பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 30, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 7 : பகுதி - 2

“நான் உருளையான தூண்களைக் கொண்ட கட்டிடங்களைக் காண்கிறேன். ஏகப்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. நாங்கள் வெளியே நிற்கிறோம். நிறைய ஆலிவ் மரங்கள் இருக்கின்றன. மிகவும் அழகாக இருக்கின்றன. நாங்கள் எதையோ கவனித்துக்கொண்டு இருக்கின்றோம். மக்கள் அனைவரும் வேடிக்கையான முகமூடி அணிந்திருக்கிறார்கள். முகமூடி முகத்தை முழுவதும் மூடியிருக்கிறது. ஏதோ திருவிழாபோல் உள்ளது. நீண்ட அங்கியும் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் ஏதோ நடிப்பதுபோல் இருக்கிறது. அவர்கள் மேடையில் இருக்கிறார்கள். நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.”
“ஏதாவது நாடகத்தைப் பார்க்கிறாயா?”
“ஆம்.”
“நீ எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்த்துச் சொல்.”
“எனக்கு பழுப்பு நிற முடியுள்ளது. முடியை பின்னியிருக்கிறேன். 

நீண்ட மௌனம். அவள் வர்ணித்தப்படி பார்த்தால், அவள் உருவமும், ஆலிவ் மரங்களும் அவள் முன்பு கூறிய ஒரு பிறவியை ஒத்திருந்தது என் நினைவுக்கு வந்தது. கி.மு. 1500 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாட்டில், நான் டையக்னஸ் என்ற ஆசிரியராக வாழ்ந்தபோது, கூறியதைப்போல் இருப்பது தெரிந்தது. நானும் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
“உன்னால் காலத்தைக் கணிக்க முடிகிறதா?”
“இல்லை.”
“உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னுடன் இருக்கிறார்களா?”
“ஆம். என் கணவர் இருக்கிறார். அவர் யாரென்று (தற்கால கேத்தரின் பிறவியில்) எனக்குத் தெரியவில்லை.”
“உனக்கு குழந்தைகள் இருக்கின்றனவா?”
“என்னிடம் ஒரு குழந்தை உள்ளது.” அவள் குரல் வித்தியாசமாக ஒலித்தது. கேத்தரின்போல் இல்லை. ஏதோ ஒரு பழைய நாடகம் பார்ப்பதுபோல் இருந்தது.
“உனது தந்தை இருக்கிறாரா?”
“இங்கு இல்லை. நான் அவரைப் பார்க்க முடியவில்லை. நீங்கள் இங்கு எங்கோ இருக்கிறீர்கள். . . . . . எங்கள் பக்கத்தில் இல்லை.” நான் சரியாகத்தான் யூகித்திருக்கிறேன். நாங்கள் முப்பத்தைந்தாம் நூற்றாண்டுக்குச் சென்றுவிட்டோம்.
“நான் அங்கு என்ன செய்கிறேன்?”
“நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆசிரியர். . . . . ஆசிரியர். . . . . நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். . . . . . சதுரங்கள், வட்டங்கள், வேடிக்கைகள். . . . . டையக்னஸ், நீங்கள் இருக்கிறீர்கள்.”
“என்னைப் பற்றி வேறென்ன தெரியும்?”
“உங்களுக்கு வயதாகிவிட்டது. நாம் உறவினர்கள். நீங்கள் என்னுடைய தாயின் சகோதரர்.”
“உனக்கு என் குடும்பத்தில் வேறு யாரையும் தெரியுமா?”
“உங்கள் மனைவியைத் தெரியும். . . . . . குழந்தைகளையும் தெரியும். உங்களுக்கு மகள்கள் இருக்கிறார்கள். இருவர் என்னைவிட மூத்தவர்கள். என் தாய் இறந்துவிட்டார். இளமையிலேயே இறந்துவிட்டார்.”
“உன் தந்தைதான் உன்னை வளர்த்தாரா?”
“ஆம் இப்பொழுது நான் திருமணமானவள். எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது.”
“கர்ப்பமாக இருக்கிறாயா?”
“ஆம். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. பிரசவத்தின்போது இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்.”
“உன் தாய் அப்படிதான் இறந்தாரா?”
“ஆமாம்.”
“உனக்கு அப்படிநேர வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறாயா?”
“ஆம். இங்கு இது சகஜம்.”
“இதுதான் உனக்கு முதல் குழந்தையா?”
“ஆமாம். எனக்கு பயமாக இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எனக்கு குழந்தை பிறக்கலாம். நான் மிகவும் குண்டாகிவிட்டேன். என்னால் அசையமுடியவில்லை. . . . . குளிராக உள்ளது.” காலத்தில் முன்னோக்கி வந்துவிட்டாள். குழந்தைப் பிறக்கப்போகிறது. கேத்தரினுக்கு நிகழ்கால பிறவியில் இதுவரை குழந்தை எதுவும் பிறக்கவில்லை. நானும் பிரசவத்துக்கு மருத்துவராக பணிபுரிந்து கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாகிறது.  

“எங்கே இருக்கிறாய்?” வினவினேன்.
“ஏதோ பாறையின் மீது இருக்கிறேன். மிகவும் குளிருகிறது. வலி அதிகமாக உள்ளது. . . . . . யாராவது உதவி செய்யுங்கள். யாராவது உதவி செய்யுங்கள்.” அலறினாள். நான் இழுத்து மூச்சு விடுமாறு கூறினேன். அப்பொழுது அதிக வலியின்றி குழந்தை பிறந்துவிடும். அவளுடைய பிரசவ வேதனை சில நிமிடங்கள் நீடித்தன. பெண் குழந்தை பிறந்தது.
“இப்பொழுது நலமாக உணருகிறாயா?”
“மிகவும் பலகீனமாக இருக்கிறது. . . . எவ்வளவு இரத்தம்!”
“குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறாய் என்று தெரியுமா?”
“மிகவும் களைப்பாக இருக்கிறது. . . . எனக்கு என் குழந்தை வேண்டும்.”
“உன் குழந்தை இங்கே இருக்கிறது” சமாளித்தேன்.
“பெண் குழந்தை. என் கணவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.” மிகவும் களைப்படைந்துவிட்டாள். நான் சிறிது உறங்குமாறு கட்டளையிட்டேன். உறக்கத்துக்குப் பின் அவள் களைப்பு நீங்கிவிடும். இரண்டு நிமிடங்களுக்குப் பின் உறக்கத்திலிருந்து மீண்டு வந்தாள். 

“இப்பொழுது நலமாக உணர்கிறாயா?”
“ஆமாம். . . . நான் விலங்குகளைப் பார்க்கிறேன். முதுகில் ஏதோ ஏற்றிச் செல்கின்றன. முதுகில் கூடைகள் உள்ளன. கூடையில் உணவுப் பொருட்கள் உள்ளன. பழங்கள். . . . ஏதோ சிவப்பு நிறப் பழங்கள்.”
“அந்த இடம் வளமுள்ள பிரதேசமாக இருக்கிறதா?”
“ஆமாம். உணவுக்குப் பஞ்சமில்லை.”
“அந்த இடத்தின் பெயர் என்ன? முன்பின் தெரியாதவர்கள் ஊரின் பெயரைக் கேட்டால் என்ன கூறுவாய்?”
“கேத்தனியா . . . . . . கேத்தனியா”
“கிரேக்கப் பெயர்போல் உள்ளது.” நான் கூறினேன்.
“உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. நீங்கள் ஊரைவிட்டு சென்று வெகுநாட்களுக்குப் பின் திரும்பியிருக்கிறீர்கள். நான் இங்குதான் இருக்கிறேன்.” இது ஒரு திருப்பமாக இருந்தது. அவளுடைய இந்த வாழ்க்கையில் உறவினராகவும், முதியவராகவும், அறிவுள்ளவராகவும் இருந்திருக்கிறேன். என்னிடம் நான் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கு அந்த தகவலைப் பற்றி அறிய எந்த வாய்ப்பும் கிடையாது. 

“உன் முழுவாழ்வும் அந்த கிராமத்திலேயேதான் கழிந்ததா?” வினவினேன்.
“ஆம்.” முணகினாள். “மாணவர்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கவேண்டுமென்று தெரிந்துகொள்வதற்காக நீங்கள் பிரயாணம் செய்வீர்கள். நீங்கள் கற்றுக்கொள்வதற்காகவும் பிரயாணம் மேற்கொள்வீர்கள். வேறு வேறு வழித்தடங்களில் பிரயாணம் செய்வதால், அந்த அனுபவத்தைக் கொண்டு இடங்களைப் பற்றி வரைபடமும் தயார்செய்வீர்கள். அட்டவணைகளையும் தயார்செய்வீர்கள் . . . . . தற்பொழுது உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்களால் வரைபடம் உதவியுடன் இடங்களைக் குறித்து புரிந்துகொள்ள முடியும். அதனால் இளைஞர்கள் உங்களுடன் வர விருப்பப்படுவார்கள். நீங்கள் நல்ல அறிவாளி.”
“என்ன அட்டவணை? விண்மீண்களைப் பற்றியதா?” வினவினேன்.
“வரைபடங்களுக்கான குறியீடுகள் பற்றிய அட்டவணை. உங்களுக்கு அனைத்து குறியீடுகளும் நன்கு தெரியும். உங்களால் அவர்களுக்கு புதிய வரைபடங்கள் செய்வதற்கு கற்றுக் கொடுக்கமுடியும்.”
“உன்னால் கிராமத்தில் யாரையேனும் அடையாளம் காணமுடிகிறதா?”
“யாரையும் தெரியவில்லை. . . . . உங்களை மட்டும்தான் தெரியும்.”
“நமக்கு உறவு சுமுமாக உள்ளதா?”
“மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் மிகவும் நல்லவர். உங்கள் அருகே அமரும்பொழுது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்; . . . . . . நீங்கள் எங்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள். எங்கள் சகோதரிகள் அனைவருக்கும் உதவியிருக்கிறீர்கள்.”
கேத்தரின் தொடர்ந்தாள். “பிரட் இருப்பதைக் காண்கிறேன். மிகவும் மெல்லிய தட்டையான பிரட்.”
“மக்கள் பிரட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களா?” நான்.
“ஆம். நானும் என் தந்தையும், என் கணவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். எங்கள் கிராமத்து மக்களும் உண்ணுகிறார்கள்.”
“இன்று ஏதேனும் விசேஷமான நாளா?”
“ஆம். ஏதோ திருவிழா நடப்பதுபோல் தோன்றுகிறது.”
“உன் தந்தை உன்னுடன் இருக்கிறாரா?”
“ஆம்.”
“உன் குழந்தை?”
“இங்குதான் இருக்கிறது. என் சகோதரியிடம் இருக்கிறாள்.”
“உன் சகோதரியை அடையாளம் காணமுடிகிறதா?” கேத்தரினின் நிகழ்கால பிறவியில் யாரையேனும் நினைவுபடுத்த முடிகிறதா என்று அறிவதற்காகக் கேட்டேன்.
“இல்லை. என்னால் அடையாளம் காணமுடியவில்லை.”
“உன் தந்தை யாரென்று தெரிகிறதா?”
“ஆம். . . . . அவர் எட்வர்ட் (என்னை சிபாரிசு செய்த டாக்டர்). அத்திப்பழங்கள், ஆலிவ், நிறைய சிவப்புநிற கனிகளைக் காண்கிறேன். சாப்பிடுவதற்கு பிரட்டும் இருக்கிறது. செம்மறி ஆடுகளையும் வெட்டி வறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” சற்று நேர மௌனம். காலத்தில் முன்னோக்கி சென்றுவிட்டாள். “வெண்மையான . . . . . . வெண்மையான செவ்வக வடிவிலான பெட்டியைப் பார்க்கிறேன். அது . . . . . சவப்பெட்டி. மக்கள் இறந்ததும் அதில்தான் கிடத்துவார்கள்.”
“யாரேனும் இறந்துவிட்டார்களா?”
“ஆம் என் தந்தை இறந்துவிட்டார். அவர் முகத்தைப் பார்க்க எனக்கு மனமில்லை. . . . .  அவர் முகத்தைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை.”
“நீ அவர் முகத்தைப் பார்த்துதான் ஆகவேண்டுமா?”
“ஆம். அவரை புதைப்பதற்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.”
“ஆம். என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உனக்கு எத்தனை குழந்தைகள்?” அவள் வருத்தத்தைப் போக்க முயற்சித்தேன்.
“மூன்று குழந்தைகள். இரண்டு ஆண்குழந்தைகள். ஒரு பெண் குழந்தை.” பொறுப்புடன் பதில் கூறிவிட்டு மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்தாள். “எனது தந்தையின் உடலை கீழே வைக்கிறார்கள். எதன் கீழோ வைத்து மூடிவிட்டார்கள்.” மிகவும் துயரத்துடன் கூறுவது தெரிந்தது.
“நானும் இப்பொழுது இறந்துவிட்டேனா?”
“இல்லை. நாங்கள் கோப்பையில் திராட்சை பழரசம் அருந்துகிறோம்.”
“நான் எப்படி இருக்கிறேன்?”
“உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டது.”
“இப்பொழுது எப்படி உணர்கிறாய்? நலமாக உணர்கிறாயா?”
“இல்லை நீங்களும் இறந்துவிட்டால், மிகவும் தனிமை படுத்தப்பட்டுவிடுவேன்.”
“நீ உன் குழந்தைகளைவிட அதிகநாட்கள் வாழ்ந்துவிட்டாயா? அவர்கள் இருந்தால், அவர்கள் உன்னை கவனித்துக்கொள்வார்களே?”
“ஆனால் உங்களுடைய வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் இழக்க முடியாது.” சிறு குழந்தைபோல் பதில் கூறினாள்.
“உன்னால் நன்கு வாழமுடியும். உனக்கும் ஏராளமான விஷயங்கள் தெரியும். உனக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.” அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினேன். அவள் நிம்மதியாக உணர்ந்ததைப் பார்க்க முடிந்தது.  

“அமைதியாக உணர்கிறாயா? இப்பொழுது எங்கிருக்கிறாய்?”
“எனக்குத் தெரியவில்லை.” அவள் மரணத்திற்குப் பிறகு உள்ள நிலையில் இருப்பதை அறிந்து கொண்டேன். இந்தமுறை அவள் மரணத்தை தழுவுவதை அனுபவிக்கவில்லை. குறிப்பிடத்தக்க அளவு விரிவான வாழ்க்கை விவரங்களுடன் இரண்டு பிறவிகளை இந்தவாரம் கடந்துவிட்டாள். நான் வழிகாட்டி ஆன்மாக்களுக்காக காத்திருந்தேன். நிமிடங்கள் கழிந்தன. நான் அவளிடம் வழிகாட்டி ஆன்மாக்களைக் காணமுடிகிறதா என்று வினவினேன்.  

“அந்த பரிமாணத்தை இன்னும் அடையவில்லை. அங்கு செல்லும்வரை என்னால் எதுவும் கூறமுடியாது.” பதிலளித்தாள். காத்திருந்தோம். அவள் அந்த பரிமாணத்தை அடையவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு சமாதி நிலையிலிருந்த அவளை மீட்டு, நிகழ்காலத்திற்கு அழைத்துவந்தேன். 

--தொடரும்.
 

 

 

மகிழ்வான வாழ்க்கை:

பொருட்செல்வத்துக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பது உண்மை. உணவு, உடை, உறையுள் அமையப்பெற்றவர்கள் அது இல்லாதவர்களைக்காட்டிலும் சந்தோஷமாக இருப்பது உண்மை. அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்தபின், செல்வத்துக்கும், மகிழ்ச்சிக்குமான சம்பந்தம் அவ்வளவு அதிகமானதாக இல்லை. ஆராய்ச்சிகள் திருப்தி அடைந்து வாழ்பவர்களே, சந்தோஷமாக இருப்பதாக கூறுகிறது.
மகிழ்ச்சியானவர்களுக்குண்டான எட்டு முக்கிய குணங்களாக “டாக்டர். டேவிட் மெயர்” என்பவர் கீழ்க்கண்ட குணங்களைக் குறிப்பிடுகிறார்.
1.     மகிழ்ச்சியானவர்கள், தங்களின் உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியமாக இருப்பதாக நம்புகிறார்கள். தங்களை நேர்மையுள்ளவராகவும், அறிவுள்ளவராகவும் நினைக்கிறார்கள். அனைத்து இன மக்களிடமும் வேறுபாடின்றி நடப்பவர்களாக எண்ணுகிறார்கள்.
2.     எந்நிலையிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதாக எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதனால் மன அழுத்தத்தால் பாதிப்படைவதில்லை.
3.     எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எப்பொழுதும் பாதி நிரம்பிய குவளையைத்தான் காண்கிறார்கள். குவளையில் பாதி காலியாக இருக்கிறதென்று எண்ணி கவலைப்படுவதில்லை.
4.     மகிழ்ச்சி அவர்களை நிறையபேருடன் பழக வைக்கிறதா, அல்லது நிறையபேருடன் பழகுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆகமொத்தத்தில் மகிழ்ச்சியானவர்கள் நிறையபேருடன் பழகுகிறார்கள்.
5.     மகிழ்ச்சியானவர்கள் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பார்கள். மணமானவர்கள் பொதுவாக மணமாகாதவர்களைக்காட்டிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
6.     ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள். பிரதிபலன் எதிர்பாராது பணிசெய்வது அவர்களது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் ஏற்படுத்திக்கொள்வதும் அவர்களை மகிழ்ச்சியாக்குகிறது.
7.     வாழ்க்கையில் வேலை, விளையாட்டு, ஆன்மீகம், குடும்பம், நண்பர்கள், சமூகம் என்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் செலுத்துகிறார்கள். ஓய்வுக்கும், வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்குகிறார்கள்.
8.     புதுமையான விஷயங்களிலும், படைப்புத்திறனிலும் அக்கறை காட்டுகிறார்கள். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் விருப்பப்படுகிறார்கள்.
 

உடலுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. ஒன்றைச் சார்ந்தே மற்றொன்றும் திளைக்கிறது. எனவே உடலையும், உள்ளத்தையும் பேணிக்காப்போம்.
 

 

என்ன தலைப்பிடுவது? :

கீழேயுள்ள முக்கோணத்தில் ஒரு வாக்கியத்தை எழுதியிருக்கிறேன். அந்த வாக்கியத்தை, படித்துவிட்டு நீங்கள் பின்னூட்டமிடும்பொழுது அந்த வாக்கியத்தை, முக்கோணத்தில் உள்ளது போல் மூன்று வரிகளில் எழுதாமல், ஒரே வரியில் மட்டும் எழுதுங்கள். நீங்கள் எழுதி அனுப்பிய பிறகு, உங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாத அலலது தெரிந்த ஒன்றினைப்பற்றிக் கூறுகிறேன். கலவரம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய அனுமதியில்லாமல் எதனையும் வெளியிட்டுவிடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்ட விதிமுறைகளைப் படித்துவிட்டு கீழே செல்லுங்கள்.
 

 

 

 

 

என்ன தலைப்பிடுவது என்று தெரியவில்லை. அதனால், என்ன தலைப்பிடுவது என்றே தலைப்பிட்டுள்ளேன்.

 

 
 
 
 

Thursday, May 23, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 7

கேத்தரின் ஹிப்னாடிச அமர்வுக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அடுத்த அமர்வுக்கு என் கிளினிக்கு வந்தாள். நான் சென்ற வாரத்தில் அவளிடமிருந்து பெறப்பட்ட, நம்புவதற்கரிய, ஆடியோ டேப்புடன் தயாராக இருந்தேன். முற்பிறவி நினைவுகளுடன், தெய்வீக தன்மை பொருந்திய செய்திகளைக் கொண்ட கவிதைகளையும் தருபவள் என்பதால், அவளுக்கும் அந்த டேப்பைப் போட்டு காண்பிக்கலாம் என்று நினைத்தேன். இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட ஆவி நிலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவளுடைய நினைவில் இருக்காதென்பது எனக்குத் தெரியும். எனவே அவள் அந்த டேப்பைக் கவனித்தால், அவளுக்கும் விஷயங்கள் புரியும் என்று கூறினேன். ஆனால் அவளுக்கு அதனைக் கேட்பதற்கு விருப்பமில்லை. இருப்பினும் நான் சொல்வதற்காக, கேட்பதற்கு ஒத்துக்கொண்டாள். எதிர்பார்த்ததைவிட அவள் நன்கு குணமாகி இருப்பதால், அந்த டேப்பை கவனிப்பதால், அவளுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புகள் கிடையாது. அதனால் அவளுக்கு டேப்பினைக் கேட்பதற்கு எந்தவித அவசியமும் இல்லை. மேலும் அது அவளுக்கு அச்சமூட்டுவதாகவும் கூறினாள். நான் வற்புறுத்தி அவளை அந்த டேப்புகளைக் கேட்க வைத்தேன். அற்புதமான, அழகான, உற்சாகமூட்டும் தகவல்கள் அவள் வழியாகத்தான் வந்தன. அவளுடன் அதனைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சில நிமிடங்கள் மட்டும் அவள் அந்த டேப்பைக் காதுகொடுத்து கேட்டாள். அதுவும் அவள் மென்மையான குரலில் பேசிய வார்த்தைகளை மட்டும் கேட்டுவிட்டு, என்னை டேப்பை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினாள். நானும் நிறுத்திவிட்டேன். அவள் வினோதமாகவும், சங்கடமாகவும் உள்ளதாகக் கூறினாள். “இந்த தகவல்கள் உனக்காக” என்று அசரீரி ஒலித்தது என் நினைவுக்கு வந்தது.

நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று வியந்தேன். ஏனெனில், கேத்தரின் ஒவ்வொரு வாரமும், நன்றாக குணமடைந்து வருவது தெரிந்தது. ஓரிரு பிரச்சனைகளைத் தவிர அவள் முற்றிலும் குணமடைந்து விட்டாள். ஸ்டூவர்டிடம் அவளது உறவில் முன்னேற்றம் இல்லை. அவர்கள் உறவு பட்டும், படாமலுமே இருந்துகொண்டிருந்தது. மூடப்பட்ட அறைகளில் அவளுக்கு பயம் விட்டபாடில்லை. இவைகளைத்தவிர, அவள் நிலையில், முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

பொதுவாகத் தரப்படும், மனநல சிகிச்சைகள் அவளுக்குத் தரப்பட்டு, மாதக்கணக்கில் ஆகிறது. அவ்வித சிகிச்சைகள், தற்போதுள்ள நிலையில் தேவையும் இல்லை. நாங்கள் அந்த வாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி சிறிது நேரம் அளவளாவிவிட்டு, உடனே ஹிப்னடைஸ் சிகிச்சைக்குத் தாவிவிடுவோம். உண்மையில் நிகழ்ந்த பேரதிர்ச்சி நிகழ்வுகளாலோ, அல்லது தினம் தினம் அனுபவிக்கும் நெருக்கடியினாலோ மனஉளைச்சலாலோ அல்லது வேறு அனுபவங்களாலோ பாதிக்கப்பட்டிருந்த கேத்தரின் கிட்டத்தட்ட குணமாகிவிட்டாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவளிடம் காணப்பட்ட பதற்ற நிலையும், மூச்சுத்திணறலும், பயங்களும் இருந்த இடம் தெரியவில்லை. அவளிடம் இறந்துவிடுவோம் என்ற கவலையும், இறப்பைப் பற்றிய பயமும் இல்லாமல் போனது. தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்ற கவலையும் இப்போது அவளிடம் இல்லை.

கேத்தரின் போன்ற நோயாளிகளைக் குணப்படுத்த, மனோதத்துவ மருத்துவர்கள், தற்சமயம் தூக்கமாத்திரைகளையும், மனச்சோர்வுகளுக்கான மருந்துகளையும் தருகிறார்கள். இதைத் தவிர கடுமையான மனநல சிகிச்சைப் பயிற்சிகளும் தரப்படுகிறது. இப்படிப்பட்ட நோயாளிகளை குழுக்களாக இணைத்து தரப்படும் அமர்வுகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள். அதிக மனோதத்துவ நிபுணர்கள், கேத்தரின் போன்றவர்களுக்கு தோன்றும் அறிகுறிகள், உடல் சம்பந்தப்பட்டவைகள் என்று நம்புகிறார்கள். மூளையில் உள்ள ரசாயனங்களின் குறைபாடுகள் என்று கருதுகிறார்கள்.

கேத்தரினை ஹிப்னடைஸ் செய்து சமாதி நிலைக்கு கொண்டுசென்றேன். எந்தவித மருந்து மாத்திரைகளும் இல்லாமல், எந்தவித வழக்கமான ஆலோசனை சிகிச்சைகளும் இல்லாமல், எந்தவித குழு சிகிச்சையும் தரப்படாமல் கேத்தரின் குணமாகியிருக்கிறாள். மிகவும் அற்புதமாக, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கிறாள். இது பல்லைக் கடித்துக்கொண்டு நோயின் விளைவுகளைப் பொறுத்துக்கொள்வதோ, அல்லது நோயின் தன்மையை மறைத்துவைப்பதோ இல்லை. இது பயத்தினால் பீடிக்கப்பட்ட வாழ்க்கையை குணப்படுத்திய நிகழ்ச்சி. அறிகுறிகளை முற்றிலுமாக நீக்கிய நிகழ்ச்சி. என்னுடைய எதிர்பார்ப்புகளைத் தாண்டி அமைதியான, மகிழ்ச்சியான, ஒளிபொருந்திய கேத்தரினைக் காண்கிறேன்.

கேத்தரின் மீண்டும் மென்மையாக முணுமுணுக்க ஆரம்பித்தாள். “நான் ஒரு கட்டிடத்தில் நிற்கிறேன். குவிந்த மேற்கூரையைக் கொண்ட கட்டிடம். மேற்கூரை நீலம் மற்றும் பொன்னிற வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. என்னுடன் வேறுசிலரும் இருக்கிறார்கள். அவர்கள் பழமையான அங்கிகளை அணிந்திருக்கிறார்கள். . . . . . . மிகவும் பழைய அங்கிகள் . . . . . . அழுக்கான அங்கிகள். நாங்கள் இங்கு எப்படி வந்தோம் என்று புரியவில்லை. அங்கு கற்களினாலான மேடையில் ஏதோ இருக்கிறது. பொன்னிறத்திலான சிற்பம், அறையின் ஓரத்தில் இருக்கிறது. அது வருகிறது. . . . . . மிகவும் பெரியதாக இருக்கிறது. இறக்கைகளுடன் உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் கொடியதான தோற்றம் கொண்டுள்ளது. இந்த அறையின் வெப்பம் தாங்கமுடியவில்லை. மிகுந்த வெப்பம். . . . . . . . இந்த அறையில் எந்தவித திறப்பும் இல்லாததே வெப்பத்துக்குக் காரணம். நாங்கள் கிராமத்தில் உள்ள மக்களை விட்டு தூரத்தில் இருக்கவேண்டும். எங்களிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

“நீ உடல் நலமின்றி இருக்கிறாயா?” – நான்.
“ஆம். எங்களுக்கு உடல் நலமில்லை. எங்களுக்கு என்னவென்று தெரியவில்லை. ஆனால் எங்கள் தோல்கள் அழுகிக்கொண்டிருக்கின்றது. கறுத்துவிட்டது. நான் மிகவும் குளிராக உணர்கிறேன். காற்றில் ஈரமில்லை. காற்று அசையவேயில்லை. நாங்கள் கிராமத்துக்குத் திரும்பமுடியாது. இங்கேயே இருக்க வேண்டும். சிலருடைய முகங்கள் விகாரமாகிவிட்டது.” அவள் கூறுவதைக் கேட்டால் தொழுநோய்போல பயங்கரமான நோயாகத் தெரிகிறது. அவளுக்கு இதுவரை, எந்தப் பிறவியிலும் மனதைக் கவரும் வாழ்க்கை அமைந்ததாகத் தெரியவில்லை. “எவ்வளவு நாட்கள் நீ அங்கு இருக்க வேண்டும்?” – நான்.
“காலம் முழுவதும்” வருத்தமாகத் தெரிவித்தாள். “நாங்கள் இறக்கும்வரை இங்குதான் கழிக்கவேண்டும். இதனைக் குணப்படுத்த எந்த மருந்தும் கிடையாது.”
“இந்த நோயின் பெயர் உனக்குத் தெரியுமா?”
“இல்லை. சருமங்கள் காய்ந்து சுருங்கிவிடுகிறது. நான் இங்கு வந்து மூன்று வருடங்களாகிறது. இன்னும் சிலர் இப்பொழுதுதான் வந்திருக்கிறார்கள். மீள்வதற்கு வழியே கிடையாது. நாங்கள் தள்ளிவைக்கப்பட்டவர்கள். . . . . . இறப்பதற்காக.”

துர்பாக்கியமான நிலையில், குகையில் வருத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். “நாங்கள் உணவுக்காக வேட்டையாடவேண்டும். நாங்கள் வேட்டையாடும் காட்டுவிலங்கைப் பார்க்கிறேன். அதற்கு கொம்புகள் இருக்கின்றன. பழுப்பு நிறத்துடன், பெரிய கொம்புகள் உள்ள மிருகம்.”
“உங்களை யாரும் வந்து சந்திப்பார்களா?”
“இல்லை. எங்கள் அருகில் யாரும் வரமாட்டார்கள். வந்தால் அவர்களுக்கும் இந்த கொடுமையான நோய் தொற்றிக்கொள்ளும். நாங்கள் சபிக்கப்பட்டவர்கள். . . . . . . நாங்கள் ஏதோ பாவம் செய்திருக்கிறோம். அதன் பலனை அனுபவிக்கிறோம்.” கால ஓட்டத்தில் இறையியல் கொள்கைகள் அவளது பிறவிகளில் பிரதிபலிப்பது தெரிந்தது. மரணத்துக்குப் பிறகு, ஸ்தூல நிலையில் மட்டுமே எப்பொழுதும் மாறாத நம்பிக்கையும், உறுதியும் அளிக்கப்படுகிறது.

“எந்த வருடம் என்று கூறமுடிகிறதா?”
“நாங்கள் காலம் பற்றிய எண்ணங்களையே இழந்துவிட்டோம். எங்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மரணத்துக்காகக் காத்திருக்கிறோம்.”
“எதிர்காலம் குறித்து ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?” அற்புதம் நடக்காதா என்ற ஆதங்கத்துடன் கேட்டேன்.
“எந்த நம்பிக்கையும் இல்லை. நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம். கைகளை மிகவும் வலிக்கிறது. என் உடல் மிகவும் பலகீனமாக இருக்கிறது. எனக்கு வயதாகிவிட்டது. என்னால் நகரக்கூட முடியவில்லை.”
“உன்னால் நகரமுடியாவிட்டால் என்ன செய்வார்கள்?”
“வேறு குகைக்கு மாற்றி விடுவார்கள். அங்கேயே இறந்துவிடுவோம்.”
“இறந்தவர் உடல்களை என்ன செய்வார்கள்?”
“குகையின் வாசலை மூடிவிடுவார்கள்.”
“இறப்பதற்கு முன்பே எப்பொழுதாவது மூடிவிடுவார்களா?” அவளுக்கு மூடப்பட்ட தனியறையில், பயம் வருவதற்கான காரணத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்குமா என்று அறிவதற்காகக் கேட்டேன்.
“எனக்குத் தெரியாது. நான் அங்கு சென்றதில்லை. என்னுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். இங்கு மிகவும் வெப்பமாக இருக்கிறது. நான் சுவரில் சாய்ந்து படுத்திருக்கிறேன்.”
“அந்த அறை எதற்காக உள்ளது?”
“கடவுளை வழிபடுவதற்காக உள்ளது. . . . . நிறைய கடவுள்கள். மிகவும் வெப்பமாக உள்ளது.”

நான் அவளை காலத்தில் முன்னோக்கி அழைத்துவந்தேன். “நான் ஏதோ வெண்மையாகக் காண்கிறேன். ஒருவிதமான மேற்கூரை. யாரையோ நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.”
“உன்னையா?”
“தெரியவில்லை. நான் மரணத்தை வரவேற்கிறேன். என்னால் உடல்வலியைத் தாங்கமுடியவில்லை.” கேத்தரினுடைய உதடுகள் வலியில் துடித்தன. குகையின் வெப்பம் தாளமுடியாமல் அவளுக்கு இறைத்தது. நான் அவளை, இறக்கும்நாளை நோக்கி அழைத்துவந்தேன். அவளுக்கு இன்னும் மூச்சிறைத்துக்கொண்டிருந்தது.

“மூச்சுவிட சிரமமாக இருக்கிறதா?” வினவினேன்.
“ஆம், மிகவும் வெப்பமாக இருக்கிறது. . . . . . வெப்பம் . . . . . கும்மிருட்டு. என்னால் பார்க்க முடியவில்லை. . . . . . என்னால் நகரமுடியவில்லை.” தன்னந்தனியாக, நகர முடியாத நிலையில் இறந்துகொண்டிருந்தாள். குகையின் வாசல் அவள் உயிருடன் இருக்கும்பொழுதே மூடப்பட்டுவிட்டது. மிகவும் பயந்துபோய், பரிதாபத்துக்குரியவளாக இருந்தாள். அவள் மூச்சுவிடுவது சீரற்றதாகவும், வேகமாகவும் இருந்தது. வேதனையான, பரிதாபத்திற்குரிய அவளுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.

“நான் ஒளியைக் காண்கிறேன். . . . . மிதப்பதுபோல் உணர்கிறேன். மிகவும் வெளிச்சமாக உள்ளது. ஆகா! அற்புதம்!”
“இன்னும் வலி இருக்கிறதா?”
“இல்லை.” சற்றுநேர மௌனம். நான் வழிகாட்டி ஆவிகளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் அவள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டாள். “நான் வேகமாக விழுந்துகொண்டிருக்கிறேன். வேரொரு சரீரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன்.” என்னைப்போல் அவளும் வியப்புக்குள்ளானாள்.

--தொடரும்.
  


ஒரு செல்லப் பிராணியின் கதை:

கோஸ்டோரிக்கா – மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு. கோஸ்டோரிக்காவைச் சேர்ந்த மீனவர் சீட்டோ, பூச்சோ என்று இன்று அழைக்கப்படும் முதலையை, என்று நதிக்கரையில், குண்டு துளைத்து உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும்பொழுது பார்த்திருக்கிறார். அப்பொழுது அந்த முதலையின் எடை கிட்டத்தட்ட 70 கிலோ இருந்தது. எந்த உணவும் கிடைக்காமல் இறந்துவிடும் நிலையில் பரிதாபமான நிலையில் இருந்திருக்கிறது.
சீட்டோ அந்த முதலையை, தனது வீட்டின் கொல்லைப்புறத்துக்கு இழுத்துவந்து, கோழி, மீன் போன்ற உணவுகளைக் கொடுத்து மருந்திட்டு யாருக்கும் தெரியாமல் பாதுகாத்திருக்கிறார். குணமான பிறகு பூச்சோவின் எடை 450 கிலோவைத் தொட்டுவிட்டது. அதன் நீளம் ஐந்து மீட்டராக இருந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு பூச்சோ, சீட்டோவுடன் நன்கு விளையாட ஆரம்பித்துவிட்டது. முதலையை மீண்டும் ஆற்றில் சென்றுவிட்டிருக்கிறார். ஆனால் பூச்சோ, சீட்டோவைப் பின்தொடர்ந்து அவர் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தினரிடமிருந்து கால்நடை மருத்துவர் உதவியுடன் சீட்டோ இருபது வருடங்களாக பூச்சோவை வளர்த்து வந்திருக்கிறார். நாளடைவில் கோஸ்டோரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பூச்சோ, சீட்டோ கூட்டணி கவர்ந்துவிட்டது. தனது ஐம்பதாவது வயதில் பூச்சோ இயற்கையாக மரணமடைந்துவிட்டது. இன்றும் சீட்டோ தனது செல்லப்பிராணியின் கதையைப் பகிர்ந்து, முதலைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.
மனிதன் விலங்குகளிடம், மற்றும் விலங்குகளைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் எத்தனையோ?


விலங்குகளின் மீது பிரியமும், அனுதாபமும், அக்கறையும் உள்ளவர்களை கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்கள் மகிழ்விக்கும் என்று நம்புகிறேன். அப்படி எண்ணம் இல்லாதவர்களைக் கூட இந்த வீடியோக்கள் மாற்றிவிடும் என்றும் நம்புகிறேன்.


கணிதப் புதிர்:

கீழ்க்கண்ட சமன்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
8 + 12 – 20  =  10 + 15 – 25
இதில் 4 மற்றும் 5-ஐ வெளியில் எடுத்து சமன்பாட்டை கீழ்க்கண்டவாறு எழுதலாம் அல்லவா?
4  ( 2 + 3 – 5 )  =  5 ( 2 + 3 – 5)
மேலுள்ள சமன்பாட்டில் பொதுவாக உள்ள ( 2 + 3 – 5) -ஐ இரண்டு பக்கத்திலும் நீக்கிவிடுங்கள்.  அதாவது ( 2 + 3 – 5) –ஆல் இரண்டு பக்கத்திலும் வகுக்க, கீழேயுள்ள சமன்பாடு கிடைக்கிறது.
4 = 5.
கடைசியில் கிடைப்பது தவறான சமன்பாடு.
ஏன் இப்படி ஆயிற்று?
Thursday, May 16, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 6 : பகுதி - 2


கேத்தரின் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. “எனக்கு இவர்களிடம் நம்பிக்கையில்லை.”
“யாரிடம்?” - இடைமறித்தேன்.
“வழிகாட்டிகளிடம்.”
“நம்பிக்கையில்லையா?”
“எனக்கு பரிபூர்ண நம்பிக்கை கிடையாது. அதனால்தான் என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கிறது. அந்தப் பிறவியில் எனக்கு அவர்களிடம் நம்பிக்கையில்லை.அவளுடைய பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்க்கையை ஆராய்ந்து கொண்டிருந்தாள். நான் அவளிடம் அந்த வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டாளென்று வினவினேன்.

“கோபத்தையும், அடுத்தவர்மீது காட்டும் வன்மத்தையும் பற்றி அறிந்துகொண்டேன். என்னுடைய வாழ்க்கையை, என் கட்டுப்பாட்டுக்குள் அமைத்துக் கொள்ளாததுபற்றி அறிந்துகொண்டேன். என் கட்டுப்பாட்டுக்குள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பினேன். ஆனால் என்னிடம் அந்த திறமையில்லாமல் இருந்தது. நான் வழிகாட்டி ஆன்மாக்களிடம் நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும். அவர்கள் என்னை வழிநடத்தியிருப்பார்கள். ஆனால் நான் நம்பிக்கையற்று இருந்தேன். ஆரம்பத்திலிருந்தே என்வாழ்க்கை சூன்யமாக இருந்திருக்கிறது. நான் எந்த விஷயத்தையும் இணக்கமாக அணுகியதில்லை. நமக்கு நம்பிக்கை வேண்டும். . . . . . . . நம்பியிருக்க வேண்டும். நான் சந்தேகப்பட்டேன். நான் நம்பிக்கைக்குப் பதிலாக சந்தேகப்படுவதைத் தேர்வு செய்துவிட்டேன்.” நிறுத்தினாள்.

“வாழ்வில் முன்னேறுவதற்கு என்ன செய்யவேண்டும்? நீ என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்? நமது பாதைகள் ஒன்றானதா?” வினவினேன். பதில், கவித்துவமான புலமையுடன் பேசும் வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து வந்தது. வித்தியாசமான குரலொலி, ஆண்மைத்தண்மையுடைய குரல், கவித்துவமான மொழி கேத்தரினுடைய இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பதில் வந்தது.

“அடிப்படையில் அனைவரும் ஒரேவழியில்தான் சென்றாகவேண்டும். நாம் சரீர நிலையில் இருக்கும்பொழுது சில மனப்பக்குவங்களை அடையவேண்டும். சிலர் சீக்கிரத்தில் அடைந்துவிடுவார்கள். சிலருக்கு காலம் அதிகம் தேவைப்படும். அன்பு, ஈகை, விசுவாசம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை . . . . . . . நாம் அனைவரும் இவைகளைப்பற்றி நன்கு உணர்ந்திருக்கவேண்டும். சுயநலமாக நம்பிக்கையோ, அன்போ, விசுவாசமோ இல்லாமல் பொதுவான தன்மைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனை வெளிப்படுத்த ஏகப்பட்ட வழிகள் உள்ளன. ஆனால் நாம் ஒவ்வொன்றிலும், மிகவும் சிறிய அளவிலேயே முயற்சி எடுக்கிறோம்.”

கேத்தரின் அதேகுரலில் தொடர்ந்தாள். “மதங்களில் நம்பிக்கையுடைய மனிதர்கள், மற்றவர்களைவிட ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். ஏனெனில் கீழ்படிதலையும், கற்புடன் இருப்பதற்கும் உறுதி எடுத்துள்ளார்கள். எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் வாழ்க்கையில் ஓரளவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஏனையவர்கள் எப்பொழுதும் வெகுமதிகளை எதிர்பார்த்து செயல்களை செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். வினைகளை ஆற்றுவதே நமக்குக் கிடைக்கும் வெகுமதி. எதிர்பார்ப்புகள் இல்லாத, சுயநலமில்லாத செயல்களே நமக்குக் கிடைக்கும் சன்மானம்.” . . . . .
“நான் அவைகளைக் கற்றுத் தேரவில்லை.” இப்பொழுது கேத்தரின் மென்மையாக்க் கூறினாள்.

சில கணங்கள் “கற்பு” என்ற பதப்பிரயோகம் என்னைக் குழம்ப வைத்தது. எனக்கு கற்பு என்ற வார்த்தை பிரயோகம் “களங்கமற்றது”, “பரிசுத்தமானது” என்றும் பொருள்படும், என்று நினைவுக்கு வந்தது. இது உடல் சம்பந்தப்பட்ட கற்பு நிலையிலிருந்து வேறுபட்டது.

“மனம்போன போக்கில் வாழக்கூடாது” தொடந்தாள். “அளவுக்கு அதிகமாக செய்யப்படும் எந்த செயலும் . . . . . . . அளவுக்கு அதிகமாக . . . . . . உங்களுக்குப் புரியும் . . . . . . நிச்சயமாக உங்களுக்குப் புரியும்.” மீண்டும் மௌனம் தொடர்ந்தது.

“நான் முயற்சி செய்கிறேன்.” பதில் கூறினேன். நான் கேத்தரினைப் பற்றி கவனம் செலுத்த முடிவெடுத்தேன். மேல்நிலை ஆன்மா அங்கு இன்னும் இருப்பதை அறிந்திருந்தேன். “கேத்தரினுடைய அச்சத்தையும், பதற்றத்தையும் குறைப்பதற்கு நான் எப்படி உதவ முடியும்? நான் அதற்காக எடுக்கும் முயற்சிகள் சரியானவைகளா? இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமா? அல்லது ஏதேனும் குறிப்பிட்ட சிகிச்சைகளைத் தொடரவேண்டுமா? கேத்தரினுக்கு எப்படி என்னால் சிறந்த விதத்தில் உதவமுடியும்?”

மிகவும் கரகரத்த குரலில் அசரீரியாக வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து பதில் வந்தது. நான் என் நாற்காலியின் நுனிக்கு வந்தேன்.

“நீ சரியான முயற்சிகளையே எடுத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் இப்பொழுது நடப்பவைகள் உனக்காக. அவளுக்கான செயல்கள் அல்ல.” மீண்டும், கொடுக்கப்படும் தகவல்கள் கேத்தரினுக்குக் கிடையாது. பிரத்தியேகமாக எனக்காகத் தரப்படும் தகவல்கள்.

“எனக்காக?” – நான்
“ஆம். நாங்கள் கூறுவது உனக்காக.” கேத்தரினை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதில் அவளை சம்பந்தப்படுத்தாமல் பதில் வந்தது. மேலும் “நாங்கள்” என்று பண்மையில் பதில் வந்தது. “ஆம், நாங்கள் வழிகாட்டி ஆன்மாக்கள் இங்கு இருக்கிறோம்.”

“நான் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளமுடியுமா?” கேட்டவுடன் முட்டாள்தனமாக கேட்டதாக உணர்ந்தேன். “எனக்கு வழிகாட்டவேண்டும். எனக்கு அறிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் அதிகமுள்ளன.”

பதில் கவிதைபோல் வந்தது. பிறப்பையும், இறப்பையும் பற்றிய கவிதை. மென்மையான இனிய குரலில் பாடல் ஒலித்தது. வாழ்வில் பற்றற்று உணர்ந்தேன். மெய்மறந்து நின்றேன்.

“காலம் கனியும்பொழுது நீ வழிகாட்டப்படுவாய். . . . . . . காலம் கனியும்பொழுது எதற்காக இங்கு அனுப்பப்பட்டாயோ, அதற்கான செயல்களை நீ பூர்த்தி செய்யும்பொழுது உன் சரீரவாழ்வு முடிவுக்கு வரும். அதற்கு முன்பு முடிவுக்கு வராது. உனக்கு அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது . . . . . . . அதிக காலம் இருக்கிறது.”  நிம்மதியும், எதிர்பார்ப்பும் ஒரே நேரத்தில் என்னுள் உறைந்தது. எதையும் குறிப்பிடாமல் பொதுவாக பதில் கிடைத்தது எனக்கு சிறிது நிம்மதியை அளித்தது. கேத்தரின் பொறுமை இழந்தவளாகக் காணப்பட்டாள். முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“நான் வீழ்கிறேன், வீழ்கிறேன் . . . . . . என் வாழ்வினை கண்டெடுக்க முயற்சி செய்கிறேன். வீழ்கிறேன்.” பெருமூச்செறிந்தாள். வழிகாட்டி ஆன்மாக்கள் சென்றுவிட்டார்கள். ஆன்மீக ஊற்றிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த அற்புதமான செய்திகளில் மூழ்கியிருந்தேன். கிடைத்த தகவல்கள், உணர்த்தும் உண்மைகள் மறுக்க இயலாதவைகளாக உள்ளன. மரணத்துக்குப் பிறகு கிடைக்கும் ஒளி, சக்தி; அதற்குப் பிறகு கிடைக்கும் பிறவி; எப்பொழுது பிறக்கவேண்டும் எப்பொழுது இறக்கவேண்டும் என்று நாமே முடிவு செய்யும் நிலை, மேன்நிலை ஆன்மாக்களிடமிருந்து கிடைக்கும் உண்மையான வழிகாட்டுதல், வாழ்நாள் வருடங்களாக கணிக்கப்படாமல் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களாலும், நாம் நிறைவேற்றும் கடமைகளாலும், அளவிடப்படுதல், எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு, ஈகை, நம்பிக்கை, விசுவாசம் கொண்டிருத்தல் . . . . . . அனைத்து அறிவுரைகளும் எனக்காக. ஆனால் என்ன நோக்கத்துக்காக இப்படி நிகழ்கிறது? நான் எந்த கடமையை நிறைவேற்ற இங்கு அனுப்பப்பட்டேன்.

அலுவலகத்தில் எனக்கு நேர்ந்த இந்த அனுபவங்களும், கிடைக்கப்பட்ட தெளிவான தகவல்களும், என்னுடைய சிந்தனைகளிலும், குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. என்னிடம் நேர்ந்த மாற்றங்களை சிறிது சிறிதாக நான் என்னை உணர ஆரம்பித்தேன். ஒருமுறை நான் என் மகனுடன் பேஸ்பால் விளையாட்டைக் காண காரில் சென்றுகொண்டிருந்தோம், எங்கள் கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. நிலைமையை யோசிக்கும்பொழுது, நாங்கள் அனேகமாக முதல் சுற்று விளையாட்டுக்கு முன் சென்று சேர்வது முடியாததுபோல் தோன்றியது. முதல் சுற்று மட்டுமல்லாமல் முழு விளையாட்டையும் காண்பதென்பது கடினம்போல் தோன்றியது. சாதாரணமாக இந்த சூழநிலையில் நான் மிகவும் எரிச்சலடைந்து விடுவேன். பொறுமையிழப்பேன். எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லாமல் இருந்ததை என்னால் உணரமுடிந்தது. நான் பழியை எந்த கார் டிரைவர் மீதும் சுமத்தவில்லை. எனக்கு எந்தவித மனஅழுத்தமில்லாமல் இயல்பாக அமைதியாக இருந்தேன். எரிச்சலை என் மகன்மீதும் காட்டாமல், இருவரும் பேசிக்கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். நான் என் மகனுடன் ஒரு இனிமையான மாலைப்பொழுதை கழிப்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. இருவருக்கும் பிடித்த பேஸ்பால் விளையாட்டு பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். எங்களது நோக்கம் இனிமையாக பொழுதை கழிப்பதுதான். நான் மட்டும் கோபப்பட்டு இருந்திருந்தால், அன்றைய இனிய மாலைப்பொழுது, இருவருக்கும் வீணாகியிருக்கும். என்னிடம் தோன்றிய மாற்றங்களை நான் உணர ஆரம்பித்தேன்.

நான், என் மனைவி, என் குழந்தைகள் அனைவரும் இப்பிறவிக்கு முன்னமேயே சேர்ந்திருந்திருக்கிறோமா? இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ள உடன்பட்டு மீண்டும் இப்பிறவியில் இணைந்திருக்கிறோமா? நமது ஆன்மாக்களுக்கு அழிவில்லையா? எனது குடும்பத்தினர்மீது எனது ஒட்டுதல், அன்பு அதிகமானது. அவர்களது குற்றங்களும், குறைகளும் என் கண்களுக்கு மிகவும் சாதாரணமானதாகத் தோன்றியது. வாழ்க்கையில் அன்புக்கே முதலிடம். அன்பைத்தவிர மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. இதேகாரணங்களுக்காக என்னிடமுள்ள குற்றங்களையும் குறைகளையும் நான் இப்பொழுதெல்லாம் பொருட்படுத்திவதில்லை. நான் குற்றங்களற்ற, முழு நிறைவான மனிதனாவது மட்டுமே குறிக்கோள் என்று முயற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை. யாரிடமும் நன்மதிப்பு பெறுவதற்காக என்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லாமல் ஆகிப்போனது.

என் அனுபவங்களை என் மனைவி கரோலிடம் எனக்கு பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இரவு உணவுக்குப் பிறகு கேத்தரின் சிகிச்சையின்பொழுது ஏற்பட்ட அனுபவங்களையும், என்னுடைய உணர்வுகளையும் குறித்து விவாதிப்பது எங்களுக்கு வழக்கமானது. எந்த நிகழ்ச்சிகளையும், அதன் விளைவுகளையும் பகுத்தறிவு கொண்டு நோக்குவதில் கரோல் சிறந்தவள். நான் கேத்தரினின் சிகிச்சை அனுபவங்களை அறிவியல் முறைப்படி நிரூபிக்க விரும்புவதை, கரோல் நன்கு அறிவாள். இத்தருணங்களில் பாரபட்சமின்றி உணர்வுபூர்வமாக நோக்காமல், அறிவு பூர்வமாக சிந்திப்பதற்கு அவள் உதவுவாள். வாழ்வின் மிக உன்னதமான உண்மைகளை, தத்துவங்களை கேத்தரின் வெளிப்படுத்தியதற்குத் தக்க சான்றுகள் கிடைத்தன. கரோல் எனது எண்ணங்களையும், மகிழ்ச்சியையும் உணர்ந்து பகிர்ந்து கொண்டாள்.

--தொடரும்.


 விதி வலியது:

மனிதன் முதன்முதலில் நிலவில் கால் பதித்தநாள் ஜுன் இருபதாம்தேதி, வருடம் 1969. முதலில் நிலவில் கால் பதித்த மனிதன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவதாக கால் பதித்த மனிதன் யாரென்று
அநேகருக்கு தெரியாது. இரண்டாவதாக கால் பதித்தவரின் பெயர் “பஸ் ஆல்டிரின்”.

உண்மையில் நாசா-வின் திட்டப்படி பஸ் ஆல்டிரின்-தான் நிலவில் முதன்முதலில் கால் பதித்திருக்க வேண்டியவர். பஸ் ஆல்டிரின் பதவியிலும், அனுபவத்திலும், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க்-ஐவிட மேல்படியில் இருந்ததவர். நாசா-வின் திட்டப்படி அவர்தான், முதலில் விண்கலத்தைவிட்டு வெளியேறி நிலவில் கால் பதித்து சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க வேண்டியவர்.

ஆனால் விதி வேறுவிதமாக எழுதிவைத்துவிட்டது. விண்கலத்தில் பஸ் ஆல்டிரின்-ம், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க்-ம் அமர்ந்திருந்தவிதத்தால், முதலில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் விண்கலத்தைவிட்டு வெளியேற வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது. முதலில் விண்கலத்தைவிட்டு வெளியேறிய நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், முதலில் நிலவில் கால் பதித்து, சரித்திரத்தில் இடம் பிடித்தார். பஸ் ஆல்டிரின் என்ற பெயர் மக்கள் நினைவில் இருப்பதற்கு பதிலாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் என்ற பெயர் மக்கள் நினைவில் நின்றுவிட்டது.

கவிச்சக்கரவர்த்தியின் வார்த்தைகள்:

இராமன் காட்டுக்கு செல்வதையறிந்த இலக்குவனன் கோபத்துடன்  வருகிறான். இலக்குவனை இராமன் அமைதிப்படுத்துகிறான்.

நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!"

கவியரசர் கண்ணதாசனின் வழியாக:

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை.
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா?
பறவைகளே பதில் சொல்லுங்கள்!
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்;
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா!

நிலவில் மனிதன் கால் பதித்தது கட்டுக்கதை என்று நிரூபணத்துடன் கூறும் அமெரிக்கர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். அதைப்பற்றி வேறொரு பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.


கணிதப் புதிர்:

மூன்று நண்பர்கள் ஹோட்டலில் ஒரே அறையில் வாடகைக்கு, ஒரு நாள் தங்கினார்கள். அறையின் வாடகை முப்பது ரூபாய். மறுநாள் ஹோட்டல் மேனேஜர் அறை வாடகை இருபத்தைந்து மட்டுமே என்று கூறி, ஐந்து ரூபாயை ஹோட்டல் சிப்பந்தியிடம் கொடுத்து, திருப்பிக் கொடுத்துவிடுமாறு கூறினார். சிப்பந்தி ஐந்து ரூபாயை அவர்களிடம் திருப்பிக் கொடுத்தார். நண்பர்கள் தலைக்கு ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டு, சிப்பந்திக்கு மீதி இரண்டு ரூபாயை டிப்ஸ் ஆகக் கொடுத்துவிட்டனர்.

நண்பர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் திருப்பி எடுத்துக்கொண்டதால், ஆளுக்கு ஒன்பது ரூபாய் ஹோட்டல் செலவாக செய்திருக்கின்றனர். அது மொத்தமாக, மூன்று ஒன்பது சேர்ந்து இருபத்தேழு ரூபாய் ஆகிறது. இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கின்றனர். அதையும் சேர்த்து இருபத்தொன்பது ரூபாய் வருகிறது. ஆனால் அவர்கள், ஆரம்பத்தில் கொடுத்தது முப்பது ரூபாய். எனவே பாக்கி ஒரு ரூபாய் எங்கே மறைந்தது?