பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, February 13, 2014

சிறுகதை – 3 (ஹிட்ச்காக் நாடகம்)



காக்காய் உட்கார

“ஏன் ஏதாவது சாமியாரப் பாத்துட்டு வர்றியா?” – குரு கேட்டான்
“இல்ல. பதில் மட்டும் சொல்லு. எதிர்காலத்த கணிக்க முடியுமா? முடியாதா?” – சேகர்.
“ஏன் கேக்கறன்னு தெரியல. எதிர்காலத்தல்லாம் கணிக்க முடியாது. எல்லாம் காசு பிடுங்குற சமாசாரமாத்தான் இருக்கும்.” குரு தீர்மானமாகக் கூறினான்.
“எனக்கு, முதல்ல ஒரு லெட்டர் வந்துது. டெல்லில கேஜ்ஜரிவால்தான் ஆட்சியமைக்கப்போறார்னு அதுல எழுதியிருந்துது. நானும் கேஜ்ஜரிவாலுக்கு பெரிய ஆதரவு இருக்காதுன்னு நினச்சேன். ஆனா அவருதான் ஆட்சியமைச்சாரு. இப்ப ஆஸ்திரேலியன் ஒப்பன் டென்னிஸ்ல நடால் தோக்கப்போறதா லெட்டர் வந்திருக்கு.”
“இதப்பாரு. எனக்கு அரசியல் பத்தி ஒண்ணும் தெரியாது. ஆனா டென்னிஸ் பத்தி ஓரளவுக்குத் தெரியும். நடால் ஃபைனலுக்கு வந்தாச்சு. அவன் கிட்ட வாவ்ரிங்கா மோதப்போறான். வாவ்ரிங்கா எட்டாவது ரேங்க். நடால் ஃபர்ஸ்ட் ரேங்க். நடால் கிட்ட அவன் எப்புடி உதை வாங்கப்போறான்னு பாரு. சத்தியமா நடால்தான் வின்னர்.”
“எனக்கு ஒண்ணும் புரியலை.”

டென்னிஸ் ரிசல்ட் வந்த பிறகு ஒருநாள்.
“இப்ப என்னா சொல்ற. நடால்தான் தோத்துட்டான் பாரு. எனக்கு வந்த லெட்டர்ல சரியாத்தான கணிச்சிருக்காங்க.” - சேகர்
“காக்க உக்கார பனம்பழம் விழுந்த கதையா இருக்கும். இத எல்லாம் நம்பாத.” – குரு.
“எனக்கு இன்னோரு லெட்டர் வந்திருக்கு”
“என்னா? மோடியா? ராகுலான்னா?”
“ஏபிஸி மைனிங் ஷேர் இன்னும் சரியா ஆறு நாள்ல ட்ரிபிள் ஆகப் போகுதாம். இன்னிக்கு அதோட விலை ரெண்டு ரூபா முப்பது காசுதான்.”
“ஐயா, நான் இந்த விளையாட்டுக்கு வரலை. என்ன விட்டுரு.”

சில நாட்கள் கழித்து
“சேகர் என்ன டல்லா இருக்க.”
“வீட்டுல இருந்த நகை எல்லாத்தையும் யாருக்கும் தெரியாம வித்துட்டு, எல்லா பணத்துக்கும் அந்த ஷேர வாங்கிட்டன். எங்க அக்கா நகையையும் கொஞ்சம் சுட்டுட்டேன். இப்ப ஷேர் விலை பாதியா குறைஞ்சிட்டு.”
“அடப்பாவி. சொன்னனே கேட்டியா? எப்ப என்னா பண்ணப்போற?”
“ஏதாவது பண்ணனும். எனக்கு இங்க ஆஃபிஸ்ல வேலையே ஓடமாட்டேங்குது. அவன் சொன்ன ஆறு நாள், நாளைக்குதான் முடியிது. அதுவரைக்கும் பாப்பம்”

மறுநாள் காலையில் ஏபிஸி மைனிங் ஷேர், விற்பவரோ வாங்குவரோ இல்லாமல் அமைதியாக இருந்தது. ஆஃபிஸுக்கு வரும்பொழுதே, அப்பாவுக்கு இருந்த தூக்க மாத்திரைகளை சேகர் எடுத்துவந்திருந்தான். இருக்கையில் இருப்பு கொள்ளாமல் அமர்ந்திருந்தான். ஆனால் மதியம் இரண்டு மணிக்குமேல், திடீரென்று ஏபிஸி மைனிங் ஷேர் விலை பன்னிரெண்டு சொச்சத்தை தொட்டுவிட்டது. வாங்குவதற்கு ஆட்கள் இருந்தார்கள். விற்பதற்கு யாரும் அதிகமாக முனையவில்லை. சேகர் பத்துலட்சம் ஷேர்களை வாங்கியிருந்தான். கொஞ்சமும் யோசிக்காமல், சேகர் அனைத்து ஷேர்களையும் விற்றுவிட்டான். கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ரூபாய்கள், சேகருக்கு ஆதாயமாகக் கிடைத்தது. சேகரின் நண்பன் குருவுக்கு இந்த விஷயம் தெரியாது.

“சேகர். ஷேர் என்னாச்சு? பணம் போனாப் போவுது. பணத்த எப்ப வேண்ணா சம்பாதிச்சிக்கலாம். மனச விட்டுராத.”
“குரு, நான் ரிசைன் பண்ணிட்டேன். ஷேரை வித்துட்டேன். லம்ப்பா ஒரு அமௌண்ட் கெடச்சுது. பிஸினஸ் பண்ணப்போறன். எனக்கு லெட்டர் போட்டவனுக்கு பத்து பர்ஸண்ட் கொடுக்கணும். லெட்டர்ல எழுதியிருந்தான்.”
“உண்மையாவா? அவன் அட்ரஸ் தெரியுமா?”
“தெரியாது. போஸ்ட் பாக்ஸ் நம்பர்தான் இருக்கு.”
“அதைக் கொடு. நான் யாரு என்னான்னு பார்க்கிறேன்”

போஸ்ட் ஆஃபிஸில்.
“சார் இந்த போஸ்ட் பாக்ஸ் நம்பர் யாருதுன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?” -
“வாய்யா, வா. இன்னொரு கேஸா? நீயும் ஏமாந்துட்டியா? ஏன்யா, நீங்கல்லாம் எவன் ஏமாத்துவான்னு காத்துக்கிட்டே இருப்பீங்களா?”
“இல்ல சார் இது யாருக்கு சொந்தம்?”
“போ. போயி ஜெயில்ல பாரு. போலிஸ் அந்த ஆளை புடிச்சிட்டு போயிட்டு.”
“ஏன்? எதுக்கு? என்னாச்சு?”
“ஐயா புத்திசாலி, உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாதுன்னு அங்க நோட்டிஸ் போர்டுலேயே எழுதி ஒட்டிட்டோம். போய் படிச்சுக்கப்பா. ஊர்ல ஏமாறதுக்குன்னே ஒரு கூட்டம் அலையுதுப்பா”


நோட்டிஸ் போர்டு செய்தி:
மிலன் என்ற ஆனந்தம் என்ற சங்கர் ஆயிரக்கணக்கான முகவரிகளுக்கு எதிர்காலத்தைக் கணித்து கடிதங்கள் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்களுக்கு சில கணிப்புகளையும், மற்றவர்களுக்கு அதற்கு மாறான கணிப்புகளையும் அனுப்புவார். அதாவது டென்னிஸ்-ல் கணித்தபொழுது நடால் வெற்றி பெறுவார் என்று சிலருக்கும், வாவ்ரிங்கா வெற்றி பெறுவார் என்று சிலருக்கும் எழுதுவார். அப்படி ஷேர் விபரங்களையும் கணித்து எழுதுவார். கிரிக்கெட் விபரங்களும் எழுதுவார். இதில் பணம் சம்பாதித்தவர்களிடமிருந்து தன்னுடைய பங்காக பத்துசதவிகிதம் பெற்றுக்கொள்வதாகவும் தெரிய வந்திருக்கிறது. பொதுமக்கள் இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யாருக்காவது இதுபோன்ற கடிதங்கள் வந்தால் அருகிலிருக்கும் காவல் நிலையத்தை அணுகவும். -  காவல் துறை.”


-மூலம் - ஹிட்ச்காக் நாடகம்.





துணுக்கு :


ஒருவர் தினமும் பிள்ளையாரைக் கும்பிடுவார். பிள்ளையார்தான் அவர் இஷ்ட தெய்வம். பிள்ளையாரிடம் லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழவேண்டுமென்று பல நாட்களாக, தினமும் வேண்டிவந்தார். பரிசு விழுந்தால் பிள்ளையாருக்கு பாதி தருவதாகவும் வேண்டிக்கொண்டார். ஆனால் பரிசு விழுந்தபாடில்லை. ஒருநாள் முருகன் கோயிலுக்கு சென்று அதே வேண்டுகோளை விடுத்தார். பரிசு விழுந்தால் பாதி தருவதாகவும் வேண்டிக்கொண்டார். அவர் அதிர்ஷ்டம் பரிசு விழுந்துவிட்டது. மீண்டும் அவர் பிள்ளையாரையே வேண்ட ஆரம்பித்துவிட்டார். பிள்ளையாரிடம “முருகன் சரியான பேக்கு.. நான் பங்கு தர மாட்டேன்னு தெரியாம பரிசை எனக்கு கொடுத்துட்டாரு. பிள்ளையாரே நீதான் சரியான கடவுள். நான் உன் பங்கை தர மாட்டேன்னுதான் நீதான் கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்க. அதனாலதான் எனக்கு நீ பரிசு கொடுக்கலைன்னு எனக்குத் தெரியும்” என்று கூறிக்கொண்டார்.



 இது எப்படி? : 


http://www.youtube.com/watch?v=ySKao1vLU9k

 

10 comments:

  1. பிள்ளையாரை வேண்டியவரை விட மிலன் (ஆனந்தம், சங்கர்) எவ்வளவோ பரவாயில்லையே...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன். ஆமாம், உண்மைதான். ஆண்டவனுக்கே தண்ணி காட்டுபவர் என்னவெல்லாம் செய்வாரோ?


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. சிறுகதையைப் படித்தபோது நான் படித்த துணுக்கு ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. ஒரு ஜோசியரிடம் என்ன குழந்தை பிறக்கும் என ஒரு தம்பதியர் கேட்டதற்கு அவர் ஒரு ‘ஜோசியம்’ சொல்லியிருக்கிறார். குழந்தை பிறந்தபோது அவர் சொன்னது போல் பெண் குழந்தை பிறக்கவில்லையே என கணவன் ஜோசியரிடம் கேட்டபோது, ‘அம்மாவைக் கேட்டுப்பாருங்கள்.ஆண் குழந்தை தான் பிறக்கும் என சொல்லியிருந்தேன்.’என்றாராம். ஒருவேளை பெண் குழந்தை பிறந்திருந்தால் மனைவியிடம் ‘அய்யாவைக் கேட்டுப்பாருங்கள். பெண்ண் குழந்தை தான் பிறக்கும் என சொல்லியிருந்தேன்.’என்றிருப்பாராம்.

    அதுபோல் இருந்தது இந்த கதை. இரசித்தேன்!

    கடவுளை நமக்கு நமக்கு வேண்டும்போது நினைப்பதும் பின் காரியம் முடிந்ததும் மறப்பதைத் தான் துணுக்கு சொல்கிறது.

    அந்த காணொளியைப் பார்த்தேன். நம்பவே முடியவில்லை. கண்கட்டி வித்தை என்பது சரிதான். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! உலகத்தில் இப்படி மாற்றி கூறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருப்பதுபோல் தோன்றுகிறது. ஒருவேளை கலியோ அல்லது என் மனநிலையோ என்று தெரியவில்லை.

      கடவுள்தானே நேரில் வந்தா கேட்கப்போகிறார் என்று இருக்கலாம்.

      இது போன்ற வித்தைகளை “ஆஸ்திரேலியா காட் டேலேன்ட்” - லும் செய்தார்கள். எப்படி என்று புரியவில்லை. அவ்வளவு சீக்கிரம் பெண்கள் உடை மாற்ற நேரத்தை மிச்ச்சப்படுத்தினால் நல்லதுதான்.



      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. நல்ல கதை. பிள்ளையார் துணுக்கும் அருமை. கடவுளையே ஏமாத்தறவங்க மனுஷங்களை ஏமாத்த எத்தனை நேரம் ஆகும்! :))) காணொளி பார்க்கலை, பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். ஆனால் மனிதனை ஏமாற்றுவதுதான் கடினம், பிரச்சனை தருவதும் என்று நினைக்கிறேன். கடவுளை ஏமாற்றினால் மன்னித்துவிடுவார்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  4. அட??? ஆச்சரியமா இருக்கே! எப்படி இந்த மாதிரி மாஜிக்கெல்லாம் செய்யறாங்க, என்ன ட்ரிக்னு புரியலை. நல்லா இருந்தது. இவ்வளவு சீக்கிரம் உடை மாற்றுவது என நினைக்கவே முடியலை!

    ReplyDelete
    Replies

    1. ம்ஹூம். எனக்கும் பிடிபடவில்லை.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  5. சிருகதை துணுக்கு ரெண்டுமே சூப்பரா இருந்துது. ரசிச்சேன். பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete