பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, April 3, 2014

சிறுகதை – 9-2 ( w.w. ஜேக்கப்)



குரங்கின் பாதம். (விதியின் வழி மதி செல்லும்) – தொடர்ச்சி.

எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் வீடு அமைதியாக இருந்தது. மகனை மயானத்தில் புதைத்துவிட்டுவந்த இரண்டு வயதானவர்களுடைய இதயமும் துயரத்தில் புதைந்திருந்தது. கண்சிமிட்டும் நேரத்தில் அனைத்தும் முடிந்ததுபோல் இருந்தது.

சில நாட்கள் கழிந்தன. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்தது. இருவரும் பேசிக்கொள்ளாமலே நாட்கள் நகர்ந்தன. பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லாததுபோல் இருந்தது.

ஒருநாள் இரவு படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த வொய்ட், அருகே மனைவி இல்லாதிருந்ததை உணர்ந்தார். ஜன்னலுக்கருகே விம்மல் ஒலி கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்த வொய்ட் “படுத்துத் தூங்கு. சளி பிடித்துக்கொள்ளப் போகிறது.” மெதுவாக கூறினார். “என் மகனுக்கு குளிராக இருக்குமே.” அழுதுகொண்டே கூறினார் திருமதி வொய்ட். நீண்டநேரத்திற்குப் பிறகு திருமதி வொய்ட் தூங்க ஆரம்பித்தார். பாதி தூக்கத்தில் திடீரென்று எழுந்து “அந்த குரங்கின் பாதம்...” என்று கூக்குரலிட்டாள். திடுக்கிட்டு எழுந்த வொய்ட் “என்ன? என்னவாயிற்று?” என்றார். கணவரிடம் “எனக்கு அந்த குரங்கின் பாதம் வேண்டும். நீங்கள் அதனை எறிந்துவிடவில்லையே?” என்றார்.
“அலமாரியில் உள்ளது. ஏன்?” வொய்ட் கேட்டார்.
“ஆமாம். நிச்சயம் முடியும். ஏன் இந்த யோசனை எனக்கு முன்பே தோன்றவில்லை?” என்று பைத்தியம்போல் கூறினார் திருமதி வொய்ட்.
“என்ன தோன்றவில்லை?” புரியாமல் கேட்டார் வொய்ட்.
“குரங்கின் பாதத்திற்கு இன்னும் இரண்டு வரங்கள் இருக்கின்றனவே. ஒன்றைத்தானே உபயோகித்திருக்கிறோம். இன்னும் இரண்டை உபயோகிக்கலாமே.” – திருமதி வொய்ட்.
“ஒன்றால் வந்த விபரீதம் போதவில்லையா?” மறுத்தார் வொய்ட்.
“இல்லை. அதனைக் கொண்டுவாருங்கள். நான் என் மகனைக் கேட்கப்போகிறேன். கொண்டுவாருங்கள்.” – திருமதி வொய்ட்.
“உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. பேசாமல் படு.” – வொய்ட்
“முடியாது. கொண்டுவாருங்கள். எனக்கு என் மகன் வேண்டும்.”
வொய்ட் அமைதியாக மனைவியைப் பார்த்தார். “ஹெர்பர்ட் இறந்து பத்து நாட்களாகிவிட்டன. நான் உன்னிடம் சொல்லவில்லை. விபத்துக்குப்பிறகு என்னால் ஹெர்பர்ட்டை அடையாளம் காணவே முடியவில்லை. அவனுடைய உடையை வைத்துதான் அடையாளம் காணமுடிந்தது. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தான். வேண்டாம் மறந்துவிடு. உன்னால் அவனை அப்படிப் பார்க்கமுடியாது.” என்றார்.
“நான் வளர்த்த மகனைப் பார்த்து நானே பயப்படுவேனா? எனக்கு முதலில் குரங்கின் பாதத்தைக் கொண்டு வாருங்கள்.” – திருமதி வொய்ட்.
மனைவியின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாமல், இருட்டில் தட்டுத்தடுமாறிச் சென்று அந்த குரங்கின் பாதத்தை எடுத்து வந்தார் வொய்ட். அதனைக்கண்ட திருமதி வொய்ட் “இப்பொழுது வரம் கேளுங்கள்.” என்று உறுதியான குரலில் ஆணையிட்டார்.
“அது பைத்தியக்காரத்தனமானது. கொடுமையானது.” வொய்ட் மீண்டும் மறுத்தார்.
“முடியாது. வரத்தைக் கேளுங்கள்.” திருமதி வொய்ட் வற்புறுத்தினார். வொய்ட் வலதுகையில் குரங்கின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு “எங்கள் மகன் மீண்டும் உயிருடன் வேண்டும்.” என்று வாய்விட்டுக் கூறினார்.

குரங்கின் பாதம் உதறிக்கொண்டு அவர் கையிலிருந்து கீழே விழுந்தது. வொய்ட் அதனை அச்சத்துடன் நோக்கினார். அதனை எடுக்க மனம் இல்லாமல் நாற்காலியில் சாய்ந்தார். திருமதி.வொய்ட் கலங்கும் கண்களுடன், ஜன்னல் அருகே சென்று, ஜன்னல் கதவைத் திறந்துவிட்டார்.

எப்பொழுதும் உபயோகிக்கும் நெருப்புத்தொட்டியில், நெருப்பு வைக்காமல், அதன் அருகில் கால்களைக் கட்டிக்கொண்டு வொய்ட் அமர்ந்திருந்தார். எரியும் மெழுகுவர்த்தியின் திரி காற்றில் அசைவதால், அந்த வெளிச்சத்தில் தெரிந்த நிழல்கள் சுவரின் மீதும், கூரையின் மீதும் ஆடிக்கொண்டிருந்தன. குரங்கின் பாதம் வரத்தை நிறைவேற்றாததால் நிம்மதியான வொய்ட் படுக்கைக்கு சென்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு திருமதி.வொய்ட்டும் அவரைப் பின்தொடர்ந்தார்.

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டில் எங்கோ எலி ஓடும் சத்தம் கேட்டது. கடிகாரமுள் நகரும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. மீண்டும் எலியின் சத்தத்தைக் கேட்ட வொய்ட், விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சென்றார். அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் ஓசைக் கேட்டது. அந்த ஓசையைக் கேட்டு வொய்ட் கலவரமடைந்தார். அவர் ஒரு கையில் இருந்த தீப்பெட்டி, கைதவறிக் கீழே விழுந்தது. உண்மையில் கதவு தட்டும் ஓசைதான் கேட்கிறதா அல்லது பிரமையா என்று வொய்ட் திகைத்தார். மீண்டும் கதவு தட்டும் ஓசை தொடர்ந்து, அது அவரை நினைவுலகத்துக்குத் திருப்பியது. பயந்துபோன வொய்ட், வேகமாக தனது படுக்கையறைக்குச் சென்று படுக்கையறையின் கதவைத் தாழிட்டார். அப்பொழுது தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது.

“என்னவாயிற்று?” திருமதி.வொய்ட் படுக்கையிலிருந்து எழுந்தார்.
“ஒன்றுமில்லை. எலி வரவேற்பறையில் ஓடியது.”
தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்தது. “அது, ஹெர்பர்ட்தான். என் ஹெர்பர்ட்தான்.” திருமதி வொய்ட் படுக்கையறைக் கதவைத் திறக்க முற்பட்டார். அதிர்ச்சியடைந்த வொய்ட் மனைவியின் கையைப்பிடித்துத் தடுத்தார். “என்ன செய்யப்போகிறாய்?” என்றார். “என் மகன் வந்துவிட்டான்.” வொய்ட்டின் பிடியிலிருந்து கையை விடுவிக்க முயன்றார். “மயானம் இங்கிருந்து இரண்டு மைல் தூரம் என்பதை மறந்துவிட்டேன். என் கையை விடுங்கள். நான் கதவைத் திறக்கவேண்டும்.” என்றார்.

“இல்லை. முடியாது. அதை உள்ளே விட முடியாது.” வொய்ட் தடுத்தார். “உங்கள் மகனைக் கண்டே பயப்படுகிறீர்களா? என்னை விடுங்கள். ஹெர்பர்ட், இதோ வந்துவிட்டேன்.” வொய்ட்டின் கைகளிலிருந்து செல்ல முயற்சி செய்தார்.

தெருக்கதவைத் தட்டும் ஓசை தொடர்ந்துகொண்டே இருந்தது. கணவரின் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்ட திருமதி.வொய்ட் படுக்கையறைக் கதவைத் திறந்துவிட்டு தெருக்கதவை நோக்கி ஓடினார். தெருக்கதவின் தாழ்ப்பாள் அவருக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. “தாழ்ப்பாள் எனக்கு எட்டவில்லை. சிறிது உதவுங்கள்.” என்று கணவரை உதவிக்கு அழைத்தார்.

ஆனால் வொய்ட், எங்கோ தரையில் கிடந்த குரங்கின் பாதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அதனை உடனே கண்டுபிடித்தாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். ஒரு நாற்காலியின் உதவியுடன், திருமதி.வொய்ட் தாழ்ப்பாளை நகர்த்தும் சத்தம் கேட்டது. அதே நேரத்தில், வொய்ட் குரங்கின் பாதத்தைக் கையில் எடுத்துவிட்டார். அவசர அவசரமாக, தனது மூன்றாவது வரத்தைக் கேட்டார்.

கதவு தட்டும் ஓசை நின்று போயிருந்தது. ஆனால் அந்த ஓசையின் எதிரொலி வீட்டில் இன்னும் இருந்தது. திருமதி.வொய்ட் கதவைத் திறந்ததும் குளிர்க்காற்று வீட்டினுள்ளே வீசியது. வீட்டுக்கு வெளியே ஓடி, வெளியிலிருந்த தட்டியைத் திறந்துகொண்டு தெருவரை சென்றார் திருமதி.வொய்ட். தெருவிளக்கு மினுக்கிக்கொண்டு இருந்தது. தெருவில் எந்தவித நடமாட்டமும் அவருக்குத் தென்படவில்லை. வெறிச்சோடிக்கிடந்த சாலையைப் பார்த்துக்கொண்டு கண்கலங்கி நின்றாள் அந்தத் தாய்.

-மூலம் – w.w. ஜேக்கப் சிறுகதை.


துணுக்கு :

ஜப்பானைச் சேர்ந்த டாக்டர்.சிகயாகி ஹிநோஹரா (Dr. Shigeaki Hinohara), நூறு வயதைக் கடந்தவர். இன்றளவும் மக்களுக்காக மருத்துவப்பணி செய்துகொண்டிருக்கிறார். 1941 முதல் தொடங்கிய அவரது பணி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. அன்னாரது “மகிழ்ச்சியாக வாழவும், நீண்ட ஆயுள் வாழவும்” என்ற நூல் 12 லட்சத்துக்கு மேல் விற்பனையாகியுள்ளது. அதிலிருந்து சில சிந்தனைகள்.

1) மகிழ்ச்சியாக உணர்வது மிகவும் முக்கியமானது.
நன்றாக உண்ணுவது, நன்றாக உறங்குவது போல நன்றாக மகிழ்ச்சியாக உணர்வதும் மிகவும் முக்கியமானதொன்றாகும். குழந்தைகள் விளையாடும்பொழுது அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அத்தகைய உத்வேகத்தை முதியவர்கள் மீண்டும்பெற்று தமக்குள் இருக்கும் ஆற்றலை உணரவேண்டும்.

2) உடல் எடையை சரியாக நிர்வகியுங்கள்.
தேவைக்கதிகமான எடையை உடல் நீண்டநாள் தாங்குவது நல்லதல்ல. குறைவான அளவு, சத்துள்ள உணவை உண்ணுங்கள். வயிற்றுக்கு அதிக வேலை கொடுத்து தொந்தரவு செய்யாதீர்கள். அது உங்களை சோம்பேறியாக்கும்.

3) ஏதாவது காரியம் செய்ய திட்டமிடுங்கள்.
மூளையும் ஆத்மாவும் இணைந்து துடிப்புடன் இயங்க அவற்றுக்கு எப்பொழுதும் நேர்மறையான, மகிழ்ச்சியான, புதிய முயற்சிகள் தேவை. எதிர்பார்ப்புகள் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது.

4) செய்யும் தொழிலை உற்சாகமாக அனுபவியுங்கள்.
அனுபவித்து தொழில் செய்யும்பொழுது ஓய்வு பெறவேண்டிய அவசியம் இருக்காது. விரும்பி தொழில் செய்பவர்களுடைய சக்தி குறைவதே கிடையாது. ஒவ்வொரு நிமிடமும் அந்த சக்தி அதிகரிக்கவே செய்கிறது. இயற்கையாகவே, நீண்ட நாட்கள் வாழ்ந்து சாதிக்கவேண்டுமென்ற முனைப்பு வந்துவிடுகிறது. அறுபது வயது வரை குடும்பத்துக்காக வாழுங்கள். அதன் பிறகு சமூக நலனுக்கு வாழ்வை அர்ப்பணியுங்கள். அப்பொழுது செய்யத் தேவையான சேவைகள் அதிகமாகத் தோன்றுவதால், ஓய்வுபெற வேண்டுமென்ற எண்ணமே வராது.

5) மற்றவர்களுடன் இணைந்து பழகுங்கள். கற்றவைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கற்றவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால் கற்றவைகளை அடுத்தவர்களிடம் கொண்டு சேர்ப்பவர்களைக் காண்பதுதான் கடினமாகிவிடுகிறது. மற்றவர்களுக்கும் தான் கற்றவைகள் நன்மைபயக்கும் என்ற எண்ணம் தோன்றவேண்டும். அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அது உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியை அதிகமாக்கும்.

6) இயற்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
அனைத்து நோய்களுக்கும் மருந்து மாத்திரைகளினால் தீர்வுகள் உண்டு. இருப்பினும் அதற்கும் எல்லைகள் இருக்கின்றன. மனநோய்களுக்கு அது தீர்வாகாது. அழகும், அமைதியும், இயற்கையுமே அதற்கு சரியான தீர்வாகும். ஒரு மருந்தால் குணப்படுத்த முடியாததை, ஒரு குருவியின் கூவுதலோ, ஒரு சிறிய தோட்டமோ குணப்படுத்திவிடும். நாமும் இயற்கையின் ஒரு அங்கமே.

7) நடந்து செல்லுங்கள்.
நமது தசையை உபயோகிக்க, உபயோகிக்க அதன் வலு அதிகமாகிறது. வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் நடந்து செல்லுங்கள். வாகனங்களை உபயோகிப்பதைக் குறையுங்கள்.

8) செல்வம் சேர்ப்பதில் வாழ்வை வீணடிக்காதீர்கள்.
வாழ்வில் இன்பமயமானவைகள் அனைத்தையும் இயற்கை இலவசமாகவே கொடுத்துள்ளது. அவற்றைப் பணத்தால் வாங்கமுடியாது. செல்வத்தை சேர்ப்பதில் வாழ்வை வீணடிக்காதீர்கள். பொருட்செல்வம் முக்கியமானது. ஆனால் போதுமென்ற மனம் அதைவிட முக்கியமானது.

9) எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
வாழ்வு நினைத்ததுபோல இருப்பதில்லை. எப்பொழுதும் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. நன்மைகள், தீமைகள் இரண்டுமே நிகழ்கிறது. அதனால் நிகழ்வுகளை உங்களுக்கு சாதகமாக உபயோகிக்க முயலுங்கள். அதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் மனித இனத்துக்கு உள்ளது. ஒவ்வொரு அனுபவத்திலும் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் ஏதாவது இருக்கும்.

10) ஒரு முன்மாதிரியை உருவகித்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு சவாலாக உங்கள் இலக்கைத் தேர்வு செய்யுங்கள். அது உங்களை உயரமான இடத்துக்கு எடுத்துச் செல்வதைக்கண்டு வியப்படைவீர்கள். உங்களுக்கு ஒரு முன்மாதிரியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய சவால்களை அவர்களுடைய கோணத்தில் சிந்தியுங்கள். அது உங்கள் உள்ளுணர்வைத்தட்டியெழுப்பி, உங்களுக்குத் தெரியாத உங்கள் திறமைகளை வெளிக்கொணரும்.

9 comments:

  1. வொய்ட் தன் மகன் வரவேண்டாம் என்று கேட்டாரா? ஏன்? துணுக்கை ஒரு தனி பதிவாக இட்டிருக்கலாம் போலுள்ளது. அவ்வளவும் அருமையான அறிவுரைகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! ஆமாம். வொய்ட் மகனை வரவேண்டாம் என்றுதான் வரம் கேட்டிருக்கவேண்டும். அறிவுரைகளை மட்டுமே பதிவாக எழுதினால் பதிவை அநேகர்கள் பார்க்கவே விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
    2. அறிவுரைகளை மட்டுமே பதிவாக எழுதினால் பதிவை அநேகர்கள் பார்க்கவே விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.//

      அதுவும் சரிதான். குழந்தைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும்போது தேன் சேர்த்து கொடுப்பதுபோலத்தான் இதுவும். நல்ல உத்தி.

      Delete
  2. கதையின் முடிவு கண்கலங்க வைத்தது. வொயிட் என்ன கேட்டிருப்பார் எனப் புரிந்து கொள்ள முடிந்தது. :( நல்ல கதை. அறிவுரைகள் அனைத்தும் எக்காலத்துக்கும் பொருத்தமானவை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். இந்த அறிவுரைகள் நம் திருக்குறளில் வேறு வடிவங்களில் இருப்பதாக நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  3. வொய்ட் என்ன கேட்டிருப்பார் என யூகிக்க முடிக்கிறது. ஆனால் ஏன் அப்படி கேட்டார் எனத் தெரியவில்லை.

    டாக்டர்.சிகயாகி ஹிநோஹரா அவர்களின் அறிவுரைகள் அனைத்தும் கடைப்பிடிக்கக்கூடியதே. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! நிஜவாழ்க்கையில் இறந்தவர்கள் திரும்பி வந்தால் யாரும் அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் வொய்ட் அப்படிக் கேட்டிருக்கலாம்.
      டாக்டரின் அறிவுரைகள் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியவைகள்தான் என்று நானும் நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. அந்த வரத்தில் தான் ஏதோ சூட்சுமம் உள்ளதா...?

    அறிவுரைகள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete