பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, June 27, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 9 : பகுதி - 2


கேத்தரின் மீண்டும் முணக ஆரம்பித்தாள் “கிடியன் . . . . . கிடியன் என்பவன்

என்னுடன் பேசமுயற்சிக்கிறான்”

“என்ன கூறுகிறான்?”

“அவன் எங்குமிருக்கிறான். அவன் ஒரு காக்கும் தேவதையைப் போன்றவன். இப்பொழுது என்னுடன் விளையாடுகிறான்.”

“உன் பாதுகாப்பாளர்களில் ஒருவனா?”

“ஆம். என்னுடன் விளையாடுகிறான். . . . . அவன் எனக்காக எப்பொழுதும் இருக்கிறான் என்று என்னை உணரவைக்க முயற்சிக்கிறான் என்று நினைக்கிறேன்.”

“கிடியன்?” மீண்டும் வினவினேன்.

“அங்கே சென்றுவிட்டான்.”

“அவனுடன் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறாயா?”

“ஆமாம். எனக்குத் தேவைப்படும்போது அவன் என்னை காப்பான்.”

“நல்லது. உன்னை சுற்றி ஆன்மாக்கள் உள்ளனவா?”

“ஆம். . . . . நிறைய ஆன்மாக்கள். அவர்கள் விருப்பப்படும்போது மட்டுமே இங்கு வருவார்கள். . . . . எப்பொழுது விரும்புகிறார்களோ அப்பொழுது வருவார்கள். சிலர் சரீர நிலையிலும், சிலர் ஸ்தூல நிலையிலும் இருப்பார்கள். சிலர் காக்கும் தேவதைகளாக செயல்படுவார்கள். நாமும் காக்கும் தேவதைகளாக இருந்திருக்கிறோம்.”

“நாம் ஏன் கற்பதற்காக சரீர நிலைக்குத் திரும்பவேண்டும்? ஸ்தூல நிலையில் நாம் கற்றுக்கொள்ள முடியாதா?”

“கற்பதற்கு பல்வேறுபட்ட நிலைகள் உள்ளன. சில விஷயங்களை சரீர நிலையில் மட்டுமே கற்றுணரமுடியும். உடல்வலியும் உறவுகளும் ஸ்தூல நிலையில் கிடையாது. இவற்றை சரீர நிலையில் மட்டுமே கற்றுணரமுடியும். ஸ்தூல நிலையில் ஆன்மா புதுப்பிக்கப்படுகிறது. ஸ்தூல நிலையில் மகிழ்ச்சியை மட்டுமே உணரமுடியும். நலமாக உணரமுடியும். ஆனால் அது நம் ஆன்மாவை புதுப்பித்துக்கொள்ளும் காலம். ஸ்தூல நிலையில் அடுத்தவர்களுடன் தொடர்புகொள்வது, சரீர நிலையில் தொடர்புகொள்வதிலிருந்து மாறுபட்டது. சரீர நிலையில் உறவுகளை கொண்டிருப்போம்.”

“எனக்குப் புரிகிறது.” என்றேன். மீண்டும் அமைதியானாள். நிமிடங்கள் கழிந்தன.

“நான் ஒரு வண்டியைக் காண்கிறேன். . . . . நீலநிற வண்டி.” மீண்டும் துவங்கினாள்.

“குழந்தைகளை எடுத்துச் செல்லும் வண்டியா?”

“இல்லை. நாம் அமர்ந்து செல்லும் வண்டி. . . . . . . நீல நிறத்தில் உள்ளது. நீலநிறத்தில் வெளிப்புறம் காணப்படுகிறது.”

“குதிரைகள் இழுத்துச்செல்லும் வண்டியா?”

“ஆம். ஆனால் யாரையும் வண்டிக்குள் பார்க்கமுடியவில்லை. பெரிய சக்கரங்களை உடைய வண்டி. இரண்டு குதிரைகள் இதனை இழுக்கின்றன. பழுப்பு நிற குதிரையும், சாம்பல் நிற குதிரையும் உள்ளன. சாம்பல் நிற குதிரையின் பெயர் ஆப்பிள். எனக்கு ஆப்பிள் குதிரையைப் பிடித்திருக்கிறது. மற்றொரு குதிரையின் பெயர் டியூக். மிகவும் அழகான குதிரைகள். அவை என்னை கடிக்காது. அந்த குதிரைகளுக்கு பெரிய கால்கள் உள்ளன.”

“நீ அங்கு இருக்கிறாயா?”

“ஆமாம். அவன் என்னைவிட மிகவும் பெரியவனாக இருக்கிறான்.”

“நீ வண்டிக்குள் அமர்ந்திருக்கிறாயா?” அவள் கூறுவதைப் பார்த்து, அவள் குழந்தையாக இருக்கிறாள் என்று யூகித்தேன்.

“குதிரைகள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் இருக்கிறான்.”

“உன்னுடைய வயது என்ன?”

“நான் குழந்தை. வயது தெரியவில்லை. எனக்கு எண்களைப் பற்றி தெரியாதென்று நினைக்கிறேன்.”

“அந்த சிறுவனை உனக்குத் தெரியுமா. உன் நண்பனா? உன் சகோதரனா?”

“அவன் என் வீட்டுக்கருகில் வசிப்பவன். ஏதோ விழா கொண்டாடுகிறார்கள். திருமணம் போன்று ஏதோ விழா.”

“யாருக்குத் திருமணம் என்று தெரிகிறதா?”

“இல்லை. அழுக்காகிக்கொள்ளாமல் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு பழுப்பு நிற முடியுள்ளது. காலணியில் பொத்தான்கள் மேல்நோக்கியுள்ளன.”

“விழாவிற்காக புதிய உடை அணிந்திருக்கிறாயா?”

“வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறேன். முன்பக்கத்தில் அழகுபடுத்தப்பட்டு பின்புறம் கட்டப்பட்டுள்ளது.”

“உன் வீடு அருகில் உள்ளதா?”

“ஆமாம் மிகப்பெரிய வீடு.” சிறுமியின் குரலில் கூறினாள்.

“அங்குதான் வசிக்கிறாயா?”

“ஆமாம். சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.”

“உன்னால் நுகர முடிகிறதா? உள்ளே சென்று பார்த்துச் சொல்.”

“ஆமாம். ரொட்டி சுடுகிறார்கள். மாமிசமும் சமைக்கிறார்கள். எங்களை வெளியே போகச் சொல்கிறார்கள்.” இந்த பதில் என்னை வியப்புக்குள்ளாக்கியது.

“உன்னை எப்படி கூப்பிடுகிறார்கள்?”

“மாண்டி . . . . . மாண்டி, எட்வர்ட்”

“எட்வர்ட், அந்த சிறுவனா?”

“ஆமாம்.”

“உன்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையா?”

“இல்லை. வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள்.”

“அனுமதிக்காதது குறித்து என்ன நினைக்கிறாய்?”

“ஒன்றும் நினைக்கவில்லை. அழுக்காகாமல் இருப்பது மிகவும் கடினம். ஒன்றுமே விளையாட முடியவில்லை.”

“நீயும் திருமணத்திற்கு செல்கிறாயா?”

“ஆமாம். நிறைய மனிதர்களைக் காண்கிறேன். இந்த அறையில், மிகவும் கூட்டமாக இருக்கிறது. மிகவும் வெப்பமான நாள். ஒரு மதகுருவும் இருக்கிறார். அவருடைய தொப்பி வேடிக்கையாக உள்ளது. கறுப்பு நிற தொப்பி. அவரது முகம் முழுவதும் தொப்பி மூடுவதுபோல் தோற்றம் அளிக்கிறது.“

“உன் குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படுகிறதா?”

“ஆமாம்”

“யாருக்குத் திருமணம்?”

“எனது சகோதரிக்கு.”

“உன்னால் அவளைப் பார்க்க முடிகிறதா? திருமண ஆடை அணிந்திருக்கிறாளா?”

“ஆமாம்.”

“மிகவும் அழகாக இருக்கிறாளா?”

“ஆமாம். அவளுடைய கூந்தலைச் சுற்றி நிறைய மலர்களை அணிந்திருக்கிறாள்.”

“அவளை உற்றுப்பார். அவளை உனக்கு அடையாளம் காணமுடிகிறதா?”

“ஆமாம். அவள் பெக்கி . . . . . ஆனால் சற்று சிறிதாக காணப்படுகிறாள்.” பெக்கி கேத்தரினுடைய சக ஊழியர். நல்ல சினேகிதி. மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும், கேத்தரினுக்கு தன் வாழ்விலும், எடுக்கும் முடிவுகளிலும் பெக்கி அளவுக்குமீறி உள்நுழைந்து அறிவுரை கூறுவதாக நினைக்கிறாள். பெக்கியுடைய எதிர்மறையாக கணிக்கக்கூடிய இயல்பும் கேத்தரினுக்குப் பிடிக்காது. என்னதான் சினேகிதியாக இருந்தாலும், குடும்ப அங்கத்தினர் இல்லையே. ஆனால் குடும்ப அங்கத்தினரையும் சினேகிதர்களையும் எப்படி வேறுபடுத்துவது என்று சரியாக புரியவில்லை.

“அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் முன்வரிசையில் நிற்கிறேன். ஏனென்றால் அவளும் அங்குதான் நிற்கிறாள்.”

“நல்லது. உன்னைச் சுற்றிப் பார். உன் பெற்றோர்களைக் காணமுடிகிறதா?”

“ஆமாம்.”

“உன்னை அவர்களுக்குப் பிடிக்கிறதா?”
 
“ஆமாம்.”

“நல்லது. அவர்களையும் நன்றாகப் பார்த்து அடையாளம் கூறு. முதலில் உன் அம்மாவைப் பார்.”

கேத்தரின் பெருமூச்சு விட்டாள். “எனக்கு யாரென்று தெரியவில்லை.”

“சரி. உன் அப்பாவைப்பார். நன்கு உற்றுப்பார்த்து யாரென்று சொல்.”

“அது ஸ்டுவர்ட்.” உடனே பதிலளித்தாள். நிகழ்கால காதலன். மீண்டும் வந்திருக்கிறான். இதைப்பற்றி ஆராய்வது ஏதாவது பயனளிக்கக்கூடும்.

“உங்கள் உறவு எப்படி உள்ளது?”

“எனக்கு என் அப்பாவை மிகவும் பிடிக்கும். . . . . என்னிடம் நன்றாக நடந்துகொள்கிறார். ஆனால் தொந்தரவாக நினைக்கிறார். குழந்தைகள் அனைவரையும் தொந்தரவாக நினைக்கிறார்.”

“உண்மையிலேயே அப்படி நினைக்கிறாரா?”

“இல்லை. எங்களுடன் விளையாடுவார் . . . . . நாங்கள் கேள்விகள் அதிகம் கேட்போம். எங்களிடம் நன்றாகப் பழகுவார். ஆனால் நாங்கள் கேள்விகள் கேட்பது மட்டும் பிடிக்காது.”

“அது உன்னை எரிச்சலூட்டுகிறதா?”

“ஆமாம். நாங்கள் ஆசிரியர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் பள்ளிக்குச்செல்கிறோம். அவரிடம் கேள்விகள் கேட்கக்கூடாது.”

“உன்னிடம் அவர் அப்படி கூறினாரா?”

“ஆமாம். அவருக்கு அதைவிட முக்கியமான வேலைகள் இருக்கிறது. அவர் ஒரு பண்ணையை நிர்வகிக்கவேண்டும்.”

“மிகப் பெரிய பண்ணையா?”

“ஆமாம்.”

“அது எங்கிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?”

“இல்லை.”

“நீங்கள் வசிக்கும் ஊரைப்பற்றி எதுவும் காதில் விழுகிறதா? உங்கள் ஊரின் பெயர் உனக்குத் தெரியுமா?”

உற்றுக் கேட்பதுபோல் தோன்றினாள். “எதுவும் காதில் விழவில்லை.” மீண்டும் மௌனமானாள்.

“இன்னும் இந்த பிறவியில் எதுவும் தெரிந்துகொள்ள விரும்புகிறாயா? காலத்தில் முன்னோக்கிச் செல்லலாமா?”

“இது போதும்.” என்னை இடைமறித்தாள்.
 

கேத்தரினுடைய சிகிச்சையின்போது ஏற்பட்ட வினோதமான நிகழ்வுகளையும் செய்திகளையும் குறித்து நான் எந்த நிபுணர்களிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. என் மனைவி கரோலினிடமும் மற்றும் சில நம்பகமானவர்களிடமும் மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். கேத்தரினுடைய ஹிப்னாடிஸ அமர்வின் வழியாகக் கிடைத்த தகவல்கள், அறிவுரைகள் உண்மையானவைகள் என்றும் மிக முக்கியமானவைகள் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் இதனை வெளியிட்டால் என்னுடைய தொழில் சம்பந்தமான நிபுணர்களிடமிருந்தும், பிற துறையைச் சார்ந்த நிபுணர்களிடமிருந்தும் கிடைக்கப்போகும் வரவேற்பு குறித்து மிகவும் கலக்கமாக இருந்தது. அதனால் நான் தகவல்களை வெளியிடுவதைத் தவிர்த்து வந்தேன். மேலும் என்னுடைய தொழில் மற்றும் மதிப்பு சம்பந்தமாக இந்த தகவல்கள் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களைக் குறித்தும் நான் சிந்திக்கவேண்டியிருந்தது.


என்னுடைய சந்தேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொருவாரமும், கேத்தரினுடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் விலகிகொண்டிருந்தன. மீண்டும் மீண்டும் அந்த ஹிப்னாடிஸ ஆடியோ டேப்புகளைக் கேட்டு அந்த அனுபவங்களை நன்கு புரிந்துகொண்டேன். ஆனால் அடுத்தவர்கள் என்னுடைய அனுபவங்களைக் கேட்டுதான் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு சொந்த அனுபவம் கிடையாது. எனவே நான் இன்னும் நிரூபணங்களை சேகரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக கருதினேன்.
 

கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைக்கும் செய்திகளை ஒத்துக்கொள்ள ஆரம்பித்ததால், என் வாழ்க்கை எளிமையானதாகவும் திருப்திகரமானதாகவும் மாறிக்கொண்டிருந்தது. யாருக்காகவும் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கத் தேவையில்லாமல் நான் நானாக இருக்க முடிந்தது. என்னுடைய உறவுகள் நேர்மையானதாகவும் சுற்றி வளைத்து பேசவேண்டிய தேவையில்லாததாகவும் மாறியது. குடும்ப வாழ்க்கை குழப்பமில்லாமல் நிம்மதியாக கழிந்தது. கேத்தரினிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகளை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சங்கோஜம் குறைய ஆரம்பித்தது. ஆச்சரியமாக, அனேக மக்கள் விரும்பி செவிமடுத்தார்கள். மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். பலர் தங்களுக்கும் ஏற்பட்ட விவரிக்க முடியாத, வெளியில் சொல்லாத,  உடலைவிட்டு ஆன்மா செல்லுதல், முன்ஜென்ம நினைவுகள் போன்ற நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் அடுத்தவர்களிடம் இதைப்பற்றி கூறினால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற பயத்தால் வெளியில் சொல்லாமல் இருந்ததாகக் கூறினார்கள். இதைப்போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் நினைப்பதைவிட அதிகமாக நிகழ்வது புரிந்தது. அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொண்டவர்கள் குறைவாக இருப்பதனால்தான், இத்தகைய நிகழ்ச்சிகள் அபூர்வமாக நடப்பதுபோல் தோன்றுகிறது. முக்கியமாக நன்கு பயிற்சி மேற்கொண்ட மனோவியலாளர்களே அடுத்தவர்களிடம் எதையும் பகிர்ந்துகொள்ள மறுக்கிறார்கள். 

உலக அளவில் மதிப்பு பெற்ற ஒருவர் எங்கள் மருத்துவமனையில் ஒரு சோதனைப் பிரிவிற்கு தலைமை பதவி வகித்தார். இறந்துவிட்ட அவரது தாத்தா இறந்தபிறகு அவரை பயங்கரமான விபத்திலிருந்து காப்பாற்றியதாகக் கூறினார். இன்னொரு பேராசிரியர் தன்னுடைய ஆராய்ச்சியின் தீர்வுகள், தனக்கு கனவில் கிடைப்பதாகக் கூறினார். கனவில் கிடைக்கப்பட்ட தீர்வுகள், சரியான தீர்வுகளே என்றும் கூறினார். இன்னொரு டாக்டர், ஃபோன் ஒலித்ததும், யாரிடமிருந்து ஃபோன் வருகிறது என்று கண்டுபிடிக்கும் திறமை தனக்கு இருப்பதாகக் கூறினார். ஒரு பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ பிரிவின் தலைவருடைய மனைவியும் மனோதத்துவத்தில் டாக்டரேட் பெற்றவர். சிறந்த ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்டவர். அவர் ஒருமுறை ரோம்நகரைச் சுற்றிப்பார்க்க இத்தாலி சென்றார். மேப் இல்லாமலே அந்த நகரின் அனைத்து இடங்களையும் முன்பே அறிந்ததுபோல் உணர்ந்தார். அவர் அதற்குமுன் இத்தாலி சென்றதில்லை. உள்ளூர் மொழியும் தெரியாது. ஆனால் அங்கே இருந்த இத்தாலியர்கள், அவரை அங்கே வசிப்பவர் என்று நினைத்து மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார்கள். இத்தாலியில் நிகழ்ந்த அனுபவத்தை அவரால் புரிந்துகொள்ள முடியாமல் திணறியிருக்கிறார்.


நன்றாக கற்றுணர்ந்த நிபுணர்கள், இதுபோன்ற நிகழ்வுகளை ஏன் வெளியிட தயங்குகிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. நானும் அவர்கள் ஒருவன். நமக்கு ஏற்படும் அனுபவங்களையும், உணர்வுகளையும் நாம் மறுக்க இயலாது. ஆனால் நாம் கற்றுத் தேர்ந்த பாடங்களும், நம்பிக்கைகளும், கல்வி முறைகளும் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு முற்றிலும் எதிரானது. ஆதலால் நான் வாய்மூடி மௌனமாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்
 

--தொடரும்.
 

 

மனிதக் கேமரா:

ஸ்டீஃபன் வில்ஷையர் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டடக்கலை, வரைபட நிபுணர். எந்தவிதமான கட்டடங்களையும், காட்சிகளையும் ஓரிருமுறை பார்த்துவிட்டு, மனதில் நிறுத்திக்கொண்டு அழகுற நகலாக வரைந்துவிடும் ஆற்றல் பெற்றவர். அந்த ஆற்றலால் அவர் மனிதக்கேமரா என்று அழைக்கப்படுகிறார். அவருடைய திறமைக்காக 2006-ல் பத்மஸ்ரீ விருது போன்று பிரிட்டனில் வழங்கப்படும் MBE விருது பெற்றார்.

ஸ்டீஃபன் 1974-ல் லண்டனில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள். வெஸ்ட் இண்டீஸிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அவர் சிறுவயதில் ஊமையாக அறியப்பட்டார். மூன்று வயதில் அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருப்பதும் தெரியவந்தது. ஆட்டிஸம் என்பது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. ஆட்டிஸம் உள்ளவர்களுக்கு, மூளைக்கு தகவல் அனுப்பக்கூடிய நரம்புகள் சரியானபடி தகவல்கள் அனுப்புவது கிடையாது. அதனால் அவர்களுக்கு அடுத்தவர்களுடன் பழகுவதற்குத் தெரியாது. சில சமயங்ககளில் செய்வதையே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பார்கள்.  ஸ்டீஃபன் மூன்று வயதிலேயே தன் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டார்.  

ஐந்துவயதில் சிறப்பு பள்ளியில் பயின்றபொழுது, அவருக்கு படம் வரைவதில் ஆர்வமிருப்பதை அறிந்த ஆசிரியர்கள், அவருக்கு தேவையான உதவிகள் செய்து ஊக்குவித்தனர். ஆசிரியர்களின் உதவியால் ஸ்டீஃபன் ஐந்து வயதுக்குப்பிறகு பேச ஆரம்பித்தான். பத்துவயதில் லண்டனில் உள்ள முக்கிய கட்டடங்ககளை படமாக்கி, ஒவ்வொரு ஆங்கில எழுதுக்கும் ஒரு படம் என்று, ஒரு ஆல்பமாக தயாரித்தார். அந்த ஆல்பத்துக்கு லண்டன் அல்ஃபபெட் என்று பெயரிட்டார்.  

எந்த காட்சியையும் ஒருமுறை மட்டுமே பார்த்துவிட்டு அதனை பிரதியெடுத்த்துபோல் படம் வரைவது ஸ்டீஃபனுக்கு கைவந்த கலை. பதினைந்து நிமிடங்களுக்கு, ஒருமுறை மட்டும் லண்டன் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிவந்துவிட்டு, பார்த்தகாட்சிகளை அழகாக ஓவியமாக வடித்துவிட்டார். கிட்டத்தட்ட நான்கு சதுரகிலோமீட்டர் அளவுக்கான இடங்களை ஓவியத்தில் தீட்டிவிட்டார். பத்தொன்பது அடி நீளமுள்ள ஓவியத்தை, நியூயார்க் நகரை, இருபது நிமிட ஹெலிகாப்டர் பயணத்தில் மனதில் பதிந்து சித்திரமாக வரைந்துள்ளார். கற்பனை ஓவியங்கள் பலவும் அவரால் தீட்டப்பட்டிருக்கிறது.
 

ஸ்டீஃபன் வரைந்த ஓவியப்புத்தகங்கள் சண்டே டைம்ஸ்-ல் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் இடம்பிடித்திருக்கின்றன. 2005-ல் உலகின் மிகநீளமான, காட்சிகளை நினைவில் நிறுத்தி வரையும் ஓவியத்தை, ஸ்டீஃபன் வரைந்திருக்கிறார். ஏழு நாட்கள் டோக்கியோவை சுற்றிவிட்டு, அந்த நகரை ஓவியமாக 10 மீட்டர் நீளத்துக்கு வரைந்து அந்த சாதனையைப்புரிந்துள்ளார். ரோம், ஹாங்க்காங்க், துபாய், ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன், நியூயார்க், ஜெருசேலம் என்று அனைத்து நகரங்களையும் சித்திரமாக தீட்டியிருக்கிறார். ரோம் நகரை ஹெலிகாப்டரில் சுற்றி வந்து வரைந்த கட்டடங்க்களின் ஓவியங்களில், தூண்களின் எண்ணிக்கையக்கூட சரியாக வரைந்திருக்கிறார்.


2011-ல் எழுபத்தாறு மீட்டரில் நியூயார்க் நகரை அவர் வரைந்தது, கென்னடி ஏர்ப்போர்ட்டை இன்றும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.


1987-ல் BBC - ல் முட்டாள்தனமான அறிவாளிகள் (The foolish wise ones) என்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வருடமே அவருடைய ஓவியங்கள் புத்தக வடிவில் பிரசுரமாகின. அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று.


அவர்பெற்ற விருதுகள்: 

2006 : Member of the Order of the British Empire (MBE)

2008: American broadcasting company – Person of the week on 15 February.

2009: ambassador of the Children's Art Day in the United Kingdom

2011: honorary Fellow of the “Society of the Architectural Illustration”
 

முட்டாள்தனமான அறிவாளிகள் இணைப்பு கீழே உள்ளது. இரண்டாவது வீடியோவில் ஸ்டீஃபன் வில்ஷையர் இருக்கிறார். அவருடைய ஓவியங்களைக் காண கூகிள் இமேஜில் “Stephen Wiltshire“ என்று தேடுங்கள். 



 

 

துணுக்கு:

சலூன் வைத்திருக்கும் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டுவதற்கு 100 ரூபாய் வசூலித்து வந்தார். அவர் பிஸினஸ் நன்றாக நடந்தது. அவருக்கு போட்டியாக ஒருவர் கடைவிரித்து, முடி வெட்டுவதற்கு 50 ரூபாய் என்று கடைக்கு முன் ஒரு போர்டையும் வைத்துவிட்டார். முதலில் கடை வைத்திருந்தவருடைய கஸ்டமர்கள் புதியகடைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். அதனால் கடையை மூடவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அவருடைய நண்பர் ஒருவர் ஒரு யோசனை கூறினார். கடைக்கு எதிரே சில வாசகங்கள் எழுதி ஒரு போர்டு வைக்குமாறு கூறினார். அந்த விளம்பர வாசகத்துடன், கட்டணத்தையும் 100-லிருந்து 120-ஆக அதிகப்படுத்தி அந்த போர்டில் வாசகம் எழுதிவிட்டார். அதன் பிறகு கூட்டம் பழையபடி அவர்கடைக்கே வர ஆரம்பித்துவிட்டது.

அப்படி என்னதான் அந்த போர்டில் எழுதிவிட்டார்?
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/ 

போர்டில் எழுதிய வாசகம்:
முடி வெட்டுவதற்கு கட்டணம் :  120 ரூபாய்
50 ரூபாய்க்கு வெட்டிய முடியை சரிசெய்வதற்கு கட்டணம் : 100 ரூபாய்.

10 comments:

 1. இதில் மருத்துவரின் உணர்வுகள் முழுதும் நம்பத்தக்கவையாகவே இருக்கின்றன. பலரும் பிறர் என்ன நினைப்பார்களோ என்றே வாயைத் திறப்பதில்லை என்பதை நானும் புரிந்து கொள்கிறேன். பொதுவாக மக்களுக்கு இம்மாதிரியான விஷயங்களில் நம்பிக்கை அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.

   டாக்டர் வெய்ஸ், ஒபரா மற்றும் டாக்டர்கள் ஷோக்களில் கலந்துகொண்டு, பார்வையாளர்களில் சிலரை, ஹிப்னடைஸ் செய்து, முன் ஜென்மங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இருந்தாலும், இத்தகைய விஷயங்களை ஒருவர் நம்புவதோ, நம்பவைக்க முயற்சி செய்வதோ முடிவில்லாத வேலை. நம்பினாலும் வெளியில் சொன்னால் மூளை சரியில்லாதவன் என்று சொல்லிவிடுவார்கள் என்று அஞ்சுபவர்களும் இருக்கக்கூடும்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. என்ன இது? புதிரைக் கேட்டுவிட்டு பதிலையும் கொடுத்துட்டீங்க?? :)))))

  ஸ்டீபன் பற்றிய செய்தி புதியது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி. இதனைப் புதிராக கொடுத்தால் பல பதில்கள் சொல்வதற்கு சாத்தியங்கள் இருந்ததால் புதிராகத் தரவில்லை.

   ஸ்டீஃபன் போல, உலகில் பல அதிசயங்கள் நமக்கு புலப்படாமல், புரியாமல் இருக்கின்றன.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. // இன்னொரு பேராசிரியர் தன்னுடைய ஆராய்ச்சியின் தீர்வுகள், தனக்கு கனவில் கிடைப்பதாகக் கூறினார்.//

  சில தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு விடை கனவில் கிடைத்ததாக
  சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நம்ப மறுத்ததுண்டு. ஆனால் இதைப் படித்ததும் இது உண்மையாய் இருக்குமோ என ஐயம் வருகிறது.

  ஸ்டீஃபன் வில்ஷையர் பற்றிய தகவல் அருமை. Google ளில் உள்ள அவரது 467 ஓவியங்களில் சிலவற்றைத் தான் பார்த்தேன். ஓவியன் என்ற முறையில் அவைகளைக் கண்டு வியந்தேன். ஓய்வாக எல்லாவற்றையும் பார்க்க இருக்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  புதிரையும் அதற்கான பதிலையும் இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   என்னுடைய கனவுகளின் அனுபவங்களில் இரண்டைக் குறிப்பிடுகிறேன்.
   செஸ் விளையாட்டில் மூன்று மூவ்களில் செக்மேட் பண்ணுவது எப்படி என்று எனக்கு கனவில்தான் தெரிய வந்தது. அப்பொழுது எனக்கு வயது பதினைந்து. எனக்கு இன்னும் நினைவில், இருப்பதற்குக் காரணம், என்னை எப்பொழுதும் அனேகமாக தோற்கடிப்பவரை அன்று சுலபமாக வென்றுவிட்டேன்.

   குளத்தில் டைவ் அடிப்பது எப்படி என்று கனவில்தான் கற்றுக்கொண்டேன். இப்பொழுதும் சிலசமயங்களில் தீர்வுகளுக்கு கனவினை நாடுவேன். அடுத்தவர்களுக்கு இதனை நம்புவது கடினம்தான்.
   தங்களது ஓவியங்களை பார்த்தது ஞாபகம் உள்ளது. எனது மகளுக்கும் ஃபோட்டோவைக் காப்பி செய்யும் அளவுக்கு வரையத்தெரியும்.

   நன்றி. வீடியோவை நேரமிருந்தால் பார்க்கவும்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. // ஃபோன் ஒலித்ததும், யாரிடமிருந்து ஃபோன் வருகிறது என்று கண்டுபிடிக்கும் திறமை // நம்மை அறியாமலே சொல்வதும் உண்டு... சில பயிற்சிகள் மூலம் (உள்ளுணர்வுகளை) அதனை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்...

  ஸ்டீஃபன் வில்ஷையர் - அபார திறமை... அற்புதம்...!

  போர்டில் எழுதிய வாசகம் நல்லா இருக்கே...!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன். ஆமாம். சில பயிற்சியின் மூலம் உள்ளுணர்வுகளை மேம்படுத்த முடியும் என்று நானும் நம்புகிறேன்.

   போர்டில் எழுதப்பட்ட வாசகத்தை நானும் எதிர்பார்க்கவில்லை.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. இந்த தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்கு போய்க் கொண்டு இருக்கிறது.
  இந்த தொடர் படிப்பவர்களை மறைமலையடிகள் எழுதிய “தொலைவிலுணர்தல்” என்ற நூலையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். TELEPATHY சம்பந்தப்பட்ட நூல் அது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   அந்தப் புத்தகத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படித்ததில்லை. ஆன்லைனில் கிடைக்குமாவென்று பார்க்கிறேன். நிறைய புத்தகங்கள் வாங்கப்பட்டு பாதி பாதி படித்த நிலையிலேயே இருக்கின்றன.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete