பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 15, 2013

கதம்பம்


புதிர் :

படத்திலுள்ள சங்கிலியில் மூன்று வளையங்கள் உள்ளன.

இதுபோன்று ஐந்து சங்கிலிகள் உள்ளன.
 
இந்த ஐந்து சங்கிலிகளையும், கீழேயுள்ள படத்தில் உள்ளதுபோல் இணைக்க வேண்டும்.  வளையங்களை ஓரிடத்தில் வெட்டி, வளைத்து அடுத்த சங்கிலியுடன் இணைப்பதன் மூலம் முழுநீள சங்கிலியை உருவாகவேண்டும். ஒவ்வொரு வளையத்தையும் வெட்டுவதற்கும், ஒட்டுவதற்கும் கணிசமான செலவாகும். எனவே குறைந்த விலையில், படத்தில் காட்டியவாறு முழுநீள சங்கிலியை உருவாக்க, குறைந்தபட்சமாக எத்தனை வளையங்களை வெட்டவேண்டும்?
 
குரங்குகளின் மருந்தகம் :
 

இரவு முழுவதும் சரியாகத் தூங்கமுடியவில்லை. பேதி, சிறுநீரின் நிறமும் எப்பொழுதும் போல இல்லை. அசதியுடன் எழுந்த 34 வயது மனிதக்குரங்கு, தனது கூட்டத்துடன் சேர்ந்து உண்ணாமல் தனியாக “வெர்னோனியா அமிக்டாலினா” என்ற தாவரத்தைத் தேடி ஓடியது. இடம் கிழக்கு ஆப்ரிக்காவில், டான்சேனியாவிலுள்ள மஹாலே மலைப்பிரதேசத்திலுள்ள ஒரு காடு. தாவரத்திலுள்ள இலைகளைப் பறித்து நன்கு மென்று, சாற்றை உறிஞ்சிவிட்டு சக்கையை வெளியே துப்புகிறது. சிலமணி நேரங்கள் கழித்து மீண்டும் அதே வேலையைச் செய்கிறது. மறுநாள் உடல்நிலை குணமாகி சாதாரணமாக எப்பொழுதும்போல உண்ண ஆரம்பிக்கிறது. பொதுவாக குரங்குகள் அந்தத் தாவரத்தை உண்ணுவதில்லை. வேப்பிலை போன்று கசப்பான இலைகளைக் கொண்ட தாவரம் அது.

“மெக்காலே ஹஃப்மேன்” என்ற விலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர், 1989-ல் வெர்னோனியா அமிக்டாலினா-வின் இலைகளில் நல்ல சக்திமிக்க ஆன்டிபையாட்டிக் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும் பண்புகளும் இருப்பதாகக் கண்டறிந்தார். இன்னொரு வகைக் குரங்குகள் மற்றொரு தாவரத்தின் இலைகளை மடித்து முழுதாக விழுங்கிவிடுகின்றன. அவ்வாறு விழுங்குவதால் அந்த மூலிகைகள் வயிற்றில் சற்று அதிகநேரம் தனது வேலையைச் செய்கிறது. இன்னொரு வகைப் பெண்குரங்கு இனப்பெருக்க காலத்தில் மட்டும், ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் இலைகளை அதிகம் உண்ணுகின்றன. அந்த இலைகள் பெண்மைத்தன்மை ஹார்மோன்களை அதிகப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் காலம் காலமாக அந்த தாவரத்தின் இலைகள், வேர்கள், பட்டைகளை வயிற்றுக்கோளாறு, மலேரியா, மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு மக்கள் மருந்தாக உட்கொள்கின்றனர். ஆனால் மேற்கத்திய மருந்துகளின் வரவுக்குப்பின் இத்தகைய நாட்டு மருந்துகளின் அறிவு அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படாமல் அழிகின்றன. எனவே மீண்டும் விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம். 

16 comments:

 1. புதிர் விடை- ஒரு சங்கிலியிலுள்ள 3 வளையங்களை வெட்டி மீதி நான்கு சங்கிலிகளை இணைத்து விடவும். நான்கு சங்கிலிகளை இணைக்க 3 வளையங்கள் போதும்.

  ReplyDelete
  Replies
  1. மூளைக்கு அதிகம் வேலை கொடுத்துவிடுகிறீர்கள் ஐயா! நிச்சயமாக சரியான பதில் இவ்வளவு சீக்கிரம் வந்துவிடுமென்று எதிர்பார்க்கவில்லை. நன்றி. வாழ்த்துக்கள்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
  2. இது ரொம்ப பழைய காலத்துப் புதிர். அதனால்தான் உடனே விடை கொடுத்தேன்.

   Delete
  3. ஐயா, பழையனவற்றை உணர்ந்து உபயோகப்படுத்துவதற்கும் நல்ல மூளை வேண்டுமல்லவா! வரலாற்றை மனிதன் மறந்துவிடுவதால் மீண்டும் மீண்டும் மனிதன் ஒரே மாதிரியான பிரச்சனைகளைச் சந்திக்கிறான்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் எங்கள் எல்லோருடைய சார்பிலும் புதிருக்கான பதிலைத் தந்துவிட்டார். எனவே எங்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.


  விலங்குகளின் மருந்தகம் ஒரு அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட அந்த தாவரம் பற்றிய கூடுதல் தகவல்கள். மேற்கு மற்றும் மத்திய ஆஃப்ரிக்காவில் காணப்படும் Vernonia amygdalina என்ற இந்த தாவரம் ஆங்கில தாவரவியல் அறிஞர் William Vernon அவர்கள் பெயரால் அழைக்கப்படுகிறதாம். மருத்துவக்குணம் உள்ள இந்த செடி நீரழிவு நோய்க்கும், ஜுரத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக உபயோகிக்கப் படுகிறதாம். இனிப்பும் கசப்பும் கொண்ட இதன் இலைகள் இலைக்காய்கறிகள் போல உண்ணப்படுகிறதாம்.ஆப்ரிக்காவில் தயாரிக்கப்படும் எகுசி சூப்புக்கான மூலப்பொருட்களில் இதன் இலைகலும் ஒன்றாம்.

  நாம் நாட்டிலும் இதுபோன்ற தாவரங்கள் உண்டு. நமது சித்த மருத்துவர்களைக் கேட்டால் சொல்வார்கள். ஆனால் நாம் தான் அவர்களை நாடுவதில்லையே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! புதிர் இருந்தால், இனிமேல் பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் வைக்கிறேன். அப்பொழுது பதில் கூற விழைபவர்கள் முயற்சி செய்யமுடியும்.
   ஆப்ரிக்காவை காலனி ஆதிக்கத்தினர் ஏறக்குறைய அழித்துவிட்டனர். எப்படியோ இந்தியா தப்பித்துவிட்டது. காலம் காலமாக மக்கள் உபயோகிக்கும் ஆப்ரிக்கத் தாவரத்துக்கு மேற்கத்திய பெயர். ஏனென்றால் அவர்தான் கண்டுபிடித்தவர். ஆப்ரிக்கப் பெயராக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மஞ்சளையே பேட்டர்ன் செய்தவர்கள்தானே.

   ஆமாம். சில குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு சித்த வைத்தியம்தான் இன்றும் சிறந்தது. என்னுடைய நண்பர் ஒருவருக்கு இருந்த பிரச்சனைக்கு, சிட்னியிலிருந்து கேரளா சென்றுதான் குணமாகியது. இங்கு வைத்தியர்களால் சரிசெய்ய இயலவில்லை.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. ஆப்ரிக்காவில் காலம் காலமாக அந்த தாவரத்தின் இலைகள், வேர்கள், பட்டைகளை வயிற்றுக்கோளாறு, மலேரியா, மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு மக்கள் மருந்தாக உட்கொள்கின்றனர்.//

  இந்தியாவிலும் இப்போதும் கிராமப்புறங்களில் இத்தகைய மருத்துவம்தான்... ஆனால் அவை நிரந்தர தீர்வை அளித்தாலும் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதால எதிலும் வேகத்தை விரும்பும் மேலைநாட்டினர் இந்த முறையை கடைபிடிப்பதில்லை. அவர்களை எல்லா விதத்தில் பின்பற்ற நினைக்கும் நம் நகர்ப்புறவாசிகளும் இதை அடியோடு புறக்கணித்துவிட்டனர்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   பொறுமையாக வேலை செய்தாலும் நாட்டு வைத்தியத்தில் பக்க விளைவுகள் மிகவும் குறைவு. இருந்தாலும், இன்றைய அவசர யுகத்தில் குழந்தையை சுமக்க, ஒருவர் ஒரு மெஷின் கண்டுபிடித்துவிட்டால் சீக்கிரத்தில் பில்கேட்ஸை முந்திவிடுவார் என்று நினைக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. உண்மை தான். ஆங்கில மருத்துவத்தின் உடனடி பலன், பாரம்பரிய மருத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தே விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.ஜீவன் சிவம்!
   சரியாக கூறினீர்கள். என்ன செய்ய முடியும்?. நாம் ஊரோடுதான் ஒத்துவாழ வேண்டும். அல்லது சந்நியாசியாக காட்டுக்குக்கூட செல்லமுடியாமல் காட்டையும் அழித்துவிட்டோம்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. புதிருக்கு விடையைக் கொடுத்துவிட்டார். நீங்கள் முதலில் விடை அளிப்பவரை மட்டுறுத்தலில் வைத்திருந்தால், மற்றவர்கள் விடையையும் பார்த்துக்கொண்டு, விடைகள் வந்த பின்னூட்டங்களை மட்டும் பின்னர் அளிக்கலாம். உங்கள் விருப்பம். :)))))

  குரங்குகளின் அறிவு வியக்க வைக்கிறது. நம் நாட்டில் நாய்களும் வயிற்றில் கோளாறு எனில் அருகம்புல்லைத் தேடித் தின்னும். நாம் தான் நம் பழைய அருமைகளை மறந்துவிட்டோம். :(((( பகிர்வுக்கு நன்றி.

  பாரம்பரிய மருத்துவம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஒருவர் ஒவ்வொரு வாரமும் நேரடி ஒளிபரப்பில் கேள்வி-பதில் நிகழ்ச்சியாகத் தந்து கொண்டிருக்கிறார். சங்கரா தொலைக்காட்சியிலும் ஆயுர்வேதம் குறித்து இரு நிகழ்ச்சிகள் வருகின்றன. நம் பொதிகைத் தொலைக்காட்சி எப்போதுமே பாரம்பரியத்துக்கு முதன்மை அளிக்கிறது. :))))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்!
   புதிர் இருந்தால் இனிமேல் மட்டுறுத்தல் வைத்துவிடுகிறேன். யோசனைக்கு நன்றி.

   சிறுவயதில் பசு,எருமை,பூனை,நாய் மற்றும் கிளி எங்கள் வீட்டில் இருந்தது. அமாவாசை, பௌணமிகளில் பூனையும், நாயும் புல் தின்பதை அதிசயத்துடன் பார்த்த ஞாபகம் உள்ளது. இந்த முறை ஊருக்கு சென்றபொழுது, பூனைக்கு யார் டாய்லெட் ட்ரெய்னிங்க் கொடுத்தார்கள் என்று ஆச்சரியமாக்க கேட்டான்.
   பொதிகையில் இந்திய பாரம்பரிய கலைகள், சுரபி என்று நினைக்கிறேன், ரசித்து பார்த்த ஞாபகம் உள்ளது. பொதிகை நல்ல சேனல்

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
  2. சுரபி எல்லாம் முன்னே பல வருடங்கள் முன்னர் வந்து கொண்டிருந்தது. இப்போ வருவதில்லை. ஆனால் பொதுவாகப் பொதிகை, மக்கள் தொலைக்காட்சி, புதிய தலைமுறை போன்றவற்றின் நிகழ்ச்சிகள் பார்க்கும்படி இருக்கும்.

   Delete
 6. தாமதமாக அப்டேட் ஆகி உள்ளது. :))) இன்று தான் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சமயம் கிடைக்கும்பொழுது வாருங்கள். எனக்குத்தான் பதில் எழுத தாமதமாகிவிடுகிறது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 7. // எனவே மீண்டும் விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம். //

  நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

  ReplyDelete