பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, January 30, 2014

சிறுகதை-1


கலிமொழி : ஒருவர் பொறை, ஒருவர் இளிச்சவாயர்.

“சிரவணன் கல்யாணத்துக்கு நீ ஏன் வரலை?” பாலு நேரடியாகக் கேட்டுவிட்டான்.

“ஆஃபிஸ்ல வேலை ஜாஸ்தியாயிருந்த்து.”

“நீங்க ரெண்டுபேரும் ரொம்ப க்ளோஸ்ன்னு கேள்விப்பட்டேன்”

“ஆமாம். அவன் என் பெஸ்ட் ஃப்ரண்ட்தான்.”

“அப்ப கல்யாணத்தைவிட ஆஃபிஸ் உனக்கு முக்கியமாயிட்டா?”

உண்மையைச் சொல்வதா என்று தெரியவில்லை. “இப்பதான் புது வேலைல சேர்ந்திருக்கேன். லீவு போட்டு கெட்டபேர் எடுக்க விருப்பமில்லை.” ஏதோ மழுப்பினேன்.

உண்மையில் நான் சிரவணன் கூட உள்ள நட்பு கெட்டு போகாமல், நல்லா பாதுகாக்கணும் அப்படின்னு நல்ல எண்ணத்துலதான் நான் கல்யாணத்துக்குப் போகலை. அனாவசியமா அவன் கூட தொடர்பு வச்சிக்கிட்டு நல்ல கனவு போல இருக்கிற நட்பை ஏன் கெடுக்கணும். ஃப்ரெண்ட் நல்லா இருக்கிறதைவிட,  ஃப்ரெண்ட்ஷிப், ரொம்ப முக்கியம் இல்லையா? நீங்களே சொல்லுங்களேன்

நானும் சிரவணனும் ஹைஸ்கூல், காலேஜ் எல்லாம் சேர்ந்துதான் படித்தோம். விளையாட்டு, இன்ட்ரஸ்ட் எல்லாம் கிட்டத்தட்ட எங்களுக்கு மேட்ச் ஆகும். படிப்புல மட்டும் அப்பப்ப அவனுக்கு என் உதவி தேவைப்படும். எனக்கு பசிச்சா, அவன் சாப்பிட்டால் எனக்கு பசி தீர்ந்துவிடும். அந்த அளவுக்கு எங்கள் நட்பு.

கேம்பஸ்ல இரண்டுபேரும் வேறவேற கம்பெனில, ஆனால் ஒரே ஊரில் வேலைக்கு சேர்ந்தோம். அவனுக்கு வேலை கிடைச்ச கம்பெனி எங்க கம்பெனியைவிட கொஞ்சம் நல்ல கம்பெனி. கொஞ்சம் என்ன, அதிகமாகவே நல்ல கம்பெனி. அவனோட அண்ணன் வேலைல இருந்ததால, எப்படியோ உள்ள நுழைஞ்சுட்டான். கொஞ்சம் கடுமையா வேலை செஞ்சு இப்ப ஒரு பேர் சொல்ற அளவுக்கு, அந்த கம்பெனில்ல இருக்கான்.

 - மூன்று மாதங்களுக்கு முன்பு

இன்னும் ஒரு மாதம்தான். இந்த ப்ராஜக்ட் முடிந்த்தும், முழு டீமையும் கழட்டிவிடப்போறதா இன்ஃபார்மலா நியூஸ் கிடைச்சிருக்கு. I.T பூம் வந்தாலும் வந்தது, வச்சா குடுமி, சிரைச்சா மொட்டையாயிட்டு. சிரவணன் வேலை பார்க்கிற கம்பெனியில் ஏதோ புது ப்ராஜக்ட் வரப்போறதா சொல்லிருக்கான். ரொம்ப பேர் தேவைப்படும், ரெக்ரூட்மண்ட்-க்கு அவன் தான் இன்சார்ஜ்- அப்படின்னு சொல்லிக்கிட்டுருந்தான். பரவாயில்லை. அவன் அங்க இல்லாவிட்டாலும், எனக்கு இருக்கிற அனுபவத்துக்கு, அங்க வேலை கிடைக்கிறது ஒன்னும் பிரச்சனை இருக்காது. பார்க்கலாம். கிடைக்கிறவரைக்கும் ஒண்ணும் நிச்சயமில்லை. ஆமாம். கிடைச்சாலும், இந்த காலத்துல ரொம்ப நிச்சயம்தான். அந்த கம்பெனி கொஞ்சம் பெரிய கம்பெனியா இருக்கிறதால, ஓரளவுக்கு நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். எல்லாரும் வாங்குறாங்கன்னு, வாங்கி இப்ப வீட்டு கடன் வேற தலைக்கு மேல. பார்க்கலாம்.


“சிரவணா, நான் உங்க கம்பெனிக்கு வேலைக்கு அப்ளைபண்ணிருந்தேன். இன்டெர்வியூ வரும், வரும்னு பார்த்தேன். ஆள் எடுத்து முடிச்சுட்டாங்கன்னு சொல்றியே. என்னாச்சு? எனக்குத்தான் நீங்க கேட்ட எக்ஸ்பீரியன்ஸ் கரெக்ட்டா மேட்ச் ஆச்சே? இதில நீ வேற இன்சார்ஜ்ன்னு சொன்ன?”

“இல்லடா, நம்ப ரெண்டுபேரும், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரே கம்பெனில்ல, வேலை பார்த்தா, நம்ப ஃப்ரெண்ட்ஷிப்ப பாதிச்சிருமோன்னு நாந்தான் நீ வேண்டாம்னு டிசைட் பண்ணிட்டேன்.”

“பரவாயில்லை. நீ சொல்றதும் சரிதான். இப்ப வேலையில்லாமதான் இருக்கேன். பார்ப்போம். விடியாமலா போகப்போகுது. ஆமாம், உங்க அண்ணனும் உன் ப்ராஜக்ட்லதான வேலை செய்யுறான்?”

“ஆமாண்டா. அவன் இருக்குறது, எனக்கு எவ்வளவு ஹெல்ப்பா இருக்கு தெரியமா? நிறைய தடவை என்ன அவன் கவர் பண்ணிருக்கான்.”

“உனக்கு யோகம்தான் ” .
துணுக்கு :
 


பெரியவரிடம் பெண் தன் காதலனை அறிமுகப்படுத்தினாள்.

பெரியவர் " நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"

"ஆன்மீகம் பற்றிப படித்துக்கொண்டிருக்கிறேன்."

"வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள்?"

"ஒன்றும் பிரச்சனையில்லை. ஆண்டவன் பார்த்துக்கொள்வான்."

“கல்யாணத்துக்குக் பிறகு குழந்தைகள், குழந்தைகள் படிப்பு என்று அதிக செலவாகுமே, என்ன செய்வீர்கள்?”
“ஒன்றும் பிரச்சனையில்லை. ஆண்டவன் பார்த்துக்கொள்வான்.
பெரியவர் வீட்டுக்குச் சென்றார். அவர் மனைவி “வருங்கால மருமகனைப் பார்த்தீர்களே, உங்களுடைய அபிப்ராயம் என்ன?” என்றார்.

பெரியவர் “ ரொம்ப நல்ல பையன். இப்பொழுதே என்னை ஆண்டவனாக நினைக்க ஆரம்பித்துவிட்டான்.” என்றார். 

ஒரு சாமியாரிடம் ஒருவன் நகையைத் திருடிவிட்டான். திருடியவன் அந்த சாமியாரிடம் வந்தான்.
“ஐயா, ஒருத்தரோட நகையை நான் திருடிவிட்டேன். உறுத்தலாக இருக்கிறது. என்ன செய்வது” என்றான்.

“உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு.” பதில் வந்தது.

“நீங்க எடுத்துக்குங்க.”

“எனக்கு வேண்டாம்.”

“உரியவர்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது?”

“நீயே வைத்துக்கொள்.”

“சரிங்க.”

 

Thursday, January 23, 2014

கண்டுபிடிப்புகள் – 6 : மின்சாரம்


“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

 மின்சாரம் (தொடர்ச்சி-2) :

 எடிசன் மற்றும் டெஸ்லா-வுக்குப் பிறகு மின்சாரம் தயாரிக்க புதுப்புது வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.  அனைத்து வழிகளும் நீராவியை ஏற்படுத்தி அதன் உதவியுடன் மின்சாரம் தயாரிப்பதாகவே அமைந்தன. இதற்கு முதலில் நீராவியின் சக்தியில் காற்றாடியுள்ள இயந்திரத்தை சுழலச் செய்வர். இந்த இயந்திரம் டர்பைன் (Turbine) எனப்படுகிறது. இந்த டர்பைன்-உடன் கம்பிகளை இணைத்து, டர்பைன் சுழலும் பொழுது, அந்த கம்பிகளும் ஒரு காந்த மண்டலத்தில் சுழலுமாறு செய்யப்படும். அந்த காந்த மண்டலம் சுழலும் கம்பிகளில் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறையில் கம்பிகளில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது.


மின்சாரத்துக்குத் தேவையான நீராவியைத் தயாரிப்பதில் நிலக்கரி முக்கிய பங்கு வகிக்கிறது. நிலக்கரியைத் தவிர வேறு பொருட்கள் மற்றும் முறைகளையும் உபயோகப்படுத்தி நீராவியை உண்டாக்க விஞ் ஞானிகள் வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். 1951-ல் அணுக்கதிர்களிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தி, நீராவியை உண்டுபண்ணி மின்சாரம் தயாரிப்பதில் அமெரிக்கா சோதனை முறையில் வெற்றி பெற்றது. 1954-ல் ரஷ்யா தொழில்முறையில், அணுசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி சாதனை படைத்தது. 2005- இறுதியில் 447 அணு உலைகள் உலகம் முழுவதற்குமான, மின்சாரத்தேவையில் 17 சதவிகிதம் பூர்த்தி செய்த்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

அணுசக்தி, நிலக்கரியைத் தவிர இயற்கை வாயுவினை உபயோகித்து நீராவி தயாரிக்கப்பட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கையில் காணப்படும் வெப்ப நீரூற்றுகளின் உதவியுடனும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 1904-ல் இத்தாலியில் பூமியிலிருந்து பெறப்படும் வெப்பத்தின் உதவியினால் இயங்கும் மின் நிலையம் தொடங்கப்பட்டது. வேளாண்மைக் கழிவுப்பொருட்கள் மற்றும் கார்ப்பொரேஷன் கழிவுப்பொருட்கள் இவற்றிலிருந்து கிடைக்கும் மீத்தேன் என்ற எளிதில் எரியக்கூடிய வாயுவின் உதவியினாலும் நீராவிபெறப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் கழிவுகளை எரிப்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான மின்சாரத்தில் 17 சதவிகிதம் மின்சாரம் பெறப்படுகிறது.

இவைகளைத்தவிர சூரிய வெப்பத்தைக் கொண்டும் நீராவி தயாரிக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1892-ல் இத்தகைய மின் நிலையம் ஒன்று அமெரிக்காவில் “போஸ்டோனியன் ஆபரி இனியாஸ்” என்ற நிறுவனத்தாரால் நிறுவப்பட்டது.
 

சில சமயங்களில் மின்சாரம் தயாரிக்க சுழலும் டர்பைன் சுழற்சிக்கு, நீராவியின் உதவியில்லாமலும் விஞ்ஞானிகள் மின்சாரத்தை தயாரித்தனர். அருவிகளில் இருந்து பாயும் நீரின் உதவியினால் டர்பைன்-ஐ சுழலச் செய்து மின்சாரத்தை தயாரித்தனர். கடலில் ஏற்படும் அலைகளின் சக்தியைக் கொண்டும் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறையில் மின்சாரம் தயாரிப்பது இன்னும் அதிக அளவுக்கு முன்னேறவில்லை.
 

1882-ல் காற்றினால் காற்றாடியை சுழலச் செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1950-ல் விண்வெளி பயணங்களுக்காக, சூரியனிலிருந்து நேரடியாக மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்கலத்தை அமெரிக்காவில் பெல் ஆராய்ச்சிசாலையில் கண்டுபிடித்தனர். இந்த மின்கலம் சூரிய ஒளியின் உதவியால், எலெக்ரான்களின் ஓட்டத்தை உண்டாக்கும் கருவியைக் கொண்டது. இத்தகைய முறையின் மூலம் 1980-ல் அமெரிக்காவில் ஊட்டா என்ற இடத்தில் சூரிய மின்நிலையம் ஒன்று துவக்கப்பட்டது. சூரிய மின்நிலத்தின் முக்கியமான பிரச்சனை அதனுடைய ஆரம்பகட்ட செலவுகளாகும். சூரிய மின்நிலையம் ஆரம்பிப்பதற்கு காற்று மின்நிலையத்தைவிட கிட்டத்தட்ட ஏழு மடங்கு செலவுகள் அதிகமாகும். இருப்பினும் ஆரம்பித்தப்பிறகு அதனுடைய நடைமுறைச் செலவுகள் மிகவும் குறைவானதாக இருக்கும்.
 

2025-ல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15,00,000 கோடி கிலோ வாட் மின்சாரம் ஒருமணி நேரத்துக்குத் தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது, இது 15,00,000 கோடி 100 வாட் மின்விளக்குகள் தொடர்ந்து எரிவதற்கு ஒப்பான மின்சாரமாகும். ஒரு விளக்கு பத்து சதுரமீட்டருக்கு வெளிச்சம் தருவதாக வைத்துக்கொண்டால், அது 15,000 சதுர கிலோமீட்டர் இடத்தை நிரப்பும் என்றால் எவ்வளவு மின்சாரம் தேவையென்பதை யோசித்துப்பாருங்கள்.

 மின்சாரம் தயாரிப்பதில் அடுத்த மைல்கல்லை, அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர்.கே.ஆர். ஸ்ரீதர் என்பவர் அடைந்திருக்கிறார். இந்தியாவில் NIT ல் பொறியியல் இளங்கலை பட்டத்துக்குப்பின் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தபிறகு, நாசாவில் விஞ்ஞானியாக பணிபுரிந்த அவர், Bloom Box என்ற கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்திருக்கிறார். இந்த Bloom Box லிருந்து மின்சாரம் தயாரிப்பதனால் பூமி மாசுபடுவதை முழுவதும் தவிர்த்துவிடலாம். மின்சாரம் தயாரிக்கும் செலவும் குறையுமாம். அமெரிக்காவில் தொழிற்சாலையை ஆரம்பித்திருக்கிறார். இந்தியர்களுக்கும் இது பெருமைதானே.

 
அவருடைய பேட்டி.
 
http://www.youtube.com/watch?v=AblThlNKuwA

 

இதனை முயற்சிக்காதீர்கள் :

 
http://www.telegraph.co.uk/news/good-to-share/10589497/Would-you-put-your-head-inside-a-bears-mouth.html

Thursday, January 16, 2014

கண்டுபிடிப்புகள் – 5 : மின்சாரம்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.


மின்சாரம் (தொடர்ச்சி-1) :

டைனமோ கண்டுபிடிக்கப்பட்டவுடன் மின்சாரம் எனப்படும் அற்புதமான திரவத்தின் பயன்பாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான போட்டிகள் அதிகமானது. ஆமாம். மின்சாரம் நீர் போன்ற ஒரு திரவத்துக்கு ஒப்பானது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், மின்சாரம் ஒளியின் வேகத்துக்கு செல்லக்கூடியது. அதிக அழுத்தத்தைக் கொடுத்தால் அதன் வேகம் அதிகரிக்கும் என்று அர்த்தம் கிடையாது. அதனுடைய செல்லும் தூரமே அதிகரிக்கும். சில பொருட்களின் வழியே மின்சாரத்தை செலுத்த முடியும். அத்தகைய பொருட்கள் மின்கடத்திகள் என்றழைக்கப்படும். சில பொருட்களின் வழியே மின்சாரத்தை செலுத்த முடியாது. அப்பொருட்கள் மின் கடத்தாப் பொருட்கள் எனப்படும். சில பொருட்களின் வழியே குறிப்பிடப்பட்ட கட்டுப்பாட்டுகளுடன் மட்டுமே மின்சாரத்தைக் கடத்த முடியும். அத்தகைய பொருட்கள் குறைக்கடத்திகள் என்றழைக்கப்படுகிறது. மெல்லிய கம்பிகளின் வழியே மின்சாரம் பாயும்பொழுது தடைகள் அதிகம். குறுக்குப் பரப்பளவு அதிகமான கம்பிகளில் மின்சார தடையின்றி பாய்கிறது.

மின்சாரம் என்பது எதிர் மின்னூட்டம் கொண்ட மின் அணுக்களின் ஓட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த எதிர் மின்னூட்டம் கொண்ட மின் அணுக்கள் எலக்ட்ரான்கள் என்றழைக்கப்படுகிறது. பொருத்தமான உபகரணங்களுடன், மின்சாரத்தை தன்னுடைய கட்டளைப்படி இயக்குவதன் மூலம், மனிதன் பல்வேறுபட்ட மின்கருவிகளை உருவாக்கியுள்ளான். மின்சாரத்தின் பண்புகளை உணர்ந்துகொண்ட, மனிதனுடைய கற்பனைத்திறனைக் கொண்டே அனைத்து மின்கருவிகளும் இயங்குகின்றன.

மின்சாரம் பாய்வதற்கு, சில பொருட்களும், சில நிலைகளும் எதிர்ப்பை அளிக்கின்றன. உதாரணமாக மிகவும் மெல்லிய கம்பியின் ஊடே மின்சாரம் பாயும்பொழுது, அதிக டிராஃபிக்கில் கார்கள் செல்ல முயல்வதுபோல, எலக்ட்ரான்கள் தடைகளைச் சந்திக்கின்றன. இதனால் அந்த மின் கம்பிகள் சூடாகின்றன. அதிக வெப்பத்தில் அந்த கம்பிகள் மின்னுகின்றன. இந்தப்பண்பிலிருந்து ஒளிரும் மின்குமிழ் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1881-ல் பிரிட்டனைச் சேர்ந்த ஜோசஃப் ஸ்வான் காற்று நீக்கப்பட்ட மின் குமிழில், கார்பன் இழைகள் கொண்ட மின் விளக்குகளை உருவாக்கி, விற்பனைக்கு கொண்டு வந்தார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசனும் அதே வடிவமைப்பில் மின் விளக்குகளை உருவாக்கியதாகத் தெரிகிறது. பிறகு ஜோசஃப் ஸ்வான் மற்றும் எடிசன் இருவரும் இணைந்து கார்பன் இழைகளைக் கொண்ட மின்விளக்குகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

ஜோசஃப் ஸ்வான்-ஐவிட எடிசன் மின்சார விளக்கினைக் கண்டுபிடித்ததாக மிகவும் பிரபலப்படுத்தப்பட்டுள்ளார். இதற்கு எடிசனுடைய விளம்பரப்படுத்தும் குணம், ஒரு முக்கிய காரணம். எடிசன் நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு மின் விளக்கின் இழைகளை சோதனை செய்துள்ளார். அப்படி சோதனை செய்ததையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 1879-ல் புத்தாண்டு கொண்டாட்டமாக, அவருடைய அலுவலகம் இருந்த வீதியில் கிட்டத்தட்ட அரை மைல் தூரத்துக்கு மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளார். அதுவரை மின் விளக்குகளையே கண்டிராத மக்களுக்கு அது எத்தகைய பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று உணரமுடிகிறது.

எடிசனுடைய அலுவலகத்தில், நிக்கோலா டெஸ்லா என்ற விஞ்ஞானி பணிபுரிந்தார். டெஸ்லா, எடிசனுக்கு இணையான விஞ்ஞானி. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் டெஸ்லா எடிசனின் அலுவலகத்திலிருந்து விலகிவிட்டார். 1914-ல் எடிசன் மற்றும் டெஸ்லா இருவருக்கும் இணைந்த நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் எடிசனுக்கு நோபல் பரிசை டெஸ்லா-வுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாமல் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மேக்ஸ் வோன் லாவ் என்ற விஞ்ஞானிக்கு எக்ஸ்-ரே சம்பந்தமான் ஆராய்ச்சிக்கு அந்த நோபல் பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இன்றுவரை எடிசன் ஒரு நல்ல விஞ்ஞானியா அல்லது அடுத்தவர்களுடைய உழைப்பை உறிஞ்சி சம்பாதித்த தொழிலதிபரா என்று இதுவரை யாரும் சரியாகக் கூறமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் எடிசன் பெயரில் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், ஒருசாரார் அது அடுத்தவர்களின் தயாரிப்பைத் திருடி, கொஞ்சம் திருத்தி தன் பெயரில் பேட்டண்ட் செய்து கொண்டதாக கூறுகின்றனர்.


- தொடரும் இப்படியெல்லாம் கூட ஆராய்ச்சிகள் :

Thursday, January 9, 2014

கண்டுபிடிப்புகள் – 4 : மின்சாரம்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

 மின்சாரம் :


மின்சாரத்தைப்பற்றி மனிதனுக்கு ஆதிகாலத்திலேயே தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. சிலவகையான மீன்கள் தொட்டால் மின்அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனையைச் சேர்ந்த “வோடோ வோன் க்யூரிக்” (1602-1686) என்ற விஞ்ஞானி 1663-ல் நிலைமின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். 1663-ல் பிரிட்டனைச் சேர்ந்த :ஃப்ரான்ஸிஸ் ஹக்ஸ்பீ அந்த இயந்திரத்தில் பாதரசம் உள்ள குழாயை இணைத்தார். அப்பொழுது பாதரசம் ஒளியுடன் மின்னியது. அதன்மூலம் மின்சாரத்திலிருந்து ஒளியைப் பெறமுடியும் என்று விஞ்ஞானிகள் உணர்ந்தனர். 1733-ல், ஃப்ரான்சைச் சேர்ந்த சார்லஸ் டுஃப்பே, மின்சாரத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை மின்னோட்டங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.

 

1745-ல் டென்மார்க்கைச் சேர்ந்த “போமெரனியா எவால்ட் கெய்ஸ்ட்” “லேடன் ஜார்”-ஐக் கண்டுபிடித்தார். இது மின்சாரத்தை சேமித்துவைக்கும் ஒரு உபகரணம். இது மின்தேக்கி என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்த இரு முக்கியமான பிரச்சனை, இது அனைத்து மின்சாரத்தையும் ஒரே நேரத்தில் வெளியேற்றிவிடும். நினைத்த நேரத்தில் நினைத்த அளவுக்கு இதிலிருந்து மின்சாரத்தைப் பெற முடியாது.

 

1750-ல் அமெரிக்காவைச் சேர்ந்த பெஞ்சமின் ஃப்ராங்களின், இடி மின்னலின் பொழுது, மின்சாரம் பற்றிய ஆராய்ச்சியை செய்தார். பட்டத்தின், இறுதி முனையில் ஒரு உலோகத்தாலான சாவியை இணைத்து பிடித்திருந்தார். அப்பொழுது ஏற்பட்ட இடியினால் அவர் மின்சாரத்தினால் தாக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக மின்கடத்தாத ஷூக்களை அணிந்திருந்ததனால் உயிர் தப்பினார். 1753-ல் ஜியார்ஜ் வில்ஹம் ரிச்மேன், என்ற ரஷ்ய விஞ்ஞானி, இதனைப் போன்ற சோதனையில் ஈடுபட்டபோது, மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

 

1807-ல் பிரிட்டனைச் சேர்ந்த ஹம்ப்ரி டேவி என்ற விஞ்ஞானி, உருகிய உலோகக்கலவையில் மின்சாரத்தை செலுத்தினார். அப்படி செலுத்தும்பொழுது தூய உலோகங்களை தனியாக பிரித்தெடுக்க முடிந்ததை அறிந்தார். இந்த நிகழ்வுக்கு மின்னாற்பகுப்பு என்று பெயர். இதிலிருந்து மின்னியலுக்கும் வேதியியலுக்கும் தொடர்பு இருந்ததை அவர் உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். இன்றுவரை அலுமினியம் போன்ற உலோகங்கள் இந்த முறையில்தான் பிரித்தெடுக்கப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளியின் மகன், மைக்கேல் ஃபாரடே என்ற சிறுவன் 13 வயதில் புத்தகம் பைண்ட் செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்தான். வேலை செய்யும்பொழுது அங்குள்ள அனைத்து புத்தகங்களையும் படித்து, தனது அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டான். முறையான கல்வியும், பட்டங்களும் இல்லாத காரணத்தால் அவனுக்கு அறிவியல் துறையில் வேலை கிடைக்கவில்லை. 1812-ல் ஒரு வாடிக்கையாளர், விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியினுடைய கருத்தரங்குக்கான அனுமதி அட்டையை அவனுக்கு பரிசளித்தார். ஃபாரடே தன்னுடைய அறிவியல் கட்டுரைகளை டேவியிடம் சமர்ப்பித்தார். கட்டுரைகளைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த டேவி, ஃபாரடேயை தன்னுடைய உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.

 

1820-ல் ஃப்ரெஞ்ச் விஞ்ஞானி “ஆன்ரே மேரி ஆம்பியர்” என்பவர் காந்த சக்திக்கும், மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார். அவருக்கு மதிப்பளிக்கும் வகையில், மின்சாரத்தின் அளவீடு ஆம்பியர் என்று அழைக்கப்படுகிறது. ஆம்பியரின் கட்டுரையைப் படித்தறிந்த ஃபாரடே, மின்சாரம் பாயும் கம்பிக்கு அருகே உள்ள காந்தமுள் தானாகவே அசைவதைக்கண்டார். அதனைக் கருத்தில்கொண்டு அவர் மின்சார மோட்டாரை முதன்முதலாக வடிவமைத்தார். மின்கம்பிக்கு அருகில் உள்ள காந்தமுள்  அசைவதைப்போல, காந்த முள்ளின் அசைவினைக்கொண்டு மின்சாரத்தையும் உருவாக்க முடியும் என்று ஃபாரடே உணர்ந்தார். இதிலிருந்து டைனமோ பிறந்தது. நீராவி இஞ்சின், நீர்வீழ்ச்சி முதலியவற்றின் உதவியைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறை உருவானது.

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசஃப் ஹென்றி (1797-1878) , மைக்கேல் ஃபாரடே மின்சார மோட்டாரை வடிவமைத்த அதே காலகட்டத்தில் அதனைப்போன்ற மின்சார மோட்டாரை வடிவமைத்திருக்கிறார். இன்று மைக்கேல் ஃபாரடே, ஜோசஃப் ஹென்றி இருவரும் மின்சார மோட்டாரை வடிவமைத்ததாகக் கருதப்படுகின்றனர். மின்சாரத்துக்கும், காந்தத்துக்கும் தொடர்பு உள்ளதுபோன்று, மின்சாரத்துக்கும், ஒளிக்கும் தொடர்பு இருக்குமென்று ஃபாரடே அனுமானித்தார். முறையான கல்வி இல்லாததால் அவரால் அதனை நிரூபிக்க முடியவில்லை. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் 1862-ஆம் ஆண்டு ஒளியும் மின்காந்த சக்திகளைச் சார்ந்தது என்று கணிதவியல் மூலமாக நிரூபித்தார். இன்றுவரை ஆன்மீகத்தில் நம்பிக்கையுடைய விஞ்ஞானிகள் மின்சாரம், காந்தம், ஒளி, ஆற்றல், ஈர்ப்புவிசை என்று அனைத்து சக்திகளும் கடவுளால் கட்டமைக்கப்பட்டு ஒன்றற்கொன்று தொடர்புடையன என்று கருதுகின்றனர்.


- தொடரும்

  

வித்தியாசமான, அதிசயத்தக்க தகவல்களைக்கொண்ட ஒரு தளம் :


 

Thursday, January 2, 2014

கண்டுபிடிப்புகள் – 3 : காலண்டர்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.


காலண்டர் (புத்தாண்டு கொண்டாட்டம்) :

ஜனவரி முதல்தேதி புத்தாண்டின் துவக்கம் என்று கொண்டாடப்படுவது என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் துவங்கியது. கி.மு.2000-ம் வாக்கில் மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) புத்தாண்டு கொண்டாட்டங்கள் தட்சணாயனம் ஆரம்பிப்பதை கருத்தில்கொண்டு, அதனை அவர்கள் புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில்தான் அவர்களது புத்தாண்டு துவங்கியுள்ளது. எகிப்து மற்றும் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் குளிர்காலத்தில் ஆரம்பத்தை புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடியிருக்கிறார்கள்.

ரோமன் காலண்டர்படி மார்ச் முதல்தேதி புத்தாண்டின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. மார்ச் மாத துவக்கத்திலிருந்து மொத்தமாக பத்து மாதங்களே அவர்களின் காலண்டரில் இருந்திருக்கிறது. தற்போதைய மாதங்களில்கூட அதே கணக்கில் சில மாதங்களின் பெயர்கள் உள்ளன. இலத்தீன் மொழியில் செப்டம், அக்டோ, நவம், டிசம் என்ற வார்த்தைகள் முறையே 7, 8, 9, 10 என்ற எண்களைக் குறிக்கின்றன. ஆனால் இன்று செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் 9, 10, 11, 12 ஆவது மாதங்களைக் குறிக்கின்றன.

கி.மு 153-ல்தான் முதல்முறையாக ஜனவரி – 1, புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடப்பட்டுள்ளது. கி.மு. 700-ல் ரோம் அரசர் “நுமா போண்டிலியஸ்” ஜனவரி, பிப்ரவரி மாதங்களை காலண்டரில் இணைத்துள்ளார். ரோமப்பேரரசின் மிகவும் உயர்ந்த இரண்டு பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் பதவி பிரமாணம் எடுக்கும் நாளை ஆண்டின் முதல் நாளாக “நுமா போண்டிலியஸ்” அறிவித்தார். பொதுவாக அந்த அதிகாரிகள் ஒரு வருடம் அந்த பதவியில் நீடிப்பர். அப்படி அறிவித்தபோதும் மக்கள் மார்ச் மாதத்திலேயே புத்தாண்டை கொண்டாடுவது வழக்கமாக தொடர்ந்தது.

ஜூலியன் காலண்டர் :

கி.மு 46-ல் ரோமப்பேரரசர் ஜூலியஸ் ஸீசர் சந்திரனைச் சார்ந்த காலண்டரை மாற்றி சூரியனைச் சார்ந்த காலண்டராக திருத்தினார். ஜனவரி 1-ஆம் தேதியை அதிகாரபூர்வமான புத்தாண்டின் துவக்கமாக அறிவித்தார். இருந்தபோதிலும் சில ஐரோப்பிய நாடுகள் ஜனவரி 1-ஆம் தேதியை பேகன் மதத்தைச் சார்ந்ததாகக் கருதினர். அதனால் அவர்கள் ஜனவரி 1-ஐ புத்தாண்டின் துவக்கமாக ஒத்துக்கொள்ளவில்லை. டிசம்பர் 25, மார்ச் 1, மார்ச் 25 என்ற தேதிகளில் அந்தந்த  நாடுகள் புத்தாண்டை துவங்கின.

கிரிகேரியன் காலண்டர் :

1582-ல் கிரிகேரியன் காலண்டர் (மேற்கத்திய காலண்டர், கிறிஸ்டியன் காலண்டர்) ஜூலியன் காலண்டரை சற்று மேம்படுத்தி வெளிவந்தது. ஜூலியன் காலண்டரில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடம் வந்தது. கிரிகேரியன் காலண்டர்படி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடம், ஆனால் நூற்றாண்டு வருடங்களில் நானூறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே லீப் வருடம். அதாவது வருடம் 2000 ஒரு லீப் வருடம், வருடம் 2100 நான்கால் மீதியில்லாமல் வகுபட்டால்கூட லீப் வருடம் கிடையாது.

அனேகமாக அனைத்து கத்தோலிக்க நாடுகளும் கிரிகேரியன் காலண்டரை உடனடியாக ஒத்துக்கொண்டன. ஆனால் பிராட்டஸ்டண்ட் நாடுகள் கிரிகேரியன் காலண்டரை ஒத்துக்கொள்வதற்கு அதிக ஆண்டுகள் பிடித்தது. 1752-ல் தான் பிரிட்டனும், அமெரிக்க நாடுகளும் கிரிகேரியன் காலண்டருக்கு மாறியது. அதுவரை அவர்கள் மார்ச் மாதத்தில்தான் புத்தாண்டைத் துவங்கினர். 1751-ல் அவர்கள் காலண்டரை மாற்றியபோது, அந்த வருடத்தில் பன்னிரண்டு நாட்களை இழக்க நேர்ந்தது. அதாவது 1752 செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் தேதிக்கு மறுநாள் 14-ஆம் தேதியாக இருக்கிறது.


இப்படியும் நடக்கலாம், ஒரு காணொளி :

BBC-யில் ஒருவரை தவறுதலாக கணினி வல்லுனர் என்று நினைத்து, பேட்டி எடுத்திருக்கிறார்கள். அவரும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமாளித்திருக்கிறார். முன்பே பார்த்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.