பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Wednesday, December 25, 2013

கண்டுபிடிப்புகள் – 2 : டைனமைட்

“தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், சோம்பேறித்தனம் அதன் தந்தை” சிலவேலைகளை செய்யவோ அல்லது சுலபமாக்கவோ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. சில சமயங்களில் அசம்பாவிதமாகவும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.


டைனமைட் (ஒருவகை பயங்கரமான வெடிமருந்து) :

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை வெடிமருந்துகள் கொண்டு காண்பிக்கப்படும் வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை காண்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த வெடிமருந்துகளை, போருக்கு பயன்படுத்துவதற்காகவே கண்டுபிடிக்க மக்கள் முயன்றிருக்கிறார்கள். “கிரேக்க நெருப்பு” என்ற பெயருடைய தீப்பிழம்புகளை உருவாக்கி போர்கள் நடந்திருப்பதாக வரலாறு தெரிவிக்கிறது. கிரேக்க நெருப்பின் மூலப்பொருட்களை ரகசியமாக பாதுகாத்து வந்திருக்கின்றனர். நீரில்கூட தீப்பிடிக்கும் கிரேக்க நெருப்பின் ரகசியம், ஒருகட்டத்தில் யாருக்கும் தெரியாவண்ணம் அழிந்தேவிட்டது. யாருக்குத் தெரியும், அந்த ரகசியத்தை அறிந்தவரும் போரிலேயே மடிந்திருக்கக்கூடும். கிரேக்க நெருப்பு தீச்சுவாலையாகவே இருக்கும். அது வெடிப்பது கிடையாது.

ரசவாதிகள் கிரேக்க நெருப்பு தொடர்பான ஆயுதங்களை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருந்தபொழுது 1249-ல் பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பேக்கன் என்ற விஞ்ஞானி முதன் முதலில் வெடிமருந்துக்கான கலவையைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. ஏழு பங்கு வெடியுப்பு  (பொட்டாசியம் நைட்ரேட்), ஐந்து மடங்கு கரி, ஐந்து மடங்கு சல்ஃபர், இவற்றைக் கலந்து அவர் வெடி மருந்தை உருவாக்கினார்.  வெடி மருந்து தயாரிக்கும் நுட்பத்தை அவர் அரபு நாட்டிலிருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. கெமிஸ்ட்ரி (வேதியியல்) என்ற வார்த்தை “ அல்கெமி“ என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. “அல்கெமி“ -  “அல் கெமியா“ என்ற அரபு வார்த்தையிலிருந்தும், இந்த அரபு வார்த்தை “கீமியா” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தும் உருவாகியுள்ளது. கீமியா என்றால் கிரேக்க மொழியில் “உலோகத்தை தங்கமாக மாற்றுதல்” என்று பொருள்படும். தமிழிலும் ரசவாதம் என்று சித்தர்கள் உலோகங்களை தங்கமாக மாற்றியிருப்பதாகத் பாடல்கள் உள்ளன. சீனர்களும் வெடிமருந்தை உபயோகப்படுத்தியுள்ளது அறியவந்துள்ளது. சீனர்களும் அரபு நாடுகளிலிருந்து வெடிமருந்து தயாரிக்கும் வித்தையை கற்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

1832-ல் ஃப்ரெஞ்ச் விஞ்ஞானி ஹென்றி ப்ரகோனாட் நைட்ரின் அமிலத்துடன், மரத்தூள்களை சேர்த்தால் சைலோஅயோடின் என்ற வேதிப்பொருளாக மாறி உடனடியாகத் தீப்பிடித்து வெடிப்பதைக் கண்டறிந்தார். 1938-ல் இன்னொரு விஞ்ஞானி நைட்ரமிடைன் என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தார். 1860-வாக்கில் ஜெர்மனி-ஸ்விஸ் விஞ்ஞானி நைட்ரோசெல்லுலோஸ் என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தார்.

சைலோஅயோடின், நைட்ரமிடைன், நைட்ரோசெல்லுலோஸ் ஆகிய அனைத்து வெடிபொருட்களும் மிகவும் ஆபத்தானவைகள். நிலையில்லாமல் எக்கணமும் வெடிக்கக்கூடிய தன்மையைக் கொண்டவைகள்.

1847-ல் இத்தாலியின் அஸ்கானியோ சோப்ரெரோ நைட்ரோகிளிசரின் என்ற திரவ வடிவமான வெடிபொருளைக் கண்டுபிடித்தார். அதுவும் மிகவும் ஆபத்தான வெடிபொருள். கண்டுபிடித்தவரையே காலம் முழுவதும் அச்சுறுத்தும் வகையில் வெடித்து அது பழிவாங்கியுள்ளது. “எத்தனை பெயர்களுடைய உயிர்களை பழிவாங்கிவிட்டது! எதிர்காலத்தில் இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கப்போகிறதோ? இதனை நான்தான் கண்டுபிடித்தேன் என்று வெளியில் கூறவும் வெட்கப்படுகிறேன்” என்று அந்த இத்தாலிய விஞ்ஞானி கூறியிருக்கிறார். அத்தனை கொடூரமான வெடிமருந்து இந்த நைட்ரோகிளிசரின்.

அஸ்கானியோவைவிட, அதிகம் வெட்கப்படவேண்டியவரை (வெடிமருந்து தொடர்பாக) உலகம் விரைவிலேயே கண்டுகொண்டது. அவருடைய பெயர் ஆல்ஃப்ரெட் நோபல். அவர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை இம்மானுவேல் நோபலும் ஒரு கண்டுபிடிப்பாளரே. அவர் பிளைவுட்டைக் (plywood) கண்டுபிடித்தார். ஆனால் அதனை தொழிற்படுத்தியதில் பெருத்த நஷ்டமடைந்தார். ஆனால் ஆல்ஃப்ரெட் நோபலின் கண்டுபிடிப்பு அவருக்கு பெருஞ்செல்வத்தைத் தேடித்தந்தது.

டைனமைட் பிறக்கும்பொழுதே சோகத்தைக் கைகோர்த்துக்கொண்டே பிறந்தது. 1864-ல் ஆல்ஃப்ரெட் நோபலின் தம்பி எமில் நோபல் நைட்ரோகிளிசரினால் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார். இருந்தாலும் ஆல்ஃப்ரெட் நோபல் மனம்தளர்ந்துவிடாமல் பாதுகாப்பான நைட்ரோகிளிசரினை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தே தீருவேன் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டார். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நைட்ரோகிளிசரின் கைசெல்கர் என்ற ஒருவகையான களிமண்ணைக் கலந்து தயாரிக்கையில் அது உடனடியாக வெடிப்பதில்லை என்று  கண்டுபிடித்தார். 1867-ல் “டைனமைட்” என்ற பெயரில் தன்னுடைய கண்டுபிடிப்பைப் பேட்டன் செய்தார். டைனமிஸ் என்ற கிரேக்க சொல் “சக்தி” என்று பொருள்படும். அதன்பிறகு 1876-ல் ஜெலாட்டின் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

டைனமைட் வெடிமருந்து போரிலும், கட்டுமானத்துறையிலும், சுரங்கத்தொழிலிலும் அதிகமாக உபயோக்கிக்கப்பட்டது. இது ஆல்ஃப்ரெட் நோபலை கோடீஸ்வரர் ஆக்கியது. 1888-ல் ஆல்ஃப்ரெட் நோபலுடைய சகோதரர் லட்விக் நோபல் இறந்துவிட்டார். அவருடைய மரணச்செய்தி பத்திரிக்கையில் வந்தபோது தவறுதலாக ஆல்ஃப்ரெட் நோபலின் மரணச்செய்திபோல் வந்துவிட்டது. பத்திரிக்கைகள் “மரண வியாபாரி” மறைந்து விட்டார் என்ற தலைப்புடன் தகவலை வெளியிட்டது. மரண வியாபாரி என்ற அடையாளத்துடன் தன்பெயர் வெளிவந்தது ஆல்ஃப்ரெட் நோபலை வருத்தமடையச் செய்தது. தன்னுடைய அடையாளத்தை அவர் நல்லவிதமாக மாற்ற விரும்பினார்.

1895, நவம்பர் 27-ல் தன்னுடைய சொத்துக்களில் அதிகமான பகுதியை நோபல் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அந்த அறக்கட்டளைக்கு அர்ப்பணித்துவிட்டார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி என்ற துறைகளுக்கு நோபல் என்ற பெயரில் பரிசுகள் வழங்குவதற்காக அந்த அறக்கட்டளையை உருவாக்கினார். ஆல்ஃப்ரெட் நோபல் கணிதத்துறைக்கு நோபல் பரிசை அளிக்கவில்லை. அதற்கு ஒரு கணிதப்பேராசிரியருடன் இருந்த பிணக்கு முக்கியமான காரணம் என்று தெரிகிறது. 1968-ல் ஸ்வீடன் வங்கி நோபல் நினைவாக பொருளியல் பிரிவிலும் நோபல் பரிசினை அறிவித்தனர். 1901 முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கானவர்கள் நோபல் பரிசினை பெற்றுள்ளனர். நோபல் அறக்கட்டளையின் வட்டியில் மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. நோபல் பரிசு 10 மில்லியன் (1 கோடி) ஸ்விஸ் க்ரோனார் (இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட 14 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பானது). பாவத்தின் சம்பளம் அவ்வளவு குறைவாக இல்லை என்று தோன்றுகிறது.


மனம் நெகிழவைக்கும் ஒரு காணொளி :
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 


5 comments:

 1. //1968-ல் ஸ்வீடன் வங்கி நோபல் நினைவாக பொருளியல் பிரிவிலும் நோபல் பரிசினை அறிவித்தனர்.-------- நோபல் அறக்கட்டளையின் வட்டியில் மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.//

  பொருளியல் பிரிவுக்கான விருது, நோபல் அறக்கட்டளையின் வட்டியிலிருந்து தராதபோது அதை எப்படி நோபல் பரிசு என சொல்கிறார்கள்.

  தாங்கள் தந்துள்ள காணொளியை ஏற்கனவே பார்த்துள்ளேன். உண்மையில் மனதை நெகிழவைக்கும் காணொளிதான்.

  தங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

  தாங்கள் கூறுவது சரிதான். உண்மையில் அது பேங்க் ஆஃப் ஸ்வீடன், வழங்கும் ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு, பொருளியல் துறை பரிசு என்றே அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. ஆனால் புழக்கத்தில் நோபல் நினைவாக வழங்கப்படுவதால் அதுவும் நோபல் பரிசு என்றே மக்களால் கருதப்படுகிறது.

  அந்தக்காணொளி கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கு மேல் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் நம்மைப்பற்றி சிந்திக்க வைக்கக்கூடிய காணொளி.

  அன்புடன்
  பக்கிரிசாமி நீலகண்டம்.

  ReplyDelete
 3. கடுமையான முதுகுவலி காரணமாக நண்பர்கள் பதிவுகள் பலவற்றை என்னால் படிக்க இயலவில்லை! தங்கள் பக்கம் வரவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம். விட்டுப் போன பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்! .
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நன்றி ஐயா!

   தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   நேரம் கிடைக்கும்பொழுது வாருங்கள். உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. காணொளி நிறையத் தரம் மின் மடலில் வந்துள்ளது. என்றாலும் அந்தச் சிட்டுக்குருவியை இப்போல்லாம் பார்க்க முடியலையேனு மறுபடியும் பார்த்தேன்.

  நோபல் பற்றிய செய்திகளுக்கு நன்றி.

  தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete