பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, March 6, 2014

சிறுகதை – 6 (ஆன்டன்.பி.செக்காவ்)



 அக்கரைப் பச்சை. (பந்தயம்.)

ஒரு முன்பனிகால இரவு. தனது அறையில் அமர்ந்திருந்த அவர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். அன்று அவர் வீட்டு விருந்துக்கு பல நண்பர்களை அழைத்திருந்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் அறிவுஜீவிகள் ரகத்தைச் சேர்ந்தவர்கள். மரண தண்டனை சரியா, இல்லையா என்ற தலைப்பில் விவாதம் சூடாக நடந்துகொண்டிருந்தது. எந்த மதமும் மரண தண்டனையை அனுமதிக்கவில்லை. எனவே மரண தண்டனை அறநெறிகளைப் பொறுத்தவரை தவரானது என்று பலர் கூறிக்கொண்டிருந்தார்கள்.

“நீங்கள் கூறுவதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.” விருந்துக்கு அழைத்த தொழிலதிபர் தொடர்ந்தார். “எனக்கு மரண தண்டனையையோ ஆயுள் தண்டனையையோ அனுபவபூர்வமாகத் தெரியாது. மரண தண்டனை ஒருவரை உடனே கொன்றுவிடுகிறது. ஆனால் ஆயுள் தண்டனை ஒருவரை சிறுகச் சிறுகக் கொல்கிறது. வினாடிகளில் ஒருவரது துன்பம் முடிகிறது. அல்லது அணுஅணுவாக ஒருவரது துன்பம் தொடர்கிறது. மனிதாபிமான கண்ணோட்டத்தில் சொல்லுங்கள். இந்த இரண்டில் எது ஒருவருக்கு நல்லதாக இருக்க முடியும்?”

“இரண்டுமே அறநெறிகளுக்கு எதிரானவைகள். இரண்டுக்கும் நோக்கம் கிட்டத்தட்ட ஒன்றுதான். அது ஒருவருக்கு சமுதாயத்தில் இருக்கும் பங்கை நீக்க வேண்டும், உயிரைப் பறிக்கவேண்டும். மனிதன் ஒன்றும் கடவுள் அல்ல. இழந்த உயிரையோ, காலத்தையோ மீட்க முடியாது. அப்படி மீட்க முடியாத பட்சத்தில் அத்தகைய தண்டனைகளைத் தருவது தவறு.” விருந்தினர்களில் ஒருவர் கூறினார்.

வந்திருந்தவர்களில் ஒரு வழக்கறிஞர் இவ்வாறு கூறினார். “இரண்டுமே மோசமான தண்டனைகள்தான். எனக்கு இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், நான் மறுப்பேதுமின்றி ஆயுள் தண்டனையையே தேர்ந்தெடுப்பேன்.”

அவரது வாதத்தால் விவாதத்தின் போக்கு திசைமாறியது. அப்பொழுது இளமையில் இருந்த தொழிலதிபர் தன்னுடைய கருத்தை வழக்கறிஞர் மறுத்ததால் ஆவேசமடைந்தார்.

“உளராதீர்கள். உங்களிடம் ரெண்டு மில்லியன் டாலர்கள் பந்தயம் கட்டுகிறேன். உங்களால் தனிமை சிறையில் ஐந்து வருடங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாது.” என்று மேசைமீது குத்தினார்.

“பேச்சு மாறமாட்டீர்கள் அல்லவா? ஐந்து வருடங்கள் அல்ல, நான் பதினைந்து வருடங்கள் தனிமை சிறையில் இருக்க ஒத்துக்கொள்கிறேன். உங்களுக்கு சம்மதமா?”

“சரி நீங்களும் பேச்சு மாறக்கூடாது. பதினைந்து வருடங்கள் தனிமைச்சிறை, என்றால் நான் இரண்டு மில்லியன் டாலர்கள் தறுவதற்கு ஒத்துக்கொள்கிறேன்.”

“சம்மதம். நீங்கள் இரண்டு மில்லியன் டாலர்கள் இழக்கத் தயாராக இருங்கள். நான் என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கிறேன்.”

ஒரு முட்டாள்தனமான பந்தயம் உறுதியானது. அந்த காலகட்டத்தில் ஒரு கோடீஸ்வரராக இருந்த தொழிலதிபர் தன் புத்தியைத் தானே மெச்சிக்கொண்டார். உணவு அருந்தும் நேரத்தில் வழக்கறிஞரிடம் “சுய நிலைக்கு திரும்புங்கள் நண்பரே. இரண்டு மில்லியன் டாலர்கள் எனக்கு ஒரு பொருட்டல்ல. நீங்கள், உங்கள் வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் இரண்டு, மூன்று வருடங்களை இழக்கப்போகிறீர்கள். ஏன் இரண்டு, மூன்று வருடங்கள் என்று கூறுகிறேன் தெரியுமா? அதற்கு மேல் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. தண்டனையுடனான சிறையாக இருந்தாலும், தவறுக்கு தண்டனையை அனுபவிக்கிறோம் என்று காலத்தைக் கழிக்கலாம். ஆனால், விதண்டாவாதத்துக்கு சிறைக்கு சென்றால் எப்படி தாக்குப் பிடிப்பீர்கள்? இப்பொழுதும் ஒன்றும் நேரமாகிவிடவில்லை. பந்தயத்தை முறித்துக்கொள்வோம். உங்களுக்காக பரிதாபப்படுகிறேன்.” வழக்கறிஞர் எதற்கும் மசியவில்லை.

இன்று, தனது அறையில் அமர்ந்திருந்த தொழிலதிபர் தனக்குள் கூறிக்கொண்டார். "அன்று ஏன் அந்த பந்தயத்துக்கு ஒத்துக்கொண்டேன்? அதனால் யாருக்கு என்ன நன்மை? அந்த பைத்தியக்காரனுக்கு பதினைந்து வருடங்கள் பாழ். எனக்கு இரண்டு மில்லியன் நஷ்டம். இதனால் மரணதண்டனை கொடியதா அல்லது ஆயுள் தண்டனை கொடியதா என்று நிரூபிக்கவா முடியும்? முட்டாள்தனம். நான் ஒரு கிறுக்கன். அந்த ஆளுக்கும் பேராசை.”

அந்த முட்டாள்தனமான நாளில் பிறகு நிகழ்ந்தவைகள் அவர் நினைவுக்கு வந்தது. அந்த வழக்கறிஞரை, தொழிலதிபரின் வீட்டில் அவுட் ஹவுஸில் இருந்த ஒரு அறையில் சிறை வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. சிறையில் இருக்கும் காலகட்டத்தில் அவருக்கு யாரையும் பார்க்கவோ பேசவோ அனுமதி கிடையாது. யாருடனும் கடிதப்போக்குவரத்தும் வைத்துக்கொள்ளக் கூடாது. அவருக்கு இசைக்கருவிகளை உபயோகிக்கவும், புத்தகங்களைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும், மது அருந்தவும் அனுமதிகள் உண்டு. சிறையில் இருந்த ஒரு ஜன்னல் வழியாகத்தான் அவர் தனக்கு வேண்டியவைகளை சைகையில் கேட்டுப் பெறவேண்டும். நவம்பர் 14, 1870 மதியம் 12 மணி முதல் நவம்பர் 14, 1885 மதியம் 12 மணிவரையிலும் இந்த விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். இந்த விதிகளை மீறினால் அவருக்கு இரண்டு மில்லியன் டாலர்கள் தரப்படமாட்டாது என்று இருவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் எழுதிக்கொள்ளப்பட்டது.
முதல் வருடம் சிறைவாசம் முடிந்தபொழுது, தனிமையும் சலிப்பும் அந்த வழக்கறிஞரை மிகவும் அவதிக்குள்ளாக்கியது, அவருடைய எழுத்துக்களிலிருந்து தெரியவந்தது. சில நேரங்களில் அவருடைய அறையிலிருந்து பியானோ ஒலி வந்தது. சில நாட்களில் அவர் மதுவை மறுத்துவிட்டார். மது தன்னை சபலத்துக்குள்ளாக்குகிறது என்று மறுத்துவிட்டார். முதல் வருடத்தில் அவர் அதிக புத்தகங்களை வாங்கிப்படித்தார்.

இரண்டாவது வருடத்தில், சிறையிலிருந்து பியானோ சத்தம் வருவது நின்றுவிட்டது. ஐந்தாம் வருடத்தில் மீண்டும் பியானோ சத்தம் கேட்க ஆரம்பித்தது. மதுவையும் மீண்டும் குடிக்க ஆரம்பித்தார். தூங்குவது குறைந்து போல தோன்றியது. தனக்குள் சத்தமாக பேசிக்கொள்ள ஆரம்பித்தார். புத்தகத்தில் எதையாவது எழுதி கிழித்தெரியவும் ஆரம்பித்தார். கோபமாக கத்துவதும் கேட்டது. ஓரிரு சமயங்களில் அழும் சத்தமும் கேட்டது.

ஆறாவது வருடத்தின் பிற்பகுதியில் வரலாறு, மனோததுவம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். பத்தாவது ஆண்டில் மத சம்பந்தமான புத்தகங்களைமட்டுமே படித்தார். தீவிரமாகப் படித்தார். கடைசி இரண்டு வருடங்களில் முன்பைவிட அதிகமாகப் படித்தார். இலக்கியம், அறிவியல் என்று எந்தத் துறையையும் விலக்காமல் படித்தார். இயற்பியல், வேதியியல், மருத்துவம் என்று எதனையும் விட்டுவைக்கவில்லை. கடலில் மூழ்குபவன் கிடைப்பதை விடாமல் பற்றிக்கொள்ளும் ஆவேசத்துடன், அனைத்து துறைகளையும் முனைந்து படித்தார்.



நினைவுகள் அனைத்தும் தொழிலதிபரின் மனத்திரையில் ஒடியது. “நாளை மதியம் 12 மணிக்கு வழக்கறிஞருடைய சிறைவாசம் முடிந்துவிடும். ஒப்பந்தப்படி இரண்டு மில்லியன் டாலர்களை நான் கொடுக்கவேண்டும். கொடுக்க முடியுமா?”

பதினைந்து வருடங்களுக்கு முன்பு இரண்டு மில்லியன் டாலர்கள் என்பது அவருக்கு ஒரு பொருட்டேயில்லை. இன்றோ, அவருக்கு இருப்பு அதிகமா. கடன் அதிகமா என்பதே பெரிய கேள்வி. பங்கு வர்த்தகத்தில் பெரிய தொகையை இழந்து கடனாளியாகிவிட்டார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பாளி என்றிருந்த அவர் அடங்கி முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார். சொச்சம் இருப்பது இந்த வீடு மட்டுமே. இந்த வீடும் பெருத்த அடமானத்தில் உள்ளது. கூடாநட்போ, நேரமோ தெரியவில்லை.

“பாழாய்ப்போன பந்தயம்” தொழிலதிபர் தலையைப் பிடித்துக்கொண்டார். “அந்த மனிதன் ஏன் சிறையில் செத்துத் தொலையவில்லை? கொஞ்சநஞ்சம் என்னிடம் இருப்பதையும் அவனுக்குக் கொடுத்தாகவேண்டும். அப்படி கொடுத்துவிட்டால் நான் பிச்சை எடுக்க வேண்டியதுதான். இதிலிருந்து தப்பிக்க எனக்கு ஒரு வழிதான் உள்ளது. நாளைக்குள் அந்த ஆள் சாகவேண்டும். அதுதான் ஒரே வழி.”

இரவு மணி மூன்று. எங்கோ கடிகாரத்தில் மணி அடித்தது. தொழிலதிபரைத் தவிர அனைவரும் வீட்டில் உறக்கத்தில் இருந்தனர். சத்தமில்லாமல் சிறை இருந்த அறையின் சாவியை எடுத்துக் கொண்டு தொழிலதிபர் சிறையை நோக்கி நடந்தார். வேறு வழியில்லை. கொன்றே ஆகவேண்டும் என்ற எண்ணமிட்டபடியே நடந்தார்.

இருளில் தட்டுதடுமாறி கைதியிருந்த சிறையை நோக்கி சத்தமின்றி முன்னேறினார். சிறையின் கதவுகள் நன்றாக அடைபட்டு இருந்தது அந்த இருளிலும் தெரிந்தது. சிறையின் ஜன்னல் வழியே நோக்கியபொழுது உள்ளே மெழுகுவர்த்தி மங்கலாக எரிவது தெரிந்தது.

கைதி மேஜையின் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரது பின்புறத்தை மட்டுமே காணமுடிந்தது. மேஜை முழுவதும் ஏகப்பட்ட புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. மேஜை மட்டுமல்லாது, தரையிலும் அருகே இருந்த இரண்டு நாற்காலிகளிலும் புத்தகங்கள் கிடந்தன. ஐந்து நிமிடங்களாக தொழிலதிபர் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தார். சிறையிலிருந்த மனிதன் அசைவதாகத் தோன்றவில்லை.

தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து அவர் அறைக்குள் நுழைந்தார். உள்ளே நுழைந்ததும் கைதி சத்தமிடுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவரோ எந்தவித சலனமும் இன்றி இருந்த இடத்திலேயே இருந்தார். மேஜையின் முன் அமர்ந்திருந்தவரைப் பார்த்தால் சாதாரண மனிதனாகவே தோன்றவில்லை. அழுக்கான தாடி மீசைகளுடன், சிக்குப்பிடித்து நீண்ட முடிகளையுடைய ஒரு எலும்புக்கூடு அமர்ந்திருந்ததைப் போன்று தோன்றியது. கைதியின் வயது அதிகபட்சம் நாற்பந்தைக்குள்தான் இருக்கும். முடியும் நரைத்திருந்ததால், அவருடைய வயது எழுபதைத் தாண்டி மதிப்பிடும் அளவுக்கு இருந்தது.

“பேராசைக்கார பாவி. இவன் இருக்கும் நிலையைப் பார்த்தால் தலையணியால் முகத்தை மூடியே கொன்றுவிடலாம் என்று தோன்றுகிறது. மருத்துவர்கள்கூட இயற்கை மரணம் என்று நினைக்கக்கூடும். உறக்கத்தில்கூட இரண்டு மில்லியனைப் பற்றிதான் நினைத்துக்கொண்டிருப்பான்.” என்று தனக்குள் தொழிலதிபர் கூறிக்கொண்டார். கைதியோ அவர் வந்ததுகூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

மேஜைமீது தன்பெயரில் ஒரு கடிதம் இருப்பதை தொழிலதிபர் கண்டார். சரி, என்னதான் எழுதியிருப்பான் என்று பார்ப்போமே என்று விளக்கு வெளிச்சத்தில் அவர் அதனை படிக்க ஆரம்பித்தார்.

நாளை 12 மணிக்கு நான் சுதந்திர மனிதனாகிவிடுவேன். மீண்டும் சமூகத்துடன் கலக்கும் உரிமையைப் பெறுவேன். அதற்கு முன் உங்களிடம் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். சுயமான அறிவுடன், ஆண்டவனின் சாட்சியாக இதனைக் கூறுகிறேன்.

சுதந்திரம், ஆயுள், ஆரோக்கியம் என்று உலக வாழ்வில் மிகவும் முக்கியமானவைகள் என்று கருதப்படும் அனைத்தையும் இப்பொழுது நான் துச்சமாக மதிக்கிறேன்.

கடந்த பதினைந்து வருடங்களாக பூவுலகின் வாழ்க்கையைக் கற்றுணர்ந்தேன். நூல்களின் வழியாக உலக வாழ்க்கையின் அற்புதங்களாகக் கருதப்படும் அனைத்தையும் அறிந்துகொண்டேன். கானகங்களில் வேட்டையாடினேன்; மலையுச்சிகளைக் கடந்தேன்; மின்னல்களுடனும், மேகங்களுடனும் உரையாடினேன். மதங்களைப்பற்றி அறிந்துகொண்டேன். கற்பனை உலகில் சஞ்சரித்தேன்.

நூல்களினால் ஞானம் பெற்றேன். பல நூற்றாண்டுகளாக மனிதன் வாழ்ந்த வாழ்க்கையின் சாரங்களை பதினைந்தே வருடங்களில் நூல்களின் வாயிலாக அறிந்துகொண்டேன். இப்பொழுது உங்களைவிட அறிவு மிக்கவனாக உணர்கிறேன்.
இப்பொழுது அனைத்தையும் வெறுக்கிறேன். நூல்களையும் வெறுக்கிறேன். உலக வாழக்கை கானல் நீராகத் தெரிகிறது. ஒருவருடைய அழகும், அறிவும், செல்வமும் அனைத்தும் உடையவராக இருக்கலாம். ஆனால் ஒரு நொடியில் மரணம் அவை அனைத்தையும் மாற்றிவிடுகிறது. உங்களுடைய வளர்ச்சி, பெருமை, வரலாறு, அறிவு அனைத்தும் புகைபோல மறைந்துவிடும்.

நீங்கள் பைத்தியக்காரத்தனமாக தவறான பாதையில் செல்கிறீர்கள். அருவருக்கத்தக்கதை அழகாக எண்ணுகிறீர்கள்; பொய்மையை உண்மை என்று நினைக்கிறீர்கள். சொர்க்கத்துக்கு பதில் நரகத்தை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். உங்களை நான் புரிந்துகொள்ள விரும்பவில்லை.

நீங்கள் வாழும் இந்த அவல வாழ்க்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஒரு காலத்தில் சொர்க்கமாக நினைத்த இரண்டு மில்லியன் டாலர்களை நிராகரிக்கிறேன். அதனை முற்றிலுமாக வெறுக்கிறேன். எனக்கு அதன் மேல் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்கும் விதமாக 12 மணிக்கும் முன்னதாக நான் இந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறேன். இதனால் நான் நமக்குள் உள்ள ஒப்பந்தப்படி தோற்கிறேன்.”

கடிதத்தை படித்து முடித்த தொழிலதிபர் அதிர்ச்சியடைந்தார். தூங்கிக்கொண்டிருந்த மனிதனின் தலையில் முத்தமிட்டுவிட்டு, அந்த இடத்தைவிட்டு வெளியேறினார். தனது அறைக்கு சென்றபின்பு கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். தன்னையே வெறுத்தார். அதிர்ச்சியும் அழுகையும் நீண்ட நேரத்துக்கு அவரை தூங்கவிடாமல் செய்தது.

மறுநாள் காலை கைதி சிறைக்கதவைத் திறந்து ஓடிவிட்டதாக அவரது வேலைக்காரன் கூறினான். தொழிலதிபர் சிறைக்கு சென்று கைதி ஓடிவிட்டதை உறுதி செய்துகொண்டார். தேவையற்ற வதந்திகளை விரும்பாத தொழிலதிபர் கைதியின் அறைக்கு சென்று அந்த கடிதத்தை எடுத்து தனது லாக்கரில் பத்திரமாக மறைத்துவைத்தார்.

(மூலம் : ஆன்டன்.பி.செக்காவ்)



ஒரு காணொளி :

ஒரு அணில் ஏதோ விதையை எப்படி, எங்கு சேமித்து வைக்கிறது என்று காணுங்கள்.

http://www.youtube.com/watch?v=HTPOSdyA7Uo

8 comments:

  1. கொல்ல நினைத்த எண்ணம் எப்படி மாற்றி விட்டது ஓர் கடிதத்தால்...

    இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி திரு.திண்டுகல் தனபாலன் அவர்களே. காணொளியையும் காணுங்கள். ரசிப்பீர்கள்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete



  2. ஆன்டன்.பி.செக்காவ் எழுதிய சிறுகதைகள் நன்றாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படித்ததில்லை. இந்த கதை மிக அருமை. எதிர்பாரா முடிவு. பகிர்ந்தமைக்கு நன்றி!

    தாங்கள் தந்த இணைப்பின் மூலம் காணொளியைக் கண்டு இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      உலக இலக்கியங்களில் ரஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆன்டன்.பி.செக்காவ் – உடைய எழுத்துக்களும் அதில் அடங்கும்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. முடிவு! எதிர்பாராதது! கதையின் முடிவில் அந்த கடிதத்தில் சொல்லப்பட்ட தத்துவங்கள் சிந்திக்க வைப்பன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      ஆமாம். சிந்திக்க தூண்டுவனதான். கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ரஷ்யாவில் நல்ல சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதை அந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுள்ள தமிழால் அதைவிட அதிக தூரத்துக்கு சென்றிருக்க முடிந்திருக்கும். நம் நாட்டில் இருந்த பிரச்சனைகளால் பின்னுக்கு சென்றுவிட்டோம் என்றே தோன்றுகிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. வேறு மொழிகளில் உள்ள கதைகளை அப்படியே சிதைக்காமல் தமிழில் வடிப்பது அத்தனை எளிதல்ல. கதையின் கரு கலையாமல் அதே சமயம் விருவிருப்புடன் தமிழாக்கம் செய்துள்ளீர்கள். அருமை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல்தான் இதுவும். ஆனால் தனிமையின் துயரம் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் என்பதும் உண்மை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!
      நான் க்ளாசிக்கல் வகைப்படும் கதைகளையே மொழிபெயர்க்க விரும்புகிறேன். முடிந்தவரை அந்நிய வாசனை வீசுவதை குறைக்க முயற்சிக்கிறேன்.
      தனிமை கொடுமையான தண்டனைதான். அதனைப்பற்றி மனோதத்துவ ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன என்று படித்திருக்கிறேன். சமயம் கிடைக்கும்பொழுது அதனைப்பற்றி எழுதுகிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete