சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:
ஆஸ்ட்ரிய
நாட்டை சேர்ந்த சிக்மண்ட் ஃப்ராய்ட், நரம்பியல் மற்றும் உளவியல் அறிவியலாளர். மனித
உணர்வுகள் குறித்து ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கிய சிற்பிகளில் முதன்மையானவர்.
இன்றும் அவர் இருபதாம் நூற்றாண்டில் மிகுந்த தாக்கத்தையும், சர்ச்சைகளையும்
ஏற்படுத்திய முக்கிய அறிவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
“அறிவியல்
கருத்துக்கள் அனைத்தும், முற்றிலும் உறுதியான நிரூபணங்களைமட்டுமே
கொண்டிருக்கின்றன, அல்லது கொண்டிருக்கவேண்டும் என்று நம்புவது தவறானது மற்றும்
நியாயமற்றது. ஏதோ ஒருவிதத்தில் அதிகாரத்துக்கு ஏங்குபவர்களாலோ அலலது
மதக்கட்டுப்பாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாலோ இந்த கோரிக்கை
வைக்கப்படுகிறது. அறிவியல் எனப்படுவது கேள்விகளால் உருவாக்கப்படுகிறது.
இருப்பினும் அந்த அறிவியலிலும் கேள்விகள் இல்லாமல் சாத்தியக்கூறுகளைக் கொண்டு
ஒப்புப்கொள்ளப்படும் கொள்கைகளும் உண்டு. நிருபணங்கள் இல்லாமல் இத்தகைய தோராயமான
கொள்கைகளுடன் மனநிறைவுகொண்டு, அவற்றின் உதவியுடன், பணியின் இறுதி முடிவுக்கும்
நிரூபணங்கள் கிடைக்கும் சாத்தியம் இல்லாமலும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதும்
ஒருவகையில் அறிவியல் மனப்பாங்கே.” - சிக்மண்ட் ஃப்ராய்ட்
ஒவ்வொருவருடைய
வாழ்க்கையும், கொள்கைகளும் மற்றவர்களுடைய தொடர்ச்சியாக நீள்வதுபோல ஃப்ராய்டின் வாழ்க்கையும்
அவருடைய குரு மற்றும் நண்பரான டாக்டர்.ஜோசஃப் ப்ரூயர் மற்றும் ப்ரூயருடைய மருத்துவ
வாடிக்கையாளர் (நோயாளி) அன்னா அவர்களிடமிருந்தே தொடர்கிறது.
அன்னா
1880-லிருந்து 1882 வரை டாக்டர்.ப்ரூயரிடம் மருத்துவ சிகிச்சை
பெற்றுக்கொண்டிருந்தார். இருபத்தொரு வயதான அன்னா, தன்னுடைய வாழ்வின் அதிகமான
காலங்களை, நோய்வாய்ப்பட்டிருந்த தன்னுடைய தந்தையைப் பார்த்துக்கொள்வதிலேயே
செலவழித்தவர். தொடர்ச்சியான இருமல்நோய் அன்னாவைப் பீடித்துக்கொண்டது. உடல்நிலையில்
எந்தவிதமான கோளாறும், அவருக்கு அந்த இருமல் நோயைத் தந்ததாகத் தெரியவில்லை.
இருந்தாலும் அவருக்கு விடாமல் இருமும் நோய் இருந்தது. இருமலைத் தவிர அவருக்கு
பேசுவதிலும் பிரச்சனை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவ்ர் ஊமையாகவே ஆகிவிட்டார். சில
காலங்களுக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார். அப்பொழுதும் அவர் தன்னுடைய தாய்
மொழியான ஜெர்மானிய மொழியில் பேசாமல், அவருக்கு பரிச்சயமான மற்றொரு மொழியான
ஆங்கிலத்தில் பேசினார்.
அவருடைய
தந்தை இறந்ததும் உணவு உட்கொள்ள மறுக்க ஆரம்பித்தார். வழக்கத்தில் இல்லாத, இதுவரை
அறியப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானார். ஒருவகையான வாதத்தினால்
பீடிக்கப்பட்டு கைகளிலும் கால்களிலும் உணர்வுகளை இழந்தார். அவருடைய கண்களின்
இயல்பான பார்வை மாறி “டன்னல் விஷன்” பிரச்சனையும் உண்டாயிற்று. ஆனால்
மருத்துவர்கள் அவருடைய உடலில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டனர்.
டன்னல் விஷன்
இதையும்
தவிர அவர் பலவிதமான கற்பனை பாத்திரங்களையும் உருவாக்கிக் கொண்டார். அவருக்கு சீரான
மனநிலை இல்லாமல் இருந்தது. பலமுறை தற்கொலைக்கு முயற்சித்தார். டாக்டர்.ப்ரூயர்
அன்னாவுக்கு ஹிஸ்டீரியா (மாறுபட்ட மனநிலை) இருப்பதாக கூறினார். அதாவது உடலில்
நோய்கள் இல்லாமலேயே நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும் நோய் இருப்பதாகக் கூறினார்.
மாலை
நேரங்களில் அன்னா தன்னிச்சையாக, சுயமாகவே ஹிப்னடைஸில் மூழ்கிவிடுவார். அன்னா அந்த
நிலையை மேகங்கள் என்று வர்ணிப்பார். அன்னா தனது கற்பனைகளையும் அனுபவங்களையும் அந்த
மயக்கமான நிலையில் கூறுவதை
டாக்டர்.ப்ரூயர் கண்டறிந்தார். அவ்வாறு தன் மனநிலையை வெளிக்கொணர்ந்த பிறகு
அன்னாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது தெரிந்தது. இத்தகைய நிகழ்வுகளை
“புகை போக்கியைச் சுத்தம் செய்வது” அல்லது “உரையாடல் மருத்துவம்” என்றும் அன்னா
குறிப்பிட்டார்.
“உரையாடல் மருத்துவம்” நிகழும்
தருணத்தில் பேசப்படும் சில சம்பவங்கள், சில குறிப்பிட்ட நோய்களுக்கான விளக்கமாக
அறியப்பட்டது. இதற்கு உதாரணமாக நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் காணலாம். ஒரு
கட்டத்தில் அன்னா நீர் பருகுவதற்கு முற்றிலுமாக மறுத்துவிட்டார். உரையாடல்
மருத்துவத்தின் பொழுது, ஒரு மாது, நாய் குடித்த குவளையிலிருந்து நீர் பருகுவதைப்
பார்த்ததாகக் கூறினார். அந்த நிகழ்ச்சியைக் கூறும்பொழுது அன்னா மிகவும் அருவருப்பு
அடைந்ததாகக் குறிப்பிட்டார். அதனை உரையாடல் மருத்துவத்தில் வெளிக்கொணர்ந்த பிறகு,
அவர் நீர் பருகுவதற்கு தயக்கம் எதையும் காட்டவில்லை. அதாவது ஒரு பிரச்சனைக்கு, மூல
காரணத்தை உணர்ந்தவுடன், அவரிடமிருந்த, அந்த குறிப்பிடப்பட்ட பிரச்சனையான மனநோய்
முற்றிலுமாக விலகிவிட்டது. டாக்டர்.ப்ரூயர் இதனை “கேத்தாலிஸ்” அதாவது
“தூய்மைப்படுத்துதல்” என்றுப் பொருள்படும் கிரேக்க வார்த்தையின் மூலம் குறிப்பிடுகிறார்.
அதன்பிறகு பதினோரு வருடங்கள்
கழித்து டாக்டர்.ப்ரூய்ர் அவருடைய உதவியாளர் சிக்மண்ட் ஃப்ராய்ட்-உடன் இணைந்து “ஹிஸ்டீரியா” குறித்த நூலை வெளியிட்டார்.
எப்பொழுதோ ஒருவருடைய வாழ்வில் ஏற்படும் அசம்பாவிதமான நிகழ்ச்சியே, ஹிஸ்டீரியா
ஏற்படுவதன் மூல காரணம் என்று அந்நூலில் குறிப்பிட்டனர். ஒருவருக்கு உலக
வாழ்க்கையில் புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்சனைகளால் ஹிஸ்டீரியா ஏற்படுவதில்லை
என்றும் விளக்கினர். அசம்பாவிதங்களால் ஏற்படும் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல்
இருக்கும் பட்சத்தில் அவை தானாகவே மறைந்துவிடுவதில்லை. அவை மறைமுகமாக ஹிஸ்டீரியாவின்
வழியாக வெளிப்படுத்தப் படுகிறது. ஹிஸ்டீரியா மூலம் வெளிப்படும் அத்தகைய மறைமுகமான
உணர்வுகளுக்கு அர்த்தங்கள் உண்டு. நோயாளிகளிடம் புதைந்துள்ள உணர்வுகளைத் தட்டி
எழுப்பி, வெளிக்கொணர்வதன் மூலம் அவர்களுடைய மறைக்கப்பட்ட உணர்வுகளை அறிந்து,
அவர்களுடைய செயல்பாடுகளின் உண்மையான அர்த்தத்தை உணரச் செய்ய வேண்டும், அவ்வாறு
புதைந்திருக்கும் உணர்வுகளை வெளிக்கொணர்ந்து விட்டால், அவை மீண்டும் ஒரு நோயின்
அறிகுறியாக வெளிவராது. இது ஒரு சீழ்கட்டியிலிருந்து சீழினை நீக்கி கிருமிகளை
வெளியேற்றி குணப்படுத்துவதற்கு ஒப்பாகும்.
இவ்வகையான
சிகிச்சைகளின் மூலமாக அன்னாவுக்கு இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக குணப்படுத்தப்
பட்டது. ஆனால் அன்னாவுக்கு நோயை நீக்குவதற்கு ப்ரூயர் தேவைப்பட்டார். இதனால் ப்ரூயருடைய
தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளும் வந்தது. ஃப்ராய்டின் கூற்றுப்படி அன்னா
ப்ரேயரை காதலித்தார். ப்ரூயரும் அன்னாவின் காதலில் விழுந்தார். ப்ரூயரின்
குழந்தையைச் சுமப்பதாக அன்னா நம்ப ஆரம்பித்து ஊர் முழுவதும் கூறினார். மணமான ப்ரூயருக்கு
அது மதரீதியில் பெரிய பிரச்சனையை உண்டாக்கியது. ப்ரூயர் தனது ஆராய்ச்சியை
திடுதிப்பென்று கைவிட நேர்ந்தது.
ப்ரூயர்
ஆராய்ச்சிகளை கைவிட்டதும், அன்னா ஒரு தாதியாக மருத்துவமனையில் பணியாற்றினார்.
பெர்த்தா பாப்பென்ஹெம் என்ற பெயரில் பெண் சமுதாயத்துக்காக பாடுபட்டவர்களில் ஒரு
முன்னோடியாக திகழ்ந்தார். பொதுநலத்துக்காக
வாழ்ந்த்து மட்டுமல்லாமல் உளவியலில் ஃப்ராய்டுக்கு ஆர்வத்தைத் தூண்டியதின் மூலம்
ஒரு புகழ்பெற்ற உளவியலாளர் உருவாகவும் வழிவகுத்தார்.
பின்னாளில்
இத்தகைய ஹிஸ்டீரியா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு, பாலியல்ரீதியான காரணங்கள்தான்
அடித்தளமாக இருக்கிறது என்று ஃப்ராய்ட் அறிவித்தார். ப்ரூயருக்கு இது
தெரிந்திருந்தாலும் அதை அவர் பகிரங்கமாக ஒத்துக்கொள்ள வில்லை.
----
தொடரும்.
கொசுறு:
எப்பொழுதும் புன்னகையுடன் காட்சியளியுங்கள். புன்னகை குழந்தைகளைக் கவரவும்,
சான்றோர்களிடம் மதிப்பைப் பெறவும், நேர்மையான விமர்சகர்களிடம் பாராட்டைப் பெறவும்,
தவறான நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்ளவும், அழகை ஆராதிக்கவும்,
அடுத்தவர்களின் நற்குணங்களை அறிந்துகொள்ளவும், உலகை இன்னும் சிறிது நல்ல நிலைக்கு
எடுத்துச் செல்லவும் உதவும். உங்களது வாழ்க்கையில் நீங்கள் ஒரு ஆரோக்கியமான
குழந்தையையோ, ஒரு தோட்டத்தையோ, ஒரு சமுதாய மீட்பையோ உருவாக்கியிருந்தால் அல்லது
ஒரு உயிராவது உங்களால் வாழ்வில் நிம்மதியுடன் இருக்க முடிந்தது என்று நீங்கள் உணர
முடிந்தால் அதுவே உங்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு அடையாளமாகும்.
- ரால்ஃப் வால்டோ எமெர்சன்.
கொசுறு : 100% உண்மை...
ReplyDeleteஹிஸ்டீரியா பற்றிய தகவல் வியக்கவும் வைக்கிறது... அறிய மேலும் தொடர்கிறேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.
சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களை வெகு நேர்த்தியாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஹிஸ்டீரியா பற்றி அறியாத கருத்துக்களை இந்த தொடர் மூலம் அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். காத்திருக்கிறேன் இதுவரை தெரியாத/புரியாத தகவல்களை தெரிந்துகொள்ள.
ReplyDeleteகொசுறாக கொடுத்த ரால்ஃப் வால்டோ எமெர்சன் அவர்களின் கருத்து சிந்திக்க வைத்தது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா !. ஆமாம். எமெர்சனின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ள கருத்துக்கள். முடிந்த அளவு பின்பற்ற முயல்கிறேன்.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.
அருமையான அறிமுகம் . தொடர்கிறேன்
ReplyDeleteவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா !.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.
// பின்னாளில் இத்தகைய ஹிஸ்டீரியா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு, பாலியல்ரீதியான காரணங்கள்தான் அடித்தளமாக இருக்கிறது என்று ஃப்ராய்ட் அறிவித்தார்.
ReplyDeleteஹிஸ்டீரியா மட்டுமல்லாமல் மனிதனின் பல விதமான பிரச்சினைகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படைக் காரணம், பாலியல் ரீதியான காரணங்கள்தான் என்று அவர் சொன்னதாக நினைவு.
உங்களுடைய சென்ற பதிவில் // உளவியல் அறிஞர் சிக்மன் ப்ராய்டின் கோட்பாடுகளைப் பற்றி எழுதுங்கள். // என்று கேட்டு இருந்தேன். அவ்வாறே எழுதத் தொடங்கியமைக்கு நன்றி! தொடருங்கள்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா !. //மனிதனின் பல விதமான பிரச்சினைகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படைக் காரணம், பாலியல் ரீதியான காரணங்கள்தான் என்று அவர் சொன்னதாக நினைவு.// ஆமாம். ஃப்ராய்ட் அப்படித்தான் கூறியிருக்கிறார். வரும் பதிவுகளில் அது சம்பந்தமான கருத்துக்கள் இருக்கும்.
Deleteதாங்கள் கேட்டதும், எனக்கு அனுகூலம்தான். பதிவுக்கு விஷயங்கள் தேடவேண்டியது இல்லையே.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.
மீண்டும் ஒரு உளவியல் தொடரா..? ஆவலை தூண்டுவதாக இருக்கிறது..
ReplyDeleteவாழ்த்துகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ஜீவன் சிவம். இது நீண்ட தொடர் இல்லை சில வாரங்கள் ஒரு அறிமுகமாக மட்டுமே.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.