பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, April 10, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - முன்னுரை

“The Power of Habit_ Why We Do What We Do”   இது  Charles Duhigg” –  என்பவரால் எழுதப்பட்டு, 2012-ல் வெளிவந்த நூல். பழக்கங்கள் எப்படி தோன்றுகின்றன, எப்படி அவைகளை தனி மனிதனுடைய முன்னேற்றத்துக்கும், சமுதாய முன்னேற்றத்துக்கும் நமக்குத் தேவையானபடி வளைத்து உபயோகித்துக்கொள்வது என்று விளக்கும் நூல். ஒவ்வொருவாரமும் சிறிது சிறிதாக மொழிபெயர்த்து எழுதலாம் என்று திட்டமிட்டுள்ளேன். என்னால் முடிந்தவரை மொழி பெயர்க்க முயற்சி செய்கிறேன். இனி புத்தகத்துக்குச் செல்வோம்.


முன்னுரை

அந்த பெண்மணி அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பங்கேற்பாளர். லிஸா ஆலன், அவளுடைய கோப்பின் விவரப்படி பதினாறு வயதில் புகைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாள். உடல்பருமன் பிரச்சனையினால் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டிருக்கிறாள். தற்போதைய வயது முப்பத்தி நான்கு. கடன் வசூலிக்கும் கம்பெனிகள், அவளுக்கு இருபது வயதிருக்கும்பொழுது, ஆயிரம் டாலர்களுக்காக விடாமல் அவளைத் துரத்தியிருக்கின்றன. வேலைக்கு ஆள் எடுக்கும் கம்பெனிகளின் கணக்குப்படி, அவள் அதிகபட்சமாக ஒரு வருடம்கூட ஒரு கம்பெனியில் நிரந்திரமாக தாக்குப் பிடித்ததில்லை.

ஆனால், ஆராய்ச்சியாளர்களின் முன்னால் அமர்ந்திருக்கும் லிஸா, மிகவும் துடிப்பு மிக்கவளாகவும், சீரான உடலுடன், ஒரு ஓட்டவீராங்கனைக்குரிய கால்களுடனும் தென்பட்டாள். முப்பத்தி நான்கு வயதாக இருந்தாலும், பார்வைக்கு ஒரு பத்து வயது குறைவாகத்தான் அவளை மதிப்பிட முடியும். அறையிலிருந்த அனைவருக்கும் ஒரு உடற்பயிற்சி போட்டி வைத்தால், கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடமுடியும்; லிஸாதான் வெல்வாள் என்று. அவளுடைய இன்றைய ரெக்காடுகளின்படி லிஸாவிற்கு கடன் எதுவும் கிடையாது. குடிக்கும் பழக்கம் முற்றிலுமாகக் கிடையாது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக, ஒரு வடிவமைக்கும் நிறுவனத்தில் தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருக்கிறாள்.

“நீ கடைசியாக சிகரெட்டைத் தொட்டது எப்பொழுது?” மெர்ரிலேண்ட்ஸ் ஆய்வுக்கூடத்தில் ஒவ்வொரு முறையும் லிஸாவிடம் கேட்கப்படும் கேள்விகள் தொடர்ந்தன. ஆய்வு நடத்தும் மருத்துவர் கேள்விகளைத் தொடர்ந்தார்.

“நான்கு வருடங்களாகின்றன. நான் மாரத்தானில் பங்கேற்க விரும்பினேன். அதற்காக அறுபது பவுண்டு எடை குறைந்திருக்கிறேன்.” தற்சமயம் லிஸா ஒரு மாஸ்டர் டிகிரி படிப்பதற்காக பல்கலைகழகத்தில் சேர்ந்திருக்கிறாள். ஒரு வீடுகூட வாங்கிவிட்டாள். அவளது வாழ்க்கை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.

அந்த அறையில் மூளைமருத்துவ நிபுணர், மனோதத்துவ நிபுணர், மரபணு நிபுணர் மற்றும் சமூகவியலாளர்கள் அனைவரும் இருந்தனர். அமெரிக்க தேசிய சுகாதாரத் துறையின் நிதியுதவியுடன், கடந்த மூன்று வருடங்களாக, தீய பழக்க வழக்கங்களிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய ஆய்வினை அந்த நிபுணர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். புகைப்பழக்கம், தன்னிச்சையாக கட்டுப்பாடின்றி அதிகம் உண்பவர்கள், குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள், பொருட்களை வாங்குவதற்கு அடிமையானவர்கள் போன்றவர்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு டஜனுக்கு மேற்பட்டவர்களிடம் அத்தகைய ஆய்வினை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் லிஸாவும் ஒருவர். ஆய்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் ஒரு ஒற்றுமை தென்பட்டது. அவர்கள் அனைவரும் தங்களது தீயபழக்கங்களிலிருந்து மிகச்சிறிய காலகட்டத்திற்குள்ளாகவே விடுபட்டிருக்கிறார்கள். எப்படி அவர்களால் தீயபழக்கங்களிலிருந்து மீண்டுவர முடிந்தது என்பதை ஆய்வாளர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர்.

அதற்காக ஆய்வில் பங்கேற்பவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்டறிய, அவர்களுடைய அன்றாடய பழக்கவழக்கங்களைப் பற்றி தெளிவுபெற,  அவர்களுடைய வீடுகளில் வீடியோக் கேமராக்களைப் பொருத்தினர். தொழில்நுட்பத்தின் உதவியுடன், அவர்களின் மண்டை ஓட்டுக்குள் ஊடுருவி உணர்வுக்கருவிகளைப் பொருத்தினர். அவர்களை அடிமைப் படுத்திய பொருட்களை அவர்களுக்கு எதிரே வைத்து, அவர்களுடைய D.N.A -வில் ஏற்படும் மாற்றங்களை, அவர்களுடைய மூளைக்குள் செல்லும் மின்னதிர்வுகளின் மூலம் அதே நேரத்தில் (லைவாக) ஆராய்ந்தனர். நரம்புகளின் வழியே மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் அளவுக்கு ஆராய்வது, எப்படி பங்கேற்பாளர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை கூறுவதே ஆராய்ச்சியாளர்களின் இலக்காக இருந்தது.

“மீண்டும் மீண்டும் பதில் கூறி உனக்கு அலுத்துப் போயிருக்கும். என்னுடன் ஆராய்ச்சி செய்பவர்களில் சிலர் நேரடியாக உன்னிடமிருந்து கேட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அமைந்திருக்காது. வேறு யார்மூலமாகவேதான் கேட்டிருப்பார்கள். நீங்கள் எப்படி புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டீர்கள் என்று மீண்டும் ஒருமுறை விளக்க முடியுமா?” ஒரு மருத்துவர் லிஸாவிடம் கேட்டார்.

“நிச்சயமாக.” லிஸா பதிலளித்தாள். “முதலில் கெய்ரோவில்தான் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன்.” அவசர அவசரமாக எந்தவித திட்டமும் இன்றி விடுமுறைக்காக கெய்ரோ செல்ல நேரிட்டதாக லிஸா கூற ஆரம்பித்தாள். அந்த விடுமுறைக்கு சிலமாதங்களுக்கு முன்பாக லிஸாவின் கணவன், ஒருநாள் வேலையிலிருந்து திரும்பியவுடன் லிஸாவை விட்டு விலகிவிடப் போவதாக கூறியிருந்தான். அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் நட்பு இருப்பதால் விலகிவிட விரும்புவதாக கூறினான். வஞ்சிக்கப்பட்டு, அதனால் விவாகரத்து வரை சென்றுவிட்டதை உணரவே லிஸாவுக்கு காலம் தேவைப்பட்டது. மனநிம்மதி இழந்த லிஸா கணவனைத் துப்பறியும் செயலில் ஈடுபட்டாள். அவனுடைய புதிய காதலிக்கு நடுஇரவில் ஃபோன் செய்து தொடர்பை துண்டித்து விடுதல் போன்ற தொந்தரவுகளை அளித்தாள். ஒருநாள் நன்கு குடித்துவிட்டு, கணவனுடைய காதலியின் வீட்டு கதவைத் தட்டி ஊரைக்கூட்டினாள். காதலியின் வீட்டை தீயிட்டு கொளுத்திவிடப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறாள்.

“அது என்னுடைய வாழ்வில் சொல்லிக்கொள்ளக் கூடிய தருணம் கிடையாது.” தொடர்ந்தாள். “எனக்கு பிரமிடுகளைப் பார்க்கவேண்டும் என்று நீண்டநாட்களாக ஆசை இருந்தது. என்னுடைய கிரடிட் கார்டுகளில் இன்னும் கொஞ்சம் பணம் இருந்திருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு கெய்ரோ செல்ல தீர்மானித்தேன்.”

அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான ஒலியைக் கேட்டு கெய்ரோவில் லிஸா கண்விழித்தாள். அன்று லிஸா கெய்ரோவிற்கு வந்த முதல்நாள் காலை. ஹோட்டலுக்கு வெளியே கும்மிருட்டாக இருந்தது. அரசல்புரசலாக தெரிந்த வெளிச்சத்தில் ஜெட்லாக் இன்னும் தீராத நிலையில் லிஸா சிகரெட்டை நாடினாள்.

குழப்பங்களினாலும், கவலைகளினாலும் நிலை தடுமாறி இருந்த லிஸா, எரியும் பிளாஸ்டிக் மணத்தை நுகர்ந்தபிறகே, தான் பற்ற வைத்தது சிகரெட் கிடையாது, ஒரு பேனா என்பதனை உணர்ந்தாள். கடந்த நான்கு மாதங்களாக அழுவது, சாப்பிடுவது, தன் நிலையை எண்ணி வெட்கப்படுவது, வேகப்படுவது, உதவிக்கு யாரும் இல்லையே என்று மனதுடைந்து இருப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தாள். கட்டிலில் இருந்த அவள் அழஆரம்பித்தாள். “துன்பம் என்ற சுழலில் சிக்கிக்கொண்டதுபோல் எண்ணினேன். என் எண்ணக்கோட்டைகள் அனைத்தும் கிளிஞ்சல் கோபுரங்களானதை உணர்ந்தேன். சரியாக ஒரு சிகரெட்டைக்கூடப் பற்ற வைக்க முடியாமல் தவித்தேன்.”

“என்னுடைய முன்னாள் கணவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். ஊருக்குத் திரும்பியபிறகு மீண்டும் ஒரு வேலையைத் தேடுவது எவ்வளவு கடினம்? எவ்வளவு வருடங்களாக உடலை சரியாக கவனிக்காமல்கூட வாழ்ந்துவிட்டேன்! படுக்கையிலிருந்து எழுந்து தண்ணீர் கூஜாவைத் தரையில் வீசி எறிந்தேன். கண்ணாடி சில்லுகள் சிதறி கூஜா உடைந்து சுக்குநூறாகியது. முன்பைவிட அதிகமாக அழஆரம்பித்தேன். ஏதாவது செய்தாகவேண்டும் என்ற வெறி எனக்குள் உண்டானது. குறைந்தபட்சம், ஒரு விஷயத்தையாவது என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.”

லிஸா குளித்துமுடித்துவிட்டு ஹோட்டலைவிட்டு வெளியேறி, டாக்சியில் கிஸா பிரமிடுக்குச் சென்றாள். சுயபட்சாதாபத்தில் மூழ்கிப்போயிருந்த லிஸா, கிஸா பிரமிடுக்கு முன் நின்றபோது, வறண்ட பாலைவனத்தில் ஒரு நிமிடம் அனைத்து துக்கங்களையும் மறந்தாள். தனக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாள். வாழ்க்கையை நகர்த்த ஏதாவது ஒரு இலட்சியத்தின் தேவையிருப்பதை உணர ஆரம்பித்தாள்.

டாக்சியில் அமர்ந்தபடி தனக்குள் ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டாள். ஹோட்டலுக்குத் திரும்பிய பிறகு, பாலைவனம் முழுவதையும் கால்நடையாக ஒருமுறை கடப்பதென்று முடிவெடுத்தாள்.

அது ஒரு பைத்தியக்காரத்தனமான தீர்மானம் என்பது லிஸாவுக்கு நன்கு தெரியும். பேங்க்கில் பணம் கிடையாது. உடல் நிலையைப்பற்றியோ சொல்வதற்கில்லை. உடல் பருமனும் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை. எந்த பாலைவனத்தை பாதசாரியாகக் கடக்கப்போகிறாள் என்பதும் தெரியாது. ஆனால் அந்த நேரத்தில் அவள் எதைப்பற்றியும் யோசிக்க விரும்பவில்லை. யோசித்தாலும் பிரயோஜனம் இல்லை. ஏதாவது ஒன்றில் முழுமனதுடன், கண்ணும்கருத்துமாக கவனம் செலுத்தியாகவேண்டும். லிஸா ஒருவருடத்தில் தன்னை தயார்செய்து கொண்டு அந்தப் பாலைவனத்தைக் கடக்க முடிவெடுத்தாள். அந்த நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க அவள் ஏகப்பட்ட தியாகங்கள் செய்யவேண்டியிருந்தது.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அவர் புகை பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும்.

பதினோரு மாதங்களுக்கு பிறகு வசிப்பதற்கு வசதிகளைக் கொண்ட உறுதியுடன் (கேரவன்) மற்றும் ஒரு அரை டஜன் மக்களுடன் லிஸா பாலைவனத்தைக் கடப்பதற்காக வந்து இறங்கினாள். கேரவனில் உணவு, நீர், மேப், GPS உபகரணங்கள், வாக்கிடாக்கிகள் மற்றும் தேவையான அனைத்தும் இருந்தன. புகை பிடிப்பதை நிறுத்தி விட்டதால் மட்டும் அனைத்து மாற்றங்களும் வந்து விடுமா?

டாக்சியில் இருந்த லிஸாவிற்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது. அறையிலிருந்த விஞ்ஞானிகளுக்கும், லிஸா பாலைவனத்தில் மேற்கொண்ட நடைப்பயணம் பற்றிய விவரங்கள் தேவையற்றது. கெய்ரோவில் சோகத்தின் வடிவாக அபலையாக நின்று கொண்டிருந்த லிஸாவின் எண்ணங்களில் ஏற்பட்ட சிறிய மாற்றம், புகைபிடிப்பதை சுத்தமாக விட்டொழிக்க வேண்டுமென்ற குறிக்கோள் லிஸாவின் வாழ்வில் ஒவ்வொரு அங்கத்திலும் ஏகப்பட்ட நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக லிஸாவின் விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் இதனை உணர ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் புகைப்பதை நிறுத்தியதற்கு பதிலாக லிஸா நடை ஓட்டத்தை தனது தினசரி வழக்கமாக எடுத்துக் கொண்டாள். அந்தப் பழக்கம், அவளை, அவள் எந்த மாதிரியான உணவுகளை உண்ணுகிறாள் என்பதைப் பற்றி சிந்திக்க வைத்தது. தன்னுடைய இலக்கினை அடைய பணம் தேவைப்பட்டதால், அவள் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கும் பழக்கமும் வந்தது. ஒவ்வொன்றாக நல்ல மாற்றங்கள் அவள் வாழ்வில் ஏற்பட ஆரம்பித்தன. சில மாதங்களில் மாரத்தானில் பங்கேற்க ஆரம்பித்தாள். மேற்படிப்பு படிக்கவும் செய்தாள். தற்போது வீடும் வாங்கி, திருமணத்திற்கு நிச்சயத்திருக்கிறாள். முத்தாய்ப்பாக விஞ்ஞானிகளின் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாள்.

லிஸாவின் மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்தனர். அவளுடைய பழைய தீய பழக்கவழக்கங்களின் நரம்புகளின் கூட்டங்களை புதிய பழக்கவழக்கங்களின் நரம்புகளின் கூட்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. பழைய பழக்கங்களின் மின்அதிர்வுகளை இன்னும் காணமுடிந்தது. ஆனால் அவற்றை, புதிய பழக்கங்களின் அதிர்வுகள் அதனைக்காட்டிலும் அதிகமாக சூழ்ந்திருந்தன. லிஸாவின் பழக்கவழக்கங்கள்மட்டும் மாறிவிடாமல் லிஸாவுடைய மூளையின் கூறுகளும் மாறிவிட்டன.

லிஸா கெய்ரோ சென்றிருந்ததாலோ, அவளுக்கு விவாகரத்து நடந்திருந்ததாலோ அவள் நடைப்பயணம் மேற்கொண்டதாலோ அவளிடம் மாற்றம் ஏற்படவில்லை. லிஸா முதலில் ஒரேயொரு பழக்கத்தின்மீது மட்டும் முழு கவனம் செலுத்தினாள். அவள் புகைக்கும் பழக்கத்தில்மட்டும் முழுக்கவனம் செலுத்தியிருக்கிறாள். ஒரேயொரு பழக்கத்தின்மீது முழுக்கவனம் செலுத்துவதன் மூலம் (இது முதன்மை பழக்கம் என்று அழைக்கப்படுகிறது) லிஸா தனது அனைத்து பழக்கங்களையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

தனிப்பட்ட மனிதரால் மட்டும் இத்தகைய பழக்கங்களை மாற்றமுடியும் என்று எண்ண வேண்டாம். நிறுவனங்களும், பழக்கங்களில் கவனம் செலுத்தினால் முழு நிறுவனத்திலும் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பிராக்டர் & கேம்பல், ஸ்டார்பக்ஸ் மற்றும் டார்கெட் போன்ற நிறுவனங்கள் இத்தகைய பழக்கங்களைத் தோற்றுவித்து வேலை செய்பவர்கள் எப்படி வேலை செய்யவேண்டும், எப்படி உரையாடவேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் எப்படி பொருட்களை வாங்க வேண்டும் என்றும் நெறிப்படுத்தி இருக்கிறார்கள். வேலை செய்பவர்களும், வாடிக்கையாளர்களும் அவர்களை அறியாமலேயே நிறுவனங்கள் விரும்பும் வண்ணம் பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகிறார்கள்.

“சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களூடைய ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை உங்களிடம் காட்ட விரும்புகிறேன்.” ஒரு ஆராய்ச்சியாளர் லிஸாவிடம் கூறினார். கம்ப்யூட்டர் ஸ்கீரினில் லிஸாவிடைய மூளைப்பகுதி தெரிந்தது. “நீ உணவினைக் காணும்பொழுது, மூளையின் இந்த பகுதி முனைப்புடன் இருக்கிறது. இந்தப் பகுதிதான் உண்ணும் இயக்கத்தை ஏற்படுத்தும் பகுதி. உன்னுடைய மூளை, உண்ணவேண்டும் என்னும் ஏக்கத்தை இன்னும் உண்டாக்கிக்கொண்டுதான் இருக்கிறது.” மூளையின் நடுப்பகுதியைச் சுட்டினார். “இருந்தாலும், இந்த இடத்தில் புதிய முனைப்புகள் தோன்றியிருக்கின்றன.” முன்நெற்றிக்கு அருகில் உள்ள இடத்தைச் சுட்டினார். “இங்குதான் மனதளவில் சுயக்கட்டுப்பாடு தோன்றுகிறது என்று நினைக்கிறோம். ஒவ்வொரு முறையும் உன் மூளையின் இந்த பகுதிதான் மிகவும் முனைப்புடன் தோன்றுவது தெரிகிறது.”

லிஸா அனைத்து ஆராய்ச்சியாளர்களும் மிகவும் விரும்பி நோக்கும் பங்கேற்பாளராக இருந்தாள். லிஸாவுடைய மூளையின் ஸ்கேன்கள், பழக்க வழக்கங்கள் மூளையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை துல்லியமாக வேறுபடுத்தி பார்க்க முடிந்ததே அதற்குக் காரணம். “நீங்கள் முடிவெடுப்பது எப்படி பழக்க வழக்கங்களாக மாறுகிறது, என்று உணர்வதற்கு மிகவும் உதவி செய்திருக்கிறீர்கள்”. லிஸாவிடம் டாக்டர் கூறினார்.

அறையில் இருந்த அனைவரும் ஒரு முக்கியமான எல்லையை கண்டுபிடித்துவிட்டதாக உணர்ந்தார்கள். ஆமாம் உண்மையில் கண்டுபிடித்துவிட்டார்கள்.


- தொடரும்


இயற்கையின் அதிசயம் – மொனார்க் வண்ணத்துப்பூச்சி


இயற்கையின் அமைப்பில் பூச்சிகளின் வளர்சிதைமாற்றம் ஒரு பெரிய அதிசயமாகும். முட்டையிலிருந்து புழுவாகமாறி, புழுவிலிருந்து கூட்டுப்புழுவாக மாறி, அதிலிருந்து வண்ணத்துப்பூச்சி உருவாகிறது. மொனார்க் வகை வண்த்துப்பூச்சிகள் வட அமெரிக்காவிலும், கனடாவிலும் வாழ்கின்றன. இவைகள் வளர்சிதைமாற்றம் அடைந்து வண்ணத்துப்பூச்சியாக உருமாறுவது ஒரு பொதுவான அதிசயம். அதையும்தவிர இந்த மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள், குளிர்காலத்தை சமாளிக்க, கிட்ட்த்தட்ட 2,500 மைல்களைத் தாண்டி, மெக்ஸிக்கோவுக்கு இடம்பெயர்கின்றன. 

முதல் மூன்று தலைமுறைகள் அமெரிக்காவில் வசிக்கின்றன. அப்பொழுது அவற்றின் ஆயுட்காலம் பொதுவாக இரண்டு மாதங்கள் மட்டுமே. அதாவது மூன்று தலைமுறைகளையும் சேர்த்து ஆறு மாதங்கள். நான்காவது தலைமுறை வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே மெக்ஸிக்கோவுக்கு இடம்பெயர்கின்றன. இந்த நான்காவது தலைமுறை வண்ணத்துப்பூச்சிகளின் ஆயுட்காலம் ஆறுமாதங்களாகும். மலைகளையும், காடுகளையும் தாண்டி இவை இடம்பெறுகின்றன. தனது நான்காவது தலைமுறை முன்னோர்கள் சென்ற வழியையே இவை பின்பற்றிச் செல்கின்றன. அவர்கள் வசித்த அதே மரங்களையே இவை நாடிச் செல்கின்றன. நான்காம் தலைமுறை மூதாதையர்கள் கடந்த அதே கணவாய்களையேக் கடக்கின்றன.

இப்படித்தான் செல்லவேண்டுமென்று இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

காடுகளை அழிப்பதாலும், இயற்கையின் மாற்றத்தாலும் இந்த வண்ணத்துப்பூச்சிகளின் இனம் குறைந்துகொண்டே வருகிறது. வேர்ல்ட் ஹெரிட்டேஜ் லிஸ்ட் இந்த வண்ணத்துப்பூச்சிகளுக்காக சில காடுகளை அழிக்கக்கூடாது என்று அர்ப்பணித்துள்ளது.

சில காணொளிகள்:

http://spanglishbaby.com/2011/11/the-monarch-butterfly-biosphere-reserve-a-world-heritage-site-in-mexico-2/

http://video.nationalgeographic.com.au/video/kids/animals-pets-kids/bugs-kids/monarch-butterflies-kids/

14 comments:

  1. ‘பழக்கங்களின் ஆதிக்கம்’ தொடரின் ஆரம்பமே மேற்கொண்டு என்ன நடந்தது என அறிய ஆவலைத் தூண்டுகிறது. மொழியாக்கமும் அருமை.தொடருங்கள் வாழ்த்துக்கள்!

    மொனார்க் வண்ணத்துப்பூச்சி பற்றிய இரண்டு காணொளிகளையும் கண்டேன். அவைகள் பறப்பதைப் பார்க்கையில் அவைகள் போட்டி போட்டுக்கொண்டு பறப்பதுபோல் இருந்தது. இயற்கையின் அதிசயத்தில்/கொடையில் இதுவும் ஒன்று போலும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா! இது கொஞ்சம் பெரிய புத்தகம். ஆரம்பத்தில் உள்ள விறுவிறுப்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

      மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள் பெரிய அதிசயம்தான். இயற்கையில் மனிதனால் அறியப்படாத அதிசயங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. மொனார்க் வண்ணத்துப்பூச்சி அற்புதம்...

    புதிய முனைப்போடு... சுவாரஸ்யத்தோடு... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே. உங்களுடைய தொடர்ந்த ஆதரவு மிக்க ஊக்கமளிக்கிறது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. மிக அருமையான தொடர். எப்போதும் போலவே பிசிறில்லாத மொழிமாற்றம். ஆங்கிலத்தில் உள்ளதைப் போன்ற அதே விறுவிறுப்பு. இனி குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்காக இதற்காகவே காத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் ஒரு தொடர். மகிழ்ச்சியுடன் தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா! மாதமொருமுறை அல்ல. வாராவாரம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதிவிடுவதாக இருக்கிறேன். கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் என்றே நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. ஆச்சரியம்.. இதே புத்தகத்தை லைப்ரியிலிருந்து எடுத்து வந்தேன்.. இருக்கும் சில தேவையற்ற பழக்கங்களால் (சோம்பேறித்தனம்.. எதையும் தள்ளிப்போடும் எண்ணம்..) படிக்காமலே திருப்பிக் கொடுத்தேன்..

    நல்லவேளை.. நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்.. பழத்தை உரித்தே கொடுத்து விட்டீர்கள்! (மொழிபெயர்த்துக் கொடுப்பதை சொன்னேன்)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.பந்து அவர்களே. மொழிபெயர்ப்பில் படிக்கவேண்டுமானால் வாராவாரம் காத்திருக்கவேண்டும். ஓரளவுக்கு கைப்பிரதி எழுதியிருக்கிறேன். ஆனால் கணினியில் ஏற்ற அதிக நேரம் பிடிக்கிறது. அதனால்தான் தவணையில் பதிவிடவேண்டியுள்ளது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. மிகவும் எளிய நடை, நேர்த்தியான எழுத்து. தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். பிற மொழிக்கதைகளை தமிழில் மொழி பெயர்த்து எழுதுவது நல்ல பணி. மகாகவி பாரதியின் அறிவுரையும் இதுதான். பாடல் வரிகள் நினைவில்லை.

    அன்புடன் வெங்கட்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வெங்கட்.
      “சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியார் பாடலைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  6. மீண்டும் மற்றொரு சுவையான தொடர். தொடர்ந்து படிப்பேன் என்று நம்புகிறேன். சிறு விபத்து மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பல பதிவுகளை தொடர்ந்து வாசிக்க இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      நேரமிருக்கும்பொழுது படியுங்கள். தங்களுக்கு விபத்து என்று, தங்களுடைய பின்னூட்டத்தில் பார்த்தேன். தங்களது ஃபோன் நம்பரைத் தேடினேன். எங்கும் தாங்கள் குறிப்பிடவில்லை. உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். நாம் பூமியில் இருக்கும்வரை யார் வராவிட்டாலும், நம் உடல் நம் கூடவே வரும். அதனால் எப்பொழுதும், உடலை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை உடையவன் நான். ஆத்மா நாம் சென்றபிறகும் தொடர்வதால் அதனை உடலைவிட அதிகமான கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  7. உடனடியாக வந்து வாசிக்க முடியவில்லை. அருமையான தொடர் என்பது புரிகிறது. தொடர்ந்து வாசிக்க முயல்கிறேன்.

    வண்ணத்துப் பூச்சிகள் குறித்த தகவல்கள் புதியது. அது ஏன் நான்காம் தலைமுறை வண்ணத்துப் பூச்சிகளுக்கு மட்டும் ஆயுட்காலம் கூட இருக்கிறது என்பதற்கு ஏதானும் காரணம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.
      புறப்பட்ட இடத்துக்கு திரும்பி வர ஆறு மாதங்கள் பிடிப்பதால், நான்காவது தலைமுறை ஆறு மாதங்கள் வாழ்கின்றன என்று நினைக்கிறேன். இயற்கையின் அதிசயங்களை யாரால்தான் சரியாக விளக்கமுடியும்?


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete