பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, February 20, 2014

சிறுகதை – 4


மெய்போலும்மே.



இந்த வார செய்திகள் :

உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்யும் இத்தகைய மனிதாபிமான உதவிகள் மிகவும் பாராட்டத்தக்கதொன்று. ஒவ்வொரு வளர்ந்த நாடும், அமெரிக்காவின் பாதையைப் பின்பற்றினால், உலக நாடுகள் அனைத்தும் சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. அமெரிக்காவுடன் சேர்ந்து நாங்களும் எங்களாலான உதவிகளை தேவைப்படும் நாடுகளுக்கு கண்டிப்பாக செய்வோம் – இங்கிலாந்து

ஒரு சகோதரன் துன்பத்தில் இருக்கும் நேரத்தில், அவனுடைய மற்ற சகோதரர்கள் உதவி செய்வது இயல்பான ஒன்று. இத்தகைய மனிதாபிமான உதவிகளுக்கு நாங்களும் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதில் பெருமை அடைகிறோம். – ஆஸ்திரேலியா.

அமெரிக்காவின் போர் விமானங்கள் தேவையான மருத்துவ உபகரணங்கள், வசதிகள் மற்றும் மோப்ப நாய்களுடன் சீனாவின் ஷங்காய் நகரில் தரையிரங்கின. பூகம்பத்தால் நிலை குலைந்த ஷங்காய் நகருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இதுவரை கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உதவிகள் வழங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தால் சீனாவின் வணிகத் தலைநகரான ஷங்காய் நிலைகுலைந்துவிட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பத்தில், அதிக பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்திய பூகம்பம் இது என்று புள்ளியியல் விபரங்கள் கூறுகின்றன. ஷங்காய் மிகவும் மக்கள் நெருக்கமுள்ள நகரமாக இருந்ததால் இழப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.



இந்த வார செய்திகளுக்கு ஒருமாதத்துக்கு முன்பு : 

“நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என் உயிரே போவதாயிருந்தாலும் இதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.” விஞ்ஞானி டாக்டர்.ஸ்கொயர் ஆவேசமாகக் கூறினார்.

“நம் நாடு பிரச்சனையில் உள்ளது. இந்த நிலை நீடித்தால், இன்னும் பத்து இருபது வருடங்களில் உலக அரங்கில் நாம் நமது நிலையை இழந்துவிடுவோம். சீனாவின் கை ஒங்கிவிடும். நம் நாட்டின் வளர்ச்சி இதனால் தடைபடும் என்பதையாவது ஒத்துக்கொள்கிறீர்களா?” வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி டாக்டர்.ஸ்கொயரிடம் அமைதியாக வினவினார்.

“இது மனித குலத்துக்கே அநீதி. இப்படி ஒரு நிலைமை வரும் என்று தெரிந்திருந்தால், நான் கண்டுபிடித்ததை உங்களிடம் கூறியிருக்கமாட்டேன்.” பூகம்பம் ஏற்படுவதை முன் கூட்டியே துல்லியமாக கணிக்கும் முறையைக் கண்டுபிடித்த டாக்டர்.ஸ்கொயர் வருத்தம் தொனிக்கும் குரலில் பதிலளித்தார். பூகம்பத்தைக் கணிக்க டாக்டர்.ஸ்கொயர் கண்டுபிடித்த முறைகள் இன்னும் அறிவியல் உலகில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு பூகம்பத்தைக் கணிக்கும் ஆய்வின்பொழுது, எதிர்பாராவிதமாக, உலகின் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட அளவு
செயற்கையாக பூகம்பத்தை ஏற்படுத்தும் முறையையும் டாக்டர்.ஸ்கொயர் கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பையே தற்போது “நான் கண்டுபிடித்ததை உங்களிடம் கூறியிருக்கமாட்டேன்.” என்று டாக்டர்.ஸ்கொயர் கூறினார்.
“சரி விடுங்கள்.” வெள்ளை மாளிகையின் அதிகாரி அறையைவிட்டு வெளியேறினார்.


மறுநாள் ஒரு துணுக்காக கீழேயுள்ள செய்தி சில ஊடங்களில் காணப்பட்டது.
“டாக்டர்.ஸ்கொயர் என்ற விஞ்ஞானி நேற்று மாலை பணியில் இருந்தபொழுது, மாரடைப்பால் காலமானார். அன்னார் இன்னும் ஓரிரு வருடங்களில் நோபல் பரிசு பெறுவார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.”

"பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் 
  மெய்போலும்மே; மெய்போலும்மே 

 

 மெய்யுடை யொருவன் சொல்லமாட்டாமையால் 
  பொய்போலும்மே பொய்போலும்மே."




துணுக்கு :


நேர்மையானவர்களைக் காண்பதால் அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை, ஏமாற்றுக்காரர்களை காண்பதால் அதிர்ச்சியடைபவர்களைவிட அதிகமாக இருப்பது மிகவும் கவலையை அளிக்கிறது.
-நோயல் கோவார்ட்


ஏமாற்றுக்காரர்களுக்கு, ஏமாறுபவர்கள் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.
-நிக்கொலோ மச்சியவெல்லி.
 

10 comments:

  1. பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறிந்து சொல்லும் முறையை இதற்கு முன்பே பலரும் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருந்தாலும் இதுவரையிலும் யாராலுமே அதை துல்லியமாக கூற முடிந்ததில்லை. டாக்டர் ஸ்கொயரின் கண்டுபிடிப்பும் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதே சந்தேகம்தான். ஆனாலும் அவர் அதை நான் சொல்லியே இருக்கமாட்டேன் என்னும் பேச்சு சரியல்ல. ஒருவேளை அவர் சில காலம் கழித்து தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால் மரணம் அந்த வாய்ப்பையும் பறித்துவிட்டதில் மனித குலத்துக்கு ஒரு இழப்புதான். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. உண்மையில் கதையை குழப்பிவிட்டேனா?

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. ஏனிந்த தகவல்களில் குழப்பங்கள்...? துணக்குகள் உண்மை என்பதாலோ...?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே. கதையின் விளக்கத்தை திரு.நடனசபாபதி அவர்களின் பின்னூட்ட பதிலில் விளக்கியுள்ளேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete

  3. //அந்தக் கண்டுபிடிப்பையே தற்போது “நான் கண்டுபிடித்ததை உங்களிடம் கூறியிருக்கமாட்டேன்.” என்று டாக்டர் ஸ்கொயர் கூறினார்.//

    உண்மையில் இது எனக்கு புரியவில்லை. டாக்டர் ஸ்கொயர் செயற்கையாக பூகம்பத்தை ஏற்படுத்தும் முறையை சொன்னாரா இல்லையா என்பக்டு புரியவில்லை.

    எப்படி இருப்பினும் அமெரிக்காவின் ‘உதவும் மனப்பான்மை’யில் எப்போதும் சுய நலம் இருக்கும்!

    //ஏமாற்றுக்காரர்களுக்கு, ஏமாறுபவர்கள் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்.//
    உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      “இது மனித குலத்துக்கே அநீதி. இப்படி ஒரு நிலைமை வரும் என்று தெரிந்திருந்தால், நான் கண்டுபிடித்ததை உங்களிடம் கூறியிருக்கமாட்டேன்.”

      டாக்டர்.ஸ்கொயர் அதிகாரிகளிடம் சொல்லிவிட்டதால்தான், சொல்லியிருக்கமாட்டேன் என்று கூறுகிறார். அதிகாரிகள் சீனா மீது அந்த பூகம்பத்தை ஏற்படுத்துமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். அதற்காக சீனா முன்னேறிவிடும் என்று பயமுறுத்துகிறார்கள். விஞ்ஞானி ஒத்துக்கொள்ள மறுப்பதால் உயிரிழக்கிறார். மறுமாதம் சீனாவில் பூகம்பத்தை அமெரிக்கா உண்டாக்குகிறது. அமெரிக்காவே குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது. அனைத்து முடிச்சுகளையும் கதையில் குறிப்பிட்டுள்ளேன் என்று நினைக்கிறேன். அநேகமாக யாருக்கும் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன். யாருக்காவது விளக்கத்துக்கு முன் புரிந்திருந்தால் தெரியப்படுத்தவும்.
      முதலில் கதைக்கு “வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது” என்று தலைப்பிட்டிருந்தேன்.
      கீழேயுள்ள செய்தியை படித்திருக்கிறீர்களா? இது நியூயார்க் போஸ்ட்-ல் வெளியானதுபோல் தெரிகிறது.

      http://nypost.com/2013/12/15/inside-the-saudi-911-coverup/

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
    2. //டாக்டர்.ஸ்கொயர் அதிகாரிகளிடம் சொல்லிவிட்டதால்தான், சொல்லியிருக்கமாட்டேன் என்று கூறுகிறார்.//
      //மறுமாதம் சீனாவில் பூகம்பத்தை அமெரிக்கா உண்டாக்குகிறது. அமெரிக்காவே குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது.//

      அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனாலும் எனக்கு சந்தேகம் இருந்ததால் அவ்வாறு எழுதியிருந்தேன்.

      நியூயார்க் போஸ்ட் இல் உள்ள செய்தியைப் படித்தேன். An open enemy is better than a fake friend என்பது சரிதான்.

      Delete
    3. அதிகமானோருக்கு புரிந்திருக்காது என்று நினைக்கிறேன். மூன்று பேர் படித்த பிறகே பதிவிட்டேன்.

      ஊடகங்களில் வரும் செய்திகளை ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. நண்பர்கள் குறித்து தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. அமெரிக்காவே குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது. அனைத்து முடிச்சுகளையும் கதையில் குறிப்பிட்டுள்ளேன் என்று நினைக்கிறேன். அநேகமாக யாருக்கும் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன். யாருக்காவது விளக்கத்துக்கு முன் புரிந்திருந்தால் தெரியப்படுத்தவும்.//

    விளக்கத்தைப் பின்னர் தான் படித்தேன். ஆனால் முதலிலேயே புரிந்து கொண்டேன். :)))) இது மாதிரி எத்தனை படிச்சிருக்கோம்! :))))

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.

      இல்லை. பின்னூட்டங்களைப் பார்த்தால் நான் தான் சரியாக விளக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete