதில்லை.”

“இதைத் தவிர்க்க எங்களால் ஏதேனும் செய்ய இயலுமா?”

“இல்லை. அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.”

“எங்கள் வாழ்நாளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுமா? எங்களால் இதை மாற்ற இயலுமா?”

“உங்கள் வாழ்நாட்களில் நடைபெறாது. அந்த நேரத்தில் நீங்கள் வேறு பரிமாணத்தில், வேறு நிலைகளில் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் நிகழப்போவதைக் காண்பீர்கள்.”

“மனிதகுலத்துக்கு கற்பிக்க வழியேதும் உள்ளதா?” தப்பிக்க வழியேதும் இருக்கிறதா என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.

“வேறு நிலையில் அதனைச் செய்ய இயலும். அப்பொழுது அவற்றைக் கற்றுக்கொள்வீர்கள்.”

“நல்லது. நமது ஆன்மா வேறு நிலைகளுக்கு முன்னேறிவிடும் அல்லவா?”

“ஆமாம். இங்கு இருக்கமாட்டீர்கள். . . . . . நீங்கள் கூறுவதுபோல் வேறுநிலைகளுக்கு முன்னேறுவீர்கள். நிகழ்பவைகளைக் காண்பீர்கள்.”

“ஆமாம்.” ஒத்துக்கொண்டேன். “நான் மற்றவர்களுக்கு இவற்றைக் கற்பிக்க வேண்டும். ஆனால் எப்படி எல்லோரையும் அடைவது என்று தெரியவில்லை. அவர்களாகவே கற்றுக்கொள்ள வழியேதும் உள்ளதா?”

“உன்னால் எல்லோரையும் அடையமுடியாது. அழிவைத் தவிர்க்க நீ எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும். ஆனால் உன்னால் முடியாது. அழிவைத் தவிர்க்க முடியாது. அவர்கள் வேறு நிலைக்கு முன்னேறும்பொழுது, அவர்களாகவே உணர ஆரம்பித்து விடுவார்கள். அமைதி பிறக்கும். ஆனால் இங்கு இல்லை. வேறு பரிமாணத்தில் அமைதி தவழும்.”

“முடிவில் அமைதி ஏற்படுமல்லவா?”

“ஆமாம். ஆனால் வேறு நிலைகளில் ஏற்படும்.”

“அதிக காலம் பிடிக்கும்போல் தோன்றுகிறதே.”

“மக்கள் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்துபவர்களாக இருக்கிறார்கள். பொறாமை, பதவிவெறி, எதிர்பார்ப்புகள் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்பையும், பகிர்தலையும், ஒழுக்கங்களையும் மறந்துவிட்டார்கள். கற்றுணர்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.”

“ஆமாம். நான் அப்படிப்பட்டவர்களுக்கு உதவிசெய்வதற்காக எழுதலாமா? வேறு ஏதாவது வழிகள் உள்ளதா?”

“உனக்கே தெரியும். நாங்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவை வீணான காரியம். வேறு நிலைகளுக்குச் சென்று அழிவைக் காண்பதென்பது மாற்ற முடியாத ஒன்று. அனைத்து மக்களுக்கும் இயற்கையில் வேறுபாடில்லை. ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவர் இல்லை. இவைகள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்.”

“ஆமாம்.” ஒத்துக்கொண்டேன். ஆழ்ந்த கருத்துக்களை மனதில் மனதில் உள்வாங்கிக் கொள்வதற்கு எனக்கு இன்னும் அவகாசம் தேவை. கேத்தரின் மௌனமானாள். கடந்த ஒரு மணிநேரத்தில் நிகழ்ந்த உரையாடல்களை உள்வாங்கி அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

 

 

--தொடரும்.

 

சுயபுராணம்:

சில சமயங்களில் பெரியவர்களிடம் நலமா என்று கேட்கும்பொழுது “நலம்தான், என்ன . .  . , எங்கே சென்றாலும் உடம்பும் கூடவே வருகிறது.” என்பார்கள். சிறுவயதில் அதற்கான அர்த்தம் தெரியவில்லை. கடந்த வாரம், விடுமுறைக்கு குடும்பத்துடன் நான்கு நாட்கள், பனிச்சறுக்கு விளையாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த பிறகு, பெரியவர்கள் கூறிய பதிலின் முழு அர்த்தமும் புரிந்துகொண்டேன்.

உடல் என்று ஒன்று இருப்பதை அறியாமல் வாழ்வதுதான், உடல் நலமாக இருப்பதற்கான அறிகுறி. விடுமுறைக்கு சென்று விளையாடிவிட்டு வந்தபிறகு, இரண்டு, மூன்று நாட்கள் எங்கு சென்றாலும், உடல் கூடவே இருப்பதாக வலியுடன் நினைவுறுத்திக்கொண்டே இருந்தது.

சென்றவாரம் நான்கு நாட்கள் “மௌண்ட் செல்வின்” என்ற இடத்துக்கு பனிச்சறுக்கு விளையாட்டுக்காக சென்றோம். போகவர 1000 கிலோமீட்டர் பயணம். மொத்தத்தில் 1200 கிலோமீட்டர் பயணித்தோம். மனிதர்கள் அதிகம் வசிக்காத பகுதியில் பயணம் செய்தபொழுது கங்காரு, வொம்பாட் (கோலா கரடியைப் போல ஒருவகை கரடி), வல்லபி (சிறிய வகை கங்காரு), நரி போன்ற விலங்குகளை வழியில் பார்த்தோம். ஒரு வொம்பாட் குட்டி ஒன்று 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த எங்களை நிறுத்த வைத்துவிட்டு, சாவகாசமாக சாலையை குறுக்காக கடந்து சென்றது. வொம்பாட்டால் ஓடமுடியாது. நடந்துதான் செல்லும். குழந்தைகள்போல தளிர் நடையில்தான் அதனால் செல்லமுடியும். ஆடி அசைந்து வொம்பாட் சாலையை கடக்கும் வரை காத்திருந்தோம். நல்லவேளையாக வொம்பாட்டை தூரத்திலேயே பார்த்துவிட்டதால் விபத்தைத் தவிர்க்க முடிந்தது.

குழந்தைகளால் நன்றாக பனிச்சறுக்கு விளையாடமுடிந்தது. நானும், என் மனைவியும் பயிற்சியிலேயே களைப்படைந்துவிட்டோம். அவ்வளவு பனியிலும், குளிரிலும் பயிற்சியின் பொழுது உடல் முழுவதும் நன்கு வியர்த்துவிட்டதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். அடுத்தமுறை ஒருவாரம் தங்கியிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறோம். காலமும், நேரமும், உடலும் ஒத்துழைத்தால் வரும் வருடமாவது பனிச்சறுக்கு விளையாட இன்னும் முயற்சிக்கலாமென்று இருக்கிறேன்.

குழந்தைகள் ஆர்த்தி, சிபி பனிச்சறுக்கு விளையாடுவதை இந்த வீடியோவில் காணலாம். எங்களது செல்லப்பிராணிகளையும் அடுத்த வீடியோக்களில் காணலாம்.

ஓரிரு நிமிட வீடியோக்கள்தான்.

 
 

 

 

தர்க்க வகை புதிர்:

புதிய பிரதேசத்துக்கு தெரியாமல் சென்றுவிட்ட ஒருவர் நரமாமிசம் உண்ணும் கூட்டத்தினரால் பிடிக்கப்பட்டார். கூட்டத்தினர் அவரை அந்த குழுவின் தலைவனிடம் அழைத்து சென்றனர். பிடிபட்டவர் தலைவனிடம் உயிருக்கு இறைஞ்சினார். தலைவன் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்தான். “நீ உன்னுடைய கடைசி வார்த்தைகளைப் பேசலாம். நீ சொல்வது உண்மையாக இருந்தால் உன்னை நாங்கள் சுட்டுத் தின்போம். ஆனால் நீ சொல்வது பொய்யாக இருந்தால் உன்னை நாங்கள் வறுத்துத் தின்போம். நாங்கள் பேச்சு மாறமாட்டோம்” என்றான். அந்த வழிப்போக்கன் யோசித்து ஏதோ கூறினான். அவன் கூறியதைக் கேட்ட தலைவன் வேறு வழியில்லாமல் அவரை விடுதலை செய்துவிட்டான். தலை தப்பும் விதத்தில், அந்த மனிதன் கூறிய சொற்றொடர் என்ன?

/

/

/

/

/

/

/

/

/

/

/

/

/

/

/

சொற்றொடர்:

“என்னை வறுத்து தின்றுவிடுவீர்கள்”