பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, November 7, 2013

கதம்பம்-13


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-4

மேல்நிலை மனம்:

தன்முனைப்பு நிலைமனம் தரகுவேலைப் பார்த்தாலும், அதனுடைய செயல்திறனை ஒரு நீதிபதியின் பொறுப்பில் இருந்து மேல் நிலைமனம் கண்காணித்துக் கொண்டே உள்ளது. மேல் நிலை மனதை மனசாட்சி என்றும் அழைக்கலாம். அது தன்முனைப்பு நிலை மனம், சக்தியுடன் இச்சைகளை அடக்கி யதார்த்ததை நோக்கி செலுத்த எதிர்பார்க்கிறது. இச்சைமனம் அடுத்த கட்ட நடவடிக்கையான வெறியை நோக்கி செல்லாவண்ணம், தன்முனைப்பு நிலைமனம் கட்டுப்படுத்துகிறதா என்று இது கண்காணிக்கிறது.

பொதுவாக நமது மனசாட்சி, நமது பெற்றோர்களிடமிருந்தோ, நம்மை வளர்ப்பவர்களிடமிருந்தோ நம்மை அடைகிறது. நாம் வளர வளர, அவர்களிடம் நம்மை ஒப்பிட்டு குற்றவுணர்ச்சி வராவண்ணம் செயல்களைப் புரிகின்றோம். ஆனால் மனசாட்சி என்று ஒன்று அனைவருக்கும் இருக்கிறதா? தொடர் கொலைகளைப் புரிந்தவர்களும், சொல்லொண்ணா குற்றங்களைப் புரிந்தவர்களும் பூமியில் இருக்கின்றனரே? அத்தகையவர்களுக்கு குற்றவுணர்ச்சி கொள்ளும் மனநிலை இல்லை என்று கூறலாம். குற்றங்களைத் தடுப்பதற்கான மேல்நிலைமனக் குறைபாடு என்று குறிப்பிடலாம்.

நல்ல மனிதர்கள் கனவுகளால் மட்டுமே காண்பதை, தீய மனிதர்கள் செயல்களால் வெளிப்படுத்துகிறார்கள் என்று மனோவியலில் ஒரு சொற்றொடர் உண்டு.





 

வாழ்வதற்கான இயல்புணர்வு மற்றும் இறப்பதற்கான இயல்புணர்வு:

மனிதனுடைய நடத்தை உள்ளுணர்வுகளால் ஊக்குவிக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிறது. ஒருவரின் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்ய நரம்பியல் மண்டலங்களின் வெளிப்பாடாக அத்தகைய உள்ளுணர்வுகள் தோன்றுகின்றன. ஆரம்பதில் ஃப்ராய்ட் இவற்றை வாழ்வதற்கான உள்ளுணர்வுகள் என்று வருணித்தார். இத்தகைய உணர்வுகள், முதலாவதாக, ஒரு தனிமனிதனை அவனுக்குத் தேவையான உணவு, நீர் முதலானவற்றை தேடுவதற்கு ஊக்குவிக்கிறது. இரண்டாவதாக ஒரு இனத்தைப் பெருக்குவதற்காக உடல் இச்சைகளையும் ஊக்குவிக்கிறது. வாழ்வதற்கான இந்த இயல்புணர்வு சக்திகளை அவர் Libido என்று குறிப்பிடுகிறார். லத்தீன் மொழியில் Libido என்பதற்கு “நான் விரும்புவது” என்று பொருள்படும்.  

ஃப்ராய்ட், தனது ஆய்வுகளின் அனுபவங்களின் மூலம், வாழ்வதற்கான இயல்பு உணர்வுகளில் உடல் இச்சையே பிரதான இடத்தை வகிக்கிறது என்று எண்ணினார். மனிதன் ஒரு சமூகமாக இயங்கும் விலங்கு. அதில் காமமே முதலிடம் வகிக்கிறது என்று குறிப்பிடுகிறார். எப்படி இருப்பினும் ஃப்ராய்டினால் Libido என்ற சொல்லுக்கு, “நான் விரும்புவது” என்ற பொருள் திரிந்து இன்று “உடல் இச்சையில் ஆர்வம்” என்று பொருள்படுகிறது.

வாழ்வின் பின்னாட்களில் ஃப்ராய்ட், இயற்கை உந்துதல்கள் ஒரு தனிமனிதனின் ஆளுமையை (Personality) முழுமையாகக் கூறுவதில்லை என்று கருதினார். காமம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் அனைத்திலும் திருப்தியடைந்ததும் அடுத்தது என்ன? அமைதிதான், என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். வாழ்வதற்கான இயல்பு உணர்வுபோலவே ஒவ்வொருவரிடமும் இறப்பதற்கான இயல்பு உணர்வும் இருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும், இறக்கவேண்டும் என்ற அவா இருக்கிறது என்றார்.

ஆரம்பத்தில் வித்தியாசமான கருத்தாகத் தோன்றினாலும் ஃப்ராய்ட் கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை என்பது மிகவும் கடுமையானது; கால ஓட்டத்தில் அது ஒருவரை களைப்படையச் செய்துவிடும். நாம் ஒத்துக்கொள்ள மறுத்தாலும், உலகில் உள்ளவர்களில் அதிகமானவர்களுக்கு வாழ்க்கை ஒரு சுமைதான். இறப்பு என்பது அந்த சுமையிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது.

ஃப்ராய்ட் இதனை “நிர்வாணம் அடைவது” என்று குறிப்பிடுகிறார். நிர்வாணம் அடைவது என்பது முக்தி அடைதல் என்று பொருள்படும். உண்மையில் அது வெறுமை நிலையை அடைதல் என்ற அர்த்தத்தை அளிக்கிறது. எதுவும் இல்லாத வெறுமை நிலையை அடைவதே புத்த மதத்தின் நோக்கம் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

நமது தினசரி வாழ்விலிருந்தே இறப்பதற்கான இயல்பு உணர்வு, அதாவது நிர்வாணம் அடைவதற்கான உணர்வு இருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். அமைதியை நாடியே போதைப் பொருட்களையும், திரைப்படங்களையும், ஓய்வையும், தூக்கத்தையும் நோக்கிச் செல்கிறோம். சிலரிடத்தில் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் இறப்பதற்கான இயல்பு உணர்வே காரணம். சில சமயங்களில், இந்த உணர்விலிருந்து தப்பிக்க நினைப்பதால் அது கோபம், கொடூரம், கொலை போன்ற பாதகங்களைச் செய்யத் தூண்டுகிறது.

--- தொடரும்.

 
 
விதியா, மதியா,ஊழ்வினையா:
விதி, அதிர்ஷ்டம் ஆகியவற்றில் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் சில சமயங்களில் அவையும் கைகொடுக்கும். பிடிக்காத ஒருவர், எதிர்பாராத வெற்றியை அடைந்துவிட்டால், அந்த சமயத்தில் உபயோகப்படுத்தவாவது உதவுமே.
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிகளுக்கு வேறென்னதான் சொல்வது?
 


துணுக்கு:

அறிவியல் எனப்படுவது ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு; ஞானம் எனப்படுவது ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வு.

உங்கள் ஒவ்வொரு செயலும், ஒருநாள் உலகளாவிய நெறியாகத் திகழக்கூடிய அளவுக்கு வாழுங்கள்.

-       இமானுவேல் கேண்ட் (1724–1804)
 

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; நன்மை செய்வதே என் மதம்.

-       தாமஸ் பைன் (1737–1809)

தாமஸ் பைன் கூறியது எங்கோ கேட்டதுபோல் உள்ளது.

7 comments:

  1. //வாழ்வதற்கான இயல்பு உணர்வுபோலவே ஒவ்வொருவரிடமும் இறப்பதற்கான இயல்பு உணர்வும் இருக்கிறது.//
    சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களின் கருத்து ஆச்ச்சரியப்பட வைக்கிறது!

    /நாம் ஒத்துக்கொள்ள மறுத்தாலும், உலகில் உள்ளவர்களில் அதிகமானவர்களுக்கு வாழ்க்கை ஒரு சுமைதான். இறப்பு என்பது அந்த சுமையிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது என்ற வரிகள் சொல்வது உண்மைதானோ?


    இரண்டு காணொளிகளையும் கண்டபோது, அதிர்ஷ்டம் நம் பக்கம் இருந்தால் எப்படியும் வெற்றி பெறலாம் போல என எண்ணத் தோன்றுகிறது.


    கணியன் பூங்குன்றனார் அவர்கள் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூற்றுப் பாடல் சங்ககாலத்தில் அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்டது. எனவே திரு தாமஸ் பைன்(1737–1809) அவர்கள் அதே சொற்பிரயோகத்தை உபயோகப்படுத்தியுள்ளது ஆச்சரியத்தைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      அனைவருக்கும் இறப்பதற்கான இயல்பு உணர்வு இருக்குமென்று என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. மரணம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்த முதியவர்களைப் (80 வயதிற்கு மேற்பட்ட) பார்த்திருக்கிறேன்.
      வெற்றி பெறுவதற்கு, காலத்தின் ஒத்துழைப்பு தேவை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் காலத்திற்காக காத்திருப்பது சரியான செயல் இல்லை. முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று நம்புகிறேன்.

      தாமஸ் பைன் கூற்றை கீழே கொடுத்துள்ளேன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்தியா ஏழை நாடு. ஏழை சொல் அம்பலம் ஏறாது.

      The World is my country, all mankind are my brethren, and to do good is my religion.
      Thomas Paine

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. நம்மை ஒப்பிட்டு குற்றவுணர்ச்சி வராவண்ணம் செயல்களைப் புரிகின்றோம்.//

    ஒரு தவறை முதல் முறை செய்யும்போதுதான் நமக்கு குற்ற உணர்வு ஏற்படுகின்றது. அதையே மீண்டும், மீண்டும் செய்யும்போது அதுவே பழகிப்போய் மனசாட்சியும் கூட அதை ஏற்றுக்கொள்கிறது.

    ஆனால் மனசாட்சி என்று ஒன்று அனைவருக்கும் இருக்கிறதா?//

    இது நியாயமான கேள்வி. நம் அனைவருக்கும் உள்ளிருந்து அவ்வப்போது ஒரு குரல் கேட்கிறது. ஆனால் கள்வனுக்கும் கொலைகாரனுக்கும் உள்ள மனசாட்சி அவன் செய்வதை தவறு என்று சொல்வதில்லை. ஏனெனில் அவனுடைய செயல்களுக்கு அதுவும் பழகிப் போய்விடுகிறது.

    அருமையான மொழிமாற்றம். ஆனால் ஒரு சந்தேகம். தன்முனைப்பு நிலைமனம் எதை குறிக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      // பழகிப்போய் மனசாட்சியும் கூட அதை ஏற்றுக்கொள்கிறது.//
      ஒருவகையில் தாங்கள் கூறுவது சரிதான். அனைத்து நாடுகளிலிலும் லஞ்சம் கொடுப்பது போன்ற காரியங்கள், இப்பொழுதெல்லாம் சாமர்த்தியமாகவே கண்ணோட்டமிடப்படுகிறது. இருப்பினும், நியாயமான ஒருவர் தவறு செய்தால், வருந்தவே செய்வார் என்று நினைக்கிறேன்.

      // கள்வனுக்கும் கொலைகாரனுக்கும் உள்ள மனசாட்சி அவன் செய்வதை தவறு என்று சொல்வதில்லை. ஏனெனில் அவனுடைய செயல்களுக்கு அதுவும் பழகிப் போய்விடுகிறது. //

      இத்தகையவர்களுக்கு மனநலக் குறைபாடுகள் இருக்கலாம். அல்லது அவர்களது சமுதாயத்தில், லஞ்சம் வாங்குவதுபோல, திருடுவதும் ஒத்துக்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். சமுதாயத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டதை தவறு என்று யாரும் கருதுவதில்லை. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளது. ஒரு சமுதாயத்தில் சரி எனப்படுவது, இன்னொரு சமுதாயத்துக்குத் தவறாக இருக்கலாம்.

      தன்முனைப்பு நிலைமனம் எதை குறிக்கிறது?

      தன்முனைப்பு நிலைமனம் யதார்த்தத்தை உணர்ந்து, இச்சைக்கும், மேல்மனத்துக்கும் இடையில் சமரசம் செய்து முடிவடுக்கும் மனம். இதனை “Ego“ என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
    2. தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி. இந்த வார்த்தை இனி வரும் பதிவுகளில் அடிக்கடி வர வாய்ப்புள்ளதால்தான் கேட்டேன்.

      Delete
  3. // பொதுவாக நமது மனசாட்சி, நமது பெற்றோர்களிடமிருந்தோ, நம்மை வளர்ப்பவர்களிடமிருந்தோ நம்மை அடைகிறது. நாம் வளர வளர, அவர்களிடம் நம்மை ஒப்பிட்டு குற்றவுணர்ச்சி வராவண்ணம் செயல்களைப் புரிகின்றோம். ஆனால் மனசாட்சி என்று ஒன்று அனைவருக்கும் இருக்கிறதா? தொடர் கொலைகளைப் புரிந்தவர்களும், சொல்லொண்ணா குற்றங்களைப் புரிந்தவர்களும் பூமியில் இருக்கின்றனரே? அத்தகையவர்களுக்கு குற்றவுணர்ச்சி கொள்ளும் மனநிலை இல்லை என்று கூறலாம். குற்றங்களைத் தடுப்பதற்கான மேல்நிலைமனக் குறைபாடு என்று குறிப்பிடலாம். //

    நல்ல அருமையான விளக்கம். திரும்பத் திரும்ப படித்தேன்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete