பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, December 12, 2013

கதம்பம்-18

சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-9

ஃப்ராய்ட் பற்றிய பொதுவான விமர்சனங்கள்:

ஃப்ராய்டின் கருத்துக்களை கண்மூடித்தனமாக ஒத்துக்கொள்பவர்களும், அதே விதத்தில் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு முனைகளுக்கும் செல்லாமல் இடைப்பட்ட நிலையில் அவருடைய கருத்துக்களை அளவிடுவதே சரியானதாக தோன்றுகிறது.

ஃப்ராய்ட் பாலுணர்வை அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரமாகக் கருதுவதையே, அவர் மீதான பொதுவான விமர்சனமாக இருக்கிறது. நன்மை, தீமை என்று அனைத்து பண்புகளுக்கும் அதீதமான பாலுணர்வு அல்லது அழுத்தப்பட்ட பாலுணர்வே காரணம் என்று அவர் கூறுகிறார். பாலுணர்வைத் தவிர வேறொன்றும் இல்லையோ என்ற கேள்வியினால், பொதுவாக அவருடைய கருத்துக்களில் ஐயம் ஏற்படுகிறது. பிற்காலங்களில் இறப்பதற்கான உணர்வும் இருப்பதாக, ஃப்ராய்ட் கூறியுள்ளார்.
உண்மையில் சொல்லப்போனால், நமது அதிகமான செயல்களுக்கு பாலுணர்வே முக்கியமான தூண்டுதலாக அமைகிறது. விளம்பரங்கள், ஊடகங்கள் அனைத்தும் பாலுணர்வைச் சுற்றியே கண்ணாமூச்சு விளையாடுகிறது. இருப்பினும், பாலுணர்வைத் தழுவியே வாழ்க்கை அமைவதாக நாம் உணர்வதில்லை.

ஃப்ராய்டின் காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடையே நினைக்க முடியாத அளவுக்கு சமூகத்தில் மாற்றங்கள் வந்துவிட்டது. ஃப்ராய்டின் காலத்தில் பாலுணர்வு என்பது ஒரு பாவமான செயலாக கருதப்பட்டது. அத்தகைய எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தியதன், பெரும்பங்கு ஃப்ராய்டையே சேரும். ஃப்ராய்டின் குருவான ஃப்ரூயரும் கூட, ஃப்ராய்ட் அளவுக்கு நோயாளிகளின் பிரச்சனைகளை அணுக முடியவில்லை. ஃப்ராய்டின் முக்கியமான தவறானது, அனைத்து விஷயங்களையும், மக்களுடைய நாகரிகங்களைப் புரிந்துகொள்ளாமல் பொதுமைப்படுத்தியதே ஆகும்.

அவர் மீதான மற்றொரு விமர்சனமானது, ஆழ்மனது உணர்வுகளை, இயல்பு மனதுக்கு மாற்றினால், அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுவதாகும். ஆய்வாளர்கள், ஆழ்மனது மறைப்பதற்கான காரணமே, அவை தெரிந்துகொள்ளத் தேவையில்லை என்பதனால்தான் என்று கருதுகின்றனர்.

ஒருவருடைய செயல்களுக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்ற எண்ணம் இருந்த காலத்தில், சமூகத்துக்கும் அதில் முக்கிய பங்கு உள்ளது என்று ஃப்ராய்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆணும் பெண்ணும் இறைவனால் படைக்கப்பட்டு, கடமைகளும், செயல்களும் வரையறுக்கப்பட்டுவிட்டது என்று நினைத்த காலத்தில், சூழ்நிலைகள் அவர்களை மாற்றியமைக்கின்றன என்று ஃப்ராய்ட் கூறியுள்ளார்.

இரண்டாவதாக சில பிர்ச்சனைகளுக்கு, மூல காரணத்தைக் கண்டுபிடித்து உணர்வதால், பிரச்சனைகள் விலகுவதும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவயதில் சரியாக நடத்தப்படாத குழந்தைகள், பெரியவர்களான பிறகு அதற்குரிய பிரச்சனைகளோடு வளர்கிறார்கள். இந்த பிரச்சனைகளை உணர்ந்துகொள்ளும்பொழுது அவர்கள் இயல்பு நிலைக்கு மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மூன்றாவதாக, இயல்பு மனதின் தற்காப்புக்கான செயல்களை நம்மையறியாமலே நாம் மேற்கொள்வது உண்மையே. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதையும் நாம் உணரமுடியும்.

இறுதியாக மனோவியல் சிகிச்சை முறைகளை ஒரு வரைமுறையாக ஒழுங்குபடுத்திய பெருமையும் ஃப்ராய்டையே சாரும். ஃப்ராய்டின் கருத்துக்களை ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட, அவருடைய மருத்துவ முறைகள் மற்றும் நோயாளிக்கும் மனோவியலாளருக்கும் நல்ல ஒத்துழைப்பு இருப்பதன் அவசியத்தை மறுப்பதில்லை.

ஃப்ராய்டின் கருத்துக்களை அவர் வாழ்ந்த காலகட்டத்துக்கும், நாகரிகத்துக்கும் இணைத்து பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய கருத்துக்களின் தாக்கத்தை நன்கு உணரமுடியும். இன்றைய ஆராய்ச்சியாளர்களும், தங்களது கருத்துக்களை ஃப்ராய்டுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். மனோவியலில், ஃப்ராய்டைக் கலக்காமல் ஆராய்ச்சிகளைத் தொடர்வது என்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

முற்றும்.




திருவள்ளுவரின் பத்து கட்டளைகள் – கற்றல் (கேள்வி)
  
கடந்த நூற்றாண்டில், தத்துவவாதி  (Bertrand Russell)  பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அவர்களின் பத்து கட்டளைகளை சென்ற பதிவில் எழுதியிருந்தேன். அவற்றுள் சில கட்டளைகள் இன்றைய சூழலுக்கு, நடைமுறைபடுத்துவது பிரச்சனையை அதிகமாக்கும். கேள்வி அதிகாரத்தில், ரஸ்ஸல் கட்டளை போன்று, திருவள்ளுவரின் கட்டளைகளை இங்கே காணலாம். இன்றைக்கும் ஒத்துக்கொள்ளக் கூடிய வகையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மண்ணில், இந்த அளவுக்கு சிந்திக்கும் சான்றோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்க பெருமிதமாக உள்ளது.

1) அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத
உட்கோட்டை.

2)
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக்
காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

3)
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி
ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான்
அறிவுடைமையாகும்.

4)
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு
சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே
அறிவுடைமையாகும்.

5)
உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக
மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது
அறிவு.

6)
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும்
அப்படியே வாழ்வது அறிவு.

7)
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்
சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

8)
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது
அறிவாளிகளின் செயல்.

9)
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர்
நடுங்க வரும் துன்பமே இல்லை.

10)
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்,
அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். 


கற்பது தொடர்பான மிக முக்கியமான இணைய தளங்கள்:

இணையத்தில் இலவசமாக, படிக்க விரும்புபவர்களுக்கு இவை உதவும்.










8 comments:

  1. Replies
    1. உடனடியான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே !.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. திருவள்ளுவரின் பத்து கட்டளைகள் காலம் கடந்து நிற்பவையாகும் . உலகின். முதல் மொழி என கருதபடுவதும் கூட இவருடைய குறள்களால்தான் என்றாலும் மிகையாகாது . ஃப்ராய்டின் தொடரும் அருமையாக முடிந்துள்ளது . பாராட்டுகள் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நூல்களில் திருக்குறள் முக்கியமான ஒன்றாகும். உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்று எங்கோ படித்திருக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  3. ஆமாம். திருக்குறள் காலம் கடந்து இன்றும் வாழ்வியலுக்கு உகந்ததாக உள்ளது. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.பரமசிவம் அவர்களே !
      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவுக்கு சிந்திக்கும் நிலையில் ஒருவர் இருந்தாரென்றால், அந்த சமூகம் எப்படிப்பட்ட உயர் நிலையில் இருந்திருக்கவேண்டும்? இன்றளவுக்கும் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவில் உள்ளது ஆச்சரியம்தான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  4. //ஃப்ராய்டின் காலத்தில் பாலுணர்வு என்பது ஒரு பாவமான செயலாக கருதப்பட்டது.// ஏன் இப்போது கூட சமூகத்தில் உள்ள சிலரால் அப்படித்தான் பார்க்கப் படுகிறது.

    சிக்மண்ட் ஃப்ராய்டடின் அறிமுகம் தொடர்மூலம் என்னைப்போன்ற பலருக்கு அவரைப்பற்றி தெரிந்துகொள்ள/ புரிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி! தொடர் அதற்குள் முடிந்தது ஏமாற்றமே.

    மேலும் இது போன்ற தொடர்களை எதிர்பார்க்கிறேன்.


    தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லாத தொடாத கருத்துக்களே இல்லை என்பது தெரிந்ததே. அவரது கட்டளைகள் பல உண்டு என்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்த பத்து கட்டளைகளை வெளியிட்டமைக்கு நன்றி.அதோடு அந்த குறட்பாக்களின் எண்ணிக்கையையும் தந்திருக்கலாம். இளைய தலைமுறைக்கு ஏன் மற்றவர்களுக்கும் அது உதவியாய் இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      சிக்மண்ட் ஃப்ராய்ட் குறித்து அதிகமாகப் படித்ததில்லை. மேலும் அவருடைய சில கருத்துக்கள், இன்றைய தேதிக்கு சரியாகப் படவில்லை. ஈடிபஸ் காம்ப்லெக்ஸ், காஸ்ட்ராக்ஷன் பயம் போன்ற கருத்துக்களில் இந்திய சமூகத்துக்கு ஒத்துவராதவைகள் என்று நினைத்ததால், அவைகளைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. அநேகமாக தொடராகத்தான் எழுதுவதாக இருக்கிறேன். இல்லையேல், எதைப்பற்றி எழுதுவது என்று எப்பொழுதும் யோசிக்க வேண்டும்.

      இங்கே குறிப்பிட்டுள்ள திருக்குறள்கள், 43 – ஆவது அதிகாரமான “அறிவுடைமை” தலைப்பில் உள்ள 421 முதல் 430 வரை உள்ள குறள்கள்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete