பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 16, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 6 : பகுதி - 2


கேத்தரின் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. “எனக்கு இவர்களிடம் நம்பிக்கையில்லை.”
“யாரிடம்?” - இடைமறித்தேன்.
“வழிகாட்டிகளிடம்.”
“நம்பிக்கையில்லையா?”
“எனக்கு பரிபூர்ண நம்பிக்கை கிடையாது. அதனால்தான் என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கிறது. அந்தப் பிறவியில் எனக்கு அவர்களிடம் நம்பிக்கையில்லை.அவளுடைய பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்க்கையை ஆராய்ந்து கொண்டிருந்தாள். நான் அவளிடம் அந்த வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டாளென்று வினவினேன்.

“கோபத்தையும், அடுத்தவர்மீது காட்டும் வன்மத்தையும் பற்றி அறிந்துகொண்டேன். என்னுடைய வாழ்க்கையை, என் கட்டுப்பாட்டுக்குள் அமைத்துக் கொள்ளாததுபற்றி அறிந்துகொண்டேன். என் கட்டுப்பாட்டுக்குள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பினேன். ஆனால் என்னிடம் அந்த திறமையில்லாமல் இருந்தது. நான் வழிகாட்டி ஆன்மாக்களிடம் நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும். அவர்கள் என்னை வழிநடத்தியிருப்பார்கள். ஆனால் நான் நம்பிக்கையற்று இருந்தேன். ஆரம்பத்திலிருந்தே என்வாழ்க்கை சூன்யமாக இருந்திருக்கிறது. நான் எந்த விஷயத்தையும் இணக்கமாக அணுகியதில்லை. நமக்கு நம்பிக்கை வேண்டும். . . . . . . . நம்பியிருக்க வேண்டும். நான் சந்தேகப்பட்டேன். நான் நம்பிக்கைக்குப் பதிலாக சந்தேகப்படுவதைத் தேர்வு செய்துவிட்டேன்.” நிறுத்தினாள்.

“வாழ்வில் முன்னேறுவதற்கு என்ன செய்யவேண்டும்? நீ என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்? நமது பாதைகள் ஒன்றானதா?” வினவினேன். பதில், கவித்துவமான புலமையுடன் பேசும் வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து வந்தது. வித்தியாசமான குரலொலி, ஆண்மைத்தண்மையுடைய குரல், கவித்துவமான மொழி கேத்தரினுடைய இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பதில் வந்தது.

“அடிப்படையில் அனைவரும் ஒரேவழியில்தான் சென்றாகவேண்டும். நாம் சரீர நிலையில் இருக்கும்பொழுது சில மனப்பக்குவங்களை அடையவேண்டும். சிலர் சீக்கிரத்தில் அடைந்துவிடுவார்கள். சிலருக்கு காலம் அதிகம் தேவைப்படும். அன்பு, ஈகை, விசுவாசம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை . . . . . . . நாம் அனைவரும் இவைகளைப்பற்றி நன்கு உணர்ந்திருக்கவேண்டும். சுயநலமாக நம்பிக்கையோ, அன்போ, விசுவாசமோ இல்லாமல் பொதுவான தன்மைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனை வெளிப்படுத்த ஏகப்பட்ட வழிகள் உள்ளன. ஆனால் நாம் ஒவ்வொன்றிலும், மிகவும் சிறிய அளவிலேயே முயற்சி எடுக்கிறோம்.”

கேத்தரின் அதேகுரலில் தொடர்ந்தாள். “மதங்களில் நம்பிக்கையுடைய மனிதர்கள், மற்றவர்களைவிட ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். ஏனெனில் கீழ்படிதலையும், கற்புடன் இருப்பதற்கும் உறுதி எடுத்துள்ளார்கள். எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் வாழ்க்கையில் ஓரளவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஏனையவர்கள் எப்பொழுதும் வெகுமதிகளை எதிர்பார்த்து செயல்களை செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். வினைகளை ஆற்றுவதே நமக்குக் கிடைக்கும் வெகுமதி. எதிர்பார்ப்புகள் இல்லாத, சுயநலமில்லாத செயல்களே நமக்குக் கிடைக்கும் சன்மானம்.” . . . . .
“நான் அவைகளைக் கற்றுத் தேரவில்லை.” இப்பொழுது கேத்தரின் மென்மையாக்க் கூறினாள்.

சில கணங்கள் “கற்பு” என்ற பதப்பிரயோகம் என்னைக் குழம்ப வைத்தது. எனக்கு கற்பு என்ற வார்த்தை பிரயோகம் “களங்கமற்றது”, “பரிசுத்தமானது” என்றும் பொருள்படும், என்று நினைவுக்கு வந்தது. இது உடல் சம்பந்தப்பட்ட கற்பு நிலையிலிருந்து வேறுபட்டது.

“மனம்போன போக்கில் வாழக்கூடாது” தொடந்தாள். “அளவுக்கு அதிகமாக செய்யப்படும் எந்த செயலும் . . . . . . . அளவுக்கு அதிகமாக . . . . . . உங்களுக்குப் புரியும் . . . . . . நிச்சயமாக உங்களுக்குப் புரியும்.” மீண்டும் மௌனம் தொடர்ந்தது.

“நான் முயற்சி செய்கிறேன்.” பதில் கூறினேன். நான் கேத்தரினைப் பற்றி கவனம் செலுத்த முடிவெடுத்தேன். மேல்நிலை ஆன்மா அங்கு இன்னும் இருப்பதை அறிந்திருந்தேன். “கேத்தரினுடைய அச்சத்தையும், பதற்றத்தையும் குறைப்பதற்கு நான் எப்படி உதவ முடியும்? நான் அதற்காக எடுக்கும் முயற்சிகள் சரியானவைகளா? இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமா? அல்லது ஏதேனும் குறிப்பிட்ட சிகிச்சைகளைத் தொடரவேண்டுமா? கேத்தரினுக்கு எப்படி என்னால் சிறந்த விதத்தில் உதவமுடியும்?”

மிகவும் கரகரத்த குரலில் அசரீரியாக வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து பதில் வந்தது. நான் என் நாற்காலியின் நுனிக்கு வந்தேன்.

“நீ சரியான முயற்சிகளையே எடுத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் இப்பொழுது நடப்பவைகள் உனக்காக. அவளுக்கான செயல்கள் அல்ல.” மீண்டும், கொடுக்கப்படும் தகவல்கள் கேத்தரினுக்குக் கிடையாது. பிரத்தியேகமாக எனக்காகத் தரப்படும் தகவல்கள்.

“எனக்காக?” – நான்
“ஆம். நாங்கள் கூறுவது உனக்காக.” கேத்தரினை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதில் அவளை சம்பந்தப்படுத்தாமல் பதில் வந்தது. மேலும் “நாங்கள்” என்று பண்மையில் பதில் வந்தது. “ஆம், நாங்கள் வழிகாட்டி ஆன்மாக்கள் இங்கு இருக்கிறோம்.”

“நான் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளமுடியுமா?” கேட்டவுடன் முட்டாள்தனமாக கேட்டதாக உணர்ந்தேன். “எனக்கு வழிகாட்டவேண்டும். எனக்கு அறிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் அதிகமுள்ளன.”

பதில் கவிதைபோல் வந்தது. பிறப்பையும், இறப்பையும் பற்றிய கவிதை. மென்மையான இனிய குரலில் பாடல் ஒலித்தது. வாழ்வில் பற்றற்று உணர்ந்தேன். மெய்மறந்து நின்றேன்.

“காலம் கனியும்பொழுது நீ வழிகாட்டப்படுவாய். . . . . . . காலம் கனியும்பொழுது எதற்காக இங்கு அனுப்பப்பட்டாயோ, அதற்கான செயல்களை நீ பூர்த்தி செய்யும்பொழுது உன் சரீரவாழ்வு முடிவுக்கு வரும். அதற்கு முன்பு முடிவுக்கு வராது. உனக்கு அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது . . . . . . . அதிக காலம் இருக்கிறது.”  நிம்மதியும், எதிர்பார்ப்பும் ஒரே நேரத்தில் என்னுள் உறைந்தது. எதையும் குறிப்பிடாமல் பொதுவாக பதில் கிடைத்தது எனக்கு சிறிது நிம்மதியை அளித்தது. கேத்தரின் பொறுமை இழந்தவளாகக் காணப்பட்டாள். முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“நான் வீழ்கிறேன், வீழ்கிறேன் . . . . . . என் வாழ்வினை கண்டெடுக்க முயற்சி செய்கிறேன். வீழ்கிறேன்.” பெருமூச்செறிந்தாள். வழிகாட்டி ஆன்மாக்கள் சென்றுவிட்டார்கள். ஆன்மீக ஊற்றிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த அற்புதமான செய்திகளில் மூழ்கியிருந்தேன். கிடைத்த தகவல்கள், உணர்த்தும் உண்மைகள் மறுக்க இயலாதவைகளாக உள்ளன. மரணத்துக்குப் பிறகு கிடைக்கும் ஒளி, சக்தி; அதற்குப் பிறகு கிடைக்கும் பிறவி; எப்பொழுது பிறக்கவேண்டும் எப்பொழுது இறக்கவேண்டும் என்று நாமே முடிவு செய்யும் நிலை, மேன்நிலை ஆன்மாக்களிடமிருந்து கிடைக்கும் உண்மையான வழிகாட்டுதல், வாழ்நாள் வருடங்களாக கணிக்கப்படாமல் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களாலும், நாம் நிறைவேற்றும் கடமைகளாலும், அளவிடப்படுதல், எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு, ஈகை, நம்பிக்கை, விசுவாசம் கொண்டிருத்தல் . . . . . . அனைத்து அறிவுரைகளும் எனக்காக. ஆனால் என்ன நோக்கத்துக்காக இப்படி நிகழ்கிறது? நான் எந்த கடமையை நிறைவேற்ற இங்கு அனுப்பப்பட்டேன்.

அலுவலகத்தில் எனக்கு நேர்ந்த இந்த அனுபவங்களும், கிடைக்கப்பட்ட தெளிவான தகவல்களும், என்னுடைய சிந்தனைகளிலும், குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. என்னிடம் நேர்ந்த மாற்றங்களை சிறிது சிறிதாக நான் என்னை உணர ஆரம்பித்தேன். ஒருமுறை நான் என் மகனுடன் பேஸ்பால் விளையாட்டைக் காண காரில் சென்றுகொண்டிருந்தோம், எங்கள் கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. நிலைமையை யோசிக்கும்பொழுது, நாங்கள் அனேகமாக முதல் சுற்று விளையாட்டுக்கு முன் சென்று சேர்வது முடியாததுபோல் தோன்றியது. முதல் சுற்று மட்டுமல்லாமல் முழு விளையாட்டையும் காண்பதென்பது கடினம்போல் தோன்றியது. சாதாரணமாக இந்த சூழநிலையில் நான் மிகவும் எரிச்சலடைந்து விடுவேன். பொறுமையிழப்பேன். எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லாமல் இருந்ததை என்னால் உணரமுடிந்தது. நான் பழியை எந்த கார் டிரைவர் மீதும் சுமத்தவில்லை. எனக்கு எந்தவித மனஅழுத்தமில்லாமல் இயல்பாக அமைதியாக இருந்தேன். எரிச்சலை என் மகன்மீதும் காட்டாமல், இருவரும் பேசிக்கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். நான் என் மகனுடன் ஒரு இனிமையான மாலைப்பொழுதை கழிப்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. இருவருக்கும் பிடித்த பேஸ்பால் விளையாட்டு பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். எங்களது நோக்கம் இனிமையாக பொழுதை கழிப்பதுதான். நான் மட்டும் கோபப்பட்டு இருந்திருந்தால், அன்றைய இனிய மாலைப்பொழுது, இருவருக்கும் வீணாகியிருக்கும். என்னிடம் தோன்றிய மாற்றங்களை நான் உணர ஆரம்பித்தேன்.

நான், என் மனைவி, என் குழந்தைகள் அனைவரும் இப்பிறவிக்கு முன்னமேயே சேர்ந்திருந்திருக்கிறோமா? இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ள உடன்பட்டு மீண்டும் இப்பிறவியில் இணைந்திருக்கிறோமா? நமது ஆன்மாக்களுக்கு அழிவில்லையா? எனது குடும்பத்தினர்மீது எனது ஒட்டுதல், அன்பு அதிகமானது. அவர்களது குற்றங்களும், குறைகளும் என் கண்களுக்கு மிகவும் சாதாரணமானதாகத் தோன்றியது. வாழ்க்கையில் அன்புக்கே முதலிடம். அன்பைத்தவிர மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. இதேகாரணங்களுக்காக என்னிடமுள்ள குற்றங்களையும் குறைகளையும் நான் இப்பொழுதெல்லாம் பொருட்படுத்திவதில்லை. நான் குற்றங்களற்ற, முழு நிறைவான மனிதனாவது மட்டுமே குறிக்கோள் என்று முயற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை. யாரிடமும் நன்மதிப்பு பெறுவதற்காக என்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லாமல் ஆகிப்போனது.

என் அனுபவங்களை என் மனைவி கரோலிடம் எனக்கு பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இரவு உணவுக்குப் பிறகு கேத்தரின் சிகிச்சையின்பொழுது ஏற்பட்ட அனுபவங்களையும், என்னுடைய உணர்வுகளையும் குறித்து விவாதிப்பது எங்களுக்கு வழக்கமானது. எந்த நிகழ்ச்சிகளையும், அதன் விளைவுகளையும் பகுத்தறிவு கொண்டு நோக்குவதில் கரோல் சிறந்தவள். நான் கேத்தரினின் சிகிச்சை அனுபவங்களை அறிவியல் முறைப்படி நிரூபிக்க விரும்புவதை, கரோல் நன்கு அறிவாள். இத்தருணங்களில் பாரபட்சமின்றி உணர்வுபூர்வமாக நோக்காமல், அறிவு பூர்வமாக சிந்திப்பதற்கு அவள் உதவுவாள். வாழ்வின் மிக உன்னதமான உண்மைகளை, தத்துவங்களை கேத்தரின் வெளிப்படுத்தியதற்குத் தக்க சான்றுகள் கிடைத்தன. கரோல் எனது எண்ணங்களையும், மகிழ்ச்சியையும் உணர்ந்து பகிர்ந்து கொண்டாள்.

--தொடரும்.


 விதி வலியது:

மனிதன் முதன்முதலில் நிலவில் கால் பதித்தநாள் ஜுன் இருபதாம்தேதி, வருடம் 1969. முதலில் நிலவில் கால் பதித்த மனிதன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவதாக கால் பதித்த மனிதன் யாரென்று
அநேகருக்கு தெரியாது. இரண்டாவதாக கால் பதித்தவரின் பெயர் “பஸ் ஆல்டிரின்”.

உண்மையில் நாசா-வின் திட்டப்படி பஸ் ஆல்டிரின்-தான் நிலவில் முதன்முதலில் கால் பதித்திருக்க வேண்டியவர். பஸ் ஆல்டிரின் பதவியிலும், அனுபவத்திலும், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க்-ஐவிட மேல்படியில் இருந்ததவர். நாசா-வின் திட்டப்படி அவர்தான், முதலில் விண்கலத்தைவிட்டு வெளியேறி நிலவில் கால் பதித்து சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க வேண்டியவர்.

ஆனால் விதி வேறுவிதமாக எழுதிவைத்துவிட்டது. விண்கலத்தில் பஸ் ஆல்டிரின்-ம், நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க்-ம் அமர்ந்திருந்தவிதத்தால், முதலில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் விண்கலத்தைவிட்டு வெளியேற வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது. முதலில் விண்கலத்தைவிட்டு வெளியேறிய நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், முதலில் நிலவில் கால் பதித்து, சரித்திரத்தில் இடம் பிடித்தார். பஸ் ஆல்டிரின் என்ற பெயர் மக்கள் நினைவில் இருப்பதற்கு பதிலாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் என்ற பெயர் மக்கள் நினைவில் நின்றுவிட்டது.

கவிச்சக்கரவர்த்தியின் வார்த்தைகள்:

இராமன் காட்டுக்கு செல்வதையறிந்த இலக்குவனன் கோபத்துடன்  வருகிறான். இலக்குவனை இராமன் அமைதிப்படுத்துகிறான்.

நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!"

கவியரசர் கண்ணதாசனின் வழியாக:

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை.
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா?
பறவைகளே பதில் சொல்லுங்கள்!
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்;
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா!

நிலவில் மனிதன் கால் பதித்தது கட்டுக்கதை என்று நிரூபணத்துடன் கூறும் அமெரிக்கர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். அதைப்பற்றி வேறொரு பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.


கணிதப் புதிர்:

மூன்று நண்பர்கள் ஹோட்டலில் ஒரே அறையில் வாடகைக்கு, ஒரு நாள் தங்கினார்கள். அறையின் வாடகை முப்பது ரூபாய். மறுநாள் ஹோட்டல் மேனேஜர் அறை வாடகை இருபத்தைந்து மட்டுமே என்று கூறி, ஐந்து ரூபாயை ஹோட்டல் சிப்பந்தியிடம் கொடுத்து, திருப்பிக் கொடுத்துவிடுமாறு கூறினார். சிப்பந்தி ஐந்து ரூபாயை அவர்களிடம் திருப்பிக் கொடுத்தார். நண்பர்கள் தலைக்கு ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டு, சிப்பந்திக்கு மீதி இரண்டு ரூபாயை டிப்ஸ் ஆகக் கொடுத்துவிட்டனர்.

நண்பர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் திருப்பி எடுத்துக்கொண்டதால், ஆளுக்கு ஒன்பது ரூபாய் ஹோட்டல் செலவாக செய்திருக்கின்றனர். அது மொத்தமாக, மூன்று ஒன்பது சேர்ந்து இருபத்தேழு ரூபாய் ஆகிறது. இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கின்றனர். அதையும் சேர்த்து இருபத்தொன்பது ரூபாய் வருகிறது. ஆனால் அவர்கள், ஆரம்பத்தில் கொடுத்தது முப்பது ரூபாய். எனவே பாக்கி ஒரு ரூபாய் எங்கே மறைந்தது?


12 comments:

 1. நல்ல சுவாரஸ்யம்... கரோல் அவர்களின் ஊக்கமும் முக்கியமானது...

  கவியரசர் பாடலோடு நல்ல ஒப்பீடு...

  அதானே...?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன். கணக்குக்கு பதில் தராமல் சமாளித்துவிட்டீர்கள்.

   “பத்துக்கு மேலாடை . . . . அ.அ.அ.அ. ஆ.ஆ.ஆ.ஆ . . . . ராகம் பாடாத, பதிலைச் சொல்லு”... தான் நினைவுக்கு வருகிறது.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 2. //“காலம் கனியும்பொழுது நீ வழிகாட்டப்படுவாய். . . . . . . காலம் கனியும்பொழுது எதற்காக இங்கு அனுப்பப்பட்டாயோ, அதற்கான செயல்களை நீ பூர்த்தி செய்யும்பொழுது உன் சரீரவாழ்வு முடிவுக்கு வரும். அதற்கு முன்பு முடிவுக்கு வராது. உனக்கு அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது . . . . . . . அதிக காலம் இருக்கிறது.” //

  சரியான கூற்று!

  நிலவில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கால் பதித்தது உண்மை இல்லை என்று சொல்பவர்கள் சொல்வது, உண்மையா என அறியக் காத்திருக்கிறேன்.

  கணிதப் புதிருக்கான விடை: அந்த ஒரு ரூபாய் எங்கும் போய் விடவில்லை. அவர்கள் கொடுத்த 27 ரூபாய்களிலேயே அந்த இரண்டு ரூபாய்கள் டிப்ஸும் அடங்கியுள்ளது. எனவே அதை திரும்பவும் கூட்டத்தேவையில்லை. அந்த 27 ரூபாய்களோடு இவர்கள் திரும்பப்பெற்ற மூன்று ரூபாய்களைக் கூட்டினால் 30 ரூபாய் வந்துவிடும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

   நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் பதிக்காதது குறித்து, மிக நீண்ட விளக்கங்கள் உள்ளன. விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.

   கணிதப் புதிரில், கேள்வியே தவறுதலான கேள்விதான். நீங்கள் கூறியது போல அந்த ஒரு ரூபாய் எங்கும் போய்விடவில்லை. சரியான விடை.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. நமது ஆன்மாக்களுக்கு அழிவில்லையா? எனது குடும்பத்தினர்மீது எனது ஒட்டுதல், அன்பு அதிகமானது. அவர்களது குற்றங்களும், குறைகளும் என் கண்களுக்கு மிகவும் சாதாரணமானதாகத் தோன்றியது. வாழ்க்கையில் அன்புக்கே முதலிடம். அன்பைத்தவிர மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. //

  நம் சநாதன தர்மம் போதிப்பது தான் இங்கேயும் சொல்லப் படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக வாதிகள் ஒரே மாதிரியாகவே நினைக்கின்றனர் என்பதும், நம்முடைய மறு உலகம் என்பதெல்லாம் உண்மை என்பதும் நிரூபணம் ஆகி வருகிறது. வியக்கத் தக்க செய்திகள். படிக்கப் படிக்க ஆவல் கூடுகிறது. நீங்கள் தரப்போகும் சுட்டியில் இருந்தும் படிக்கிறேன். எனினும் இப்படிக் காத்திருந்து படிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது. :)))))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம்.

   ஆம். அனைத்து மதங்களுமே நல்லவைகளை போதிக்கவே தோன்றியிருக்க வேண்டும். ஆனால் மதங்கள் அரசியலிலும் ஈடுபட விழைந்ததால், அமைதிக்குப் பதில் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டன என்று நினைக்கிறேன்.


   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 4. தாமதமாக இன்று தான் பார்த்தேன், ஒரு ரூபாய் எங்கும் போகவில்லை என எழுத இருந்தேன், ஏற்கெனவே ஒருத்தர் சொல்லி விட்டார். :)))

  ReplyDelete
  Replies
  1. ம்ஹும். . . சால்ஜாப்பு, நொண்டிசாக்கு செல்லுபடி ஆகாது.

   Just Kidding. வரும் பதிவில் முந்துங்களேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete

 5. கொலெஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக் கொடுக்கும் மருந்தல்லவா statin ? அதன் பக்க விளைவுகள் தெரியாமலா மருத்துவர்கள் prescribe செய்கிறார்கள்.?உங்கள் அனுபவங்களை எழுதலாமே.

  ReplyDelete
  Replies
  1. ஐயா, STATIN ஒரு எனக்குத் தெரிந்தவரை மிகப்பெரிய கூட்டுச்சதி. அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். எழுதுவதை ஆதாரங்களுடன் எழுத வேண்டும். இது தொடர்பாக உங்களுக்கு தனியாக மடல் அனுப்புகிறேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete

 6. ஓஜோ போர்ட் என்று ஏதோ. அதைச் சுற்றி சிலர் அமர்ந்துகொண்டு ஆவிகளுடன் பேசுவதாகக் கூறுவார்கள் இவர்கள் கூப்பிடும் ஆவியே வந்து பேசுகிறது என்பார்கள் அப்படியென்றால் ஆவிகள் ( ஆன்மாக்கள் ) வேறு உடலைத் தேர்ந்தெடுக்கவில்லையா. ? இப்படி யும் அல்லாது ஏதோ மீடியம் மூலமும் ஆவிகளுடன் பேசுவதாகவும் சொல்கிறார்கள். இப்படி ஆவியுடன் பேசுவதை டேப் செய்து வைத்திருப்பதாகவும் அதில் வரும் குரல் மறைந்தவர்களின் குரலை ஒத்திருப்பதாகவும் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். நான் ஏதாவது சொல்ல வந்தால் ‘ ஹிந்துவாக இருப்பதால் நம்புகிறேன் என்கிறீர்கள். ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். இந்தப் பதிவுகள் படிக்கச் சுவையாக இருக்கின்றன., தொடருகிறேன்.
  நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் பஸ் ஆல்ட்ரினும் கூட இன்னும் ஒரு கமாண்டருடன் (பெயர் நினைவில்லை.- கோலின்ஸ் ? )நிலவுக்குச் செல்ல பயணப் பட்டதை நான் ரேடியோவில் நேர்முக வர்ணனையாகக் கேட்டிருக்கிறேன். அது 1969ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி என்று நினைவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா. நிலவுப்பயணம் குறித்து நீங்கள் கூறுவது சரிதான். உங்கள் ஞாபக சக்தி என்னை வியக்க வைக்கிறது. STATIN – என்னுடைய ஞாபக சக்தியை குறைத்துவிட்டது. சமயங்களில் என்னுடன் அருகில் வேலை செய்பவர்களின் பெயரையே மறந்திருக்கிறேன். ஆவிகள், இறைவன் இவற்றைக் குறித்து பேசுவது என்பது என்றைக்கும் முடிவுக்கு வரமுடியாத விஷயம் என்பது என் கருத்து.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete