பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, January 16, 2014

கண்டுபிடிப்புகள் – 5 : மின்சாரம்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.


மின்சாரம் (தொடர்ச்சி-1) :

டைனமோ கண்டுபிடிக்கப்பட்டவுடன் மின்சாரம் எனப்படும் அற்புதமான திரவத்தின் பயன்பாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான போட்டிகள் அதிகமானது. ஆமாம். மின்சாரம் நீர் போன்ற ஒரு திரவத்துக்கு ஒப்பானது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், மின்சாரம் ஒளியின் வேகத்துக்கு செல்லக்கூடியது. அதிக அழுத்தத்தைக் கொடுத்தால் அதன் வேகம் அதிகரிக்கும் என்று அர்த்தம் கிடையாது. அதனுடைய செல்லும் தூரமே அதிகரிக்கும். சில பொருட்களின் வழியே மின்சாரத்தை செலுத்த முடியும். அத்தகைய பொருட்கள் மின்கடத்திகள் என்றழைக்கப்படும். சில பொருட்களின் வழியே மின்சாரத்தை செலுத்த முடியாது. அப்பொருட்கள் மின் கடத்தாப் பொருட்கள் எனப்படும். சில பொருட்களின் வழியே குறிப்பிடப்பட்ட கட்டுப்பாட்டுகளுடன் மட்டுமே மின்சாரத்தைக் கடத்த முடியும். அத்தகைய பொருட்கள் குறைக்கடத்திகள் என்றழைக்கப்படுகிறது. மெல்லிய கம்பிகளின் வழியே மின்சாரம் பாயும்பொழுது தடைகள் அதிகம். குறுக்குப் பரப்பளவு அதிகமான கம்பிகளில் மின்சார தடையின்றி பாய்கிறது.

மின்சாரம் என்பது எதிர் மின்னூட்டம் கொண்ட மின் அணுக்களின் ஓட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த எதிர் மின்னூட்டம் கொண்ட மின் அணுக்கள் எலக்ட்ரான்கள் என்றழைக்கப்படுகிறது. பொருத்தமான உபகரணங்களுடன், மின்சாரத்தை தன்னுடைய கட்டளைப்படி இயக்குவதன் மூலம், மனிதன் பல்வேறுபட்ட மின்கருவிகளை உருவாக்கியுள்ளான். மின்சாரத்தின் பண்புகளை உணர்ந்துகொண்ட, மனிதனுடைய கற்பனைத்திறனைக் கொண்டே அனைத்து மின்கருவிகளும் இயங்குகின்றன.

மின்சாரம் பாய்வதற்கு, சில பொருட்களும், சில நிலைகளும் எதிர்ப்பை அளிக்கின்றன. உதாரணமாக மிகவும் மெல்லிய கம்பியின் ஊடே மின்சாரம் பாயும்பொழுது, அதிக டிராஃபிக்கில் கார்கள் செல்ல முயல்வதுபோல, எலக்ட்ரான்கள் தடைகளைச் சந்திக்கின்றன. இதனால் அந்த மின் கம்பிகள் சூடாகின்றன. அதிக வெப்பத்தில் அந்த கம்பிகள் மின்னுகின்றன. இந்தப்பண்பிலிருந்து ஒளிரும் மின்குமிழ் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1881-ல் பிரிட்டனைச் சேர்ந்த ஜோசஃப் ஸ்வான் காற்று நீக்கப்பட்ட மின் குமிழில், கார்பன் இழைகள் கொண்ட மின் விளக்குகளை உருவாக்கி, விற்பனைக்கு கொண்டு வந்தார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசனும் அதே வடிவமைப்பில் மின் விளக்குகளை உருவாக்கியதாகத் தெரிகிறது. பிறகு ஜோசஃப் ஸ்வான் மற்றும் எடிசன் இருவரும் இணைந்து கார்பன் இழைகளைக் கொண்ட மின்விளக்குகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

ஜோசஃப் ஸ்வான்-ஐவிட எடிசன் மின்சார விளக்கினைக் கண்டுபிடித்ததாக மிகவும் பிரபலப்படுத்தப்பட்டுள்ளார். இதற்கு எடிசனுடைய விளம்பரப்படுத்தும் குணம், ஒரு முக்கிய காரணம். எடிசன் நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு மின் விளக்கின் இழைகளை சோதனை செய்துள்ளார். அப்படி சோதனை செய்ததையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 1879-ல் புத்தாண்டு கொண்டாட்டமாக, அவருடைய அலுவலகம் இருந்த வீதியில் கிட்டத்தட்ட அரை மைல் தூரத்துக்கு மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளார். அதுவரை மின் விளக்குகளையே கண்டிராத மக்களுக்கு அது எத்தகைய பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று உணரமுடிகிறது.

எடிசனுடைய அலுவலகத்தில், நிக்கோலா டெஸ்லா என்ற விஞ்ஞானி பணிபுரிந்தார். டெஸ்லா, எடிசனுக்கு இணையான விஞ்ஞானி. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் டெஸ்லா எடிசனின் அலுவலகத்திலிருந்து விலகிவிட்டார். 1914-ல் எடிசன் மற்றும் டெஸ்லா இருவருக்கும் இணைந்த நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் எடிசனுக்கு நோபல் பரிசை டெஸ்லா-வுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாமல் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மேக்ஸ் வோன் லாவ் என்ற விஞ்ஞானிக்கு எக்ஸ்-ரே சம்பந்தமான் ஆராய்ச்சிக்கு அந்த நோபல் பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இன்றுவரை எடிசன் ஒரு நல்ல விஞ்ஞானியா அல்லது அடுத்தவர்களுடைய உழைப்பை உறிஞ்சி சம்பாதித்த தொழிலதிபரா என்று இதுவரை யாரும் சரியாகக் கூறமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் எடிசன் பெயரில் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், ஒருசாரார் அது அடுத்தவர்களின் தயாரிப்பைத் திருடி, கொஞ்சம் திருத்தி தன் பெயரில் பேட்டண்ட் செய்து கொண்டதாக கூறுகின்றனர்.


- தொடரும் இப்படியெல்லாம் கூட ஆராய்ச்சிகள் :

15 comments:


 1. // ஜோசஃப் ஸ்வான்-ஐவிட எடிசன் மின்சார விளக்கினைக் கண்டுபிடித்ததாக மிகவும் பிரபலப்படுத்தப்பட்டுள்ளார்.//
  //எடிசனுக்கு நோபல் பரிசை டெல்சா-வுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாமல் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.//
  // இன்றுவரை எடிசன் ஒரு நல்ல விஞ்ஞானியா அல்லது அடுத்தவர்களுடைய உழைப்பை உறிஞ்சி சம்பாதித்த தொழிலதிபரா என்று இதுவரை யாரும் சரியாகக் கூறமுடியவில்லை.//

  இதைப் படித்த பின் விஞ்ஞானி எடிசன் பேரில் இருந்த மதிப்பு குறைந்துவிட்டது!

  எல்லா காலத்திலும் அடுத்தவர் உழைப்பையே உறிஞ்சுபவர்கள் இருப்பார்கள் போலும்!

  இணைப்பில் தந்துள்ள இரண்டு காணொளிகளையும் பார்த்தேன். இரண்டாவதைப் பார்க்கும்போது பயங்கரமாகவும் பயமாகவும் இருந்தது. உண்மையில் இப்படியெல்லாம் ஆய்வு நடத்துவார்களா என எண்ணத் தோன்றுகிறது. .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
   நான் தேடிப் படித்தவரை மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் ஜோசஃப் ஸ்வான் தான். எடிசன் ஒரேதிசை மின்சாரத்தையே விநியோகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறார். டெல்சா திசை மாறும் மின்சாரம்தான் நடைமுறைக்கு ஒத்துவரும் என்று பரிந்துரைத்தார். இன்று நாம் டெல்சா பரிந்துரைத்ததைத்தான் உபயோக்கிறோம். எடிசன் தன் கருத்தை நிருபிப்பதற்காக யானையின் மீது மின்சாரம்பாய்த்து அனைவருக்கும் முன் கொன்றிருக்கிறார். இதனைக் கீழ் காணுங்கள். இதனுடைய பின்னூட்டங்களையும் பாருங்கள்.
   http://www.youtube.com/watch?v=VD0Q5FeF_wU

   ரிமோட் கண்ட்ரோல், வயர்லெஸ் அனைத்துக்கும் டெல்சா-தான் தந்தை. டெல்சா ரேடியோவைக் கண்டுபிடித்தவர். அவர் துரதிருஷ்டம் அவர் தன் ரேடியோவை செயல் முறை படுத்திக் காட்டியபொழுது விபத்தில் அவர் சோதனைச்சாலை எரிந்துவிட்டது.டெல்சா இறுதியில் வறுமையில் இறந்ததுபோல் தெரிகிறது. இன்றுவரை பெட்ரோலுக்கு மாற்று கண்டுபிடிக்காததற்கு, பெட்ரோலிய கன்பெனிகளே முக்கிய காரணம். தாங்கள் கூறியதுபோல காலம் எப்பொழுதும் ஒரேமாதிரிதான் உள்ளது. வெற்றி பெற்றவர்களே நல்லவர்களாக எழுதப்படுவர்.
   விளையாட்டு அறிவியல் பார்க்கவே கடுமையாகத்தான் உள்ளது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
  2. தனது கருத்தை நிரூபிக்க யானையை கொன்ற எடிசன் எனக்கு விஞ்ஞானியாகத் தெரியவில்லை. ஒரு கொடூர குணம் கொண்ட மனிதனாகத் தான் தெரிகிறார். அவரைப்பற்றி சரியாக பின்னூட்டத்தில் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

   Delete
  3. ஆமாம் ஐயா! பள்ளிக்காலங்களில் எனக்கு எடிசனைப்பற்றி மிகப்பெரிய மதிப்பிருந்தது. ஒருவர் முதலில் மனிதனாக இருக்கவேண்டும். அதற்குப் பிறகுதான் அனைத்து பெருமைகளும் என்று நான் நினைகிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. என்ன சார் இது...?! அடக் கொடுமையே...!

  உங்களின் பகிர்வின் மூலம் தான் இவைகள் தெரியும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. நல்ல பதிவு. பாராட்டுக்கள். எடிசன் ஒரு முதலாளித்துவ மனபாவம் கொண்ட கண்டுபிடிப்பாளர். அல்லது விற்பனையாளர். அவர் பலருடைய கண்டுபிடிப்புகளை தன் திருடிக்கொண்டதாக கருத்து உண்டு. உங்கள் பதிவில் ஒரு சிறு திருத்தம். அது டெல்சா அல்ல. அவர் பெயர் நிகோலா டெஸ்லா. உண்மையில் எடிசனை விட டெஸ்லா அதி புத்திசாலி. The Mad Scientist என்று மக்களால் "அன்புடன்" அழைக்கப்பட்டவர். வறுமையில் தனியனாக இறந்தார். அவரை நினைவில் வைத்திருக்கவேண்டிய உலகம் எடிசனை முறையில்லாமல் புகழ்வது வேதனையான உண்மை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு. காரிகன். தவறைத் சுட்டியதற்கு நன்றி. திருத்திவிடுகிறேன். இன்றைக்கு நடக்கும் நிகழ்வுகளைக்கூட எந்த ஊடகமும் உண்மையாகத் தருவதில்லை. நிக்கோலா டெஸ்லா-வைப் போல வரலாற்றில் சரியாகப் பதியப்படாதவர்கள் எத்தனைபேர்களோ?

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. இதற்கு எடிசனுடைய விளம்பரப்படுத்தும் குணம், ஒரு முக்கிய காரணம். //

  இன்றும் இந்த குணம் தேவைப்படுகிறது. என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபோது என்னுடைய வகுப்புகளில் இதை முன்னிலைப்படுத்துவேன். நம்மை பற்றி நாமே சொல்லாவிட்டால் யார் சொல்வார்கள். நம்முடைய சாதனைகளைப் பற்றி நாம்தான் கூற வேண்டும். இதில் தவறேதும் இல்லை. பிறர் செய்வதையும் சேர்த்து நாந்தான் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதுதான் தவறு. இந்த கண்ணோட்டத்தில் எடிசனை குறை கூற என்னால் முடியவில்லை. மீண்டும் அருமையான தமிழாக்கம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா !

   தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் எடிசன் அடுத்தவர்களின் உழைப்பையும் சில சமயங்களில் தனதாகவும், எடுத்துக்கொண்டது போல் தெரிகிறது.

   பொதுவாக தமிழர்களுக்கு விளம்பரப்படுத்தும் குணம் குறைவு. இதற்கு சமூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இது மாறவேண்டும்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. // ஆயிரக்கணக்கில் எடிசன் பெயரில் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், ஒருசாரார் அது அடுத்தவர்களின் தயாரிப்பைத் திருடி, கொஞ்சம் திருத்தி தன் பெயரில் பேட்டண்ட் செய்து கொண்டதாக கூறுகின்றனர். //

  தாமஸ் ஆல்வா எடிசன் என்றால் அவருக்கென்று ஒரு பிம்பம் எனது மனதில் உண்டு. இதனை தகர்ப்பது போல் உள்ளது இந்த தகவல்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.
   இளம் வயதில் விஞ்ஞானி என்றால் எனக்கு எடிசன் தான் நினைவுக்கு வருவார். “பயன்பட வாழ்ந்த பெரியர் ஐவர்” என்ற ஒரு புத்தகம் படித்த ஞாபகம் உள்ளது. அதில் ஒருவர் எடிசன். ஆனால் இன்று தெரியும் தகவல்களால் எடிசனின் பிம்பம் கறைபட்டுவிட்டது உண்மைதான்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 6. எடிசன் குறித்த பல தகவல்களும் முன்னரே படித்தேன். ஆனால் நம்பியதில்லை. இன்று உங்கள் பதிவின் மூலம் எடிசனின் ஏமாற்று வேலை புரிந்தது. :(

  ReplyDelete
 7. //பொதுவாக தமிழர்களுக்கு விளம்பரப்படுத்தும் குணம் குறைவு. இதற்கு சமூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இது மாறவேண்டும்.//

  நீங்க வேறே! சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்வதில் தமிழர்களை யாராலும் மிஞ்ச முடியாதுனு நினைச்சேன். இப்படிச் சொல்றீங்களே! :))))))

  ReplyDelete
 8. Athu enna sir oru thisai minnotam enaku theriyala may you tell.

  ReplyDelete