பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 6, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 8

மூன்று வாரங்களுக்குப் பிறகு, அடுத்த ஹிப்னாடிஸ அமர்வு நிகழ்ந்தது. அதற்கு முன் என்னுடைய விடுமுறை காலத்தில், இனிமையான கடற்கரை மணலில் படுத்திருந்தேன். கேத்தரினின் சிகிச்சையிலிருந்து எனக்கு மறைமுகமாக தெரிவிக்கப்பட்டத் தகவல்களைக் குறித்து சிந்திக்க எனக்கு போதுமான அவகாசமும், பொறுமையும் இருந்தது. ஹிப்னடைஸ் மூலம் வாழ்வில் பின்னோக்கிச் சென்று, முற்பிறவியில் கண்ட பொருட்கள், உண்மைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றி, நுணுக்கமான பார்வையுடன் துல்லியமான விவரங்கள், விளக்கங்கள் இவற்றை கேத்தரினால் மீட்டெடுக்க முடிந்திருக்கிறது. இந்த தவகல்களை இயல்பான நிலையில் அவள் அறிந்திருக்கவில்லை. பதினெட்டு மாதங்களாக, வழக்கமாகத் தரப்படும் மனநல சிகிச்சை முறைகளால் அவள் உடல் நிலையிலோ, மனநிலையிலோ எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆனால் ஹிப்னடைஸ் சிகிச்சைக்குப் பிறகு அவள் நோய் கிட்டத்தட்ட குணமாகிவிட்ட நிலைக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இறப்புக்குப் பிறகான அனுபவங்களாக அவள் கூறிய துல்லியமான உண்மைகள், ஆவி நிலையில், அவள் வழியாக, ஆனால் அவளே அறியாத அறிவுரைகள், கவித்துவமான மொழிவளமை, இறப்புக்குப் பிறகு உள்ள பரிமாணத்தில் கூறிய அறிவுரைகள், மீண்டும் மீண்டும் பிறக்கும் நிகழ்ச்சிகள் கேத்தரினிக்குத் தெரியாத, அவளுடைய அறிவுக்கும், திறமைக்கும் மேற்பட்ட நிலையில், ஞானத்துடன் விளக்கமளித்த வழிகாட்டி ஆன்மாக்கள்; சிந்திப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.

நீண்ட வருடங்களாக, நூற்றுக்கணக்கான, இல்லை ஆயிரக்கணக்கான மனநல குறையுள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்திருக்கிறேன். அனேகமாக எல்லாவித மனநல குறையுள்ள நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்திருக்கிறேன். நான்கு முக்கியமான மருத்துவ கல்லூரிகளுக்கு, உள்நோயாளிகளுக்கான தலைமை பொறுப்பை ஏற்றுப் பணிபுரிந்திருக்கிறேன். மனநல, அவசரகால சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகளின் பிரிவு, மற்றும் அனைத்து பிரிவுகளிலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்திருக்கிறேன். மனப்பிறழ்வு, கண்ணால் பார்க்காத விஷயங்களை பார்த்ததுபோல் உணரும் நோய் போன்ற குறைபாடு உடையவர்களுக்கும் சிகிச்சை செய்திருக்கிறேன். இயல்பாக நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும், ஹிஸ்டீரியா இருப்பவர்களுக்கும்,  தன்னுள்ளே வேறு வேறு மனிதர்கள் இருப்பதாக கற்பனை செய்பவர்களுக்கும் மருத்துவம் செய்து, குணப்படுத்திய அனுபவம் எனக்கு உண்டு. தேசிய போதைமருந்து தடுப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கல்லூரியில் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறேன். அதனால் போதைப் பொருட்கள் மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்தினையும் நன்கு அறிவேன்.

ஆனால், மேற்கூறப்பட்ட நோய்களுக்கான எந்தவிதமான அறிகுறிகளும் கேத்தரினிடம் காணப்படவில்லை. அவள் எந்தவிதமான மனநோயினாலும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. உண்மை நிலையையும், கற்பனை நிலையையும் வேறுபாடு அறியாமல் கேத்தரின் குழப்பிக்கொண்டது கிடையாது. பொய்யான நம்பிக்கையில் அவள் உழன்றதும் இல்லை. பார்க்காதவற்றைப் பார்ப்பது போலவும், கேட்காத வார்த்தைகளை கேட்பதுபோலவும் அவளுக்கு பிரம்மை ஏற்பட்டது கிடையாது. 

கேத்தரினுக்கு போதைப் பழக்கமும் கிடையாது. சமுதாயத்தோடு ஒத்துப்போகாத மனநிலையும் இல்லை. சமயங்களில் தன்னிலை இழந்துவிடுபவளும் அல்ல. அவளுக்கு எப்பொழுதும் தான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற இயற்கையான உணர்வுகள் உண்டு. தன்னை மறந்து, தற்செயலாக செயல்களை அவள் செய்தது கிடையாது. பல்வேறு நிலைப்பட்ட மனநிலையைக் கொண்டவளாகவும் அவள் செயல்பாடுகள் இருந்தது இல்லை. அவள் ஹிப்னாடிஸ சமாதி நிலையிலிருந்து தரக்கூடிய செய்திகள், அவள் இயல்புநிலை திறமைகளுக்கு அப்பாற்பட்டவைகள். அந்த மொழி வளமோ தத்துவங்களோ அவளுடைய இயல்பான நிலையில் அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உயரிய நிலையில் இருந்தது. 

ஆருடம் போல் அவள் என்னையும் என் தந்தையையும் பற்றிக் கூறிய தகவல்கள், குறிப்பிடத்தக்க அளவு அவளது பெற்றோர்கள் பற்றிய, அவளுக்கு முன்பே தெரியாத உண்மைகள் போன்றவற்றை சமாதி நிலையில் மட்டுமே அவளால் பெற முடிந்திருக்கிறது. அவளது நிகழ்காலப் பிறவியில் பெறமுடியாத, அறியமுடியாத தகவல்களை அவளால் வெளிக்கொணர முடிந்திருக்கிறது. கிடைக்கப்பெற்ற தத்துவங்களும், அனுபவங்களும் அவள் வளர்க்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் சாரத்துக்கும், நம்பிக்கைக்கும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.  

கேத்தரின் ஒரு எளிமையான, நேர்மையான பெண். அவள் அதிகம் படித்தவளல்ல. அவ்வளவு தத்துவங்களையும், உண்மைகளையும் அவளுடைய அறிவால் சிந்தித்து கண்டுபிடித்திருக்க முடியாது. வரலாற்று நிகழ்ச்சிகள், விளக்கங்கள், கவிதையாக புலமை மிக்க மொழிநடை எதுவும் கேத்தரினுடைய இயல்பான நிலையில் சாத்தியப்படாது. ஒரு மனநல மருத்துவராக, ஒரு அறிவியலாளராக கேத்தரினிடமிருந்து பெறப்பட்ட செய்திகள், தகவல்கள் அவளுடைய உணர்வுநிலைக்கு அப்பாற்ப்பட்ட ஆழ்நிலை மனதிலிருந்து உதித்தவைகள் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. கேத்தரின் ஒரு திறமையான நடிகையாக இருந்திருந்தால்கூட, அவளால் சமாதி நிலையில், அவ்வளவு நிகழ்ச்சிகளையும் நடித்திருக்க முடியாது. அவள் தெரிவித்த தகவல்கள் யாவும் துல்லியமான உண்மைகள்.  

கேத்தரினுடைய முந்தைய பிறவிகளின் நினைவுகள், எவ்வாறு அவளைக் குணப்படுத்தியிருக்கின்றன என்று ஆராய்ந்தேன். முந்தைய பிறவி என்னும் புதிய வாசலில் நுழைந்தவுடன், மருந்து எதுவும் இல்லாமலே கேத்தரின் விரைவில் குணமடைந்திருக்கிறாள். அந்த  புதிய வாசலில் மிகவும் சக்திவாய்ந்த ஏதோ ஒரு ஆற்றல், ஒரு விசை வழக்கமான சிகிச்சை மற்றும் நவீன மருந்துகளைவிட நன்கு செயல்பட்டு, குணப்படுத்தியுள்ளது. அந்த சக்தியானது எப்பொழுதோ நடந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, குணப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் தினசரி வாழ்வில் நமது உடலுக்கும், உள்ளத்துக்கும் ஏற்படக்கூடிய துயரங்கள், உதாசீனங்கள், எண்ணங்கள், அகங்காரங்கள் போன்றவைகளையும் நினைவில் நிறுத்தி நல்வழிப்படுத்தவல்லது. வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட நோய்களைப் பற்றியும் ஆராய்ந்தேன். நீண்ட நாட்களாக நீடிக்கும் மனதை நோகடிக்கும் நிகழ்வுகள் உடலளவில் பாதிப்பை ஏற்படுத்தும் துன்புறுத்தல்கள், வறுமை, பசிக்கொடுமைகள், நோய்வாய்ப்படுதல், தொடர்ச்சியான ஏமாற்றங்கள், தவறான எண்ணங்கள் அனைத்தையும் பற்றி சிந்தித்தேன். மனதில் எக்காலமும் முள்ளாக தைத்துக்கொண்டிருக்கும் எதிர்பாராத அசம்பாவிதங்கள், முக்கியமாக மயிரிழையில் உயிர்தப்பும் விபத்துக்கள், கற்பழிப்புகள், பூகம்பம் போன்ற பேரழிவுகள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி ஆராய்ந்தேன். அதாவது மனதில் நிரந்தரமான வடுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினேன்.  

இது மனநல மருத்துவர்கள் வழக்கமாக குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை மீட்கொணர்ந்து குணப்படுத்த முயற்சிப்பது போன்றதுதான். ஆனால் கால அளவில்தான் மாற்றம் ஏற்படுகிறது. வழக்கமான சிகிச்சைகளில் பத்திலிருந்து, பதினைந்து வருடங்கள் பின்னோக்கி செல்வோம். கேத்தரினுடைய சிகிச்சையின்பொழுது ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னோக்கிச்செல்லும் நிலைமையும், வாய்ப்பும் ஏற்பட்டது. இவ்வாறு செய்வதனால், வழக்கமான சிகிச்சையைவிட மிகவும் நேரடியான விளைவுகள் ஏற்படுவதை அறிந்துகொண்டேன். இந்த வழக்கத்துக்கு மாறான முயற்சியில் வெற்றி கண்கூடாகத்தெரிகிறது. கேத்தரின் நினைத்ததைவிட மிகவும் விரைவாக குணமடைந்திருக்கிறாள். அவளுக்குப் பிறகு, ஹிப்னாடிஸ முறையில் மிகவும் பின்னோக்கிச் சென்று நான் சிகிச்சை அளித்தவர்களும் விரைவில் குணமடைந்திருக்கிறார்கள்.  

ஆனால் கேத்தரினின் முன்பிறவி நினைவுகளுக்கு ஏதேனும் விளக்கங்கள் இருக்கின்றனவா? அவளுடைய நினைவுகள் அவளுடைய மரபணுக்களில் தொடர்ந்து செல்கின்றனவா? அறிவியல் வழி ஆராய்ந்தால், அவ்வாறு தொடர சாத்தியங்கள் கிடையாது. மரபணுக்கள் தொடர, மரபணுக்களை எடுத்துச் செல்ல உடல் போன்ற தொடர்ச்சியான ஒரு கடத்தியின் தேவை மிகவும் அவசியம். கேத்தரின் புவியில் வாழ்ந்து, ஒவ்வொரு முறை இறந்தவுடன் அவளுடைய மரபணு, அடுத்த பிறவிக்கு உடல்வழி எடுத்துச் செல்வது தடைபட்டு விடுகிறது. குழந்தையுடன் வெள்ளத்தில் இறந்திருக்கிறாள்; குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறாள்; இளமையில் கொல்லப்பட்டிருக்கிறாள். எப்படியும் அவளது மரபணுக்கூறு ஒவ்வொரு முறையும் அடுத்த பிறவிக்கு செல்லும் முன் தொடர்பு விட்டுப் போயிருக்கிறது. இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையில் எப்படி இருந்திருக்கிறாள்? அது ஒரு சரீரமற்ற நிலை. எனவே அங்கே மரபணுக்களுக்கு சாத்தியமில்லை. ஆனால் அவள் நினைவுகள் தொடர்திருக்கின்றன. எனவே மரபணுக்கள் வழியாக மட்டுமே நினைவுகள் தொடர்கிறது என்பது சரியான கூற்று இல்லை.  

பிரபலமான மனநல ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜங் (Jung) கூறுவதைப் பார்ப்போம், அவரது கூற்றுப்படி, மனிதனின் ஆழ்மனதில் அனைத்து நினைவுகளும் அனுபவங்களும் பூட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. பலவகையில் வேறுபட்ட அனைத்து சமூகங்களுக்கும் குறியீடுகள், கனவுகளில் ஒற்றுமை இருக்கிறது. அவரின் கொள்கைப்படி, ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் நாம் கற்றுத் தேர்ந்தவைகள் அல்ல. எப்படியோ அவைகள் நமது மூளையில் பரம்பரையாக பதியப்பட்டுள்ளன. வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கங்களை நம்பாமல் தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்டு புதிய கோணங்களில் அவை பரிமளிக்கின்றன.  

ஆனால் கேத்தரினுடைய நினைவுகள் ஒவ்வொன்றும், அவளுடைய சொந்த அனுபவங்களாகவே இருந்தது. அவளுடைய நினைவுகள் எந்தவிதமான தனிப்பட்ட நோக்கமின்றியும், எந்தவித குறியீடுகள் இல்லாமலும், அனைவருக்கும் பொதுவானதாக இல்லாமலும் இருந்தது. அவள் குறிப்பிடத்தக்கவகையில் ஆட்களையும், இடங்களையும் பற்றிய நுணுக்கமான விவரங்களை அளித்தாள். எனவே, இங்கு டாக்டர் ஜங், பொதுவில் கூறும் கொள்கைகள் மிகவும் தெளிவற்று காணப்படுகிறது. மேலும், இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையையும் இங்கு நாம் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், மறுபிறவி கொள்கை என்பதே மிகவும் ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.  

கேத்தரின் கூறிய தகவல்கள், துல்லியமான விளக்கங்களுடன், நுணுக்கமாகவும் இருந்தது மட்டுமல்லாமல் அவளுடைய இயல்பான திறமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவளது தகவல்கள் ஒரு நூலைப் படித்துவிட்டு, எடுத்துரைத்துவிட்டு பிறகு மறந்துவிடுவதுபோல் சுலபமானது கிடையாது. அல்லது இளம்பிராயத்தில் கற்றுத்தேர்ந்துவிட்டு பிறகு மறந்த, ஆழ்மனதில் மட்டும் உறைந்தவிட்ட நினைவுகளும் கிடையாது. வழிகாட்டி ஆவிகளும், அவை கூறிய அறிவுரைகளையும் பற்றி என்ன கூறமுடியும்? அந்த அறிவுரைகளும் கேத்தரின் வழியாகத்தான் வந்தன. ஆனால் கேத்தரினுடைய எண்ணங்களோ, அனுபவங்களோ கிடையாது. கேத்தரின் கற்றுத்தேர்ந்த திறமைகளும் அவள் நினைவில் தேங்கியிருந்தது. வெண்ணெய் கடைவது எப்படி, போன்ற செயல்களும் அதில் பிரதிபலித்தது. அவள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைகள் என்று என்னால் உணர முடிந்தது.  

பல வருடங்களாக மக்களின் மனதைப் பற்றி ஆராய்வதாலும் அவர்களது நினைவுகள், எண்ணங்கள், மனோபாவங்கள், செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்வதாலும் மட்டுமல்லாமல், எனக்குள் இருக்கும் என் உள்ளுணர்வு எனக்கு இதனை உண்மையென உணர்த்துகிறது. என்னுடைய தந்தை மற்றும் மகன் வரவுக்கு முன்பே நான் உண்மைகளை உணர ஆரம்பித்துவிட்டேன். வருடக்கணக்கில் நான் பெற்ற அறிவியல் வழிமுறைகள், நடப்பவை உண்மையென்று எனக்கு எடுத்துரைக்கின்றன. என் உள்ளம், உயிர், நரம்பு, நாடி அனைத்துக்கும் இவை தெரியும்.  

--தொடரும்.

அந்திம கால வருத்தங்கள்:

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயினாலும், முதுமையினாலும் வாழ்வின் இறுதிகட்ட நிலையை அடைந்துவிட்ட நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் ஆஸ்திரேலிய நர்ஸ் “போனி வேர்”.

அவர் தனது அனுபவத்தில் நோயாளிகளிடம் பேட்டி கண்டு, வாழ்வில் அந்த மனிதர்கள், தாங்கள் இப்படி செய்திருக்க தவறிவிட்டோமே என்று வருந்தக்கூடிய விஷயங்களைக் கேட்டறிந்தார். அவ்வாறு கேட்டறிந்ததில் முதல் இடத்தைப் பிடிக்கும் பொதுவான ஐந்து விஷயங்களாக கீழ்க்கண்டவற்றைத் தொகுத்தளிக்கிறார். 

நான் மற்றவர்கள் என்னை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று எண்ணாமல், நான் நானாக, உண்மையாக வாழ்ந்திருக்க வேண்டும். இதனைத்தான் அதிகமானோர் தாம்  நினைத்து வருந்துவதாகக் கூறினர். நல்ல உடல் நிலை நமக்கு சுதந்திரத்தை அளிக்கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் காலம் கடந்தே இதனை உணர்கிறார்கள். 

நான் வேலை, வேலையென்று அவ்வளவு கடினமாக உழைத்திருக்கக் கூடாது. அதிகமான ஆண் நோயாளிகளின் கருத்து இது. தனது குழந்தைகளிடம் விளையாடுவதையும், துணையுடன் காலம் கழிப்பதையும் இவர்கள் இழந்திருக்கிறார்கள். வாழ்வதற்காக வேலையா, வேலைக்காக வாழ்வா என்பதில் தவறுதலான முடிவெடுத்ததற்காக வருத்தப்பட்டார்கள். 

என் மனதிலிருப்பதை தைரியமாக வெளியில் சொல்லியிருக்க வேண்டும். நிறையபேர், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சி தன் மனதிலிருந்ததை மறைத்துவிட்டதாகக் கூறினர். அதனால் வாழ்க்கையில் தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் பொருந்தாமல் வாழ்ந்துவிட்டதாக வருந்தினர். மனதில் அடக்கிய ஆசையுடன் வாழ்ந்ததால், வருத்தம் மட்டுமன்றி, உடல் நிலையும் இக்காரணத்தால் மோசமாகியிருந்தது. 

எனது நண்பர்களுடன் தொடர்பிலிருந்திருக்க வேண்டும். நீண்டகால நட்பின் முக்கியத்துவத்தை அறியாதவர்களும் இருக்கிறார்கள். வேறு விஷயங்களில் மும்முரமாக இருந்ததால், நட்புக்காக நேரம் ஒதுக்காமல் நண்பர்களை இழந்திருக்கிறார்கள். இறக்கும் தறுவாயில் நண்பர்களை இழந்ததை எண்ணி வருந்துகிறார்கள்.

நான் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கவேண்டும். மகிழ்ச்சியாக நான் இருப்பதை நானே தடைசெய்துவிட்டேன். ஆச்சரியப்படத்தக்க வகையில் இதுவும் ஒரு பொதுவான வருத்தம். மகிழ்ச்சியை, ஒரு மனநிலை என்று அநேகர் உணரவில்லை. சில பழக்க வழக்கங்களால், தங்களுடைய மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறார்கள். வாழ்வின் மாற்றங்களை எண்ணி அஞ்சியிருக்கிறார்கள். 

குறிப்பு: இது ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஆய்வு. எனினும் அனைத்து  விஷயங்களும் இந்தியர்களுக்கும் ஒத்திருக்கும் என்று கூற முடியாது என்று நினைக்கிறேன்.
 


கணிதத் துணுக்கு:

 
சிறுவனிடம் ஒருவர் “நான் 20 சாக்லேட் உனக்கு தருகிறேன். அதில் உன் அக்காவுக்கு நீ 15 சாக்லேட் கொடுத்துவிட்டால் உனக்கு என்ன வரும்?”

சிறுவன் ஒன்றும் சொல்லவில்லை.

திரும்பவும் அவர் “தப்பாயிருந்தால் பரவாயில்லை, சொல்லு, என்ன வரும்”

சிறுவன் “கோவம் வரும்”

 

 

 

 

16 comments:

  1. /// வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கங்களை நம்பாமல் தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்டு புதிய கோணங்களில் அவை பரிமளிக்கின்றன.... ///

    பலப்பல கோணங்களில் சிந்திக்கவும் வைக்கிறது...

    ஆஸ்திரேலிய நர்ஸ் போனி வேர் அவர்கள் - பலவற்றை தெரிந்தே தவறு செய்யும் அல்லது பலவற்றிக்கு அடிமையாய் இருக்கும் இங்கு, ஆய்வு எடுத்தால்... 5 அல்ல... 500 விசயங்கள் இருக்கலாம்... அப்போதும் உண்மையை சொன்னார்கள் என்றால் (அதே சந்தேகம் தான்) 1. பேராசை 2. சுயநலம் - இவை இரண்டும் முதலில் இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      நீங்கள் இந்தியர்களைப்பற்றி கூறுவது ஒரளவுக்கு உண்மைதான். இரு நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு இருந்தவர்கள் நாம். நம் வாழ்வில் எதிர்காலத்தைப்பற்றி எப்பொழுதும் பாதுகாப்பான உணர்வு நமக்கு இருந்ததில்லை. அந்த நிலை இன்னும் தொடர்வதுதான் நமது துர்பாக்கியம் என்று நினைக்கிறேன். பாதுகாப்பாக உணராத மனிதன்தான் பதுக்கி வைக்கும் வேலையில்தான் ஈடுபட முடியும். ஆனால் தனிப்பட்ட முறையில் மற்ற நாட்டவர்களைவிட இந்தியர்களை மற்ற தேசத்தவர்களைவிட குறைத்து மதிப்பிட முடியாது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. ‘’அவளுடைய நினைவுகள் அவளுடைய மரபணுக்களில் தொடர்ந்து செல்கின்றனவா? அறிவியல் வழி ஆராய்ந்தால், அவ்வாறு தொடர சாத்தியங்கள் கிடையாது.//
    உண்மைதான். வேளாண் அறிவியலில் மரபியல் (Genetics) படித்திருந்ததால் அதுபற்றி கொஞ்சம் அறிவேன். ஆனாலும் எப்படி கேத்தெரின் அதை சொன்னார் என்பதை DR.Brian Weiss விளக்குவதை, எளிய தமிழில் அழகாக மொழிபெயர்த்தமைக்கு நன்றி.(உ-ம் கவித்துவமான மொழிவளமை) பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

    ஆஸ்திரேலிய நர்ஸ் “போனி வேர்” அவர்களின் ஆய்வின் முடிவுகள் அநேகம் இந்தியர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி ஐயா! இந்த அத்தியாயம் மட்டும் சற்று சிரமமாக இருந்தது உண்மைதான்.

      ஆஸ்திரேலிய நர்ஸ் கூறிய காரணங்கள் இந்தியர்களுக்கும் பொருந்தக்கூடியவைகள்தான். அந்த நர்ஸ் இந்த வருத்தங்களை முதல் ஐந்து வருத்தங்களாகக் குறிப்பிடுகிறார். நான் இந்தியர்களுக்கு இந்த வரிசையில் வேறுபாடு இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. "மரபணுக்கள் வழியாக மட்டுமே நினைவுகள் தொடர்கிறது என்பது சரியான கூற்று இல்லை"

    எவ்வளவு ஆழமான அர்த்தம் தரும் உண்மைகள்..

    நன்றி நண்பரே..!! தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.ஜீவன்சிவம். நினைவுகள் தொடர்வது எப்படி என்பது புரியாத புதிர்தான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  4. மனிதமனம் விசித்திரமானதுதான். தொடர் முழுக்க மனத்தின் ஆதிக்கம்தான். அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! வரும் வெள்ளியன்று அடுத்த பதிவை எதிர்பாருங்கள்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  5. விசித்திரமான மனம் கொண்ட மனிதர்கள். மருத்துவரின் ஆழ்ந்த சிந்தனைகளும், முடிவுகளும் ஏற்கும்படியாகவே உள்ளன. மறுபிறவி என்பதை ஒத்துக்கொள்கிறாப்போலவே உள்ளது. ஆனாலும் ஆயிரம் ஆண்டுகள் முன்னால் போய்க் காதரினின் ஒவ்வொரு பிறவியையும் ஆராய முடிந்தது என்பது இன்னமும் வியப்பை அளிக்கிறது. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்! மறுபிறவி உண்மையோ, இல்லையோ என்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதைவிட, அந்த நம்பிக்கை நல்லவைகளைப் போதிப்பதால், நம்பி நல்ல செயல்களை செய்ய முற்படுவது மனித குலத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன். வரும் வெள்ளியன்று அடுத்த பதிவை எதிர்பாருங்கள்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  6. ஆஸ்திரேலிய நர்சின் ஆய்வு முடிவுகள் உலகம் முழுதும் பொருந்தக் கூடியவையே. இந்தியர்களுக்கும் பொருந்தும்.

    ஹிஹிஹி,பையன் சாக்லேட்டுக்குச் சொன்ன பதிலைத் தான் நானும் சொல்லி இருப்பேன். :)))))

    ReplyDelete
    Replies
    1. குழந்தை கூறியது கள்ளங்கபடமற்ற உண்மை. கேள்விதான் தவறான கேள்வி.

      ஆஸ்திரேலிய நர்ஸ் கூறிய காரணங்கள் இந்தியர்களுக்கும் பொருந்தக்கூடியவைகள்தான். அந்த நர்ஸ் இந்த வருத்தங்களை முதல் ஐந்து வருத்தங்களாகக் குறிப்பிடுகிறார். நான் இந்தியர்களுக்கு இந்த வரிசையில் வேறுபாடு இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  7. நம்முடைய புராணக் கதைகளில் ஒருவரின் அந்தப் பிறப்பும் அதற்கான பழைய பிறப்பின் செயல்களும் காரணமாகச் சொல்லும் கதைகள் நிறையவே உண்டு.இந்தக் கதாசிரியர் சொல்வதைப் படிக்கும் போது ஏழேழ் பிறப்பிலும் என்னும் சொற்றொடரும் நினைவுக்கு வருகிறது. மரபணுக்கள் மூலமே நினைவுகள் தொடர்கின்றன என்பது கேள்விக்குரியதுதான்மனித சுபாவங்கள் வேண்டுமானால் மரபணுக்கள் மூலம் கடத்தப் படலாம். அப்படியானால்... நினைவுகள்... நினைவுகள் கடத்தப் படுகின்றனவா என்பதே சர்ச்சைக்குரிய விஷயம் என்று இருக்கும்போது அவை எவ்வாறு கடத்தப் படுகின்றன என்பது ரிடண்டண்ட் ஆகிவிடுகிறது. தொடருகிறேன், .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! அனைத்தும் அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் புரியுமாறு அமைந்துவிட்டால், அது சுவாரஸ்யமான வாழ்க்கையாக இருக்காது என்பதால்தான் ஒளிவு மறைவாக சில விஷயங்கள் இருக்கிறதோ என்னவோ. கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள். எப்படித்தான் எதிர்காலத்தை கணிக்கிறார்கள் என்று புரியவில்லை.
      இரண்டு நாட்களுக்குமுன் கொடுக்கப்பட்ட பெட்டியில், அன்றைய செய்திதாளிலுள்ள செய்தியை எப்படி ஒருவர் எழுதியிருக்கமுடியும்?

      http://www.bbc.co.uk/programmes/p00j9dr3
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  8. server not found என்று வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். எனக்கு இந்த URL சரியாக வேலை செய்கிறது. இல்லையேல் கீழேயுள்ள வாக்கியத்தை கூகுள் சர்ச் –ல் எழுதி, அதே வார்த்தையில் வரும் BBC வீடியோவைப் பார்க்கவும்.

      "magician dynamo bend scotts mind"


      நன்றி.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete