பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 5, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 7

1900-ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த “க்ளாட் சி ஹாப்கின்ஸ்” என்ற நிறுவன அதிகாரி ஒருவரை அவருடைய நண்பர், ஒரு புதிய தொழில் யோசனையுடன் சந்தித்தார். அந்த நண்பர், தான் ஒரு புதிய அற்புதமான பொருள் ஒன்றைக் கண்டு பிடித்திருப்பதாகவும், அது சந்தைக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றி அதற்கு காத்திருக்கிறது என்றும் கூறினார். அது பெப்ஸோடன்ட் என்ற பெயருடைய ஒரு பற்பசை. அவருடைய நண்பரும் இன்னும் இரண்டு பேரும் சேர்ந்து அந்த பற்பசையை சந்தைக்கு கொண்டுவர இருப்பதாகக் கூறினார். ஹாப்கின்ஸ்-இடம் அந்த பற்பசை, சந்தையில் நன்றாக விற்பனையாவதற்கு விளம்பரம் செய்யும்படி வேண்டிக்கொண்டார்.


.அந்த காலகட்டங்கள் விளம்பரத்துறையின் ஆரம்ப காலமாக இருந்தது. அதற்கு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு விளம்பரத்துறை என்று ஒன்று இருந்ததே இல்லை. ஹாப்கின்ஸ் என்ற அந்த விளம்பரத்துறை நண்பர், அமெரிக்கர்களை “ஸ்கிலிட்ஸ்” பியர்தான் மிகவும் தரமான பியர், ஏனென்றால் அதனுடைய பாட்டில்களை, அதைத் தயாரிக்கும் நிறுவனம், நீராவியால் கழுவி சுத்தமான பாட்டில்களில் பியரைத் தருகிறது என்று நம்ப வைத்தார். அதனால் அந்த பியருடைய விற்பனை விண்ணைத் தொட்டது. ஆனால் அவர் விளம்பரங்களில் மற்ற பியர் நிறுவனங்களும் “ஸ்கிலிட்ஸ்” போலவே, நீராவியிலேயே பாட்டில்களைக் கழுவுகிறார்கள் என்று சொல்லவில்லை. 


அதைப்போலவே “பால்மோலிவ்” சோப்பை பெண்களிடம், அந்த சோப்பு உலகப்பேரழகி “கிளியோபாட்ரா” உபயோகப்படுத்திய வகை சோப்பு என்று நம்ப வைத்து, அந்த சோப்பின் விற்பனையை அதிகரித்தார். ஹாப்கின்ஸ் முன்பின் தெரியாத பல பொருட்களை தன் விளம்பரத்தின் மூலம் அமெரிக்காவின் மிக அதிகமாக விற்பனையாகும் பொருட்களாக மாற்றியவர். க்வாக்கர் ஓட்ஸ், குட் இயர் டயர்ஸ், பைசல் வேக்கும் கிளீனர் போன்ற பொருட்களை அன்றாடம் அனைவரும் உபயோகப்படுத்தும் பொருட்களாக மாற்றியவர். அப்படி பொருட்களின் விற்பனையை அதிகரித்த அதே சமயத்தில் தன்னையும் செல்வந்தனாக ஆக்கிக் கொண்டவர். “விற்பனைத் துறையில் என் வாழ்க்கை” என்ற சுயசரிதையையும் எழுதி தன்னை விளம்பரப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதிலும் பணம் பார்த்துக்கொண்டார்.

நுகர்வாளர்களிடம் எப்படி தாங்கள் விற்கும் பொருட்களை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக ஹாப்கின்ஸ் சில விதிகளை வரையறுத்துள்ளார். ஹாப்கினுடைய விதிகள் நிறுவனங்களின் சிந்தனைப் போக்கை மாற்றியது மட்டுமல்லாது, அரசியல்வாதிகள், விற்பனையாளர்கள், கல்வி சீர்திருத்தவாதிகள், பொதுசுகாதார நிபுணர்கள், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் தேவையான மதிநுட்பமாகவும் அமைந்துவிட்டது. இன்றும்கூட அரசாங்கத்தின் செயல்களிலும், பொதுமக்கள் பொருட்களை வாங்கும் விதங்களிலும், ஹாப்கின்ஸினுடைய விதிகளின் பாதிப்பு இருந்து வருகிறது. எந்த ஒரு பழக்கத்தை உருவாக்குவதிலும் அவை அடிப்படை விதிகளாக உள்ளன.

ஹாப்கின்ஸினுடைய நண்பர், பெப்ஸோடன்ட் பற்பசை விளம்பர விஷயமாக அவரை அணுகியபொழுது அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. அந்த காலக்கட்டங்களில் அமெரிக்கர்களுடைய பற்களின் சுகாதார நிலைமை நன்றாக இல்லை. நாட்டின் வளம் அதிகரித்ததனால், மக்கள் அதிக இனிப்பு மற்றும் தொழில்முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொண்டார்கள். முதலாம் உலகப் போருக்காக ராணுவத்தில் ஆள் சேர்க்கும்பொழுது அதிகமானோருக்கு பல் சுகாதாரம் குறைவாக இருப்பதாக அரசாங்கம் கண்டுகொண்டது.

இருந்தாலும் ஹாப்கின்ஸுக்கு இந்த பற்பசை விற்கும் விஷயம் என்பது ஒரு நிறுவனத்தின் பொருளாதான வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே தோன்றியது. அப்பொழுது வீட்டுக்கு வீடு சென்று பற்பொடி மற்றும் வாய்கொப்புளிக்கும் திரவங்களை விற்பவர்களும் அதிகமாக இருந்தனர். அவர்களாலும் சரியான வருமானம் ஈட்டமுடியாத சூழலே இருந்தது.

ஏனென்றால் அனைவருக்கும் தினம் பல்துலக்கும் பழக்கம் என்பதே, அறியப்படாத ஒன்றாக இருந்தது. அதனால் பற்பொடிகளை வாங்குபவர்களும் மிகவும் குறைவாகவே இருந்தனர்.
ஹாப்கின்ஸ் அந்த நண்பரிடம், மக்களுக்கு பல்துலக்கும் பழக்கம் கிடையாது, இந்த பற்பசையை விற்பது கடினம் என்று மறுத்துவிட்டார். நண்பரோ ஹாப்கின்ஸினுடைய சுயமரியாதையை கிளறிவிட, முடிவில் ஹாப்கின்ஸ் பற்பசை விளம்பரங்களைச் செய்ய ஒத்துக்கொண்டார். இதனை ஹாப்கின்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். “கடைசியாக ஒருவழியாக ஒத்துக்கொண்டேன். என்னுடைய வேலைகளுக்காக நிறுவனத்தின் பங்குகளுக்கும் ஒத்துக்கொண்டேன்.” என்று ஹாப்கின்ஸ் எழுதியுள்ளார். இது ஹாப்கின்ஸினுடைய வாழ்க்கையில் நிதி சம்பந்தமாக எடுத்த மிகவும் அறிவுபூர்வமான முடிவாக அமைந்தது.


ஒப்புக்கொண்ட பிறகு, ஐந்தே ஆண்டுகளில் பெப்ஸோடன்ட் என்ற பெயர்கொண்ட பற்பசையை உலகம் முழுவதும் தெரியுமளவுக்கு அவர் பிரபலப்படுத்தி விட்டார். அதே சமயத்தில் தினமும் பல்துலக்குவது என்னும் பழக்கம் அதிவேகத்தில் அமெரிக்கா முழுமையையும் ஆக்ரமித்தது. 1930-ல் பெப்ஸோடன்ட் சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி என்று எங்கெல்லாம் ஹாப்கிஸால் விளம்பரப்படுத்த முடிந்ததோ அங்கெல்லாம் விற்பனை ஆகியது. பெப்ஸோடன்ட் விளம்பரம் ஆரம்பித்த பத்து வருடங்களில், பல் துலக்குவது என்பதை அமெரிக்கர்களில் பாதிபேருக்கு மேல் மேற்கொண்டனர். ஹாப்கின்ஸ் அமெரிக்காவில் பல்துலக்கும் பழக்கத்தை உருவாக்கி பேருதவி செய்தார் என்றால் அது மிகையாகாது. 

ஹாப்கின்ஸினுடைய வெற்றிக்கு முக்கிய காரணம், அவர் ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை ஏற்படுத்தியதே ஆகும். அதற்கு ஒரு குறிப்பிட்ட தூண்டுதலையும் அதற்கான வெகுமதியையும் அளித்து அந்த பழக்கத்தை அவர் நிரந்தரமாக்கினார். யூஜின் நமக்கு பழக்க சுழற்சி எப்படி ஏற்படுகிறது என்று தெளிவுபடுத்தினார். ஆனால் பழக்கங்களை எப்படி நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கலாம், வளைக்கலாம் என்று ஹாப்கின்ஸ் செய்துகாட்டினார்.


ஹாப்கின்ஸ் அப்படி என்னதான் செய்தார்? அவர் ஒரு அடங்காத தவிப்பை, ஆசையை உண்டாக்கினார். அந்த தவிப்பு ஒரு தூண்டுதலாக மாறி செயலாக்கப்பட்டு வெகுமதியைப்பெற்றுத் தருகிறது. அந்த தவிப்பே பழக்க சுழல் தோன்றுவதற்கான முக்கிய சக்தியாகிறது.

தனது வாழ்நாள் முழுவதும் ஹாப்கின்ஸ், நுகர்வோர் அவரது விளம்பரத்துக்கான பொருட்களை வாங்குவதற்கு, தனது முத்திரை உபாயத்தையே பயன்படுத்தியுள்ளார். அதாவது நுகர்வோர்களுக்கு பொருட்களை உபயோகிக்கும் துப்பினைத் (சிக்னலைத்) தரும் ஒரு தூண்டுதலை அவர் கண்டுபிடிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக க்வாக்கர் ஓட்ஸ்-ஐ அவர் விளம்பரப்படுத்தும்பொழுது அதனை சாப்பிட்டால் 24 மணி நேரமும் சக்தியுடன் இயங்கமுடியும் என்று மக்களை அவர் நம்பவைத்தார். அதுவும், காலையில் குறைந்தது ஒரு கப் அளவு சாப்பிடவேண்டும். அவர் ஒரு டானிக்-ஐ விளம்பரப்படுத்தினால், அதன்படி மூட்டுவலி, வயிற்றுவலி, பெண்களுக்கான உபாதைகள் அனைத்தையும் அது போக்கிவிடும், அந்த அறிகுறிகள் தோன்றிய உடனே அதனை அருந்தவேண்டும் என்று அவர் விளம்பரப்படுத்தினார். வெற்றியையும் கண்டார்.


இதைப்போல பெப்ஸோடன்ட்-ஐ விற்பதற்கும் அவர் ஒரு தவிப்பை, தூண்டுதலை  உருவாக்கவேண்டும். அதற்காக அவர் பல பல் மருத்துவ புத்தகங்களைப் படித்தார். அதில் பற்கள்மீது படரும் ஒருவித படலத்தைப்பற்றி தெரிந்துகொண்டார். அவருக்கு விளம்பரத்துக்கு ஒரு புது திட்டம் கிடைத்தது. பற்பசையை ஒரு அழகூட்டும் சாதனம் என்று அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அது பற்களின்மேல் மேகம்போல் படரும் படலத்தை நீக்கப்பயன் தருவதாக விளம்பரப்படுத்த முடிவு செய்தார். அந்தப் படலத்தை முக்கியமாக வைத்து விளம்பரப்படுத்திய ஹாப்கின்ஸ், அது இயற்கையான படலம் என்பதனையும், அது வாய் கொப்பளித்தாலோ அல்லது சாப்பிட்டாலோ அது மறைந்துவிடும் என்பதனையும் கண்டுகொள்ளவில்லை.


பற்களுக்கான நிபுணர்கள், அது எந்தவிதமான புதிய செயலையும் புரிவதில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அது ஹாப்கின்ஸை தடைப்படுத்தவில்லை. அவர் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தூண்டுதலைக் கண்டுபிடித்துவிட்டார். நகரம் முழுவதும் அவரது விளம்பரப்பலகைகள் காட்சியளித்தன. “நாவினால் உங்கள் பற்களை உணருங்கள்” “ஒரு படலத்தை உணர்வீர்கள்” “ஆம். அதுதான் உங்களுடைய பற்களின் நிறத்தைப் போக்கி பற்சிதைவுகளை வரவேற்கிறது.”  “எங்கு பார்த்தாலும் அழகான பற்களே!” “ஏன் பெண்கள் படலம் படிந்த பற்களுடன் இருக்கவேண்டும்?” “பெப்ஸோடன்ட் பற்களின் மீது படரும் படலத்தை முற்றிலுமாக நீக்குகிறது.”


ஹாப்கினுடைய புத்திசாலித்தனமான விளம்பரம், ஒரேயொரு தூண்டுகோலை மட்டுமே நம்பியிருந்தது.  – பற்களில் படரும் படலம். – இதுதான் அந்த தூண்டுகோல். இது உலகளாவியது. யாராலும் மறுக்க இயலாதது. யாரையாவது, நாக்கால் பற்களை துழாவச் சொல்லி, எப்படி உணர்கிறீர்கள் என்று கேளுங்கள். நாக்கு ஒரு படலத்தின் மீது நகர்வதை உணர்வார்கள். பற்களின் மீது படரும் படலம் இயற்கையானது. காலம் காலமாக இருப்பது. ஹாப்கின்ஸ் அதனை தன்னுடைய விளம்பரத்தில் அதனை திறமையாக உபயோகித்துக்கொண்டார்.


சரி, அந்தத் தூணுகோலால் மக்களுக்கு என்ன வெகுமதி கிடைக்கிறது? அழகான பற்களையுடைய முகம் கிடைக்கிறது. அழகான புன்னகையுடைய முகத்தை யார் நிராகரிப்பார்கள்? பெப்ஸோடன்ட் உபயோகித்து பல் துலக்குங்கள், கிடைத்துவிடுமே.


விளம்பரம் வெளிவந்த பிறகு, இரண்டு வாரங்கள்வரை பெப்ஸோடன்ட் விற்பனையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் மூன்றாவது வாரம் முதல் விற்பனை பரபரப்பாக முன்னேற ஆரம்பித்துவிட்டது. பெப்ஸோடன்ட் தயாரிப்பாளர்களால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தேவையான அளவு தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மூன்று வருடங்களில் உலகம் முழுவதும் பெப்ஸோடன்ட் பரவிவிட்டது. சீனா, ஜெர்மனி, ஸ்பெயின் என்று அனைத்து நாடுகளிலும் பெப்ஸோடன்ட்டின் விற்பனை நம்பமுடியாத அளவுக்கு எகிறியது. பத்து வருடங்களுக்குள் உலகத்தில் அதிகம் விற்பனையாகும் பொருட்களில் ஒன்றானது பெப்ஸொடன்ட்.  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு அமெரிக்காவில், அதிகம் விற்பனையாகும் பற்பசை என்ற பெயரை அது பெற்றது.

பெப்ஸொடன்ட் சந்தைக்கு வருமுன் ஏழு சதவிகித அமெரிக்க மக்கள் மட்டுமே, பற்பசை கொண்டு பல்துலக்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். பெப்ஸோடன்ட் வந்த பத்து வருடங்களில் அந்த சதவிகிதம் 65-ஐத் தொட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ராணுவத்தினரைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, பற்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சோதனையை அமெரிக்கா தளர்த்தியது. இதற்கு பெப்ஸோடன்ட் உதவியினால், அனேகர் பல்துலக்கும் பழக்கத்தினை மேற்கொண்டதே முக்கிய காரணம். “பெப்ஸோடன்ட் என்ற மாயப்பொருள் என்னை பல லட்சங்களுக்கு அதிபதியாக்கிவிட்டது. மனித மனம் செயல்படும்விதத்தை நான் அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டேன்.” என்று ஹாப்கின்ஸ் தன்னுடைய சுயசரிதையில் தெரிவிக்கிறார்.


அவர் மனோவியலைப்பற்றிக் கூறியது இரண்டு அடிப்படை உண்மைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
முதலாவது - ஒரு எளிமையான, புரிந்துகொள்ளக்கூடிய ஒரு தூண்டுகோல், நினைவுபடுத்தக்கூடிய ஒரு சொல்.
இரண்டாவது - வரையறுக்கத்தக்க ஒரு வெகுமதி.
இந்த இரண்டு கூறுகளையும் சரியாகப் பெற்றுவிட்டால் போதும். அப்புறம் நிகழ்வது அதிசயம்தான். பெப்ஸோடன்ட்-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தூண்டுகோல் - பற்களின் மேல் படரும் படலம். வெகுமதி - அழகான வெண்மையான பற்கள். இந்த இரண்டும் சேர்ந்ததும், லட்சக்கணக்கான மக்கள், பற்பசையைக்கொண்டு பல்துலக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டார்கள். இன்றளவும் ஹாப்கின்ஸினுடைய விதிகளே விளம்பரத்துறை நூல்களின் அடிப்படையாகத் திகழ்கிறது.


இந்த விதிகளைக்கொண்டு ஆயிரக்கணக்கான பழக்கங்கள் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறியாமலேயே உருவாக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களும், இதனைப்போன்று ஒரு பழக்கத்தினைக் கொண்டிருப்பதைக் காணலாம். உடற்பயிற்சி முடிந்ததும், ஒரு பழரசம் அருந்துவது, அல்லது குற்றவுணர்ச்சி இல்லாமல் தொலைக்காட்சி பார்ப்பது போன்று ஏதாவது பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.


ஹாப்கின்ஸ் தன்னுடைய நூலில் விளம்பரம் என்பது ஒரு சூதாட்டம் என்ற நிலையைக்கடந்து அறிவியல் என்ற நிலைக்கு முந்தியுள்ளது என்று கூறுகிறார். விளம்பரத்துறையை சரியான பாதையில் எடுத்துச்சென்று, தொழிலுக்கு நிச்சயம் வருமானம் தரும் வகையில் உபயோகப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார்.
இது கொஞ்சம் அதிகப்படியான கூற்றுதான். ஹாப்கின்ஸ் கூறிய இரண்டு விதிகள் மட்டுமே பழக்கம் ஏற்படுவதற்கு போதுமானதல்ல. 

அதையும் தவிர மற்றொரு விதியும் இருப்பதை ஹாப்கின்ஸ் அறியவில்லை. ஆனால் தன்னையறியாமலே ஹாப்கின்ஸும் அந்த விதியை உபயோகப்படுத்தியிருக்கிறார். அது நம்மால் எப்படி, ஒரு இனிப்பைக் கண்டதும் உண்ணவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது மற்றும் காலை நடைப்பயிற்சி எப்படி சுலபமாக மேற்கொள்ள முடிகிறது என்றும் விளக்குகிறது.


-தொடரும்.


இயற்கையின் படைப்பில் :திமிங்கலங்கள் ஒன்று சேர்ந்து, திட்டமிட்டு ஒரு பெரிய அலையை உருவாக்கி, பனிப்பாறையில் ஒய்வெடுத்துக்கொண்டிருக்கும் கடல்சிங்கத்தை, பனிப்பாறையிலிருந்து உருட்டிவிட்டு உணவாக்கிக்கொள்ள முயல்வதை, இந்த அரிய காணொளியில் காணுங்கள். அலையை உருவாக்குவதற்கு முன்பு, அலைக்கு வசதியாக பனிப்பாறையை நகர்த்தியும் வைத்துக்கொள்கின்றன.
கண்டு ரசிக்க ஒரு காணொளி :11 comments:

 1. ஹாப்கின்ஸ் அவர்களுடைய யுத்தியைத்தான் இன்று எல்லா நிறுவனங்களும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த உபயோகப்படுத்துகின்றன என எண்ணுகிறேன்.
  மக்களைக் கவர ஒரு அலங்கார சொல்லை வெளியிட்டு அதன் மூலம் அவர்களை கவர்ந்து, பின் தங்கள் தயாரிப்புகளை உபயோகிப்பதால் ஏற்படும் ‘நன்மைகளை’ காட்டி அவைகளின் விற்பனையை அதிகரிக்கிறார்கள் என்பதே உண்மை. நான் கூட இந்திய அரசின் நிறுவனமான தேசிய விதை கழகத்தில் விற்பனைப் பிரிவில் பணி புரிந்தபோது இந்த யுக்தியை முயற்சித்தேன்.
  தன்னையறியாமலே ஹாப்கின்ஸும் உபயோகப்படுத்திய அந்த விதியை அறிய காத்திருக்கிறேன்.

  கொசுறுத் தகவல்: நான் உபயோகிப்பது கூட ‘பெப்ஸோடன்ட்’ பற்பசைதான்!

  திமிங்கலங்கள் புத்திசாலித்தனமாக வேட்டையாடும் நிகழ்வை காணொளியில் கண்டு களித்தேன்.
  தான் மட்டும் ஆடாமல் தன்னோடு நிற்கும் இன்னொரு குழந்தையையும் ஆட சொல்லும் அந்த கொரியன் குழந்தையின் நடனத்தை இரசித்தேன்.
  காணொளிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   என்னைப்பொறுத்தவரை சந்தையில் உள்ள பொருட்களில் தரமான பொருட்களைவிட, அதிகமாக விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே அதிகம் விற்பனையாகிறது என்று நினைக்கிறேன். ஹாப்கின்ஸ் உபயோகப்படுத்திய மற்றொரு விதி வரும் வாரத்தில் வந்துவிடும்.

   இங்கு பெப்ஸோடன்ட்-ஐவிட கோல்கேட்தான் அதிகமாக விற்பனையாவதுபோல் தெரிகிறது. பற்பசை, பிரஷ் தயாரிப்பது மிகமிக அதிக லாபம் தரும் தொழில். 300 சதவிகிததுக்கு மேல் லாபம். 1981 வரை நான் பற்பசையை உபயோகித்தது கிடையாது. வேப்பங்குச்சிதான். என் பற்களில் குறையொன்றுமில்லை. பிரஷால் பல் துலக்குவதால் பற்களின் ஈறுகளுக்கு தினம் காலையில் மசாஜ் செய்வதும் தவிர்க்கப்படுகிறது. இதனாலும் பல் மருத்துவர்களுக்கு நல்லதுதானே.

   காணொளியின் ஆடும் குழந்தை, இன்னொரு குழந்தையும் ஆட அழைத்த்துதான் அதில் நெகிழ்ச்சியான தருணம்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. பற்பசை அறிமுகப்படுத்தப்பட்ட விதம் அருமை. அதை விட அருமை அதை நீங்கள் அளித்த விதம். ஒரு மர்ம நாவலை படிக்கும்போது ஏற்படும் பரபரப்பை உங்கள் எழுத்தில் காண முடிந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   தங்களின் பாராட்டு உற்சாகமளிக்கிறது. நன்றி.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. திமிங்கலங்களும் திறமையாக வேட்டையாடுகிறது...! (பகிர்வுக்கும் காணொளிக்கும் சம்மந்தம் உண்டோ...?)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
   ஆமாம். கிட்டத்தட்ட மனிதர்களிலும், மற்ற மனிதர்களை திட்டமிட்டு கவிழ்க்கும் திமிங்கல மனிதர்களும் உண்டுதானே?


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. ரசிக்க வைத்த பெப்சோடென்ட் கதை. விளம்பர யுக்திகளும் பிரமாதம். இவ்விஷயத்தில் இப்போது இன்னும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஹாப்கின்ஸ் தான் முதல் விளம்பரம் செய்தவர் என்னும் செய்தி புதிது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். விளம்பர உலகம் மிகவும் மாறிவிட்டது. விளம்பரங்களைப் பார்த்தால், தேவையில்லாத பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. விளம்பர யுக்கிதகள் அபாரம்
  காணொளி அற்புதம்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.கரந்தை ஜெயகுமார் அவர்களே!.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. ஹாப்கின்ஸ் செய்த விளம்ப யுக்தி, அமெரிக்கர்கள் பல் துலக்க துவங்கியது, பெப்ஸோடண்ட் வெற்றி – அனைத்தும் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.

  ReplyDelete