சோழியன் குடுமி
“2,400 சதுர அடி. 50 வருடம் பழைய பங்களா. வீட்டு எண் 101, கே.நகர் முதல்
தெரு, சென்னையில் விற்பனைக்கு உள்ளது. ரூபாய் பத்து கோடிக்கு மேல் தர விருப்பம்
உள்ளவர்கள் மட்டும் அணுகவும்”
பத்திரிக்கைகளில் இந்த விளம்பரம் வந்தபொழுது, எந்த மடையன் இந்த பழைய
வீட்டுக்கு இவ்வளவு விலை கொடுப்பான். பேராசை அதிகமாகிவிட்டது என்றுதான் வீடு வாங்க
நினைத்தவர்கள் பேசிக்கொண்டார்கள். அந்தத் தெருவில், அந்த வீட்டுக்கு அதிகபட்சம்
இரண்டு கோடி கொடுக்கலாம். அதுவும் அந்த வீட்டுக்கு கிடையாது, அந்த மனைக்கு. சில
புரோக்கர்கள் வீட்டு ஓனரை அணுகி, வீடு இந்த விலைக்குப் போகாது. வேண்டுமென்றால்
இரண்டரை கோடிக்கு முயற்சி செய்து பார்க்கலாமா என்று கேட்டனர். வீட்டு ஓனர் ஒரு
வயதான பெண்மணி. அவர் “ எனக்கு யாரும் கிடையாது. என் சொத்து முழுவதையும்
தருமத்துக்குதான் எழுதிவைக்கப்போகிறேன். அதிக விலை கிடைத்தால் நல்லதுதான்.
அதனால்தான் 10 கோடி கேட்கிறேன்” என்று கூறிவிட்டார். பேராசை பிடித்த கிழவி என்று
மனதுக்குள் திட்டிவிட்டு புரோக்கர்களும் திரும்பிவிட்டனர்.
அதிசயம் நிகழ்ந்தது. விளம்பரம் வந்த ஒரே மாதத்தில் வீட்டு ஓனருக்கு சாதகமாக
ஒரு ஃபோன் வந்தது.
“ஹலோ. வணக்கங்க. என் பேர் ராஜ். ஒங்க வீடு லொகேஷன் என் வொய்ஃப்க்கு ரொம்ப
பிடிச்சிருக்கு. புரோக்கர் மூலமா இரண்டரை கோடிக்கு கேட்டுப்பார்த்தேன். நீங்க
முடியாதுன்னு சொல்லிட்டீங்க. எவ்வளவு கடைசியா எதிர்பார்க்கறீங்கன்னு சொன்னா
நல்லாயிருக்கும்.”
“பத்து கோடிக்கு மேல கொடுக்கத் தயாரா இருந்தா மேல பேசுங்க. இல்லாட்டி ஃபோனை
வைச்சுடுங்க”
“சரி. பதினோரு கோடி தர்றேன். ஆனா ஒரு கண்டிஷன். டிலே பண்ணாம வீட்ட ரிஜிஸ்டர்
பண்ணனும். ரிஜிஸ்டர் பண்ணி ஒரே வாரத்துல வீட்ட காலி பண்ணிடனும். சரியா?”
“பதினோரு கோடின்னா எனக்கு சம்மதம். எதுக்கும் நேர்ல வாங்க பேசிக்கலாம்.”
“நாளைக்கு வரட்டுமா?”
“காலைல பத்து மணிக்கு வாங்க.”
பேரம் எதுவும் இல்லாமல் காரியம் சீக்கிரம் முடிந்துவிட்டது.
மறுநாள் காலை பத்துமணிக்கு சுமார் நாற்பது வயதிருக்கும் ஒருவர், விற்பனைக்கு
இருக்கும் வீட்டுக்கு வந்தார்.
“வாங்க. உள்ள வாங்க.. நீங்கதான ராஜ்? கூட யாரும் வரலையா?” வீட்டு ஓனர் வயதான
பெண்மணி வரவேற்றார்.
“ஆமாம். நாந்தாங்க ராஜ். காரியம் முடியரவரைக்கும் யாருக்கும் சொல்ல
வேண்டாம்னுட்டுதான் தனியா வந்திருக்கேன்.”
“சூடா அல்லது குளுமையா ஏதாவது குடிக்கிறிங்களா?”
“ஓண்ணும் வேண்டாம்”
“நீங்க என்ன வேல பார்க்கறீங்க?”
“இம்போர்ட், எக்ஸ்போர்ட் பண்றேங்க.”
“ஏன், இந்த வீட்டுக்கு இவ்வளவு விலை குடுக்க பிரியப்படுறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“சின்ன வயசுல, நான் இந்த தெருவிலதான் குடியிருந்தேன். இப்ப பத்து வருஷமா வெளியூர்ல
இருக்கவேண்டிய நிலையாயிட்டு. இப்ப திரும்பிடலாம்னு இருக்கேன். வொய்ஃப்க்கும்
இந்த வீட்டு லொக்கேஷன் ரொம்ப பிடிச்சிடுச்சி.”
“ஏன். அவுங்கள கூட்டிக்கிட்டு வரலையா?”
“இல்லிங்க. ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான்”
“சரி. வீட்டை சுத்திப் பார்க்கிறீங்களா?”
“இல்லை. வேண்டாம். அதான் வீட்டையே வாங்கப்போறனே.”
“இவ்வளவு விலை கொடுத்துட்டு வீட்டைக்கூட சுத்திப்பார்க்காட்டி எப்படி?”
“பரவாயில்லை. வேணும்னா நான் வீட்டை மாத்திக்கட்டிப்பேன். முதல்ல ஒரு
அக்ரிமெண்ட் போட்டுட்டோம்னா நல்லாயிருக்கும்”
“ரொம்ப அவசரப்படுறிங்களே. அடடா. பேச்சு வாக்கில மறந்துட்டேன். குடிக்க ஏதாவது
கொண்டு வர்றேன். இருங்க.”
வயதான பெண்மணி, வந்தவருக்கு ஆரஞ்ச் ஜூஸ்-ம் தனக்கு
காஃபியும் கொண்டு வந்தார். வந்தவரும் ஜூஸைப் பருகியபடி பேசிக்கொண்டிருந்தார்.
“என்னங்க ஜூஸ் லேசா கசக்குது”
“ஆரஞ்சு தோல் பட்டிருக்கும்னு நினைக்கிறேன்.”
“ஆமாம். நீங்க ஏன் இவ்வளவு அதிக விலை சொன்னீங்கன்னு
தெரிஞ்சுக்கலாமா?”
“ஏன், புரோக்கர் உங்ககிட்ட சொல்லலையா?”
“ஏதோ தருமத்துக்கு கொடுக்கணும்னு நீங்க ப்ளான்
வச்சிருக்கிறதா சொன்னாரு. ஆனால், யாரும் இவ்வளவு விலை கொடுக்க வராட்டி என்ன
பண்ணிருப்பீங்க?”
“யாராவது வருவாங்கன்னு எனக்குத் தெரியும்”
“எப்படி?” ஜூஸ் முழுவதையும் குடித்துவிட்டு குவளையைக்
கீழே வைத்தார்.
“எனக்கு உங்கள் வயசுல ஒரு மகன் இருந்தான். சரியான கண்டிப்பு இல்லாமல், ரொம்ப கெட்ட சகவாசம்
இருந்தது. போதை மருந்து கடத்துற வேலைல இறங்கிட்டான். மூணு மாசத்துக்கு முந்தி
ஒருநாள் அர்த்தராத்திரில்ல அவசர அவசரமா வீட்டுக்கு வந்தான். வந்தவுனே கொல்லைக்குப் போய்
எதையோ மறைச்சிட்டு வந்தான். என்னப்பா மறைச்சிட்டு வர்றேன்னு கேட்டேன். ஒண்ணும்
இல்லை. நாளைக்கு நம்ப இந்த ஊரைவிட்டு வேற ஊருக்கு போகப்போறோம். யாருகிட்டயும்
எதையும் சொல்லாத. நான் போயிட்டு கார் அரேஞ்ச் பண்ணிட்டு வர்றேன். ரெடியா இருன்னுட்டு
வெளில்ல போயிட்டான். திரும்ப வரல்ல. மறுநாள் அவனை யாரோ கொலை செஞ்சுட்டாங்கன்னு
போலிஸ் சொன்னாங்க. அவன் பாடிதான் வீட்டுக்கு வந்துது. அவன் என்னா மறைச்சி
வச்சிருக்கான்னு போய் பார்த்தேன். ஐம்பது கோடிக்கு பணத்த மறைச்சிட்டு வெளியில
போயிருக்கான். அவன கொலை செஞ்சவங்க, அந்த ஐம்பது கோடியத்தேடி என் வீட்டுக்கு
வருவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலத்தான் நான் பத்துகோடின்னு விளம்பரம்
கொடுத்தேன்.”
வந்தவனுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. “எனக்கு
தலை சுத்துறாப்புல இருக்குங்க.”
“ஆமாம். ஜூஸ்-ல விஷம் போட்டிருந்தேன்”
- மூலம் : ஹிட்ச்காக்
சிறுகதை
துணுக்கு :
ஒரு கணித நிபுணர், ஒரு விஞ்ஞானி, ஒரு புள்ளியியல் வல்லுனர் மூன்றுபேரும்
சேர்ந்து வேட்டைக்குப் போனார்கள். கணித நிபுணர் ஒரு மானை சுட முயற்சித்தார். மான்
இருந்த இடத்தைவிட்டு 5 அடி இடது புறத்தில் அந்தக் குண்டு பாய்ந்தது. விஞ்ஞானி அதே
மானை சுட முயற்சித்தபொழுது குண்டு 5 அடி
வலது புறத்தில், குறி தவறி பாய்ந்தது. புள்ளியியல் நிபுணர் “மானை சுட்டுவிட்டோம்”
என்று குதூகலமாகக் கூறினார்.
ஒரு கணினி புரொக்ராமரிடம் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது அவர் வீட்டில்
இருந்து ஃபோன் வந்தது. “வரும் பொழுது ஒரு ரின் சோப் வாங்கி வாருங்கள். கடையில்
முட்டை இருந்தால் ஒரு டஜன் வாங்கிவாருங்கள்” என்று கட்டளை வந்தது.
கணினி ப்ரொக்ராமர் ஒரு டஜன் ரின் சோப்புடன் வீடு சேர்ந்தார்.
சிறுகதை அருமை. இளைஞனாக இருந்தபோது ஹிட்ச்காக் படம் ஒன்றையும் விடாமல் பார்த்துவிடுவேன். வீட்டுக்கருகில் இருந்த திரையரங்கில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் ஆங்கிலப் படம் ஒன்று ரிலீசாகும். அதில் ஹிட்ச்காக் படங்கள்தான் அதிகம் திரையிடுவார்கள் ஆகவே ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு படம் பார்த்துவிடுவேன். ஹூம் அது ஒரு காலம். துணுக்கும் நன்றாக இருந்தது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteஹிட்ச்காக் படங்கள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள். யு டூப்-ல் அவருடைய அனைத்து நாடகங்களும், படங்களும் உள்ளன. நேரமிருந்தால் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
ஐயையோ... சூன்யக்கார கிழவியோ...!
ReplyDeleteதுணுக்கு ஹா... ஹா...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன். உங்களின் வருகை எப்பொழுதும் உற்சாகமூட்டுகிறது
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
“என்னங்க ஜூஸ் லேசா கசக்குது”
ReplyDeleteஇதைப் படித்தவுடன் நிச்சயம் அந்த ஜூசில் மருந்து கலக்கப்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் எதற்கு எனத்தெரியவில்லை. முடிவில் தான் தெரிந்தது அது எதற்கு என்று. அதுதான் ஹிட்ச்காக்கின் முத்திரை. கதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
துணுக்கில் புள்ளியியல் நிபுணர்களை சரியாக கிண்டலடித்திருக்கிறீர்கள்!
இரண்டாவது துணுக்கு எனக்கு புரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! ஹிட்ச்காக் கதைகளை எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியாது. ஒவ்வொன்றும் ஒருவிதம்.
Deleteகணினி எப்பொழுதும் சொல்வதை மட்டுமே செய்யும். அதற்கு ப்ரோக்ராம் எழுதும் பொழுது தெளிவாக சொல்லவேண்டும். ஒரு சோப்பு வாங்கவும். முட்டை இருந்தால் ஒரு டஜன் வாங்கவும் என்றால், அது முட்டை இல்லாவிட்டால் ஒரு சோப்பு வாங்கும். முட்டை இருந்தால் ஒரு டஜன் சோப்புகளை வாங்கிவிடும். அதைத்தான் ப்ரோக்ராமர் செய்தார்.
இதனை எழுதும் பொழுதே புரிந்து கொள்வது கொஞ்சம்.
கடினம் என்று நினைத்தேன்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
இப்போது புரிகிறது. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!
Deleteரொம்ப நாள் கழிச்சு வந்தால் அருமையான கதை. மிக ரசனையான துணுக்குகளோட அசத்தல். மத்தப் பதிவுகளையும் படிக்கணும். அடிக்கடி வர முடியலை! :) எல்லாராலயும் எப்படி முடியுதுனு யோசிப்பேன். இனிமேல் சனி, ஞாயிறு மற்றப் பதிவுகளைப்படிக்கனு வைச்சுக்கணும்னு நினைக்கிறேன். :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். சில கதைகளை மொழி பெயர்ப்பதாக உள்ளேன். நேரம் கிடைக்கும்பொழுது வாருங்கள்.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்.
கதையும் பிரமாதம்.. துணுக்குகளும் பிரமாதம். சொன்ன சொல்படி ஒரு டஜன் சோப்பு வாங்கியதே சரி..
ReplyDelete