பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, January 9, 2014

கண்டுபிடிப்புகள் – 4 : மின்சாரம்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

 மின்சாரம் :


மின்சாரத்தைப்பற்றி மனிதனுக்கு ஆதிகாலத்திலேயே தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. சிலவகையான மீன்கள் தொட்டால் மின்அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனையைச் சேர்ந்த “வோடோ வோன் க்யூரிக்” (1602-1686) என்ற விஞ்ஞானி 1663-ல் நிலைமின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். 1663-ல் பிரிட்டனைச் சேர்ந்த :ஃப்ரான்ஸிஸ் ஹக்ஸ்பீ அந்த இயந்திரத்தில் பாதரசம் உள்ள குழாயை இணைத்தார். அப்பொழுது பாதரசம் ஒளியுடன் மின்னியது. அதன்மூலம் மின்சாரத்திலிருந்து ஒளியைப் பெறமுடியும் என்று விஞ்ஞானிகள் உணர்ந்தனர். 1733-ல், ஃப்ரான்சைச் சேர்ந்த சார்லஸ் டுஃப்பே, மின்சாரத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை மின்னோட்டங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.

 

1745-ல் டென்மார்க்கைச் சேர்ந்த “போமெரனியா எவால்ட் கெய்ஸ்ட்” “லேடன் ஜார்”-ஐக் கண்டுபிடித்தார். இது மின்சாரத்தை சேமித்துவைக்கும் ஒரு உபகரணம். இது மின்தேக்கி என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்த இரு முக்கியமான பிரச்சனை, இது அனைத்து மின்சாரத்தையும் ஒரே நேரத்தில் வெளியேற்றிவிடும். நினைத்த நேரத்தில் நினைத்த அளவுக்கு இதிலிருந்து மின்சாரத்தைப் பெற முடியாது.

 

1750-ல் அமெரிக்காவைச் சேர்ந்த பெஞ்சமின் ஃப்ராங்களின், இடி மின்னலின் பொழுது, மின்சாரம் பற்றிய ஆராய்ச்சியை செய்தார். பட்டத்தின், இறுதி முனையில் ஒரு உலோகத்தாலான சாவியை இணைத்து பிடித்திருந்தார். அப்பொழுது ஏற்பட்ட இடியினால் அவர் மின்சாரத்தினால் தாக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக மின்கடத்தாத ஷூக்களை அணிந்திருந்ததனால் உயிர் தப்பினார். 1753-ல் ஜியார்ஜ் வில்ஹம் ரிச்மேன், என்ற ரஷ்ய விஞ்ஞானி, இதனைப் போன்ற சோதனையில் ஈடுபட்டபோது, மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

 

1807-ல் பிரிட்டனைச் சேர்ந்த ஹம்ப்ரி டேவி என்ற விஞ்ஞானி, உருகிய உலோகக்கலவையில் மின்சாரத்தை செலுத்தினார். அப்படி செலுத்தும்பொழுது தூய உலோகங்களை தனியாக பிரித்தெடுக்க முடிந்ததை அறிந்தார். இந்த நிகழ்வுக்கு மின்னாற்பகுப்பு என்று பெயர். இதிலிருந்து மின்னியலுக்கும் வேதியியலுக்கும் தொடர்பு இருந்ததை அவர் உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். இன்றுவரை அலுமினியம் போன்ற உலோகங்கள் இந்த முறையில்தான் பிரித்தெடுக்கப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளியின் மகன், மைக்கேல் ஃபாரடே என்ற சிறுவன் 13 வயதில் புத்தகம் பைண்ட் செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்தான். வேலை செய்யும்பொழுது அங்குள்ள அனைத்து புத்தகங்களையும் படித்து, தனது அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டான். முறையான கல்வியும், பட்டங்களும் இல்லாத காரணத்தால் அவனுக்கு அறிவியல் துறையில் வேலை கிடைக்கவில்லை. 1812-ல் ஒரு வாடிக்கையாளர், விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியினுடைய கருத்தரங்குக்கான அனுமதி அட்டையை அவனுக்கு பரிசளித்தார். ஃபாரடே தன்னுடைய அறிவியல் கட்டுரைகளை டேவியிடம் சமர்ப்பித்தார். கட்டுரைகளைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த டேவி, ஃபாரடேயை தன்னுடைய உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.

 

1820-ல் ஃப்ரெஞ்ச் விஞ்ஞானி “ஆன்ரே மேரி ஆம்பியர்” என்பவர் காந்த சக்திக்கும், மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார். அவருக்கு மதிப்பளிக்கும் வகையில், மின்சாரத்தின் அளவீடு ஆம்பியர் என்று அழைக்கப்படுகிறது. ஆம்பியரின் கட்டுரையைப் படித்தறிந்த ஃபாரடே, மின்சாரம் பாயும் கம்பிக்கு அருகே உள்ள காந்தமுள் தானாகவே அசைவதைக்கண்டார். அதனைக் கருத்தில்கொண்டு அவர் மின்சார மோட்டாரை முதன்முதலாக வடிவமைத்தார். மின்கம்பிக்கு அருகில் உள்ள காந்தமுள்  அசைவதைப்போல, காந்த முள்ளின் அசைவினைக்கொண்டு மின்சாரத்தையும் உருவாக்க முடியும் என்று ஃபாரடே உணர்ந்தார். இதிலிருந்து டைனமோ பிறந்தது. நீராவி இஞ்சின், நீர்வீழ்ச்சி முதலியவற்றின் உதவியைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறை உருவானது.

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசஃப் ஹென்றி (1797-1878) , மைக்கேல் ஃபாரடே மின்சார மோட்டாரை வடிவமைத்த அதே காலகட்டத்தில் அதனைப்போன்ற மின்சார மோட்டாரை வடிவமைத்திருக்கிறார். இன்று மைக்கேல் ஃபாரடே, ஜோசஃப் ஹென்றி இருவரும் மின்சார மோட்டாரை வடிவமைத்ததாகக் கருதப்படுகின்றனர். மின்சாரத்துக்கும், காந்தத்துக்கும் தொடர்பு உள்ளதுபோன்று, மின்சாரத்துக்கும், ஒளிக்கும் தொடர்பு இருக்குமென்று ஃபாரடே அனுமானித்தார். முறையான கல்வி இல்லாததால் அவரால் அதனை நிரூபிக்க முடியவில்லை. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் 1862-ஆம் ஆண்டு ஒளியும் மின்காந்த சக்திகளைச் சார்ந்தது என்று கணிதவியல் மூலமாக நிரூபித்தார். இன்றுவரை ஆன்மீகத்தில் நம்பிக்கையுடைய விஞ்ஞானிகள் மின்சாரம், காந்தம், ஒளி, ஆற்றல், ஈர்ப்புவிசை என்று அனைத்து சக்திகளும் கடவுளால் கட்டமைக்கப்பட்டு ஒன்றற்கொன்று தொடர்புடையன என்று கருதுகின்றனர்.


- தொடரும்

  

வித்தியாசமான, அதிசயத்தக்க தகவல்களைக்கொண்ட ஒரு தளம் :


 

8 comments:

 1. எத்தனை விஞ்ஞானிகள் மின்சாரத்தைப் பெற உயிரிழந்தார்கள் என்பதை அறிய முடிகிறது... நன்றி ஐயா நல்லதொரு தள அறிமுகத்திற்கும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன். உயிரிழந்த விஞ்ஞானிகளைத்தவிர, மறக்கப்பட்ட விஞ்ஞானிகளும் உள்ளனர். விஞ்ஞானிகளின் உழைப்பைத் திருடிய விஞ்ஞானிகளும் உண்டு.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. மின்சாரம் கண்டுபிடிப்பு பற்றி பள்ளியில் படித்திருந்தாலும் பல புதிய தகவல்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். மேலும் அறிய தொடர்கிறேன்.

  நீங்கள் தந்துள்ள இணைப்பில் ஆச்சரியம் தரும் 10 அதிசய தகவல்களைக் கண்டேன். ஒவ்வொரு தகவலும் இதுவரை அறியாதது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! அந்த இணைப்பில் ஆர்ட் பகுதியில் இருக்கும் ஓவியங்களைப் பார்க்கத் தவறாதீர்கள். அதிசயிப்பீர்கள்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
  2. நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் உள்ள ஓவியங்களைப் பார்த்து வியந்தேன். ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவன் என்பதால் இரசித்தேன். தகவலுக்கு நன்றி!

   Delete
 3. வெறுமனே டைம் பாசுக்காக எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் இப்படி எதை எழுதினாலும் ஆக்கபூர்வமாக எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்கு பாராட்டுகளும் ஆதரவு ஓட்டுகளும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா! எந்த ஊடகத்தைப் படித்தாலும், மனது கனக்கிற விஷயங்களே அதிகமாகக் காணப்படுகிறது. அதனால், பொதுவாக ஒத்துகொள்ளப்பட்ட விஷயங்களை எழுதுவது சுலபமாகப்படுகிறது. தங்களது கருத்துக்கள் இன்னும் நன்றாக எழுதவேண்டுமென்ற எண்ணத்தை அளிக்கிறது. நன்றி.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. மின்சாரம் குறித்த அரிய தகவல்களை அறிந்தேன். நன்றி.

  ReplyDelete