பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, March 28, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 3


அத்தியாயம் – 3

ஒரு வாரத்திற்குப் பிறகு கேத்தரின் மீண்டும் ஹிப்னடைஸ் சிகிச்சைக்கு என் கிளினிக்கு வந்தாள். அவள் எப்பொழுதையும் விட மிகுந்த அழகுடனும் தேஜஸுடனும் காணப்பட்டாள். அவளிடம் இதுவரை இருந்த, தண்ணீரில் மூழ்கும் பயம் மறைந்துவிட்டது என்று மிக மகிழ்ச்சியுடன் கூறினாள். ஆனால் மூச்சுத்திணறல் பயம் முற்றிலுமாக குறையவில்லை. பாலம் உடைந்து மூழ்கும் கனவுத் தொல்லை இல்லாமல், நன்றாக உறங்க முடிகிறது என்றும் கூறினாள். அவளுக்கு முற்பிறவி விவரங்கள் நினைவில் இருந்தாலும், அவள் இதுவரை அந்த விவரங்களை ஓரளவுக்கு மேல் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை. 

முற்பிறவி வாழ்க்கை, மறுபிறவி என்பன அவள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு இருந்தது. இருந்தாலும் நடந்தவை தெளிவாக அவள் ஞாபகத்தில் இருந்தது. காட்சிகள், ஒலிகள், மணங்கள் எல்லாம் இப்போது நடந்ததுபோல் உணர்ந்தாள். அவள் உண்மையில் அங்கு இருந்ததை உணர்ந்தாள். அவளுக்கு அதில் சந்தேகமில்லை. அந்த அனுபவம் அவளைத் தன்னை மறந்து, அந்த அனுபவத்தில் மூழ்கடிக்கச் செய்தது. ஆனால் அவள் இது எப்படி தன் வளர்ப்பு முறைக்கும், நம்பிக்கைக்கும் பொருந்தும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தாள். 

கொலம்பியாவில் என் பட்டப்படிப்பு முதல் வருட பாடப்புத்தகத்தில், மதங்களை ஒப்பிடும் கோர்ஸ் புத்தகத்தை புரட்டி தேடிப்பார்த்தேன். பழைய, புதிய சாசனங்களில் (old and new testaments) நான் எதிர்பார்த்தது போலவே மறுபிறவி குறிப்புகள் இருந்தன. கி.பி. 325 ஆம் வருடத்தில் கான்ஸ்டடைன் என்னும் பெரும் ரோம பேரரசர், அவர் அம்மா ஹெலனா துணையுடன் புதிய சாசனத்தில் மறுபிறவி பற்றிய குறிப்புகளை நீக்கிவிட்டார். கி.பி 553 ல் நடைபெற்ற, கான்ஸ்டன்டினோபில் இரண்டாம் குழு (second council of Constantinople) சந்திப்பில் இதை உறுதிப்படுத்தினார்கள். மறுபிறவி, மதங்களுக்கு எதிரான கொள்கை என அறிவித்தார்கள். மனிதன் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு, அதிக நேரம் எடுத்துக்கொண்டால், சர்ச்சுகளின் அதிகாரம் குறைந்துவிட சாத்தியம் இருப்பதாக, அவர்கள் கருதியது வெளிப்படையாக தெரிகிறது. ஆனாலும் ஆரம்பக்காலங்களில், இந்தக் குறிப்புகள் இருந்தன. சர்ச்சு பாதிரியார்களும் மறுபிறவி தத்துவத்தை ஒத்துக்கொண்டார்கள். அலெக்ஸான்ரியாவின் கிளமென்ட் (Clement of Alexandria, Oregen) அருட்தொண்டர் ஜெரொம் (saint Jerome) வாழ்ந்த காலக்கட்டத்தில், அவரும், மற்றும் பலரும், தமக்கு முற்பிறவி இருந்ததையும், மீண்டும் பிறப்போம் என்றும் நம்பினார்கள் 

நான் இதுவரை மறுபிறவியை நம்பியதில்லை. உண்மையில், நான் அதைப்பற்றி சிந்தித்தது கூடக் கிடையாது. என்னுடைய இளமைக்காலத்தில் ஆன்மாவிற்கு அழிவு கிடையாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அப்பொழுது நான் அதனை நம்பியதில்லை 

எங்கள் குடும்பத்தில் நான்கு குழந்தைகள். நான் மூத்தவன். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மூன்று வருட இடைவெளி இருந்தது. நாங்கள் கட்டுப்பாடான யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நியூஜெர்சியில், கடற்கரை அருகில் ரெட்பேங்க் என்ற இடத்தில் வசித்து வந்தோம். குடும்பத்தில் பெரியவனாக இருந்ததால், எனக்கு பொறுப்பு அதிகமாக இருந்தது. எங்கள் தந்தை மதப்பற்று உடையவர். மத சம்பந்தமான காரியங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். குழந்தைகள் கல்வியில் சிறப்பாக இருப்பது அவருக்கு மிகவும் பெருமை அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. வீட்டில் பிரச்சனைகள் எதுவும் வந்தால், சமாதானம் செய்யும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவார். இதனால் எனது இளமைப்பருவம் மிகவும் பொறுப்பு மிக்கதாகவும், கடினமானதாகவும் இருந்தது. என்னுடைய இளமைப்பருவ அனுபவங்கள் மருத்துவர் தொழிலுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இருந்தபோதிலும் இளமைப்பருவத்தில் சுமைகள் குறைவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இளமைக்கால அனுபவங்களால், மிகவும் கெடுபிடியான, பொறுப்புகளை சுமக்கக் கூடிய இளைஞனாக உருவானேன்.  

எனது தாய் அன்பே உருவானவர். தந்தையைவிட மிகவும் சுலபமாக பழகக்கூடியவர். அவர் தியாகம், குற்ற உணர்ச்சி, சங்கடமான நிலை, பெருமை போன்ற எங்கள் உணர்வுகளை உபயோகப்படுத்தி வேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்ளும் திறமை படைத்தவர். அவருடைய அன்பும், அரவணைப்பும் எங்களுக்கு எப்பொழுதும் இருந்தது. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார்.  

எங்கள் தந்தை தொழிற்சாலைகளுக்காகப் புகைப்படங்கள் எடுக்கும் பணியில் இருந்தார். உணவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருந்தாலும், எங்கள் குடும்பத்தில் பணப்பற்றாக்குறை இருந்தது. எனக்கு ஒன்பது வயதிருக்கும்போது என் தம்பி பீட்டர் பிறந்தான். ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பம் இரண்டு அறை அப்பார்ட்மெண்டில், பகிர்ந்து வாழவேண்டிய அவசியம் இருந்தது.  

எங்கள் சிறிய வீட்டில் எப்பொழுதும் சத்தமாக இருக்கும். அதிலிருந்து தப்பிக்க நான் புத்தகங்களுக்குள் மூழ்கி விடுவேன். நான் பேஸ்பால் விளையாடாத நேரங்களைத் தவிர ஏதாவது படித்துக்கொண்டே இருப்பேன். கல்வி மட்டுமே நல்வாழ்வுக்கு வழி என்பதும் எனக்கு தெரிந்திருந்தது. நான் என்னுடைய வகுப்பில் எப்பொழுதும் முதலாவது அல்லது இரண்டாவது மாணவனாகவே இருந்தேன்.  

நான் துடிப்பு மிக்க இளைஞனாக இருந்தபோது எனக்கு கொலம்பியா யுனிவர்சிட்டியில் உதவித் தொகையுடன் இடம் கிடைத்தது. தேர்வுகளில் சுலபமாக தொடர்ந்து நல்ல வெற்றி கிடைத்தது. நான் கெமிஸ்ட்ட்ரியை முக்கிய பாடமாக எடுத்து, பட்டப்படிப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றேன். எனக்கு அறிவியலிலும், மனித மனதினைப்பற்றியும் ஆர்வம் இருந்ததால், தொடர்ந்து மனநலவியல் படிக்க முடிவு செய்தேன். மருத்துவத்துறையில் படித்தால் பிறமனிதர்களிடம் அன்பு செலுத்தி உதவி செய்ய முடியுமென்றும் நினைத்தேன். அந்தக்காலகட்டத்தில் “கேட்ஸ்கிள் மௌன்டன்” ஹோட்டலில் வேலையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு “கரோல்” ஒரு கோடை விடுமுறைக்கு விருந்தினராக வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே நாங்கள் மிகவும் நெருக்கமானவர்களாக உணர்ந்தோம். மீண்டும் தொடர்புகொண்டு காதலில் வீழ்ந்தோம். கொலம்பியா யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது எங்கள் திருமணம் நிச்சயமானது. கரோல் மிகவும் அழகும், அறிவுமுடைய பெண். என் வாழ்க்கை மிகவும் திட்டமிட்டது போல், அனைத்தும் தானாகவே நன்றாக நடந்தது. இனிமையாக வாழும் எந்த இளைஞனும், பிறவி, மறுபிறவி குறித்து யோசித்துக்கூடப் பார்க்கமாட்டான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. நான் ஒரு ஆராய்ச்சியாளன். ஆதலால் எந்தக் கொள்கைக்கும் அறிவுபூர்வமாக ஆதாரங்களைத் தேடினேன்; உணர்வுபூர்வமான விளக்கங்களை ஏற்க மறுத்தேன்.  

யேல் யுனிவர்சிட்டியில் மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தது, அறிவியல் ஆதாரங்களை தேடும் என்னுடைய குணத்தை இன்னும் உறுதியாக்கியது. மனிதமூளையில்வேதியியல், செய்திகள் அனுப்புவதில் அந்த வேதியியல் மூலக்கூறுகளின் பங்குகள் பற்றியும், மருத்துவப்பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பித்தேன். 

மனநல தத்துவங்களையும், மூளையில் வேதியியலின் பங்குகளையும் இணைந்த அறிவியல் என்ற புதிய வளரும் துறையில் நானும் இணைந்தேன். நாடு தழுவிய அளவில் நடந்த மாநாட்டுகளில் அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தேன். இந்த புதிய துறையில் குறிப்பிடத்தக்க ஒருவனாக பெயர் வாங்கினேன். 

நான் மிகவும் கடுமையான, பிடிவாதக் குணத்துடனும், கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவனாகவும் இருந்தேன். நல்ல மருத்துவராகப் பணியாற்ற மேற்கூறிய பண்புகள் மிகவும் அவசியம். என்னுடைய கிளினிக்கு வரும் எந்த நோயாளியையும் குணப்படுத்த தேவையான அனுபவம் எனக்கு வந்துவிட்டதாக நான் நம்பினேன். 

கேத்தரின் வந்தாள்; 1863-ல் வசித்த அரோண்டாவாக மாறினாள். அல்லது அரோண்டா, கேத்தரினாக வந்தாளா? இப்போது மீண்டும் கேத்தரின். ஒரே குழப்பம். நான் இதுவரை கேத்தரினை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்ததில்லை. 

நான் கேத்தரின் மீண்டும் ஹிப்னடைஸ் சிகிச்சைக்கு சம்மதம் அளிப்பாளா என்று யோசித்தேன். ஆனால் கேத்தரின் மிகவும் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டு விரைவில் சமாதி நிலைக்கு சென்று விட்டாள்.  

“நான் பூச்செண்டுகளை தண்ணீரில் எறிந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு சடங்கு. என் தலைமுடி மஞ்சள் நிறமாக உள்ளது. முடியை அழகாக பின்னியிருக்கிறேன். பிரௌன் கலர் உடையணிந்திருக்கிறேன். செருப்பு அணிந்திருக்கிறேன். அரச மாளிகையில் யாரோ இறந்துவிட்டார்கள். . . . . . அம்மா?. . . . . . நான் அரசமாளிகையில் உணவு சம்பந்தமாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். முப்பது நாட்களாக உடலை உப்பு நீரில் ஊற வைத்திருக்கிறோம். உடலை காய வைத்து, உள்உறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னால் உடலில் இருந்து வரும் துர்நாற்றத்தை உணர முடிகிறது.” கேத்தரின் தன்னிச்சையாக அரோண்டாவுடைய வாழ்க்கை நிலைக்கு சென்று விட்டாள். ஆனால் வேறு வயதுக்கு சென்று விட்டாள். இறப்புக்குப் பிறகு உடலைப் பதப்படுத்தும் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.
 
“இன்னொரு கட்டிடத்தில் நிறைய உடல்களைப் பார்க்கிறேன். உடல்களை துணி போன்ற பொருளைக் கொண்டு சுற்றி வைக்கிறோம். ஆன்மா தொடர்ந்து செல்லவேண்டும். அதனால் இப்பிறவியிலிருந்து உயர்ந்தநிலை உலகுக்கு செல்வதற்கு தேவைப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு தயாராகவேண்டும்.” அவள் கூறுவது எகிப்தில் மம்மிகள் மற்றும் இறப்புக்குப் பிறகு உள்ள நிலை போன்று உள்ளது. இங்குள்ள மதங்களில் உள்ள கொள்கைகள் போல் அங்கு கிடையாது. அந்த மதக் கொள்கையின்படி, இறந்த பிறகு அடுத்த உலகுக்கு பொருட்களை எடுத்து செல்ல முடியுமென்ற நம்பிக்கை இருந்தது.  

கேத்தரின் அரோண்டாவின் பிறவியிலிருந்து வெளிவந்து அமைதியானாள். சிறிது நேரத்திற்குப் பிறகு இன்னும் பழைய காலகட்டத்துக்குச் சென்றுவிட்டாள்.  

“குகையில், எங்கும் ஐஸ் கத்திகள் போன்று, தலைகீழாகத் தொங்கிக்கொண்டு இருக்கின்றன; பாறைகள் உள்ளன.” மிகவும் இருட்டான இடத்தை விவரித்தாள். அவள் துன்பமாக உள்ளது தெரிந்தது. “நான் மிகவும் அழுக்காக இருக்கிறேன், அசிங்கமாக இருக்கிறேன்” பிறகு கேத்தரின் இன்னொரு பிறவிக்கு சென்றுவிட்டாள்.  

“இங்கு நிறைய கட்டிடங்கள் உள்ளன. கல்சக்கரம் உள்ள வண்டி உள்ளது. என் தலைமுடி கருப்பாக உள்ளது. அதில் ஒரு ரிப்பன் கட்டி இருக்கிறேன். வண்டியில் வைக்கோல் உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் தந்தை அருகில் இருக்கிறார். என்னை அணைத்துக் கொள்கிறார். அது. . . . . . எட்வர்ட் {என்னை பார்க்குமாறு வற்புறுத்திய டாக்டர்} நாங்கள் மரங்கள் அதிகமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் வசிக்கிறோம். அத்தி, ஆலிவ் மரங்கள் இருக்கின்றன. காகிதத்தில் மக்கள் எழுதுகிறார்கள். எழுத்துகள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. நூலகத்திற்காக நாள் முழுவதும் மக்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நிலம் தரிசாக இருக்கிறது. வருடம் கி.மு 1536. என் தந்தையின் பெயர் பெர்சஸ்.” 

வருடம் சரியாக ஒத்து வரவில்லை. சென்ற வாரம் ஹிப்னடஸ் செய்தபோது கூறிய பிறவியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். “என் தந்தைக்கு உங்களை தெரியும். நீங்களும் அவரும் விவசாயம், சட்டம், அரசாங்கம் பற்றி உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஞானம் அதிகம் என்றும், நீங்கள் சொல்வதை நான் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தந்தை கூறுகிறார்.” நான் சிறிது முன்னோக்கி வருமாறு கூறினேன். “தந்தை இருட்டறையில் படுத்திருக்கிறார். அவருக்கு மிகவும் வயதாகி விட்டது; உடல் நிலை சரியில்லை. மிகவும் குளிருகிறது. நான் தனிமையை உணர்கிறேன்.” அவள் தான் இறக்கும் வரை சென்றாள். “எனக்கு வயதாகிவிட்டது, உடல் தளர்ந்து விட்டது. என் மகள் அருகில் இருக்கிறாள். கணவர் இறந்து விட்டார். என் மகளின் கணவர் மற்றும் குழந்தைகள் நிற்கிறார்கள். என்னைச் சுற்றி கூட்டமாக நிற்கிறார்கள்.”  

அவள் மரணம் அந்த முறை மிகவும் அமைதியான மரணமாக இருந்தது. அவள் மிதப்பதாக கூறினாள். மிதக்கிறாள்? இது எனக்கு “டாக்டர் ரெய்மண்ட் மூடி” கூறிய, சாவுக்கு நெருங்கிய நிலையில் உள்ளவர்கள் அனுபவங்களை நினைவூட்டியது. அவருடைய, அத்தகைய நோயாளிகளும், மிதப்பதாக உணர்ந்தார்கள். பிறகு உடலுக்குள் திரும்பி வருவதாக கூறினார்கள். நான் அந்த நூலைப் பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். இப்பொழுது, திரும்பவும் மனதில் நினைத்துக் கொண்டேன். கேத்தரினுக்கு இறந்த பிறகு ஏதாவது நினைவிருக்குமா என்று வியந்தேன். அவள் “நான் மிதப்பதுபோல் உணர்கிறேன்” என்று மட்டும் கூறினாள். நான் ஹிப்னடைஸ் சிகிச்சையை முடித்துவிட்டு வெளியில் அழைத்து வந்தேன். 

மறுபிறவி விளக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று தீராத ஆவல் எனக்கு ஏற்பட்டது. நூலகத்துக்கு சென்று மறுபிறவி தொடர்பான அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள், அறிக்கைகள், கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றனவா என்று தேடினேன். வர்ஜினியா யூனிவர்சிட்டியை சேர்ந்த டாக்டர் ஸ்டீவன்சன் என்ற, பெயர் பெற்ற மனநல பேராசிரியர் மறுபிறவி தொடர்பாக அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். டாக்டர் ஸ்டீவன்சன் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குழந்தைகளிடம் மறுபிறவி அனுபவ ஞாபகங்களைப் பார்த்துள்ளதாக எழுதியுள்ளார். அவர்களில் சிலர், தாங்கள் அறியாத மொழிகளில் பேசும் திறமையை வெளிக்கொணர்ந்திருந்தனர். அவருடைய கட்டுரைகள், தக்க ஆராய்ச்சிகளுடன், குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு எழுதப்பட்டுள்ளன. 

எட்கர் மிட்ஷல் எழுதிய அறிவியல் திறனாய்வு குறித்தும் படித்தேன். டியூக் யூனிவர்சிட்டி, பிரௌன் யூனிவர்சிட்டி பேராசிரியர்கள் சி.ஜெ.டூகாஸ், மார்ட்டின் எபான். . . . . போன்றோரின் கட்டுரைகளையும் படித்தேன். படிக்க படிக்க இன்னும் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று தோன்றியது. நான் நிறைய படித்திருந்தாலும், வேறு வேறு கோணங்களில் இதயத்தைப்பற்றி படித்திருந்தாலும் என்னுடைய படிப்பு மிக மிக குறைந்தது என்று உணர்ந்தேன். ஆன்மா, மறுபிறவி தொடர்பாக நூலகங்களில் ஏகப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. பெயர் பெற்ற பேராசிரியர்கள், அறிவியலாளர்கள், ஆராய்ச்சியுடன் நிரூபித்திருக்கிறார்கள். அவ்வளவுபேரும் தவறாக சொல்லியிருக்கிறார்களா? அல்லது ஏமாற்றப்பட்டிருக்கிறார்களா? காணப்படும் நிருபணங்கள் மறுபிறவி கொள்கைக்கு ஆதரவாக உள்ளன. இருப்பினும் என்னால் நம்ப முடியவில்லை. நிருபணங்கள் அதிகமோ, குறைவோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

கிடைத்த அனுபவங்களால் நானும் கேத்தரினும் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தோம். கேத்தரின் மன அமைதியுடன், நன்றாகக் குணமாகிக் கொண்டிருந்தாள். என்னுடைய ஆராய்ச்சி மனப்பான்மை வளர்ந்து கொண்டேயிருந்தது. பல வருடங்களாக, பயத்தினால் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருந்த கேத்தரின் இறுதியாக மனஅமைதி பெற்றாள். உண்மையோ, கற்பனையோ கேத்தரினுக்கு அமைதி ஏற்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நான் என் ஆராய்ச்சியை இக்கட்டத்தில் நிறுத்துவதாக இல்லை.
 

-தொடரும்...

 

 

 

கொசுறு: 

பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பிக்கொண்டிருந்தபொழுது, தாலமியின் காலகட்டடத்துக்கு முன்பே தமிழர்களின் சரியான அறிவியல் கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே? தாலமி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, எகிப்து வானவியலாளர். இவர் பூமியைச் சுற்றியே, அனைத்து கோள்களும், சூரியன், விண்மீன்கள் அனைத்தும் சுற்றிவருவதாக கண்டுபிடித்து அறிவித்தார். இந்த கண்டுபிடிப்பு கி.பி 1500 வரை கோலோச்சியது. அதன் பிறகு நிகோலஸ் கோபர்னிகஸ், சூரியனைத்தான் அனைத்து கோள்களும் சுற்றிவருகின்றன என்று நிரூபித்தார். 

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்று, தமிழ்ப் புலவர் கடியனூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் உவமையாகக் கூறியுள்ளார்.

 

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்”
 

பொருள்: சூரியனைச் சுற்றும் கோள்களைப் போல, இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து தாக்குகின்றனர். பலரையும் சினத்துடன், இந்த வீரன் ஒருவனே பொருந்துகிறான். 

நாம், மீண்டும் அந்த சிறப்புகளை அடையும் நாள் எந்நாளோ? 

உபயம்: கூகுளாண்டவர். 

 

துணுக்கு: 

“ப்ரெண்டு, உன்னெல்லாம் மறக்கக் கூடாதுன்னு தமிழய்யா சொல்லியிருக்காங்க, தெரியுமா?” 

“தமிழய்யா எதுக்கு ப்ரெண்டு, என்னை மறக்கக் கூடாதுன்னு சொன்னாங்க?” 

“உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொன்னாங்க. இவ்வளவு உப்பி- ட்ட, உன்னைப்போய் எப்படி ப்ரெண்டு, மறக்க முடியும்?”

 

Thursday, March 21, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 2 : பகுதி - 2


கேத்தரின் சமாதி நிலையில் இருந்தபோது மிகவும் பொறுமையாகவும், வேண்டுமென்றே முணுமுணுப்பாகவும் பேசினாள். அதனால் கேத்தரின் கூறியதில் ஒவ்வொரு வார்த்தையையும் குறித்துக்கொள்வது எளிதாக இருந்தது. (கேத்தரின் மீண்டும் மீண்டும் கூறிய விஷயங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன்.)

கேத்தரினை இரண்டு வயதுக்கு முன்பு அழைத்துச் சென்றேன். ஆனால் அவளுக்கு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் எதுவும் நடந்ததாக ஞாபகம் இல்லை. அவளை உனக்கு பயம் அதிகம் உள்ள சூழ்நிலைக்குச் செல்என்று ஆணையிட்டேன். ஆனால் அவளிடமிருந்து வந்த பதிலுக்கு நான் என்னைத் தயார்படுத்தியிருக்கவில்லை.

கேத்தரின் ஒரு பிரம்மாண்டமான தூண்களுடன் அமைந்த வெண்ணிற கட்டிடத்தைப் பார்க்கிறேன். அந்த கட்டிடத்துக்கு செல்ல படிகள் உள்ளன. கட்டிடத்துக்கு முன்புறம் திறந்த வெளியாக இருக்கிறது. கதவுகள் இல்லை. நான் கனமான பெரிய அங்கியை அணிந்திருக்கிறேன். நான் பின்னல் போட்ட மஞ்சள் நிற முடியோடு இருக்கிறேன்.என்று கூறினாள்.

நான் மிகவும் குழப்பமடைந்தேன். என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. அவளிடம், அப்பொழுது என்ன வருடம், உன் பெயர் என்ன என்று கேட்டேன். என் பெயர் அரோண்டா. எனக்கு பதினெட்டு வயதாகிறது. அந்த கட்டிடத்துக்கு முன்புறம் பெரிய சந்தை இருக்கிறது. சந்தையில் பெரிய கூடைகள் நிறைய இருக்கிறது. முதுகில் சுமந்து கொண்டுவரக்கூடிய கூடைகளாக உள்ளது. நாங்கள் பெரிய பள்ளத்தாக்கில் வசிக்கிறோம். அங்கு தண்ணீர் இல்லை. வருடம் 1866. அந்த நிலம் மிகவும் வெட்பமாகவும், மணலாகவும், தரிசாகவும் உள்ளது. அங்கே ஒரு கிணறு உள்ளது. ஆறுகள் எதுவுமில்லை. தண்ணீர் அந்தப்பள்ளத்தாக்கிற்கு மலையிலிருந்து வருகிறது." சுற்றுச்சூழல் குறித்து கேத்தரின் கூறிய பிறகு, அவளை இன்னும் சிலவருடங்கள் முன்னோக்கி சென்று, பார்ப்பதை கூறுமாறு உத்தரவிட்டேன்.

மரங்கள் அதிகமாக உள்ளன. சாலை கற்களால் ஆனதாக உள்ளது. அடுப்பு வைத்து சமைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் முடி மஞ்சள் நிறமாக உள்ளது. நான் பிரௌவுன் நிற உடை அணிந்திருக்கிறேன். கால்களில் செருப்பு அணிந்திருக்கிறேன். எனக்கு வயது இருபந்தைந்து. எனக்கு க்ளெஸ்ட்ரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. . . . . அவள் ரேச்சல். (ரேச்சல் கேத்தரினின் சகோதரனின் மகள். ரேச்சலும் கேத்தரினும் மிக அன்னியோன்னியமாக பழகுவார்கள்.) வெப்பம் தாங்க முடியவில்லை.”

நான் மிகவும் திடுக்கிட்டேன். என் வயிற்றில் ஏதோ செய்தது. அந்த அறை திடீரென்று குளிர்ந்ததாக மாறியதாக உணர்ந்தேன். கேத்தரின் கண்டதும்கூறியதும் மிகவும் நிச்சயமானதாக இருந்தது. எதுவும் உத்தேசமானதாக இல்லை. அவள் கூறிய காலக்கட்டம், பெயர்கள், அணிந்திருக்கும் உடைகள், மரங்கள் எல்லாம் அவளுக்கு தெளிவாக தெரிந்தன. இங்கு என்னதான் நடக்கிறது? அவள் மகள் இப்போது எப்படி அவள் அண்ணன் மகளாக இருக்க முடியும்? என் குழப்பம் அதிகமாகியது. நான் ஆயிரக்கணக்கான மனநோயாளிகளுக்கு ஹிப்னடைஸ் சிகிச்சை அளித்திருக்கிறேன். ஆனால் கேத்தரின் சொன்னதுபோல் யாரும் கூறியதில்லை. நான் என் கனவிலும் கூட நினைத்ததில்லை. நான் கேத்தரினை இன்னும் முன்னோக்கி, அவள் இறக்கும் நிலைக்கு வருமாறு கூறினேன். கற்பனைக் கெட்டாத நிலையில் இருப்பவளிடம் எனக்கு என்ன கேட்பதென்று தெரியவில்லை. அவளுடைய பயத்துக்கும், கனவுகளுக்கும் மூலக்காரணமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சியை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அவள் இறக்கும் தருவாயில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பினேன். என் நம்பிக்கைக்கு தோதாக அவர்கள் கிராமத்தை வெள்ளமோ, கடல் கொந்தளிப்போ அழித்துள்ளதை கூறினாள்.

பெரிய அலைகள் மரங்களை சாய்த்துக்கொண்டிருக்கிறது. ஓடுவதற்கு இடமில்லை. அதிகம் குளிருகிறது. தண்ணீரும் ஐஸ் போல் இருக்கிறது. என் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். என்னால் முடியவில்லை. என் பிடியிலிருந்து நழுவவிடாமல் அவளை இறுக பிடித்துக்கொண்டேன். நான் மூழ்குகிறேன். தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டேன். மூச்சு விட முடியவில்லை. தண்ணீரை முழுங்கவும் முடியவில்லை. . . . . உப்புத்தண்ணீர். . . . . என் குழந்தை என் பிடியிலிருந்து நழுவிவிட்டது.” கேத்தரின் மூச்சுவிட திணறுவது தெரிந்தது. திடீரென்று அவள் உடல் சாந்தமடைந்தது. அமைதியானாள். இயல்பாக மூச்சு விட ஆரம்பித்தாள்.

மேகங்கள் தெரிகின்றது. . . . . என் குழந்தை என்னுடன் உள்ளது. எங்கள் கிராமத்து மக்களை காண முடிகிறது. என் சகோதரனை பார்க்கிறேன்.”

கேத்தரின் அமைதியானாள். அந்த பிறவி முடிந்துவிட்டது. அவள் இன்னும் சமாதி நிலையிலிருக்கிறாள். நான் மூச்சடைத்து நின்றேன்.முற்பிறவி? மறுபிறவி? என்னுடைய மருத்துவ அறிவு அவள் கற்பனை கலக்காத உண்மையைக் கூறியதை அறிவுறுத்தியது. சொந்தமாக இட்டுக்கட்டுவதாக தோன்றவில்லை. அவள் நினைவுகள், விளக்கங்கள், சின்ன சின்ன விவரங்கள் அனைத்தும், அவள் விழித்திருக்கும் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவைகளாக உள்ளன. கேத்தரினிடமிருந்து பெற்ற தகவலுக்கும், அவளுடைய பொதுவான குணத்துக்கும், அவள் மனநோயின் தன்மைகளுக்கும் உள்ள தொடர்புகளை நினைக்க எனக்கு மலைப்பு ஏற்பட்டது. ஒருவேளை அவளுக்கு எண்ணமும் செயலும் மாறுபடுகிற மனக்கோளாறு இருக்குமா? மனப்பிறழ்வா? (Schizophrenia ) இல்லை. அவளுக்கு அந்த மாதிரி அறிகுறிகள் எதுவும் இருந்தது கிடையாது. கேதரின் எப்பொழுதும், காதுக்குள் யாரோ பேசுவதுபோல் இருக்கிறது என்றோ, அல்லது என் கண்ணில் கற்பனை காட்சிகள் தெரிகிறது என்றோ கூறியதோ, உளறியதோ கிடையாது. கற்பனை உலகில் அவள் இருந்தது கிடையாது. உண்மையையும் கற்பனையையும் அவள் குழப்பிக் கொண்டது கிடையாது. பலபேராக தன்னை நினைக்கும் நிலையோ, வெவ்வேறு நேரங்களில் மாறுபட்ட மனநிலையோ அவளுக்கு கிடையாது. ஒரே ஒரு கேத்தரின் மட்டும்தான் இருந்திருக்கிறாள். இயல்பான நிலையில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்கே தெரியும். கேத்தரின் மனத்தளவில் சமுதாயத்துடன் ஒத்துப்போகாதவளாகவோ, சமுதாய விதிகளுக்கு எதிரானவளாகவோ இருந்தது கிடையாது. அவள் நடிக்கக் கூடியவள் அல்ல. அவளுக்கு மனப்பிரம்மை கிடையாது. மாத்திரைகள் உட்கொள்வதும் இல்லை. ஆல்கஹால் குடிப்பதுகூட மிகக்குறைவாக, கட்டுப்பாட்டுக்குள் உள்ள அளவுதான். ஹிப்னடைஸ் செய்தநிலையில் அவளுடைய தெளிந்த அனுபவங்களைக் கொண்டு, அவளுக்கு நரம்புதளர்ச்சியோ, மனோவியாதியோ இருக்கிறதென்று சொல்லும்படியாக இல்லை.

அவள் கூறியவை அனைத்தும் ஆழ்மனதில் உள்ள நினைவுகள். ஆனால் அவை எங்கிருந்து வந்தவை? எனக்கு அதிகம் அறிமுகமில்லாத பிறப்பு, மறு பிறபிறவி நினைவுகளை தொடுவதாக உணர்ந்தேன். இருக்காது? அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட என் அறிவு ஒத்துக்கொள்ள மறுத்தது. நான் மனதுக்குள் கூறிக்கொண்டாலும் கண்ணெதிரே நிகழ்வதற்கு என்னால் விளக்கங்கள் கூற இயலவில்லை. என்னால் உண்மையை மறுக்கவும் இயலவில்லை.

தொடர்ந்து சொல்லுமாறு கேத்தரினை பணித்தேன். நடப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அவள் மேலும் இரண்டு பிறவிகளின் நிகழ்வுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஞாபகப்படுத்தினாள்.

என் உடையில் கறுப்பு நிற ஜரிகை உள்ளது. தலையிலும் கறுப்பு நிற ஜரிகை வைத்திருக்கிறேன். எனக்கு கருகருவென்று முடி உள்ளது. வருடம் கி.பி 1756 நான் ஸ்பானிய பெண். என் பெயர் லூசியா. வயது ஐம்பத்தாறு. நடனமாடிக்கொண்டிருக்கிறேன். . . . . . . " தொடர் மௌனம் " மிகவும் உடல் நிலை முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். எனக்கு காய்ச்சல். ஜன்னி கொண்டுள்ளதுபோல் இருக்கிறது. . . . . . . . பலருக்கு உடல் நிலை சரியில்லை. மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். . . . . . . . மருத்துவர்களுக்கு அது தண்ணீரில் பரவும் வியாதியென்று தெரியவில்லை.எனக்கு சரியாகிவிட்டது. ஆனால் மிகவும் தலையை வலிக்கிறது. காய்ச்சல் வந்திருந்ததால் என் கண்ணும் தலையும் இன்னும் வலிக்கிறது. . . . . . . அதிகமான மக்கள் இறந்துவிட்டார்கள்.

மற்றொரு சமயம் கேத்தரின் ஒரு பிறவியில் வேசியாக இருந்திருக்கிறாள். அவள் தர்மசங்கடத்தில் இருந்ததால் அப்பிறவி சம்பந்தமாக அதிக விவரம் தரவில்லை. அதிலிருந்து ஹிப்னடைஸ் ஆகியிருக்கும் நேரத்தில் கேத்தரின் அவளுக்கு விருப்பப்பட்ட விஷயங்களை மட்டும் சொல்லும் அளவுக்கு அவளுக்கு அதிகாரம் இருப்பதை உணரமுடிந்தது.

கேத்தரின் அவளது அண்ணன் மகளை ஒரு பிறவியில் சந்தித்திருந்ததாக கூறி இருந்தாள். நானும் ஆர்வமேலீட்டால், நான் எப்பொழுதாவது அவள் பிறவிகளில் இருக்கிறேனா என்று கேட்டேன்.

நீங்கள் எனது ஆசிரியர். சிறிய புத்தக ஷெல்ப் மேல் அமர்ந்திருக்கிறீர்கள். புத்தகத்திலிருந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வயதாகி விட்டது. முடி நரைத்துள்ளது. தங்கநிற பார்டர் உள்ள வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறீர்கள். உங்கள் பெயர் டையக்ணஸ். எங்களுக்கு வடிவங்கள், முக்கோணங்கள் தொடர்பாக பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் ஞானம் உடையவர். வருடம் கி.பி 1568“ (இது கிட்டத்தட்ட கிரேக்க தத்துவ ஞானி டையக்ணஸ்-க்கு 1200 முற்பட்ட காலம். அந்த காலக்கட்டத்தில் டையக்ணஸ் என்பது மிகவும் பழக்கத்திலுள்ள பெயர்.)

முதல் ஹிப்னாடிஸ சிகிச்சை முடிவடைந்தது. ஆனால் இப்பொழுது நடந்ததைவிட இன்னும் ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது.

கேத்தரின் சென்ற பிறகு, அவளிடமிருந்து பெற்ற தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். இது என்னுடைய இயல்பான நடவடிக்கை. சாதாரண ஹிப்னடைஸ் சிகிச்சையை ஆராய்வதற்கே எனக்கு மணிக்கணக்கில் பிடிக்கும். கேத்தரினுடைய சிகிச்சை சாதாரண வகையை சேர்ந்தது இல்லை. பிறவி, மறுபிறவி, இறப்புக்கும்,பிறப்புக்கும் இடையிலுள்ள நிலை, கூடுவிட்டு செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளை நான் நம்பியது இல்லை. ஆனால் எதற்கும் விளக்கம் தேடும் என்னுடைய அறிவு சிந்திக்க ஆரம்பித்தது. அவள் கூறியது முற்றிலும் கற்பனையாக இருக்கக்கூடும். கேத்தரின் கூறிய எதனையும் என்னால் நிரூபிக்க இயலாது. ஆனால் என் மனதின் ஓரத்தில், திறந்த மனதுடன் இருக்கும்படி ஓர் உணர்வு கூறியது. உண்மையான அறிவியல் கூர்ந்து கவனிப்பதிலிருந்து துவங்குகிறது. திறந்த மனதுடன், இன்னும் அதிக தகவல்களை சேகரிக்க வேண்டும்.

ஒரு கேள்வி, தொடர்ந்து மனதை அரித்துக்கொண்டே இருந்தது. முன்பே பயந்து கொண்டிருந்த கேத்தரின், இந்த ஹிப்னடைஸ் அனுபவத்துக்குப் பிறகு மீண்டும் ஹிப்னடைஸ் சிகிச்சைக்கு வருவாளா? நானாக அவளை அழைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன். அவளுக்கு நேர்ந்த அனுபவத்தில் இருந்து வெளிவர அவகாசம் எடுத்துக்கொள்ளட்டும். .நானும் ஒரு வாரம் காத்திருந்து பார்க்கிறேன்.

- தொடரும்.

கொசுறு:
குழந்தை பெற்றோர் உடலோடு குழைந்து வாழ்வதால் குழந்தை
பிள்ளை பெற்றோர் வருமானத்தில் இருப்பவன் பிள்ளை
பாலகன் பெற்றோரால் வழி நடத்தப்படுபவன் பாலகன்
மகன் தான் உழைத்து பெற்றோரைக் காப்பவன் மகன்
மைந்தன் பெற்றோரோடு சேர்த்து சுற்றத்துக்கும் உதவுபவன் மைந்தன்
குமாரன் பெற்றோருக்கு புத்தி சொல்பவன் குமாரன்
புத்திரன் முன்னோர்கள் நற்கதி அடையப் பாடுபடுபவன் புத்திரன்

------------உபயம் : திருமுருக கிருபானந்த வாரியார்.


துணுக்கு:
எனது நண்பன் சூழ்நிலைக்கேற்ப பாடுவதில் வல்லவன். ஒருமுறை எங்கள் குழுவினர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, மற்றொரு குழு நண்பர்கள் எங்களுடன் கலந்துகொண்டு பேச ஆரம்பித்தார்கள். அது எங்களுக்கு இடையூராக இருந்தது. எப்பொழுது அவர்கள் செல்வார்கள் என்று காத்திருந்தோம்.ஒருவழியாக அவர்கள் கலைந்தார்கள். அவர்கள் சென்றவுடன் என் நண்பன் பாட ஆரம்பித்தான்.

"ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ! ஆலய மணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா!"

மற்றொருமுறை நண்பன் ஒருவனின் பணம், எண்ணிக்கையில் குறைந்துவிட்டது. யாரையும் சந்தேகப்பட்டானா என்று தெரியவில்லை. அவன் மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தான். எங்கள் நண்பன் "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?" என்று பாடினான்.

TMS இந்தப் பாடல் பாடும்பொழுது "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்குறாய்?" என்று எனக்கு ஒலிக்கிறது. அடுத்த முறை கேட்கும்பொழுது கவனியுங்கள்.