பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 30, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 7 : பகுதி - 2

“நான் உருளையான தூண்களைக் கொண்ட கட்டிடங்களைக் காண்கிறேன். ஏகப்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. நாங்கள் வெளியே நிற்கிறோம். நிறைய ஆலிவ் மரங்கள் இருக்கின்றன. மிகவும் அழகாக இருக்கின்றன. நாங்கள் எதையோ கவனித்துக்கொண்டு இருக்கின்றோம். மக்கள் அனைவரும் வேடிக்கையான முகமூடி அணிந்திருக்கிறார்கள். முகமூடி முகத்தை முழுவதும் மூடியிருக்கிறது. ஏதோ திருவிழாபோல் உள்ளது. நீண்ட அங்கியும் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் ஏதோ நடிப்பதுபோல் இருக்கிறது. அவர்கள் மேடையில் இருக்கிறார்கள். நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.”
“ஏதாவது நாடகத்தைப் பார்க்கிறாயா?”
“ஆம்.”
“நீ எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்த்துச் சொல்.”
“எனக்கு பழுப்பு நிற முடியுள்ளது. முடியை பின்னியிருக்கிறேன். 

நீண்ட மௌனம். அவள் வர்ணித்தப்படி பார்த்தால், அவள் உருவமும், ஆலிவ் மரங்களும் அவள் முன்பு கூறிய ஒரு பிறவியை ஒத்திருந்தது என் நினைவுக்கு வந்தது. கி.மு. 1500 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாட்டில், நான் டையக்னஸ் என்ற ஆசிரியராக வாழ்ந்தபோது, கூறியதைப்போல் இருப்பது தெரிந்தது. நானும் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
“உன்னால் காலத்தைக் கணிக்க முடிகிறதா?”
“இல்லை.”
“உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னுடன் இருக்கிறார்களா?”
“ஆம். என் கணவர் இருக்கிறார். அவர் யாரென்று (தற்கால கேத்தரின் பிறவியில்) எனக்குத் தெரியவில்லை.”
“உனக்கு குழந்தைகள் இருக்கின்றனவா?”
“என்னிடம் ஒரு குழந்தை உள்ளது.” அவள் குரல் வித்தியாசமாக ஒலித்தது. கேத்தரின்போல் இல்லை. ஏதோ ஒரு பழைய நாடகம் பார்ப்பதுபோல் இருந்தது.
“உனது தந்தை இருக்கிறாரா?”
“இங்கு இல்லை. நான் அவரைப் பார்க்க முடியவில்லை. நீங்கள் இங்கு எங்கோ இருக்கிறீர்கள். . . . . . எங்கள் பக்கத்தில் இல்லை.” நான் சரியாகத்தான் யூகித்திருக்கிறேன். நாங்கள் முப்பத்தைந்தாம் நூற்றாண்டுக்குச் சென்றுவிட்டோம்.
“நான் அங்கு என்ன செய்கிறேன்?”
“நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆசிரியர். . . . . ஆசிரியர். . . . . நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். . . . . . சதுரங்கள், வட்டங்கள், வேடிக்கைகள். . . . . டையக்னஸ், நீங்கள் இருக்கிறீர்கள்.”
“என்னைப் பற்றி வேறென்ன தெரியும்?”
“உங்களுக்கு வயதாகிவிட்டது. நாம் உறவினர்கள். நீங்கள் என்னுடைய தாயின் சகோதரர்.”
“உனக்கு என் குடும்பத்தில் வேறு யாரையும் தெரியுமா?”
“உங்கள் மனைவியைத் தெரியும். . . . . . குழந்தைகளையும் தெரியும். உங்களுக்கு மகள்கள் இருக்கிறார்கள். இருவர் என்னைவிட மூத்தவர்கள். என் தாய் இறந்துவிட்டார். இளமையிலேயே இறந்துவிட்டார்.”
“உன் தந்தைதான் உன்னை வளர்த்தாரா?”
“ஆம் இப்பொழுது நான் திருமணமானவள். எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது.”
“கர்ப்பமாக இருக்கிறாயா?”
“ஆம். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. பிரசவத்தின்போது இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்.”
“உன் தாய் அப்படிதான் இறந்தாரா?”
“ஆமாம்.”
“உனக்கு அப்படிநேர வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறாயா?”
“ஆம். இங்கு இது சகஜம்.”
“இதுதான் உனக்கு முதல் குழந்தையா?”
“ஆமாம். எனக்கு பயமாக இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எனக்கு குழந்தை பிறக்கலாம். நான் மிகவும் குண்டாகிவிட்டேன். என்னால் அசையமுடியவில்லை. . . . . குளிராக உள்ளது.” காலத்தில் முன்னோக்கி வந்துவிட்டாள். குழந்தைப் பிறக்கப்போகிறது. கேத்தரினுக்கு நிகழ்கால பிறவியில் இதுவரை குழந்தை எதுவும் பிறக்கவில்லை. நானும் பிரசவத்துக்கு மருத்துவராக பணிபுரிந்து கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாகிறது.  

“எங்கே இருக்கிறாய்?” வினவினேன்.
“ஏதோ பாறையின் மீது இருக்கிறேன். மிகவும் குளிருகிறது. வலி அதிகமாக உள்ளது. . . . . . யாராவது உதவி செய்யுங்கள். யாராவது உதவி செய்யுங்கள்.” அலறினாள். நான் இழுத்து மூச்சு விடுமாறு கூறினேன். அப்பொழுது அதிக வலியின்றி குழந்தை பிறந்துவிடும். அவளுடைய பிரசவ வேதனை சில நிமிடங்கள் நீடித்தன. பெண் குழந்தை பிறந்தது.
“இப்பொழுது நலமாக உணருகிறாயா?”
“மிகவும் பலகீனமாக இருக்கிறது. . . . எவ்வளவு இரத்தம்!”
“குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறாய் என்று தெரியுமா?”
“மிகவும் களைப்பாக இருக்கிறது. . . . எனக்கு என் குழந்தை வேண்டும்.”
“உன் குழந்தை இங்கே இருக்கிறது” சமாளித்தேன்.
“பெண் குழந்தை. என் கணவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.” மிகவும் களைப்படைந்துவிட்டாள். நான் சிறிது உறங்குமாறு கட்டளையிட்டேன். உறக்கத்துக்குப் பின் அவள் களைப்பு நீங்கிவிடும். இரண்டு நிமிடங்களுக்குப் பின் உறக்கத்திலிருந்து மீண்டு வந்தாள். 

“இப்பொழுது நலமாக உணர்கிறாயா?”
“ஆமாம். . . . நான் விலங்குகளைப் பார்க்கிறேன். முதுகில் ஏதோ ஏற்றிச் செல்கின்றன. முதுகில் கூடைகள் உள்ளன. கூடையில் உணவுப் பொருட்கள் உள்ளன. பழங்கள். . . . ஏதோ சிவப்பு நிறப் பழங்கள்.”
“அந்த இடம் வளமுள்ள பிரதேசமாக இருக்கிறதா?”
“ஆமாம். உணவுக்குப் பஞ்சமில்லை.”
“அந்த இடத்தின் பெயர் என்ன? முன்பின் தெரியாதவர்கள் ஊரின் பெயரைக் கேட்டால் என்ன கூறுவாய்?”
“கேத்தனியா . . . . . . கேத்தனியா”
“கிரேக்கப் பெயர்போல் உள்ளது.” நான் கூறினேன்.
“உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. நீங்கள் ஊரைவிட்டு சென்று வெகுநாட்களுக்குப் பின் திரும்பியிருக்கிறீர்கள். நான் இங்குதான் இருக்கிறேன்.” இது ஒரு திருப்பமாக இருந்தது. அவளுடைய இந்த வாழ்க்கையில் உறவினராகவும், முதியவராகவும், அறிவுள்ளவராகவும் இருந்திருக்கிறேன். என்னிடம் நான் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கு அந்த தகவலைப் பற்றி அறிய எந்த வாய்ப்பும் கிடையாது. 

“உன் முழுவாழ்வும் அந்த கிராமத்திலேயேதான் கழிந்ததா?” வினவினேன்.
“ஆம்.” முணகினாள். “மாணவர்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கவேண்டுமென்று தெரிந்துகொள்வதற்காக நீங்கள் பிரயாணம் செய்வீர்கள். நீங்கள் கற்றுக்கொள்வதற்காகவும் பிரயாணம் மேற்கொள்வீர்கள். வேறு வேறு வழித்தடங்களில் பிரயாணம் செய்வதால், அந்த அனுபவத்தைக் கொண்டு இடங்களைப் பற்றி வரைபடமும் தயார்செய்வீர்கள். அட்டவணைகளையும் தயார்செய்வீர்கள் . . . . . தற்பொழுது உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்களால் வரைபடம் உதவியுடன் இடங்களைக் குறித்து புரிந்துகொள்ள முடியும். அதனால் இளைஞர்கள் உங்களுடன் வர விருப்பப்படுவார்கள். நீங்கள் நல்ல அறிவாளி.”
“என்ன அட்டவணை? விண்மீண்களைப் பற்றியதா?” வினவினேன்.
“வரைபடங்களுக்கான குறியீடுகள் பற்றிய அட்டவணை. உங்களுக்கு அனைத்து குறியீடுகளும் நன்கு தெரியும். உங்களால் அவர்களுக்கு புதிய வரைபடங்கள் செய்வதற்கு கற்றுக் கொடுக்கமுடியும்.”
“உன்னால் கிராமத்தில் யாரையேனும் அடையாளம் காணமுடிகிறதா?”
“யாரையும் தெரியவில்லை. . . . . உங்களை மட்டும்தான் தெரியும்.”
“நமக்கு உறவு சுமுமாக உள்ளதா?”
“மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் மிகவும் நல்லவர். உங்கள் அருகே அமரும்பொழுது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்; . . . . . . நீங்கள் எங்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள். எங்கள் சகோதரிகள் அனைவருக்கும் உதவியிருக்கிறீர்கள்.”
கேத்தரின் தொடர்ந்தாள். “பிரட் இருப்பதைக் காண்கிறேன். மிகவும் மெல்லிய தட்டையான பிரட்.”
“மக்கள் பிரட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களா?” நான்.
“ஆம். நானும் என் தந்தையும், என் கணவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். எங்கள் கிராமத்து மக்களும் உண்ணுகிறார்கள்.”
“இன்று ஏதேனும் விசேஷமான நாளா?”
“ஆம். ஏதோ திருவிழா நடப்பதுபோல் தோன்றுகிறது.”
“உன் தந்தை உன்னுடன் இருக்கிறாரா?”
“ஆம்.”
“உன் குழந்தை?”
“இங்குதான் இருக்கிறது. என் சகோதரியிடம் இருக்கிறாள்.”
“உன் சகோதரியை அடையாளம் காணமுடிகிறதா?” கேத்தரினின் நிகழ்கால பிறவியில் யாரையேனும் நினைவுபடுத்த முடிகிறதா என்று அறிவதற்காகக் கேட்டேன்.
“இல்லை. என்னால் அடையாளம் காணமுடியவில்லை.”
“உன் தந்தை யாரென்று தெரிகிறதா?”
“ஆம். . . . . அவர் எட்வர்ட் (என்னை சிபாரிசு செய்த டாக்டர்). அத்திப்பழங்கள், ஆலிவ், நிறைய சிவப்புநிற கனிகளைக் காண்கிறேன். சாப்பிடுவதற்கு பிரட்டும் இருக்கிறது. செம்மறி ஆடுகளையும் வெட்டி வறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” சற்று நேர மௌனம். காலத்தில் முன்னோக்கி சென்றுவிட்டாள். “வெண்மையான . . . . . . வெண்மையான செவ்வக வடிவிலான பெட்டியைப் பார்க்கிறேன். அது . . . . . சவப்பெட்டி. மக்கள் இறந்ததும் அதில்தான் கிடத்துவார்கள்.”
“யாரேனும் இறந்துவிட்டார்களா?”
“ஆம் என் தந்தை இறந்துவிட்டார். அவர் முகத்தைப் பார்க்க எனக்கு மனமில்லை. . . . .  அவர் முகத்தைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை.”
“நீ அவர் முகத்தைப் பார்த்துதான் ஆகவேண்டுமா?”
“ஆம். அவரை புதைப்பதற்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.”
“ஆம். என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உனக்கு எத்தனை குழந்தைகள்?” அவள் வருத்தத்தைப் போக்க முயற்சித்தேன்.
“மூன்று குழந்தைகள். இரண்டு ஆண்குழந்தைகள். ஒரு பெண் குழந்தை.” பொறுப்புடன் பதில் கூறிவிட்டு மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்தாள். “எனது தந்தையின் உடலை கீழே வைக்கிறார்கள். எதன் கீழோ வைத்து மூடிவிட்டார்கள்.” மிகவும் துயரத்துடன் கூறுவது தெரிந்தது.
“நானும் இப்பொழுது இறந்துவிட்டேனா?”
“இல்லை. நாங்கள் கோப்பையில் திராட்சை பழரசம் அருந்துகிறோம்.”
“நான் எப்படி இருக்கிறேன்?”
“உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டது.”
“இப்பொழுது எப்படி உணர்கிறாய்? நலமாக உணர்கிறாயா?”
“இல்லை நீங்களும் இறந்துவிட்டால், மிகவும் தனிமை படுத்தப்பட்டுவிடுவேன்.”
“நீ உன் குழந்தைகளைவிட அதிகநாட்கள் வாழ்ந்துவிட்டாயா? அவர்கள் இருந்தால், அவர்கள் உன்னை கவனித்துக்கொள்வார்களே?”
“ஆனால் உங்களுடைய வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் இழக்க முடியாது.” சிறு குழந்தைபோல் பதில் கூறினாள்.
“உன்னால் நன்கு வாழமுடியும். உனக்கும் ஏராளமான விஷயங்கள் தெரியும். உனக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது.” அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினேன். அவள் நிம்மதியாக உணர்ந்ததைப் பார்க்க முடிந்தது.  

“அமைதியாக உணர்கிறாயா? இப்பொழுது எங்கிருக்கிறாய்?”
“எனக்குத் தெரியவில்லை.” அவள் மரணத்திற்குப் பிறகு உள்ள நிலையில் இருப்பதை அறிந்து கொண்டேன். இந்தமுறை அவள் மரணத்தை தழுவுவதை அனுபவிக்கவில்லை. குறிப்பிடத்தக்க அளவு விரிவான வாழ்க்கை விவரங்களுடன் இரண்டு பிறவிகளை இந்தவாரம் கடந்துவிட்டாள். நான் வழிகாட்டி ஆன்மாக்களுக்காக காத்திருந்தேன். நிமிடங்கள் கழிந்தன. நான் அவளிடம் வழிகாட்டி ஆன்மாக்களைக் காணமுடிகிறதா என்று வினவினேன்.  

“அந்த பரிமாணத்தை இன்னும் அடையவில்லை. அங்கு செல்லும்வரை என்னால் எதுவும் கூறமுடியாது.” பதிலளித்தாள். காத்திருந்தோம். அவள் அந்த பரிமாணத்தை அடையவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு சமாதி நிலையிலிருந்த அவளை மீட்டு, நிகழ்காலத்திற்கு அழைத்துவந்தேன். 

--தொடரும்.
 

 

 

மகிழ்வான வாழ்க்கை:

பொருட்செல்வத்துக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பது உண்மை. உணவு, உடை, உறையுள் அமையப்பெற்றவர்கள் அது இல்லாதவர்களைக்காட்டிலும் சந்தோஷமாக இருப்பது உண்மை. அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்தபின், செல்வத்துக்கும், மகிழ்ச்சிக்குமான சம்பந்தம் அவ்வளவு அதிகமானதாக இல்லை. ஆராய்ச்சிகள் திருப்தி அடைந்து வாழ்பவர்களே, சந்தோஷமாக இருப்பதாக கூறுகிறது.
மகிழ்ச்சியானவர்களுக்குண்டான எட்டு முக்கிய குணங்களாக “டாக்டர். டேவிட் மெயர்” என்பவர் கீழ்க்கண்ட குணங்களைக் குறிப்பிடுகிறார்.
1.     மகிழ்ச்சியானவர்கள், தங்களின் உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியமாக இருப்பதாக நம்புகிறார்கள். தங்களை நேர்மையுள்ளவராகவும், அறிவுள்ளவராகவும் நினைக்கிறார்கள். அனைத்து இன மக்களிடமும் வேறுபாடின்றி நடப்பவர்களாக எண்ணுகிறார்கள்.
2.     எந்நிலையிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதாக எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதனால் மன அழுத்தத்தால் பாதிப்படைவதில்லை.
3.     எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எப்பொழுதும் பாதி நிரம்பிய குவளையைத்தான் காண்கிறார்கள். குவளையில் பாதி காலியாக இருக்கிறதென்று எண்ணி கவலைப்படுவதில்லை.
4.     மகிழ்ச்சி அவர்களை நிறையபேருடன் பழக வைக்கிறதா, அல்லது நிறையபேருடன் பழகுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆகமொத்தத்தில் மகிழ்ச்சியானவர்கள் நிறையபேருடன் பழகுகிறார்கள்.
5.     மகிழ்ச்சியானவர்கள் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பார்கள். மணமானவர்கள் பொதுவாக மணமாகாதவர்களைக்காட்டிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
6.     ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள். பிரதிபலன் எதிர்பாராது பணிசெய்வது அவர்களது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் ஏற்படுத்திக்கொள்வதும் அவர்களை மகிழ்ச்சியாக்குகிறது.
7.     வாழ்க்கையில் வேலை, விளையாட்டு, ஆன்மீகம், குடும்பம், நண்பர்கள், சமூகம் என்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் செலுத்துகிறார்கள். ஓய்வுக்கும், வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்குகிறார்கள்.
8.     புதுமையான விஷயங்களிலும், படைப்புத்திறனிலும் அக்கறை காட்டுகிறார்கள். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் விருப்பப்படுகிறார்கள்.
 

உடலுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. ஒன்றைச் சார்ந்தே மற்றொன்றும் திளைக்கிறது. எனவே உடலையும், உள்ளத்தையும் பேணிக்காப்போம்.
 

 

என்ன தலைப்பிடுவது? :

கீழேயுள்ள முக்கோணத்தில் ஒரு வாக்கியத்தை எழுதியிருக்கிறேன். அந்த வாக்கியத்தை, படித்துவிட்டு நீங்கள் பின்னூட்டமிடும்பொழுது அந்த வாக்கியத்தை, முக்கோணத்தில் உள்ளது போல் மூன்று வரிகளில் எழுதாமல், ஒரே வரியில் மட்டும் எழுதுங்கள். நீங்கள் எழுதி அனுப்பிய பிறகு, உங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாத அலலது தெரிந்த ஒன்றினைப்பற்றிக் கூறுகிறேன். கலவரம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய அனுமதியில்லாமல் எதனையும் வெளியிட்டுவிடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்ட விதிமுறைகளைப் படித்துவிட்டு கீழே செல்லுங்கள்.
 

 

 

 

 

என்ன தலைப்பிடுவது என்று தெரியவில்லை. அதனால், என்ன தலைப்பிடுவது என்றே தலைப்பிட்டுள்ளேன்.

 

 
 
 
 

27 comments:

 1. // சிறிது நேரத்திற்குப் பிறகு சமாதி நிலையிலிருந்த அவளை மீட்டு, நிகழ்காலத்திற்கு அழைத்துவந்தேன். //

  நிகழ்காலத்தில் நடந்ததை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ‘என்ன தலைப்பிடுவது’க்கான சொற்றொடர்:
  நல்ல மதராஸி ஒருவர் டில்லிக்கு சென்றார். .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா!

   என்ன தலைப்பிடுவது, என்று துணுக்கு ஆருடத்துக்காக எழுதப்பட்டது அல்ல. அது படிப்பவர்களை திசை திருப்புவதற்காக கூறப்பட்டது மட்டுமே. உண்மையில் நாம் கண்களால் பார்த்தாலும், மனதால் படிக்கிறோம் என்று காட்டுவதற்காகவே இந்த துணுக்கு எழுதப்பட்டது.

   அந்த முக்கோணத்தில் இரண்டு முறை "ஒரு" என்ற வார்த்தை பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் படிப்பவர்கள் அந்த தவறை உணராமல் படிப்பார்கள். தாங்களும் அப்படிப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
  2. உண்மைதான். அந்த ‘ஒரு’ என்ற சொல் இரண்டு முறை வந்ததை நான் கவனிக்கவில்லை. படிப்பவர்களின் கவனத்தை திருப்பவே அந்த சொற்றொடர் முக்கோண வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது என எண்ணுகிறேன். ஏமாந்தது பற்றி வருத்தமில்லை. மகிழ்ச்சியே! இது போன்ற கண்கட்டி வித்தைகள் இனி தாங்கள் தரலாம். ஆனால் நாங்கள் இனி உஷாராய் இருப்போம்!

   Delete
  3. நான் துணுக்கு எழுதும்பொழுது தவறை உணரவில்லை. பதில் எழுதும் பொழுதுதான் தவறை உணர்ந்தேன். புரிந்துகொண்டமைக்கு நன்றி. எப்படியிருப்பினும் கண்கட்டி வித்தைகள் இருந்தால், அவ்வளவு சுலபமாகவும் இருக்காமல் பார்த்துக்கொள்வேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
  4. ஆமாம். முக்கோண வடிவத்துக்குள் எழுதப்படாமல், ஒரே வரியில் எழுதப்பட்டிருந்தால் தவறு சுலபமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

   Delete
 2. சுவாரஸ்யமான பதில்கள்...

  1 to 8 - ஒவ்வொன்றும் உண்மை...

  ReplyDelete
 3. ஒரு நல்ல மதராஸி சென்ற ஒரு டில்லி

  (வார்த்தைகளை குறைக்கலாமா...?)

  மதராஸி சென்ற டில்லி

  ReplyDelete
 4. Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

   தாங்களும் தொடர்ந்து வருவது எனக்கு உற்சாகமளிக்கிறது.

   என்ன தலைப்பிடுவது - துணுக்கில் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.

   தாங்களும் தவறாகத்தான் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 5. ” டில்லி சென்ற ஒரு நல்ல மதராசி ”

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா!

   முதல் பின்னூட்டத்துக்கு கூறிய பதிலையே மீண்டும் கூறுகிறேன்.

   என்ன தலைப்பிடுவது, என்று துணுக்கு ஆருடத்துக்காக எழுதப்பட்டது அல்ல. அது படிப்பவர்களை திசை திருப்புவதற்காக கூறப்பட்டது மட்டுமே. உண்மையில் நாம் கண்களால் பார்த்தாலும், மனதால் படிக்கிறோம் என்று காட்டுவதற்காகவே இந்த துணுக்கு எழுதப்பட்டது.

   அந்த முக்கோணத்தில் இரண்டு முறை "ஒரு" என்ற வார்த்தை பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் படிப்பவர்கள் அந்த தவறை உணராமல் படிப்பார்கள். தாங்களும் அப்படிப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 6. தாங்கள் மொழிபெயர்த்து எழுதி வரும் ” பிறவி மர்மங்கள் “ தொடரை முகவுரையிலிருந்து இன்று வரை உள்ள பதிவுகள் வரை ஒரே தடவையில் படித்தேன். படிக்கும்போது பிரமிப்பாக இருந்தது. விடை தெரியாத கேள்விகள் பல. மொழிபெயர்ப்பும் சிக்கல் இல்லாது செல்கிறது.

  // கிட்டத்தட்ட மரணத்தை தொட்டவர்களிடம், எடுக்கப்பட்ட பேட்டியில், அநேகமாக அனைவருடைய அனுபவங்களும் ஒத்துப்போகிறது. அவர்கள் இறக்கும் தருவாயில், உடலைவிட்டு பிரிந்து மேலே சென்று, கீழே நடப்பவைகளைக் கவனிக்க முடிந்திருக்கிறது. // ( பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 5 )

  போன்ற அனுபவங்களை சொல்லும்போது, தொடரை மேற்கொண்டு படிக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது.

  தொடர் முடிந்ததும் ஒரு நூலாக வெளியிடவும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா!
   நான் புத்தகமாக வெளியிடும் கண்ணோட்டத்தில் இதுவரை சிந்திக்கவில்லை. நீங்கள் கூறுவதும் சரியாகப்படுகிறது. முயற்சி செய்கிறேன்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 7. உங்கள் வலைப்பதிவில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையைக் கொண்டுவர, உங்கள் வலைப்பதிவு, blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாறவேண்டும். திரு. சசிகுமார் அவர்களின் “வந்தேமாதரம்” வலையின் ”பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி “ www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html என்ற கட்டுரையில் எளிமையான வழிமுறை ஒன்றைச் சொல்லி இருக்கிறார்..எளிமையான இந்த வழிமுறையைச் செய்தால் தங்கள் பதிவில் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வந்துவிடும். நானும் எனது பதிவில் அந்த முறையைத்தான் செய்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா!
   தங்களுடைய ஆலோசனையின்படி செய்திருக்கிறேன். இப்பொழுது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். நான் ஆஸ்திரேலியாவிலிருந்து உபயோகிப்பதால், நான் நீங்கள் கூறும் பிரச்சனைகளை சந்திக்கவில்லை. இருப்பினும் நீங்கள் கூறியபடி செய்துவிட்டேன்.
   தமிழ் மணம் பட்டையிலிருந்து என்னால் தமிழ்மணத்தில் இணைப்பதில் பிரச்சனைகள் இருக்கிறது. நான் தமிழ் மணத்துக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
  2. // தமிழ் மணம் பட்டையிலிருந்து என்னால் தமிழ்மணத்தில் இணைப்பதில் பிரச்சனைகள் இருக்கிறது. நான் தமிழ் மணத்துக்கு மெயில் அனுப்பியுள்ளேன். //

   தமிழ்மணத்தில் தங்களுக்கு என்னுடைய முதல் வாக்கை முதல் ஆளாக அளித்துள்ளேன். ( பார்க்கவும் )

   நீங்கள், உங்கள் பதிவை blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாற்றி விட்டபடியினால் இனிமேல் இந்த பதிவையும், இனிவரும் பதிவுகளையும் தமிழ்மணத்தில் இணைப்பதில் பிரச்சினை இருக்காது. நன்றி!

   Delete
  3. நன்றி ஐயா!. இனி வரும் பதிவுகளை இணைப்பதில் தொந்தரவுகள் இருக்காது என்று நினைக்கிறேன். என்னுடைய பதிவுகளில் முதல் வாக்கினை அளித்ததற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் வாக்குகள் எதற்காக என்று எனக்குத் தெரியாது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 8. அப்பா, எத்தனை எத்தனை பிறவிகள்!! உண்மையிலேயே பிறவி மர்மம் நிறைந்ததே. ஆனாலும் இப்படி எல்லாவற்றையும் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள எல்லாராலும் இயலாது. காதரினுக்கும் ஹிப்னாடிச மயக்கத்தில் தெரிகிறது. ஆனால் பின்னர் எதுவும் நினைவில் இருக்காது என்பதும் ஆச்சரியமான ஒன்று. மருத்துவர் மிகவும் முயற்சி எடுத்திருக்கிறார். பொறுமைசாலியும் கூட. வெற்றி அடையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.
   காதரினுக்கு வழிகாட்டி ஆன்மாக்கள் தொடர்பான விஷயங்கள் தவிர மற்ற பிறவிகள் நினைவில் நிற்பதாக டாக்டர்.வெய்ஸ் குறிப்பிடுகிறார்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 9. டில்லி சென்ற ஒரு நல்ல மதராசி! :))))) காத்திருக்கேன்.

  ReplyDelete
  Replies

  1. நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.

   முதல் பின்னூட்டத்துக்கு கூறிய பதிலையே மீண்டும் கூறுகிறேன்.

   என்ன தலைப்பிடுவது, என்று துணுக்கு ஆருடத்துக்காக எழுதப்பட்டது அல்ல. அது படிப்பவர்களை திசை திருப்புவதற்காக கூறப்பட்டது மட்டுமே. உண்மையில் நாம் கண்களால் பார்த்தாலும், மனதால் படிக்கிறோம் என்று காட்டுவதற்காகவே இந்த துணுக்கு எழுதப்பட்டது.

   அந்த முக்கோணத்தில் இரண்டு முறை "ஒரு" என்ற வார்த்தை பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் படிப்பவர்கள் அந்த தவறை உணராமல் படிப்பார்கள். தாங்களும் அப்படிப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

   ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete

 10. என்ன இவர் வார்த்தைகளைப் போட்டுக் குழப்புகிறாரே என்றே தோன்றியது. அந்த இரண்டாவது ‘ஒரு ‘ வில் cat இருப்பது தெரிந்தது.
  உங்கள் தொடரைப் படித்து வரும்போது கேத்தரினின் அனுபவங்கள் மூலம் ஒரு சரித்திர ஆராய்ச்சியே செய்யலாம் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா!
   சொற்றொடரை சரியாகப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆமாம், சரித்திர ஆராய்ச்சிதான், டாக்டரின் கூற்றை உண்மையாவென்று உறுதியாகக் கூறமுடியும்.
   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 11. டெல்லி சென்ற ஒரு நல்ல மதராசி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி திரு. ஜீவன்சிவன்!

   முதல் பின்னூட்டத்துக்கு கூறிய பதிலையே மீண்டும் கூறுகிறேன்.

   என்ன தலைப்பிடுவது, என்று துணுக்கு ஆருடத்துக்காக எழுதப்பட்டது அல்ல. அது படிப்பவர்களை திசை திருப்புவதற்காக கூறப்பட்டது மட்டுமே. உண்மையில் நாம் கண்களால் பார்த்தாலும், மனதால் படிக்கிறோம் என்று காட்டுவதற்காகவே இந்த துணுக்கு எழுதப்பட்டது.

   அந்த முக்கோணத்தில் இரண்டு முறை "ஒரு" என்ற வார்த்தை பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் படிப்பவர்கள் அந்த தவறை உணராமல் படிப்பார்கள்.தாங்களும் அப்படித்தான் படித்திருக்கிறீர்கள்.

   ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 12. எதேசையாக படிக்க ஆரம்பித்து, தளம் முழுவதையும் படித்து விட்டேன். ஒரு அருமையான தொடரை படித்த நிறைவு. உங்களை தொடர்கிறேன் மற்ற பதிவுகளுக்காவும். ஒரே மூச்சில் எல்லா அத்தியாயங்களையும் படித்து முடித்துவிட்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. மனம் நெகிழ்கிறது.

  பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது.

  நன்றிகள் பல. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு. ஜீவன்சிவன்!

   தாங்கள் தொடர்ந்து படிக்க இருப்பதாக கூறுவது எனக்கு உற்சாகமூட்டுகிறது. அருளிருந்தால் இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்ப்பதாக இருக்கிறேன்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete