பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 22, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 5யூஜினுக்கு அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், அவரை அறியாமலேயே அவருக்கு ஏகப்பட்ட பழக்கங்கள் உருவாகியிருந்தன. ஆராய்ச்சியாளர்கள்தான் அவற்றை ஒவ்வொன்றாக தேடிப்பார்க்க வேண்டியிருந்தது. உதாரணமாக, யூஜினுடைய மகள் பெற்றோர்களைப் பார்க்க வீட்டுக்கு வருவாள். அப்பாவிடம் பேசிவிட்டு, சமையலறைக்குச் சென்று அம்மாவிடமும் பேசிவிட்டு, வாசலிலிருந்து சென்றுவருகிறேன் என்று கையாட்டிவிட்டு சென்றுவிடுவாள். யூஜினுக்கு மகள் தன்னிடம் பேசியது மறந்திருக்கும். அதனால், ஏன் மகள் தன்னிடம் பேசாமல் செல்கிறாள் என்று கோபப்படுவார். சில வினாடிகளில் ஏன் கோபப்படுகிறோம் என்பதே அவருக்கு மறந்துவிடும். ஆனால், கோபத்தின் வேகம் தணியாது. ஏன் கோபப்படுகிறோம் என்று அறியாமல், கோபம் மட்டும் நிலைத்திருந்து தானாகவே கோபம் தணிந்தாக வேண்டும் என்ற நிலையில் இருப்பார்.


 அவருடைய மனைவி பெவர்லி “ஏன் கோபமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், தெரியாது என்று கோபத்துடன் கூறுவார். நாற்காலியை உதைப்பது, மேஜையைக் குத்துவது என்று கோபமாக இருப்பார். அறைக்குள் வருபவர்களிடம், அந்த நேரத்தில் கோபமாகவே பேசுவார். ஆனால் கோபம் தணிந்தவுடன், அனைத்தையும் மறந்து நலம் விசாரிப்பார். “கோபம் வந்துவிட்டால், தானாகவே தீர்ந்தாக வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.” என்று பெவர்லி கூறினார்.

ஆனால் யூஜினுடைய பழக்கங்கள் மிகவும் பலவீனமாகக் கட்டமைக்கப் பட்டிருந்தன. அவருடைய துப்புக்களில் (தூண்டுதல்களில்) சிறிய மாற்றங்கள் இருந்தால்கூட அவரால் அந்த மாற்றங்களைச் சமாளித்து வழக்கமான செயல்களை செய்ய முடிவதில்லை. அவர் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால்கூட போதும், அவரால் வீடு திரும்பமுடியாது. யாராவது அவரைப் பார்த்து அழைத்து வரவேண்டும். வாசலிலிருந்து வெளியே செல்லுமுன் அவரது மகள் அவரிடம் ஒரு நிமிடம் உரையாடினால் போதும், அவருக்கு கோபம் வரும் பழக்கம் மறைந்து விடும். 


யூஜினிடம், டாக்டர் ஸ்கொயர் செய்த சோதனைகள், மூளையின் செயல்பாடு குறித்து அறிவியல் உலகில் புதிய கருத்துக்களைத் தோற்றுவித்தது. நம்மை அறியாமலேயே, சிலவற்றைக் கற்று அதன் விளைவாக நம்முடைய அறிவின் துணையின்றி சில முடிவுகளை நாம் எடுப்போம் என்று தெரிந்தது. அறிவையும், காரணத்தையும் கொண்டு நாம் முடிவெடுப்பதுபோல பழக்கத்தின் காரணமாகவும் நம்முடைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று யூஜினிடம் மேற்கொண்ட சோதனைகளின் வாயிலாக தெரிகிறது. நம்முடைய அனுபவங்கள், பழக்கமாக உருவாகிறது என்று நமக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால், அந்த பழக்கங்கள் மூளையில் பதிந்துவிட்டால், நாம் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்போம் என்று நம்மை அறியாமலேயே அவை தீர்மானிக்கின்றன.  

யூஜினிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து, டாக்டர் ஸ்கொயர் பழக்கங்களைப்பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டார். ட்யூக், ஹார்வர்ட், ஏல் போன்ற பல்கலைக்கழங்களும், கூகுள், மைக்ரோசாஃப்ட், ப்ராக்டர் அன்ட் கேம்பல் போன்ற நிறுவனங்களும், பழக்கங்கள் உருவாவதற்கான நரம்பியல், உளவியல் காரணங்களை அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டின. பழக்கங்கள், அவைகளினால் எப்படி உருவாக்கப்படுகின்றன, எப்படி மாற்றப்படுகின்றன என்ற விஷயங்களில் அவர்களின் கவனம் திரும்பியது.

பழக்கங்களுக்கான துப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு டிவி விளம்பரமாகவோ, ஒரு குறிப்பிட்ட மனிதரின் சகவாசமாகவோ, எது வேண்டுமானாலும் இருக்காலாம். செயல்முறைகள் மிகவும் சுலமானதாகவோ, சிக்கலாகவோ இருக்கும் சாத்தியங்கள் உள்ளது. அதற்கு கிடைக்கும் வெகுமதிகள் உணவாகவோ, இன்பம் தருவதாகவோ, பெருமையை அளிப்பதாகவோ இருக்கலாம்.

ஏனைய ஆராய்ச்சியாளர்களும், யூஜினிடம் ஸ்கொயர் கண்டறிந்த முடிவுகளே தங்களுடைய ஆராய்ச்சியின் இறுதியில் எதிரொளிப்பதைக் கண்டனர். பழக்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அதே சமயத்தில் பலவீனமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவை நம்மையறிமாலேயே உருவாகக்கூடும். நாம் வேண்டுமென்றே உருவாக்கவும் முடியும். நம் அனுமதியின்றி பலசமயங்களில் அவை உருவாகின்றன. ஆனால் அவற்றை நாம் வேண்டியவண்ணம் மாற்றியமைத்துக்கொள்ளமுடியும். நாம் நினைப்பதைக்காட்டிலும் நம் வாழ்வில் அவை முக்கிய பங்கு வகிக்கிறது. நமது மூளை அவற்றைப் பிடித்துக்கொண்டு, நமது இயல்பான சிந்தனைகளையும் மழுங்கவைத்து தங்களது எண்ணம்போல் நம்மை செயல்படவைக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடூட் ஆஃப் ஆல்கஹால் அனானிமஸ் – என்ற மது புழங்கிகள் பற்றிய ஆய்வு நிறுவனம் நடத்திய சோதனையில் எலிகளைப் பயன்படுத்தினர். எலிகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உணவுகளை அளித்தனர். காலப்போக்கில் எலிகளுக்கு உணவைத்தேடி அந்த இடத்துக்கு செல்வது பழக்கமாகிவிட்டது. ஒரு பொத்தானை அழுத்தியவுடன் எலிகள் தானாகவே உணவைத் தேடி அந்த இடத்துக்கு சென்றுவிடும். எலிகள் செல்லும் வழியில் கம்பிகளை வைத்து, எலிகளின் உயிருக்கு பாதகமில்லாதவகையில் மின்சாரத்தைப் பாய்ச்சினர். எலிகள் மின்சாரத்தால் தாக்குண்டன. இருந்தபோதிலும் பழக்கத்தை மாற்றமுடியாமல், மின்சாரத்தால் தாக்குண்டாலும், அவை அந்தப்பாதையிலேயே உணவை நோக்கி செல்வது நிற்கவில்லை. எலிகளின் உயிருக்கு சேதமில்லாமல், உணவில் விஷத்தைக் கலந்தனர். எலிகள் மின்சாரத்தால் தாக்குண்டாலும், உணவில் விஷத்தால் பாதிப்படைந்தாலும் அவற்றால் தங்களது பழக்கத்தைக் கைவிடமுடியவில்லை. மூளையில் பதிந்திருந்த பழக்கத்தைவிட்டு அவற்றால் விலகமுடியவில்லை.

இதையே மனித வாழ்க்கைக்குப் பொறுத்திப்பார்த்தால், நமக்கும் அந்த சோதனை முடிவுக்கும் உள்ள ஒற்றுமையை உணராமல் இருக்க முடியாது. நன்கு களைத்த நேரத்தில், குழந்தைகளுடன் மெக்டொனால், KFC உள்ள வழியில் செல்கிறீர்கள். விலை மலிவு. ருசியோ அற்புதம். கொஞ்சம் உடல் நலனுக்குத் தீங்கு. ஒருமுறைதானே பரவாயில்லை என்று சாப்பிடச் செல்கிறோம்.

ஆனால், நம்முடைய முழு ஒத்துழைப்பு இல்லாமலேயே சிறுகச் சிறுக அந்தப் பழக்கம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. ஆராய்ச்சிகள், குடும்பத்துடன் விரைவு உணவகத்தில் தொடர்ச்சியாக உண்ண விருப்பமில்லாததைக் காட்டுகிறது. ஆனால் நடைமுறை வாழ்வில், ஒரு மாதத்துக்கு ஒருமுறை என்று துவங்கி, பிறகு வாரம் ஒருமுறை என்றாகி, இறுதியில் வாரம் இருமுறை விரைவு உணவு என்ற ரீதியில் பழக்கமாகிவிடுகிறது. குழந்தைகள் உடல் நலனுக்கு தீங்காகும் அளவுக்கு பர்கருக்கு அடிமையாகிறார்கள். நார்த் டெக்ஸாஸ், மற்றும் ஏல் பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் ஏன் விரைவு உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள் என்று நடத்திய ஆராய்ச்சியில், மக்கள் தங்களை அறியாமலேயே ஒரு பழக்கத்தில் சிக்கிக்கொள்வதை அறிந்தார்கள். சில துப்புகளும், சில வெகுமதிகளும் மக்களுக்குக் கிடைத்தால் பழக்க வளையத்தில் அவர்கள் சிக்கிவிடுவதைக் கண்டறிந்தார்கள்.

மெக்டொனால் உணவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து மெக்டொனால் உணவகங்களும், ஒரே மாதிரியான வெளித்தோற்றம் மற்றும் உள்தோற்றத்தைக்கொண்டிருக்கும். பணியாளர்களும் ஒரே மாதிரி பேசும்படி பயிற்சியளிக்கப்பட்டிருப்பார்கள். அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியாக அமைந்து மனதுக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது. அனைத்து உணவுகளும் சுவையில் வேறுபாடின்றி நாக்கில் பட்டவுடன், சுவை நரம்புகளைத்தூண்டி, மூளைக்கு ஒரு பரவசத்தை அனுப்புமளவுக்கு உள்ளது. இவையனைத்தும் பழக்க வளையத்தை ஒரு வெகுமதியுடன் பூர்த்தி செய்ய ஏதுவாகிறது.

இருப்பினும் இந்த பழக்க வளையங்களும் மிகவும் பலவீனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் செல்லும் விரைவு உணவகம் மூடப்பட்டுவிட்டால், குடும்பம் வீட்டிலேயே உண்ணத்தொடங்கிவிடுவார்கள். அதற்காக வேறு இட்த்தைத் தேடிச்செல்வது பொதுவாக இருக்காது. சிறிய மாற்றங்கள் கூட இந்த பழக்க வளையத்தை உடைத்துவிடும். இந்தப் பழக்க வளையம் ஏற்படுவதை நாம் உணர்வதில்லை. இதனால் அவற்றின் தாக்கங்களையும், அவை எப்படி நம்மைக்கட்டுப்படுத்துகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்வதில்லை. கிடைக்கும் சிக்னலையும் வெகுமதியையும் நாம் புரிந்துகொண்டால், நாம் நமது தீய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியும். புதிய பழக்கங்களை ஏற்படுத்தவும் முடியும்.


-தொடரும்.
விலங்குகளைப்பற்றிய சில அதிசயமான உண்மைகள் :
10 comments:

 1. //பழக்கத்தின் காரணமாகவும் நம்முடைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.//

  பன்னாட்டு நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தி அதன் மூலம் மக்களை கவர்ந்து பின்னர் பழக்கத்தின் காரணமாக மக்களை அவைகளுக்கு அடிமையாக்கிவிடுகின்றன என்ற இந்த ஆய்வின் முடிவு உண்மையில் அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் கொடுக்கிறது.


  தாங்கள் தந்த காணொளி இணைப்பில் இதுவரை தெரியாத /அறியாத விலங்குகளைப்பற்றிய அதிசய உண்மைகள் தெரிந்துகொண்டேன். ஆனால் அந்த எலி சிரிப்பதைத்தான் பார்க்க இயலவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா !
   நானும் அந்த எலியின் காணொளியைப் பார்த்தேன். ஆனால் எலிகள் சிரிப்பதைக் காணவோ, கேட்கவோ முடியவில்லை. எலிகளால் சிரிக்க முடியும் என்று வேறு இட்த்திலும் படித்திருக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 2. அனுமதியின்றி உருவாகுவதை உடனே உணரா விட்டால்...?

  காணொளிக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே !
   ஆமாம். பொதுவாக பழக்கம் உருவான பிறகே, ஒரு பழக்கம் நம் அனுமதியின்றி உருவாகியுள்ளது தெரிய வருகிறது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 3. நம்முடைய மூளையின் செயல்பாடுகளில்தான் எத்தனை விந்தைகள். மனித மூளைக்குத்தான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகும் குணாதிசயம் உள்ளதா என்று சோதிக்க உங்களுடைய கடந்த பதிவைப் படித்ததும் நானும் என்னுடைய வீட்டில் விளையாட்டாக ஒரு சோதனை நடத்திப்பார்த்தேன். என்னுடைய வீட்டின் பின்புறத்திலிருந்து பின் வாசல் வழியாக கட்டை எறும்புகள் சாரை, சாரையாக வீட்டிற்குள் வந்து செல்வதை கண்டிருக்கிறேன். இவை ஏன் எதற்காக வருகின்றன என்று அவற்றின் வழியிலேயே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, சமையலறையில் குப்பைத் தொட்டியில் இட்டிருக்கும் காய்கறி கழிவு துகள்களை ருசி பார்க்கவும் தங்களுடன் கொண்டு செல்லவுமே அவை வருகின்றன என்பது. நான் என் மனவியிடம் அந்த தொட்டியை பின் வாசலுக்கு வெளியில் கொண்டு வைக்கச் சொன்னேன். குப்பை சேரும்போது அவற்றை உடனுக்குடன் கொண்டு சென்று அதில் இடச் செய்தேன். ஆனாலும் எறும்புகள் வழக்கம்போலவே வீட்டிற்குள் நுழைந்து குப்பைத் தொட்டி இருந்த இடம் வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை காண முடிந்தது. ஆனால் இது ஓரிரு தினங்கள் மட்டுமே நடந்தது. அதன் பிறகு குப்பைத் தொட்டியின் புதிய இடத்தைக் கண்டுக்கொண்டுவிட்ட எறும்புகள் வீட்டிற்குள் வருவதை கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்திவிட்டன. ஆக பழக்கத்திற்கு உலகின் அனைத்து ஜீவராசிகளும் அடிமைகள்தான் போலும். உங்களுடைய அழகான நடைதான் இத்தகைய சிக்கலான கட்டுரையையும் படிக்கு உதவுகிறது. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா !

   எறும்புகள் ஒரு அற்புதமான படைப்பு. எங்கோ, உணவு இருந்தாலும், யாரும் சொல்லாமலே எப்படி எறும்புகள் கண்டுபிடிக்கின்றன என்று எப்பொழுதும் நான் வியந்திருக்கிறேன். ஆராய்ச்சிகள் செய்யும் அளவுக்கு ஆர்வம் இருப்பது தாங்கள் இன்னும் ஓய்வு வயதை எட்டாமலேயே வேலையிலிருந்து ஓய்வாகிவிட்டதைக் குறிக்கிறது. இங்கு ஓய்வு வயதை எழுபதாக மாற்றுவதற்கு முயல்கிறார்கள். இப்பொழுது அறுபத்தேழு என்று நினைக்கிறேன். எப்படியோ எறும்புகளைக் கொல்லாமல் திசை திருப்பிவிட்டீர்களே.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 4. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
  இனி தொடர்வேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு. கரந்தை ஜெயகுமார் அவர்களே !

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 5. எலிகள் சிரிப்பதைக் கேட்டேன். பழக்கங்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்கும் இருப்பது ஆச்சரியம் தான்.

  மிருகங்கள் குறித்த உண்மைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 6. இங்கு தமிழ்நாட்டில் பல பரோட்டா கடைகள் நாக்கு ருசியில் மக்களிடம் பழக்கமான ருசியை வைத்து (மெக்டொனால்டு உணவகங்களைப் போன்றே) வியாபாரம் செய்கின்றன.

  ReplyDelete