பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 22, 2013

கதம்பம்-2


கணினி மொழிபெயர்ப்பு :

கூகுளில் தற்போது எளிதாக மொழிபெயர்க்கும் வசதிகள் வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்திய மொழிகளில் ஹிந்திக்கு மட்டுமே அந்த வசதி ப்ரௌசரில் நேரடியாக இருந்தது. இப்போது தமிழிலும் அந்த வசதி வந்துவிட்டது. நீங்கள் கூகுள் க்ரோம் ப்ரௌசர் வைத்திருந்தால் நான் என்ன சொல்கிறேனென்று தெரியும். இதைக் கண்டவுடன் ஆங்கிலத்திலிருந்து ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்து, பிறகு ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு கணினி மொழிபெயர்த்தது நினைவுக்கு வருகிறது. அந்த மொழிபெயர்ப்புகளை கீழே எழுதியுள்ளேன்.

ஆங்கில வாசகங்கள்:
1. The sprit is good, but the flesh is weak.
2. Out of sight, out of mind
3. Keep left

திரும்பவும் ஆங்கிலத்துக்கு வந்த வார்த்தைகள்.
1. மாமிசம் நன்றாக இருக்கிறது. வோட்காதான் கெட்டுவிட்டது.
2. குருட்டு மடையன்
3. துணைவி சென்றுவிட்டாள்.


கூகுளில் தற்போது மொழி பெயர்த்தது கிழே:
1.ஆவி நல்லது, ஆனால் சதை பலவீனமாக உள்ளது.
2. எதிரில், வெளியே மனதில்
3.விட்டு வைக்க
  
வெற்றிபெறுபவர்களின் பண்புகள்:
 
ஸ்டேன்ஃபோர்ட் நிர்வாகத்துறை பேராசிரியர் ஜெஃப்ரி ஃபெஃபெர் என்பவர் வெற்றிபெறுபவர்களின் ஆறு முக்கிய பண்புகளாக கீழ்க்கண்ட பண்புகளை வரையிடுகிறார்.
1.   தளர்ச்சி அடையாமல் தொடர்ந்து இயங்குவதற்கான மனநலம் மற்றும் உடல் வலிமை:
குறிப்பிடத்தக்க வகையில், ஆய்வாளர்கள் இதனை ஒரு பண்பாக கூறினாலும், இதுவே உண்மையில் முதன்மையான பண்பாக திகழ்கிறது. தொடர்ந்து பல மணிநேரங்களுக்கு வேலை செய்யும் குணம் வெற்றியடைந்த அனைத்து தலைவர்களிடமும் பொதுவாகக் காணப்படுகிறது. அது மற்றவர்களைவிட ஒருபடி அதிகமாக முன்னேற வழிவகுக்கிறது. ஆமை, முயல் கதைபோல தொடர்ச்சியான கடின உழைப்பினால் அவர்களைக்காட்டிலும் திறமையும், அறிவும் பெற்றவர்களைவிட முன்னேறத்துடிக்கிறார்கள். அத்தகைய உழைக்கும் திறனைக்கொண்டு, அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் அடையாளம் காணப்பட்டு பின் தொடரப்படுகிறார்கள்.
2.   சிதறாத ஒருங்கிணைப்பான கவனம்:
இந்தப் பண்பு பொதுப்படையாகத் தோன்றினாலும், ஆராய்ச்சியின்படி, மிகவும் வெற்றிபெற்றவர்கள், தொடர்ந்து ஒரே துறையில் அதிகமான கவனம் செலுத்தியவர்களாக அமைந்திருப்பது தெரிகிறது. ஒரே துறையில் தொடர்ந்து இருப்பவர்களே அந்தத் துறையில் மேல் நிலையை அடைந்திருக்கிறார்கள்.
3.   அடுத்தவர்களுடைய நிலையைப் புரிந்துகொள்ளும் தன்மை:
அடுத்தவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது, எப்படி அவர்களுடைய அலைவரிசைக்கு உரையாடுவது என்று அறிந்திருப்பதை மூன்றாவது பண்பாகக் குறிப்பிடுகிறார். அடுத்தவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்வதையும், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதையும் அவர் ஒன்றாகக் கூறவில்லை. அடுத்தவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்வதை முதன்மையாகவும், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதை பேச்சு வார்த்தைகளைக் கொண்டு அவர்கள் ஒரு இணைந்த முடிவெடுப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
4.   வளைந்துகொடுக்கும் தன்மை:
ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ளாமல் அடுத்தவர்களைப் புரிந்து கொள்வதென்பது இயலாத காரியம். மாற்றிக்கொள்வதென்பது எதிர்மறையாகத் தோன்றினாலும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அது ஒரு முக்கியமான திறமை. தன்னுடைய எண்ணங்களிலோ செயலிலோ மாற்றமில்லாமல் விளைவுகளில் மட்டுமே மாற்றம் காண நினைப்பது எப்படி முடியும்? இங்கு பழையன கழிதலும், புதியன புகுதலும் விதியை ஒத்து நோக்க வேண்டும். வளைந்து கொடுப்பது புதிய நண்பர்களையும், புதிய உத்திகளையும் கற்றுக்கொள்ள உதவும்.
5.   எதிர்ப்புகளையும், மோதல்களையும் எதிர்கொள்ளும் பண்பு:
எதிர்ப்புகளையும், மோதல்களையும் சந்திக்கத் துணிவில்லாமல் அதிக வெற்றிகளைப் பெற முடியாது. சில நேரங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்தே ஆகவேண்டும். எதிர்ப்புகளை சந்திக்கவும், சமாளிக்கவும் துணிந்தவர் என்று அடையாளம் காணப்படுவது எதிர் காலத்தில் நல்ல பலனைத் தரவல்லது. தலைமைப் பதவி தேவைப்படுவதற்கு முக்கிய காரணம் எதிர்ப்புகளே ஆகும். எதிர்ப்புகளைச் சந்திக்கும் துணிவு மிகவும் அவசியமானதொன்றாகும்.
6.   நான் என்ற மமதையை சில சமயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்லுதல்:
எப்பொழுதும் விட்டுக்கொடுத்துச் செல்வதோ அல்லது எப்பொழுதும் எதிர்ப்புகளை மட்டுமே சந்திப்பதோ வெற்றி அடைவதற்கு சாதகமாக அமையாது. கூட்டணிகளும், நண்பர்களும் தினசரி வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கவே செய்கின்றன. மற்றவர்களுடன் இணக்கமாக இருப்பதற்கும், கூட்டணி அமைப்பதற்கும் நான் என்ற மமதை எப்பொழுதும் இடையூராக அமைந்துவிடுகிறது. தலைமைப்பதவியில் இருப்பவர்கள் சமயத்துக்கேற்றபடி வளைந்துகொடுத்து காரியத்தை சாதிக்கும் திறமையையும் பெற்றிருக்கிறார்கள். நான் என்ற மமதையை விட்டுக்கொடுத்து காரியத்தை சாதிக்கும் திறமையை இறுதியான பண்பாகக் குறிப்பிடுகிறார்.
 

 

9 comments:

  1. கூகிளின் வேடிக்கையான மொழிபெயர்ப்பை இரசித்தேன். நம்மவர்கள் மொழி பெயர்ப்பதில் செய்யும் குளறுபடிகள் பற்றி விரைவில் நானும் ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.

    பேராசிரியர் ஜெஃப்ரி ஃபெஃபெர் அவர்கள் வரையறுத்துள்ள வெற்றிபெறுபவர்களின் ஆறு பண்புகளுமே முக்கியம் என்றாலும் கடைசியில் கொடுத்துள்ள நான் என்ற மமதையை விட்டுக்கொடுத்துச் செல்லுதல் என்பதுதான் மிக முக்கியம் என்பது என் கருத்து.

    அடுத்த தொடர் பதிவிடுமுன் தருகின்ற இந்த சுவாரஸ்யமான செய்தித்துணுக்குகள் (Titbits) மிக அருமை. .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! மொழிபெயர்ப்பு சம்பந்தமான தங்களுடைய அனுபவங்கள் கொண்ட பதிவுகளை, விரைவில் எதிர்பார்க்கிறோம்.

      தங்களுடைய கருத்துக்கு நான் மாறுபடுகிறேன். ஜெஃப்ரி அவர்கள் கூறிய வரிசை சரியானதென்று கருதுகிறேன். தகுதியில்லாதவர்களுக்கு மமதை இருந்தாலும், இல்லாவிடாலும் பெரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை.

      விரைவில் அடுத்த தொடரை பதிவிட முயற்சிக்கிறேன். ஒரு ஐந்தாறு அத்தியாயங்களை தயார் செய்தவுடன் பதிவிட இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் பொழுது, சிலசமயங்களில் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால், நன்கு தெரிந்த கேள்வியை (வினாத்தாளில் இல்லாத) எழுதி அதற்கு பதிலையும் எழுதினால், கொஞ்சம் அறிவு அதிகமான ஆசிரியர்கள் முழு மதிப்பெண் தந்துவிடுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தவரை சரியான பதில்தான். அதுபோல தொடர் தொடங்கும்வரை நானும் இருக்கிறேன் என்று முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. ரசிக்க வைக்கும் மொழிப் பெயர்ப்பு...!!!

    அறிந்து கொள்ள வேண்டிய வெற்றி பெறுபவர்களின் பண்புகள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன். எங்கே, கொஞ்ச காலமாக பதிவுலகில் காணவில்லையே? நலம்தானே?
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. மொழி பெயர்ப்பு குறித்த பதிவு ரசிக்கும்படியாக இருக்கிறது. :)) எனக்கும் விதவிதமான மொழி பெயர்ப்புகள் வந்திருக்கின்றன. பகிர்ந்திருக்கலாம். :))) வெற்றிக்கான பண்புகள் அனைத்துமே ஏற்புடையது. அனைத்துமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. பக்கிரிசாமி நீலகண்டம்
      வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். பண்புகள் அனேகமாக நமது வள்ளுவரும், நன்னூல்களும் கூறிய கருத்துக்கள்தான் என்று கருதுகிறேன். பள்ளியில் படிக்கும்பொழுது, படிக்கும் அறிவுரைகள் மதிப்பெண்களுக்காக மட்டுமே என்று எண்ணத்தில்தான் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள் (என்னையும் சேர்த்து). இப்பொழுது, திரும்பவும் படித்தால் ஏன் உணர்ந்து படிக்கவில்லை என்று வெட்கமாக இருக்கிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. கூகிள் மொழியாக்கம் (Translate) எதிர்பார்த்த அளவு இல்லை. பட்லர் இங்க்லீஷ் மாதிரி பட்லர் தமிழாக இருக்கிறது. நாம்தான் எடிட் செய்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் மொழிபெயர்ப்புகளால் அதிகமான பணவரவு கிடைக்குமானால், கூகுளில் பறவைகளின் மொழியினைக்கூட தவறு எதுவும் இல்லாமல் மொழிபெயர்த்துவிடுவார்கள். ஆக மொத்தத்தில் நிறுவனங்களின், ஒவ்வொரு அசைவுக்கும் மூல காரணம் வருமானம்தான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. இந்த பதிவை எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை.

    ஆங்கிலத்திலிருந்து எந்த மொழிக்கு மொழிமாற்றம் செய்தாலும் அதன் கருத்தை சிதைக்காமல் மாற்றுவது என்பது மிகவும் கடினம். ஆங்கிலத்தின் தனிச்சிறப்பே அதுதான். எதையும் மிகச் சுருக்கமாக சொல்லக்கூடிய திறன் ஆங்கிலத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. நீங்கள் கொடுத்துள்ள மாதிரிகளை விடவும் வேடிக்கையான மொழிமாற்றங்களை தினமும் டிஸ்னி தமிழ் சானலில் ரசிக்கலாம். ஆங்கில தொடர்களை அப்படியே வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து என்று தமிழாக்கம் செய்து சீரியசான சீரியலை நகைச்சுவை சீரியலாக்கி விடுகின்றனர்.

    இரண்டாவதாக நீங்கள் எழுதியுள்ள பகுதி மிகவும் அருமை.

    இவற்றுள் வளைந்துக்கொடுக்கும் பண்பு அல்லது திறன். வெற்றியையும் தோல்வியையும் சமமாக சந்திக்கும் மனத்திடன் ஆகிய பண்புகள் ஒருவரின் வெற்றிக்கும் மிகவும் முக்கியம் என கருதுகிறேன்.

    வெற்றியில் வானம் அளவுக்கு குதிக்காமலும் தோல்வியில் பாதாளம்வரை தாழ்ந்துவிடாமலும் இருக்க வேண்டியது அவசியம் என்பார் எங்களுடைய முன்னாள் வங்கி முதல்வர்.

    அதுபோலவே எந்த சூழலுக்கும் தங்களை வளைத்துக்கொண்டு அனுசரித்து செல்கின்றவர்களால்தான் வெற்றியடைய முடியும் என்றும் அடிக்கடி கூறுவார்.

    இவை இரண்டையும் கடைபிடிப்பது அத்தனை சுலபம் அல்ல என்றாலும் அதை தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடிப்பவர்களே வெற்றியை அடைய முடியும்.

    ReplyDelete