பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, October 31, 2013

கதம்பம்-12


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-3

சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழைய கிரேக்க தத்துவத்தின்படி, இறைவன் இயக்கும் நாடகத்தில், மனிதர்கள் பாத்திரங்களாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஃப்ராய்டின் தத்துவத்தின்படி, நாம் நமது மனதின் தன்மைக்கேற்ப இயங்கிக்கொண்டிருக்கிறோம். இச்சைகளால் உந்தப்பட்டு, ஆனால் மனசாட்சியால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்குகிறோம். வெளியில் அமைதியாகத் தோன்றினாலும், நமது உள்மனதில் எப்பொழுதும் எதைச் செய்யவேண்டுமென்று இச்சைக்கும், மனசாட்சிக்கும் இடையில் வழக்கு நடந்துகொண்டே இருக்கிறது. நமது மனதில் நிகழும் நாடகத்தில் கீழ்க்கண்ட மூன்று முக்கிய பாத்திரங்கள் உள்ளன என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

தனித்தன்மையான அடையாளம் (கீழ்மனம்): கட்டுக்குள் அடங்காத உணர்ச்சிகளின் இருப்பிடம்.

தன்முனைப்புள்ள மனம்: கீழ்மனத்துடன் பேரம் பேசி யதார்த்ததுக்கு ஒத்துவரக்கூடிய முடிவை எடுக்கவேண்டியது இதன் வேலை.

மேல்மனம்: கீழ்மனத்தின் செயலை இடித்துரைத்து கட்டுப்படுத்த விழைவது இதனுடைய கடமை.

மேற்கண்ட மூன்று பாத்திரங்களுக்கும், கதையின் (செயலின்) முடிவு எப்படியிருக்கவேண்டுமென்று தனித்தனியான எண்ணங்கள் உண்டு. ஒவ்வொரு பாத்திரமும் இறுதி முடிவைத் தீர்மானிக்க கடுமையாகப் போட்டியிடுகின்றன.

கீழ்மனம்:

நான் விரும்பியபடி அனைத்தும் எனக்கு வேண்டும் என்பதே வாழ்வின் முக்கிய நோக்கம். இதுவே கீழ்மனதின் கொள்கை.

முதலாவது பாத்திரமாக ஃப்ராய்ட் கூறும் கீழ்மன அடையாளம் நமது பிறப்பிலிருந்தே உள்ளது. உலகிலுள்ள ஒவ்வொருவரிடமும் அந்த நாடக பாத்திரம் உள்ளது. மனிதனின் அனைத்து இச்சைகளும் இந்தக் கீழ்மனதில்தான் குடிகொண்டுள்ளது. அனைத்து இச்சைகளையும் சுமந்து, உங்களது தோள்களிலேயே எப்பொழுதும் அமர்ந்துகொண்டு, குட்டிப் பிசாசுபோல தனது இஷ்டப்படி ஒருவரை இது ஆட்டிவைக்க முயலுகிறது. தனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். அதுதான் உண்மையான கீழ்மனதின் வெளிப்பாடு என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். 

இந்த கீழ்மனம், நமது அனைத்து இச்சைகளையும் சேர்த்து வைத்திருக்கும் கொள்கலன் போன்றது. நாம் பிறக்கும்பொழுது இந்த கீழ்மனதின் முழுஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற கதாபாத்திரங்கள், குழந்தைப் பருவத்தில் இந்த கீழ்மனதை கட்டுப்படுத்துவதில்லை. பசித்திருக்கும் நேரத்தில் உணவு வருமென்று எந்த குழந்தையும் பொறுத்திருப்பதில்லை. தனக்கு வேண்டியது கிடைக்கும்வரை கீழ்மனம் திருப்தி அடைவதில்லை. 

இதற்காக கீழ்மனதை மிகவும் தவறான ஒன்று என்று எண்ணிவிடவேண்டாம். இச்சைகள் இல்லாத வாழ்வை எண்ணிப்பாருங்கள். இச்சைகளே நம்மை வாழ்வின் அடுத்த நிலையை சிந்திக்கத் தூண்டுகிறது. தொடர்ந்து உயிர்வாழத் தேவையான செயல்களை நோக்கிச் செல்ல வைக்கிறது. இச்சைகள் இல்லாத பட்சத்தில் வாழ்வதற்கு எந்த பிடிமானமும் இருக்காது. வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருப்பதில்லை. எனவே, ஒருவரது ஆளுமையின் பெரும்பகுதியாக அவரது இச்சைகளும், அந்த இச்சைகளை திருப்தி படுத்த எடுக்கும் முயற்சிகளுமே இருக்கின்றன என்று ஃப்ராய்ட் கூறுகிறார். 

தன்முனைப்புநிலை மனம்:

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஆனால், பொதுவாக யாருக்கும் அப்படி அமைந்து விடுவதில்லை. விருப்பப்படுவது நிறைவேறாமல் இருந்தால் ஏற்படும் விரக்திக்கு, இந்தத் தன்முனைப்பு நிலை மனதின்மேல் நீங்கள் பழிபோட்டுவிடலாம். ஒருவருடைய ஆளுமையின் இரண்டாவது அடுக்காக இந்தத் தன்முனைப்புநிலை மனதை ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். இந்த பாத்திரத்தின் தலையாய கடமையானது, கீழ்மனதிற்கும், மேல்மனதிற்கும் இடைவெளியைக் குறைத்து, இச்சைக்கும் நடைமுறை வாழ்க்கை உலகிற்கும் ஒப்பிட்டு, ஒரு சமாதானமான முடிவை அணுகுவதாகும்.  

தன்முனைப்புநிலை மனமானது, ஒரு தரகுவேலை செய்பவருக்கு ஒப்பானது. ஒரு பொருளை விற்க முயல்பவர் ஒரு விலையைக் கூறுவார். வாங்க விரும்புபவரோ வேறொரு விலைக்கு எதிர்பார்ப்பார். இருவருக்கும் இடையில் ஒரு சமாதானமான விலையை அடையச் செய்வது தரகரின் வேலை. இச்சையை எதிர்ப்பது, தன்முனைப்புநிலை மனதின் வேலை இல்லை. நடைமுறைக்கு ஒத்துவரும் வகையில் இச்சையைப் பணியச்செய்வதே அதனுடைய வேலை. இச்சையின் சக்திகளை தேவையானபடி உருமாற்றி, வழிநடத்தி, கட்டுப்படுத்தி, யதார்த்த நிலைக்கு ஏற்றவாறு கொணர்ந்து இச்சையை இது திருப்திப் படுத்துகிறது.

--- தொடரும்.
 
சட்டம் ஒரு இருட்டறை:
1980-ல் ஆப்பிள் நிறுவனம் அயர்லாண்டு நாட்டில் “ஆப்பிள் ஆப்பரேஷன்ஸ் இன்டர்னேஷனல்” (AOI) – என்ற ஆப்பிளின் மற்றொரு நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆப்பிளின் அனைத்து நிறுவனங்களின் வரவு செலவும், இந்த நிறுவனத்துக்கு வந்து சேருவதற்காக ஆப்பிள் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தது. ஆப்பிள் அமெரிக்கா, நேர்முகமாகவோ அல்லது வெளிநாட்டு ஆப்பிள் நிறுவனங்கள் மூலமாகவோ AOI – ன் நூறு சதவிகிதம் பங்குகளும் ஆப்பிள் அமெரிக்காவுக்கு சொந்தமானவைகள்.
ஆப்பிள் சிங்கப்பூர் நிறுவனம், ஆப்பிள் ஐரோப்பா நிறுவனம், ஆப்பிள் அமெரிக்க நிறுவனம் ஆகிய அனைத்தின் பங்குகளையும் AOI- தான் வைத்திருக்கிறது.
AOI -க்கு என்று அயர்லாந்தில் 35 வருடங்களாக சம்பளக் கணக்கில் ஒருஊழியர் கூட கிடையாது. இரண்டு டைரக்டர்களும், ஒரு அதிகாரி மட்டுமே அதற்கு உண்டு. அவர்களில் இருவர் கலிஃபோர்னியாவில் வசிக்கின்றனர். இதுவரை நடந்த 33 போர்டு மீட்டிங்களில், 32 போர்டு மீட்டிங்-கள் கலிஃபோர்னியாவில்தான் நடந்திருக்கின்றன. ஒரே ஒரு மீட்டிங் மட்டுமே அயர்லாந்தில் நடந்திருக்கிறது.
AOI - இதுவரை எந்த நாட்டிலும் வரி செலுத்தியதில்லை. 2009 முதல் 2012 வரை அதனுடைய வருமானம் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் அந்த நிறுவனம் எந்த நாட்டிலும் வரிக்கணக்கு செலுத்தியதில்லை.  AOI – வருமானம் ஆப்பிள் வருமானத்தில் 30 சதவிகிதம் (2009 முதல் 2011 வரை) ஆகும். கடந்த ஐந்து வருடங்களாக   AOI  - எந்த நாட்டிலும், நிறுவன வரி காண்பித்ததோ, செலுத்தியதோ கிடையாது.
அமெரிக்க வரிவிதிகளுக்கும், அயர்லாந்து வரிவிதிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்தி ஆப்பிள் பலனடைந்து வந்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வரியானது, நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட இடத்தினைப் பொறுத்தது. ஆனால் அயர்லாந்தில், நிறுவனங்கள் வரியானது நிறுவனங்கள் நடைபெறும் முறையைக்கொண்டு வரிவிதிக்கிறது. ஆப்பிள் அயர்லாந்தில் நிறுவப்பட்டதால் அமெரிக்காவின் வரியிலிருந்து தப்பித்துவிடுகிறது. அமெரிக்காவில் அதனுடைய வேலைகள் நடைபெறுவதால், அது அயர்லாந்து நிறுவன வரியிலிருந்தும் தப்பித்துவிடுகிறது. எனவே நாங்கள் அமெரிக்க சட்டப்படி, அமெரிக்காவில் வரிசெலுத்த வேண்டியதில்லை என்று ஆப்பிள் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆப்பிள் சேல்ஸ் இன்டெர்னேஷனல் (ASI) என்பது ஆப்பிள் நிறுவனத்தின் இன்னுமொரு அயர்லாந்து நிறுவனம்.   ASI –ன் வேலை ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை அவர்களுடைய ஒப்பந்த உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கவேண்டும். அதாவது சீனாவிலிருந்து வாங்கவேண்டும். அப்படி வாங்கிய ஆப்பிளின் தயாரிப்புகளை அது அதிகவிலையில், ஆப்பிளுடைய கிளை நிறுவனங்களான ஆப்பிள் ஐரோப்பா, ஆப்ரிக்கா, இந்தியா, அரபு நாடுகளுக்கு விற்கவேண்டும்.
ASI - அயர்லாந்து நிறுவனமாக இருந்தாலும், அயர்லாந்துக்கு அனைத்து தயாரிப்புகளும் வரத்தேவையில்லை. அயர்லாந்து விற்பனைக்குத் தேவையான அளவு வந்தாலே போதும். 2012 – க்கு முன்பு வரை  ASI -க்கும் அயர்லாந்தில் ஒரு ஊழியர்கூடகிடையாது. ஆனால் 2009 முதல் 2012 வரை அதனுடைய வருமானம் 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.  மேலே கூறப்பட்ட அதே காரணத்தினால், 2009-லிருந்து 2012 வரை அமெரிக்காவுக்கு செலுத்துவேண்டிய வரியிலிருந்து ஆப்பிள் விலகியிருக்கிறது. AOI - போல ASI -ம் எந்த நாட்டிலும் வரிக்கணக்கு காட்ட வேண்டிய அவசியமில்லை.

 
 

 
 

துணுக்கு:  
 
 
இதுவரை ஒத்துக்கொள்ளப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள் சரியாகத்தான் இருக்குமென்ற எண்ணத்துடன் துவங்கப்படும் எந்த ஆராய்ச்சியும், உரையாடலும் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையை அளிப்பதில்லை.
 
- ஆலிவர் ரைட்
 
 
மதங்கள் இருந்தாலும், மதங்கள் இல்லாவிட்டாலும் நல்லவர்கள் நல்லவைகளையே செய்வார்கள்; தீயவர்கள் தீயவைகளையே செய்வார்கள். ஆனால் நல்லவர்கள், தீய செயல்களை செய்வதற்கு மதங்களே  காரணியாகிறது.
 
-ஸ்டீவன் வெயின்பர்க்.


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !

 
 
 
 

14 comments:

 1. வணக்கம்
  பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் மேலும் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, திரு.ரூபன்.
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. //இச்சைகளால் உந்தப்பட்டு, ஆனால் மனசாட்சியால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்குகிறோம்.//

  ஃப்ராய்டின் தத்துவம் சரி என்றே தோன்றுகிறது. இதை யாராவது மறுத்து எதிர் கருத்தை வைத்திருக்கிறார்களா?

  மூன்றடுக்கு மனம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். இதுவரை படித்ததில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி!


  Apple a day keeps the Doctor away என்பது வழக்குச் சொல். நீங்கள் தந்துள்ள தகவலைப் படிக்கும்போது Apple (OI) away from US keeps the Taxman away! என சொல்லலாம் போல் உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இது போல் செய்யமுடியாது.

  துணுக்குகள் இரண்டும் அருமை அதிலும் ஆலிவர் ரைட் சொல்வது Right தான்!

  உங்களுக்கு எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies

  1. // இதை யாராவது மறுத்து எதிர் கருத்தை வைத்திருக்கிறார்களா? //
   வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.
   எனக்கு மனோவியலில் இதற்கு பதில் சொல்லும் அளவுக்குத் தெரியாது. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் (ஒரே குடும்பத்தினராக இருந்தாலும்) ஒவ்வொரு கேரக்டராக இருப்பதால் மனோவியலில் கொஞ்சம் ஆர்வம் வந்தது. மேலும் வருடம் 2020-ல் அதிக நோய்கள், மனம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்குமாம்.
   // ஆனால் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இது போல் செய்யமுடியாது.//
   எனக்குஇந்தியாவில் ஆப்பிளைவிட அதிகம் ஏமாற்றும் நிறுவனங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். குரு என்று ஒரு திரைப்படம் வந்தது. அது அம்பானியின் கதையாம். அம்பானி உயிரோடு இருந்தவரை வரி கட்டியதே இல்லையாம். ரிலையன்ஸ் செய்த வேலைகள் நான் ஊரில் இருக்கும்போதே ஓரளவுக்குத் தெரியும்.
   இதைப் படிக்கவும். (பிர்லா சம்பந்தப்பட்ட விஷயத்தை.)
   சோழியன் குடுமி சும்மா ஆடாது.

   http://balhanuman.wordpress.com/2013/10/27/எறி-படக்கம்-தெரியுமா-பார/   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. உள்மனம் வெளிமனம் இரண்டையும் சமபடுத்தி விட்டால் பிரச்சனை இல்லை... ஆனால் சிரமம்...!

  துணுக்குகள் அருமை...

  இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திரு.நம்பள்கி.
   மொய்தானே ! வைத்தால் போயிற்று.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. சிக்மென் பிராய்ட்...

  மீண்டும் ஒருமுறை கல்வியியல் படித்ததுபோல் இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திரு.சௌந்தர்.
   வாழ்க்கை நிலையானது போல் கல். வாழ்க்கை நிலையற்றது போல் அனுபவி என்று காந்தி கூறியதுபோல் ஞாபகம். எனவே எப்பொழுதும் கற்றுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. சிக்மன் ஃப்ராய்டின் ஆழ்மனக் கோட்பாடுகளை விளக்கியமைக்கு நன்றி!
  எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

   அன்புடன்

   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 7. ஆனால் ஃப்ராய்டின் தத்துவத்தின்படி, நாம் நமது மனதின் தன்மைக்கேற்ப இயங்கிக்கொண்டிருக்கிறோம். இச்சைகளால் உந்தப்பட்டு, ஆனால் மனசாட்சியால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்குகிறோம்.//

  இதுதான் சரியா கணிப்பு. விதி தலையெழுத்து இது எனக்கு ஏற்கனவே இறைவனால் விதிக்கப்பட்டுவிட்டது என்பதெல்லாம் கண்துடைப்பு சமாச்சாராங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.

   // என்பதெல்லாம் கண்துடைப்பு சமாச்சாராங்கள்//

   என்னுடைய அனுபவத்தில், திரும்பிப் பார்க்கும்பொழுது அனைத்தும் முன்னமேயே யாரோ திட்டமிட்டதுபோல் தோன்றுகிறது. ஆனால் அதைப்பற்றி நான் அவ்வளவாக சிந்திப்பதில்லை.

   I just try to live up to my conscience.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்


   Delete