கேத்தரினின் ஹிப்னடைஸ் அமர்வு, ஒவ்வொரு முறையும் பல
மணி நேரங்கள் பிடித்தன. எனவே அன்றைய தினத்தின் இறுதி நோயாளியாக மட்டுமே, கேத்தரினை
தேர்வு செய்ய நான் திட்டமிட வேண்டியிருந்தது. மறுவாரத்தில் கேத்தரின் வந்தபோது
மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்பட்டாள். அவளது தந்தையுடன் தொலைபேசியில்
உரையாடியதாகக் கூறினாள். அவளது வழியில், அவள் தனது தந்தையை மன்னித்துவிட்டிருந்தாள்.
அவ்வளவு சாந்தமாக நான் கேத்தரினைப் பார்த்ததே இல்லை. அவளது மனநிலையில் ஏற்பட்ட
அதிவிரைவான முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீண்ட காலமாக மனதில்
பயமும், கலக்கமும் நிறைந்த நோயாளிகள் இவ்வளவு சீக்கிரம் குணமடைவது என்பது மிகவும்
அரிதான ஒன்று. எப்படி இருந்தாலும் கேத்தரின் ஒரு சாதாரண நோயாளி அல்ல. அவளுடைய
சிகிச்சைகள் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
“பீங்கான் பொம்மை ஒன்று மாடத்தில் இருக்கிறது.” விரைவாக
சமாதி நிலைக்கு சென்றுவிட்டாள். “அறையை சூடாக்கும் (குளிர்காலத்தில்) அடுப்பின்
இரண்டு பக்கங்களிலும் புத்தகங்கள் உள்ளன. வீட்டின் அறையில் இருக்கிறேன். பீங்கான்
பொம்மையின் அருகில் மெழுகுவர்த்திகள் உள்ளன. முகம் மட்டும் வரையப்பட்ட ஒரு ஓவியம்
உள்ளது. . . . . . .அது அவர்தான். . . . . . . “ அவள் அறையைச் சுற்றிலும்
நோக்கினாள். நான் அவள் எதைப் பார்க்கிறாள் என்று கேட்டேன்.
“தரையின் மேல் ஒரு விதமான விரிப்பைக் காண்கிறேன்.
அது தெளிவில்லாமல் இருக்கிறது. அது ஒரு விலங்கின் தோல் என்று நினைக்கிறேன். . . .
. . . ஆம். அது ஏதோ ஒரு விலங்கின் தோல். வலதுபக்கத்தில், வராண்டாவிற்கு செல்ல இரண்டு
கண்ணாடி கதவுகள் உள்ளன. வீட்டிற்கு முன்பு நான்கு படிகள் உள்ளன - வீட்டுக்கு
முன்னால் தூண்கள் உள்ளன. நான்கு படிகளும் கீழிறங்கி பாதையில் முடிகிறது.
சுற்றிலும் பெரிய, பெரிய மரங்கள் உள்ளன. . . . . . வெளியில் சில குதிரைகள் தென்படுகின்றன.
குதிரைகள் முகபடாம் அணிவிக்கப்பட்டு, வீட்டுக்கு எதிரில் தூணில் கட்டி வைக்கப்
பட்டிருக்கின்றன.”
“உனக்கு எந்த இடம் என்று தெரிகிறதா?” நான் வினவினேன்.
கேத்தரின் பெருமூச்சு விட்டாள்.
“எனக்குத் தெரியவில்லை,” அவள் முணகினாள், “ஆனால்
வருடம். . . . . .வருடம் பதினெட்டாம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். . . . . . .
மரங்களும், அழகான மஞ்சள் நிற மலர்களும் தெரிகின்றன. மலர்கள் மஞ்சள் நிறத்தில் மிக
அழகாக இருக்கின்றன.” மலர்களால்
கவரப்பட்டு அவளின் கவனம் திசைதிரும்பியது. “இனிமையான நறுமணம் உள்ள மலர்கள்.
வித்தியாசமாகவும் பெரியதாகவும் உள்ளன. . . . . . . . கரிய மையத்தைக் கொண்ட மஞ்சள் நிற
மலர்கள்.” மௌனம் அவள் பூக்களில் லயித்திருப்பதை உணர்ந்தேன். தெற்கு பிரான்ஸில்,
நான் பார்த்திருந்த சூரியகாந்தி மலர்களை நினைவு கூர்ந்தேன் கேத்தரினிடம் அங்கு தட்பவெப்ப
நிலை எப்படி இருக்கிறது என்று வினவினேன்.
“மிகவும் மிதமாக உள்ளது. ஆனால் காற்று வீசவில்லை.
குளிராகவோ, வெப்பமாகவோ நான் உணரவில்லை.” எந்த இடம் என்பதை கண்டுபிடிக்க நாங்கள்
எடுத்துக் கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. நான் மலர்களிடமிருந்து அவளை மீட்டு
வீட்டுக்குள் அழைத்து வந்தேன். நான் மாடத்தின் மேல் தொங்கும் ஓவியத்தில் உள்ள
முகம், யாருடையது என்று கேட்டேன்.
“தெரியவில்லை. . . . . . ஆரோன், ஆரோன் என்று குரல்
ஒலிக்கிறது. . . . . . அவர் பெயர் ஆரோன்.” நான் அந்த வீடு அவருடையதா என்று
கேட்டேன். “இல்லை அவருடைய மகனுடையது. நான் இங்கு வேலை செய்கிறேன்.” மீண்டும்
வேலைக்காரியாகப் பிறவி எடுத்திருக்கிறாள். ஒரு பிறவியில் கூட அவள் ஒரு பெரிய
அந்தஸ்திலோ அல்லது அந்த நிலைக்கு அருகிலோ பிறவி எடுக்கவில்லை. மறுபிறவி குறித்து
நம்பிக்கை இல்லாதவர்கள் (இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னையும் சேர்த்து)
எப்பொழுதும், புகழ்பெற்ற மக்களின் மறுபிறவி மட்டுமே வெளியுலகத்துக்கு
தெரியவருகிறது என்று குற்றம் சாற்றுவார்கள். ஆனால் அறிவுபூர்வமாக, மறுபிறவி
நிரூபணம் ஆவதைக் கண்கூடாகக் காண்கிறேன். அதுவும் மனோதத்துவப் பிரிவில், என்னுடைய
அலுவலத்திலேயே நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. மறுபிறவி தத்துவங்களை விடவும் அதிக
விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
“எனது கால் மிகவும். . . . . . “ கேத்தரின்
தொடர்ந்தாள், “மிகவும் கனமாக உணர்கிறேன். வலிக்கிறது. கால்கள் மரத்ததுபோல்
இருக்கிறது. . . . . . . . மிகவும் வலிக்கிறது. என் காலில் அடிபட்டிருக்கிறது.
குதிரை உதைத்துவிட்டது.” நான் அவளைப்பற்றி வர்ணிக்குமாறு கேட்டேன்.
“எனக்கு பழுப்பு நிற முடி உள்ளது, சுருள் சுருளாக
உள்ளது. வெண்ணிற தொப்பி அணிந்திருக்கிறேன். . . .
.நீலநிற உடையணிந்திருக்கிறேன். அதன் மேலாடை அழுக்காவதைத் தடுக்க ஏப்ரன் அணிந்திருக்கிறேன்.
நான் என் இளமைப் பருவத்தில் இருக்கிறேன், ஆனால் குழந்தையல்ல. எனக்கு கால்
வலிக்கிறது. சிறிது நேரத்துக்கு முன் குதிரை உதைத்துவிட்டது. வலி தாங்க
முடியவில்லை.” வலியால் துடிப்பதைப் பார்க்க முடிந்தது. “லாடம். . . . லாடமிட்ட கால்களால்
உதைத்துவிட்டது. மோசமான குதிரை.” அவள் குரல் தணிந்தது. அவள் வலியும் மறைந்தது.
“வைக்கோல் மணம் வீசுகிறது. வைக்கோல், பண்ணையில் உணவாக உபயோகப் படுத்தப்படுகிறது.
என்னைத் தவிர மற்றும் சிலரும் லாயத்தில் வேலை செய்கிறார்கள்” நான் அவளிடம் அவளுடைய
கடமைகளைப் பற்றி விசாரித்தேன்.
“பரிமாறுவது என்னுடைய வேலை. . . . பெரிய வீட்டில்
பரிமாற வேண்டும். பசுக்களுக்கு பால் கறப்பது சம்பந்தமாகவும் எனக்கு வேலை உள்ளது.”
நான் அவளது முதலாளிகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன்.
“அவரது மனைவி மிகவும் கர்னாடகமாக இருக்கிறார்.
சிறிது குண்டாக இருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். . . . .
அவர்களை எனக்கு தெரியாது.” நான் அவர்களை இப்பிறவியில் அறிந்திருக்கிறாயா
எனக்கேட்பேன் என்றுணர்ந்து கேத்தரின் அவளாகவே பதில் கூறினாள். நான் கேத்தரினுடைய
குடும்பத்தை, அதாவது பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கேத்தரினுடைய குடும்பத்தைப்பற்றிக் கேட்டேன்.
“எனக்குத் தெரியவில்லை. நான் யாரையும் இங்கு
பார்க்கவில்லை. என்னைச் சேர்ந்தவர்கள் யாரும் அருகில் இருப்பதாகத் தெரியவில்லை.”
நான் அங்குதான் வசிக்கிறாயா என்றேன். “இங்குதான் வசிக்கிறேன். பெரிய வீட்டில்
வசிக்கவில்லை. எங்களுக்குத் தரப்பட்ட மிகச்சிறிய வீட்டில் வசிக்கிறோம். நிறைய
கோழிகளும் இருக்கின்றன. நாங்கள் முட்டைகளை சேகரிக்கிறோம். பழுப்பு நிறமுடைய
முட்டைகள். எனது வீடு மிகச் சிறியதாக இருக்கிறது. . . . . . வெண்ணிறமாகவும், ஒரு
அறை மட்டுமே உள்ள வீடு. இன்னுமொரு ஆடவனைப் பார்க்கிறேன். அவனுடன் நான்
வசிக்கிறேன். அவனுக்கு நீலக் கண்களும் சுருட்டை முடியும் உள்ளது.” உங்களுக்குள்
திருமணம் நிகழ்ந்துள்ளதா என்று கேட்டேன்.
“எனக்குத் தெரிந்து திருமணம் ஆனதுபோல்
தெரியவில்லை.” அங்குதான் பிறந்திருக்கிறாளா என்று வினவினேன். “இல்லை, நான்
சிறுவயதிலேயே பண்ணைக்கு அழைத்துவரப்பட்டேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது.”
அவளது துணைவன் அவளுக்கு பரிச்சயமானவனாக இல்லை. நான் அவளை வேறு முக்கியமான
காலக்கட்டத்துக்கு செல்லுமாறு ஆணையிட்டு அழைத்து வந்தேன்.
“வெண்ணிறத்தில் எதையோ பார்க்கிறேன். அதில் நிறைய
ரிப்பன்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. தொப்பியாக இருக்குமென்று நினைக்கிறேன்.
சிறகுகளும், ரிப்பன்களும் உடைய ஒரு விதமான தொப்பிபோல் உள்ளது.”
“யார் அந்த தொப்பியை அணிந்திருக்கிறார்கள்? அது. .
. . .” அவள் என்னை இடைமறித்தாள்.
“வீட்டு முதலாளி அம்மாள்தான். வேறு யார்?” நான்
சிறிது முட்டாள்தனமாக உணர்ந்தேன். “அவர்கள் பெண்களில் ஒருவருக்குத் திருமணம். முழுப்பண்ணையும்
கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.” செய்தித்தாள்களில்
திருமணத்தைக் குறித்து ஏதேனும் செய்திகள் உள்ளனவா என்று கேட்டேன். அப்படி
இருந்தால், அதன் மூலமாக காலக்கட்டத்தைத் தெரிந்துகொள்ள முடியும் என்று நினைத்தேன்.
“இல்லை. அங்கு செய்தித்தாள்கள் இருப்பதாக எனக்குத்
தோன்றவில்லை. அதுபோல் எதுவும் இங்கு இல்லை.” அவளது இந்தப் பிறவியில் ஆவணங்களைப்
பார்ப்பது மிகவும் கடினமானதொன்றாக இருந்தது. “நீ உன்னைத் திருமண விழாவில்
பார்க்கிறாயா?” கேட்டேன். விரைவாகவும் சத்தமாகவும் அவளிடமிருந்து பதில் வந்தது. “நாங்கள்
திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. நாங்கள் திருமணத்துக்கு வந்து செல்பவர்களை
மட்டும் பார்க்கிறோம். வேலைக்காரர்களுக்கு கலந்துகொள்ள அனுமதி கிடையாது.”
“நீ எப்படி உணர்கிறாய்?”
“வெறுப்பாக இருக்கிறது”
“ஏன்? உங்களை சரியாக நடத்தவில்லையா?”
“நாங்கள் மிகவும் ஏழைகள்” மென்மையாக பதில் வந்தது.
“நாங்கள் அவர்களுக்கு அடிமைகள். அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எங்களுக்கென்று
எதுவுமே கிடையாது.”
“நீ பண்ணையைவிட்டு வெளியேற முடிந்ததா? அல்லது
முழுவாழ்க்கையும் அங்குதான் கழிந்ததா?”
“பண்ணையிலேயே வாழ்ந்து, பண்ணையிலேயே இறந்தேன்.” சோகமாக
கூறினாள். வாழ்க்கை கடினமாகவும், எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையில்லாமலும்
கழிந்திருக்கிறது. நான் அவள் பிறவியில் இறுதிநிலைக்கு அழைத்து வந்தேன்.
“ஒரு வீட்டைப் பார்க்கிறேன். படுக்கையில்
இருக்கிறேன். பருகுவதற்கு சூடாக எதையோ தருகிறார்கள். அதில் புதினா மணம் வீசுகிறது.
நெஞ்சு பாரமாக இருக்கிறது. மூச்சுவிட சிரமப்படுகிறேன். மார்பிலும், முதுகிலும்
வலியாக இருக்கிறது. . . . . . வலி தாங்க முடியவில்லை. பேசமுடியவில்லை.” அவள்
மூச்சுவிடும் வேகம் அதிகரித்தது. மேலோட்டமாக அவசர அவசரமாக சுவாசித்தாள். அவள்
வலியில் இருப்பது தெரிந்தது. சிறிதுநேர சிரமத்துக்குப்பின், அவள் முகம் சாந்தமானது.
உடல் தளர்ச்சியடைந்தது. சுவாசம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
“நான் உடலைவிட்டு பிரிந்துவிட்டேன்” குரல்
கரகரப்பாக சத்தமாக ஒலித்தது. “அற்புதமான பிரகாசத்தைக் காண்கிறேன். . . . . . என்னை
நோக்கி மக்கள் வருகிறார்கள். எனக்கு உதவி செய்ய வருகிறார்கள். இனிமையானவர்கள்.
அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. . . . . . நான் எடையில்லாததுபோல் உணர்கிறேன்.” . .
. . . நீண்ட இடைவெளி.
“இப்பொழுது முடிந்த பிறவியிலிருந்து உனக்கு ஏதாவது
நினைவிருக்கிறதா?” – நான். “அதை பிறகு பார்க்கலாம். இப்பொழுது நான் நிம்மதியாக
உணர்கிறேன். இன்பமாக இருக்கக்கூடிய நேரமிது. மிகவும் இதமாக உணர்கிறேன். ஆன்மா. . .
. . ஆன்மாவிற்கு இங்கே அமைதி கிடைக்கிறது. சரீர நிலையில் உள்ளபொழுது, இருந்த
கவலைகள், பிரச்சனைகள் எதுவும் இங்கு கிடையாது. ஆன்மா அமைதியாக, சஞ்சலமற்று
இருக்கிறது. அற்புதமான உணர்வு நிலையிது. . . . . . அற்புதம். சூரியனின்
ஒளிக்கதிர்கள் எப்பொழுதும் என்மேல் வீசுவதுபோல் இன்பமாக உள்ளது. பிரகாசமான ஒளி
மிகுந்த சக்தியைத் தருகிறது. என் ஆன்மா அதனை நோக்கிச் செல்கிறது. காந்தம்போல் என்
ஆன்மாவை அந்த ஒளி கவர்ந்திழுக்கிறது. அற்புதம்! சக்தியில் உறைந்து அமைதியும்
தருவது எப்படியென்று அந்த ஒளி அறிந்திருக்கிறது.”
“அந்த ஒளிக்கு வண்ணமிருக்கிறதா?” – நான்.
“ஏகப்பட்ட வண்ணங்கள் இருக்கின்றன.” ஒளியில்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள்.
“என்ன உணர்கிறாய்”
“அமைதி. . . . . . ஏகாந்தமான அமைதி. எல்லோரும்
இங்கு இருக்கிறோம். நிறைய மனிதர்களைப் பார்க்கிறேன். சிலர் மிகவும்
பரிச்சயமானவர்கள். சிலரைத் தெரியவில்லை. நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.”
கேத்தரின் காத்திருந்தாள். நிமிடங்கள் கழிந்தன. நான் முன்னே செல்ல முடிவெடுத்தேன்.
“ஒன்று கேட்க விரும்புகிறேன்” – நான்.
“யாரைப்பற்றி” – கேத்தரின்.
“உன்னைப்பற்றி அல்லது வழிகாட்டி ஆவிகளைப் பற்றி”
தொடர்ந்தேன். “இந்தக் கேள்விகள் நமக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கேள்வி இதுதான். நாம் பிறக்கும் நேரத்தையும், விதத்தையும் நாமே
தீர்மானித்துக்கொள்ள முடியுமா? நாம் இறக்கும் தருணத்தையும் நாமே முடிவு செய்து
கொள்ளலாமா? இது புரிந்தால் நமக்கு ஏற்படும் அச்சத்தை ஓரளவுக்கு தணிக்கமுடியுமென்று
நினைக்கிறேன். யாராவது எனக்கு இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா?” நாங்கள்
இருந்த அறை மிகவும் குளிராக இருப்பதை உணர்ந்தேன். கேத்தரின் பேச ஆரம்பித்தபோது
அவள் குரல் அசரீரிபோல் ஒலித்தது. அவளிடமிருந்து வந்த குரலை இதுவரை நான்
கேட்டதில்லை. ஒரு தேர்ந்த புலவரைப்போல் அவள் சொற்கள் தென்பட்டன.
“ஆம் சரீர நிலைக்கும், ஸ்தூல நிலைக்கும் செல்ல
வேண்டிய காலகட்டங்களை நாமே தீர்மானிக்கலாம். நாம் எந்த ஆணைக்காக கீழே
அனுப்பப்பட்டோமோ, அதை முடிக்கும் தருணத்தை நாம் உணர்வோம். காலம் கனியும் நேரம்
அறிந்ததும், நாம் மரணத்தை ஏற்றுக் கொள்வோம். இந்த சரீர வாழ்க்கையில் அதைத்தவிர
வேறெதையும் அடையமுடியாது. இடைபட்ட காலக்கட்டத்தில், ஓய்வெடுத்துக்கொண்டு உன்
ஆன்மாவின் சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம். மீண்டும் சரீர நிலைக்குச் செல்ல உனக்கு
அனுமதி உண்டு. சரீர நிலைக்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள், அவர்களுக்குக்
கொடுக்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டவர்களாகிவிடுவர்”
பதில் கேத்தரினிடமிருந்து வரவில்லை என்று எனக்கு
உறுதியாகத் தெரிந்தது. “யார் என்னிடம் பேசுகிறீர்கள்?” தெரிந்துகொள்ள விழைந்தேன்.
“பதில் கூறியது யார்?”
கேத்தரின் வழக்கமான முணுமுணுப்பான குரலில்
பதிலளித்தாள். “எனக்குத் தெரியாது. அந்தக் குரல். . . . . . . அனைத்தையும்
இயக்குபவர்கள் குரல். . . . . . யாரென்று எனக்குத் தெரியவில்லை. என்னால் குரலை
மட்டும் கேட்க முடியும். அவர்கள் கூறியதை உங்களுக்குத் தெரிவிக்க முயற்சி
செய்கிறேன்.”
கேத்தரினுக்கு, அந்த விளக்கங்கள், அவளுடைய
உள்ளுணர்விலிருந்தோ, மயக்க நிலையிலிருந்தோ வரவில்லையென்று தெரிந்திருந்தது. அவள்
எங்கிருந்தோ கவனித்து எனக்கு பதிலளிக்கிறாள். யாரோ, “இயக்கங்களைக்
கட்டுப்படுத்துபவர்” ஒருவருடைய வார்த்தைகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கிறாள். இதற்கு
முன் சந்தித்த வழிகாட்டி ஆன்மா இல்லை இது. இது மற்றொரு வழிகாட்டி ஆன்மா
என்றுணர்ந்தேன். இது ஒரு புது ஆன்மா. அதனுடைய மொழிப் பிரவாகமும், வார்த்தை நயமும் –
அமைதியாகவும், புலமை மிக்கதாகவும் புலப்பட்டது. மரணத்தைப் பற்றி எந்தவித
தயக்கமுமின்றி அந்த ஆன்மாவால் பேசமுடிந்தது. ஆனால் அதேசமயத்தில் அதன்
சிந்தனையோட்டத்தில் அன்பு தோய்ந்திருந்ததை உணரமுடிந்தது. இதமான, உண்மையான
அன்பையும், அதே நேரத்தில் பற்றற்று பொதுப்படையாகக் கூறுவதையும் அந்தக்குரலில்
உணர்ந்தேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். அதேநேரத்தில்
பற்றற்றும் உணர்கிறேன். பற்றற்ற அன்புநிலையை அடைந்ததுபோல் இருந்தது. ஏதோ ஒரு
காலத்தில், இந்த அனுபவம் முன்பே எனக்கு பரிச்சயமானது என்ற எண்ணமும் ஏற்பட்டது.
--தொடரும்.
வாழ்க்கையை செம்மைப்படுத்த ஒருவர் தினசரி
செய்யத்தேவையான பரிந்துரைகள்:
இயற்கைச் சூழலைச் சற்று அனுபவியுங்கள்:
அநேகர் இயற்கைச் சூழலின் உண்மையான மதிப்பை உணர்வதில்லை. இயற்கையான
சுற்றுப்புறம் நமது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஞாபக சக்தியையும்,
படைப்புத்திறனையும் அதிகமாக்குகிறது. நம்மை நல்ல மனிதனாகவும் மாற்றுகிறது.
உடற்பயிற்சி செய்யுங்கள்:
அனைவருக்கும் இது மிகவும் முக்கியமானது என்று தெரியும். ஆனால் மிகச் சிலரே
தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள். உடல நலம் தருவதைத்தவிர, உடற்பயிற்சி ஒருவரை
மகிழ்ச்சி உடையவராக மாற்றுகிறது. எழுபது வயது கடந்தவர்களைக் கொண்டு மேற்கொண்ட
ஆராய்ச்சியின் மூலம், உடல் நலனுக்கான ரகசியங்களில் உடற்பயிற்சி ஒன்று என்று
அறியப்பட்டுள்ளது.
குடும்பத்தினருடனும்,
நண்பர்களுடனும் பொழுதைக்கழியுங்கள்:
ஹாவர்டின் மகிழ்ச்சி தொடர்பான நிபுணர் டேனியல் கில்பர்ட் கூற்றுப்படி
மகிழ்ச்சிக்கான முக்கியமான ஊற்று இது. சமூகத்தொடர்பு இல்லாமல் இருப்பது ஒருவரை
அறிவற்றவராக மாற்றுகிறது. தனிமை ஒருவருக்கு மாரடைப்பு, சக்கரை நோய் மற்றும் வாதம்
வருவதற்கு ஒரு காரணியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்:
இது ஒருவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உறவை மேம்படுத்துகிறது.
சுற்றியிருப்பவர்களை நல்லவர்களாக மாற்றுகிறது.
தியானம் செய்யுங்கள்:
தியானம் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒரு அர்த்தத்தை அளிக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி
கவனம் செலுத்தும் நேரத்தை, அதிகப்படுத்துகிறது. ஆன்மீகம் சாராதவர்களுக்கும் இந்த
நன்மைகள் கிடைக்கின்றன.
தேவையான அளவு உறங்குங்கள்:
தண்ணீர் இன்றி இருப்பதைவிட தூக்கமின்றி இருப்பது மிகவும் கடினமானது.
குட்டித்தூக்கம் கூட மிகவும் பலனளிக்கக் கூடியது. தூக்கம் ஒருவரின் கற்கும் திறனை
மேம்படுத்துகிறது. தூங்காமல் இருப்பவர் நீதியையும் அநீதியையும்
பிரித்துப்பார்க்கும் தன்மையை இழக்கிறார். உடல் நலமும் பாதிப்படைகிறது.
சவால் தரக்கூடிய காரியங்களில்
ஈடுபடுங்கள்:
சவால் தரக்கூடிய செயல்கள் ஒருவருடைய
அறிவை அதிகமாக்குகிறது. நன்கு கற்காததும் அதனால் வாய்ப்புக்களை இழப்பதும்
முதியவயதில் மிகுந்த மன வருத்தத்தை தருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மனம் நிறைந்து, வாய்விட்டு
சிரியுங்கள்:
நகைச்சுவையை அனுபவிப்பவர்கள் மன அழுத்ததிற்கு ஆளாவது குறைவு. அவர்கள் அதிக
நாட்கள் வாழ்கிறார்கள். நல்ல உறவுகளைப் பெறுகிறார்கள்.
தொடு உணர்வை அனுபவியுங்கள்:
தொடு உணர்வு ஒருவருடைய மனஅழுத்ததைக் குறைக்கிறது. உணர்வுள்ளவர்களாக
மாற்றுகிறது.
எதிர்காலத்தில்
நம்பிக்கைகொள்ளுங்கள்:
தன்னம்பிக்கையுள்ளவர்களிடம் மகிழ்ச்சி, வாழ்நாள் அதிகரிப்பு, செயல்திறன்
அதிகமாக உள்ளது.
மூலம் : http://www.bakadesuyo.com/2012/05/what-10-things-should-you-do-every-day-to-imp/
கணிதப் புதிர்:
மிகவும் சுலபமான கேள்விதான். ஒரு வருடத்தில் ஆங்கில மாதங்களில் முப்பது
நாட்கள் உள்ள மாதங்கள் எத்தனை? லீப் வருடம் கிடையாது. சாதாரண வருடம்தான். ஐந்து
நிமிடங்களில் பதில் கூறவேண்டும்.
பிறர் மனதை வயப்படுத்தி எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியுமா என்ற ஐயம் இந்த தொடரைப் படித்ததும் தீர்ந்துவிட்டது.
ReplyDelete// மறுபிறவி குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் (இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னையும் சேர்த்து) எப்பொழுதும், புகழ்பெற்ற மக்களின் மறுபிறவி மட்டுமே வெளியுலகத்துக்கு தெரியவருகிறது என்று குற்றம் சாற்றுவார்கள்.//
சரியாக கூற்று.
Dr.Brian Weiss அவர்களின் அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன்.
வாழ்க்கையை செம்மைப்படுத்த ஒருவர் தினசரி செய்யத்தேவையான பரிந்துரைகளை பகிர்ந்தமைக்கு நன்றி!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!
Deleteநேற்றே உங்கள் பின்னூட்டத்தைப் படித்துவிட்டேன். உடன் பதில் எழுதமுடியவில்லை.
பரிந்துரைகள், நடவடிக்கைகளானால் மிகவும் மகிழ்ச்சியே.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
இயக்கங்களைக் கட்டுப்படுத்துபவர் - புதுவிதமான சுவாரஸ்யம்...
ReplyDeleteபரிந்துரைகள் ஒவ்வொன்றும் அருமை...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன்.
Deleteகணிதப்புதிர் கேள்விதான் சுலபமானது. பதில் சுலபமானது இல்லை. முக்கியமான தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்வி இது. எண்பது சதவிகிதம் தவறாக பதில் அளித்திருக்கிறார்கள்.
எனவே பதில் கூறிப்பாருங்கள். சரியாக பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
எல்லா மாதங்களிலும் முப்பது நாட்கள் இருந்து தானே ஆகணும்? பெப்ரவரியைத் தவிர, பதில் தப்போ? :))))
ReplyDeleteஇப்போத் தான் அப்டேட் ஆகி இருக்கு. தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கேன். ஒரே மூச்சில் படிக்கவும் ஆசை! :))))
இயக்கங்களைக் கட்டுப்படுத்துபவர், அருமையான சுவாரசியமான அறிமுகம்.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம்.
Deleteமிகவும் சரியான பதில். அநேகர் அவசரத்தில் நான்கு மாதங்கள் என்று கூறிவிடுவார்கள்.
புத்தகத்தை முழுமையாக இன்னும் மொழிபெயர்க்கவில்லை. புத்தகம் pdf -ஆக ஆங்கிலத்தில் இணையத்தில் கிடைக்கிறது. 6MB file size. தேவைப்பட்டால் கூறுங்கள். அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
தொடர
ReplyDelete
ReplyDeleteதொடரைப் படிக்கும்போது எழும் சந்தேகங்கள் நிறையவே வருகின்றன. ஆன்மா என்றும் ஆவிகள் ( வழிகாட்டிகள்)என்றும் அவை உடலைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதும் சுவாரசியமாக இருந்தாலும் நம்புவது ( ஒரு மனநல மருத்துவரின் அனுபவங்கள் என்றாலும் ) கடினமாக இருக்கிறது. ஒருவர் ஆழ்மன நிலைக்கு கொண்டு செல்லப்படுவதால் வரும் halucinations ஆக இருக்கலாமோ. ?
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
Deleteஒன்று டாக்டர்.வேய்ஸ் நூறு சதவிகிதம் பொய் சொல்ல வேண்டும். அல்லது நூறு சதவிகிதம் உண்மை சொல்லவேண்டும். அவர் பொய் சொன்னது நிரூபணமானால், அவருடைய டாக்டர் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். நான் உண்மை என்று நம்புவதற்கு, நான் ஒரு ஹிந்து என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்னொரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் தனது சொந்த அனுபவத்தை சொல்வதையும் பாருங்களேன்.
http://www.thedailybeast.com/newsweek/2012/10/07/proof-of-heaven-a-doctor-s-experience-with-the-afterlife.html
அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
ReplyDeleteபடித்தேன் ஐயா.என் புரிதல் சரியென்றால் , கோமா நிலையில் இருந்த அவர் ஏழாம் நாள் கண்விழித்தார். இந்த இடைப்பட்ட காலங்களில் அவர் ஆழ்மனமோ, ஆத்மாவோ பிரபஞ்சத்தில் சஞ்சரித்திருக்கிறது போல் கூறுகிறார். அப்போது அவரது அனுபவங்கள் ஏதும் சொல்லியிருக்கிறாரா.?என் ஒரு பதிவு “ வீழ்வேனென்று நினைத்தாயோ’ -ல் என் அனுபவம் ஒன்றையும் எழுதியிருக்கிறேன்.இடைப்பட்ட சிலவினாடிகளில் நடந்தது ஏதும் தெரியவில்லை. டாக்டர் வெய்ஸ் பொய் சொல்கிறார் என்று நான் சொல்லவில்லை. ஒருவரை ஹிப்னடைஸ் செய்யும்போது அவரது கட்டில் இல்லாமல் மனது என்னென்னவோ எண்ணுகிறதோ என்றுதான் என் சந்தேகம். படிக்கச் சுவையாய் இருக்கிறது. நம்புவது கடினம் என்றுதான் சொன்னேன். தொடர்கிறேன்.
நன்றி. உங்கள் பதிவை வார இறுதியில் பார்க்கிறேன். பார்த்ததும் என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.
ReplyDeleteநம்புவது கடினம்தான் ஐயா!
அந்த டாக்டருடைய முளை 97% பழுதடைந்துவிட்டது. அவருடைய life support-ஐ எடுத்துவிட இருந்த நிலையில் திடீரென்று உயிர் பிழைத்தும், அந்த பழுதான மூளை இயங்கியதுதான் வியப்பு.
இளம் வயதில் கீழ்க்கண்ட விளையாட்டு விளையாடியதுண்டு. அது எப்படி mind reading செய்கிறதென்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை. ஆனால் அது சரியாக mind reading செய்கிறதென்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் சில புதிர்கள் புதிர்களாகவே இருப்பதில்தான் சுவாரசியம் அதிகம்.
http://splashbitsnr.wordpress.com/2012/06/14/calling-holy-spirit-and-asking-the-future/