சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:
அத்தியாயம்-2
சிக்மண்ட்
ஃப்ராய்ட் 1856-ல் மே ஆறாம் தேதி ஆஸ்ட்ரியாவின் தலைநகரான வியன்னாவில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு கம்பளி வியாபாரி. தாயார் வீட்டை நிர்வகித்து வந்தார்.
பள்ளியில் எப்பொழுதும் முதல் இடத்தில் இருந்த , ஃப்ராய்ட், கல்லூரியில் அந்தக் காலத்தில் யூத
இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான மருத்துவத்துறையில் சேர்ந்தார். கல்லூரியில்
எர்ணஸ்ட் ப்ரூக் என்ற பேராசிரியரின் தலைமையில், உடற்கூறு பிரிவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அந்தப் பேராசிரியர், எந்த உயிரிலும் உடல் சார்ந்த மற்றும் வேதியியல் சார்ந்த சக்திகளைத் தவிர வேறு
எந்தவிதமான சக்திகளும் இருப்பதில்லை என்ற கொள்கையினைக் கொண்டிருந்தார். அவரைப்
பின்பற்றிய ஃப்ராய்ட், ஒருவருடைய தனித்தன்மையை அவருடைய நரம்பியலுடன் மட்டுமே
சம்பந்தப்படுத்த முயன்று, பின்னாளில் அந்தக் கொள்கையைக் கைவிட்டார்.
ஃப்ராய்ட்
ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்தார். தனது
ஆராய்ச்சியை மூளையின் நரம்பு மண்டலத்திலும், புதிய செல்லினை உருவாக்குவதிலும்
செலுத்த விரும்பினார். ஆனால் போட்டிகள் அதிகமாக இருந்ததால், விரும்பிய துறையில்
அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருந்தது. அவருடைய பேராசிரியர் எர்ணஸ்ட்
ப்ரூக், ஃப்ராய்டுக்கு உளவியல் துறையில் உதவித் தொகையுடன் ஆராய்ச்சிகள் செய்யும்
வாய்ப்பினைப் பெற்றுத்தந்தார். பாரிஸில் உளவியல் பேராசிரியர் “சார்கோட்” என்பவரின்
தலைமையில் ஃப்ராய்ட் ஹிப்னாஸிஸ் மற்றும் ஹிஸ்டீரியா தொடர்பாக ஆராய்ச்சிகளை
மேற்கொண்டார்.
ஃப்ராய்ட் சில காலங்கள் பெர்லினில் குழந்தைகள்
மருத்துவப்பிரிவில் நிர்வாகப் பொறுப்பில் பணிபுரிந்தபின் மீண்டும் வியன்னாவுக்குத்
திரும்பினார். வியன்னாவில் மாந்தா பென்னேஸ் என்பவரை மணமுடித்தார். டாக்டர்.ஜோசஃப்
ப்ரூயருடன் சேர்ந்து நரம்பியல் மற்றும் உளவியல் மருத்துவத்தில் பணிபுரிய
ஆரம்பித்தார்.
ஃப்ராய்டின் உரைகளும், நூல்களும் மருத்துவ
சமுதாயத்தினரிடமிருந்து அவருக்கு புகழையும் அதே நேரத்தில் எதிர்ப்பையும்
பெற்றுத்தந்தன. ஃப்ராய்டின் கருத்துக்களை ஒத்துக்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும்
ஓரளவுக்குப் பெருகியதால் ஃப்ராய்டின் தலைமையில் உளநிலை ஆய்வுத்துறையில் பெரிய
திருப்புமுனை ஏற்பட்டது. ஆனால், ஃப்ராய்ட், தன்னுடைய கருத்துக்களை எதிர்ப்பவர்களை,
ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடும் குணத்தைக் கொண்டிருந்தார். அவர்களில் சிலர்,
நண்பர்களாகவே அவரிடமிருந்து ஒதுங்கிக்கொண்டனர். சிலர் அவரை எதிரியாகவும்
பார்த்தனர்.
இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தில் வியன்னா யூதர்களுக்கு
பாதுகாப்பு இல்லாத இடமாகியது. அதிலும் ஃப்ராய்ட் போன்ற பெயர் பெற்றவர்களுக்கு மிகவும்
ஆபத்தான இடமாகியது. அதனால் ஃப்ராய்ட், ஆஸ்ட்ரியாவிலிருந்து பிரிட்டனுக்கு
இடம்பெயர்ந்தார். தொடர்ந்து சுருட்டு பிடிக்கும் பழக்கமுடையவராக இருந்ததால்,
ஃப்ராய்ட் வாழ்நாளின் கடைசி இருபது வருடங்கள் வாய்ப்புற்று நோயால் அவதியுற்று,
1939-ல் பிரிட்டனில் மரணமடைந்தார்.
கோட்பாடுகள்:
உணர்வுநிலை
மனம், ஆழ்மன உணர்வுநிலை மனம் இரண்டும் ஃப்ராய்டுக்கு முன்னரே உளவியலில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றைப் பிரபலப்படுத்தியவர் ஃப்ராய்ட்
என்று கூறமுடியும். நிகழ்காலத்தில், இந்தத் தருணத்தில் ஒருவருடைய தற்போதைய
உணர்வுகள், நினைவுகள், எண்ணங்கள், கற்பனைகளைக் கொண்டிருக்கும் மனநிலை, உணர்வுநிலை
மனம் எனப்படுகிறது.
ஒருவர்
தற்போதைய தருணத்தில் சில எண்ணங்களையும், நினைவுகளையும் கொண்டிருக்கமாட்டார்.
இருப்பினும் அவர் விருப்பப்பட்டால், சில எண்ணங்களையும், நினைவுகளையும் மீண்டும்
நினைவுகூற முடியும். அத்தகைய நினைவுகளை, “கிடைக்கக்கூடிய நினைவுகள்” என்று
ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு மன அடுக்குகளிலும் யாருக்கும் பிரச்சனை
இருக்காது. ஃப்ராய்டு இந்த இரண்டு மன அடுக்குகளையும், நமது மனதின் சிறிய பகுதிகளே
என்று குறிப்பிடுகிறார்.
நமது
மனதின் மிகவும் அதிகமான பகுதி ஆழ்மன உணர்வுநிலை மனமாகும். அந்த நினைவுகள், நமது
இயல்பான நினைவுக்குக் கிடைப்பதில்லை. நமது உள்ளுணர்வுக்குத் தேவையான அனைத்தும்
அங்கே புதைந்து கிடக்கின்றன. அந்த நினைவுகளை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது.
மேலும் மனஅதிர்ச்சி, மனப்பிளவு போன்ற பிரச்சனைகளுக்கு அந்த நினைவுகளே காரணம்.
மனிதனின் இயற்கை இச்சைகளான பசி, பாலுணர்வு முதற்கொண்டு, ஒரு கலைஞனுடைய சிந்தனைகள்,
அறிவியலாளர்களின் அறிவார்வம் போன்றவைகளுக்கு இந்த ஆழ்மன உணர்வுநிலையே ஆதாரமாக
உள்ளது என்று ஃப்ராய்ட் கருதுகிறார். இருந்தபோதிலும், அநேகமாக எப்பொழுதும், நாம்
இந்த ஆழ்மன உணர்வுகளை எதிர்க்கவும், மறுக்கவும் முயல்கிறோம். அதனால் அவை வேறொரு
வடிவில் நமது வெளிப்பாடாக காட்சியளிக்கிறது.
---- தொடரும்.
பூமராங் புதிர்:
நான் சிறுவனாக இருந்தபொழுது வீட்டில் பூனைக்குட்டிகள் அதிகமாகிவிட்டால், ஒரு
மைல் கடந்து அந்த குட்டிகளை விட்டுவரவேண்டும். அதாவது பூனைக்குட்டிகளை ஊர் கடத்த
வேண்டும். இதில் பிரச்சினை என்னவென்றால், நான் வீடு திரும்புவதற்குள் பூனைக்குட்டிகள்
வீடு திரும்பியிருக்கும்.
சென்ற வருடம் (2012) நவம்பர் மாதம், அமெரிக்காவில் வசிக்கும் ஜேக்கப், போனி
ரிச்சர் தம்பதியினர் தங்களது பூனையுடன் இருநூறு மைல்தூரம் பயணம் செய்து டேடோனா
கடற்கரைக்குச் சென்றனர். தங்களது கேரவானில் (வீடு போன்ற வசதியுள்ள வேனில்) ஃபுளாரிடாவிலிருந்து
டேடோனாவுக்குச் சென்றனர். அங்கு சென்றதும் போனியுடைய அம்மா, கேரவானின் கதவைத்
திறந்தவுடன், பூனை வெளியே ஒடிவிட்டது. வெடிச் சத்தத்துக்கு பயந்து எங்கோ
ஓடிவிட்டது. பூனையை கண்டுபிடிக்க ஜேக்கப் தம்பதியினர் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
பயணத்தை முடித்துவிட்டு, பூனையை இழந்து வருத்தத்துடன் ஜேக்கப் தம்பதியினர் வீடு
திரும்பினர்.
புதுவருட கொண்டாட்டத்தின்பொழுது அவர்கள் வீட்டுக்கு சில மைல் தூரத்தில்
அவர்களுடைய பூனை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த பூனை மிகவும் இளைத்து,
நடக்கக்கூட சக்தியின்று காணப்பட்டது. பூனையிடமிருந்த மைக்ரோச்சிப் மூலம் பூனை
அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. நான்கு வயதான பூனை இரண்டு மாதங்கள் நடந்து, கிட்டத்தட்ட
இருநூறு மைல் கடந்து அந்தப் பூனை வீடு திரும்பியுள்ளது.
பூனை எப்படி வழிகண்டுபிடிக்கிறது என்பது அறிவியளாலர்களுக்கு புரியாத புதிர். 1954-ல்,
ஜெர்மனியில் இதற்காக ஒரு சோதனை செய்தனர். ஒரு புதிர் கட்டமைப்புகளில் அடைக்கப்பட்ட
பூனை, சோதனையின்பொழுது ஒவ்வொரு முறையும் சரியாக வெளியே வந்து தன்னுடைய
வீட்டுக்குச் சென்றுவிட்டது.
துணுக்கு:
நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியை அவர் மறந்திருக்கக்கூடும்; ஒருவரிடம் கூறிய
இன்சொல்லைக்கூட அவர் மறந்திருக்கக்கூடும்; ஆனால் மனதளவில் எப்படி அவரை உணர
வைத்தீர்களோ (மகிழ்ச்சியாகவோ அல்லது துன்பமாகவோ) அதனை அவர் மறப்பதென்பது மிகவும்
கடினம்.
துணுக்கு நல்லா இருக்கு. பூமாராங் ஆச்சர்யமாதான் இருக்கு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திருமதி.ராஜி. பூமராங் மட்டுமல்ல. வாழ்க்கையே ஆச்சர்யம்தான்.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
ஃப்ராய்டு அவர்களின் சிந்தனை சுவாரஸ்யம்...
ReplyDeleteபூனைகள் போல நாய்களும் சரியாக வீடு திரும்புவது வியாபு தான்...
துணுக்கு உண்மை...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.திண்டுக்கல் தனபாலன்.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
ஆழ்மன உணர்வுநிலை மனம் பற்றிய டாக்டர் சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களின் ஆய்வு பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன். வழக்கம் போல் தொடர் எளிய நடையில் படிக்கத்தூண்டும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள்!
ReplyDeleteபூனை 2 மாதங்கள் நடந்து திரும்பவும் வீடு திரும்பிய தகவலை காணொளியில் கண்டு ஆச்சரியப்பட்டேன். உண்மையில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், ஆறறிவு இருப்பதாக சொல்லப்படும் மனிதனை விட புத்திசாலிகள்தான்!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.
Deleteபகுத்தறிவு என்ற போர்வையில், இயற்கை மனிதனுக்களித்த உள்ளுணர்வுகள் மறைந்துகொண்டே வருகின்றது என்று கருதுகிறேன். சில விஷயங்களில் ஐந்தறிவு மிருகங்கள் நம்மை மிஞ்சிவிடுவெதென்பது உண்மையென்று நினைக்கிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
நமது மனதின் மிகவும் அதிகமான பகுதி ஆழ்மன உணர்வுநிலை மனமாகும். //
ReplyDeleteஇந்த நிலைக்குக் கொண்டு சென்றுதான் உளவியலர்கள் ஒருவருடைய மனதில் உள்ளவற்றை கண்டுபிடிப்பார்கள் போலிருக்கிறது.
இந்த வழி கண்டுபிடிக்கும் திறன் பூனைக்கு மட்டும்தானா? ஏனென்றால் நான் தூத்துக்குடியில் பணியாற்றியபோது என்னுடைய மாமனார் வீட்டிலிருந்து நானும் என் மனைவியும் அதே ஊரில் வேறொரு கோடியிலுள்ள எங்களுடைய வீட்டிற்கு ஸ்கூட்டரில் புறப்பட்டதும் துரத்திக்கொண்டே எங்கள் வீடு வரை வரும். பிறகு இரவு எவ்வளவு நேரமானாலும் மீண்டும் திரும்பி சென்றுவிடும். இது ஒவ்வொரு முறையும் நடக்கும். நான் இப்போது இருக்கும் வீட்டின் பின்புறம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் புல்வெளி உள்ளது. அதில் சில தினங்களில் இரவு பத்து மணி வரையிலும் கூட மாடுகள் மேய்ந்துக்கொண்டிருக்கும். ஆனால் எனக்கு தெரிந்து சுற்று வட்டாரத்தில் மாட்டு தொழுவம் ஏதும் இல்லை. இவை எங்கிருந்து வருகின்றன எப்படி திரும்பிச் செல்கின்றன என்பது புரியாத புதிர்தான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteதாங்கள் கூறுவதுபோல் அதிக மிருகங்களுக்கு தன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் திறமை இருக்குமென்று நினைக்கிறேன். ஒருவகை ஈசல், கண்டம் கடந்து இடப்பெயர்ச்சி செய்கின்றன. அவை திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வருகின்றன. இதில் வியப்பு என்னவென்றால், ஒருமுறை திரும்புவதற்குள், ஐந்தாறு சந்ததிகள் முடிந்துவிடுமாம். எப்படி அவை வழியை நினைவில்கொள்கின்றன? புரியாத புதிர்தான்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
// ஃப்ராய்ட், கல்லூரியில் அந்தக் காலத்தில் யூத இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான மருத்துவத்துறையில் சேர்ந்தார்.//
ReplyDeleteசிக்மன் ஃப்ராய்ட் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்திற்கு நன்றி!
வீட்டை விட்டு தொலைவில் விடப்படும் பூனை குட்டிகள் மீண்டும் இருந்த இடத்திற்கே வருவது ஆச்சரியமான விஷயம்தான். இதனைப் படித்தவுடன், கிராமத்தில் எனது சிறு வயதில், நான் எனது அம்மாச்சியுடன் கொஞ்சம் பெரிதான குட்டிப் பூனைகளை சாக்கில் வைத்துக் கொண்டு, பக்கத்து ஊர் களத்து மேட்டில் விட்ட ஞாபகம் வந்தது. பழகிய நாய்களும் அவ்வாறே வந்து விடும்.
தொடர்ந்து எழுதவும். நன்றி!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteதாங்கள் கூறும் அதே வேலையைத்தான் நானும் குறிப்பிட்டிருக்கிறேன். நாங்களும் சாக்கில் வைத்துக் களத்துமேட்டில்தான் விட்டுவிட்டு வருவோம். ஆனால் நாங்கள் வருவதற்குள் அவை வீட்டுக்கு வந்துவிடும். எங்களுக்கு அது மிகவும் வியப்பாக இருக்கும்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்