கழுவுற
மீனுல நழுவுற மீன்
“என் காதுல வேற மாதிரில்ல விழுந்துது” பிலிப்
கூறினார்.
அது பணக்காரர்களுக்கான ஒரு க்ளப். கோல்ஃப்
மைதானத்துடன் இணைந்துள்ள க்ளப். சமூகத்தில் குறிப்பிட்ட அளவு அந்தஸ்தும்,
செல்வாக்கும் உள்ளவர்கள் மட்டுமே அந்த க்ளப்பில் உறுப்பினர்களாக சேர முடியும்.
உறுப்பினர்கள் அவர்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும் முன் பதிவு
செய்திருந்தால் அழைத்துவரவும் முடியும்.
“உன் காதுல அப்படி என்னா விழுந்துது?” மைக்கேல்
அமைதியாகக் கேட்டாலும், குரலில் ஒரு அழுத்தமும் கோபமும் தெரிந்தது.
“உன் பேர்ல தப்பே இல்லேன்னு சொல்ற. ஆனால் நீ ஒண்ணும்
அரிச்சந்திரன் இல்லேன்னு கேள்விப்பட்டேன்”
“என் மேல எந்தத் தப்பும் கிடையாது. நீ என்னா நடுப்புற
கரடி விடுற?”
“நான் ஒண்ணும் கரடி விடலை.” பிலிப் தொடர்ந்தார். “
மறந்துடாத. நீ என் கம்பெனிலயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டிருக்க. நீ பண்ற
தில்லுமுல்லு திகிடுதத்தம் எல்லாம் எனக்கும் கொஞ்சம் தெரியும்.”
“தில்லுமுல்லு பண்றதுக்கெல்லாம் வேற ஆளப்பாரு. எங்க
கம்பெனில ஆட்குறைப்பு நடந்தது. என் அதிர்ஷ்டம். கடைசில வேலைக்கு சேர்ந்ததால
என்னையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வேலை போச்சு.”
“அப்புறம் உனக்கு ஏன் இன்னும் புது வேலை கிடைக்கல்ல?”
“முப்பத்தஞ்சு வயசுக்கு மேல வேலை தேடுறது அவ்வளவு ஈஸி
கிடையாது. நீ பெரிய கோடீஸ்வரன். உன் அதிர்ஷ்டம். அதுக்காக, யாரப்பத்தியும்
என்னவேண்ணா சொல்லலாம்னு நினைச்சுக்காத.”
“நீ இந்த நிலைமைல இருக்குறது உன் துரதிஷ்டம் மட்டும்
கிடையாது. இந்தக் காலத்துல பழைய கம்பெனி ரெஃபரன்ஸ் இல்லாம, யாருக்கும் வேலை
கிடைக்காதுங்குறதுதான் உண்மை.”
“நீ என்ன சொல்ல வர்ற?” மைக்கேல் கோபமாகக் கேட்டார்.
“நான் ஒண்ணும் மறைக்கல. உன் பழைய முதலாளிங்க யாரும்
உனக்கு ரெஃபரன்ஸ் தரமாட்டாங்க. ஊர் உலகத்துக்கே இது தெரிஞ்ச விஷயம்தானே?”
பிலிப்பும் காட்டமாக பதிலளித்தார்.
க்ளப்பில் சுற்றி அமர்ந்திருந்தவர்கள்
ஸ்தம்பித்துவிட்டார்கள். உள்ளே சென்ற ஆல்கஹால் பிலிப்பை அப்படி பேச வைத்ததா அல்லது
கோபம் அப்படி பேச வைத்ததா என்று தெரியவில்லை. சுற்றியிருந்தவர்களுக்கு இது புது
விஷயமாக இருந்தது.
“எங்க கம்பெனில கிட்டத்தட்ட நூறு பேரை ஆட்குறைப்பு
பண்ணிட்டாங்க. நானும் அதுல மாட்டிட்டேன். இதுதான் உண்மை.”
“ஆனால், உன் விஷயத்துல ஆட்குறைப்புங்கறது ஒரு
சால்ஜாப்பு. உன் சீட்டை கிழிச்சிட்டாங்கங்கறதுதான் உண்மை.”
“ஆட்குறைப்புங்கறதுதான் உண்மை. இந்த வருஷம் எங்க
கம்பெனி பேலன்ஸ் ஷீட் அவ்வளவு திருப்தியா இல்லை தெரியுமா?”
“ஆமாம். ஆமாம். வருஷா வருஷம் எல்லாக் கம்பெனியும்
இப்படிதான் மூக்கால அழும். யாராவது நம்புறவங்ககிட்ட போயி சொல்லு.”
“எங்க போட்டி கம்பெனி எங்களுக்கு வர வேண்டிய, இரண்டு
ப்ராஜக்ட்டை, எடுத்துட்டாங்க தெரியுமா?”
“ஆமாம். ஆமாம் உங்க கம்பெனில எனக்கும் கண் காதெல்லாம்
இருக்கு. என்ன நடந்துதுன்னு எனக்கும் தெரியும்.”
பிலிப்பும் மைக்கேலும் போட்டி போட்டு பேசப் பேச,
சுற்றி இருந்தவர்கள் அமைதியாகிவிட்டார்கள். அவர்களுக்கு வெறும் வாய் மெல்ல அவல்
கிடைத்ததுபோலாயிற்று.
“ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங்ல, எங்க கம்பெனி
நஷ்டக்கணக்கு காட்டியிருக்குல்ல. அதையாவது பார்த்தியா?”
“ஷேர் ஹோல்டர் மீட்டிங்ல, சீட்டை கிழிச்ச பழைய
எம்ப்ளாயீ, எப்படி புதுகார் வாங்குனார்னு சொல்லலியே? அது புது கார் மட்டும்
கிடையாது. இரண்டாவது கார்னும் எனக்குத் தெரியும்” பிலிப்பும் விடாப்பிடியாகத்
தொடர்ந்தார்.
“அது புது கார் கிடையாது. ஒரு செகண்ட் ஹேண்ட் கார்.
எனக்கு ரிடன்டன்ஸில கிடைச்ச பணத்துல வாங்கினேன். என் வொய்ஃப் வேலைக்கு போறதுக்கு
ஒரு கார் தேவைன்னு வாங்கினேன். உனக்கும் அது தெரியும்.”
“உன் வொய்ஃப் கரோல் உன் கூட, இவ்வளவு நாள் எப்படி
தாக்குப்பிடிக்கிறாள்னு எனக்கு உண்மையிலேயே பெரிய ஆச்சரியம்தான்.”
“என் கூட தாக்குப்பிடிக்கிறதா? என்ன புதுக்கதைய
கிளப்புற?”
“ஐயா. இது புதுக்கதையில்ல. உனக்கு சீட்டு கிழிஞ்ச அதே
நாள், இன்னொரு பொண்ணுக்கும் சீட்டு கிழிஞ்சிட்டு போலிருக்கே? அதுல அந்த பொண்ணுவேற
ப்ரக்னன்ட்னு கேள்வி.”
க்ளப்பில் யாரும் அடுத்த ட்ரிங்க் வாங்கியது போல
தெரியவில்லை. அதைவிட சுவாரஸ்யமான கிக் இலவசமாக அவர்களுக்கு
கிடைத்துக்கொண்டிருந்தது.
“எனக்கு அப்படி யாரையும் தெரியாது.” மைக்கேல்.
“சொன்னாங்க. சொன்னாங்க. அவளுக்கு குழந்தை பொறந்து
அச்சு அசல் உன்னைப்போலவே இருக்குன்னு பேசிக்கிட்டாங்க.”
“நீ ரொம்ப விவகாரமாப் பேசற. இத்தோட நிறுத்திக்கோ.”
“மடில்ல கனம் இருந்தாத்தான வழியில பயம். உனக்கென்ன?”
“எனக்கு ஒண்ணும் மடில்ல கனம் இல்ல.”
“அதான் உன் கார் முழுக்க மல்லிகைப்பூவா கிடந்துதா?
அது எப்படி வந்துது? கரோல்தான் மல்லிகைப்பூ வச்சிக்கமாட்டாங்களே?”
“நான் கார் வாங்குன, பழைய ஓனர் வீட்ல
வச்சிருந்திருக்கலாம்.”
“உன் வொய்ஃபும் இத நம்பிட்டாங்களா?”
“என் வொய்ஃப் என் மேல சந்தேகப்பட்டதே கிடையாது.
ஏன்னா நான் என் வொய்ஃப்கிட்ட பொய் சொன்னதே கிடையாது”
“பொய்யா? ஏன் முழுப்பூசணிக்காய சோத்துல
மறைக்கப்பாக்குற. உன் சீட்டை உங்க கம்பெனில்ல கிழிச்சிட்டாங்க. காரணம் – உன்னால
அழகான பொண்ணுங்கள கண்டா சும்மா இருக்க முடியாது. இன்னொன்னு கம்பெனி காசை கைல
சிக்குனா விடமாட்ட. ஞாபகம் இருக்கா? இதே காரணங்கள்னாலதான, உனக்கு என் கம்பெனில்ல
சீட்டு கிழிஞ்சுது.”
மைக்கேலால் பொறுக்க முடியவில்லை. கையை
முறுக்கிக்கொண்டு ஆவேசத்துடன் பிலிப்பை நோக்கிப் பாய்ந்தார். நல்ல வேளையாக க்ளப்
பிரசிடென்ட் மேதர் குறுக்கே வராமல் இருந்திருந்தால், அங்கே ஆம்புலன்ஸைக் கூப்பிட
நேர்ந்திருக்கும்.
“ஹாய். மேதர்” – பிலிப்.
“என்ன பிலிப். கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்க் இந்த
அளவுக்கு போயிருக்க வேண்டாமே?” – மேதர்.
“கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்க்? அந்தாளு என்ன
சொன்னார்ன்னு முழுசும் கேட்டீங்களா நீங்க?” – மைக்கேல்.
“என்னா பண்ணுறது? காதுல பஞ்சையா வச்சுக்க முடியும்.
எல்லாரும்தான் கேட்டுக்கிட்டிருந்தோம். பேசாமல் நடந்தை மறந்துடுங்க. கை
கொடுத்துட்டு பழையபடி நண்பர்களாவே இருங்க. எல்லாம் இந்த ஆல்கஹால் பண்ற வேலை.” –
மேதர்.
“கை கொடுக்கிறதா? இந்த பொம்பளை பொறுக்கி. ஆஃபிஸ் காசை
திங்கிறவங்கிட்டயா? இந்த ஆளு இந்தக் கிளப்ல இருக்கிறதுக்கே லாயக்கு கிடையாது.
மொதல்ல, இவுரு மெம்பர்ஷிப்பை கேன்ஸல் பண்ணுங்க.” பிலிப்பால் கோபத்தைக்
கட்டுப்படுத்த முடியவில்லை.
பிலிப்பை அடிக்க வந்த மைக்கேலை மூன்றுபேர்
கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. க்ளப் உறுப்பினர்கள் முதலில்
பிலிப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, சிறிது நேரம் கழித்து மைக்கேலையும் வீட்டுக்கு
அனுப்பி வைத்தார்கள். ஒருவழியாக க்ளப் அமைதியடைந்தது.
க்ளப் உறுப்பினர்களுக்கு உரையாட ஒரு புதிய சப்ஜக்ட்
கிடைத்தது.
“என்னாய்யா நடக்குது இங்க? சாயங்காலம் வந்தப்ப
நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தாங்க.”
“ஆமாய்யா. என்னாச்சுன்னு தெரியலை.”
“உண்மையிலேயே மைக்கேல் அப்படிப்பட்ட ஆளா?”
“அதெல்லாம் இல்லை. நல்ல மனுஷன்தான்.
பிலிப்புக்குத்தான் என்னாச்சுன்னு தெரியலை.
“ரெண்டு பேருக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி?”
“ரெண்டு பேரும் நகமும் சதையும் போலப்பா. தூரத்து சொந்தக்காரனுங்க வேற. டிப்ளமா முடிச்சிட்டு பிலிப்ஸ் கம்பெனி ஓப்பன் பண்ணான். அவன்
அதிர்ஷ்டம் கம்பெனி லிஸ்ட் பண்ற அளவுக்கு பெருசாயிட்டு. மைக்கேல் டிகிரி
முடிச்சிட்டு வேலைக்கு போனான். நல்ல க்ளவர்மேன்தான். ஆனால், பாவம் இன்னும் சரியா
க்ளிக் ஆகலை. இப்ப ரெண்டு பேருக்கும் என்னாச்சுன்னு தெரியலை.”
“என்ன செய்யப் போறிங்க?” கரோல் பதற்றத்துடன்
கேட்டாள். மைக்கேல் க்ளப்பில் பிலிப்புடன் நடந்த உரையாடலைக் கூறிய பிறகு கரோல்
கவலையுடன் கேட்டாள்.
“இந்த நேரத்தில் எனக்கு ஒரு வழிதான் தோன்றுகிறது.
ஆமாம் அந்த மடையன்மீது மான நஷ்ட வழக்குப் போடப்போகிறேன்.” – மைக்கேல்.
“ஒன்றை மட்டும் மறக்காதீங்க. பிலிப் உங்களோட நல்ல
ஃப்ரெண்ட். கோடீஸ்வரன்வேற. அவரை எதிர்த்து வழக்காடி நம்பளால ஜெயிக்கமுடியுமா?”
“எனக்கு வேறவழி தெரியலை. என் சொத்தே அழிஞ்சாலும்
பரவாயில்ல.”
“உங்களோட சேர்ந்து, குடும்பமும் கஷ்டப்படணுமா?”
“கவலைப்படாதே. ஜெயிச்சதுக்கப்புறம் கணிசமான தொகைய
நிச்சயமா கறந்துருவேன்.”
“தோத்துப்போயிட்டா, உள்ளதுமில்ல போயிடும்?”
“தோற்பதற்கு சான்சே இல்லை. க்ளப்பில் கிட்டத்தட்ட
ஐம்பது விட்னஸ் இருந்தாங்க. க்ளப் பிரசிடண்ட்டும் இருந்தார். க்ளப் மேகசின்
எடிட்டரும் இருந்தார்.” கரோலுக்கு மைக்கேலின் முயற்சி பிடிக்கவில்லை. மைக்கேல்
மன்னித்து மறக்கும் நிலைக்கு வரவேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள்.
அந்த மாதம் க்ளப் மேகசினில் “க்ளப்பில் நண்பர்கள்
தகராறு” என்ற தலைப்பில் மைக்கேல், பிலிப்பின் உரையாடல்கள் வரிக்கு வரி
அச்சடிக்கப்பட்டிருந்தது. மேகசின் எடிட்டர் மானநஷ்ட வழக்குகளுக்கு அஞ்சக்கூடியவர்.
எனவே க்ளப் மேகசினில் உண்மையான தகவல்களை மட்டுமே அச்சிடுவார்.
“இதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்.” மூன்றாவது முறையாக, க்ளப்பில் நண்பர்கள் தகராறு -
கட்டுரையை படித்து முடித்த மைக்கேல் கூறினார். கரோல் தன்னால் தன் கணவனைத் தடுக்க
முடியாது என்று உணர்ந்துகொண்டாள்.
மறுநாள் திங்கட்கிழமை ஒரு வக்கீலுக்கு மைகேல் ஃபோன்
செய்து அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டார். வக்கீல் லோமாக்ஸ்-ம் மைக்கேலுடைய நண்பர்தான்.
எப்பொழுதோ சேர்ந்து படித்திருந்தார்கள். மைக்கேல் மேகசினில் வந்த கட்டுரையும்,
சம்பவம் நிகழ்ந்த்தைப்பற்றி தான் எழுதிவைத்த காகிதங்களையும் எடுத்துக்கொண்டு
வக்கீலைச் சந்தித்தார். வக்கீல் லோமாக்ஸிடம், மைக்கேல் நிகழ்ந்தவைகளைக் கூறி, தான்
எழுதி வைத்திருந்ததையும், மேகசினில் வந்திருந்ததையும் சமர்ப்பித்தார்.
“நடந்ததையெல்லாம் ஒண்ணுவிடாம எழுதியிருக்கீங்கன்னு
நினைக்கிறேன். எப்ப இதெல்லாம் எழுதினீங்க?” – வக்கீல் லோமாக்ஸ் கேட்டார்.
“க்ளப்லேர்ந்து வெளில வந்ததும், என் கார்ல
உட்கார்ந்து முதல் வேலையா எல்லாத்தையும் எழுதி வச்சிட்டேன்.” - மைக்கேல்
“ரொம்ப உஷாரா வேலை செஞ்சிருக்கீங்க போலிருக்கு?”
“ஆமாம். நான் அப்பவே மானநஷ்ட வழக்கு போடணும்னு
முடிவு பண்ணிட்டேன்.”
“வழக்குன்னு போனா ரொம்ப செலவாகும் பரவாயில்லையா?”
“செலவானாலும் ஜெயிச்சிட்டா, வக்கீல் ஃபீஸ்ஸும்
அவங்கதானே தரணும்.”
“ஜெயிச்சுடுவோம்னு கண்டிப்பா எந்தக் கேஸ்லயும் சொல்ல
முடியாதுல்ல?”
“நான் விட்டுக்கொடுக்கறதா இல்லை. இரண்டுல ஒண்ணு
பார்த்துடணும்னு இருக்கேன்.”
“சரி. எவ்வளவு அமௌண்ட்டுக்கு கேஸ் போடப் போறீங்க?”
“ஒரு பத்துலட்சத்துகாவது போடணும்.”
“ஒரு பத்தாயிரம் ரூபா அட்வான்ஸா கொடுங்க. பாக்கிய
நான் பார்த்துக்கிறேன்.”
இரண்டு வாரங்கள் கழித்து லோமாக்ஸிடமிருந்து
மைக்கேலுக்கு ஒரு ஃபோன் வந்தது.
“மைக்கேல். கங்க்ராஜுலேஷன்ஸ். கோர்ட்டுக்கு போகாமலே
வெளியிலேயே கேஸ முடிச்சுக்கலாம்னு அவுங்க வக்கீல் சொல்றாரு. ஆனால் மூணு லட்சம்தான்
தருவேன்னு சொல்றாங்க. என்ன சொல்லட்டும்?” – லோமாக்ஸ்.
“பத்து லட்சத்துக்கு ஒரு தம்பிடி குறைஞ்சாலும் நான்
ஒத்துக்க மாட்டேன். கோர்ட்லேயே பேசிக்கலாம்னு சொல்லிடுங்க.” – மைக்கேல்
“சரி. பேசிப் பார்க்கிறேன்.”
இரண்டு நாட்கள் கழித்து –
“சாரி மைக்கேல். ஆறு லட்சம் வரைக்கும் வந்துட்டாங்க.
நான் பேசாமல் ஒத்துக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?.”
“லோமாக்ஸ். இதுக்கு மேல பேரம் பேசினா, பதினைஞ்சு
லட்சம்னு சொல்லிடுங்க. பத்து லட்சத்துக்கு குறைஞ்சு சொன்னாங்கன்னா எனக்கு கால்
பண்ணாதீங்க.” மைக்கேல் அறுதியாக சொல்லிவிட்டார்.
மறுநாள் –
“மைக்கேல், செட்டில்டு. பத்து லட்சத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.
நான் ஓ.கேன்னு சொல்லிட்டேன்.”
“தேங்க்ஸ். லோமாக்ஸ்.”
“பிடிச்ச பிடிய விடாம சாதிச்சிட்டீங்க.
வாழ்த்துக்கள்.”
க்ளப்பிலிருந்து பிலிப்புக்கும், மைக்கேலுக்கும்
எச்சரிக்கை கடிதம் வந்த்து. இந்த முறை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாகவும், இது
போல் மீண்டும் ஏதாவது பிரச்சனையில் ஈடுபட்டால் உறுப்பினர் பதவியை
நீக்கப்போவதாகவும், எழுத்து பூர்வமாக தெரிவித்திருந்தார்கள்.
மறுவாரம் பிலிப்பும் மைக்கேலும் கோல்ஃப் மைதானத்தில்
விளையாடிக்கொண்டிருந்தார்கள். யாரும் அருகில் இல்லாத அளவு வெகுதூரத்துக்கு
சென்றுவிட்டார்கள். மைக்கேல் கையிலிருந்த பையை பிலிப்பிடம் சேர்ப்பித்தார். “இதில்
அஞ்சு லட்சம் இருக்கையா. ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்பா” என்று கூறினார்.
“ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் விடாதே. செலவெல்லாம்
வரி கட்டும்போது நஷ்டக்கணக்குல கம்பெனில்ல எழுதிடுவேன். நீ ஒரு காலத்துல எங்க
கம்பெனில்ல வேலை பார்த்ததும், ஒரு வகையில நல்லதுதான். எப்படி இருந்தாலும் ஐம்பது
பர்ஸண்ட் வரி கட்டுறேன். வரி கட்டுனாலும் எனக்கு அஞ்சு லட்சம்தான் மிஞ்சும். அந்த
அஞ்சு லட்சத்ததான் இதோ கொடுத்திட்டியே. எனக்கு ஒண்ணும் நஷ்டம் கிடையாது.
தேங்க்ஸ்ன்னு ஃபார்மாலிட்டியெல்லாம் நமக்குள்ள எதுக்கு?” - பிலிப்ஸ்
எப்படியிருந்தாலும் வக்கீல் ஃபீஸ் வேஸ்ட்தானே?” –
மைக்கேல்.
“கவலைப்படாதே. அதையும் வரி கட்டும்போது க்ளைம்
பண்ணிடுறேன்.” – பிலிப்.
- மூலம் – ஜெஃப்ரி ஆர்ச்சர்
நட்பு : ஒருவரைப்பற்றி அனைத்தும் தெரிந்தும், அவரிடம்
அன்பாக இருப்பது நண்பர்களால் (ரத்த உறவுகளைத் தவிர்த்து) மட்டுமே முடியும்.
- எல்பர்ட் ஹப்பர்ட்.
துணுக்கு :
வீட்டில் இருப்பவர்கள் என்னிடம் அன்பாக
இருக்கிறார்கள்; எனக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள்; தங்குவதற்கு இடம்
தந்திருக்கிறார்கள்; தேவையான அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள். நிச்சயம்
அவர்கள் கடவுளாகத்தான் இருக்கவேண்டும். – நாய்
வீட்டில் இருப்பவர்கள் என்னிடம் அன்பாக
இருக்கிறார்கள்; எனக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள்; தங்குவதற்கு இடம்
தந்திருக்கிறார்கள்; தேவையான அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள். நிச்சயம் நான்
கடவுளாகத்தான் இருக்கவேண்டும். – பூனை.
தமிழ் சொற்பொழிவுகள்:
தமிழ் நாட்டில் இவர் எவ்வளவு பிரபலம் என்று எனக்குத்
தெரியாது. எனக்கு மிகவும் பிடித்த சொற்பொழிவாளர் திரு.கம்பவாரிதி ஜெயராஜ்
அவர்களின் சொற்பொழிவுகள் நிறைய யூ ட்யூப்-ல் உள்ளன. சிட்னியில் அவரது சொற்பொழிவை
நேரடியாக கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் அவரைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
இதனைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் அன்னாரது
அனைத்து சொற்பொழிவுகளையும் தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்... முடிவும் அதுவே... "மங்காத்தா" படக் கதையும் ஞாபகம் வந்தது...
ReplyDeleteஎல்பர்ட் ஹப்பர்ட் அவர்களின் கூற்று மிகச் சரி...
துணுக்கும் அருமை...
youtube இணைப்புகளுக்கு நன்றி...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே. மங்காத்தா எனக்கு நினைவில் இல்லை.
Deleteமறவாமல் காணொளிகளை காணவும். ரசிப்பீர்கள்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
கதை மிக மிக அருமை. ஆனால் இப்படி ஏதோ ஒரு அட்ஜஸ்ட்மென்ட் இருக்குமோனு சந்தேகமாவே இருந்தது. :))) சொற்பொழிவுகளைக் கேட்கவில்லை. பின்னர் கேட்கணும். :)))) நாயும், பூனையும் அதன் அதன் போக்கில் நல்லா ஜிந்திச்சிருக்குங்க! (ஜி) எழுத்துப் பிழை இல்லை! :)))))))
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். நான் முதலில் படித்தபொழுது இப்படி வரி கட்டுவதில் ஏமாற்றுவார்கள் என்று நினைக்கவில்லை.
Deleteசொற்பொழிவுகளை அவசியம் கேட்கவும். கைகேயியைப்பற்றியும் கம்பனைப்பற்றியும் அழகான விளக்கங்கள்.
மக்களிலும் நாயை போலவும், பூனையைப் போலவும் சிந்திப்பவர்களும் இருக்கிறார்களே.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.