பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, March 20, 2014

சிறுகதை – 8 (ஆன்டன்.பி.செக்காவ்)புரளி (நுணலும்.....)


செர்ஜ் அஹிநீவ் ஒரு பள்ளி ஆசிரியர். அவருடைய மகளுக்குத் திருமணம். வரலாறு போதிக்கும் ஒரு ஆசிரியர்தான் மணமகன். திருமணம் ஒரு பெரிய ஊர்த் திருவிழாபோல் விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. சீருடை அணிந்த பரிமாறுபவர்கள், உதவியாளர்கள் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தனர். திருமண வீட்டில் இருந்த பெரிய அறையில் சீட்டாட்டம், நடனம், உரையாடல்கள் என்று மக்கள் ஆனந்தமாக இருந்தார்கள். வீடு முழுவதும் ஓயாத இரைச்சலாக இருந்தது. அஹிநீவ் பிரபலமான பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆசிரியர்கள் வருமானவரி கணக்கர்கள், ஆன்மீகவாதிகள் என்று பலதரப்பட்ட மனிதர்களை அங்கே காணமுடிந்தது. பெரிய மனிதர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் தூரத்தில் நின்றுகொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இரவு உணவு தயாரிப்புகள் எந்த நிலையில் உள்ளதென்று பார்த்துவர, அஹிநீவ் சமையலறைக்குச் சென்றார். சமையலறையில், உணவுகள் பசியை தூண்டுமளவுக்கு மணத்துக்கொண்டிருந்தது. நிற்பன, நடப்பன, பறப்பன, நீந்துவன என்று அனைத்து வகையான உணவுகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுக்கிணையாக சமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. பருகுவதற்கான பானகங்கள், கொறிக்கும் உணவுகள் மேஜையை அலங்கரித்துக் கொண்டிருந்தன. தலைமை சமையல் நிபுணர் மார்ஃபா, சிவந்த நிறமும், உருளைபோன்று குண்டான உடலமைப்பும் கொண்டிருந்தார். அங்கேயும் இங்கேயும் சுறுசுறுப்பாக நடந்து எல்லோரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தார்.  

சமையலறைக்குள் நுழைந்த அஹிநீவ் “ஆஹா. மணம் ஊரையே தூக்குது. வாசனை முகர்ந்ததும் எனக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டது. ஸ்டர்ஜன் ரெடியாகிவிட்டதா மார்ஃபா? ருசி எப்படி இருக்கிறது என்று நான் பார்க்கலாமா?” அஹிநீவுக்கு ஸ்டர்ஜன் என்றால் உயிர். ஸ்டர்ஜன் என்பது மீனில் தயாரிக்கப்படும் ஒருவகை உணவு. “ரெடியாக உள்ளது.” என்று கூறிய மார்ஃபா ஸ்டர்ஜன் சமைத்திருந்த பாத்திரத்தில் இருந்து, மிகவும் கவனமாக சிறிதளவு ஸ்டர்ஜனை எடுத்து ஒரு தட்டில் வைத்து அஹிநீவிடம் நீட்டினார். அவள் கொடுத்தது ஒரு வாயளவு மட்டுமே இருந்தது. மிகுந்த விருப்பத்துடன், ஒரு குழந்தையைப்போல அஹிநீவ் அதனை ருசிபார்த்தார். “ஆஹா. இதற்கு நான் என் உயிரையே தருவேன்.” என்று உதடுகளால் சத்தமாக சப்புகொட்டினார்.

சமையலறையின் உள்ளே ஸ்டோரில் இருந்த மார்ஃபாவின் உதவியாளர் வான்கின்-க்கு சப்புகொட்டும் சத்தம் மட்டுமே கேட்டது. அவர் ஸ்டோரில் இருந்து வெளியே தலையை எட்டிப்பார்த்தபொழுது அஹிநீவின் பின்புறம் தெரிந்தது. மார்ஃபா அஹிநீவின் முன்னே நிற்பதும் தெரிந்தது.

“யார் அங்கே எங்களுடைய மார்ஃபாவை முத்தமிடுவது?” என்று விளையாட்டாக கேட்டபடியே வான்கின் வெளியே வந்தான். வந்தவுடன் அஹிநீவைப் பார்த்து “நீங்களா சார், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் திருமண பெண்ணின் தந்தைபோல் இல்லை. நன்றாக இளமையுடன் இருக்கிறீர்கள் என்று கண்ணடித்தவாறே கூறினான்.

“நான் ஒன்றும் முத்தமிடவில்லை. மீன் ருசியாக இருந்ததால் சப்புகொட்டி சாப்பிட்டேன் அவ்வளவுதான்.” கலவரத்துடன் கூறினார் அஹிநீவ்.
“பரவாயில்லை. பரவாயில்லை. எல்லோரும் மனிதர்கள்தானே. விடுங்க சார்.” வான்கின் சிரித்துக்கொண்டே மீண்டும் ஸ்டோருக்குள் சென்றுவிட்டார்.
அஹிநீவ் வெட்கத்தால் முகம் சிவந்தார். “ஐயோ. இந்த மடையன் நான் மார்ஃபாவை முத்தமிட்டதாக ஊர் முழுவதும் சொல்லிவிட்டால் என் கௌரவம் என்னாவது? மானத்தை வாங்கிவிடுவான் போலிருக்கிறதே என்று அஹிநீவ் யோசித்தார்.

வான் கின் ஸ்டோரிலிருந்து வெளியே சென்று ஏதோ வேலையை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தான். வரும் வழியில் திருமணத்துக்கு வந்திருந்த ஒரு போலிஸ் ஆஃபிசருடைய மனைவியிடம் பேசிக்கொண்டிருப்பதை அஹிநீவ் கவனித்தார். போலிஸ் ஆஃபிசருடைய மனைவியும் கலகலவென்று சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

என்னைப்பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். அடப்பாவி! இவனை என்ன செய்தால் தகும்? அவளும் வெட்கமில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்துக்காக இப்படி சிரித்துக்கொண்டிருக்கிறாளே. இதனை சும்மா விடக்கூடாது. விட்டால் ஊர் முழுவதும் வதந்தி பரவிவிடும் என்று தனக்குள் கூறிக்கொண்டார்.

சிந்தனையில் தலையை சொறிந்துகொண்டே நின்றுகொண்டிருந்தார் அஹிநீவ். ஏதோ தீர்வு கிடைத்ததுபோல ஃப்ரெஞ்ச் ஆசிரியர் இருந்த திக்கை நோக்கி சென்று அவரிடம் சாதாரணமாக உரையாடலைத் துவங்கினார். “ராத்திரி சாப்பாடு ரெடியாயிட்டான்னு கிச்சனுக்கு போய் பார்த்தேன். எல்லாம் கிட்டத்தட்ட தயாராயிட்டு. ஸ்டர்ஜன் மீன்கறி முடிஞ்சிருந்தது. உங்களுக்குதான் தெரியுமே மீனுன்னா எனக்கு உயிர்னு. சரின்னு கொஞ்சம் ருசி பார்த்தேன். பிரமாதமாயிருந்தது. நல்லா சப்புகொட்டி சாப்பிட்டேன். பக்கத்துல மார்ஃபா நின்னுட்டிருந்தாள். ஸ்டோர்ல இருந்த வான்கின் நான் சப்பு கொட்டுற சத்தத்த கேட்டுட்டு, என்னா சார் மார்ஃபாக்கு முத்தம் கொடுத்தீங்களான்னு கேட்கிறான்.. மடையன், மார்ஃபாக்கு முத்தம் கொடுக்கிற வயசா எனக்கு?” என்றார்.

“என்ன... யாருக்கு கிஸ் பண்ற வயசுன்னு சந்தேகம் இங்க?” அரைகுறையாக கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் கணித ஆசிரியர்.

“அது இல்ல சார். வான்கின் இருக்கான்ல. நான் கிச்சனுக்கு போனேனா? ... “ என்று அஹிநீவ் மீண்டும் தொடர்ந்தார். “போயும் போயும் மார்ஃபாவைக்கு முத்தம் கொடுக்கிறதுக்கு ஒரு கழுதைக்கு நான் முத்தம் கொடுப்பேனாக்கும்” என்று சேர்த்துக்கொண்டார். சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தபொழுது ஒரு நாலைந்து பேர் கேட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.

அவர்களைப் பார்த்ததும் “ அதெல்லாம் இல்ல சார். என் பக்கத்துல மார்ஃபா இருந்தத பாத்துட்டு, நான் கிஸ் பண்ணிட்டேன், மிஸ் பண்ணிட்டேன்னு இந்த வான்கின் சொல்லிட்டு திரியிறான். மடையன். இந்த வயசுல இந்த வேலையை நான் செய்வேனா, நீங்களே சொல்லுங்க? இப்படிகூட ஒருத்தன் சொல்றான்னு ஆச்சர்யமால்ல இருக்கு.” என்றார்.

“ஜீஸஸை விட அப்படி என்ன ஆச்சர்யமான விஷயம்? “ பாதிரியார் அஹிநீவிடம் கேட்டபடியே அங்கு வந்தார். “நான் கிச்சன்ல மீனை டேஸ்ட் பண்ணிட்டிருக்கும்போது இந்த வான்கின் ....”

அரைமணி நேரத்துக்குள் திருமணத்துக்கு வந்திருந்தவர்களில் அநேகமாக அனைவருக்கும் அஹிநீவ், மீன் கறி, மார்ஃபா விவகாரம் தெரிந்துவிட்டது.

இப்ப அந்த நாயி சொல்லட்டும். அவன் வாயைத் தொறந்தா எல்லாரும், - உளறாத எங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியும்னு சொல்லி வாயை அடைச்சுடுவாங்கல்ல என்று அஹிநீவ் நினைத்துக்கொண்டார். ஒரு வழியாக நிம்மதியடைந்த அஹிநீவ், கிட்டத்தட்ட நாலு பெக் வோட்காவை உள்ளே தள்ளிவிட்டார். அதனால், இரண்டு மூன்றுபேர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அவரை தூங்கவைக்க வேண்டியதாயிற்று. ஒரு குழந்தையைப்போல நிம்மதியாக அன்றிரவு அவர் உறங்கினார். மனிதன் ஒன்று நினைக்க, நடப்பது வேறொன்றாகிவிடுகிறது. உலகிலேயே கொடுமையான ஆயுதம் நாக்குதான்.

அஹிநீவ் நினைத்ததற்கு எதிராக எல்லாம் தாறுமாறாக நடந்தது. ஒரு வாரம் கழித்து அவர் வேலை செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அஹிநீவைத் தனது அறைக்கு அழைத்தார்.
“இங்க பாருங்க அஹிநீவ், சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. ஊருக்குள்ள நீங்க மார்ஃபா கூட தொடர்பு வைச்சிருகீங்கன்னு ஒரே புரளியா கிடக்கு. நீங்க யார் கூட வேணும்னாலும் தொடர்பு வைச்சுக்குங்க. அது உங்களோட சொந்த விஷயம். ஆனால் அதனால பள்ளிக்கூடத்துக்கு எதுவும் கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துடாதீங்க. கண்டிப்பா சொல்லிட்டேன்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அஹிநீவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் கொட்டியதுபோல இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். வீட்டில் பிரளயம் காத்திருப்பது அவருக்குத் தெரியாது.

அவர் வீட்டுக்கு வந்ததும் அவர் மனைவி அவரிடம் பேசவில்லை. இரவு உணவு உண்ணும்பொழுது “ஏன் சாப்பாட்டை போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். நான் சமைத்தால் நன்றாக இல்லையா? மார்ஃபா சமைத்தால்தான் ருசியாக உள்ளதா?” என்று கோபமாகக் கூறினார்.
அஹிநீவ் தனக்கு நேரம் சரியில்லை என்று நினைத்துக்கொண்டார். “சரி எனக்கு இப்பொழுதாவது தெரிந்ததே. உங்களுடன் குடும்பம் நடத்தியதற்கு எனக்கு நல்ல தண்டனை.” என்று அவரது மனைவு குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

உணவைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்த அஹிநீவ், உடையைக் கூட மாற்றாமல், உடனடியாக வான்கின்-உடைய வீட்டுக்கு சென்றார். வான்கின் அப்பொழுது வீட்டில் இருந்தார். அஹிநீவ் “அடப்பாவி. உனக்கு நான் என்ன துரோகம் செய்தேன். ஊர் முழுக்க எனக்கு இப்படி அவப்பெயர் வாங்கிக் கொடுத்திட்டியே” என்று வான்கின்-ஐத் திட்டினார்.
“அவப்பெயரா? என்ன சொல்றீங்க?” – வான்கின்
“மார்ஃபாக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு யார் புரளியைக் கிளப்புனது? உன்னைத் தவிர வேற யாரும் இல்லை. எங்கே, நீ இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்?” – அஹிநீவ்.
“அப்படி நான் சொல்லியிருந்தால் என் வாய் புழுபுழுத்து போகட்டும் சார். என்ன சார் இப்படி அநியாயத்துக்கு பழி சொல்றீங்க. சும்மா கிண்டலுக்குதான் உங்ககிட்ட நான் சொன்னேன். வேற யார்கிட்டேயும் சத்தியமா நான் சொல்லலை. தெரியுமா?” வான்கின் தான் வதந்தியைப் பரப்பவில்லை என்று உறுதியாகக் கூறினான்.

அப்படின்னா வேற யாரு சொல்லியிருப்பாங்க என்று தனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தார் அஹிநீவ். நுணலும் தன் வாயால் கெடும். என்ன செய்வது?(மூலம் : ஆன்டன்.பி.செக்காவ்)


ஒரு காணொளி :

வாழ்க்கையில் தினம்தினம் அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=E3w3OqidqSkதமிழ் சொற்பொழிவு:

தமிழ் நாட்டில் இவர் எவ்வளவு பிரபலம் என்று எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பிடித்த சொற்பொழிவாளர் திரு.கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவுகள் நிறைய யூ ட்யூப்-ல் உள்ளன. சிட்னியில் அவரது சொற்பொழிவை நேரடியாக கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் அவரைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

இதனைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் அன்னாரது அனைத்து சொற்பொழிவுகளையும் தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

8 comments:

 1. கதை சுவாரஸ்யம்...

  அனைத்து இணைப்புகளுக்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழியை நினைவு படுத்தும் ஆன்டன்.பி.சக்கோவின் ‘புரளி’ என்கிற சிறுகதை அருமையாய் உள்ளது. வெற்றிக்கொடி கட்டு என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிகர் பார்த்திபனிடம் தானே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நானே எல்லாவற்றையும் சொல்லிவிட்டேனா என்று கேட்பதை நினைவூட்டியது இந்த கதை.

  நீங்கள் தந்த காணொளி இணைப்பில் இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பேச்சைக் கேட்டேன். உண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளது ஒரு அதிசய நிகழ்வுதான்.

  அவரது பேச்சை பலமுறை பொதிகை தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் உள்ள பேச்சை கேட்டு இரசிக்க இருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.

   திரு.கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பத்துக்கு மேற்பட்ட காணொளிகள் You Tube -ல் உள்ளன. அனைத்தும் அருமை. நேரமிருந்தால் பாருங்கள்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. அருமையான கதை. முடிவில் கூடத் தன் தவறு தெரியவில்லை அவருக்கு! :(

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.

   தவறு செய்பவர்கள், தவறை உணர்ந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல என்று நினைக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. நம்மில் பலருக்கும் இப்படியொரு வியாதி உள்ளது. அதாவது யாராவது இருவர் உரையாடிக்கொண்டிருந்தால் அவர்கள் நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்களோ என்ற எண்ணம் எழுவது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இது ஒரு தீராத மனநோய் என்பதை உணர்வதே இல்லை.

  மனிதர்களின் பல உணர்வுகளை மையமாக வைத்து பிற மொழிகளில் எழுதப்படுவதைப் போல் தமிழிலும் நிறைய வர வேண்டும். இங்கு எல்லாவற்றிலுமே காதல், காதல்தான்.

  அழகான ஒரு கதையை தெரிவு செய்து அழகாக மொழிமாற்றம் செய்து வழங்கியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா!
   அது ஒருவகையில் சக மனிதர்களிடம் உள்ள அவநம்பிக்கையினால் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். நம்பிக்கை இருந்தால், ஒருவர் நம்மைப்பற்றி உண்மையிலேயே தவறாக கூறினாலும், அதற்கு ஏதேனும் காரணம் இருக்குமென்று நினைப்போம்.
   தமிழில் காதல் குறித்தும் தேவையில்லாத அளவுக்கு மிகைப்படுத்திதான் எழுதப்படுகிறது என்று நினைக்கிறேன். இல்லையேல் அதிலேனும் சிறந்த காவியங்கள் அதிகம் இருக்கவேண்டுமல்லவா?

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete