“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை
செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில்
அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.
பணம் (நாணயம்) :
பணம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?
அப்படியிருந்தால், மாம்பழங்களைக் கொடுத்து பசுக்கள் வாங்கவேண்டியிருக்கும்.
அதாவது பண்டமாற்று முறையில்தான் பரிவர்த்தனை செய்ய வேண்டும். தேவையானவைகளை
வாங்குவதற்கு எப்பொழுதும் மாம்பழங்களையோ பசுக்களையோ எடுத்துச் செல்வதைவிட பணத்தை
எடுத்துச் செல்வது மிகவும் எளிதானது.
மேலும் மாம்பழத்தை மட்டுமே விளைவிக்கும் ஒருவருக்கு தேவைப்படும் பொருட்களை
விற்பவர்கள் அனைவருக்கும், மாம்பழத்தின் தேவையில்லாமல் இருக்கலாம். அதனால்
எப்பொழுதும் மாம்பழத்தைக் கொடுத்து பண்டமாற்றம் செய்வதென்பது அவரால் முடியாது.
எனவே அனைவரும் பரிவர்த்தனை செய்ய ஏதுவாக, பொதுவான ஒரு குறியீட்டின் தேவையை இங்கு
காணமுடிகிறது. அந்த பரிவர்த்தனை குறியீட்டின் அடையாளமாக உருவானதே பணம்
எனப்படுகிறது
ஒரு பொருள் என்ற கண்ணோட்டத்தில் பணத்துக்கு எந்தவிதமான உபயோகமும் கிடையாது.
பணத்தை சாப்பிட முடியாது. காகிதத்தில் இருந்தால் உடுத்தவாவது முயற்சிக்கலாம்.
ஆனால் பணம் வளமையின் அடையாளம். அதைக் கொடுத்து அதனையும் வாங்க முடியும். பணத்தின்
மதிப்பு என்பது அரசாங்கத்தாலும், உலகாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவே ஆகும். முதல்
உலகப்போருக்குப்பின் ஜெர்மனியில் அதிக அளவில், அதனுடைய பணம் அச்சடிக்கப்பட்டது.
அதனால் அதன் மதிப்பு குறைந்தது. மக்கள் பணத்தை விறகாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
அந்த அளவுக்கு அது மதிப்பிழந்தது. இந்தியாவில் ஆயிரம் ரூபாய் மதிப்பிழந்ததும்
ஒருமுறை நடந்தது.
பணத்தை முதன்முதலில் வரலாற்றில் உண்டாக்கியது யாரென்று தெரியவில்லை. சீனாவிலும்,
ஆப்பிரிக்காவிலும் சோழிகளை, பழைய காலத்தில், நாணயமாக உபயோகித்திருப்பது தெரிகிறது.
“மாயன்” நாகரிகத்தில் ஒருவகை பஞ்சவர்ணக்கிளியின் இறகுகள் நாணயமாக புழக்கத்தில்
இருந்திருக்கிறது. இவற்றைத்தவிர மக்கள் பவளம், வைரம் மற்றும் உலோகங்கள்
போன்றவைகளையும் நாணயமாக உபயோகித்திருக்கிறார்கள்.
நாணயங்களை மக்கள் உபயோகித்திருப்பது, அவர்களுடைய வரவு செலவு கணக்கு எழுதுவதைக்
காண்பதன் மூலமாகவே வரலாற்றில் தெரியவந்திருக்கிறது. மெசபடோமியாவில் (இன்றைய
ஈராக்கில்) கி.மு 3100-ல் அரசாங்கத்தில் மக்கள் இன்னும் எவ்வள்வு வரி
செலுத்தவேண்டும் என்பதுபோன்ற ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த
காலகட்டத்தில் நாணயம் புழக்கத்தில் உள்ளது தெரிகிறது.
கி.மு 640-ல் லிடியாவில் (இன்றைய துருக்கியின்
ஒரு பகுதி) முதன்முதலாக நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இயற்கையில்
கிடைக்கக்கூடிய தங்கமும் வெள்ளியும் கலந்த உலோகத்தால் இந்த நாணயம்
தயாரிக்கப்பட்டுள்ளது. கி.மு 350-ல் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் 10 மடங்கு
வெள்ளி, ஒரு மடங்கு தங்கத்துக்கு இணையானது என்ற வகையில் நாணயங்களை வெளியிட்டதும்
தெரிகிறது.
முதலில் பணம், உலோகத்தில் நாணயமாகவே தயாரிக்கப்பட்டது. ரோமப்பேரரசுகள் தங்களது
நாணயத்தை கிட்டத்தட்ட 1000 வருடங்கள் மேற்கத்திய நாடுகளில் மதிப்பான நாணயமான
வைத்திருந்தார்கள். தாங்கள் கைப்பற்றிய ஒவ்வொரு நாட்டிலும் தங்களது நாணயத்தையே
அனுமதித்தார்கள்.
கி.பி 700-ல் சீன நாடு முதன்முதலாக காகிதத்தில் பணத்தை அச்சடித்தது. அரசாங்க
அச்சகத்தில், அரசாங்க முத்திரையிட்ட பத்திரங்களாக அவை அச்சடிக்கப்பட்டன. அந்த
காகிதத்தில், எவ்வளவு தங்கத்துக்கு அந்தப் பத்திரம் சமானம் என்று அரசாங்கத்தால்
உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தில் தங்கத்தின் மதிப்புக்கு சமமான
அளவுக்கே, பணம் அச்சடிக்கப்பட்டது. இதனால் அச்சடிக்கும் பணத்தின் அளவுக்கு ஒரு
கட்டுப்பாடு இருந்தது. பணத்தட்டுப்பாடும் நிலவியது. ஆனால் ஸ்பானியர்கள், உலகின் பல
நாடுகளை ஆக்கிரமித்து அவர்களுடைய தங்கத்தின் இருப்பு அதிகமானபொழுது, அதற்கு சமமான
பணத்தை அச்சடித்தார்கள். அதனால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகமானது.
1694-ல் இங்கிலாந்தில் “பேங்க் ஆஃப் இங்க்லேண்ட்” என்ற பெயரில், முறையான வங்கி
ஒன்று தொடங்ககப்பட்டது. ஐசக் நியூட்டனால், தங்கத்துக்கும், பணத்துக்கும் ஒப்பீடு
செய்யப்பட்டு பேங்கில் உள்ள தங்கத்துக்கு இணையான அளவுக்கு, 1884-ல் பணம்
அச்சடிக்கப்பட்டு விநியோகத்துக்கு வந்தது. அதாவது, இந்தப் பணத்தைக் கொடுத்து, இந்த
அளவுக்கு தங்கம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உத்திரவாதத்துடன் பணம் வெளிவந்தது. அதன்
பின்னர் ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள்
ஆகியவற்றுக்குப்பிறகு
“ஃபியட்” முறையில் பணம் அச்சடிக்கும் பழக்கம் வந்தது. இதன்படி பணம்
அச்சடிக்கும் அளவுக்கு தங்கம் இருப்பு வைத்துகொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
லத்தீன் மொழியில் ஃபியட் என்றால், “அப்படியே இருக்கட்டும்” என்று பொருள். 1971-ல்
அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன், தங்கத்துக்கு ஒப்பாக இருந்த அமெரிக்க டாலரின்
மதிப்பை நீக்கிவிட்டு, அமெரிக்க டாலரை முற்றிலுமாக ஃபியட் பணமாக மாற்றினார். இந்த
நிகழ்ச்சி “நிக்ஸன் அதிர்ச்சி” என்று அழைக்கப்படுகிறது.
1988-ல் ஆஸ்திரேலியா முதன் முதலாக ப்ளாஸ்டிக்கில் பணத்தை அச்சடித்தது.
இன்றுவரை ப்ளாஸ்டிக் பணம் அச்சடிக்கும் தொழில் நுட்பத்தில் ஆஸ்திரேலியாவே முதலிடம்
வகிக்கிறது.
காகிததில் பணம் அச்சடித்த நாட்களில், பணம் மரத்தில் விளைகிறது என்று
கூறியிருக்கலாம். இன்று பணம் பெட்ரோலில் விளைகிறது. ப்ளாஸ்டிக் பெட்ரோலியத்தின்
துணைப்பொருளாகக் கிடைக்கிறது. ப்ளாஸ்டிக்கில் மற்றுமல்லாது இன்று இணையத்திலும்,
சிலிக்கான் சில்லுகளிலும், தகவல் தொடர்புகளால் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
பணம் என்பது வெறும் நம்பிக்கைதான். இப்போது “பிட் காயின்” என்று இணையத்தில்
உபயோகப்படுத்தும் பணமும் வந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் அதன் மதிப்பு
அதிகமாகக் கூடிவிட்டது. பிட் காயினைப் பற்றி பிரிதொரு பதிவில் காணலாம். பணம்
என்பது நம்பிக்கை மட்டுமே. அப்படியே இருக்கட்டும்.
என் கருத்து: ஃபியட் பணம் என்பது மிகப் பெரிய ஏமாற்று வேலை. இதனால்
அமெரிக்காவுக்குத்தான் அதிகமான பலன். எந்தக் கரன்ஸி உலகில் அதிகமாக
உபயோகிக்கப்படுகிறதோ அதற்கு எப்பொழுதும் தேவை அதிகமாகவே இருக்கும். அச்சடிக்கும்
பணத்துக்கு இணையாக அந்த நாடு எதனையும் இருப்பு வைத்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அவரகள் மட்டுமே அந்த நாணயத்தை அச்சடிக்க உரிமை உணடு. அந்த கரன்ஸி அந்த
நாட்டில் மட்டுமே புழக்கத்தில் இருந்தால்தான் அங்கு பணவீக்கம் ஏற்படும். என்னைப்பொறுத்தவரை இது ஒரு அரசாங்ககத்துக்கு
கள்ள நோட்டு அடிக்க உரிமை கொடுத்ததுபோல் உள்ளது. நான் முதலில் வெளிநாட்டுக்கு
சென்றபொழுது, நான் சென்ற நாட்டுக்கான கரன்ஸி எடுக்காமல், அமெரிக்கன் டாலரில்
முதலில் பணம் எடுக்க வேண்டியிருந்தது. அதிகமாக சிந்தித்தால் நிம்மதிதான் குறையும்
என்று நினைக்கிறேன்.
மூலம் : கூகுள் மற்றும் Brilliant Ideas ( Xavier
Waterkeyn)
சிறிது சிரித்து மகிழ :
நாம் எத்தனை முறை தோல்விகளை சந்தித்தாலும் அதனால் குறையொன்றுமில்லை; ஆனால்
எப்பொழுதும் முயற்சியைக் கைவிட்டு தோற்றவர்களாகிவிடக்கூடாது.
-
மாயா ஏஞ்சலா
நண்பரே,
ReplyDeleteஇந்திய ரூபாயின் மதிப்பை டாலருக்கு நிகராக அல்லது அதிகமாக உயர்த்த என்ன வழி?
வருகைக்கு நன்றி திரு.புதின் அவர்களே!
Deleteஇந்திய ரூபாயை டாலருக்கு உயர்த்த வேண்டுமானால், இந்தியாவில் உலகத்தை மிரட்டக்கூடிய அளவுக்கு, அடுத்தவர்களிடம் இல்லாத ஆயுதத்தைக் கண்டுபிடித்து உலகத்துக்கு விற்க வேண்டும். அதைத்தான் வளர்ந்த நாடுகள் செய்துகொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
ReplyDeleteபணத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தால் நிம்மதிதான் குறையும் என்பது சரியே. “பிட் காயின்” பற்றி தங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்.
காணொளியைப் பார்த்து சிரித்து இரசித்தேன். விலங்குகளும் மனிதர்கள் போல் குறும்பு செய்யும் போல!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! கண்டுபிடிப்புகள் வரிசையில் பிட்காயினையும் இணைத்துவிடுகிறேன்.
Deleteவிலங்குகள் கள்ளங்கபடமின்றி குழந்தைகள் போலத்தானே இருக்கின்றன. காணொளியில் இருப்பவைகள் சரியான தருணத்தில் எடுக்கப்பட்டவைகள் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
// பணம் என்பது வெறும் நம்பிக்கைதான்.... // அது தான் பிரச்சனையே - புரிதலில்...!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே !
Deleteஅன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து எழுதத் தொடங்கியமைக்கு நன்றி!
ReplyDeleteநாணயங்கள் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..