பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, April 24, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 1


ஒரு செயல் பழக்கமாக எப்படி மாறுகிறது?

1993-ஆம் ஆண்டு இறுதியில், சாண்டியாகோவில் உள்ள ஆய்வகத்தை நோக்கி தன்னுடைய முன்பதிவின்படி மருத்துவர்களை சந்திக்க அவர் நடந்துகொண்டிருந்தார். பழக்கங்களை பற்றிய, இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளால் எழுதப்பட்ட கொள்கைகள், தம்மால் மாற்றியமைக்கப்பட போகிறது என்பது அவருக்குத் தெரியாது. அந்த முதியவர் நன்றாக உடையணிந்து, ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்துக்குமேல் இருந்தார். அவருடைய அடர்த்தியான நரைத்த தலைமுடிகள், பள்ளிப்படிப்பு பொன்விழாவுக்காகக் கூடும் அனைவரும் பொறாமைபடத்தக்க வகையில் இருந்தது. மூட்டு வலியினால் அவதிப்பட்டதால், மனைவியின் கையைப் பிடித்தபடி  தாங்கித்தாங்கி பொறுமையாக ஆய்வகத்தின் நடைபாதையில் வந்துகொண்டிருந்தார். அவர் நடந்ததைப் பார்த்தால், அடுத்த காலடி, தன்னை எங்கு கொண்டு செல்லுமோ என்று தயங்கியபடியே வருவதைப்போல் தோன்றியது.

கிட்டத்தட்ட ஒருவருடத்துக்குமுன் யூஜின் பாலி (Eugine Paulie), மருத்துவகோப்பின்படி  E.P  என்றழைக்கப்படுபவர், தனது வீட்டில் இரவு உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரது மனைவி, அவரிடம் மைக்கேல் வரப்போவதாகக் கூறினார்.
“யார் மைக்கேல்?” யூஜின் கேட்டார்.
“உங்களுடைய மகன்.” மனைவி பெவர்லி தொடர்ந்தார். “நாம் வளர்த்த குழந்தை.”
முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் “யார் அது?” யூஜின் மீண்டும் கேள்வியை எழுப்பினார்.

மறுநாள் யூஜினுக்கு வயிற்றுவலியும், வாந்தியும் ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் நீர்ச்சத்துக்களை இழந்த நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் யூஜின் சேர்க்கப்பட்டார். உடல் வெப்பம் 40 டிகிரி செல்ஷியஸைத் தாண்டியது. மருத்துவமனையிலிருந்த நர்ஸ் அவருடைய கையில், ஸலைனுக்கு குழாயைப் பொருத்த முயன்றபோது, யூஜின் கலவரப்பட்டு குழப்பத்தில் அவற்றைத் தூக்கிவீசிவிட்டார். மயக்கமருந்து கொடுத்தே அவரை கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. அதன்பிறகு ஒரு நீண்ட ஊசியின் உதவியினால் தண்டுவடத்தின்வழியாக மூளைக்குச் செல்லும் “செரிபுரோ ஸ்பைனல்” எனப்படும் திரவத்தில் சிலசொட்டுகளை மருத்துவர்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.

அந்த திரவம், தண்டுவடத்தையும் மூளையையும் தொற்றுக் கிருமிகளிலிருந்தும்
காயங்களிலிருந்தும் காப்பதற்காக இயற்கையில் அமைந்திருக்கிறது. திரவத்தை ஆராய்ந்த மருத்துவர்கள் பிரச்சனை இருப்பதை, உடனடியாகக் கண்டுபிடித்துவிட்டனர். உடல்நலம் நன்றாக இருப்பவர்களுக்கு அந்த திரவம் தெளிவாகவும், சீராகவும், சுலபமாக ஓடக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கும். ஆனால் யூஜினிடமிருந்து பெறப்பட்ட திரவம் தெளிவில்லாமல் கலங்கலான கலவையாக சிரமப்பட்டு நகர்ந்தது. நுண்நோக்கியில் நுண்துகள்களின் கலவைபோல அவை காட்சியளித்தன. ஆய்வக முடிவுகள் யூஜின் ஒப்பீட்டளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத, மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒருவகை வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்தது. அந்த வைரஸ் பொதுவாக தோலில் கொப்பளங்களை ஏற்படுத்தும். உடலில் வெப்பநிலையையும் அதிகரிக்கும். அரிதாக சிலசமயங்களில் மூளைக்குள் ஊடுருவி, மூளையின் நுட்பமான இடங்களை அழித்துவிடும். மூளையில் நமது சிந்தனைகள், கனவுகள் உருவாகும் இடம், சிலரின் கருத்துப்படி நமது ஆன்மா உறையும் இடத்தைப் பாதித்துவிடும்.

யூஜினுடைய மருத்துவர்கள், இதுவரை பாதிக்கப்பட்டதை சரிசெய்ய முடியாதென்றும், அந்த வைரஸ் இனிமேலும் பரவாமல் தடுக்க முயல்வதாகவும் யூஜினுடைய மனைவி பெவர்லியிடம் கூறினர். அதிகமான அளவுக்கு ஆன்டிவைரஸ் மருந்துகள் யூஜினுக்குச் செலுத்தப்பட்டது. யூஜின் பத்து நாட்கள் கோமா நிலையிலிருந்து மரணிக்கும் தருவாய்வரை சென்றுவிட்டார். சிறிதுசிறிதாக ஆண்டிவைரஸ் வேலை செய்ய ஆரம்பித்து வைரஸ் மறைய ஆரம்பித்தது. இறுதியில் கோமாவிலிருந்து யூஜின் மீண்டபோது அவரால் உணவு விழுங்கக்கூட மறந்துவிட்ட நிலை ஏற்பட்டது. அவரால் வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியங்களை அமைக்க முடியவில்லை. சில சமயங்களில் மூச்சுவிடக்கூட மறந்துவிட்டதுபோல் மூச்சுவிடத் திணறுவார். எப்படியோ உயிருடன் மீண்டுவிட்டார்.

ஒருவழியாக, ஆய்வுகளுக்குத் தேவையான அளவு யூஜின் உடல் நலம் பெற்றுவிட்டார். யூஜின் உதவியுடன் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூளை, ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டாலும் யூஜினுடைய நரம்புமண்டலமும், உடலும் அதிக அளவுக்கு பாதிக்கப்படாமல் இருந்தது மருத்துவர்களை வியப்படையச் செய்தது. உடலின் பாகங்களை அவரால் விரும்பியவாறு அசைக்க முடிந்தது. வெளிச்சம், சத்தம் போன்றவைகளை அவரால் உணரமுடிந்தது. அவரது மூளையை ஸ்கேன் செய்தபோது மூளையின் மையத்தில் அச்சத்தக்க அளவு நிழல்களாக தென்பட்டது. வைரஸ் அவரது மண்டையோடு மற்றும் தண்டுவடம் சந்திக்கும் இடத்தில் இருந்த திசுக்களின் கூட்டத்தை முற்றிலும் அழித்துவிட்டது. ஓரு மருத்துவர் யூஜினுடைய மனைவியிடம் “நீங்கள் பழகிய, பழைய கணவராக இவர் இருக்கப்போவதில்லை. உங்கள் கணவர் மறைந்துவிட்டார் என்று எண்ணிப் பழகுவதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

சிலநாட்களில் யூஜின் மருத்துவமனையில் வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்றதும் ஒருவாரத்தில் பிரச்சனையில்லாமல் உணவு விழுங்கும் திறனை அவர் மீண்டும் பெற்றார். இரண்டு மூன்று வாரங்களில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். அவரால் உணவுகளிலும் உப்பு, காரம் போன்ற சுவைகளைப் பகுத்தறிய முடிந்தது. தொலைகாட்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தார். தொலைக்காட்சி சீரியல்கள் ஒரே மாதிரியாக இருந்து போரடிப்பதாக சொல்லவும் ஆரம்பித்தார். வந்த வாரங்களில் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவதற்குள், மருத்துவமனையின் வராண்டாவில் தானாகவே நடக்கவும் முற்பட்டார். கேட்காமலேயே, அங்கு வேலை செய்யும் நர்ஸ்களுக்கு வார இறுதியில், என்னென்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறும் அளவுக்கு அவரிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

“நான் இதுவரை, என் அனுபவத்தில் வைரஸ் பாதிப்புக்குப் பின், இந்த அளவு ஒருவர் முன்னேற்றம் அடைந்ததைப் பார்த்ததில்லை. உங்களுடைய நம்பிக்கை நான் அதிகமாக்க விரும்பவில்லை. இருந்தாலும் யூஜினுடைய மீட்சி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.” ஒரு டாக்டர் யூஜினுடைய மனைவி பெவர்லியிடம் கூறினார்.

பெவர்லி பயந்துகொண்டே இருந்தார். மறுவாழ்வு மருத்துவமனையில், நோய் தன்னுடைய கணவரை முற்றிலுமாக வேறொரு மனிதரைப்போல் மாற்றியிருப்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இன்று என்ன கிழமை என்றுகூட யூஜினினால் நினைவில் நிறுத்த முடியவில்லை. டாக்டர்கள், நர்ஸ்களின் பெயர்களை எத்தனை முறை கேட்டாலும் யூஜினினால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்களை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. “ஏன் அவர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள்?” என்று ஒருநாள் யூஜின் பெவர்லியிடம் கேட்டார். அந்த அளவுக்கு அவருடைய நிலைமை இருந்தது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் அவருடைய பிரச்சனை இன்னும் பூதாகரமாகியது. யூஜின் அவருடைய நண்பர்கள் யாவரையும் மறந்துவிட்டார். உரையாடல்களை உணர்ந்துகொள்ளவோ, பங்கேற்கவோ மிகவும் சிரமப்பட்டார். சில நாட்களில், காலையில் எழுந்தவுடன், சமையலறைக்குச் சென்று தனக்கு ரொட்டி, முட்டை மற்றும் பன்றி இறைச்சி இணைத்து சான்ட்விட்ச் செய்துகொள்வார். சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுக்கைக்குச் சென்று ரேடியோவைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சமையலறைக்குச் சென்று சான்ட்விட்ச் செய்து சாப்பிட்டுவிட்டு பழையபடியே படுக்கைக்குச் சென்று ரேடியோ கேட்பார். இந்த சுழற்சியை, மீண்டும் நாற்பது அல்லது ஐம்பது நிமிடங்களுக்குப் பிறகு தொடர ஆரம்பிப்பார்.

அதிர்ச்சியடைந்த பெவர்லி, மறதி சம்பந்தமான கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவநிபுணர்களின் உதவியை நாடினார். யூஜினுடைய கையைப் பிடித்து பெவர்லி, பல்கலைகழகத்தின் மைதானம் வழியே, மெதுவாக நடந்து கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சிறிய ஆய்வக அறையை அடைந்தார். அங்கு கணிணியில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு இளம்பெண்ணீடம் யூஜின் உரையாட ஆரம்பித்தார். “அதிக வருடங்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருந்ததால் சொல்கிறேன். இந்தத் துறையின் வளர்ச்சி என்னை அசரவைக்கிறது. நான் இளவயதில் இருந்தபொழுது இதெல்லாம் ஒரு ஆறடி உயரத்துக்கு இருக்கும். இதனை வைப்பதற்கு ஒரு முழு அறையே தேவைப்படும்.” அந்தப்பெண் உபயோகித்துக்கொண்டிருந்த ஒரு கணினியைக் காண்பித்துக் கூறிக்கொண்டிருந்தார். “நம்பவே முடியவில்லை”. தொடர்ந்தார்.

ஒரு ஆராய்ச்சியாளர் அறையில் நுழைந்தார். தன்னை யூஜினிடம் அறிமுகப்படுத்திக்கொண்டபின் யூஜினுக்கு என்ன வயதாகிறது என்று வினவினார். “எனக்குக் கிட்டத்தட்ட 59 அல்லது 60 வயதிருக்கலாம்.” உண்மையில் யூஜினுக்கு 70 வயதாகிறது. ஆராய்ச்சியாளர் யூஜினுடைய பதில்களைக் கணினியில் பதிவு செய்ய ஆரம்பித்தார். யூஜின் மீண்டும் சொன்னவைகளையே திரும்பவும் சொல்ல ஆரம்பித்தார். “ நான் இளவயதில் இருந்தபொழுது . . . . . தேவைப்படும்.”

அந்த ஆராய்ச்சியாளருக்கு 52 வயதாகிறது. பெயர் டாக்டர். லாரி ஸ்கொயர். கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக ஞாபகமறதி சம்பந்தமாக ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் ஒரு பேராசிரியர். அவர் முக்கியமாக மூளை எப்படி நிகழ்ச்சிகளை நினைவில் நிறுத்தி வைக்கிறது என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். யூஜினுடன் அவர் இப்பொழுது செய்யும் ஆராய்ச்சி அவருக்கு ஒரு புதிய விளக்கத்தை அளிக்கப்போகிறது. அவருக்கு மட்டுமல்ல. அவரைப்போல ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்களுக்கும் பழக்கங்கள் சம்பந்தமான புரிந்துணர்வை மாற்றியமைக்கப்போகிறது. தன்னுடைய வயதைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத ஒருவர், எப்படி சிக்கலான பழக்கங்களை தொடர்ந்து செய்யமுடிகிறது என்று டாக்டர்.ஸ்கொயருடைய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தப்போகின்றன. நான் அனைவருமே யூஜினைப்போல, நம்முடைய பழக்கங்களுக்கு, மூளைநரம்புகளின் செயல்முறைகளையே நம்பியிருக்கிறோம். ஸ்கொயர் மற்றும் ஏனைய நிபுணர்களின் ஆராய்ச்சிகள், நாம் தினசரி செய்யும் வழக்கமான செயல்கள், நன்கு சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகளாலானவைகள் போன்று தோன்றினாலும், உண்மையில் அந்த முடிவுகள் நம்முடைய மூளை நரம்புகளின் செயல்பாட்டால் தன்னிச்சையாக இயங்கும், நமது எண்ணங்களின் தாக்கங்களே ஆகும். அநேகர் இதனை அடையாளம் கண்டுகொள்வதும் இல்லை. உணர்வதும் கிடையாது.

டாக்டர் ஸ்கொயர், யூஜினை ஆராய்ச்சியின் காரணமாக சந்திப்பதற்கு முன்பே, யூஜினுடைய மூளையின் ஸ்கேன்களை வாரக்கணக்கில் நன்கு புலனாய்வு செய்திருக்கிறார். மூளையில், தலையின் மையப்பகுதியில் ஐந்து கன செ.மீ அளவுக்குள் மட்டுமே பழுதடைந்துள்ளதாக அந்த ஸ்கேன் தென்பட்டது. பொதுவாக மனிதனுடைய பழைய நினைவுகளுக்கும், சில உணர்வுகளுக்கும் காரணமான, உள்நோக்கிய நெற்றிப்பொட்டில் மடிப்புகள் பகுதியை அந்த வைரஸ் முற்றிலுமாக அழித்திருந்ததும் ஸ்கேனில் தெரிந்தது. பொதுவாக ஒரு அறுவைசிகிச்சை நிபுணரின் துல்லியத்துடன், வேறுபாடின்றி அனைத்து திசுக்களையும் அந்த வைரஸ் அழித்துவிடும். அதனால் ஸ்கொயருக்கு யூஜினுடைய மூளையில் கண்ட பாதிப்பு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. இருப்பினும் முன்பு ஒருமுறை பார்த்த ஒரு நோயாளியின் மூளையில், எப்பொழுதும் காணும் வைரஸ்ஸால் பாதிப்படைந்த மூளையைப்போல், யூஜினுடைய மூளையும் ஒன்றுபோல காணப்பட்டதே ஸ்கொயருக்கு வியப்பளித்தது.

- தொடரும்  


கண்டு மகிழ ஒரு காணொளி:

https://www.youtube.com/watch?v=1sXENI8tpJE

மேலே கண்ட காணொளியைப் போன்று ஒரு பேசும் கிளியின் கதையை இந்தத் திரைப்படத்தில் காணுங்கள். குழந்தைகள் இதனை விரும்பிப் பார்ப்பார்கள். அருமையான திரைப்படம்.

http://putlocker.bz/watch-paulie-online-free-putlocker.html

17 comments:

 1. வணக்கம்
  விரிவான அலசல்...... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.ரூபன் அவர்களே.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. யூஜின் பாலி (Eugine Paulie) யின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி டாக்டர். லாரி ஸ்கொயர் கண்டறிந்த உண்மையை அறிய காத்திருக்கிறேன். தொடர் சுவாரஸ்யமாகப் போகிறது. வாழ்த்துக்கள்!

  நீங்கள் தந்த இணைப்பின் மூலம் காணொளியைக் கண்டேன். நம்பவே முடியவில்லை. உண்மையில் அது ஒரு வியத்தகு கிளி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.

   நேரமிருந்தால், திரைப்படத்தையும் காணுங்கள். குழந்தைகள் படமாக இருந்தாலும், பெரியவர்களும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும். நம்மூரில் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட கதைகள் இருந்தாலும், திரைப்படங்கள் இல்லை.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. யூஜினுடைய ஒவ்வொரு நிலையும் வியப்படைய வைக்கிறது... மேலும் அறிய ஆவலுடன் தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே !.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 5. படிக்கும்போதே எனக்கும் இதுமாதிரி வந்தால் என்ன ஆகுமோ என்ற ஒருவித பயம் வந்துவிட்டது.
  த.ம - 2

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா !

   அப்படி எதுவும் நமக்கு நேர்ந்தால், நமக்கு எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. ஆனால், நம் உடனிருப்பவர்கள்தான் அவதிப்பட நேரிடும்.

   மருத்துவம் படிப்பவர்களும், படிக்கும் ஒவ்வொரு நோயும் தனக்கும் உள்ளதாக நினைப்பார்களாம். அதற்கு hypochondriasis என்று பெயர்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. யூஜினின் நிலைமை சற்று வித்தியாசமானதாகத்தான் தோன்றுகிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட வியாதிகளைக் கொண்டவர்கள் உள்ளனரா என்பது தெரியவில்லை. Short term memory loss என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இவரைப் பொருத்தவரையில் memoryஏ இல்லை போலிருக்கிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! யூஜின் ஒரு ஸ்பெஷல் கேஸ்தான். தொடர்ந்து படியுங்கள். இதே போன்று மற்றுமொரு கேஸும் வரும்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 7. இது மாதிரி நோயெல்லாம் இருக்கிறதே இப்போத் தான் அறிந்தேன். அடுத்து என்னவென்று அறியக் காத்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். எப்பொழுதும் போல ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பதிவிடுவதாக உள்ளேன். தொடர்வதற்கு நன்றி.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 8. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 9. தங்களின் இந்த டொடரை இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்துள்ளேன். தெரியாத நிறைய விஷயங்களை எழுதுகிறீர்கள். தோரந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 10. நான் இன்றுதான் முதன்முதலாக உங்கள்
  வலைப்பதிவுக்கு வந்தேன் .
  முன்னுரையில் இருந்து படிக்க ஆரம்பித்துள்ளேன்.
  மிகவும் சுவாரசியமாக உள்ளது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.ஜெயசந்திரன் அவர்களே!
   முடிந்தவரை வாழ்த்துக்களை காத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete