பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 1, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 2



முப்பது வருடங்களுக்கு முன்பு ஸ்கொயர் M.I.T ல் டாக்டர் பட்டத்திற்காக படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஆராய்ச்சிக் குழுவின் ஒரு உறுப்பினராக H.M என்பவரைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். H.M என்பவருடைய முழுப்பெயர் ஹென்றி மோல்சன். H.M-ன்னுடைய அடையாளம், எப்பொழுதும் வெளிப்படுத்தப்பட்டதில்லை. H.M-க்கு ஏழு வயதிருக்கும்பொழுது சைக்கிளில் மோதித் தலைகுப்புறக் கீழே விழுந்துவிட்டார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. அந்த விபத்துக்குப் பிறகு H.M-க்கு வலிப்பும் மயக்கமாதலும் அடிக்கடி நிகழ ஆரம்பித்தது. 16 வயதாகும்பொழுது H.M-க்கு மிகவும் கடினமான வலிப்பு ஏற்பட்டது. அதனால் அவருடைய மூளை மிகவும் பாதிப்படைந்தது. அதன்பிறகு, ஒரு நாளைக்கு பத்து முறையாவது அவர் மயக்கமடையும் நிலை ஏற்பட்டது.

H.M-க்கு 27 வயதானபொழுது, அவரால் தன்னுடைய நிலையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது தன் நோய்க்கு தீர்வு கண்டாகவேண்டிய வேகத்துடன் இருந்தார். வலிப்புக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் எதுவும் பலனளிக்கவில்லை. H.M-ன் அறிவிலோ, திறமையிலோ எந்தக் குறையும் இல்லை. இருந்தாலும் அவருக்கு இருந்த நோயினால் எந்த வேளையிலும் நிரந்தரமாக தாக்குப்பிடிக்க முடியவில்லை. பெற்றோர்களின் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டிய நிலை. H.M மற்றவர்களைப் போல இயல்பாக வாழ விரும்பினார். தன் ஆராய்ச்சிக்காக சட்டத்துக்குப் புறம்பான சோதனைகளைச் செய்யும் எண்ணங்களையுடைய மருத்துவர் ஒருவரின் உதவியை நாடினார். நமது மூளையில் “ஹிப்பாகாம்பஸ்” என்ற பகுதி வலிப்புகள் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆராய்ச்சிகளின்மூலம் தெரியவந்துள்ளது. H.M-ன்னுடைய டாக்டர் H.M-ன் மூளையைத் திறந்து “ஹிப்பாகாம்பஸ்” பகுதியையும் அதனைச் சுற்றியிருந்த திசுக்களையும் முற்றிலுமாக நீக்கிவிட விரும்பினார். H.M அந்த ஆராய்ச்சிக்கு தன்னுடைய சம்மதத்தை அளித்தார்.

1993-ல் H.M-க்கு அந்த அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு H.M-க்கு வந்த வலிப்புகளின் எண்ணிக்கைகள் வெகுவாக குறைந்துவிட்டன. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு H.M-ன் மூளையில் ஏற்பட்ட மாற்றங்களினால், அவருடைய நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டது நன்கு புலப்பட்டது. அவருக்கு அவருடைய தாய், தந்தை, ஊரைப்பற்றிய ஞாபகங்கள் இருந்தன. 1929-ல் பங்குவர்த்தகம் நிலைகுலைந்தது ஞாபகம் இருந்தது. ஆனால் ஆபரேஷனுக்கு முன் கடந்த பத்து வருடங்களாக நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவருடைய நினைவுகளில் இருந்து மறைந்துவிட்டன. அந்த நினைவுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. டாக்டர்கள் H.M-ஐ சோதனை செய்தபொழுது, கார்டில் எண்களை எழுதி நினைவில் நிறுத்துமாறு கூறினர். H.M-ஆல் இருபது வினாடிக்குமேல் எதனையும் நினைவில் நிறுத்த இயலவில்லை.

1953-ல் நடந்த அறுவை சிகிச்சை முதல் 2008-ல் இறக்கும்வரை H.M-க்கு நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வும், எத்தனைமுறை நடந்தாலும், ஒவ்வொரு முறையும் அவை அவருக்குப்
 புதிய அனுபவமாகவே இருந்தது. பாடல்களை எத்தனைமுறை கேட்டாலும், ஒவ்வொரு முறையும் அவருக்கு முதல்முறை கேட்பதாகவே இருந்தது. ஒரு அறையில் எத்தனை முறை நுழைந்தாலும் முதன்முறையாக அந்த அறைக்குள் செல்வதுபோல் இருந்தது. H.M-ன்னுடைய மூளை, ஒரே தருணத்தில் தங்கிவிட்டது; உறைந்துவிட்டது. டாக்டர்களிடமும், நர்ஸ்களிடமும், தினம்தினம், மீண்டும் மீண்டும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில்தான் வாழ்ந்திருந்தார். ஒரு செவ்வக வடிவில் உள்ள பிளாஸ்ட்டிக்கை வைத்துக்கொண்டு தொலைக்காட்சியில் சேனல் மாற்றுவதை ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்துடன்தான் அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஞாபகங்களின் தொடர்புடன் மூளையை ஆராய்வது நல்ல பலனைத்தரும் என்று நான் எண்ணியதால் H.M-ஐப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினேன்.” ஸ்கொயர் தொடர்ந்தார். “நான் ஒஹாயோவில் வளர்ந்தேன். நான் முதல் வகுப்பில் படித்தபொழுது எங்கள் ஆசிரியர் அனைவருக்கும் கலர் கிரயான் கொடுத்தது என் நினைவில் நிற்கிறது. நான் அனைத்து கலர் கிரயான்களையும் குழைத்து கருப்பு நிறம் உருவாகிறதா என்று செய்து பார்த்தேன். நான் செய்தது இன்னும் ஏன் என் நினைவில் உள்ளது? எனக்கு அந்த ஆசிரியரை ஞாபகம் இல்லை. எப்படி இருப்பார் என்றும் ஞாபகம் இல்லை. நம் மூளை ஏன் சில விஷயங்களை முக்கியம் என்றும் சில விஷயங்களை தேவையில்லை என்றும் தேர்ந்தெடுத்து நினைவில் நிறுத்திக்கொள்ளவோ அல்லது அழித்துவிடவோ செய்கிறது?”


டாக்டர் ஸ்கொயர் யூஜின்னுடைய மூளையின் ஸ்கேன்களை ஆராய்ந்தபொழுது அவை H.M-ன் மூளை ஸ்கேன்களை ஒத்திருப்பது தெரிந்தது. ஒரு வால்நட் அளவில் மூளையின் நடுப்பகுதி வெறுமையாகக் காணப்பட்டது. யூஜின்-உடைய நினைவுகள், H.M-ன்னுடைய நினைவுகள் மறைந்ததைப்போல், முற்றிலுமாக நீக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

டாக்டர் ஸ்கொயர் யூஜினை சோதனை செய்தபொழுது, யூஜின்-னும், H.M-மும் சிலவகைகளில் மாறுபட்டிருப்பதை உணர்ந்தார். H.M-ஐ யாரேனும் சந்தித்தால், ஒரிரு நிமிடங்களிலேயே அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்து விடுவார்கள். ஆனால் யூஜின் பேசுவதையோ பழகுவதையோ வைத்து யாரும், அவருக்குப் பிரச்சனை இருப்பதை உடனடியாக உணர முடியாது. H.M –க்கு நிகழ்ந்த அறுவை சிகிச்சையினால், அவர் வாழ்நாள் முழுவதும் காப்பகத்திலேயே இருக்கவேண்டிய பலவீனமான நிலைக்கு ஆளானார். ஆனால், யூஜின் தனது இல்லத்தில் குடும்பத்துடன் வசிக்க முடிந்தது. H.M யாருடனும் எந்தவிதமான உரையாடலிலும் ஈடுபடமுடியாது. மாறாக யூஜின், தன்னுடன் உரையாடுபவர்களை, தனக்குப் பிடித்தமான தெரிந்த விஷயங்களை நோக்கி எளிதாக அழைத்துச் செல்லும் திறமையைக் கொண்டிருந்தார். வானிலையைப் பற்றியோ, தான் வேலைப் பார்த்த விண்வெளி இயந்திரங்களைப் பற்றியோ மணிக்கணக்கில் அவரால் உரையாட அழைத்துச் சென்றுவிட முடியும்.

டாக்டர் ஸ்கொயர் சோதனையின் துவக்கத்தில் யூஜினுடைய இளமைக்காலங்களைக் குறித்து வினவினார். யூஜின் மத்திய கலிஃபோர்னியாவில் தான் வளர்ந்த நகரத்தைப் பற்றியும், வணிகக்கப்பலில் தான் வேலை பார்த்ததையும், ஆஸ்திரேலியாவுக்கு இளைஞனாக இருந்தபொழுது சென்றதையும் நினைவு கூர்ந்தார். 1960-க்கு முன் தன் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை அவரால் நினைவுப்படுத்திக் கூற முடிந்தது. அதன் பிறகு நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டபொழுது, யூஜின் தனக்கு நினைவு படுத்துவது சிரமமாக உள்ளது என்று கூறி பேச்சின் திசையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

டாக்டர் ஸ்கொயர் யூஜினுடைய அறிவுத்திறனை சோதனை செய்ய பல்வேறு தேர்வுகளை நடத்தினார். முப்பது வருடங்களாக எந்த விஷயத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியாத ஒருவர் என்று எண்ணும்பொழுது, யூஜினுடைய அறிவுக்கூர்மை சிறப்பாக இருந்ததை உணர்ந்துகொண்டார். யூஜின்-உடைய இளம்வயதில் கொண்டிருந்த பழக்கவழக்கங்கள் இன்னமும் அவருடைய நினைவில் இருந்தது; விடாமல் அவரால் அதனை கடைபிடிக்கவும் முடிந்தது. எப்பொழுதாவது ஸ்கொயர் யூஜின்-க்கு தண்ணீர் தருவது போன்று சிறு உதவிகள் செய்தால், மறவாமல் நன்றியை தெரிவிப்பார். எதையாவது பாராட்டினால் நன்றி கூறி திரும்பவும் பதிலுக்கு எதையாவது பாராட்டிக் கூறுவார். அறைக்குள் யாரேனும் நுழைந்தால் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நலம் விசாரிப்பார்.

யூஜின்-னால் ஏதேனும் எண்களை நினைவில் நிறுத்துவதோ, அறையின் வெளியில் இருப்பவற்றை விவரமாக கூறுவதோ இயலாது என்பதை டாக்டர் ஸ்கொயர் சோதனையின்பொழுது தெரிந்துகொண்டார். எந்த புது விஷயத்தையும் ஒரு நிமிடம்கூட யூஜின்-ஆல் நினைவில் நிறுத்த இயலவில்லை. பேரக்குழந்தைகளுடைய புகைப்படங்களைப் பார்த்தாலும், யாரென்று அவருக்கு அடையாளம் காணமுடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்ததோ, அவர் மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதோ அவர் நினைவில் இல்லை. தனக்கு நோய் ஏற்பட்டதோ, மறதி இருப்பதோ, தன்னிடம் குறை எதுவும் இருப்பதோ, எவற்றையும் அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை.

பல மாதங்களாக டாக்டர் ஸ்கொயர், யூஜினுடைய நினைவுக்கூர்மையைச் சோதனை செய்தார். ஒரு கட்டத்தில், யூஜின்னும் அவர் மனைவி பெவர்லியும் சாண்டியாகோவிற்கு தங்களுடைய மகளின் அருகாமையில் வாழ்வதற்காக சென்றுவிட்டனர். ஸ்கொயர் தன் ஆய்வினை அப்பொழுதும் தொடர்ந்து செய்து வந்தார். டாக்டர் ஸ்கொயர் யூஜின்னிடம் அவர் தங்கியிருக்கும் வீட்டினில் அறைகள் அமைந்திருக்கும் விதத்தை படமாக வரையுமாறு கூறினார். யூஜின்-னால் படுக்கையறை, சமையலறை எங்கிருக்கிறது என்று படம் வரைய முடியவில்லை. எவற்றையும் அவரால் நினைவு கூற முடியவில்லை. “காலை எழுந்தவுடன் எப்படி அறையைவிட்டு வெளியே செல்வீர்கள்?” டாக்டர் ஸ்கொயர் கேள்வியை எழுப்பினார்.

“உண்மையில் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.” யூஜின். ஸ்கொயர் தன்னுடைய கணினியில் பதில்களைப் பதிந்துகொண்டார். யூஜினுடைய கவனம் திசை திரும்பியது. அறையைச் சுற்றிலும் பார்த்தார். எழுந்து குளியலறைக்குச் சென்றார். சில நிமிடங்களில் டாய்லெட் ஃப்ளஷ் செய்யும் சத்தம் கேட்ட்து. யூஜின் கைகளைத் துடைத்தவாறு வந்து ஸ்கொயருக்குப் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். ஸ்கொயர் அடுத்த கேள்விக்குத் தயாரானார்.

தன்னுடைய வீட்டில் எந்த அறை எங்கு உள்ளது என்று படம் வரையத் தெரியாதவர், எப்படி குளியலறைக்குச் சென்று தன்னுடைய வேலைகளை முடித்துவர முடிந்தது என்று அப்பொழுது எவரும் அதிசயப்படவில்லை. ஆனால், அத்தகைய கேள்விகள், பழக்கங்களின் தாக்கங்களைப்பற்றிய அறிவியல் விஷயங்களை அறிந்துகொள்ள உதவியது. பழக்கங்கள் எந்த அளவுக்கு நம் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன என்று அறிந்துகொள்ள அந்தக் கேள்விகள் வழிவகுக்கின்றன.

யூஜின், ஸ்கொயருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, “மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது” கணினியைக் கைகாட்டித் தொடர்ந்தார். “நான் வேலை பார்த்தபொழுது ஆறடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பலகைகளில் இந்த இயந்திரங்களை வைத்திருந்தோம்.” என்று கூறினார்.


புதிய வீட்டுக்கு வந்தபிறகு, தினமும் யூஜினை வாக்கிங் அழைத்துசெல்வது பெவர்லிக்கு தேவையான ஒன்றாக இருந்த்து. மேலும் மருத்துவர்களும் யூஜினுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்று கூறியிருந்தார்கள். யூஜின் நீண்ட நேரம் வீட்டில் இருந்தால், பெவர்லியிடம், மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகளையேக் கேட்டு அவளைப் பைத்தியமாக்கிவிடுவார். அதிலிருந்து தப்பிக்கவும், பெவர்லி தினமும் யூஜினை வாக்கிங் அழைத்து செல்வதை ஒரு வழக்கமாக்க் கொண்டிருந்தார். தினமும் தன்னுடைய வீட்டைச் சுற்றி உள்ள தெருவில், ஒரே பாதையில் வாக்கிங் அழைத்துச் செல்வது அவருடைய வழக்கம்.

யூஜினை தொடர்ந்து கண்காணித்துவர வேண்டுமென்று, மருத்துவர்கள் பெவர்லிக்கு எச்சரிக்கை அளித்திருந்தார்கள். தப்பித்தவறிக் காணாமல் போய்விட்டால், அவருக்கு வீடு திரும்ப வழி தெரியாது என்று பெவர்லிக்கும் தெரியும். ஒரு நாள் பெவர்லி ஏதோ வேலையாக இருந்த நேரத்தில், யூஜின் தானாகவே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். யூஜின் ஏதாவது ஒரு அறையில் இருப்பாரென்று கருதி, பெவர்லியும் உடனடியாக்க் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து யூஜின் வீட்டில் இல்லாததை அறிந்த பெவர்லி மிகவும் கலவரமடைந்தார். வீட்டுக்கு வெளியே ஓடித் தெருவை நோட்டமிட்டார். பக்கத்து வீடுகளுக்கு சென்று விசாரித்தார். ஒவ்வொரு வீடும் ஒரே மாதிரி தோற்றமளித்ததால் யூஜின் எந்த வீட்டிலாவது நுழைந்திருக்கக் கூடுமென்று எண்ணினார். யூஜின் எங்கும் காணப்படவில்லை. பெவர்லி அழ ஆரம்பித்தார். யூஜின் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டால் என்னாவது? முகவரியைக் கூட சொல்லத் தெரியாதே? பல கேள்விகள் பெவர்லியின் மண்டையக் குடைந்தன. பதினைந்து நிமிடங்கள் கழித்து பெவர்லி சுய நிலைக்குத் திரும்பினார். போலீசுக்கு ஃபோன் செய்ய விரும்பி வீட்டுக்குத் திரும்பினார்.

பதற்றத்துடன் கதவைத்திறந்து பெவர்லி வீட்டுக்குள் நுழைந்தவுடன், யூஜின் வரவேற்பு அறையில் அமர்ந்து சாவகாசமாக டிவி பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டார். பெவர்லியின் கண்களில் கண்ணீரைக்கண்ட யூஜின் குழப்பமடைந்தார். தான் வீட்டைவிட்டு வெளியில் சென்றதோ, வெளியில் எங்கும் சுற்றியதோ, எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. பெவர்லி ஏன் வருத்தத்துடன் இருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை. பெவர்லி பைன் மரத்தின் விதைகளை மேசையின்மீது கண்டார். அவற்றைப் பக்கத்துவீட்டு தோட்டத்தில் அவர் பார்த்திருக்கிறார். யூஜின்-க்கு அருகில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டார். பைன்மரத்தின் விதைகளிலிருந்த மண் யூஜினுடைய கைகளிலும் இருந்ததை உணர்ந்தார். அப்பொழுதான் யூஜின் தானாகவே வாக்கிங் சென்று வந்திருப்பதை உணர்ந்து கொண்டார். வாக்கிங் சென்றுவிட்டு வரும்வழியில் பார்த்த சிலபொருட்களை யூஜின் கொண்டு வந்திருப்பது அவருக்குப் புரிந்தது.

அது மட்டுமல்லாமல், தானாகவே யூஜின் வீட்டுக்கு வழியறிந்து திரும்பி வந்திருக்கிறார்.

அதன்பிறகு யூஜின் தானாகவே சில சமயங்களில் வாக்கிங் செல்ல ஆரம்பித்தார். பெவர்லி தடுக்க நினைத்தாலும், அது பலனற்றதாகவே இருந்தது. “தனியாக செல்ல வேண்டாம் என்று நான் கூறினாலும், நிமிடத்தில் யூஜின் அதனை மறந்துவிடுகிறார். சில சமயங்களில், அவர் அறியாமல் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். அவரால் சரியாக வீடு திரும்பிவிட முடிகிறது என்பதை அறிந்து கொண்டேன். சிலமுறை பைன்மர விதைகளையும், சில கற்களையும் எடுத்து வருவார். ஒருமுறை ஒரு நாய்க்குட்டியைக் கூட எடுத்து வந்தார். அவை எப்படி வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை.” பெவர்லி மருத்துவரிடம் கூறினார்.

டாக்டர் ஸ்கொயர் மற்றும் அவரது உதவியாளர்களும் இந்த நிகழ்வுகளைக் கேட்டதும், யூஜினுடைய மூளையில், யூஜின் அறியாமலேயே நினைவில் நிறுத்தும் செயல்கள் நடக்கின்றன என்பதை உணர்ந்தனர். அதற்காக ஒரு சோதனை செய்ய விழைந்தனர். டாக்டரின் உதவியாளர், யூஜினுடைய வீட்டுக்குச் சென்று, யூஜினை அவர் வசிக்கும் வீட்டினை வரைபடமாக, மேப் வரையுமாறு கூறினார். யூஜினினால் பதிலளிக்க இயலவில்லை. வீட்டில் சமையலறை  எங்கிருக்கிறது என்றுகூட யூஜினினால் கூறமுடியவில்லை. பசித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதும், யூஜின் எழுந்து சமையலறைக்குச் சென்று கேபினட்டைத் திறந்து ஒரு பாத்திரம் நிறைய தின்பண்டங்களை எடுத்து வந்தார்.

அந்த வாரத்தில் மற்றொருநாள் யூஜினுடன் ஒரு பார்வையாளரும் வாக்கிங் சென்றார். ஒரு பதினைந்து நிமிடம் நடந்திருப்பார்கள். யூஜின் ஒன்றும் பேசவில்லை. ஆனால், யூஜின்தான் முதலில் நடந்து சென்றார். அவர் சென்றதைப் பார்த்தால் வழியை நன்கு அறிந்தவர்போல் தோன்றியது. யாரிடமும் அவர் வழிகேட்கவில்லை. திரும்பி வரும்பொழுது வீட்டுக்கு அருகில் வந்தவுடன், பார்வையாளர் யூஜினிடம் அவர் எங்கு வசிக்கிறார் என்று கேட்டார். யூஜின் “உண்மையில் எனக்குத் தெரியாது.” என்று பதில் கூறினார். பிறகு யூஜின் தானாகவே வீடுவரை சென்று, கதவைத்திறந்து சோஃபாவில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

புதிய விஷயங்களை, யூஜினினால் பற்றிக்கொள்ள முடிந்ததை டாக்டர் ஸ்கொயரால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆனால் இந்த புதிய விஷயங்கள் மூளையில் எங்கே சேகரிக்கப்படுகிறது? சமயலறை எங்கிருக்கிறது என்றுகூடத் தெரியாதவரால் எப்படி அங்கிருக்கும் ஒரு பாத்திரத்திலிருந்து தின்பண்டங்களை எடுக்க முடிகிறது? வீடு எங்கிருக்கிறது என்று அறியாதவரால் எப்படி வீட்டுக்குச் செல்ல முடிகிறது? புதிய விஷயங்கள், பாதிக்கப்பட்ட மூளையில் எங்கே முளைவிடுகிறது? டாக்டர் ஸ்கொயர் அதிசயித்தார்.  

- தொடரும்  

கண்டு மகிழ ஒரு காணொளி:

இதனை செய்ய முயற்சித்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

https://www.youtube.com/watch?v=NX7QNWEGcNI

10 comments:

  1. உங்கள் தொடரை படிக்க படிக்க வியப்பு மேலிடுகிறது. மனிதனின் மூளையில்தான் எத்தனை மர்மங்கள்! நினைவுகள் எப்படி எதனால் மூளைக்குள் தங்கியுள்ளன அல்லது எதனால் அவை அழிந்துபோகின்றன என்பதைப் பற்றி எத்தனை ஆராய்ந்தாலும் விடை கிடைக்காது போலுள்ளதே! தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!. மனித மூளை குறித்த அறிவியல் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்று நினைக்கிறேன். இயற்கையில், ஒவ்வொரு உயிரினமும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்தான். அதிலும் தாங்கள் சொல்வதுபோல், மூளையின் மர்மங்கள் இன்றளவில் விடைதெரியாத புதிர்தான்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. ஹென்றி மோல்சன் என்ற ஆச்சரியமான மனிதரின் நடவடிக்கைகள். படிக்க படிக்க திகைப்பாக இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!.

      ஆமாம். அவரது வாழ்வு மிகவும் பரிதாபத்துக்குரியதாகத் தோன்றுகிறது.




      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      Delete
  4. //நம் மூளை ஏன் சில விஷயங்களை முக்கியம் என்றும் சில விஷயங்களை தேவையில்லை என்றும் தேர்ந்தெடுத்து நினைவில் நிறுத்திக்கொள்ளவோ அல்லது அழித்துவிடவோ செய்கிறது?”//

    பலமுறை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஹென்றி மோல்சனும், யூஜின்னும் சில வகைகளில் ஒத்திருந்தாலும் பல வகைகளில் வித்தியாசப் படுகின்றனர். மூளை வேலை செய்யும் விதத்தை வைத்தே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டதொரு சக்தி இருப்பதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். இன்னும் நடப்பவைகளை, ஏன், எப்படி அறியும் அளவுக்கு மனிதன் முன்னேறவில்லை என்றே தோன்றுகிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete



  5. ஒரு வாரத்திற்கு மேல் தொலைபேசி இணைப்பு இல்லாததால் இணையத்தை உபயோகப்படுத்த முடியவில்லை. அதனால் தங்கள் பதிவை இன்று தான் படித்தேன்.

    கணினியில் அழிந்துபோனவைகளை திரும்ப கொண்டுவர முடியும் என்கிறபோது மூளையில் அதுபோன்று அழிந்துபோனவைகளை கொண்டுவரமுடியுமா என்பதை டாக்டர் ஸ்கொயரின் ஆய்வு தெளிவுபடுத்தும் என நினைக்கிறேன். ஆவலோடு தொடர்கிறேன்.

    நீங்கள் தந்த இணைப்பின் மூலம் காணொளியைப் பார்த்தபோது பிரமிப்பாகவும் பயமாகவும் இருக்கிறது.பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! கூறப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மூளையின் பகுதிகள் அழித்தேபோய்விட்டன. வைரஸ்கள் அதனைப் பாதித்துவிட்டன. இதுபோன்ற தருணங்களில் நினைவுகளை மீட்பது இயலாது என்று நினைக்கிறேன்.

      கணினிகளிலும் டேட்டாக்களின் மீது எழுதப்பட்டுவிட்டாலும் மீட்க இயலாது என்றும் கருதுகிறேன்.

      காணொளியில் இருப்பது போன்ற செயல்கள் பிரிட்டனிலும், ஃப்ரான்ஸிலும் பிரபலம் என்று எனது பிரிட்டனைச் சேர்ந்த நண்பன் கூறினான். அங்கு இத்தகைய செயல்களும் சட்டத்துக்கு புறம்பானவைகள்தானாம்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete