பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, December 5, 2013

கதம்பம்-17


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-8

ஃப்ராய்டின் சிகிச்சை முறைகள்:

ஃப்ராய்டின் கருத்துக்கள், சிகிச்சை முறைகளில், மனோவியலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை அவருடைய சிகிச்சை முறைகளே. அவற்றின் முக்கிய பகுதிகளை இங்கே காணலாம்.

ஆசுவாசமான சூழல் : சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்களுடைய உணர்வுகளை மனன்விட்டு பகிர்ந்துகொள்ளக் கூடிய சூழல் மிகவும் முக்கியமானது. சிகிச்சைக்கான சூழலில், நோயாளிகள் மற்றவர்கள் தம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணி கலங்கக்கூடாத சூழ்நிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். உண்மையில் சொல்லப்போனால், ஃப்ராய்டின் சிகிச்சை முறைப்படி, சிகிச்சையளிப்பவர்கள் என்று ஒருவர் இருப்பதாகவே நோயாளிகள் நினைக்கக்கூடாது. மென்மையான படுக்கை, குறைவான வெளிச்சம், சத்தம் ஊடுருவாத அறை, ஆசுவாசமான மனநிலை என்றதாக சிகிச்சை நடக்கும் இடம் இருத்தல் அவசியம்.

தோழமையான பிணைப்பு: நோயாளி மனம்விட்டு பேசுமளவுக்கு சிகிச்சையளிப்பவர் இருக்கவேண்டும். அப்படி அமையும்பட்சத்திதான், ஆழ்மனத்திலுள்ள எண்ணங்கள் வெளீப்படும். கிட்டத்தட்ட இது கனவு காணும் நிலை. சிகிச்சையளிப்பவர்கள், அந்த நிலையில் கிடைக்கும் துப்புகளைக்கொண்டு, பிரச்சனையைத் தீர்க்கமுடியும்.

எதிர்க்கும் மனநிலை: சிகிச்சையின்பொழுது, நோயாளியிடம் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு மிகவும் முக்கியமான துப்பாகும். நோயாளிகள், பேச்சை திசை திருப்ப முயற்சித்தல், தூங்கிவிடுதல், திட்டப்படி சந்திக்க வருவதை தவிர்த்தல் போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து மனோவியளாலருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. சிகிச்சையளிப்பவர், ஆழ்மனப் பிரச்சனையை அணுகியதை அறிந்து அதற்கு நோயாளிகள் தம்மை அறியாமலே எதிர்ப்புகளை தெரிவிக்க முயல்வர்.

கனவுகளை ஆராய்தல்: தூக்க்கத்தில் ஆழ்மனதுடன் சிறிது எளிதாக உரையாட முடிகிறது. ஆழ்மனது கனவில் தன்னுடைய எணணங்களை குறிப்புகளாக வேறொரு நிகழ்ச்சியில் ஏற்றி வெளிப்படுத்துகிறது. இது மனோவியலாளர்களுக்கு இன்னும் துப்புக்களைக் கொடுக்கிறது. சிகிச்சை முறைகளில் நோயாளிகளின் கனவுகளும் உதவிகின்றன. ஆனால், ஃப்ராய்ட் அனைத்து கனவுகளையும் பாலுணர்வுடன் சம்பந்தப்படுத்தி தீர்வுகாண விழைகிறார்.

தவறுதலாக செய்யும் செயல்கள், சொல்லும் வார்த்தைகள்: இவை ஃப்ராய்டின் தவறுகள் என்றும் ஆழைக்கப்படுகின்றன. ஃப்ராய்ட் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உண்டு என்று கூறுகிறார். தவறான எண்ணுக்கு ஃபோன் செய்தல், தவறான வார்த்தையைக் கூறுதல், சென்று கொண்டிருக்கும்பொழுது தவறான பாதையில் சென்றுவிடுதல் என்று செய்யும் அனைத்து செயல்களுக்கும் அர்த்தங்கள் உண்டு என்று அவர் கருதினார். ஆனால், அவருடைய மாணவர்கள், அவரிடம் தாங்கள் புகைக்கும் சுருட்டுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு “ சில சமயங்களில் சுருட்டு, வெறும் சுருட்டு மட்டுமே” என்றும் கூறியுள்ளார்.


இடமாற்றுதல் (Transference) : நம்மையறியாமலே, சில சமயங்களில், சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு, குறிப்பிட்ட முடிவுகளையே நாம் எடுக்கக்கூடும். அத்தகைய முடிவுகள், சிறுவயதிலிருந்தே நமக்குள் ஏற்பட்டிருக்கும் சிந்தனைகளின் வெளிப்பாடாகும். இத்தகைய வெளிப்பாடுகள் மனோவியலில் நோயாளியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிகிச்சையளிப்பவர், இதன்மூலம், நோயாளிகளின் சிந்தனைப்போக்கை, தனது எண்ணப்படி மாற்றி, நோயாளிகளின் ஆழ்மனதிலிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், இந்த முறையில் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிப்பவர்களுக்கும் உள்ள உறவு, ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் அவசியம்.

தூய்மைப்படுத்தல்: ஆழ்மனதில் புதைந்திருக்கும், பிரச்சனைகளில் உள்ள மன அழுத்ததை வெளியேற்றுவதே தூய்மைப்படுத்துதல் என்றழைக்கப்படுகிறது. பிரச்சனையுடன் வாழாமல், அவைகளுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்தி வெளியேற்றுவதே நல்லது என்று ஃப்ராய்ட் கூறுகிறார். இந்த சிகிச்சை Catharsis”  அதாவது தூய்மைப்படுத்தல் என்றழைக்கப்படுகிறது.

பிரச்சனையை உணர்ந்துகொள்ளுதல்: மனதிலுள்ள பிரச்சனைக்கான நிகழ்ச்சியை புரிந்துகொள்வதே “Insight என்றழைக்கப்படுகிறது. தூய்மைப்படுத்துதலும், பிரச்சனையை உணர்ந்துகொள்ளுதலும் நிகழ்ந்துவிட்டால், சிகிச்சையின் முக்கியமான பகுதிகள் முடிந்துவிட்டதாகக் கூறிவிடலாம். எப்பொழுதோ, நிலைமையை சமாளிக்க முடியாத வயதில் நிகழ்ந்த பிரச்சனையை, இப்பொழுது உணர்ந்துகொண்டால், அது ஒருவரை மகிழ்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று ஃப்ராய்ட் கருதுகிறார்.

ஃப்ராய்ட் சிகிச்சையின் முக்கியமான இலக்கு ஆழ்மனதின் எண்ணங்களை, இயல்பான மனதின் எண்ணங்களாக மாற்றுவதே ஆகும்.


--- தொடரும்.



கற்றலின் பத்து கட்டளைகள் :

1. இதுதான் இறுதியான உண்மை என்று எந்த விஷயத்தையும் நம்பிவிடாதீர்கள்.

2. ஆதாரங்களை மறைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு தாவிவிடலாம் என்று என்ணாதீர்கள்; என்றாவது ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும்.

3. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை குலைக்கும் எந்த சிந்தனையையும் ஊக்குவிக்காதீர்கள்.

4. அதிகாரத்தால் கிடைக்கும் வெற்றி உண்மையான வெற்றி அல்ல. எந்த மாற்றுக் கருத்தையும் அதிகாரத்தால் வெல்ல முயற்சிக்காதீர்கள்.

5. அதிகாரத்துக்கு தலைவணங்கி கருத்தை மாற்றாதீர்கள்; மாற்றுக்கருத்துகளைக் கொண்டவர்களும் அதிகாரத்துக்கு வரலாம்.

6. பதவியை உபயோகித்து எதிர்க்கருத்துகளை அழிக்க நினைத்தால், அந்த எதிர்க்கருத்துகளுக்கு பயந்தே நீங்கள் வாழவேண்டியிருக்கும்.

7. பைத்தியக்காரத்தனம் என்று எந்தக் கருத்தையும் ஒதுக்காதீர்கள்; ஒரு காலத்தில் பைத்தியக்காரத்தனமாக இருந்த கருத்துக்கள் இன்று உண்மைகளாகவும் மாறியிருக்கின்றன.

8. அறிவு பூர்வமான எதிர்க்கருத்துக்கள், முட்டாள்தனமான இணக்கத்தைவிட மகிழ்ச்சி தரும்;. அறிவு பூர்வமான கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருந்தால், அவர்கள் ஒரு காலத்தில் மனப்பூர்வமாக உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

9. பிரச்சனை தருவதாக இருந்தாலும், உண்மையாகவே நடந்துகொள்ளுங்கள்; உண்மையை மறைக்க முயல்வது அதைவிட அதிக பிரச்சனையைத் தரும்.

10. முட்டாள்களின் இன்பத்தைக் கண்டு பொறாமைப்படாதீர்கள்; முட்டாள்களே அது இன்பமயமானது என்று எண்ணுவார்கள்.


 --- தத்துவவாதி  (Bertrand Russell)  பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (1872-1970)

   கருத்துக்கள் நல்ல கருத்துக்கள்தான். ஆனால் இன்றைய நடைமுறைக்கு அனைத்து கருத்துக்களையும் உபயோகிக்க முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதனைவிட சிறந்ததாகவும், இன்றும் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு நமது வள்ளுவர் கூறியதை பதிவிடுகிறேன்.



நம்புங்கள், இப்படியும் விளம்பரங்கள் வந்த காலம் இருந்தது :







4 comments:

  1. ஃப்ராய்ட் சிகிச்சையின் முக்கியமான இலக்கு சிரமம் தான்... ம்...

    பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அவர்களின் தத்துவங்கள் அருமை... இன்றைக்கு...?!!! நமது வள்ளுவர் கூறியதை எதிர்ப்பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
      பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் கருத்துக்கள் அவருடைய காலத்துலேயே நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகள்தான் என்று நினைக்கிறேன்.
      ஒரு வாரம் பொறுத்திருங்கள், வள்ளுவரின் கருத்துக்களை காணலாம்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. ஃப்ராய்ட் அவர்களின் சிகிச்சையின் மூலம் பயனடைந்தவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் ஏதேனும் உண்டா? ஏனென்றால் அவர் கூறியது போல எதிர்க்கும் மன நிலையில் உள்ளவர்கள் பயன் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா?

    தெரியாத பல புதிய தகவல்கலை பகிர்ந்தமைக்கு நன்றி.

    தத்துவ ஞானி பெட்ராண்ட் ரஸ்ஸல் கூறிய 10 கட்டளைகளில் முதலாவது இதுதான் இறுதி என நம்பிவிடாதே என்கிறது. நீங்கள் சொன்னது போல் இவைகளை நடைமுறையில் கடைப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். காத்திருக்கிறேன். அய்யன் திருவள்ளுவர் என்ன சொன்னார் என்பதை தங்கள் மூலம் அறிய.

    நீங்கள் தந்துள்ள அந்த விளம்பரங்களைக் கண்டேன். இது போன்ற விளம்பரங்கள் வராததன் காரணத்தை திருமதி Barbara Mountrey தனது பின்னூட்டத்தில் சரியாக சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ஐயா!
      எனக்குத் தெரிந்தவரை ஒருவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகவும் கடினம். அப்படி அழைத்துச் சென்றாலும் ஒத்துழைப்பதும் கடினம். இந்தக் காலத்தில் சேவையாக மருத்துவத்தை எடுத்துக்கொள்ளும் மருத்துவர்களும் அரிது. ஆனால் கவுன்சலிங்க் நல்ல பயனைக் கொடுக்கும் என்று அறிந்திருக்கிறேன். ஃப்ராய்ட் சேவையினால் குணமடைந்தவர்கள் புள்ளிவிபரங்களைத் தேடிப் பார்க்கிறேன்.
      பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அவர்களின் முதல் கட்டளையின்படி நமக்கு பிரச்சனையில்லாத இடத்தில் மட்டுமே பிற கட்டளைகளைப் பயன்படுத்த முடியும்.
      தாங்கள் கூறிய பிறகுதான், Barbara Mountrey அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தேன். இன்றைக்கும் சில விஷயங்கள் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கின்றது என்று நானும் கருதுகிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete