பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, October 10, 2013

கதம்பம்-9


நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்களா?

மிகச் சுலபமாக விடையளிக்க முடியாத கேள்வி. ஏனெனில் இது நாம் யாரை நம்மிடம் ஒப்பிட்டு கூறுகிறோம் என்பதைப் பொறுத்தது. அநேகமாக மக்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். நாம் நமது நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், சுற்றுவட்டாரத்தில் தெரிந்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து நமது மகிழ்ச்சியை அளவிடுகிறோம்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தவிர, சில சமயங்களில் நான் சந்திக்காதவர்களையும் நம்மிடம் ஒப்பிடுகிறோம். ஒப்பிட்டு நோக்கும்பொழுது, அடுத்தவர்களுடைய வாழ்வின் துயரமான தருணங்களின் மீது நமக்கு ஒரு கவர்ச்சி இருப்பதாகத் தெரிகிறது. ஊடகங்களும் அந்தக் கவர்ச்சியைப் பயன்படுத்தி, அதற்கேற்றவாறு பிரபலங்கள் மற்றும் அடுத்தவர்களின் துயர அத்தியாயங்களை வெளிக்கொணர்ந்து நம்மை மகிழ்விக்கிறது.

அடுத்தவர்களின் சோகங்களை கேட்பதில் இருக்கும் கவர்ச்சி, மனித சமுதாயத்தின் ஆரம்பத்திலிருந்தே இருப்பதாகத் தெரிகிறது. அம்பிகாபதி, அமராவதி முதல் தேவதாஸ், பார்வதிவரை அனைத்தும் துயரங்களின் சமுத்திரங்களாகும். காதலர்கள் எப்படியெல்லாம் துயரங்களை சந்திக்கிறார்கள் என்பதனை விளக்கும் வெற்றிகரமான கதைகள்.

இதனால் அடுத்தவர்களின் துயரங்களில் நாம் இன்பம் காண்கிறோம் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் அதில் ஒரு கவர்ச்சி இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்தக் கட்டுரையில் அது ஏன் என்பதனை ஆராய்வோம்.

மூடி மறைத்தல்:

அடுத்தவர்களின் துயரத்தை அறிந்துகொளவதில் நமக்கு மிக்க ஆர்வமிருந்தாலும், நாம் நம் சோகங்களை அடுத்தவர்களிடமிருந்து மறைக்க முயல்கிறோம். மனோவியலாளர்கள், மக்கள் தங்களது துன்பங்களை, தோல்விகளை, பிரச்சனைகளை முடிந்தவரை அடுத்தவர்களிடமிருந்து மறைக்கின்றனர் என்றும், தங்களது வெற்றிகளை கூரைமீது நின்று கூவ முயல்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

மக்களுடைய மனதில் எப்படிப்பட்ட சிந்தனைகள் இருந்தாலும், அடுத்தவர்களிடம் வெளிக்கொணரும் தருணங்களில், தங்களை உயர்த்திக்காட்டும் எண்ணங்களையும் செயல்களையும் மட்டுமே பிரதிபலிக்கின்றனர். துன்பங்களையும், தாழ்வுகளையும் மறைக்கவே பாடுபடுகின்றனர்.

இதற்காக மேற்கொண்ட ஒரு சோதனையில் பங்கேற்பவர்களிடம் ஒவ்வொரு மணிநேர இடைவெளியில், தங்களது மன உணர்வுகளை கருத்திடுமாறு கூற்ப்பட்டது. அப்பொழுது பங்கேற்றவர்கள், தங்களது மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் எண்ணங்களையே அவர்கள் அதிகமாகக் குறிப்பிட்டனர். சோகங்களை பிரதிபலிக்கும் எண்ணங்களை அவர்கள் மறைத்துவிட்டனர்.

மனித மனம் எப்பொழுதும், தன்னை மற்றவர்களுடன் ஒப்பு நோக்கவே விழைகிறது. ஒவ்வொருவரும் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே வெளிக்காட்டி, துன்பங்களை மறைத்து நடமாடுதலால், எந்த அளவுக்கு ஒருவர் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை கண்டுபிடிப்பதில் சரியான முடிவினை அடைவது சிரமமாக உள்ளது.

 

மறைந்திருக்கும் உணர்வுகள்:

அலெக்ஸான்டர் ஜோர்டான் என்ற மனோவியலாளர், மகிழ்ச்சியின் தொடர்பாக, அடுத்தவர்கள் நம்மைப்பற்றி கொண்டுள்ள மதிப்பீட்டையும், நாம் அடுத்தவர்கள் மீது கொண்டுள்ள மதிப்பீட்டையும் குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.

முதலில் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரிடமும், குறிப்பிட்ட காலகட்டத்தில், எவ்வளவு காலங்கள் சோகமான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. பிறகு பங்கேற்கும் முழுக்குழுவுக்கும் அதே காலகட்டத்தில் சோகமான மனநிலையின் சராசரியைக் கணிக்குமாறு கேட்கப்பட்டது.

பங்கேற்பவர்களிடமிருந்து உண்மையான பதிலைப் பெறுவதற்காக அவர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பங்கேற்பாளர்கள் அடுத்தவர்களுடைய சோகங்களை இருபது சதவிகிதம் குறைவாகவே மதிப்பிட்டனர். அடுத்தவர்களுடைய மகிழ்ச்சியை ஓரளவுக்கு சரியாகவே மதிப்பிட்டனர்.

இன்னொரு சோதனையில், பங்கேற்பாளர்களிடம், சில மாதங்களுக்கு, அவர்களுடைய சோகமான தருணங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் குறித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  அதன்பிறகு, பங்கேற்பாளர்களுக்கு மிகவும் பழக்கமான மூவரிடம், பங்கேற்பாளர்களுடைய மகிழ்ச்சி குறித்த மதிப்பீடுகளை, அதே கால கட்டத்துக்குப் பெற்றுக்கொண்டனர். மீண்டும் முடிவுகள் ஒத்துப்போகவில்லை. பங்கேற்பாளர்களுக்கு பழக்கமான மூவருமே, பங்கேற்பாளர்களின் மகிழ்ச்சியை அதிகமாகவும், துயரங்களைக் குறைவாகவுமே மதிப்பிட்டிருந்தனர். அதாவது, பங்கேற்பாளர்கள் தங்களைவிட மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக குறிப்பிட்டிருந்தனர்.

அடுத்தவர்கள் நம்மைவிட மகிழ்ச்சியாக வாழ்வதாக மதிப்பிடுவதால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன?

மூன்றாவதாக ஜோர்டான் நடத்திய சோதனையில் இதற்கு பதில் கிடைத்தது. அடுத்தவர்களுடைய மகிழ்ச்சியை அதிகமாக மதிப்பிடுபவர்கள், தங்களது வாழ்வில் திருப்தியில்லாதவர்களாகவும், பிரச்சனையிருப்பவர்களாகவும் இருப்பது தெரியவந்தது.

அதாவது மனத்தளர்ச்சி மற்றும் துயரத்தில் இருப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களையும் தங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி ஒப்பிட்டு நோக்குவது ஒரு சோகமான எண்ணங்களின் சுழற்சியை ஏற்படுத்திவிடுகிறது.

 

ஆறுதலான சிந்தனையோட்டம்:

நாம் நம்முடைய சோகங்களை அடுத்தவர்களிடம் மறைக்க முயல்வதுபோல, அடுத்தவர்களும் தங்களுடைய சோகங்களை மறைக்க முயல்வார்கள் என்றும் நாம் உணரவேண்டும். ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை என்று சோதனைகளிலிருந்து தெரியவருகிறது.

அடுத்தவர்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகத் தோன்றுவதால், நம்மைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சனைகள் உண்டு என்று நம்ப மறுக்கிறோம்.

அடுத்தவர்களுடைய சோகங்களை ஊடகங்கள் வாயிலாகவும், கலைகள் வாயிலாகவும் நாம் அறிகிறோம். சோகமான கதைகள், துயரமிக்க பாடல்கள், பிரபலங்களின் பிரச்சனைகள் நமக்கு ஒருவிதமான ஆறுதலான நிம்மதியை அளிக்கிறது. கலைகள் வழியாக நாம் காணும் சோகநிகழ்ச்சிகள், நாம் மட்டுமே துன்பத்துடன் வாழ்வதில்லை என்ற ஆறுதலை அளிக்கிறது. நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் துயரங்கள் அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவை வரவேற்கவும்படுகின்றன. இது நமது உண்மையான வாழ்வுக்கு எதிரானதாகும். துயரம் என்பது நமக்கு மட்டும் கிடையாது என்ற ஒருவிதமான ஆறுதலை அது அளிக்கிறது.

நமக்கு துன்பம் உள்ளபொழுது அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் அவர்களுக்கு துன்பமே இருக்காது என்று எண்ணிவிடாதீர்கள். நம்மைப்போலவே அவர்களும் துன்பங்களை மறந்து, மறைத்திருக்கக்கூடும் என்று உணர்ந்துகொள்ளுங்கள்.

முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஃப்ரெஞ்ச் அறிஞர் மோன்டிஸ்கியூ கூறிய வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள்.

“நாம் மகிழ்ச்சியாக இருப்பதென்பது மிகவும் எளிதான காரியம். ஆனால், நாம் அடுத்தவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பதென்பது இயலாத காரியம். ஏனென்றால் அடுத்தவர்கள் நம்மைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றே நாம் எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

http://psychcentral.com/   - லிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.

 

 

துணுக்கு:

“அவரோட பையன், அப்பா மேல கோவம் வந்தா, உடனே பாத்ரூம் போய், வாஷ் பேசின், டாய்லெட் எல்லாம் கிளீன் பண்ண ஆரம்பிச்சிடுவானாம்”

 “பரவாயில்லையே, கோவத்த கட்டுப்படுத்தறத்துக்கு நல்ல வழியாச்சே!. ஆனால் அதுக்கு அவுங்க அப்பா ஏன் கோவப்படுறாரு?”

“கிளீன் பண்றதுக்கு, அப்பா டூத் பிரஷல்ல யூஸ் பண்றானாம்.”

12 comments:

  1. நம் வீட்டில் கரண்ட் இல்லையென்றால் அடுத்தவீட்டில் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அங்குமில்லையென்றால் ஒரு அலாதி திருப்தி. எனக்கு இரு கண்போனாலும் அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும். மகிழ்ச்சி ஒப்பிட்டுப் பார்த்தா அறியப் படுகிறது.?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! தாங்கள் கூறுவது உண்மைதான். கல்லூரியில் படிக்கும்பொழுது, அனைவரும் படிக்க முடியாமல் கரண்ட் கட் ஆகிவிட்டால், நிம்மதியாக உணர்ந்த நேரங்களும் உண்டு.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. எனக்கு என்னமோ மகிழ்ச்சி எனது அதுவல்ல என்றே தோன்றுகிறது... அடுத்தவர்களை நினைத்தாலே மகிழ்ச்சி ஏது...?

    /// மனத்தளர்ச்சி மற்றும் துயரத்தில் இருப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களையும் தங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி ஒப்பிட்டு நோக்குவது ஒரு சோகமான எண்ணங்களின் சுழற்சியை ஏற்படுத்திவிடுகிறது... /// --> (முதல் முதலாக எழுத நினைத்த பதிவு : மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ? : http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html) இருந்தாலும் அடுத்த பதிவு இதைப் பற்றி தான்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!. மகிழ்ச்சி குறித்த தங்களது பதிவினையும் படித்து மகிழ்ந்தேன்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. எப்போதும்போலவே மொழிமாற்றல் என்பதை அறிய முடியாதபடி இருந்தது உங்களுடைய தமிழாக்கம்.

    நாம் மட்டும்தான் உலகில் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கிறோம், மற்றவர்கள் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் என்றும் எனக்கு மட்டும் ஏன் எப்போதும் துன்பமே வருகிறது என்றும் எண்ணி எண்ணியே நம்மில் பலரும் நம்முடைய நிம்மதியை இழந்துபோகிறோம். நம்முடைய தோல்விகள் நமக்கு ஏற்படுத்தும் சோகத்தை விட மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களே என்ற எண்ணமே நம் சோகத்தை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கிறது என்பதும் உண்மை. அத்தகைய எண்ணங்களிலிருந்து மீண்டு வந்தால் மட்டுமே நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்..... அது அத்தனை எளிதல்லவே.... அருமையான கருத்துக்களை கொண்ட பதிவு... அனைவரும் படித்து கற்றுக்கொள்ள வேண்டிய கருத்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //அது அத்தனை எளிதல்லவே..//
      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! ஆமாம். நம்மையும் மீறி, நமது எண்ணங்கள் சில சமயங்களில் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. குதிரையின் கடிவாளத்தை இழுப்பதுபோல, உடனே ஒப்பிட்டுப் பார்க்காதே என்று கூறி திசை திருப்ப வேண்டியிருக்கிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. இயல்பான மொழிபெயர்ப்பு! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா! முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. உளவியல் அறிஞர் சிக்மன் ப்ராய்டின் கோட்பாடுகளைப் பற்றி எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  6. எப்பொழுது நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடாமல் இருக்கிறோமோ, அப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆனால் எல்லோரும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்றால் ஒப்பிடலாமாம் எப்போது என்றால்
    தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
    அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
    கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
    எற்றே யிவர்க்குநா மென்று

    அருமையான கருத்தை அழகாய் மொழிபெயர்த்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

    வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள் தமிழில் இருக்க இன்று உலகமயமாக்கல் போர்வையில், அனைத்தையும் வெளியே தேடவேண்டிய நிலைமை. தாங்கள் கூறும் செய்யுள் பள்ளியில் படித்ததுகூட எனக்கு நினைவில் இல்லை. வேறு வழியில்லை. ஊரோடு ஒத்து வாழாவிட்டால் இன்று, காட்டுக்கு செல்ல காடுகள் கூட இல்லை. கருத்துமிக்க பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete