பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, September 26, 2013

கதம்பம்-7


இப்படியும் மனிதர்கள்:

ஒரு நூற்றாண்டாக கணித நிபுணர்களால் விடுவிக்க முடியாத Poincaré conjecture – க்கான தீர்வை கிரிகரி பெரல்மான் என்ற ரஷ்யாவைச் சேர்ந்த கணித நிபுணர் 2002-ல் வெளியிட்டார். அவருடைய விடையை நான்கு வருடங்களாக கணிதமேதைகள் குழுவினராக ஆராய்ந்து சரியான தீர்வுதான் என்று, 2006-ல் உறுதிபடுத்தினர்.

Poincaré conjecture என்பது மிகவும் சிக்கலான, முப்பரிமாண இடத்தை பற்றிய ஒரு கருதுகோளை நிரூபிக்கும் ஒரு புதிர். பரவெளி எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதனைப் பற்றிய விளக்கங்கள் சம்பந்தப்பட்ட புதிர். புதிர் சம்பந்தமான விளக்கங்கள் விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிகவும் அறிவு கூர்மையுள்ள மனிதன் என்று அறியப்படும் கிரிகரி பெரல்மானுக்கு, புதிரை விடுத்தற்காக, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
பிரபலத்தை விரும்பாத 47 வயதான, இந்தக் கணித மேதை அந்தப் பரிசை மறுத்துவிட்டார். பரிசுத்தொகை கிடைத்த சமயத்தில் அவர் வேலையில்லாமல் இருந்தார். அச்சமயம், தன் சகோதரியின் உதவித்தொகையுடன், தன்னுடைய வயதான தாயுடன் ஒரு இரண்டு அறை அபார்ட்மெண்ட்-ல் வசித்துக் கொண்டிருந்தார். அவருடைய அப்பார்ட்மென்ட்-லிருந்து கரப்பான் பூச்சி பெருகி அந்த பிளாக் முழுவதும் பிரச்சனையாக உள்ளதாக அவருடைய சக அப்பார்ட்மெண்ட்வாசிகள் அடிக்கடி புகார் செய்துகொண்டிருந்தனர்.  அவர் விருதையும், பரிசுத்தொகையையும் மறுத்தது இது முதல் முறையல்ல. கணிதத்துக்கு நோபல் பரிசு கிடையாது. கணித நோபல் பரிசுக்கு இணையான “ஃபீல்ட் விருதையும் அவர் மறுத்திருக்கிறார். பணத்திலும், பேரிலும், புகழிலும் எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார். என்னை ஒரு விலங்குக்காட்சி மிருகம் போல மக்கள் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.

ரஷ்யாவில் பிறந்த கிரிகரி பெரல்மான், யூத இனத்தைச் சேர்ந்தவர். 1966-ல் அவர் ரஷ்யாவில் கணித நிபுணரான தாய்க்கும், ஒரு பொறியியலாளருக்கும் மகனாகப் பிறந்தார். அது ரஷ்யாவில் யூதர்கள் அவமரியாதையாக நடத்தப்பபட்ட காலகட்டம். இப்பொழுதும்தான்.  பதினோரு வயதிலேயே குழந்தை அறிஞராக அவர் அறியப்பட்டார். யூதராக இருந்ததனால் அவர் ரஷ்யாவில் பற்பலப் பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். அப்பிரச்சனைகளையும் தாண்டி கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

1990-களில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்திருக்கிறார். 1995 வாக்கில், ரஷ்யாவுக்கு விருப்பப்பட்டு திரும்பி, அனைவரையும் வியப்பிலாழ்த்தினார். அப்பொழுது ரஷ்யாவில் அவருக்கு சம்பளம், மாதம் கிட்டத்தட்ட 300 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. அங்கும் சக ஊழியர்கள் அவரை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்தபொழுது அவருக்கு நிரந்த வேலை எதுவும் கிடையாது. அந்தப் பரிசுத்தொகையையும் அவர் மறுத்துவிட்டார். நிருபர்கள் அவர் வீட்டுக்கு சென்று விபரங்கள் கேட்டபொழுது, சுவருக்கு மறுபுறத்திலிருந்து பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டார். அவருடைய ஃப்ரிட்ஜில் ரொட்டி, பால், பாலாடைக்கட்டிகள், ஆரஞ்சு தவிர வேறு பொருட்களைக் காணமுடியாதாம். இப்படியும் மனிதர்கள்.


ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 

கண்ணால் காண்பதும் பொய்:
மேற்கண்ட வாசகத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்துகொள்ள கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள்.
ஒருவரது வயதைக் கண்டுபிடியுங்கள்:
1 முதல் 7 – க்குள் உங்களுக்கு பிடித்தமான எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை 50- ஆல் பெருக்குங்கள். (2 என்று வைத்துக்கொள்ளுங்கள்; 2 x 50 = 100)
அதனுடன் 44-ஐ கூட்டுங்கள். (100 + 44 = 144)
வரும் விடையை 200- ஆல் பெருக்குங்கள். (144 x 200  = 28,800)
உங்களுடைய பிறந்த நாள் 2013-ல் முடிந்துவிட்டதென்றால் வரும் விடையுடன் 113 – ஐக் கூட்டுங்கள்.(28,800 + 113 = 28,913)
உங்களுடைய பிறந்த நாள் 2013-ல் இன்னும் வரவில்லையென்றால் வரும் விடையுடன் 112 – ஐக் கூட்டுங்கள்.
இப்பொழுது கிடைக்கும் விடையில் தங்களுடைய பிறந்த வருடத்தைக் கழியுங்கள். (28,913 – 1950 = 26,963)
வரும் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்களும் உங்கள் வயதைக் கொண்டிருக்கும். (தங்களது வயது 63)
இந்த முறையினை 2013-ல் மட்டுமே உபயோகிக்க முடியும். எண்களை மாற்றினால் வேறு வருடங்களுக்கும் உபயோகிக்கலாம்.

11 comments:

  1. வியக்க வைத்த புதிர்...

    தீர விசாரித்தாலும் பொய்... அதுவே மெய்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  2. இப்படியும் மனிதர்கள் என்பதை விட இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னும் சுழன்றுக்கொண்டிருக்கிறது எனலாம். பணம், பதவி,பகட்டு என எதையும் விரும்பாமல் கர்மமே என்று இருப்பவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என பட்டம் சூட்டுகிறது.

    யூதர்களை chosen people of God என்பார்கள். ஏனெனில் அந்த குலத்தில் இருந்துதான் கிறிஸ்து பிறந்தாராம். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து சிலுவையில் அறைந்து கொன்ற நாள் முதல் அந்த குலமே cursed people of the earth என்றாகிவிட்டனராம். ஆகவேதான் உலகெங்கும், இஸ்ராயேலை தவிர, அந்த இனத்தை மக்கள் வெறுக்கினர் என்று சொல்கின்றனர். ஆனால் ஹிட்லர் அவர்களை வெறுத்ததற்கு காரணம் இதுவல்ல என்பதும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. அவர்கள் அப்படி இருப்பதனால் பிரச்சனை இல்லை. அவர்களை மற்றவர்கள் தவறாக உபயோகிப்பதால்தான் பிரச்சனையே வருகிறது.
      என் அலுவலகத்தில் ஒரு பாலஸ்தீனிய கிறித்துவர் ஒருவர் சில வருடங்கள் வேலை செய்தார். அவர் யூதர்களையும் மற்றவர்களையும் கதைகதையாகக் கூறக்கேட்டிருக்கிறேன். நான் கேள்விப்பட்டவரை யூதர்களை இன்றும் யாருக்கும் பிடிக்காது. வெளிப்படையாக யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். யூத தாய்க்குப் பிறந்தவர்கள் மட்டுமே யூதர்களாக கருதப்படுவர். உலகில் இந்தியாவில் மட்டுமே யூதர்கள் பிரச்சனையில்லாமல் வாழ்ந்திருக்கின்றனர். தாங்கள் கூறியதுபோல, தங்களை தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இன்றும் நம்புகின்றனர்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
    2. தாங்கள் கூறியதுபோல, தங்களை தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இன்றும் நம்புகின்றனர்.//

      இதுதான் அவர்களுடைய பிரச்சினையே.... ஆகவேதான் இன்னும் துன்புறுகிறார்கள். கடவுள் என்பதையே மனிதனுடைய கற்பனை என்னும்போது அவரால் நாங்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்!!

      Delete
    3. எப்படித்தான் இருந்தாலும் இன்றளவில், உலகை அவர்கள்தான் ஆட்டிப்படைக்கிறார்கள். ஒரே வாரத்தில் மலேஷிய டாலரை பாதி விலைக்கு அவர்களால் குறைக்க முடிந்ததை பார்த்திருக்கிறேன். அவர்களால் எதனையும் சாதிக்க முடியும். எதற்கும் ஒரு முடிவு உண்டு. பார்க்கலாம்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. ‘இப்படியும் மனிதர்கள்’ உலகத்தில் இருக்கிறார்கள் என நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தந்துள்ள இரண்டாவது இணைப்பில் உள்ள மனிதர்களைப் பார்க்கும்போது ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    வயதை கணக்கிடும் புதிரை முன்பே படித்திருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!



    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. அமிர்தமேயாயினும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே. போதும் என்று இந்த காலத்தில் அநேகர் நினைப்பதில்லை.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  4. ஆளை விடுங்கப்பா! கணக்குப் புதிருக்கும் எனது மூளைக்கும் ஒத்து வராது. புதிரிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.
      முடியாததை முயற்சியாவது செய்து பார்த்துவிடவேண்டும் ஐயா!

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  5. இந்தப் பதிவு அப்டேட் ஆகவே இல்லை. :( எப்படியோ தவற விட்டிருக்கேன். இல்லைனா ஒழுங்கா வந்துடுவேனா என்ன? ஹிஹிஹி,

    நல்ல மனிதர். தன் சாதனையை மட்டும் செய்துவிட்டு இது என் கடமை; இதற்குப் பரிசெல்லாம் எதற்கு என்று சொல்ல ரொம்பப் பெரிய மனம்வேண்டும். சரியான கர்மயோகினு சொல்லலாம். வயதைக் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete