பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, October 31, 2013

கதம்பம்-12


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-3

சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழைய கிரேக்க தத்துவத்தின்படி, இறைவன் இயக்கும் நாடகத்தில், மனிதர்கள் பாத்திரங்களாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஃப்ராய்டின் தத்துவத்தின்படி, நாம் நமது மனதின் தன்மைக்கேற்ப இயங்கிக்கொண்டிருக்கிறோம். இச்சைகளால் உந்தப்பட்டு, ஆனால் மனசாட்சியால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்குகிறோம். வெளியில் அமைதியாகத் தோன்றினாலும், நமது உள்மனதில் எப்பொழுதும் எதைச் செய்யவேண்டுமென்று இச்சைக்கும், மனசாட்சிக்கும் இடையில் வழக்கு நடந்துகொண்டே இருக்கிறது. நமது மனதில் நிகழும் நாடகத்தில் கீழ்க்கண்ட மூன்று முக்கிய பாத்திரங்கள் உள்ளன என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

தனித்தன்மையான அடையாளம் (கீழ்மனம்): கட்டுக்குள் அடங்காத உணர்ச்சிகளின் இருப்பிடம்.

தன்முனைப்புள்ள மனம்: கீழ்மனத்துடன் பேரம் பேசி யதார்த்ததுக்கு ஒத்துவரக்கூடிய முடிவை எடுக்கவேண்டியது இதன் வேலை.

மேல்மனம்: கீழ்மனத்தின் செயலை இடித்துரைத்து கட்டுப்படுத்த விழைவது இதனுடைய கடமை.

மேற்கண்ட மூன்று பாத்திரங்களுக்கும், கதையின் (செயலின்) முடிவு எப்படியிருக்கவேண்டுமென்று தனித்தனியான எண்ணங்கள் உண்டு. ஒவ்வொரு பாத்திரமும் இறுதி முடிவைத் தீர்மானிக்க கடுமையாகப் போட்டியிடுகின்றன.

கீழ்மனம்:

நான் விரும்பியபடி அனைத்தும் எனக்கு வேண்டும் என்பதே வாழ்வின் முக்கிய நோக்கம். இதுவே கீழ்மனதின் கொள்கை.

முதலாவது பாத்திரமாக ஃப்ராய்ட் கூறும் கீழ்மன அடையாளம் நமது பிறப்பிலிருந்தே உள்ளது. உலகிலுள்ள ஒவ்வொருவரிடமும் அந்த நாடக பாத்திரம் உள்ளது. மனிதனின் அனைத்து இச்சைகளும் இந்தக் கீழ்மனதில்தான் குடிகொண்டுள்ளது. அனைத்து இச்சைகளையும் சுமந்து, உங்களது தோள்களிலேயே எப்பொழுதும் அமர்ந்துகொண்டு, குட்டிப் பிசாசுபோல தனது இஷ்டப்படி ஒருவரை இது ஆட்டிவைக்க முயலுகிறது. தனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். அதுதான் உண்மையான கீழ்மனதின் வெளிப்பாடு என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். 

இந்த கீழ்மனம், நமது அனைத்து இச்சைகளையும் சேர்த்து வைத்திருக்கும் கொள்கலன் போன்றது. நாம் பிறக்கும்பொழுது இந்த கீழ்மனதின் முழுஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற கதாபாத்திரங்கள், குழந்தைப் பருவத்தில் இந்த கீழ்மனதை கட்டுப்படுத்துவதில்லை. பசித்திருக்கும் நேரத்தில் உணவு வருமென்று எந்த குழந்தையும் பொறுத்திருப்பதில்லை. தனக்கு வேண்டியது கிடைக்கும்வரை கீழ்மனம் திருப்தி அடைவதில்லை. 

இதற்காக கீழ்மனதை மிகவும் தவறான ஒன்று என்று எண்ணிவிடவேண்டாம். இச்சைகள் இல்லாத வாழ்வை எண்ணிப்பாருங்கள். இச்சைகளே நம்மை வாழ்வின் அடுத்த நிலையை சிந்திக்கத் தூண்டுகிறது. தொடர்ந்து உயிர்வாழத் தேவையான செயல்களை நோக்கிச் செல்ல வைக்கிறது. இச்சைகள் இல்லாத பட்சத்தில் வாழ்வதற்கு எந்த பிடிமானமும் இருக்காது. வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருப்பதில்லை. எனவே, ஒருவரது ஆளுமையின் பெரும்பகுதியாக அவரது இச்சைகளும், அந்த இச்சைகளை திருப்தி படுத்த எடுக்கும் முயற்சிகளுமே இருக்கின்றன என்று ஃப்ராய்ட் கூறுகிறார். 

தன்முனைப்புநிலை மனம்:

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஆனால், பொதுவாக யாருக்கும் அப்படி அமைந்து விடுவதில்லை. விருப்பப்படுவது நிறைவேறாமல் இருந்தால் ஏற்படும் விரக்திக்கு, இந்தத் தன்முனைப்பு நிலை மனதின்மேல் நீங்கள் பழிபோட்டுவிடலாம். ஒருவருடைய ஆளுமையின் இரண்டாவது அடுக்காக இந்தத் தன்முனைப்புநிலை மனதை ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். இந்த பாத்திரத்தின் தலையாய கடமையானது, கீழ்மனதிற்கும், மேல்மனதிற்கும் இடைவெளியைக் குறைத்து, இச்சைக்கும் நடைமுறை வாழ்க்கை உலகிற்கும் ஒப்பிட்டு, ஒரு சமாதானமான முடிவை அணுகுவதாகும்.  

தன்முனைப்புநிலை மனமானது, ஒரு தரகுவேலை செய்பவருக்கு ஒப்பானது. ஒரு பொருளை விற்க முயல்பவர் ஒரு விலையைக் கூறுவார். வாங்க விரும்புபவரோ வேறொரு விலைக்கு எதிர்பார்ப்பார். இருவருக்கும் இடையில் ஒரு சமாதானமான விலையை அடையச் செய்வது தரகரின் வேலை. இச்சையை எதிர்ப்பது, தன்முனைப்புநிலை மனதின் வேலை இல்லை. நடைமுறைக்கு ஒத்துவரும் வகையில் இச்சையைப் பணியச்செய்வதே அதனுடைய வேலை. இச்சையின் சக்திகளை தேவையானபடி உருமாற்றி, வழிநடத்தி, கட்டுப்படுத்தி, யதார்த்த நிலைக்கு ஏற்றவாறு கொணர்ந்து இச்சையை இது திருப்திப் படுத்துகிறது.

--- தொடரும்.
 
சட்டம் ஒரு இருட்டறை:
1980-ல் ஆப்பிள் நிறுவனம் அயர்லாண்டு நாட்டில் “ஆப்பிள் ஆப்பரேஷன்ஸ் இன்டர்னேஷனல்” (AOI) – என்ற ஆப்பிளின் மற்றொரு நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆப்பிளின் அனைத்து நிறுவனங்களின் வரவு செலவும், இந்த நிறுவனத்துக்கு வந்து சேருவதற்காக ஆப்பிள் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தது. ஆப்பிள் அமெரிக்கா, நேர்முகமாகவோ அல்லது வெளிநாட்டு ஆப்பிள் நிறுவனங்கள் மூலமாகவோ AOI – ன் நூறு சதவிகிதம் பங்குகளும் ஆப்பிள் அமெரிக்காவுக்கு சொந்தமானவைகள்.
ஆப்பிள் சிங்கப்பூர் நிறுவனம், ஆப்பிள் ஐரோப்பா நிறுவனம், ஆப்பிள் அமெரிக்க நிறுவனம் ஆகிய அனைத்தின் பங்குகளையும் AOI- தான் வைத்திருக்கிறது.
AOI -க்கு என்று அயர்லாந்தில் 35 வருடங்களாக சம்பளக் கணக்கில் ஒருஊழியர் கூட கிடையாது. இரண்டு டைரக்டர்களும், ஒரு அதிகாரி மட்டுமே அதற்கு உண்டு. அவர்களில் இருவர் கலிஃபோர்னியாவில் வசிக்கின்றனர். இதுவரை நடந்த 33 போர்டு மீட்டிங்களில், 32 போர்டு மீட்டிங்-கள் கலிஃபோர்னியாவில்தான் நடந்திருக்கின்றன. ஒரே ஒரு மீட்டிங் மட்டுமே அயர்லாந்தில் நடந்திருக்கிறது.
AOI - இதுவரை எந்த நாட்டிலும் வரி செலுத்தியதில்லை. 2009 முதல் 2012 வரை அதனுடைய வருமானம் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் அந்த நிறுவனம் எந்த நாட்டிலும் வரிக்கணக்கு செலுத்தியதில்லை.  AOI – வருமானம் ஆப்பிள் வருமானத்தில் 30 சதவிகிதம் (2009 முதல் 2011 வரை) ஆகும். கடந்த ஐந்து வருடங்களாக   AOI  - எந்த நாட்டிலும், நிறுவன வரி காண்பித்ததோ, செலுத்தியதோ கிடையாது.
அமெரிக்க வரிவிதிகளுக்கும், அயர்லாந்து வரிவிதிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்தி ஆப்பிள் பலனடைந்து வந்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வரியானது, நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட இடத்தினைப் பொறுத்தது. ஆனால் அயர்லாந்தில், நிறுவனங்கள் வரியானது நிறுவனங்கள் நடைபெறும் முறையைக்கொண்டு வரிவிதிக்கிறது. ஆப்பிள் அயர்லாந்தில் நிறுவப்பட்டதால் அமெரிக்காவின் வரியிலிருந்து தப்பித்துவிடுகிறது. அமெரிக்காவில் அதனுடைய வேலைகள் நடைபெறுவதால், அது அயர்லாந்து நிறுவன வரியிலிருந்தும் தப்பித்துவிடுகிறது. எனவே நாங்கள் அமெரிக்க சட்டப்படி, அமெரிக்காவில் வரிசெலுத்த வேண்டியதில்லை என்று ஆப்பிள் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆப்பிள் சேல்ஸ் இன்டெர்னேஷனல் (ASI) என்பது ஆப்பிள் நிறுவனத்தின் இன்னுமொரு அயர்லாந்து நிறுவனம்.   ASI –ன் வேலை ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை அவர்களுடைய ஒப்பந்த உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கவேண்டும். அதாவது சீனாவிலிருந்து வாங்கவேண்டும். அப்படி வாங்கிய ஆப்பிளின் தயாரிப்புகளை அது அதிகவிலையில், ஆப்பிளுடைய கிளை நிறுவனங்களான ஆப்பிள் ஐரோப்பா, ஆப்ரிக்கா, இந்தியா, அரபு நாடுகளுக்கு விற்கவேண்டும்.
ASI - அயர்லாந்து நிறுவனமாக இருந்தாலும், அயர்லாந்துக்கு அனைத்து தயாரிப்புகளும் வரத்தேவையில்லை. அயர்லாந்து விற்பனைக்குத் தேவையான அளவு வந்தாலே போதும். 2012 – க்கு முன்பு வரை  ASI -க்கும் அயர்லாந்தில் ஒரு ஊழியர்கூடகிடையாது. ஆனால் 2009 முதல் 2012 வரை அதனுடைய வருமானம் 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.  மேலே கூறப்பட்ட அதே காரணத்தினால், 2009-லிருந்து 2012 வரை அமெரிக்காவுக்கு செலுத்துவேண்டிய வரியிலிருந்து ஆப்பிள் விலகியிருக்கிறது. AOI - போல ASI -ம் எந்த நாட்டிலும் வரிக்கணக்கு காட்ட வேண்டிய அவசியமில்லை.

 
 

 
 

துணுக்கு:  
 
 
இதுவரை ஒத்துக்கொள்ளப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள் சரியாகத்தான் இருக்குமென்ற எண்ணத்துடன் துவங்கப்படும் எந்த ஆராய்ச்சியும், உரையாடலும் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையை அளிப்பதில்லை.
 
- ஆலிவர் ரைட்
 
 
மதங்கள் இருந்தாலும், மதங்கள் இல்லாவிட்டாலும் நல்லவர்கள் நல்லவைகளையே செய்வார்கள்; தீயவர்கள் தீயவைகளையே செய்வார்கள். ஆனால் நல்லவர்கள், தீய செயல்களை செய்வதற்கு மதங்களே  காரணியாகிறது.
 
-ஸ்டீவன் வெயின்பர்க்.


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !

 
 
 
 

Thursday, October 24, 2013

கதம்பம்-11


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-2
 
 
 

சிக்மண்ட் ஃப்ராய்ட் 1856-ல் மே ஆறாம் தேதி ஆஸ்ட்ரியாவின் தலைநகரான வியன்னாவில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு கம்பளி வியாபாரி. தாயார் வீட்டை நிர்வகித்து வந்தார். பள்ளியில் எப்பொழுதும் முதல் இடத்தில் இருந்த , ஃப்ராய்ட், கல்லூரியில் அந்தக் காலத்தில் யூத இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான மருத்துவத்துறையில் சேர்ந்தார். கல்லூரியில் எர்ணஸ்ட் ப்ரூக் என்ற பேராசிரியரின் தலைமையில், உடற்கூறு பிரிவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அந்தப் பேராசிரியர், எந்த உயிரிலும் உடல் சார்ந்த மற்றும் வேதியியல் சார்ந்த சக்திகளைத் தவிர வேறு எந்தவிதமான சக்திகளும் இருப்பதில்லை என்ற கொள்கையினைக் கொண்டிருந்தார். அவரைப் பின்பற்றிய ஃப்ராய்ட், ஒருவருடைய தனித்தன்மையை அவருடைய நரம்பியலுடன் மட்டுமே சம்பந்தப்படுத்த முயன்று, பின்னாளில் அந்தக் கொள்கையைக் கைவிட்டார்.

ஃப்ராய்ட் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்தார். தனது ஆராய்ச்சியை மூளையின் நரம்பு மண்டலத்திலும், புதிய செல்லினை உருவாக்குவதிலும் செலுத்த விரும்பினார். ஆனால் போட்டிகள் அதிகமாக இருந்ததால், விரும்பிய துறையில் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருந்தது. அவருடைய பேராசிரியர் எர்ணஸ்ட் ப்ரூக், ஃப்ராய்டுக்கு உளவியல் துறையில் உதவித் தொகையுடன் ஆராய்ச்சிகள் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுத்தந்தார். பாரிஸில் உளவியல் பேராசிரியர் “சார்கோட்” என்பவரின் தலைமையில் ஃப்ராய்ட் ஹிப்னாஸிஸ் மற்றும் ஹிஸ்டீரியா தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

ஃப்ராய்ட் சில காலங்கள் பெர்லினில் குழந்தைகள் மருத்துவப்பிரிவில் நிர்வாகப் பொறுப்பில் பணிபுரிந்தபின் மீண்டும் வியன்னாவுக்குத் திரும்பினார். வியன்னாவில் மாந்தா பென்னேஸ் என்பவரை மணமுடித்தார். டாக்டர்.ஜோசஃப் ப்ரூயருடன் சேர்ந்து நரம்பியல் மற்றும் உளவியல் மருத்துவத்தில் பணிபுரிய ஆரம்பித்தார்.

ஃப்ராய்டின் உரைகளும், நூல்களும் மருத்துவ சமுதாயத்தினரிடமிருந்து அவருக்கு புகழையும் அதே நேரத்தில் எதிர்ப்பையும் பெற்றுத்தந்தன. ஃப்ராய்டின் கருத்துக்களை ஒத்துக்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் ஓரளவுக்குப் பெருகியதால் ஃப்ராய்டின் தலைமையில் உளநிலை ஆய்வுத்துறையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆனால், ஃப்ராய்ட், தன்னுடைய கருத்துக்களை எதிர்ப்பவர்களை, ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடும் குணத்தைக் கொண்டிருந்தார். அவர்களில் சிலர், நண்பர்களாகவே அவரிடமிருந்து ஒதுங்கிக்கொண்டனர். சிலர் அவரை எதிரியாகவும் பார்த்தனர்.

இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தில் வியன்னா யூதர்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாகியது. அதிலும் ஃப்ராய்ட் போன்ற பெயர் பெற்றவர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாகியது. அதனால் ஃப்ராய்ட், ஆஸ்ட்ரியாவிலிருந்து பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தார். தொடர்ந்து சுருட்டு பிடிக்கும் பழக்கமுடையவராக இருந்ததால், ஃப்ராய்ட் வாழ்நாளின் கடைசி இருபது வருடங்கள் வாய்ப்புற்று நோயால் அவதியுற்று, 1939-ல் பிரிட்டனில் மரணமடைந்தார்.
 
கோட்பாடுகள்:

உணர்வுநிலை மனம், ஆழ்மன உணர்வுநிலை மனம் இரண்டும் ஃப்ராய்டுக்கு முன்னரே உளவியலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றைப் பிரபலப்படுத்தியவர் ஃப்ராய்ட் என்று கூறமுடியும். நிகழ்காலத்தில், இந்தத் தருணத்தில் ஒருவருடைய தற்போதைய உணர்வுகள், நினைவுகள், எண்ணங்கள், கற்பனைகளைக் கொண்டிருக்கும் மனநிலை, உணர்வுநிலை மனம் எனப்படுகிறது.

ஒருவர் தற்போதைய தருணத்தில் சில எண்ணங்களையும், நினைவுகளையும் கொண்டிருக்கமாட்டார். இருப்பினும் அவர் விருப்பப்பட்டால், சில எண்ணங்களையும், நினைவுகளையும் மீண்டும் நினைவுகூற முடியும். அத்தகைய நினைவுகளை, “கிடைக்கக்கூடிய நினைவுகள்” என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு மன அடுக்குகளிலும் யாருக்கும் பிரச்சனை இருக்காது. ஃப்ராய்டு இந்த இரண்டு மன அடுக்குகளையும், நமது மனதின் சிறிய பகுதிகளே என்று குறிப்பிடுகிறார்.

நமது மனதின் மிகவும் அதிகமான பகுதி ஆழ்மன உணர்வுநிலை மனமாகும். அந்த நினைவுகள், நமது இயல்பான நினைவுக்குக் கிடைப்பதில்லை. நமது உள்ளுணர்வுக்குத் தேவையான அனைத்தும் அங்கே புதைந்து கிடக்கின்றன. அந்த நினைவுகளை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. மேலும் மனஅதிர்ச்சி, மனப்பிளவு போன்ற பிரச்சனைகளுக்கு அந்த நினைவுகளே காரணம். மனிதனின் இயற்கை இச்சைகளான பசி, பாலுணர்வு முதற்கொண்டு, ஒரு கலைஞனுடைய சிந்தனைகள், அறிவியலாளர்களின் அறிவார்வம் போன்றவைகளுக்கு இந்த ஆழ்மன உணர்வுநிலையே ஆதாரமாக உள்ளது என்று ஃப்ராய்ட் கருதுகிறார். இருந்தபோதிலும், அநேகமாக எப்பொழுதும், நாம் இந்த ஆழ்மன உணர்வுகளை எதிர்க்கவும், மறுக்கவும் முயல்கிறோம். அதனால் அவை வேறொரு வடிவில் நமது வெளிப்பாடாக காட்சியளிக்கிறது.

---- தொடரும்.

  
பூமராங் புதிர்:

நான் சிறுவனாக இருந்தபொழுது வீட்டில் பூனைக்குட்டிகள் அதிகமாகிவிட்டால், ஒரு மைல் கடந்து அந்த குட்டிகளை விட்டுவரவேண்டும். அதாவது பூனைக்குட்டிகளை ஊர் கடத்த வேண்டும். இதில் பிரச்சினை என்னவென்றால், நான் வீடு திரும்புவதற்குள் பூனைக்குட்டிகள் வீடு திரும்பியிருக்கும்.


சென்ற வருடம் (2012) நவம்பர் மாதம், அமெரிக்காவில் வசிக்கும் ஜேக்கப், போனி ரிச்சர் தம்பதியினர் தங்களது பூனையுடன் இருநூறு மைல்தூரம் பயணம் செய்து டேடோனா கடற்கரைக்குச் சென்றனர். தங்களது கேரவானில் (வீடு போன்ற வசதியுள்ள வேனில்) ஃபுளாரிடாவிலிருந்து டேடோனாவுக்குச் சென்றனர். அங்கு சென்றதும் போனியுடைய அம்மா, கேரவானின் கதவைத் திறந்தவுடன், பூனை வெளியே ஒடிவிட்டது. வெடிச் சத்தத்துக்கு பயந்து எங்கோ ஓடிவிட்டது. பூனையை கண்டுபிடிக்க ஜேக்கப் தம்பதியினர்  எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பயணத்தை முடித்துவிட்டு, பூனையை இழந்து வருத்தத்துடன் ஜேக்கப் தம்பதியினர் வீடு திரும்பினர்.

புதுவருட கொண்டாட்டத்தின்பொழுது அவர்கள் வீட்டுக்கு சில மைல் தூரத்தில் அவர்களுடைய பூனை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த பூனை மிகவும் இளைத்து, நடக்கக்கூட சக்தியின்று காணப்பட்டது. பூனையிடமிருந்த மைக்ரோச்சிப் மூலம் பூனை அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. நான்கு வயதான பூனை இரண்டு மாதங்கள் நடந்து, கிட்டத்தட்ட இருநூறு மைல் கடந்து அந்தப் பூனை வீடு திரும்பியுள்ளது.

பூனை எப்படி வழிகண்டுபிடிக்கிறது என்பது அறிவியளாலர்களுக்கு புரியாத புதிர். 1954-ல், ஜெர்மனியில் இதற்காக ஒரு சோதனை செய்தனர். ஒரு புதிர் கட்டமைப்புகளில் அடைக்கப்பட்ட பூனை, சோதனையின்பொழுது ஒவ்வொரு முறையும் சரியாக வெளியே வந்து தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டது.

 1977-ல் ஆஸ்திரேலியாவில் ஆயிரம் மைல்கள் கடந்து ஒரு பெர்ஷியன் பூனை வீட்டைக் கண்டுபிடித்திருக்கிறது. 1989-ல் மாஸ்கோவில் 325 மைல்கள் கடந்து ஒரு பூனை வீடு திரும்பியுள்ளது. பூனைகள் எப்படி வழியைக் கண்டுபிடித்து திரும்ப முடிகிறது என்பது இன்னும் ஒரு புரியாத புதிர்தான். இந்தச் செய்தியை கீழேயுள்ள காணொளியில் காணலாம்.
 
 

துணுக்கு:

நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியை அவர் மறந்திருக்கக்கூடும்; ஒருவரிடம் கூறிய இன்சொல்லைக்கூட அவர் மறந்திருக்கக்கூடும்; ஆனால் மனதளவில் எப்படி அவரை உணர வைத்தீர்களோ (மகிழ்ச்சியாகவோ அல்லது துன்பமாகவோ) அதனை அவர் மறப்பதென்பது மிகவும் கடினம்.

Thursday, October 17, 2013

கதம்பம்-10


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

ஆஸ்ட்ரிய நாட்டை சேர்ந்த சிக்மண்ட் ஃப்ராய்ட், நரம்பியல் மற்றும் உளவியல் அறிவியலாளர். மனித உணர்வுகள் குறித்து ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கிய சிற்பிகளில் முதன்மையானவர். இன்றும் அவர் இருபதாம் நூற்றாண்டில் மிகுந்த தாக்கத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய முக்கிய அறிவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

“அறிவியல் கருத்துக்கள் அனைத்தும், முற்றிலும் உறுதியான நிரூபணங்களைமட்டுமே கொண்டிருக்கின்றன, அல்லது கொண்டிருக்கவேண்டும் என்று நம்புவது தவறானது மற்றும் நியாயமற்றது. ஏதோ ஒருவிதத்தில் அதிகாரத்துக்கு ஏங்குபவர்களாலோ அலலது மதக்கட்டுப்பாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாலோ இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது. அறிவியல் எனப்படுவது கேள்விகளால் உருவாக்கப்படுகிறது. இருப்பினும் அந்த அறிவியலிலும் கேள்விகள் இல்லாமல் சாத்தியக்கூறுகளைக் கொண்டு ஒப்புப்கொள்ளப்படும் கொள்கைகளும் உண்டு. நிருபணங்கள் இல்லாமல் இத்தகைய தோராயமான கொள்கைகளுடன் மனநிறைவுகொண்டு, அவற்றின் உதவியுடன், பணியின் இறுதி முடிவுக்கும் நிரூபணங்கள் கிடைக்கும் சாத்தியம் இல்லாமலும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதும் ஒருவகையில் அறிவியல் மனப்பாங்கே.”  -  சிக்மண்ட் ஃப்ராய்ட்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், கொள்கைகளும் மற்றவர்களுடைய தொடர்ச்சியாக நீள்வதுபோல ஃப்ராய்டின் வாழ்க்கையும் அவருடைய குரு மற்றும் நண்பரான டாக்டர்.ஜோசஃப் ப்ரூயர் மற்றும் ப்ரூயருடைய மருத்துவ வாடிக்கையாளர் (நோயாளி) அன்னா அவர்களிடமிருந்தே தொடர்கிறது.

அன்னா 1880-லிருந்து 1882 வரை டாக்டர்.ப்ரூயரிடம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இருபத்தொரு வயதான அன்னா, தன்னுடைய வாழ்வின் அதிகமான காலங்களை, நோய்வாய்ப்பட்டிருந்த தன்னுடைய தந்தையைப் பார்த்துக்கொள்வதிலேயே செலவழித்தவர். தொடர்ச்சியான இருமல்நோய் அன்னாவைப் பீடித்துக்கொண்டது. உடல்நிலையில் எந்தவிதமான கோளாறும், அவருக்கு அந்த இருமல் நோயைத் தந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் அவருக்கு விடாமல் இருமும் நோய் இருந்தது. இருமலைத் தவிர அவருக்கு பேசுவதிலும் பிரச்சனை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவ்ர் ஊமையாகவே ஆகிவிட்டார். சில காலங்களுக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார். அப்பொழுதும் அவர் தன்னுடைய தாய் மொழியான ஜெர்மானிய மொழியில் பேசாமல், அவருக்கு பரிச்சயமான மற்றொரு மொழியான ஆங்கிலத்தில் பேசினார்.

அவருடைய தந்தை இறந்ததும் உணவு உட்கொள்ள மறுக்க ஆரம்பித்தார். வழக்கத்தில் இல்லாத, இதுவரை அறியப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானார். ஒருவகையான வாதத்தினால் பீடிக்கப்பட்டு கைகளிலும் கால்களிலும் உணர்வுகளை இழந்தார். அவருடைய கண்களின் இயல்பான பார்வை மாறி “டன்னல் விஷன்” பிரச்சனையும் உண்டாயிற்று. ஆனால் மருத்துவர்கள் அவருடைய உடலில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டனர்.
 
 
 
 
                                                                      டன்னல் விஷன் 

இதையும் தவிர அவர் பலவிதமான கற்பனை பாத்திரங்களையும் உருவாக்கிக் கொண்டார். அவருக்கு சீரான மனநிலை இல்லாமல் இருந்தது. பலமுறை தற்கொலைக்கு முயற்சித்தார். டாக்டர்.ப்ரூயர் அன்னாவுக்கு ஹிஸ்டீரியா (மாறுபட்ட மனநிலை) இருப்பதாக கூறினார். அதாவது உடலில் நோய்கள் இல்லாமலேயே நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும் நோய் இருப்பதாகக் கூறினார்.

மாலை நேரங்களில் அன்னா தன்னிச்சையாக, சுயமாகவே ஹிப்னடைஸில் மூழ்கிவிடுவார். அன்னா அந்த நிலையை மேகங்கள் என்று வர்ணிப்பார். அன்னா தனது கற்பனைகளையும் அனுபவங்களையும் அந்த மயக்கமான நிலையில் கூறுவதை டாக்டர்.ப்ரூயர் கண்டறிந்தார். அவ்வாறு தன் மனநிலையை வெளிக்கொணர்ந்த பிறகு அன்னாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது தெரிந்தது. இத்தகைய நிகழ்வுகளை “புகை போக்கியைச் சுத்தம் செய்வது” அல்லது “உரையாடல் மருத்துவம்” என்றும் அன்னா குறிப்பிட்டார்.

“உரையாடல் மருத்துவம்” நிகழும் தருணத்தில் பேசப்படும் சில சம்பவங்கள், சில குறிப்பிட்ட நோய்களுக்கான விளக்கமாக அறியப்பட்டது. இதற்கு உதாரணமாக நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் காணலாம். ஒரு கட்டத்தில் அன்னா நீர் பருகுவதற்கு முற்றிலுமாக மறுத்துவிட்டார். உரையாடல் மருத்துவத்தின் பொழுது, ஒரு மாது, நாய் குடித்த குவளையிலிருந்து நீர் பருகுவதைப் பார்த்ததாகக் கூறினார். அந்த நிகழ்ச்சியைக் கூறும்பொழுது அன்னா மிகவும் அருவருப்பு அடைந்ததாகக் குறிப்பிட்டார். அதனை உரையாடல் மருத்துவத்தில் வெளிக்கொணர்ந்த பிறகு, அவர் நீர் பருகுவதற்கு தயக்கம் எதையும் காட்டவில்லை. அதாவது ஒரு பிரச்சனைக்கு, மூல காரணத்தை உணர்ந்தவுடன், அவரிடமிருந்த, அந்த குறிப்பிடப்பட்ட பிரச்சனையான மனநோய் முற்றிலுமாக விலகிவிட்டது. டாக்டர்.ப்ரூயர் இதனை “கேத்தாலிஸ்” அதாவது “தூய்மைப்படுத்துதல்” என்றுப் பொருள்படும் கிரேக்க வார்த்தையின் மூலம் குறிப்பிடுகிறார்.

அதன்பிறகு பதினோரு வருடங்கள் கழித்து டாக்டர்.ப்ரூய்ர் அவருடைய உதவியாளர் சிக்மண்ட் ஃப்ராய்ட்-உடன் இணைந்து “ஹிஸ்டீரியா” குறித்த நூலை வெளியிட்டார். எப்பொழுதோ ஒருவருடைய வாழ்வில் ஏற்படும் அசம்பாவிதமான நிகழ்ச்சியே, ஹிஸ்டீரியா ஏற்படுவதன் மூல காரணம் என்று அந்நூலில் குறிப்பிட்டனர். ஒருவருக்கு உலக வாழ்க்கையில் புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்சனைகளால் ஹிஸ்டீரியா ஏற்படுவதில்லை என்றும் விளக்கினர். அசம்பாவிதங்களால் ஏற்படும் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவை தானாகவே மறைந்துவிடுவதில்லை. அவை மறைமுகமாக ஹிஸ்டீரியாவின் வழியாக வெளிப்படுத்தப் படுகிறது. ஹிஸ்டீரியா மூலம் வெளிப்படும் அத்தகைய மறைமுகமான உணர்வுகளுக்கு அர்த்தங்கள் உண்டு. நோயாளிகளிடம் புதைந்துள்ள உணர்வுகளைத் தட்டி எழுப்பி, வெளிக்கொணர்வதன் மூலம் அவர்களுடைய மறைக்கப்பட்ட உணர்வுகளை அறிந்து, அவர்களுடைய செயல்பாடுகளின் உண்மையான அர்த்தத்தை உணரச் செய்ய வேண்டும், அவ்வாறு புதைந்திருக்கும் உணர்வுகளை வெளிக்கொணர்ந்து விட்டால், அவை மீண்டும் ஒரு நோயின் அறிகுறியாக வெளிவராது. இது ஒரு சீழ்கட்டியிலிருந்து சீழினை நீக்கி கிருமிகளை வெளியேற்றி குணப்படுத்துவதற்கு ஒப்பாகும்.


இவ்வகையான சிகிச்சைகளின் மூலமாக அன்னாவுக்கு இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக குணப்படுத்தப் பட்டது. ஆனால் அன்னாவுக்கு நோயை நீக்குவதற்கு ப்ரூயர் தேவைப்பட்டார். இதனால் ப்ரூயருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளும் வந்தது. ஃப்ராய்டின் கூற்றுப்படி அன்னா ப்ரேயரை காதலித்தார். ப்ரூயரும் அன்னாவின் காதலில் விழுந்தார். ப்ரூயரின் குழந்தையைச் சுமப்பதாக அன்னா நம்ப ஆரம்பித்து ஊர் முழுவதும் கூறினார். மணமான ப்ரூயருக்கு அது மதரீதியில் பெரிய பிரச்சனையை உண்டாக்கியது. ப்ரூயர் தனது ஆராய்ச்சியை திடுதிப்பென்று கைவிட நேர்ந்தது.


ப்ரூயர் ஆராய்ச்சிகளை கைவிட்டதும், அன்னா ஒரு தாதியாக மருத்துவமனையில் பணியாற்றினார். பெர்த்தா பாப்பென்ஹெம் என்ற பெயரில் பெண் சமுதாயத்துக்காக பாடுபட்டவர்களில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்.  பொதுநலத்துக்காக வாழ்ந்த்து மட்டுமல்லாமல் உளவியலில் ஃப்ராய்டுக்கு ஆர்வத்தைத் தூண்டியதின் மூலம் ஒரு புகழ்பெற்ற உளவியலாளர் உருவாகவும் வழிவகுத்தார்.


பின்னாளில் இத்தகைய ஹிஸ்டீரியா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு, பாலியல்ரீதியான காரணங்கள்தான் அடித்தளமாக இருக்கிறது என்று ஃப்ராய்ட் அறிவித்தார். ப்ரூயருக்கு இது தெரிந்திருந்தாலும் அதை அவர் பகிரங்கமாக ஒத்துக்கொள்ள வில்லை.

---- தொடரும்.

 

 

கொசுறு:

எப்பொழுதும் புன்னகையுடன் காட்சியளியுங்கள். புன்னகை குழந்தைகளைக் கவரவும், சான்றோர்களிடம் மதிப்பைப் பெறவும், நேர்மையான விமர்சகர்களிடம் பாராட்டைப் பெறவும், தவறான நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்ளவும், அழகை ஆராதிக்கவும், அடுத்தவர்களின் நற்குணங்களை அறிந்துகொள்ளவும், உலகை இன்னும் சிறிது நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லவும் உதவும். உங்களது வாழ்க்கையில் நீங்கள் ஒரு ஆரோக்கியமான குழந்தையையோ, ஒரு தோட்டத்தையோ, ஒரு சமுதாய மீட்பையோ உருவாக்கியிருந்தால் அல்லது ஒரு உயிராவது உங்களால் வாழ்வில் நிம்மதியுடன் இருக்க முடிந்தது என்று நீங்கள் உணர முடிந்தால் அதுவே உங்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு அடையாளமாகும்.

-    ரால்ஃப் வால்டோ எமெர்சன்.

Thursday, October 10, 2013

கதம்பம்-9


நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்களா?

மிகச் சுலபமாக விடையளிக்க முடியாத கேள்வி. ஏனெனில் இது நாம் யாரை நம்மிடம் ஒப்பிட்டு கூறுகிறோம் என்பதைப் பொறுத்தது. அநேகமாக மக்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். நாம் நமது நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், சுற்றுவட்டாரத்தில் தெரிந்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நமது மகிழ்ச்சியை அளவிடுகிறோம்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தவிர, சில சமயங்களில் நான் சந்திக்காதவர்களையும் நம்மிடம் ஒப்பிடுகிறோம். ஒப்பிட்டு நோக்கும்பொழுது, அடுத்தவர்களுடைய வாழ்வின் துயரமான தருணங்களின் மீது நமக்கு ஒரு கவர்ச்சி இருப்பதாகத் தெரிகிறது. ஊடகங்களும் அந்தக் கவர்ச்சியைப் பயன்படுத்தி, அதற்கேற்றவாறு பிரபலங்கள் மற்றும் அடுத்தவர்களின் துயர அத்தியாயங்களை வெளிக்கொணர்ந்து நம்மை மகிழ்விக்கிறது.

அடுத்தவர்களின் சோகங்களை கேட்பதில் இருக்கும் கவர்ச்சி, மனித சமுதாயத்தின் ஆரம்பத்திலிருந்தே இருப்பதாகத் தெரிகிறது. அம்பிகாபதி, அமராவதி முதல் தேவதாஸ், பார்வதிவரை அனைத்தும் துயரங்களின் சமுத்திரங்களாகும். காதலர்கள் எப்படியெல்லாம் துயரங்களை சந்திக்கிறார்கள் என்பதனை விளக்கும் வெற்றிகரமான கதைகள்.

இதனால் அடுத்தவர்களின் துயரங்களில் நாம் இன்பம் காண்கிறோம் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் அதில் ஒரு கவர்ச்சி இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்தக் கட்டுரையில் அது ஏன் என்பதனை ஆராய்வோம்.

மூடி மறைத்தல்:

அடுத்தவர்களின் துயரத்தை அறிந்துகொளவதில் நமக்கு மிக்க ஆர்வமிருந்தாலும், நாம் நம் சோகங்களை அடுத்தவர்களிடமிருந்து மறைக்க முயல்கிறோம். மனோவியலாளர்கள், மக்கள் தங்களது துன்பங்களை, தோல்விகளை, பிரச்சனைகளை முடிந்தவரை அடுத்தவர்களிடமிருந்து மறைக்கின்றனர் என்றும், தங்களது வெற்றிகளை கூரைமீது நின்று கூவ முயல்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

மக்களுடைய மனதில் எப்படிப்பட்ட சிந்தனைகள் இருந்தாலும், அடுத்தவர்களிடம் வெளிக்கொணரும் தருணங்களில், தங்களை உயர்த்திக்காட்டும் எண்ணங்களையும் செயல்களையும் மட்டுமே பிரதிபலிக்கின்றனர். துன்பங்களையும், தாழ்வுகளையும் மறைக்கவே பாடுபடுகின்றனர்.

இதற்காக மேற்கொண்ட ஒரு சோதனையில் பங்கேற்பவர்களிடம் ஒவ்வொரு மணிநேர இடைவெளியில், தங்களது மன உணர்வுகளை கருத்திடுமாறு கூற்ப்பட்டது. அப்பொழுது பங்கேற்றவர்கள், தங்களது மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் எண்ணங்களையே அவர்கள் அதிகமாகக் குறிப்பிட்டனர். சோகங்களை பிரதிபலிக்கும் எண்ணங்களை அவர்கள் மறைத்துவிட்டனர்.

மனித மனம் எப்பொழுதும், தன்னை மற்றவர்களுடன் ஒப்பு நோக்கவே விழைகிறது. ஒவ்வொருவரும் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே வெளிக்காட்டி, துன்பங்களை மறைத்து நடமாடுதலால், எந்த அளவுக்கு ஒருவர் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை கண்டுபிடிப்பதில் சரியான முடிவினை அடைவது சிரமமாக உள்ளது.

 

மறைந்திருக்கும் உணர்வுகள்:

அலெக்ஸான்டர் ஜோர்டான் என்ற மனோவியலாளர், மகிழ்ச்சியின் தொடர்பாக, அடுத்தவர்கள் நம்மைப்பற்றி கொண்டுள்ள மதிப்பீட்டையும், நாம் அடுத்தவர்கள் மீது கொண்டுள்ள மதிப்பீட்டையும் குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.

முதலில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரிடமும், குறிப்பிட்ட காலகட்டத்தில், எவ்வளவு காலங்கள் சோகமான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. பிறகு பங்கேற்கும் முழுக்குழுவுக்கும் அதே காலகட்டத்தில் சோகமான மனநிலையின் சராசரியைக் கணிக்குமாறு கேட்கப்பட்டது.

பங்கேற்பவர்களிடமிருந்து உண்மையான பதிலைப் பெறுவதற்காக அவர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பங்கேற்பாளர்கள் அடுத்தவர்களுடைய சோகங்களை இருபது சதவிகிதம் குறைவாகவே மதிப்பிட்டனர். அடுத்தவர்களுடைய மகிழ்ச்சியை ஓரளவுக்கு சரியாகவே மதிப்பிட்டனர்.

இன்னொரு சோதனையில், பங்கேற்பாளர்களிடம், சில மாதங்களுக்கு, அவர்களுடைய சோகமான தருணங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் குறித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  அதன்பிறகு, பங்கேற்பாளர்களுக்கு மிகவும் பழக்கமான மூவரிடம், பங்கேற்பாளர்களுடைய மகிழ்ச்சி குறித்த மதிப்பீடுகளை, அதே கால கட்டத்துக்குப் பெற்றுக்கொண்டனர். மீண்டும் முடிவுகள் ஒத்துப்போகவில்லை. பங்கேற்பாளர்களுக்கு பழக்கமான மூவருமே, பங்கேற்பாளர்களின் மகிழ்ச்சியை அதிகமாகவும், துயரங்களைக் குறைவாகவுமே மதிப்பிட்டிருந்தனர். அதாவது, பங்கேற்பாளர்கள் தங்களைவிட மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக குறிப்பிட்டிருந்தனர்.

அடுத்தவர்கள் நம்மைவிட மகிழ்ச்சியாக வாழ்வதாக மதிப்பிடுவதால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன?

மூன்றாவதாக ஜோர்டான் நடத்திய சோதனையில் இதற்கு பதில் கிடைத்தது. அடுத்தவர்களுடைய மகிழ்ச்சியை அதிகமாக மதிப்பிடுபவர்கள், தங்களது வாழ்வில் திருப்தியில்லாதவர்களாகவும், பிரச்சனையிருப்பவர்களாகவும் இருப்பது தெரியவந்தது.

அதாவது மனத்தளர்ச்சி மற்றும் துயரத்தில் இருப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களையும் தங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி ஒப்பிட்டு நோக்குவது ஒரு சோகமான எண்ணங்களின் சுழற்சியை ஏற்படுத்திவிடுகிறது.

 

ஆறுதலான சிந்தனையோட்டம்:

நாம் நம்முடைய சோகங்களை அடுத்தவர்களிடம் மறைக்க முயல்வதுபோல, அடுத்தவர்களும் தங்களுடைய சோகங்களை மறைக்க முயல்வார்கள் என்றும் நாம் உணரவேண்டும். ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை என்று சோதனைகளிலிருந்து தெரியவருகிறது.

அடுத்தவர்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகத் தோன்றுவதால், நம்மைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சனைகள் உண்டு என்று நம்ப மறுக்கிறோம்.

அடுத்தவர்களுடைய சோகங்களை ஊடகங்கள் வாயிலாகவும், கலைகள் வாயிலாகவும் நாம் அறிகிறோம். சோகமான கதைகள், துயரமிக்க பாடல்கள், பிரபலங்களின் பிரச்சனைகள் நமக்கு ஒருவிதமான ஆறுதலான நிம்மதியை அளிக்கிறது. கலைகள் வழியாக நாம் காணும் சோகநிகழ்ச்சிகள், நாம் மட்டுமே துன்பத்துடன் வாழ்வதில்லை என்ற ஆறுதலை அளிக்கிறது. நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் துயரங்கள் அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவை வரவேற்கவும்படுகின்றன. இது நமது உண்மையான வாழ்வுக்கு எதிரானதாகும். துயரம் என்பது நமக்கு மட்டும் கிடையாது என்ற ஒருவிதமான ஆறுதலை அது அளிக்கிறது.

நமக்கு துன்பம் உள்ளபொழுது அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் அவர்களுக்கு துன்பமே இருக்காது என்று எண்ணிவிடாதீர்கள். நம்மைப்போலவே அவர்களும் துன்பங்களை மறந்து, மறைத்திருக்கக்கூடும் என்று உணர்ந்துகொள்ளுங்கள்.

முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஃப்ரெஞ்ச் அறிஞர் மோன்டிஸ்கியூ கூறிய வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள்.

“நாம் மகிழ்ச்சியாக இருப்பதென்பது மிகவும் எளிதான காரியம். ஆனால், நாம் அடுத்தவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பதென்பது இயலாத காரியம். ஏனென்றால் அடுத்தவர்கள் நம்மைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றே நாம் எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

http://psychcentral.com/   - லிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.

 

 

துணுக்கு:

“அவரோட பையன், அப்பா மேல கோவம் வந்தா, உடனே பாத்ரூம் போய், வாஷ் பேசின், டாய்லெட் எல்லாம் கிளீன் பண்ண ஆரம்பிச்சிடுவானாம்”

 “பரவாயில்லையே, கோவத்த கட்டுப்படுத்தறத்துக்கு நல்ல வழியாச்சே!. ஆனால் அதுக்கு அவுங்க அப்பா ஏன் கோவப்படுறாரு?”

“கிளீன் பண்றதுக்கு, அப்பா டூத் பிரஷல்ல யூஸ் பண்றானாம்.”

Thursday, October 3, 2013

கதம்பம்-8


அல்வா(?) கொடுத்தவர் (The pudding man) :

1999-ல் அமெரிக்காவில் டேவிட் ஃபிலிப்ஸ் என்ற பொறியியலாளர் பொருட்கள் வாங்கும் பொழுது ஒரு விளம்பரத்தைக் கண்டார். ஹெல்த்தி சாய்ஸ் ஃபுட்ஸ் (Healthy Choice Foods) என்ற நிறுவனம், அவர்களுடைய பொருட்களை வாங்குபவர்களுக்கு, விமானத்தில் பயணம் செய்ய புள்ளிகளை அளித்தனர். அதாவ்து ஒரு புட்டிங்க் 25 அமெரிக்க காசுக்கு வாங்கினால் 100 மைல் இலவசமாக விமானத்தில் பிரயாணம் செய்ய புள்ளிகளை அளித்தனர். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அந்த 100 மைல் பிரயாணத்துக்கான கட்டணம் 25 காசுகளைவிட அதிகம். அதாவது ஒருவர் 25 காசுக்கு பொருளை வாங்கினால் 50 காசுக்கு பணஓலை அந்த நிறுவனம் கொடுத்ததுபோல இருந்தது.

நிலைமையை உணர்ந்துகொண்ட டேவிட் 12,150 புட்டிங்க்-களை வாங்கினார். நிறுவனத்தின் வேண்டுகோளின்படி அவர் அந்த புட்டிங்க்-களைப் பிரித்து அதிலுள்ள உறைகளை நிறுவனத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். டேவிட் புட்டிங்க் அனைத்தையும், ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொடையாக அளித்துவிட்டார். தொண்டு நிறுவனத்திடம், அந்த உறைகளை மட்டும் தருமாறு வேண்டிக்கொண்டார்.

ஹெல்த்தி சாய்ஸ் ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு, அவர்கள் கேட்டபடி உறைகளை அனுப்பி வைத்தார். அந்த நிறுவனமும், வாக்கு கொடுத்தபடி அவருக்கு விமானத்தில் இலவசமாக பயணம் செய்யும் புள்ளிகளை அளித்தது. அதன்படி, டேவிட் 31 முறை ஐரோப்பாவை சுற்றிவர முடியும். அல்லது 21 முறை அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுவர முடியும். அல்லது 50 முறை அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும் சென்றுவர முடியும்.

அதுமட்டுமல்லாமல், அவருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸில் கோல்ட் ஸ்டேட்டஸ் கிடைத்தது. அந்த தகுதியின்படி அவருக்கு சிறப்பு முன்பதிவு, ஸீட் அப்க்ரேட் மற்றும் போனஸ் புள்ளிகளும் கிடைத்தன.

இன்னும் முடியவில்லை. தொண்டு நிறுவனத்துக்கு கொடையளித்ததால், வருமானவரி விலக்கு பெற்று அதிலிருந்து 815$ தொகையும் கிடைத்தது.
 

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. எப்பொழுதும் புது கிரடிட் கார்டு, வாங்குமாறு எனக்கு கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தது. நான் இரண்டு கார்டுக்கு மேல் வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒருமுறை, நீங்கள் உங்கள் வேறொரு கிரடிட் கார்டிலிருந்து எங்களது கார்டுக்கு ஒரு வருடத்துக்கு வட்டியில்லாமல் கிரடிட்டை மாற்றிக்கொள்ளுங்கள் என்று விளம்பரத்துடன் சிட்டி பேங்க்-லிருந்து கடிதம் வந்தது. எனக்கு லிமிட் 21,000$ கொடுத்தார்கள். நான் அவர்களிடம் கிரடிட் கார்டு வாங்கிக்கொண்டு, என்னுடைய வேறொரு கிரடிட் அக்கௌண்டுக்கு 21,000$ மாற்றிக்கொண்டேன். பணத்தை வீட்டுக் கடனுக்கு உபயோகப்படுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட 600$ எனக்கு இலவசமாகக் கிடைத்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் புது கிரடிட் கார்டை கேன்ஸல் செய்துவிட்டேன்.

 

நரகத்தின் நுழைவாயில்:

டர்க்மெனிஸ்தான் என்ற நாடு ஆப்கானிஸ்தானைத் தாண்டி மத்திய ஆசியாவில் உள்ளது. 1971-ல் அந்த நாட்டில் உள்ள டெர்விஸ் என்ற ஊரில் இயற்கை வாயு எடுப்பதற்காக கிணறு தோண்டப்பட்டது. கிணறு தானாகவே பெரிதாகி, நிலத்தில் பெரிய ஆழமான பள்ளத்தாக்கு உருவாகியது. கிட்டத்தட்ட 70 மீட்டர் விட்டத்துக்கு பள்ளம் உருவானது. அதிலிருந்து வாயு பீரிட்டது. கொளுத்திவிட்டால் தானாகவே வாயுக்கள் தீர்ந்துவிடும் என்று வல்லுனர்கள் தீ மூட்டிவிட்டனர். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களைத் தாண்டிவிட்டது. இன்னமும் தீ அணைந்தபாடில்லை. அந்த இடம் இப்பொழுது அங்கு வாழும் மக்களால் நரகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.
 


 

 விலங்குகளின் நீதி:

ஒரே வேலைக்கு வேறு வேறு வெகுமதி அளிக்கப்பட்டால், விலங்குகள் எப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.