பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, November 14, 2013

கதம்பம்-14


சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-5

தவிப்பு, படபடப்பு, ஆன்ஸைட்டி:

ஃப்ராய்ட் வாழ்க்கை சுலபமானது அல்ல, என்று கூறுகிறார். யதார்த்தத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தன்முனைப்பு நிலை மனமானது, கீழ் மனதுக்கும், மேல் மனதுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளைக் குறைக்கத் தன்னால் முடிந்தவரை முயற்சிக்கிறது. ஆனால் வேறுபாடு அதிகமாகி தவிப்பு அதிகமானால், தன் முனைப்பு மனம் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

தன்முனைப்பு நிலை மனமானது எதிர்மறையான இரண்டு சக்திகளுக்குமிடையில் சிலசமயங்களில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. சில நேரங்களில் அதிக அளவுக்கு அச்சமுற்றாலோ, ஆவேசப்பட்டாலோ ஒருவர் தன்னிலையை இழப்பதை இதனால் ஏற்படுகிறது. இது தவிப்பு நிலை (ஆன்சைட்டி) என்றழைக்கப்படுகிறது. சில நேரங்களில் அப்படிப்பட்ட நிலை வந்துவிடுமோ என்ற சிந்தனை வந்தாலே ஆன்சைட்டி அட்டாக் வந்துவிடவும் சாத்தியங்கள் உள்ளது. இது தன்முனைப்பு நிலை மனதுக்கு ஒரு உயிர், உயிர்வாழத் தேவையான ஆதாரங்களுக்கு ஆபத்து உள்ளது என்ற சிக்னலை இதன் மூலம் அனுப்புகிறது.

ஃப்ராய்ட் தவிப்பை மூன்றாக வரையறுக்கிறார். யதார்த்தமான தவிப்பு – இது பொதுவாக வரக்கூடிய பயம் ஆகும். ஒருவர் அருகில் ஒரு பாம்பினைத் தூக்கிப்போட்டால் வரக்கூடிய பயத்தினை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது வெளியிலிருந்து வரக்கூடியத் தவிப்பு.

அடுத்தது தார்மீகத் தவிப்பு. இது மேல் மனதிலிருந்து வரக்கூடியத் தவிப்பாகும். அவமானம், குற்றவுணர்ச்சி போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய தவிப்பு வெளியிலிருந்து வருவதில்லை.

மூன்றாவதாக நரம்பியல் தவிப்பு. இது ஒருவரது கீழ்மனதிலிருந்து வரக்கூடிய தவிப்பாகும். ஒருவர் கோபத்தினால் தன்னை இழக்கும் நிலையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும், ஏதோ காரணத்தினால் தாம் அனைத்தையும் இழக்கப்போகிறோம் என்று தோன்றும் எண்ணத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஃப்ராய்ட் இந்த மூன்றாவது வகைத் தவிப்பில் அதிக ஆர்வம் காகர். இன்றைய கால கட்டத்தில், இத்தகைய தவிப்புகளே “ஆன்சைட்டி” என்று கூறப்படுகிறது.

தவிப்பு நிலையை தன்முனைப்பு நிலை மனம் எதிர்கொள்ளல் :

இத்தகைய தருணங்களில், தன்முனைப்பு நிலை மனமானது, தவிர்க்க நினைக்கும் உந்துதல்களை திசைமாற்றி வேறு வடிவங்களாக, செயல்களாக ஒத்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்துகிறது. இந்த உத்திகள் தன்முனைப்பு மனதின் தற்காப்பு முறைகள் என்றழைக்கப்படுகிறது.

சில தற்காப்பு முறைகள்:

மறுத்தல்: பிரச்சனைகள், நிகழ்வுகள் கட்டுப்பாட்டை மீறி இருக்கும்பொழுது, மனம் அவ்வாறு பிரச்சனைகள் இருப்பதை முற்றிலுமாக மறுத்துவிடுகிறது. இது மனித சமுதாயத்தில் ஆரம்பகாலம் தொட்டே இருக்கும் தற்காப்புமுறை. ஆனால் நீண்ட காலங்களாக மறுக்க இயலாது. அப்படி மறுப்பது வேறு வடிவங்களில் தலைகாட்டுகிறது. மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பை ஒத்துக்கொள்ள மறுப்பதும், மாணவர்கள் தேர்வின் முடிவினை வாங்கிக்கொள்ளாமல் இருப்பது போன்றவைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

வேண்டுமென்றே மேற்கொள்ளும் மறதி: சிறு வயதில் நீரில் மூழ்கி மீண்ட சிறுவன், அப்படி ஒரு சம்பவம் நினைவில் இல்லை என்று கூறுவது இதற்கு எடுத்துக்காட்டாகும். இருப்பினும் திறந்த வெளியில் தண்ணீரைக் கண்டு பயம் இருப்பதாக அந்த சிறுவன் கூறியதாக தெரிய வந்தது. குடிபோதையில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர், போதை தெளிந்ததும் தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று கூறுவதும், வேண்டுமென்றே மேற்கொள்ளும் மறதிக்கு எடுத்துக்காட்டாகும். இப்படி மறக்கடிக்கப்பட்ட தற்காப்பு முறையினால் ஃபோபியா தோன்றுவதாக ஃஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

எளிமையை மேற்கொள்ளல்: அநேகமாக நீக்கப்பட்ட இந்தத் தற்காப்பு முறை இப்பொழுது ஒத்துக்கொள்ளப்படுகிறது. சில இச்சைகளிலிருந்து தப்பிக்க துறவி போன்று எளிமையான செயல்களை மேற்கொள்ள சிலர் விழைகின்றனர். அனராக்ஷியா (உண்ணாமல் உடல் மெளிதல்) வியாதியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பெண்கள் இச்சைகள் இருப்பதை நீக்குவதற்கு, உணவைக் குறைத்து இந்த நோய்க்கு ஆளாகிறார்கள். ஆண்களோ தற்காப்புக் கலைகளில் ஈடுபடுகின்றனர்.

பிரச்சனைகளிலிருந்து விலகி தோற்றமளித்தல், பிரச்சனைகளை அடுத்தவர்களுக்கு இடமாற்றம் செய்தல், பிரச்சனைகளை தன் மீதே இடமாற்றம் செய்து துன்புறுத்திக்கொள்ளுதல் என்று பல்வேறுபட்ட தற்காப்புகளை தன் முனைப்பு நிலை மனம் செயல்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால் பிரச்ச்னைகள் வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.

--- தொடரும்.

 

அன்புக்கும் உண்டோ அடக்கும் தாழ்:

அநேகமாக தெரிந்த காணொளிகள்தான் என்று நினைக்கிறேன். ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும் அதிசயிக்க வைக்கிறது.


6 comments:

  1. அருமையான அத்தியாயம். இந்த anxiety இன்றைய அவசர உலகில் பலரிடமும் காணப்படுகிற மிகச் சாதாரணமான குணநலன். இதை இப்போதெல்லாம் வியாதி என்று கூட சொல்ல முடிவதில்லை. ஏனெனில் இன்று இது பலரிடமும் காணப்படுகிறது... அருமையாக தமிழாக்கம் செய்துள்ளீர்கள். இத்தகைய பதிவுகள் வருவது தமிழ் பதிவுலகிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை மீண்டும் நிருபிக்கின்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா!
      ஆன்சைட்டி சில சமயம் மிகவும் கொடுமையாக தனது வேலையைக் காட்டும். ஆன்சைட்டியால் இருபது வருடங்களாக பார்த்துவந்த வேலையிலிருந்து வருடக்கணக்கில் விடுமுறை எடுத்த ஒருவரைத் தெரியும். சிறுவயதில் பெற்றோர்களால் சரியாகப் பார்த்துக்கொள்ள முடியாதலால் அவருக்கு பிரச்சனை உண்டாயிருந்ததாம். இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்க்க விருப்பம் உள்ளது. நேரம் ஒத்துழைத்தால் சீக்கிரம் பதிவிடுகிறேன்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. //பிரச்சனைகளை அடுத்தவர்களுக்கு இடமாற்றம் செய்தல்// இதைத்தான் அநேகம் பேர் செய்கின்றனர். இதை நான் வங்கியில் சந்தித்திருக்கிறேன்.

    Anxiety(தவிப்பு) வருவது பற்றியும், அதை தடுக்க தன்முனைப்பு நிலை மனம் எடுக்கும் தற்காப்பு உத்திகள் பற்றியும் சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்கள் அளித்துள்ள கருத்துக்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.உங்கள் உபயத்தால் அறியாத/தெரியாத நல்ல தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி.

    இரண்டு காணொளிகளும் அருமை. அதிலும் முதல் காணொளியில் பார்த்த, அந்த சிங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகும், வளர்த்தோரை பார்த்ததும் ஓடிவந்து அணைத்துக்கொள்ளும் காட்சி மெய்சிலிர்க்கவைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      ஆன்சைட்டி நிலையில் தம்மை அறியாமலேயே, தன்னுடைய சுயமான சிந்தனையில்லாமலே தன்னிடம் உள்ள பிரச்சனைகளை அடுத்தவர்கள்மீது ஏற்றிவிடுவார்கள். சிலர் அலுவலகத்தில் பிரச்சனைகள் இருந்தால், அங்கே காட்டமுடியாத கோபத்தை வீட்டில் அவசியமில்லாமல் வெளிப்படுத்துவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
      ஆமாம், சிங்கம் காணொளியைக் கண்டதும், உண்மையான அன்பின் மேன்மையை உணரமுடிகிறது.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. // இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்க்க விருப்பம் உள்ளது. நேரம் ஒத்துழைத்தால் சீக்கிரம் பதிவிடுகிறேன். //

    தங்களது மொழிபெயர்ப்பு படிக்க குழப்பம் இன்றி செல்கிறது. நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
      புது வருடம் ஆரம்பத்தில் பதிவிடலாம் என்று இருக்கிறேன். தொடர்வதற்கு நன்றி.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete