குரங்கின் பாதம். (விதியின் வழி மதி செல்லும்)
நல்ல குளிரும், நசநசவென்று ஈரமும் மிகுந்த ஒரு குளிர்கால இரவு. ஜன்னல்களின்
திரைப்பலகைகள் நன்கு மூடப்பட்டிருந்தது. அறையின் வெப்பத்தை அதிகப்படுத்த
உண்டாக்கப்பட்ட நெருப்புத்தொட்டியில் கனழ்ந்துகொண்டிருந்த கரித்துண்டுகள் தங்களது
வேலையை சரியாகச் செயததால், அறையின் கதகதப்பு குளிருக்கு அடக்கமாக இருந்தது. தந்தை
வொய்ட்டும் மகன் ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். வொய்ட் ஒரு
வித்தியாசமான வகையில் குதிரையை நகர்த்தி மகனுடைய ராஜாவை கொல்வதற்கு முயற்சி
செய்தார். அதே சமயத்தில் தன்னுடைய ராஜாவுக்கு வரப்போகும் பிரச்சனையைப் அவர் பார்க்க
விட்டுவிட்டார்.
“வெளியில் காத்து பிச்சிகிட்டு வீசுது.” மகனின் கவனத்தை திசை திருப்பி ஆட்டத்தில்
வெல்ல முயன்றார் வொய்ட். “எனக்கும் காதுல விழுது.” மகன் கவனம் சிதையாது தந்தையின்
ராஜாவுக்கு செக் வைத்தான். “இன்றைக்கு அவர் வரமாட்டார் என்று நினைக்கிறேன்.” செஸ்
போர்டைப் பார்த்துக்கொண்டே தந்தை கூறினார். “செக் மேட். உங்களால் தப்பிக்க
முடியாது.” ஹெர்பர்ட் தீர்மானமாகக் கூறினான். வொய்ட் பணியிலிருந்து ஓய்வடைந்தவர்.
ஹெர்பர்ட் இளைஞன். ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவன்.
“இந்த அளவுக்கு மோசமாகத் தோற்பேன் என்று நான் நினைக்கவேயில்லை.” தோல்வியை
எதிர்பார்க்காத வொய்ட் சலிப்புடன் கூறினார். “எப்படியாவது இந்த முறை வென்றுவிடலாம்
என்று நினைத்தேன்.” என்றார்.
“பரவாயில்லை. அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்.” வொய்ட்டின் மனைவி அவருக்கு
ஆறுதல் கூறினார். தாயும் மகனும் தன்னைப்பார்த்து சிரிப்பதைப் புரிந்துகொண்ட
வொய்ட், தனது தோல்வியை மறக்க மழுப்பலாக சிரித்து சமாளித்தார்.
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்ட வொய்ட், “இதோ வந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.” எனறபடி
கதவை நோக்கி விரைந்தார். கதவைத்திறந்தவுடன் நல்ல உயரத்துடன், கம்பீரமான
தோற்றம்கொண்ட ஒருவர் உள்ளே நுழைந்தார்.
“வாருங்கள். வாருங்கள். ராணுவ வீர்ர் மோரிஸ்” வொய்ட் வந்தவரை தனது
குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினார். மோரிஸை நெருப்புத்தொட்டிக்கு அருகில்
அமருமாறு கூறிவிட்டு, வந்தவருக்கு பருகுவதற்கு ஏதாவது எடுத்துவருமாறு தனது
மனைவியிடம் கூறினார் வொய்ட்.
மோரிஸ் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். பலதரப்பட்ட நாடுகளில்
பணியாற்றிவிட்டு திரும்பியிருந்தார். “நீ ஊரைவிட்டு சென்று இருபது வருடங்களைத்
தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன். இருபது வருடங்களில் மிகவும் மாறிவிட்டாய்.”
வொய்ட் மோரிஸை நோக்கிக் கூறினார். வித்தியாசமான இடங்கள், மனிதர்கள் என்று தன்
அனுபவங்களை மோரிஸ் எப்பொழுதும்
பகிர்ந்துகொள்வதால், அனைவரும் மோரிஸைச் சுற்றி அமர்ந்துகொண்டனர்.
“எனக்கொன்றும் மோரிஸ் அவ்வளவாக மாறிவிட்டதுபோல் தோன்றவில்லை. அப்படியேதான்
இருக்கிறார்.” வொய்ட்டின் மனைவி கூறினார்.
“நானும் ஒருநாள் இந்தியா சென்றுவரலாம் என்று நினைக்கிறேன். இந்தியாவைப்
பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பமாக உள்ளது.” வொய்ட் தனது ஆசையை
வெளிப்படுத்தினார்.
“வேண்டாம். இருக்கும் இடத்திலேயே இருங்கள்.” பானத்தைப் பருகிவிட்டு குவளையைக்
கீழே வைத்தார் மோரிஸ்.
“அங்கு இருக்கும் கோவில்களையும், கழைக்கூத்தாடிகளையும் பற்றிக்கேட்டது முதல்
பார்த்தே ஆகவேண்டும்போல் தோன்றுகிறது. அன்று ஒருநாள் ஏதோ குரங்கின் பாதம் பற்றிக்
கூறிவிட்டுப் பாதியில் நிறுத்திவிட்டாயே அதைப்பற்றிக் கூறேன்.” – வொய்ட்.
“வேண்டாம். தெரிந்துகொள்வதற்கு அதில் ஒன்றுமில்லை.” அவசரமாக மறுத்தார் மோரிஸ்.
“குரங்கின் பாதமா? என்ன அது? வித்தியாசமாக இருக்கிறதே.” ஆச்சரியத்துடன்
கேட்டார் வொய்ட்டின் மனைவி.
“ஒன்றுமில்லை. ஒரு மந்திரவாதியின் கண்கட்டுவித்தை போல என்று
வைத்துக்கொள்ளுங்களேன்.” பதிலளித்தார் மோரிஸ்.
கண்கட்டுவித்தை என்று மோரிஸ் கூறியது, மூன்று பேருடைய ஆர்வத்தையும்
அதிகப்படுத்திவிட்டது. குவளை காலியாகியிருந்ததை மறந்த மோரிசஸ், அதனை மீண்டும்
எடுத்து பருக எத்தனித்தார். அதனைக்கண்ட திருமதி.வொய்ட், மோரிஸின் குவளையை
நிரப்பினார்.
“இது ஒரு குரங்கின் பாதம். பாடம் படுத்தப்பட்ட ஒரு காய்ந்த பாதம்.” தன்னுடைய
பையிலிருந்த அந்த பாதத்தை வெளியே எடுத்து ஹெர்பர்ட்டிடம் கொடுத்தார் மோரிஸ்.
காய்ந்துபோன பாதத்தைக் கண்ட வொய்ட்டின் மனைவி சிறிது பின் வாங்கினார்.
மகனின் கையிலிருந்த பாதத்தை வாங்கிப்பார்த்த வொய்ட் “இந்த காய்ந்துபோன
பாதத்தில் அப்படி என்ன சிறப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.
“இதற்கு ஒரு சாபம் இருக்கிறது. சாபமா வரமா என்று புரியவில்லை. சாபமென்றுதான்
நினைக்கிறேன். ஒரு பெரிய சாமியார் இதனை சபித்துவிட்டார். ஒவ்வொருவருடைய
வாழக்கையும் விதிப்படிதான் அமைகிறது. அமையவேண்டும். விதியை மீறி விதியுடன் விளையாட
நினைத்தால் அது துயரத்தையே தரும் என்று அந்த சாமியார் உலகத்துக்கு சொல்ல
விரும்பினார். அதற்காக இந்த பாதத்தை உருவாக்கியிருக்கிறார்.”
“அப்படி என்ன சாபம் அது?” ஹெர்பர்ட்டுக்கு ஆவலை அடக்கமுடியவில்லை.
“இந்தப் பாதம் மூன்று வரங்களை, மூன்றுபேர் கொண்ட குழுவுக்கு கொடுக்க வல்லது” –
வொய்ட்.
“அப்படியென்றால், நீங்கள் ஏதாவது வரம் கேட்டீர்களா?. கிடைத்ததா?” – ஹெர்பர்ட்.
“கேட்டேன். கிடைத்தது.”
“மற்ற இருவருக்கும் கிடைத்த்தா?
“கிடைத்தது. ஆனால் அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர் இதனை எடுத்துக்கொள்ள
மறுத்துவிட்டார். என் கைக்கு இது வந்துவிட்டது.” – வொய்ட்.
“உங்களுக்குதான் வரம் கிடைத்துவிட்டதே. இன்னும் ஏன் இதனை சுமக்கிறீர்கள்?
இதனால் இனி உங்களுக்கு பயனேதும் இல்லையே?”
- ஹெர்பர்ட்.
“தெரியவில்லை. ஒரு நினைவுச்சின்னம் போல வைத்திருக்கிறேன்.” – வொய்ட்.
“உங்களுக்கு இன்னும் ஏதாவது வரம் கிடைத்தால் இப்பொழுது கேட்பீர்களா? –
ஹெர்பர்ட்.
“எனக்குத் தெரியவில்லை.” சொல்லிக்கொண்டே திடீரென்று மோரிஸ் அந்தப் பாதத்தை
நெருப்புத் தொட்டியில் தூக்கி எறிந்தார். நெருப்பிலிருந்து தீப்பற்றுமுன் அதனை
எடுத்துவிட்டார் வொய்ட்.
“வேண்டாம். அதனை எறிந்துவிடுங்கள்.” மோரிஸ் இரைஞ்சலுடன் கூறினார்.
“உங்களுக்குத் தேவையில்லையென்றால் நான் எடுத்துக்கொள்கிறேனே.” – என்றார்
வொய்ட்.
“வேண்டாம். நான்
சொல்வதைக் கேளுங்கள். அதை நெருப்பில் எறிந்துவிடுங்கள். அதனால் வரும் விளைவுகள்
கொடுமையாக இருக்கும். என் பேச்சைக் கேளுங்கள். எறிந்துவிடுங்கள்.’ கெஞ்சினார்
மோரிஸ்.
வொய்ட் கேட்பதாக இல்லை. “எப்படி வரம் கேட்கவேண்டும்?” அந்தப் பாத்த்தை உற்றுப்
பார்த்துக்கொண்டு கேட்டார். வொய்ட்.
“உங்கள் இஷ்டம். பிறகு என்னைத் திட்டாதீர்கள்.” – மோரிஸ்.
“சரி. எப்படி கேட்பது என்று சொல்லுங்கள்.” – வொய்ட்.
“உங்கள் வலது கையில் அந்தப் பாதத்தை வைத்துக்கொண்டு, அதனைப் பார்த்து,
வாய்விட்டுக் கேட்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். விளைவுகள் விபரீதமாக
இருக்கும்.” – மோரிஸ்.
“அரேபியக் கதைபோல இருக்கிறது.” சொல்லிக்கொண்டே திருமதி வொய்ட், இரவு உணவு
பரிமாற எழுந்தார். “எனக்கு வேலை செய்ய இன்னும் இரண்டு கைகளைக் கேட்டால் நன்றாக
இருக்கும்.” என்றாவாறே சென்றார்.
“கேட்பதைக் கொஞ்சம் உருப்படியாகத்தான் கேளேன். இருக்கும் மூளையை உபயோகப்படுத்து.”
விளையாட்டாகக் கூறிய வொய்ட் குரங்குப் பாதத்தை தனது சட்டைப்பையில்
பத்திரப்படுத்தினார். இரவு உணவு முடியும்வரை, கிட்டத்தட்ட அனைவரும் அந்தப் பாதத்தை
மறந்துவிட்டார்கள். உணவு முடிந்ததும், தனக்கு இந்தியாவில் ஏற்பட்ட அனுபவங்களைப்
பகிர்ந்துகொண்டு அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் மோரிஸ்.
“இவருடைய அனுபவங்கள், இந்தக் குரங்கின் பாதம்போல நம்புவதற்கு கடினமாக
இருக்கிறது” விருந்தினரை வழியனுப்பிய பிறகு கூறினார் வொய்ட். “அவருடைய குரங்குப்
பாதத்துக்கு பணம் ஏதாவது கொடுத்தீர்களா?” – திருமதி.வொய்ட்.
“கொடுத்தேன். வேண்டாமென்று திரும்பக்கொடுத்துவிட்டார்.” – பதிலளித்தார்
வொய்ட்.
“நினைத்தேன். நாம் இனி பெரிய பணக்காரர்களாகிவிடலாம். மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கலாம். பெரிய ராஜா ஆகவேண்டும் என்று கேட்கலாம் அப்பா. அப்படி நீங்கள்
ஆகிவிட்டால் அம்மாவுக்குப் பயப்படத் தேவையிருக்காது.” அம்மாவைப் பார்த்தபடி
கூறினான் ஹெர்பர்ட்.
வொய்ட் பையிலிருந்த குரங்கின் பாத்த்தை வெளியில் எடுத்தார். “எனக்கு என்ன
கேட்பதென்றே தெரியவில்லை. எனக்குத் தேவையான எல்லாம் எனக்கு இருக்கிறதே.” என்றார்.
“சரி. ஒரு இருநூறு பவுண்ட் பணம் கேட்டுப் பார்க்கலாம்.” யோசனை கூறினான்
ஹெர்பர்ட். குரங்கின் பாதத்தை வலக்கையில் வைத்தபடி அதனை நோக்கி “எனக்கு இருநூறு
பவுண்ட் பணம் வேண்டும்.” பியானோவின் முன்
அமர்ந்தபடி உரக்கக் கூறினார் வொய்ட்.
அவர் கேட்டதும் பியானோ அதிர்ந்த ஒலி கேட்டது. அந்த ஒலியைக் கேட்டுத்
திடுக்கிட்ட வொய்ட் ஆவென்று குரலெழுப்பினார். வொய்ட்டின் மனைவியும் மகனும் அவரை
நோக்கி ஓடினார்கள். “நான் கேட்டதும் அந்தப் பாதம் நகர்ந்தது. என் கையை அது
முறுக்கியதுபோல் இருந்தது. அதனால்தான் பயந்து கத்திவிட்டேன்.” வொய்ட் பதற்றமாகக்
கூறினார்.
“பணத்தையும் காணோம். ஒன்றையும் காணோம்.” அந்தப் பாதத்தை எடுத்து மேஜை மீது
வைத்தான் ஹெர்பர்ட். “பரவாயில்லை. சும்மா விளையாட்டுக்குக் கூறியிருக்கலாம்.”
வொய்ட்டின் மனைவி சமாதானப்படுத்தினார். “அதனாலென்ன? நமக்கு எதுவும் தீங்கு
நிகழவில்லையே. இருந்தாலும் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.” வொய்ட் கூறினார்.
வொய்ட்டும், ஹெர்பர்ட்டும் நெருப்பின் முன் அமர்ந்து மீண்டும் குளிர்காய
ஆரம்பித்தனர். வீட்டுக்குள் அமைதியாக இருந்தாலும், வீட்டுக்கு வெளியே காற்று பலமாக
வீசிய ஒசை அந்தச் சூழலுக்கு ஒரு அச்சமான உணர்வை ஏற்படுத்தியது. “சரி.
தூங்கப்போகலாம்.” என்றவாறு விளக்கை அமர்த்திவிட்டு தூங்கக் கிளம்பினார் வொய்ட்.
“ஒருவேளை உங்கள் படுக்கையில் இருநூறு பவுண்ட் பணம் இருந்து தொலைக்கப் போகிறது.
நீங்கள் பணத்தை எடுக்கும் பொழுது பூதம் அலமாரியிலிருந்து உங்களை வேடிக்கைப்
பார்க்கப்போகிறது.” கிண்டல் செய்தான் ஹெர்பர்ட்.
நெருப்பின் முன் தனியாக அமர்ந்திருந்தான் ஹெர்பர்ட். நெருப்பில் மனித முகங்கள்
தெரிவதுபோல் கற்பனை செய்து பார்த்தான். கடைசியாக அவன் பார்த்த முகத்தைப்பார்த்து
அவனுக்கே பயம் வந்துவிட்டது. அந்த முகம் மிகவும் தெளிவாகத் தெரிந்ததுபோல்
இருந்தது. மேஜைமேல் இருந்த நீரை எடுத்து தீயை அணைத்தான் ஹெர்பர்ட். குரங்கின் பாதத்தை
எடுத்து துடைத்து வைத்துவிட்டு உறங்கச் சென்றான் ஹெர்பர்ட்.
காலை உணவருந்திக்கொண்டிருந்த ஹெர்பர்ட், இரவு நெருப்பிலிருந்த முகத்தைக்கண்டு
பயந்துபோனதை நினைத்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான். குளிர்காலமாக இருந்தாலும்,
காலை சூரியனின் கதிர்கள் பளீரென்று சமையலறையை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.
வீட்டில் முதல் நாள் இரவு இருந்த இறுக்கமான சூழ்நிலை இல்லாதிருந்தது. அழுக்காக,
சுருங்கிப்போயிருந்த குரங்கின் பாதம் பக்கத்தில் இருந்த மேஜை மேல் கிடந்தது.
அதன்மீது நேற்று வீட்டினர் கொண்டிருந்த ஆர்வம் மதிப்பிழந்திருந்தது.
“அனைத்து வயதான ராணுவத்தினர்களும் வண்டி வண்டியாகக் கதைவிடுவார்கள் என்று
நினைக்கிறேன்.” – திருமதி.வொய்ட்.
“முட்டாள்தனமாக நாமும் நம்பி அந்தக் கதையை வாய்மூடாமல்
கெட்டுக்கொண்டிருந்தோமே. இந்தக் காலத்தில் வரமெல்லாம் கிடைக்கும் என்று
நம்புபவர்களும் இருக்கிறார்களா, என்ன? அப்படியே இருந்தாலும் அதனால் என்ன தந்துவிட
முடியும், அப்பா? என்றான் ஹெர்பர்ட்.
“பணம், வானத்திலிருந்து மோரிஸின் தலையில்தான் விழப்போகிறது.” கிண்டலாகக்
கூறினான் ஹெர்பர்ட்.
“மோரிஸ், கேட்டதெல்லாம் சுலபமாகக் கிடைத்துவிடும் என்று கதைவிட்டாரே.
தற்செயலாக அவருக்கு ஏதாவது கிடைத்திருக்கலாம். அதனால் அவர் அதை நம்பியிருக்கலாம்.”
– வொய்ட்.
“பணம், கிணம் வந்தால் நான் திரும்பி வரும்வரை தொடாதீர்கள்.” சாப்பிட்டுவிட்டு
வேலைக்கு செல்லத் தயாரானான் ஹெர்பர்ட். “பணம் கிடைத்தால், அது உங்களை மிகவும்
மாற்றிவிடும் என்று நினைக்கிறேன். பேராசைக்காரராக மாறிவிடுவீர்கள் என்று
நினைக்கிறேன். அப்படி மாறிவிட்டால் உங்களை நாங்கள் விலக்கி வைத்துவிடுவோம்,
அப்பா.” என்றான் ஹெர்பர்ட்.
தாயும் மகனும், வொய்ட்டுடைய கள்ளங்கபடமற்ற தன்மையை நினைத்து
சிரித்துக்கொண்டார்கள். திருமதி.வொய்ட் மகனை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு
வந்தார். “ஹெர்பர்ட் வேலை முடிந்து வந்ததும், இன்னும் உங்களை கிண்டல் செய்யப்போகிறான்.”
என்றவாறு சாப்பிட அமர்ந்தார் திருமதி.வொய்ட். குவளையில் குடிப்பதற்கு பானகத்தை
ஊற்றிக்கொண்டிருந்த வொய்ட் “செய்யட்டும். செய்யட்டும். ஆனால், சத்தியமாகச்
சொல்கிறேன்., நான் வரம் கேட்டபொழுது அந்தப் பாதம் நகர்ந்ததைப் பார்த்து
பயந்துவிட்டேன், தெரியுமா?” என்றார்.
“நகர்ந்ததாகக் கற்பனை செய்யாதீர்கள்.” – மறுத்தார் மனைவி.
“இல்லையில்லை. உண்மையாக அது என் கையை முறுக்கியது. அப்பொழுது நான் . . . . என்ன? .
. . என்ன விஷயம்?” என்றார்.
வொய்ட்டின் மனைவி பதில் தராமல் வீட்டுக்கு வெளியே யாரோ இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கையில் ஏதோ காகிதத்தை வைத்துக்கொண்டு, வீட்டு எண்ணை மீண்டும் மீண்டும் ஒருவர்
பார்த்துக்கொண்டிருந்தார். வீட்டு எண்ணை உறுதி செய்ததும் வெளியிலிருந்த தட்டியைத்
திறந்துகொண்டு, கதவை நோக்கி அந்த மனிதர் வந்தார். அவர் கதவைத் தட்டுமுன் திருமதி.வொய்ட்
கதவைத் திறந்து “என்ன விஷயம்?” என்றார்.
வந்தவர் ஏதோ தயங்குவதுபோல் தோன்றியது. “இது, திரு.வொய்ட்டின் வீடுதானே?”
என்றார். “ஆமாம். நான் தான் திருமதி.வொய்ட்.”
“நான் ஹெர்பர்ட் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து வருகிறேன். உள்ளே வரலாமா?”
என்றார் வந்தவர்.
“உள்ளே வாருங்கள். என்ன விஷயம்? ஹெர்பர்ட்டுக்கு ஏதாவது பிரச்சனையா? என்ன
விஷயம்?” பதற்றப்பட்டார் திருமதி.வொய்ட்.
“நிறுத்து. பதறாதே. அம்மாக்களே இப்படித்தான். நீயே தீர்மானம் செய்துகொள்வதா?
கொஞ்சம் அப்படி உட்கார்.” மனைவியை அதட்டிய வொய்ட் “நீங்கள் எதுவும் கெட்ட செய்தியைக்
கொண்டுவரவில்லை என்று நினைக்கிறேன்.” வந்திருந்தவரைப் பார்த்துக் கேட்டார் வொய்ட்.
“மன்னிக்க வேண்டும். . . . “ வந்திருந்தவர் ஆரம்பித்தார்.
“”அவனுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லையே?” தாயாரால் பொறுக்கமுடியவில்லை.
வந்திருந்தவர் மெதுவாகக் கூறினார். “ ஹெர்பர்ட்டுக்கு மிகவும் மோசமாக
அடிபட்டுவிட்டது. . . . . . ஆனால், அவருக்கு வலி தெரிந்திருக்க வாய்ப்பு
இருந்ததுபோல் தெரியவில்லை.”
“ஆண்டவா. நன்றி. நன்றி.” இரு கரங்களையும் சேர்த்து வைத்தபடி இறைவனுக்கு நன்றி
கூறினார் திருமதி.வொய்ட். அவருக்கு வலி தெரிந்திருக்க வாய்ப்பு இருந்ததுபோல்
தெரியவில்லை. அப்படியென்றால்? செய்தியில் உள்ள உட்கருத்தை உணர்ந்த திருமதி.வொய்ட்
இடிந்துபோனார். பூமி பிளந்து தன்னை விழுங்கிவிடாதா என்று எண்ணினார். அவருக்கு
மூச்சே நின்றுவிட்டதுபோல் இருந்தது. நடுங்கியபடி கணவனின் தோளின் மீது கையை
வைத்தார். அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தது.
புதிய மனிதர் “இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டார்.” என்று மெதுவாகக்
கூறினார். “இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டான். இயந்திரங்களுக்கு இடையில்
மாட்டிக்கொண்டான். ஆமாம். மாட்டிக்கொண்டான்.” பைத்தியம்போல் ஜன்னலை நோக்கி
வெறித்தபடி மீண்டும் மீண்டும் கூறினார் வொய்ட். மனைவியின் இடது உள்ளங்கையை எடுத்து
தனது இரு கைகளுக்கிடையில் அழுத்தியபடி கூறினார். நாற்பது வருடங்களுக்கு முன்
கவலைப்படாதே என்பதற்கு அடையாளமாக அவர் அப்படி செய்வது வழக்கம்.
“எங்களுடைய ஒரெ சொத்து அவன் தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.”
வந்திருந்தவரைப்பார்த்து வருத்தத்துடன் கூறினார் வொய்ட். வந்திருந்தவர்
“மன்னிக்கவும். நான் வெறும் தகவல் சொல்ல வந்திருக்கும் ஆள் மட்டும்தான். நிறுவனம்
தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக தங்களிடம் கூறுமாறு என்னை
அனுப்பினார்கள். மன்னிக்கவும்.” என்றார்.
யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. வயதான தாயின் முகம் வெளிறிப்போனது.
கண்கள் எங்கோ வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. சிலைபோல இருந்தார். வொய்ட்
குரங்கின் பாதம் வேலை செய்யத் துவங்குவதை உணர ஆரம்பித்தார்.
“நிறுவனம் தான் இந்த விபத்துக்கு எந்தப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று
கூறுவதாகத் தகவல் அனுப்பியுள்ளது. இருந்தாலும் தங்களுடைய மகனின் உழைப்பைக்
கருத்தில் கொண்டு சன்மானமாக ஒரு தொகையைக் கொடுப்பதாகக் கூறினார்கள்.” –
வந்திருந்தவர்.
திரு.வொய்ட் மனைவியின் கையை விலக்கிவிட்டு எழுந்தார். உலர்ந்த உதடுகளை மெதுவாக
விலக்கி “எவ்வளவு?” என்றார்.
“இரு நூறு பவுண்டுகள்.”
மனைவியின் கதறல் வொய்ட்டின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. ஒரு
குருடனைப்போல் நடந்து சென்று வீட்டின் தரையில் விழுந்தார் வொய்ட்.
- தொடரும்.
-மூலம் – w.w. ஜேக்கப் சிறுகதை.
துணுக்கு :
மனிதனைப்போல கரடிகளை உருவகம் செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
http://www.boredpanda.com/
ReplyDeleteசரியான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே. கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
Deleteமொழி பெயர்ப்பு கைப்பிரதி எழுதிவிட்டேன். கணினியில் ஏற்ற நேரமில்லை. இந்தக் கதையை ஒட்டி ஹிட்ச்காக் நாடகத்தை இங்கே காணுங்கள்.
https://www.youtube.com/watch?v=4eEoQY3nx_E
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
விளைவுகள் விபரீதமாகத் தான் ஆகி விட்டது... இன்னும் தொடருமா....? அப்படி என்றால் இன்னும் சுவாரஸ்யம் தான்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
அழ வைச்சுட்டீங்களே! மனசே வேதனையில் ஆழ்ந்துவிட்டது. சரியான இடத்தில் தொடரும் வேறே போட்டிருக்கீங்க! :(
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா.சாம்பசிவம். சீக்கிரம் முடிவைப் பதிவிட முயற்சிக்கிறேன்.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
W.W ஜேக்கப்பின் சிறுகதையை தொடர்கதையாக ஆக்கிவிட்டீர்களே! முதலில் சஸ்பென்ஸ் போல இருந்தாலும் கடைசியில் ஹெர்பர்ட்டின் அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறேன் என்று அந்த புதிய மனிதர் சொன்னதுமே தெரிந்துவிட்டது என்ன நடந்திருக்கிறது என்று. இருப்பினும் மேலும் என்ன நடந்தது என அறியக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteகரடிகள் மனிதனைபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை சர்க்கஸில் பார்த்திருக்கிறேன். நீங்கள் தந்த இணைப்பு மூலம் காணொளியைப் கண்டேன். அவைகள் மனிதனைப்போல் செய்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! நான் கதையைப் படித்தபொழுது முதலில் திருப்பத்தை இந்த அளவு எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது.
Deleteதாங்கள் சர்க்கஸைப் பற்றிக் கூறியதும் எனக்கு சர்க்கஸுக்கு சென்ற நினைவு வருகிறது. அங்கு வேலை செய்யும் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பாவப்பட்ட ஜென்மங்கள் என்றுதான் நினைக்கிறேன். எவ்வளவு வயது வரை அந்தமாதிரியான வேலையைச் செய்ய முடியும்?
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்