பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 26, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 10பேராசிரியர் ஸ்கட்ஸ் இந்த சமயத்தில் குரங்கின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்தார். அவர் மூளையின் செயல்பாடுகளை ஒரு வரைபடமாக வரைந்தார். அப்பொழுது மூளையின் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பாணியிலான வரைபடம் கிடைப்பதை அறிந்தார். கணினியில் எதுவும் தோன்றாதவரை குரங்கு அமைதியாக இருந்தது. அப்பொழுது அதனுடைய மூளையின் இயக்கங்களும் இயல்பானதாக இருந்தது. கணினியில் வடிவங்கள் தோன்றியவுடன் குரங்கு கைப்பிடியைப் பிடித்த்து. அப்பொழுதும் அதன் மூளையின் இயக்கத்திற்கான வரைபடத்தில் எந்தவிதமான மாற்றமுமில்லை. அதற்கு ஜூஸ் கிடைத்தவுடன் மூளையின் வரைபடம் மூளை செயல்படுவதற்கான உச்சகட்டத்தை அடைந்தது தெரிந்தது. அதாவது எனக்கு வெகுமதி கிடைத்தது என்று மூளை மகிழ்ச்சியுடன் கூறுவதுபோல் அது காணப்பட்டது.


சில வரைபட விளக்கங்களை கீழே காணலாம்.

ஜூஸ் கிடைத்தவுடன் மூளை உச்சகட்ட மகிழ்ச்சி அடைகிறது
கொஞ்சம் கொஞ்சமாக குரங்குக்கு ஒரு பழக்கம் உருவாகிக்கொண்டிருந்தது. பலமுறைகள் அதே ஆராய்ச்சியை ஸ்கட்ஸ் குரங்கிடம் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். குரங்கின் மூளையின் செயல்பாடுகளுக்கான வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை ஸ்கட்ஸ் கண்டறிந்தார். குரங்கு பழக்கத்துக்கு அடிமையானபிறகு, மூளையின் செயல்பாடுகள் கணினியில் வடிவம் தோன்றியவுடனே உச்சகட்டத்தை அடைய ஆரம்பித்துவிட்டது. அதாவது வடிவம் தோன்றியவுடனே தனக்கு வெகுமதி கிடைத்துவிட்டது என்று குரங்கு உணர ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது மூளையின் வரைபடம் புதிய பாணியில் வர ஆரம்பித்தது.

வடிவம் தோன்றியதும் மூளை உச்சகட்ட மகிழ்ச்சி அடைகிறது
கணினியில் தோன்றும் வடிவங்கள், கைப்பிடியை இழுக்கவேண்டிய தூண்டுகோலாக ஆரம்பத்தில் இருந்தது. காலம் செல்லச் செல்ல அந்த வடிவங்கள் மூளையின் மகிழ்ச்சிக்கு உண்டான தூண்டுகோலாக ஆகிவிட்டது. வடிவம் தோன்றியவுடனே ஜூலியோ வெகுமதிக்கு தயாராகிவிட்டது.


ஸ்கட்ஸ் சோதனைகளை சிறிது மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் வடிவம் தோன்றியதும், கைப்பிடியைத் தொட்டால் நிச்சயம் ஜூஸ் கிடைத்தது. இப்பொழுது வடிவம் தோன்றியதும் கைப்பிடியைத் தொட்டால், சிலமுறை ஜூஸ் கிடைக்கும், சிலமுறை ஜூஸ் நிச்சயமில்லை என்ற முறையில் சோதனையை மாற்றினார். 


சோதனையை மாற்றியதும், ஜூஸ் கிடைக்காத சமயத்தில் ஜூலியோவினால் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கோபமாகக் கத்த ஆரம்பித்தது. உறும ஆரம்பித்தது. மூளையில் ஏற்படும் மகிழ்ச்சியில், ஏமாற்றங்கள் வந்தவுடன், வெகுமதி கிடைக்காததால் ஜூலியோ எரிச்சலடைந்தது. ஒரு போதைப்புழங்கிபோல வெகுமதிக்கு ஏங்க ஆரம்பித்தது.


பழக்கத்துக்கு ஆளான குரங்குகினை, ஜூஸ் வராத நேரத்தில் அதன் கவனத்தை ஆய்வாளர்கள் திசை திருப்ப முயற்சித்தனர். ஆய்வகத்தின் கதவைத் திறந்து, அதன் நண்பர்களுடன் விளையாட அனுமதித்தனர். ஆனால் அவர்களால் ஜூலியோவை திசை திருப்ப முடியவில்லை. சோதனையின் ஆரம்பகட்டத்தில் இருந்த குரங்குகள், எளிதாக திசை திருப்பப்பட்டு, ஏமாற்றத்தை உணராமல் விளையாட ஆரம்பித்தன. ஆனால் பழக்கத்துக்கு ஆளான குரங்குகள், கணினியையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தன. வடிவம் தோன்றியவுடன் கைப்பிடியை இழுத்தவண்ணமே இருந்தன. சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள் தோற்றாலும் மீண்டும் மீண்டும் விளையாடுவதற்கு இது ஒப்பானது.

பழக்க வளையம், பழக்க சுழற்சி


இதனால் பழக்கங்கள் ஏன் ஒருவரை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு இருக்கிறதென்பதை ஓரளவுக்கு உணரமுடிகிறது. பழக்கங்கள் நமது நரம்பு மண்டலத்தில் ஒரு ஏக்கத்தை உருவாக்குகிறது. அந்த ஏக்கம் சிறிதுசிறிதாக நரம்பு மண்டலத்தில் தோற்றுவிக்கப்படுவதால், ஆரம்பத்தில் அதன் தாக்கத்தை நாம் உணர்வதில்லை. சில துப்புகளையும், வெகுமதிகளையும்கொண்டு நரம்பு மண்டலத்தில் அவை பதியவைக்கப்படுகின்றன. “சின்னமன்”  (Cinnamon) என்ற பிரபலமான கடைகள், அந்த உணவின் நறுமணத்துக்கு பெயர்பெற்றவை. பெரிய மால்களில், அதன் நறுமணம் பிறவகை மணங்களால் தடைபடாத இடத்தில், இந்தக் கடைகள் இருப்பதைக் காணலாம். தடைபடாத அந்த நறுமணத்தை உணர்ந்ததும், அதனை சாப்பிட்டாகவேண்டும் என்ற உணர்வு வந்துவிடுகிறது. அந்த வாசனையைக்கொண்டு ஒரு பழக்க சுழற்சி இங்கு மக்களிடம் உருவாக்கப்படுகிறது.


“டோநட் (Donut) - ஐப் பார்த்தவுடன் அதனை சாப்பிட்டாகவேண்டும் என்று நமது மூளையில் இயற்கையில் தோன்றுவதில்லை. ஆனால் ஒருமுறை அதனை சாப்பிட்டவுடன், அதில் இனிப்பு உள்ளது என்று அறிந்தவுடன், பிறகு அதன் நறுமணத்தை உணர்ந்தாலே, மூளை இனிப்புக்கு ஏங்க ஆரம்பிக்கிறது. நமது மூளை நம்மை டோநட்-ஐ நோக்கித் தள்ளுகிறது. அப்பொழுது டோநட்-ஐ சாப்பிடாவிட்டால் மூளை ஏமாற்றம் அடைகிறது.” என்று ஸ்கட்ஸ் கூறுகிறார்.


இதனைப் புரிந்துகொள்வத்ற்கு குரங்குகளின் மீது நடத்தப்பட்ட சோதனையை மீண்டும் காண்போம். முதலில் குரங்கு திரையில் ஒரு வடிவத்தைக் காண்கிறது. காலப்போக்கில் வடிவத்தைக் கண்டவுடன், அது கைப்பிடியை இழுக்கவேண்டும் என்று உணர்ந்துகொள்கிறது. கைப்பிடியை இழுக்கிறது. அதன் விளைவாக அதற்கு ஜூஸ் கிடைக்கிறது.


உண்மையில், ஆரம்பத்தில் கைப்பிடியை இழுத்தால், ஜூஸ் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளும் விஷயம்தான். எப்பொழுது குரங்குக்கு துப்பு கிடைத்தவுடன், ஜூஸ் வேண்டும் என்று ஏங்க ஆரம்பிக்கிறதோ, அப்பொழுதுதான் அது பழக்கமாகிவிட்டது என்று கூறமுடியும். ஏக்கம் இருக்கும்வரை குரங்கு தன்னிச்சையாக செயல்படும். அது பழக்கத்துக்கு அடிமையாக இருக்கும்.


கீழ்க்கண்டவாறு பழக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. முதலில் ஒரு துப்பு, தூண்டுகோல் தொடர்ந்து ஒரு செயல்முறை, பிறகு ஒரு வெகுமதி. புகைப்பிடிக்கும் ஒருவருக்கு சிகரெட் பாக்கெட்டைப் பார்ப்பது ஒரு தூண்டுகோலாகிறது. அவரது மூளை நிக்கோட்டினுக்கு ஏங்குகிறது. அவரையும் அறியாமலே அவருடைய கை சிகரெட்டை நோக்கி செல்கிறது.
ஃபோனில் வரும் செய்தியை எடுத்துக்கொள்ளுங்கள். செய்தி வந்தவுடன், செய்தியைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு அதிகமாகிவிடுகிறது. செய்தி என்னவோ தெரிந்த செய்தியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் செய்தி வந்தவுடன் பார்த்துவிடவேண்டும் என்ற முனைவைத் தவிர்க்கமுடிவதில்லை. யாராவது ஃபோனை ஆஃப் செய்து வைத்துவிட்டால், செய்தி வருவது தெரியாததால், ஒருவரால் தொடர்ந்து தன் வேலையை செய்துகொண்டிருக்க முடிகிறது. மணிக்கணக்கில் ஃபோனைப்பற்றி சிந்திக்காமல் வேலை செய்யவும் முடிகிறது.


பழக்க வளையம், பழக்க சுழற்சிபோதைப்புழங்கிகள், புகைக்கு அடிமையானவர்கள், அதிகமாக உண்பதற்கு அடிமையானவர்கள் போன்றவர்களின் மூளையில் ஏற்படும் நரம்பியல் மாற்றங்களையும், வேதியியல் மாற்றங்களையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பழக்கங்களுக்கு அடிமையானவர்களின் மூளை, ஏக்கங்கள் ஏற்படும்போது மூளையின் உத்தரவின்றி தன்னிச்சையாக செயல்கள் நிகழ்வதைக் கண்டறிந்தனர். பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் (குடும்பத்தை இழப்பது, வேலையை இழப்பது, தன்மானத்தை இழப்பது) எதனைப்பற்றியும் கருதாமல் அவர்கள் செயல்படுவதைக் கண்டறிந்தனர்.
இருப்பினும் அத்தகைய ஏக்கங்கள், ஒருவரை முழுமையாகக் கட்டுப்படுத்துவதில்லை. 


வரும் அத்தியாயங்களில் கூறியுள்ளபடி அவற்றைத் திசை திருப்பவும் முடியும். ஏக்கங்களை மறக்கடிக்கவும் முடியும். அப்படி மறக்க வைப்பதற்கு முதல் தேவையாக, அத்தகைய தன்னிச்சையான ஏக்கம் இருப்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி உணராவிட்டால் ஃபோனில் செய்தி வந்ததும் ஃபோனைத் தேடுவதுபோல நாம் பழக்கத்தின் வழியே செயல்படுதல் நேரிடும்.


ஏக்கம் ஒரு பழக்கம் ஏற்பட்டுவிட்ட பிறகு, அதனை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை, 2002-ல் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்பவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அத்தகைய நபர்கள் 266 பேர் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்க்கவோ, கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கவோ என்று ஏதோ ஒரு காரணத்தைக்கொண்டு அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், அவர்கள் உடற்பயிற்சியினை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்ததற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. அவர்களுக்கு உடற்பயிற்சி ஒரு பழக்கமாகத் தொடர்வது, வெகுமதிக்கான ஏக்கத்தைத் தீர்க்கவே அவர்கள் உடற்பயிற்சியைத் தொடர்வது தெரியவந்தது.-தொடரும்
நாம் என்ன செய்திருப்போம்:

கண்டு நெகிழ, திகைக்க ஒரு காணொளி.
http://www.youtube.com/watch?v=KMYrIi_Mt8A

9 comments:


 1. ஏக்கங்கள் ஏற்படும்போது மூளையின் உத்தரவின்றி தன்னிச்சையாக செயல்கள் நிகழ்கின்றன என்பது புதிய தகவல். மூளையின் உத்தரவின்பேரில் தான் இயக்கங்கள் நடைபெறுகின்றன என்ற இதுவரை கொண்டிருந்த எண்ணத்தை இந்த தகவல் மாற்ற செய்துவிட்டது. ஆராய்ச்சியின் முடிவுகள் சுவரஸ்யமாக இருக்கின்றன. மேற்கொண்டு அறிய காத்திருக்கிறேன். (நீங்கள் சொல்லும் Cinnamon இலவங்கப்பட்டை தானே?)

  காணொளியைக் கண்டேன். சில நிகழ்வுகள் நெகிழ வைத்தன. சில திகைக்க வைத்தன. அதுவும் மேலிருந்து குதிக்க இருந்த பெண்ணை காப்பாற்றிய காட்சி நெகிழவும், திகைக்கவும் வைத்தது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!.

   மூளையின் உத்தரவின்றி அனிச்சையாக நாம் பல செயல்களை செய்வதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது கவனிக்கவேண்டியவைகள் நம் உணர்வின்றி அனிச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது.

   ஆமாம். அது இலவங்கப்பட்டைதான்.

   இந்த காணொளி பகுதி-1. அனைத்தும் நிகழும்பொழுது எடுக்கப்பட்டதால் அவ்வளவு தெளிவாக இல்லை. அதாவது செட் போட்டு எடுக்கப்படவில்லை. உண்மை கற்பனையைவிட அதிர்ச்சியளிக்கிறது.


   அன்புடன்

   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 2. விளக்கம் (சோதனை) வெகு ஜோர்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

   நேரமிருக்கும்பொழுது காணொளியைப் பாருங்கள்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.


   Delete
 3. மூனையின் கட்டளையின் பேரில்தான் அனைத்தது செயல்களும் நடைபெறுகின்றன என்ற எண்ணத்தை தங்களின் பதிவு மாற்றி விட்டது
  பழக்கங்களே நம்மை ஆதிக்கம் செய்கின்றன
  காணொளி காட்சிகள் ஒவ்வொரன்றும் நெகிழச் செய்கின்றது நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. நம்முடைய மூளை பழக்கங்களுக்கு அடிமையாகிப் போவதை எத்தனை அழகாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்! மதுவை பலரும் விரும்பி அருந்தினாலும் ஏன் ஒரு சிலர் மட்டும் அதை விட முடியாமல் அடிமையாகிப் போகின்றனர்? . புகைப் பிடிப்பவர்களிலும் ஒரு சிலர் மட்டுமே அதை விட முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கிறோம். இது எதனால்?

  அருமையான விஷயத்தை மிக அழகாக தமிழாக்கம் செய்து வழங்குகிறீர்கள். நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. நமது மூளை பழக்கத்தின் காரணமாக, வெகுமதிக்கு ஏங்கும் நிலை வந்துவிட்டால், ஒரு பழக்கத்திலிருந்து வெளிவருவது கடினம். அந்த நிலை மனிதனுக்கு மனிதன் வேறுபடும். வரும் அத்தியாயங்களில் அதைப்பற்றிய விபரங்கள் வரும்.

   பாராட்டுக்களுக்கும் நன்றி.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete