காலையில் கண்விழித்த
உடன் என்ன செய்வோம்? காலைக்கடன்களை முடிப்போமா அல்லது மெயில் பார்ப்போமா, காபி
குடித்துவிட்டு பல் துலக்குவோமா அல்லது பல் துலக்கிவிட்டு காபி குடிப்போமா? ஷூ
லேஸ் கட்டும்பொழுது இடதுகால் முதலிலா அல்லது வலது கால் முதலிலா? அலுவலகத்தில்
என்னென்ன செய்வோம்? வேலை முடிந்து வீடு திரும்பியதும் என்னென்ன செய்வோம்?
“நமது வாழ்வு
முழுமையும் செய்யும் எந்த ஒரு செயலும் ஒரு முழுமையான வடிவு இருக்கும்வரை சிறுசிறு
துண்டுகளாக, ஆனால் அதிகமாக பழக்கங்களால் ஆக்கப் பட்டிருக்கிறது.” என்று 1892-ல்
வில்லியம் ஜேம்ஸ் கூறினார். தினசரி நாம் செய்யும் எந்த ஒரு செயலும், நன்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகளாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அவை
பழக்கங்களால் உருவான செயல்கள். நமது சிறுசிறு செய்கைகளுக்கும் தனியான அர்த்தம்
இல்லாததுபோல் தோன்றலாம். ஆனால் காலப்போக்கில் நாம் எந்த உணவு உண்கிறோம்,
குழந்தைகளுடன் எப்படி பழகுகிறோம், எப்படி செலவழிக்கிறோம், உடல்நலனுக்கு எந்த
அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம், நமது சிந்தனை ஓட்டத்தையும், வேலை செய்யும்
விதத்தையும் எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே ஒருவரது உடல்நிலை,
ஆக்கத்திறன் வருமான நிலைப்பாடு, மகிழ்ச்சி அமைகிறது. 2006-ல் டுயூக்
பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையின்படி, 40 சதவிகிதத்திற்கு
மேலாக மக்களுடைய தினசரி இயக்கங்களும், செயல்களும் பழக்கவழக்கங்களினால்தான்
வருகின்றன; முடிவெடுப்பதால் வருவதில்லை.
வில்லியம் ஜேம்ஸ்
முதல், அரிஸ்டாட்டில் இருந்து ஓபரா வரை மனிதனுடைய பழக்கவழக்கங்கள் ஏன் தொடர்கின்றன
என்பதனை அறிய தங்களுடைய வாழ்நாளையே கழித்திருக்கின்றனர். ஆனால் கடந்த இருபது
வருடங்களாகத்தான் விஞ்ஞானிகளும், விளம்பரத்துறையினரும் பழக்கவழக்கங்கள் எப்படி
ஏற்படுகின்றன, முக்கியமாக எப்படி மாறுகின்றன என்பதை அறிந்துகொள்ள
ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நூல் மூன்று
பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில்,
பழக்கங்கள் எப்படி உருவாகின்றன என்பதைப் பற்றி ஆராய்கிறது. நமது மூளைக்குச்
செல்லும் நரம்புகளில் பழக்கங்கள் எப்படி உருவாகிறது, பழைய பழக்கங்களை விட்டொழித்து
புதிய பழக்கங்களை எப்படி உருவாக்குகிறது என்றும், அதற்கான வழிமுறைகளையும்
விளக்குகிறது. உதாரணமாக பிரஷ் உதவியுடன் பல்துலக்குவது என்னும் காரியத்தை ஒரு
விளம்பரதாரர் எப்படி ஒரு நாடு முழுவதற்கும் எடுத்துச் சென்று செயல்பட வைத்தார்.
பிராக்டர் அண்டு கேம்பல் கம்பெனி “Febreze” என்ற வாசனை ஸ்பேரேயினை,
உபயோகிப்பாளரின் பழக்கத்தில் மாற்றங்களை உண்டு பண்ணி ஒரு பில்லியன் டாலர்
வியாபாரமாக மாற்றினர் என்றும் காணலாம் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் என்ற தொண்டு நிறுவனம்
மதுவுக்கு அடிமையானவர்களின் பழக்கத்தை எப்படி மாற்ற உதவுகிறது என்றும், டோனி என்ற
பயிற்றுவிப்பாளர் கடைசி நிலையில் இருந்த அமெரிக்க ஃபுட்பால் அணியினை,
பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, எப்படி தொடர்ந்து வெற்றிகளை
பெறச்செய்தார் என்றும் காணலாம்.
நூலின் இரண்டாம் பகுதி
வெற்றி பெறும் நிறுவனங்களில் பழக்கங்களை ஆராய்கிறது. பால் ஆஃப் நெயில் – என்ற
நிறுவன பிரதிநிதி, டிரஸரி செக்கரட்டரி ஆவதற்கு முன், படு வீழ்ச்சியில் இருந்த
அலுமினியக் கம்பெனி ஒன்றை, எப்படி டௌ ஜோன்ஸ்-ல் மிகச்சிறந்த பங்காக மாற்றினார்
என்றும் காணலாம். இந்த பகுதி, அந்த கம்பெனியின் பழக்கத்தை மாற்றி, எப்படி அவர்
அந்த வெற்றியை அடைந்தார் என்று ஆராய்கிறது. ஸ்டார் பக்ஸ் நிறுவனம், பள்ளி
இறுதியைக்கூட முடிக்காத ஒருவரிடம், பழக்க மாற்றங்களை ஏற்படுத்தி எப்படி, அவரை
மிகச்சிறந்த மேலாளர் நிலைக்கு உயர்த்தியது என்று தெரியப்படுத்துகிறது. சரியாக
நிர்ணயிக்கப்பட்ட பழக்க வழிமுறைகள் இல்லாத காரணத்தால் ஒரு மருத்துவமனையில்,
மிகவும் திறமை வாய்ந்த மருத்துவர்களும்கூட, சொல்ல முடியாத அளவுக்கு எப்படி தவறுகளை
இழைக்க நேரிடுகிறது என்று விளக்குகிறது.
மூன்றாவது பகுதி
சமூகத்தின் பழக்க முறைகளை ஆராய்கிறது. மார்ட்டீன் லூதர் கிங், மக்களோடு
இணைந்துவிட்ட சமூக பழக்கங்களை மாற்றியதன் மூலம் எப்படி பொதுஉரிமை இயக்கத்தில்
வென்றார் என்று விளக்குகிறது. அதே முறைகளை உபயோகித்து, ரிக் வாரன் என்ற இளம்
பாதிரியார் நாட்டின் மிகப்பெரிய சர்ச் ஒன்றினை கலிஃபோர்னியாவில் எப்படி
உருவாக்கினார் என்றும் விளக்கமளிக்கிறது. இறுதியாக தன்னுடைய பழக்கங்களினால்தான்
கொலை செய்ய நேர்ந்தது என்று நம்பும்படியாக விளக்கமளித்த பிரிட்டனைச் சேர்ந்த
கொலைக் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுமா போன்ற, மனதை உறுத்தும் தார்மீகக்
கேள்விகளையும் ஆராய்கிறது.
பழக்கங்கள் எப்படி
உருவாகின்றன என்பதனைப் புரிந்து கொண்டால், பழக்கங்களை நாம் விரும்பிய வண்ணம்
மாற்றி அமைக்க முடியும் என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு
அத்தியாயமும் அமைக்கப் பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி ஆய்வுகள்,
முன்னூறுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், நிறுவன நிர்வாகிகளின் பேட்டிகள், மற்றும்
ஆராய்ச்சி நிறுவனங்களின் முடிவுகளைக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு
வரையறைக்குள் திட்டவட்டமாக பழக்கம் என்று நிர்ணயிக்கப்பட்ட பழக்கங்களை இந்நூல்
முன்னிருத்தி ஆராய்ச்சி செய்கிறது. ஒரு சமயத்தில் நாம் விரும்பி மேற்கொண்ட
முடிவுகள், பழக்கங்களாக மாறிவிடுகின்றன. அத்தகைய பழக்கங்களை இந்நூல் ஆராய்கிறது.
அதாவது எவ்வளவு சாப்பிட வேண்டும், வேலைக்குச் சென்றவுடன் முதல் காரியமாக என்ன
செய்ய வேண்டும், உடற்பயிற்சிக்கு முன் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்று ஆரம்ப
காலத்தில் நாம்தான் முடிவெடுக்கிறோம். ஆனால் காலஓட்டத்தில் நம்மை அறியாமலேயே அந்த
முடிவுகள் நம் பழக்கங்களாகிவிடுகின்றன. இயற்கையாகவே நமது மூளையின் நரம்பு
மண்டலத்தில் அவை பதியப்பட்டு விடுகின்றன. எப்படி அவை உருவாகி பதியப்படுகின்றன
என்று புரிந்து கொண்டால், நாம் விரும்பிய வண்ணம் புதிய பழக்கங்களை பழைய
பழக்கங்களின் கட்டமைப்பைவிட பலமாக பதிய வைத்து, வேண்டப்படாத பழக்கங்களை மாற்ற
முடியும்.
எட்டு வருடங்களுக்கு
முன்பு ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராக ஈராக்கில் பாக்தாத் நகருக்கு சென்றிருந்த
பொழுதுதான் எனக்கு பழக்கங்களைப் பற்றிய அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்க
இராணுவத்துறையில்தான் உலக வரலாற்றில் பழக்கங்களுக்கான மிகப் பெரிய ஆராய்ச்சிகள்
நடைபெறுவதை பாக்தாத்தில் இருந்தபொழுது நேரிடையக உணர்ந்தேன். இராணுவத்தில் எப்படி
சிந்திக்க வேண்டும், எப்படி சுடவேண்டும், அவசர நேரங்களில் எப்படி அடுத்தவர்களுடன்
உரையாடுவது போன்ற அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. யுத்த களத்தில்
இடப்படும் ஒவ்வொரு கட்டளைக்கும், இராணுவத்தினர் ஒரு தானியங்கி இயந்திரம்போல செயல்படுகிறார்கள்.
திட்டமிடும் முறை, தளங்களைக் கட்டுதல், தாக்குதல்களை சமாளிப்பது போன்ற அனைத்து
விஷயங்களுக்கும், இராணுவமானது பலமுறை ஒத்திகை செய்யப்பட்ட நடவடிக்கைகளேயே
நம்பியிருக்கிறது. யுத்தத்தின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் பெருகிப்பரவியதால்
இராணுவத்தினர்களிடம் மரணம் அதிகமாக சம்பவித்தது. இராணுவத்தின் மேலதிகாரிகள்,
எத்தகைய பழக்கங்களை இராணுவத்தினருக்கும், ஈராக்கியர்களுக்கும் உருவாக்குவதன் மூலம்
இராணுவ வீரர்களின் மரணத்தை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் என்றும் ஈராக்கில்
நீண்டகால அமைதியை தருவிப்பதற்க்கும் ஆராய முற்பட்டனர்.
நான் ஈராக்கில் இரண்டு
மாதங்களாக பணியாற்றிக்கொண்டிருந்தபோது, குஃபா என்ற இடத்தில் (பாக்தாத்தில் இருந்து
குஃபா கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது) ஒரு இராணுவ அதிகாரி, இராணுவ
வீரர்களிடம் புதிய பழக்கங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக
கேள்விப்பட்டேன். அது முன்னேற்பாடுகள் ஏதுமின்றி தயார் செய்யப்பட்ட ஒரு முயற்சி
என்றும் அறிந்தேன். சமீபகாலங்களில் நிகழ்ந்த கலவரங்களின் வீடியோக்களை ஆராய்ந்து,
அதிலிருந்து கிடைக்கப்பட்ட தகவல்களின் மூலம், அந்த கலவரங்களில் ஒரு திட்டவட்டமான
அணுகுமுறை, பழக்கங்கள் இருப்பதை அந்த அதிகாரி கண்டறிந்தார். திறந்த வெளிகளில்
மக்கள் அதிகமாக கூடுகின்றர். பலமணி நேரங்களில் அந்த மக்கள் கூட்டம் மிகவும் அதிக
அளவை எட்டுகிறது. பார்வையாளர்களும், உணவு விற்பனை செய்பவர்களும் அந்த கூட்டத்தில்
சேர்ந்து கொள்கின்றனர். கூட்டத்தினை நோக்கி யாராவது ஒருவர் ஒரு கல்லையோ, ஒரு
பாட்டிலையோ தூக்கி எறிவதில் கலவரம் தொடங்குகிறது. சில நிமிடங்களில் கலவரம்
உச்சத்தை அடைகிறது.
அந்த இராணுவ அதிகாரி,
குஃபா என்ற தொகுதி ஆளுனரிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோளை முன்வைத்தார். நடமாடும்
உணவகங்களை கூட்டங்கள் கூடும் பகுதியில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்குமாறு
வேண்டினார். ஆளுனரும் அதற்கு ஒத்துக்கொண்டார். சில வாரங்களுக்குப் பிறகு குஃபாவில்
ஒரு பள்ளிவாசலுக்கு முன் ஒரு சிறிய கூட்டம் கூடியது. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தின்
அளவு கணிசமாக அதிகரித்தது. ஈராக்கிய போலீசார் பிரச்சனை வருவதற்கான சாத்தியத்தை
உணர்ந்து அமெரிக்க இராணுவ உதவியை நாடினர். கூட்டத்தினர் கோபத்துடன் கோஷமிடுவதும்
அதிகரித்தது. பொழுதுசாயும் நேரத்தில், கூட்டத்தினர் பசியால் அலைமோதி உணவகங்களைத்
தேடினர். ஆனால் நடமாடும் உணவகங்கள் கண்ணில் தென்படவில்லை. கூட்டம் கலைய
ஆரம்பித்துவிட்டது. கோஷமிட்டவர்களின் வெறியும் தணிய ஆரம்பித்துவிட்டது. இரவு
எட்டுமணிவாக்கில் முழுக்கூட்டமும் கலைந்துவிட்டது.
நான் குஃபாவிற்குச்
சென்றபொழுது அந்த இராணுவ அதிகாரியைச் சந்தித்தேன். பொதுவாக கூட்டத்தின் பழக்கங்களை
யாரும் பொருட்படுத்துவதில்லை, என்று அவர் கூறினார். ஆனால் அவர் தன்னுடைய பணிநாள்
முழுவதையும், பழக்கங்களை உருவாக்கும் மனோதத்துவத்தில் செலவிட்டதாகக் கூறினார்.
அந்த அதிகாரி
இராணுவத்தில் துவக்கத்தில் வேலை பார்த்தபோது தங்களுடைய ஆயுதத்தைத் தயார்ப்படுத்தும்
பழக்கங்கள், போர்முனையில் தூங்கும் பழக்கங்கள், போரின்போது குழப்பத்திலும் கவனம்
சிதறாமல் இருக்கும் பழக்கங்கள், வேலை பளு அதிகமான நேரத்திலும், முற்றிலும்
களைப்படைந்த நேரத்திலும் முடிவெடுக்கும் பழக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்ததாகக்
கூறினார். செல்வம் சேமிக்கும் பழக்கங்கள், உடற்பயிற்சி பழக்கங்கள் மற்றும்
உடனிருப்பவர்களிடம் உரையாடும் பழக்கங்கள் போன்ற பழக்கங்களை உருவாக்கும் முறைகளைப்
பற்றிய பயிற்சிகளுக்கு சென்றதாகவும் கூறினார். அவர் பணியில் உயர்பதவியை
அடைந்தபோது, அவருக்கு கீழே வேலை செய்யும் அதிகாரிகள் அதிக விஷயங்களுக்கு தன்னிடமே
அனுமதி கேட்டதால், சுயமாகவே சரியான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான பழக்கங்களை
உருவாக்கியதாகவும் கூறினார். மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்ய முடியாதவர்களும்கூட
ஒரு குழுவாக வேலை செய்வதற்கான உத்திகளை சரியான நடைமுறைகளை அறிமுகப்படுத்தி
செயல்படுத்தியுள்ளார் என்றும் தெரிந்து கொண்டேன். இப்பொழுது ஈராக்கில்
கூட்டங்களையும், வேறுபட்ட சமூக பழக்கவழக்கங்கள் கொண்டவர்களையும் அதே கொள்கையின்
கீழ் பழக்கங்களை மாற்ற முடிவதை செயல்படுத்தியுள்ளார். சமூகம் என்பது
நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கொண்ட ஒரு அமைப்பு. அந்த அமைப்பின் பழக்கங்களின்
தாக்கங்களைப் பொறுத்து அவர்களிடையே அமைதியையோ கலவரத்தையோ ஏற்படுத்த முடியும்.
நடமாடும் உணவகங்களை நிறுத்தியதைத் தவிர, பலதரப்பட்ட பழக்க நடைமுறைகளை ஏற்படுத்தி
குஃபா மக்களுடைய செயல்பாட்டில் அவர் மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவர் பதவி
பொறுப்பை எடுத்துக்கொண்ட பிறகு குஃபாவில் கலவரங்களே ஏற்படவில்லை.
தான் இராணுவத்தில்
கற்றுக்கொண்ட விஷயங்களில், பழக்கங்களை புரிந்துக்கொள்ளும் திறமை மிகவும்
முக்கியமானதொன்றாகும் என்று அந்த அதிகாரி கூறினார். “நான் கற்றுக்கொண்ட அந்த
விஷயங்கள் உலகைக் கவனிக்கும் குணத்தையே மாற்றிவிட்டது. நீங்கள் படுத்த உடனே
தூங்கி, எழும்போது சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? படுப்பதற்குமுன் செய்யக்கூடிய
உங்கள் நடவடிக்கைகளைக் கவனியுங்கள். காலை எழுந்தவுடன் உங்கள் நடவடிக்கைகளையும்
கவனியுங்கள். ஓட்டப்பயிற்சியை எளிதாக்க வேண்டுமா? அந்த பழக்கங்களுக்கு, ஒரு
தூண்டுதலை ஏற்படுத்துங்கள். நானும் என் மனைவியும் எங்கள் வாழ்க்கை நடைமுறைக்கு
திட்டங்களை வகுத்துள்ளோம். என்னுடைய அலுவலக நிர்வாகக் கூட்டங்களின்போதும் நான்
பழக்கங்களைப் பற்றி உரையாற்றுவேன். குஃபாவில் உணவுக்கடைகளை நிறுத்திவிட்டால்
கலவரங்கள் இருக்காது என்று என்னிடம் யாரும் கூறவில்லை. ஆனால், நான் கூட்டத்தின்
பழக்கத்தை அறிந்துகொண்டதால் என் வேலை எளிதாகிவிட்டது. நான் ஒவ்வொரு மாற்றங்களையும்
ஒரு பழக்கமாக கருதுகிறேன். அப்பொழுது, உங்களிடம் வேலைக்குச் செல்ல ஆயத்தமாக
இருப்பதற்கு தேவையான உபகரணங்களை தந்துவிட்டதுபோல் ஆகிவிடும். உங்கள் வேலையும்
சுலபமாக இருக்கும்.”
அந்த இராணுவ மேஜர்,
ஜார்ஜியாவில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதர். விடாமல் புகையிலையை மென்றுகொண்டோ,
சூரியகாந்தி விதையை மென்றுகொண்டோ இருந்தார். இராணுவத்தில் சேராமல்
இருந்திருந்தால், தான் ஒரு டெலிஃபோன் டெக்னிஷியனாக இருந்திருக்கக்கூடும் என்று
கூறினார். அவர் காலகட்டத்தில் பள்ளிமுடித்தவர்கள் சுலபமாக தேடிக்கொள்ளகூடிய வேலை
அது. அவர் டெலிஃபோன் டென்னிஷியனாக இருந்திருந்தால், அதிகபட்சம் ஒரு சிறு
நிறுவனத்திற்கு ஒரு முதலாளியாக இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு அதிக வெற்றியை
அளித்திருக்காது. தற்பொழுது எண்ணூறு இராணுவ வீரர்கள் அவருடைய கட்டளையின் கீழ்
உள்ளனர்.
“என்னைப் போன்ற சாதாரண
பட்டிக்காட்டான்கூட இந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தால், யாராலும் இதனைக்
கற்று செயல்படுத்தமுடியும். என்னுடைய வீரர்களிடம் எப்பொழுதும் ஒன்றைக் கூறுவேன்.
அதாவது சரியான பழக்கங்களைக் கடைப்பிடித்தால் உங்களால் சாதிக்க முடியாதது ஒன்றும்
கிடையாது.”
நரம்பியல் மற்றும்
உளவியல் பழக்கங்களைப் புரிந்து கொண்டு அவை நமது வாழ்க்கையில் எப்படிப் பிணைந்து
மாற்றங்களை உருவாக்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் கடந்த பத்து வருடங்களாக
மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் தாக்கங்கள் தனிமனித வாழ்விலும்,
சமூகங்களிலும், நிர்வாகங்களிலும் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதனை
நாம் தெரிந்துகொண்டது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூட பார்க்காத
ஒன்றாகும். பழக்கங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி மாற்றங்கள் அடைகின்றன, அந்த
மாற்றங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் விஷயங்கள் அனைத்தையும் நாம்
இப்பொழுது அறிவோம். பழக்கத்தை சிறுசிறு பண்புகளாக மாற்றி நம் தேவைக்கேற்றப்படி
வளைக்கவும் முடியும். அதனால் மனிதர்களை அளவோடு உண்ண வைக்கவும், உடற்பயிற்சியில்
ஈடுபட வைக்கவும், தேவைக்கேற்ற திறமையுடன் வேலைசெய்ய வைக்கவும், மொத்தத்தில் நலமாக
வாழவைக்க முடியும். பழக்கங்களை மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமோ,
சீக்கிரத்தில் முடியக்கூடிய காரியமோ அல்ல. ஆனால் நிச்சயமாக பழக்கங்களை
மாற்றியமைக்க முடியும். இப்பொழுது மனிதகுலம் பழக்கங்களைப்பற்றிய புரிதலை
அடைந்துவிட்டது என்று கூறலாம்.
- தொடரும்
துணுக்கு:
பறக்கும் மீன்களை
இந்தக் காணொளியில் காணலாம். தன்னுடைய எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள
இந்த மீன்கள் நீரிலிருந்து மூன்றடி உயரத்துக்கு, கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம்
வரை பறப்பதுபோல் காற்றில் மிதந்து செல்கின்றன. இவற்றால் நீரைவிட்டு வெளியே
சுவாசிக்க முடியாது.
http://australianmuseum.net.au/BlogPost/Science/BBC-Life-Flyingfish-footage
//சரியான பழக்கங்களைக் கடைப்பிடித்தால் உங்களால் சாதிக்க முடியாதது ஒன்றும்
ReplyDeleteநம்மில் பலர் வாழ்க்கையில் சாதித்ததின் காரணம் சரியான பழக்கத்தைக் கடைப்பிடித்ததால் தான் என்பது உண்மை.
பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் வேறுபாடு உண்டோ?
பறக்கும் மீன்கள் பற்றிய காணொளியைக் கண்டேன். அவைகள் குறைந்த தூரமே பறந்தாலும் ஒரு ஆகாய விமானம் பறப்பது போலவே தெரிகிறது. இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்.’ என்று பாடல் எழுதினாரோ?
காணொளியைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteபழக்கம் என்பதை ஒருவரது மனப்பாங்கின் செயல் வடிவம் என்றும், பழக்கம் என்பதை சம்பிரதாயம், நடைமுறை என்றும் இந்த நூலில் பொருள்படுகிறது.
உண்மையில் பறவையினை ஆகாயவிமானத்துடன் ஒப்பிடுவதை இந்த பறக்கும் மீனுடன் ஒப்பிடுவது சரியாக அமையும். விமானங்களும் இந்த மீன்களும் காற்றில் glide ஆகிச்செல்கின்றன.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
அருமை. ஒவ்வொரு மனிதனும் பழக்கங்களுக்கு அடிமைதான். எந்த ஒரு வேலையும், பொறுப்பும் பழக்கத்திற்கு வந்துவிட்டால் எளிதாகிவிடுவது உண்மைதான். ஐம்பது கிலோ எடையுள்ள ஏழை கூலித் தொழிலாளி தன் உடல் எடைக்கு ஒத்த பாரங்களை அன்றாடம் சுமக்கிறான் என்றால் அதுவும் பழக்கத்தால் வந்ததுதானே! இத்தகைய வாழ்க்கை தத்துவங்களை ஆங்கில புத்தகங்களில்தான் படிக்க முடிகிறது. அரிதாகிப்போன இவ்விஷயங்களை மொழி மாற்றம் செய்து அனைவரும் படித்து தெரிந்துக்கொள்ள உதவும் உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள். தொடர்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. தாங்கள் கூறியது சரியான எடுத்துக்காட்டு. சத்துக்குறைவான உணவை உண்டாலும், ஏழைக்கூலித் தொழிலாளி, அவரைவிட நல்ல உணவு உண்பவர்களைவிட கடுமையாக உழைக்க முடிகிறது. இதற்கு பழக்கம்தான் காரணம்.
Deleteசில சமயங்களில் இங்கு நூலகங்களைப் பார்த்தால் ஆங்கிலத்தைக் கண்டு பொறாமையாகத்தான் இருக்கிறது. புதிய, புதிய சிந்தனைகள் ஆங்கிலத்தில்தான் தமிழைவிட அதிகமாக வருகிறது.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
இதைத் தான் மூத்தவர்கள் "பாடப் பாட ராகம்" என்று சொன்னார்களோ...?
ReplyDeleteபழக்க வழக்கங்கள் அனைத்தும் மனதைப் பொறுத்து தான்... ஆனால் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனதை....?
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே. மனதைக்கட்டுப்படுத்துவதும் பழக்கத்தினால்தானே முடியவேண்டியிருக்கிறது.
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
.// நீங்கள் படுத்த உடனே தூங்கி, எழும்போது சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? படுப்பதற்குமுன் செய்யக்கூடிய உங்கள் நடவடிக்கைகளைக் கவனியுங்கள். //
ReplyDeleteபடுக்கும் முன் என்ன செய்யணும்னு ஒண்ணும் சொல்லலையே? நாமே கண்டு பிடிச்சுக்கணுமோ?
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.
Deleteதொடர்ந்து படித்துப்பாருங்கள். எப்படியிருந்தாலும் ஒருவருக்கு பழக்கம் உருவாவதற்கான காரணம், மற்றவர்களுக்கும் அதுபோன்ற பழக்கம் உருவாகக் காரணமாக அமையும் என்று நான் நினைக்கவில்லை. எனவே காரணங்களை அவரவர்கள்தான் உணரவேண்டும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
சுட்டி திறக்கலை. இங்கே இணையம் பிரச்னை என்பதாலோ என்னமோ, திரும்பி ஒரு தரம் வரேன்.
ReplyDeleteடிடி சொல்வது போல் அலைபாயும் மனதை என்ன செய்யறது????