காபூலிவாலா
(ஊரார் பிள்ளை.)
என் ஐந்து வயது மகள் மினி-க்கு சிறிது நேரம் பேசாமல்
இருப்பதென்பது இயலாத காரியம். தூங்கும் நேரம் தவிர, அவளுக்கு வாய் ஓய்ந்து நான்
பார்த்ததே கிடையாது. அவளது அம்மாவுக்கும், மினிக்கு பதில் சொல்லி மாளாது. மினி
மௌனமாக இருப்பதென்பது இயற்கைக்கு மாறான விஷயம். அவள் மௌனமாக இருந்தாலும் என்னால்
பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கும் அவளுக்குமான உரையாடல்களில் சுவாரஸ்யத்துக்கு எப்பொழுதும்
குறைவேயிருக்காது.
ஒருநாள் காலை என்னுடைய நாவலின் பதினேழாவது
அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தேன். மினி அறைக்கு ஓடிவந்து “அப்பா... அப்பா, இந்த
செக்யூரிட்டி காக்காவை காகான்னு சொல்றாரு. தப்புதானே? அவருக்கு ஒண்ணுமே
தெரியலைப்பா. பாவம்.” என்றாள். அவளுக்கு நான் பதில் தருமுன்னே வேறு விஷயத்துக்குத்
தாவிவிட்டாள். “அப்பா. ‘போலோ’ மேகத்துக்குள்ள நிறைய யானைங்க இருக்கும். அதெல்லாம்
தும்பிக்கையால தண்ணிய வெளிய துப்பும். அப்பதான் மழைவரும்னு சொல்றான். அப்படியா?”
என்று முடித்துவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றாள். “அப்பா. அம்மா உனக்கு என்ன
வேணும்?” என்றாள். நான் “மினிக்குட்டி. அப்பாவுக்கு நிறைய வேலையிருக்கு. சமத்தா
வெளில போயி போலோவோட விளையாடு.” என்றேன்.
என்னுடைய அறையில் இருந்த ஜன்னல் தெருவைப்
பார்த்தவாக்கில் அமைந்திருந்தது.
கால்களால் தாளமிட்டபடி மினி என் அருகில் அமர்ந்திருந்தாள்.
பதினேழாவது அத்தியாயத்தில் கதாநாயகி தப்பிக்கவேண்டிய
கட்டாயத்தில் இருந்தாள். மினி திடீரென்று ஜன்னலை நோக்கி ஓடினாள். “அப்பா,
கபூலிவாலா, கபூலிவாலா” என்று கூவினாள். தெருவில் ஒரு கபூலிவாலா மெதுவாக
நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. அழுக்கான உடைகள் மற்றும் உயரமான டர்பனும் அணிந்து
பெரிய மூட்டையை முதுகில் சுமந்தபடி கபூலிவாலா சென்றுகொண்டிருந்தான். கைகளில்
திராட்சை பழப்பெட்டிகளையும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
கபூலிவாலாவைப்பற்றி என்ன நினைத்தாளோ தெரியவில்லை.
கபூலிவாலா என்று சத்தமாகக் கூப்பிட்டாள். குரலைக்கேட்ட எவனும் எங்கள் வீட்டை
நோக்கி வர ஆரம்பித்தான். அவன் வருவதைக்கண்ட மினி, ஓடிப்போய் அம்மாவின் பின்னால்
மறைந்துகொண்டாள். அவளுக்கு கபூலிவாலா, அவன் சுமந்து வரும் மூட்டையில் அவளைப்போன்ற
குழந்தைகளைக் கட்டி வைத்திருக்கிறான் என்ற பயம் உண்டு. சிரித்த முகத்துடன்
கபூலிவாலா எங்கள் வாசல்வரை வந்துவிட்டான்.
வாசல்வரை வந்தவனை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லாது
நானும் கொஞ்சம் நாட்டு நடப்பைப் பேசிவிட்டு திராட்சைப்பழங்களும் வாங்கினேன்.
கபூலிவாலா கிளம்புமுன் “அந்தக் குட்டிப்பாப்பா எங்க சார்?” என்றான். மினிக்கு அவனை
நேராகப்பார்த்தால் பயம் தெளியும் என்றெண்ணி நானும் அவளை அழைத்து வந்தேன்.
கபூலிவாலா அவளுக்கு சிறிது பாதாமும், உலர்ந்த திராட்சைகளையும் கொடுத்தான். அப்படி
அவன் கொடுத்தது மினிக்கு, அவளுடைய சந்தேகத்தை அதிகமாக்கிவிட்டது என்று
நினைக்கிறேன். அதனை வாங்காமல் என்னை அவள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.
அதுதான் அவர்களது முதல் சந்திப்பு.
அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சில நாட்கள் கழித்து
ஒருநாள் காலை வெளியில் செல்லப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். வீட்டின் முன்புறம்
கதவுக்குப் பக்கத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து மினி யாரிடமோ சிரித்துப்
பேசிக்கொண்டிப்பது தெரிந்தது. வெளியில் வந்து பார்த்தபொழுது பெஞ்சுக்கருகில்
கபூலிவாலா தரையில் அமர்ந்திருந்தான். மினி அவனிடம் ஏதோ கேள்விகள்
கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது கைகளில் பாதாமும், உலர்ந்த திராட்சைகளும் இருந்தன.
நான் கபூலிவாலாவிடம் “உன்னை யார் அவளுக்கு கொடுக்கச் சொன்னது?” என்று
கோபித்துவிட்டு அவனிடம் எட்டணா நாணயத்தைக் கொடுத்தேன். அவனும் மறுக்காமல்
பெற்றுக்கொண்டான்.
மாலை வீட்டுக்குத் திரும்பியபொழுது, அந்தப் பாழாய்போன
எட்டணா, அதன் மதிப்பைவிட அதிகமான பிரச்சனைகளை உண்டுபண்ணியிருந்தது. மினியின்
கையில் எட்டணா நாணயத்தைப் பார்த்த அவளுடைய அம்மா, எனக்கு ஏது காசு என்று
கேட்டிருக்கிறாள். மினி சந்தோஷமாக கபூலிவாலா கொடுத்தான் என்று கூறியிருக்கிறாள்.
“கபூலிவாலாவா கொடுத்தான்?” அம்மாவுக்கோ அதிர்ச்சி. “மினி அவங்க எல்லாம் காசு
கொடுத்தா, நீ ஏன் வாங்குற?” என்று அம்மா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது நான்
வீட்டுக்குள் நுழைந்தேன். என் பங்குக்கு நானும் விசாரணையை ஆரம்பித்தேன். முதல்நாள்
சந்திப்பில் திராட்சை பெற்ற பிறகு, மினியும் கபூலிவாலாவும் நல்ல
நண்பர்களாகிவிட்டனர் என்று அப்பொழுதுதான் தெரிந்தது. மினிக்கு கபூலிவாலாவிடம்
இருந்த பயமும் விலகியிருந்தது.
அவர்கள் இருவருக்குமிடையில் நல்ல நட்பு இருந்தது.
அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதும் வேடிக்கையாக இருக்கும். “கபூலிவாலா, உன்
மூட்டையில என்னா இருக்கு?” “ஒரு யானைக்குட்டி இருக்கும்மா.” என்பது போல
விளையாட்டாக இருக்கும். கபூலிவாலாவும் அவனுடைய பங்குக்கு “குட்டிப்பாப்பா நீ எப்ப
மாமியார் வீட்டுக்கு போகப்போற?” என்பான். மினிக்கு அதற்கு அர்த்தம் தெரியும் வயது
கிடையாது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாது “நீங்க எப்ப போகப்போறீங்க?” என்று
மறுகேள்வி வைப்பாள். மாமியார் வீடு என்பதற்கு சிறைவாசம் என்ற பொருளும் உள்ளதால்,
கபூலிவாலா “நான் மாமியார் வீட்டை உடைத்து எறிந்துவிடுவேன்.” என்று வேடிக்கையாக
பதில் தருவான். அர்த்தம் தெரியாவிட்டாலும், மினியும் இந்த பதிலுக்கு விழுந்து
விழுந்து சிரிப்பாள்.
மினியின் அம்மா ரொம்ப பயந்த சுபாவம். தெருவில் ஒரு
சத்தமும் கேட்டுவிடக்கூடாது. சத்தம் கேட்டுவிட்டால்போதும், உடனே திருடன்
வருகிறான், குடிகாரன் வருகிறான் என்று ஏகப்பட்ட சந்தேகம் வந்து கதவை
அடைத்துவிடுவாள். கரப்பான் பூச்சி, தத்துக்கிளி, மலேரியா, பிரிட்டிஷ் மக்கள் என்று
எதனைக்கண்டாலும் பயம். பயம்,பயம் பயமோ பயம். இத்தனை வயதிலும் பயம் குறைந்தபாடில்லை.
அவளுக்கு எப்பொழுதுமே, கபூலிவாலா மீது அதிக சந்தேகம் இருந்தது. அந்த ஆசாமியிடம்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவாள்.
எனக்கு அவளுடைய பயத்தைக்கண்டு சிரிப்புதான் வரும்.
சும்மா எதெற்கெடுத்தாலும் பயந்து சாகாதே என்பேன். “அவன் புள்ளயத்தூக்கிட்டு
போயிட்டா என்ன செய்வது? காபூலில் புள்ளங்கள கொத்தடிமையா வச்சிருப்பாங்களாம்
தெரியுமா? என்பது போன்ற கேள்விகளால் என் வாயை அடைக்கப்பார்ப்பாள். எனக்கு அவளது
பயங்கள் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும்.
அப்படி எதுவும் நடக்காது, நடக்க சாத்தியமுமில்லை
என்று மறுத்துக்கூறுவேன். ஆனால் அது அவளுடைய எண்ணத்தில் எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த நேரத்தில் மினிக்கும் கபூலிவாலாவுக்குமிடையே
இருந்த கள்ளங்கபடமற்ற நட்பு தொடர்ந்தது. அவர்களது நட்புக்கு மினியின் அம்மாவுடைய
எதிர்ப்பு எந்தத் தடையையும் போடவில்லை.
ஒவ்வொரு ஜனவரியும், கபூலிவாலா ரஹ்மான், தன்னுடைய
சொந்த நாட்டுக்கு பிரயாணம் மேற்கொள்வான். அதற்கு முந்தைய நாட்களில் கொஞ்சம்கூட
நேரமில்லாமல் வேலை செய்வான். அப்பொழுது, பணம் வாங்காமல் பொருளை விற்ற வீடுகளில்,
அவன் பணத்தை வசூல் செய்தாகவேண்டியிருக்கும். எவ்வளவுதான் நேரமில்லாமல்
இருந்தாலும், தினம் ஒரு முறையாவது, மினியைப்பார்க்க தவறாமல் வந்துவிடுவான்.
காலையில் வராவிட்டால், மாலையில் வந்துவிடுவான். எனக்கே இது ஆச்சர்யமாக இருந்தது.
அவன் வந்துவிட்டால், கபூலிவாலா, கபூலிவாலா என்று மின்னியும் சிட்டாகப் பறந்துவிடுவாள்.
ஒருநாள் காலையில், எனது அறையில் அமர்ந்து
எழுதிக்கொண்டிருந்தேன். தெருவில் ஏகப்பட்ட கூச்சல் கேட்டது. வெளியில் சென்று
என்னவென்று எட்டிப்பார்த்தேன். ரஹ்மானை இரண்டு போலிசார் கைகளைக்கட்டி கூட்டிச்
செல்வது தெரிந்தது. ரஹ்மானின் உடையில் ரத்தக்கறை இருந்தது. அப்பொழுது வாசலுக்கு
வந்த மினி “கபூலிவாலா, கபூலிவாலா, மாமியார் வீட்டுக்கு எப்ப போறீங்க?” என்றாள்.
ரஹ்மான் புன்முறுவலுடன் “அங்குதான் போயிட்டிடுக்கேன் குட்டிப்பாப்பா” என்றபடி
போலீசாருடன் சென்றவண்ணமிருந்தான். அந்த பதில் மினியைத் திருப்திபடுத்தவில்லை
என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. அதனைக்கண்ட ரஹ்மான், “மாமியார்
வீட்டெல்லாம் ஒடைச்செறிஞ்சுடுவேன் பாப்பா. ஆனால் இப்ப கையைக் கட்டி
வச்சிட்டாங்களே?” என்றவாறு நடையைத் தொடர்ந்தான்.
விசாரித்துப்பார்த்ததில், ரஹ்மானுக்கு ராம்பூரி ஷாவல்
பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டானென்று தெரிந்தது.
பொருட்களையே வாங்கவில்லை என்று வாய் கூசாமல் பொய் சொல்லிவிட்டானாம். பிரச்சனை
பெரிதாகி ரஹ்மான், ராம்பூரியைக் கத்தியால் குத்திவிட்டதாகத் கூறினார்கள்.
ரஹ்மானுக்கு சில வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
காலம் ஓடிக்கொண்டிருந்தது. ரஹ்மானைக் கிட்டத்தட்ட
மறந்துவிட்டோம். மினியும் மறந்துவிட்டாள் என்று கூற எனக்கு வெட்கமாகக்கூட
இருக்கிறது. அவளுக்குப் புதுத்தோழிகள் கிடைத்துவிட்டார்கள். அவள் முன்புபோல என்
அறைக்கு வருவதும் குறைந்துவிட்டது. அவள் என்முன் நின்று பேசுவதே அரிதாகிவிட்டது.
பலவருடங்கள் கழித்து ஒரு பண்டிகைகால
விடுமுறையின்பொழுது மினியின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. எங்கள்
வீட்டு இளவரசி, புதுவீட்டுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். மழைக்குப் பிறகு
வந்த சூரிய வெளிச்சம் கண்களைப் பறித்தது. இன்றிரவுக்கு பிறகு எங்கள் மினி எங்களைப்
பிரிந்து கணவன் வீட்டுக்கு சென்றுவிடுவாள் என்ற எண்ணம், மனதைக் கனமாக்கியது.
வீட்டுக்கு முன் பந்தல் கட்டியிருந்தார்கள்.
விருந்தினர்கள் வருவதும் போவதுமாக வீடு கல்யாணக்களை கட்டியிருந்தது. நான்
கல்யாணச்செலவுகளை குறித்துக்கொண்டிருந்தேன். வாசலில் நுழைந்து யாரோ
காத்திருப்பதுபோல் தோன்றியது. அவரது உடைகளைப் பார்த்தால் கல்யாணத்துக்கு
வந்தவர்போலத் தெரியவில்லை. உற்றுப்பார்த்த பிறகுதான் அது ரஹ்மான் என்று தெரிந்தது.
முகத்தில் முன்பிருந்த மலர்ச்சியில்லை. முதுகில் எப்பொழுதும் சுமந்துவரும்
மூட்டையுமில்லை.
“வா ரஹ்மான் எப்ப வந்த?” விசாரித்தேன்
“நேத்து காலைல,
ஜெயில்லேந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க.”
அந்த வார்த்தைகள் என் மனதைத் தாக்கின. ரஹ்மான்
சிறைக்கு சென்றபின் அவனைப்பற்றி நாங்கள் நினைத்ததுகூடக் கிடையாது. இந்த ஆள் இங்கு
வராமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
“வீட்டுல விசேஷம். ரொம்ப பிஸியா இருக்கோம். இன்னொரு
நாள் வாயேன். பார்க்கலாம்.” எப்படியாவது வெளியேற்ற முயற்சித்தேன்.
ஒரு வினாடி திரும்பிவிட எத்தனித்தான். ஏதோ தயங்கியது
போலத் தெரிந்தது. “குட்டிப் பாப்பாவ ஒரு நிமிஷம் பாத்துட்டுப் போகட்டுமா சார்?”
மினி இன்னும் சின்னப் பெண்ணாகவே இருப்பாள் என்று நினைத்திருக்கிறான். கபூலிவாலா
என்று கத்தியபடி ஓடி வருவாள் என்ற நினைப்புடன் கேட்கிறான்.
“வீட்டுல விசேஷம் நடந்துகிட்டிருக்கு. இப்ப யாரையும்
பாக்கமுடியாது.” என்றேன்.
ரஹ்மான் வருத்ததுடன் தலையைக் குனிந்துகொண்டான். “வர்றேன்
சார்.” சென்றுவிட்டான். அவனுக்காக நான் வருந்தினேன். கூப்பிடலாமா என்று
யோசித்தேன். அவன் தானாகவே திரும்பி வருவது தெரிந்தது. “ பாப்பாவுக்காக இதெல்லாம்
எடுத்துட்டு வந்திருக்கேன். எனக்காக பாப்பாக்கிட்ட இதக் கொடுத்துடறீங்களா?” ஒரு
பேப்பரில் கொஞ்சம் பாதாம் பருப்புகளையும், உலர்ந்த திராட்சைகளையும் பக்குவமாக
மடித்து வைத்திருப்பது தெரிந்தது. அவனுடைய நண்பர்கள் யாரிடமோ வாங்கியிருக்கிறான்
என்று நினைக்கிறேன்.
நான் பொருட்களுக்கான பணத்தைக் கொடுப்பதற்காக, பணத்தை
எடுக்க பர்ஸைத் திறந்தேன். “வேண்டாம் சார். நீங்க ரொம்ப நல்லவங்க. என்னை இவ்வளவு
நாள் கழிச்சும் ஞாபகம் வச்சிருக்கீங்க. உங்களுக்கு மினி இருக்கிறாப்போல எனக்கும்
ஒரு பொண்ணு ஊர்ல இருக்கு சார். மினிய பாக்குறப்பல்லாம் எனக்கு என் பொண்ண
பாக்குறாமாதிரி இருக்கு சார். வருமானத்துக்காக நான் இதெல்லாம் மினிக்கு
எடுத்துட்டு வரல சார்.” என்றான்.
பேசிக்கொண்டே தனது சட்டைப்பைக்குள் இருந்து ஒரு சிறிய
பையை எடுத்து அதிலிருந்து அழுக்குபடிந்து மக்கிய ஒரு காகிதத்தை எடுத்தான். மிகவும்
கவனமாக அதனைப்பிரித்து, விரல்களால் மடிப்புகளை நீவி முத்தமிட்டுவிட்டு என்னிடம்
காண்பித்தான். அது மூன்று நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தையின் கைகளின் பதிவாக
இருந்தது. குழந்தையின் கைகளில் மையைத் தடவி பதிய வைத்துபோல் இருந்தது. ரேகைகளும்
சரியாகப் பதியப்படாமல் கைகளால் அப்பியதுபோல் காணப்பட்டது. ஒரு போட்டோ கூடக்
கிடையாது. ஒரு ஓவியமாகவும் இல்லை. கல்கத்தாவுக்கு வந்ததுமுதல் மகளின்
பிஞ்சுக்கரங்களின் நினைவுகளை ரேகைகளாக காகிதத்தின் வாயிலாக இதயத்தில்
சுமந்திருக்கிறான்.
அதனைக்கண்டதும் எனது கண்கள் பனித்தன. நான் அவனைவிட எந்தவிதத்தில்
உயர்ந்தவனாகிவிட்டேன். அவனும் என்னைப்போலவே ஒரு தந்தை. அவனது குழந்தையின்
கைத்தடங்கள் எனக்கு எனது மினியின் குழந்தைப்பருவ ஞாபகங்களைத் தூண்டிவிட்டது. உடனே
மினியைக் கூட்டிவரச்சொல்லி ஆளனுப்பினேன். அதற்கும் பிரச்சனைகள் வந்தன. அனைத்தையும்
விலக்கிவிட்டேன். உடனே அவளை வரச்சொன்னேன். செந்நிற பட்டுச்சேலை அணிந்து, மஞ்சளுடன்
வெட்கம் கலந்த முகத்துடன் மினி எங்கள் எதிரே வந்தாள். அவளைக் கண்டதும் ரஹ்மானுக்கு
தூக்கிவாரிப்போட்டது. யுவதியாக வந்த மினியை அவன் எதிர்பார்க்கவில்லை.
சமாளித்துக்கொண்டான். “குட்டிப்பொண்ணு மாமியார் வீட்டுக்கு போகப்போறீங்களா?” என்று
கேட்டான்.
இப்பொழுது அதன் அர்த்தம் புரிந்ததால், மினி
வெட்கத்துடன் தலை குனிந்தாள். முதன்முதல் அவர்கள் சந்தித்தது என் நினைவுக்கு
வந்தது. ரஹ்மானைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. மினி சென்றவுடன் ரஹ்மான்
வருத்ததுடன் தரையில் அமர்ந்தான். மினியை பார்த்ததும், தன் மகளும் அப்படித்தான்
வளர்ந்திருப்பாள் என்று நினைத்திருக்கக்கூடும். எட்டு வருடங்களில் ஏகப்பட்டதை
இழந்துவிட்டான். காலம் அனைத்தையும் மாற்றிவிட்டது.
வீட்டில் மங்களவாத்தியங்களின் ஒலி கேட்டது. ரஹ்மான்
வெறிச்சோடி அமர்ந்திருந்தான். என்னிடமிருந்த பணத்தில் குறிப்பிடத்தக்க அளவு
எடுத்து ரஹ்மானிடம் கொடுத்தேன். அவன் வாங்க மறுத்தான் “சீக்கிரம் உன் மகளிடம்
செல். உங்களுடைய மகிழ்ச்சி என் மகளுக்கு ஆசிர்வாதமாகட்டும்” என்று அவனிடம் அதை
வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டேன். மினியும் தன் சார்பாக இரண்டு வளையல்களை
ரஹ்மானுடைய மகளுக்குக் கொடுத்தாள். ரஹ்மானுக்கு இந்தத் தொகையைக் கொடுத்ததால்
கல்யாணத்தில் சில நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்தாகவேண்டும். வண்ண மின்விளக்குகள்
அலங்காரம் செய்ய முடியாது. பேண்டு வாத்தியங்களை ரத்து செய்ய வேண்டும். வீட்டுப்
பெண்மணிகளுக்கு கொஞ்சம் ஆதங்கம்தான். ஆனால் எனக்கு, பிரிந்த மகளைப் பார்க்கும் ஒரு
தந்தையின் மகிழ்ச்சி, என் குழந்தையை ஆசிர்வதிக்கும் என்ற திருப்தி இருந்தது.
அதுபோதும்.
(மூலம் : ரபீந்ரநாத் தாகூர்)
இந்தக் கதையை ஹிந்தித் திரைப்படமாக இங்கே காணலாம்.
http://www.youtube.com/watch?v=-3ZIcLOYmRw
"குட்டிப் பாப்பாவ ஒரு நிமிஷம் பாத்துட்டுப் போகட்டுமா சார்...?" என்ற போது கண்கள் பனித்தன...
ReplyDeleteஇதை வைத்துத் தான் தமிழில் "அபியும் நானும்" என்று ராதா மோகன் அவர்கள் திரைப்படம் எடுத்தாரோ...?
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.
Deleteஅபியும் நானும் நல்ல படம். தாங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.
இந்த கதையை பல ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். உள்ளத்தைத் தொடக்கூடிய ரபீந்ரநாத் தாகூர் அவர்களின் அருமையான கதையை திரும்பவும் படிக்க உதவியமைக்கு நன்றி!
ReplyDeleteதிருபால்ராஜ் சஹானி நடித்த காபூலிவாலா திரைப்படத்தை பார்த்து இரசிக்க இருக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா. ஆமாம். இன்னொருமுறை படிக்கத்தக்க கதைதான். இது ஆங்கில துணைப்பாடத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு படித்ததுபோலவும் இருக்கிறது. சரியாக நினைவிலில்லை.
Deleteமிகவும் அருமையான பாடல்களும் உள்ள படம். நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.
கதையின் ஜீவனை கலைக்காமல் அழகாக மொழி பெயர்த்துள்ளீர்கள்!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு.பந்து அவர்களே!
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
நான் சொல்ல நினைத்ததை பந்து சொல்லிவிட்டார். அழகான தமிழாக்கம். மூலக்கதையில் இருந்த அத்தனை உணர்வுகளையும் மொழிபெயர்ப்பில் சிதைந்துவிடாமல் கொண்டு வந்துள்ளீர்கள். RK Narayananனின் கதைகளையும் நீங்கள் மொழிபெயர்க்கலாம். அவரும் இவ்வாறு நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பலவிதமான நபர்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். இணையத்தில் இருக்கும். அழகான ஒரு கவிதை போன்ற கதையை வழங்கியதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா! இந்திய மொழிகளிலிருந்து வந்தவைகளை மொழிபெயர்ப்பது கொஞ்சம் எளிது. பண்பாட்டுக் கூறுகளில் அதிக வேறுபாடுகள் இருக்காது. RK Narayanan கதைகளையும் மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன். எப்பொழுதோ அவர் கதைகளை டி.வி-ல் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்