பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Wednesday, July 2, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 11



ஏக்கம் ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்ட பிறகு, அதனை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை, 2002-ல் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்பவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அத்தகைய நபர்கள் 266 பேர் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்க்கவோ, கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கவோ என்று ஏதோ ஒரு காரணத்தைக்கொண்டு அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், அவர்கள் உடற்பயிற்சியினை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்ததற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. அவர்களுக்கு உடற்பயிற்சி ஒரு பழக்கமாகத் தொடர்வது, வெகுமதிக்கான ஏக்கத்தைத் தீர்க்கவே அவர்கள் உடற்பயிற்சியைத் தொடர்வது தெரியவந்தது.


உடற்பயிற்சி செய்பவர்களில் ஒரு குழுவினரில் 92 சதவிகிதத்தினர் உடற்பயிற்சி அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகக் கூறினர். அந்தப் புத்துணர்ச்சிக்கு அவர்கள் அடிமையானதாகத் தெரிந்தது. உடற்பயிற்சி அவர்கள் உடலில் “என்டோர்பின்” என்ற மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள் மற்றும் மூளை சம்பந்தமான வேதிப்பொருள்களும் சுரந்ததற்கு ஓரளவுக்கு அடிமையானது தெரிந்த்து. மற்றுமொரு குழுவில் 67 சதவிகிதத்தினர், உடற்பயிற்சி செய்வதால் எதையோ சாதித்ததுபோன்ற உணர்வினை அடைவதாகக் கூறினர். அந்த சாதனையை வெற்றியை எண்ணி அவர்கள் ஏங்குவது தெரிந்தது. அந்த வெற்றியான வெகுமதி கிடைப்பதும் அவர்களிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


உண்மையில் ஒருவர் காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால், அதற்காக அவர் ஒரு எளிமையான துப்பு ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக உடற்பயிற்சி ஆடைகள், காலணிகள் ஆகியவற்றைக் காலையில் எழுந்தவுடன் கண்களில் படும் வண்ணம் வைக்கலாம். அடுத்தபடியாக உறுதியான வெகுமதியும் கிடைக்கவேண்டும். குறிப்பிட்ட தொலைவு ஓடினால் கிடைக்கும் மனமகிழ்ச்சி, உடற்பயிற்சியின் பொழுது கிடைக்கும் என்டோர்பின் அதிகரிப்பு, ஒரு காரியத்தை செய்துமுடித்தோம் என்ற திருப்தி ஆகியவைகளைக் குறிப்பிடலாம். ஆனால் வெறும் துப்பு மற்றும் வெகுமதி மட்டுமே ஒரு பழக்கத்தை உறுதி செய்வதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்தப் பழக்கத்தினால் கிடைக்கும் வெகுமதிக்காக மூளையில் ஏக்கம் தோற்றுவிக்கப்படும்வரை பழக்கம் ஒருவரை ஆட்கொண்டுவிட்டது என்று கூறமுடியாது. துப்பு, வெகுமதியைத்தவிர, வெகுமதி பெறவேண்டும் என்ற ஏக்கமும் மூளையில் இடம்பெறவேண்டும்.


எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனையைக் கூற விரும்புகிறேன்.” மூளை சம்பந்தமான விஞ்ஞானி உல்ஃப்ரேம் ஸ்கட்ஸ்-இடம் கூறினேன். “எனக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது. நான் மாலை வீடு திரும்பியவுடன் அவனுக்கு உணவை ஊட்டுவேன். அப்பொழுது என்னையுமறியாமலேயே நானும் அதனை பகிர்ந்துகொண்டேன். நாளடைவில் அது எனக்கு பழக்கமாகிவிட்டது.” என்றேன்.


ஸ்கட்ஸ் “ஆமாம். அனைவரும் செய்யக்கூடிய காரியம்தான். நாம் அனைவரும் குரங்குகளைப்போலத்தான் செயல்படுகிறோம். வறுத்த கோழியையோ, வறுத்த உருளைக்கிழங்கையோ பார்த்தால் பசியில்லாவிட்டாலும்கூட அதனை உண்ண நினைக்கிறோம். நமது மூளை உண்ணும் மகிழ்ச்சிக்கு ஏங்குகிறது. நம்மால் நம்மைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகிறோம். அதை சாப்பிட்டவுடன் நமது ஏக்கம் தணிகிறது. சாப்பிட்ட மகிழ்ச்சியால் திருப்தியடைகிறோம். நினைத்துப் பார்த்தால் நம்மீதே வெறுப்பாக உள்ளது. ஆனால் பழக்கதோஷம். பழக்கம் இப்படித்தான் வேலை செய்கிறது.” என்று பதில் கூறினார்.


“இருந்தாலும் நாம் பழக்கத்துக்கு நன்றிதான் கூறவேண்டும். அதே வகையில் நாம் பழக்கம் காரணமாக கடினமாக உழைக்கவும் செய்கிறேன். என் உழைப்பால் பெருமையடைகிறேன். உடற்பயிற்சி செய்வதிலும் சாதித்த எண்ணம் தோன்றி அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நல்ல பழக்கங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.” என்று ஸ்கட்ஸ் தொடர்ந்து கூறினார்.


வீடு முழுவதும் பூனையைக் கொண்டிருந்த பெண்மணியிடம் ஃபிப்ரீஸ் விற்க முனைந்து, பேட்டி எடுத்தது தோல்வியடைந்ததும் P&G-ன் டிரேக் ஸ்டிம்சன் குழுவினர், எந்த வகையிலாவது தங்களுக்கு உதவி கிடைக்குமா என்று வெளியிடங்களில் உதவிபெற முயற்சித்தனர். உல்ஃப்ரேம் ஸ்கட்ஸ் போன்றவர்களின் ஆராய்ச்சியிலிருந்து ஏதேனும் வழி கிடைக்குமா என்றும் முயற்சித்தனர். ஹாவர்ட் வர்த்தகத் துறை பேராசிரியர்களிடம் தங்களது விளம்பரங்களை சமர்ப்பித்து உதவியை வேண்டினர். நுகர்வாளர்களிடம் தொடர்ந்து பேட்டி எடுத்து அவர்களிடம் ஃபிப்ரீஸை விற்பதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.

ஒரு நாள் ஸ்காட்டேல் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் வீட்டுக்குச் சென்றனர். அவர் தனது நாற்பதுகளில் இருந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். அவர் வீடு நன்கு தூய்மையாக பராமரிக்கப்பட்டு இருந்தது. ஆச்சரியப்படும் விதமாக, அந்தப் பெண்மணி ஃபிப்ரீஸ் உபயோகிப்பதை மிகவும் விரும்புவதாகக் கூறினார்.


“நான் தினமும் ஃபிப்ரீஸ் உபயோகிக்கிறேன்.” என்றார்.
“தினமும் உபயோகிக்கிறீர்களா?” அந்தப் பெண்மணியின் வீட்டில் எந்தவிதமான வளர்ப்புப் பிராணிகளும் இல்லை. வீட்டில் எந்த துர்நாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. புகைபிடிப்பவர்கள்கூட கிடையாது.
“எந்த துர்நாற்றத்தை நீக்குவதற்காக ஃபிப்ரீஸ் உபயோகிக்கிறீர்கள்?” குழுவினர் வியப்புடன் கேட்டனர்.
“எந்த துர்நாற்றத்தை போக்கவும் நான் அதனை உபயோகிக்கவில்லை. எப்பொழுதும்போல் தினமும் வீட்டை சுத்தம் செய்வேன். சுத்தம் செய்த பிறகு அங்கங்கே சுத்தம் செய்த இடத்தில் ஃபிப்ரீஸை ஸ்பிரே செய்வேன். இறுதியாக வேலை முடிந்ததும், அந்த மணம் வீடு சுத்தமாக இருக்கும் திருப்தியை அளிக்கிறது.” என்று அவர் பதிலளித்தார்.


அவர் வீட்டைச் சுத்தம் செய்யும்பொழுது அந்த குழுவினர், அதனைப் பார்ப்பதற்கு வேண்டுகோள் விடுத்தனர். அந்த பெண் படுக்கையறையில் தலையணை உறை, பெட்ஷீட்டுகளை மாற்றினார். பின்பு படுக்கையின்மீது ஃபிப்ரீஸை உபயோகப்படுத்தினார். ஹாலிலும் பொருட்களைத் துடைத்துவிட்டு வேக்கும் செய்தபிறகு, கார்பெட்டுகள் மீது அவர் ஃபிப்ரீஸை உபயோகித்தார். சுத்தம் செய்த இடங்களில் ஃபிப்ரீஸ் மணத்தது. “எவ்வளவு இனிமையாக இருக்கிறது, பார்த்தீர்களா?” என்றார். சுத்தம் செய்தபிறகு ஸ்பிரே செய்வது, ஒரு சிறிய கொண்டாட்டம்போல சந்தோஷமாக உள்ளது. “ஒரு பெரிய வேலையை முடித்த மகிழ்ச்சி உள்ளது.” அந்த பெண்மணி ஃபிப்ரீஸை உபயோகிக்கும் விதத்தைப் பார்த்தால், இரண்டு வாரங்களுக்கு ஒரு ஃபிப்ரீஸ் பாட்டிலை தீர்த்துவிடுவார் என்று ஸ்டிம்சன் எண்ணினார்.


ஆயிரக்கணக்கானோர் வீடுகளைச் சுத்தம் செய்யும் வீடியோக்களை P&G சேர்த்துவைத்திருந்தது. P&G-ல் சின்சினாட்டி நகரில், அந்த வீடியோக்களை பார்த்து ஆராய்வதே பலருடைய வேலையாக இருந்தது. மறுநாள் P&G-ல் ஃபிப்ரீஸ் சம்பந்தமான ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கான்ஃபரன்ஸ் அறைக்கு வருமாறு ஒரு ஆராய்ச்சியாளரால் அழைக்கப்பட்டனர்.  


அனைவரும் வந்ததும் அழைத்தவர், அவர்களிடம் ஒரு வீடியோவைக் காண்பித்தார். அதில் இருபத்தாறு வயதான, மூன்று குழந்தைகளுடைய ஒரு பெண்மணி ஒரு படுக்கையறையைச் சுத்தம் செய்தார். சுத்தம் செய்து, படுக்கை விரிப்புகளை மாற்றி முடித்ததும், ஒரு கணம் நின்று அந்த அறையை சுற்றிலும் நோக்கினார். பிறகு ஒரு புன்னகை புரிந்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினார்.



“அதைக் கவனித்தீர்களா?” அழைத்த ஆராய்ச்சியாளர் மிகுந்த எதிர்பார்ப்பு உணர்ச்சியுடன் கேட்டார். தொடர்ந்து, அவர் இன்னும் ஒரு வீடியோவைக் காண்பித்தார். அதிலும் ஒரு பெண்மணி படுக்கையறையை சுத்தம் செய்துவிட்டு, படுக்கை விரிப்பினை மாற்றி, தலையணைகளை சரிபடுத்தி முடித்தார். முடித்ததும், அறையைச் சுற்றி நோக்கி புன்னகை புரிந்தார். “மீண்டும் அதுதான் நடக்கிறது.” என்று அழைத்த ஆராய்ச்சியாளர் கூறினார். அடுத்த வீடியோவில் ஒரு பெண் துணிகளை மடித்து வைத்துவிட்டு, சமையலறையைத் துடைத்தார். வேலை முடிந்ததும், அப்பாடா என்று சோம்பல் முறித்தார்.


ஆராய்ச்சியாளர் தனது குழுவினரை நோக்கினார். “வீடியோவில் வந்த அனைவரும் வேலை முடிந்ததும், ஒன்று சந்தோஷம் அடைகிறார்கள் அல்லது தங்களை ஆசுவாசம் செய்துகொள்கிறார்கள். அதனைக் கவனித்தீர்களா?” என்றார். “நாமும் இந்த வழியில் முயற்சி செய்ய முடியும். ஃபிப்ரீஸை நிகழ்வின் ஆரம்பத்தில் உபயோகிக்காமல், இறுதியில் உபயோகித்தால் என்ன தவறு? இறுதியில் உபயோகித்தாலும் இன்னும் சுத்தமாகத்தானே ஆகப்போகிறது? இறுதியில் அது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கட்டுமே?” என்றார்.




-தொடரும்


தாய்லாந்தில் உள்ள ஒரு வித்தியாசமான சந்தை :











அதிர்ச்சியளிக்கும் ஒரு காணொளி :








5 comments:

  1. ஒவ்வொரு நுகர்வோர் பொருளையும் (consumer products) விற்பனையிலும் எத்தனை விதமான ஆய்வுகள் உள்ளன என்பது வியப்பை அளிக்கிறது. அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. தேவையில்லாத பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டி, அதனை வாங்குவதற்காக நுகர்வோர்களும் அதிக நேரம் வேலை செய்து சம்பாதிப்பது என்று இது Vicious cycle ஒரு தான்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete



  2. ஒரு பொருளை நுகர்வோர்கள் உபயோகிக்க அதை தயாரிப்போர் எவ்வளவு முயற்சி எடுத்து சந்தைப்படுத்தி பழக்கங்களுக்கு நுகர்வோரை அடிமையாக்குகிறார்கள்
    என்பதை அறிய வியப்பாய் இருக்கிறது. நாம் வாங்கும் பொருளுக்குப் பின்னால் இத்தனை ஆராய்ச்சியா?

    இரண்டு காணொளியையும் பார்க்க இயலவில்லை. திரும்ப பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.

      ஆமாம். இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது, “தேவைப்படாத குப்பைகளை வீட்டுக் கூடத்தில் வைத்துக்கொண்டு விற்கிறார்கள் பார். இதையும் வாங்குவதற்கு மக்களும் பறக்கிறார்களே” என்று ஒரு பெரியவர் கூறியது நினைவுக்கு வருகிறது.

      நேரம் கிடைக்கும் பொழுது காணொளிகளைக் காணுங்கள்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

    2. இன்றுதான் அந்த இரண்டு காணொளிகளையும் பார்க்க முடிந்தது. ஒன்று ஆச்சரியத்தையும் மற்றொன்று அதிர்ச்சியையும் கொடுத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

      Delete