பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, April 11, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 4

 
“ஒரு வெண்ணிற வீடு தெரிகிறது. வீட்டின் முன்னால் மணலால் ஆன சாலை உள்ளது. குதிரையின்மேல் மக்கள் முன்னும் பின்னும் சென்று கொண்டிருக்கிறார்கள்.” கேத்தரின் எப்பொழுதும்போல் முணுமுணுப்பான குரலில் பேசுகிறாள். “மரங்கள் இருக்கின்றன. . . . . . . விளைச்சல் நிலம், ஒரு பெரிய மாளிகை . . . . . . . சுற்றி சிறிய வீடுகள் . . . . .  . . . சிறிய வீடுகள் அடிமைகள் வீடுபோல தெரிகிறது. மிகவும் வெப்பமான பருவகாலம். அது சௌத் வர்ஜீனியா?” கேத்தரின் வருடம் 1873 என்று எண்ணுகிறாள். குழந்தைப்பருவத்தில் இருக்கிறாள்.

“நிறைய குதிரைகள் உள்ளன. சோளம், புகையிலை பயிர்கள் அதிகமாக உள்ளது.” கேத்தரினும், பிற வேலைக்காரர்களும் பெரிய வீட்டில் சமையல் அறையில் இருக்கிறார்கள். கேத்தரின் ஒரு கருப்பின பெண்ணாய் இருக்கிறாள். அவள் பெயர் ஏபி. பயமும் பதற்றமுமாக இருக்கிறாள். பெரிய வீடு தீயில் எரிந்து அழிவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளை பதினைந்து வருடத்திற்குப் பிறகு, அதாவது 1888-க்கு அழைத்து வந்தேன்.

நான் ஒரு வீட்டில் இரண்டாவது மாடியில் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருக்கிறேன். பழைய உடைகளை அணிந்திருக்கிறேன். அந்த வீடு அதிக ஜன்னல்கள் கொண்ட கல்வீடு. ஒரு கண்ணாடியில் ஏகப்பட்ட வளைவுகளைக் காண்கிறேன். அதன் ஒரு கடைசியில் ஒரு கைப்பிடியும் இருக்கிறது. இந்த வீடு ஜேம்ஸ் மேன்ஷன் என்பவருடைய வீடு. அவரிடம் ஒரு வேடிக்கையான கோட்டு இருக்கிறது. அதில் கருப்பு காலரும் மூன்று பட்டன்களும் உள்ளன. அவருக்கு தாடி இருக்கிறது. . . . . . . எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை (கேத்தரினின் தற்போதைய பிறவியில்). அவர் என்னை நல்ல முறையில் நடத்துகிறார். நான் அந்த வீட்டில்தான் வசிக்கிறேன். நான் அறைகளை சுத்தம் செய்கிறேன். அந்த வீட்டிலேயே பள்ளிக்கூடம் இருக்கிறது. ஆனால் நான் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனக்கு வெண்ணெய் தயாரிக்கவும் தெரியும்.”

கேத்தரின் எளிமையாக, ஆனால் நுணுக்கமாக ஒவ்வொன்றையும் மெதுவாக முணுமுணுத்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் வெண்ணெய் தயாரிக்கும் முறையை அறிந்து கொண்டேன். ஏபி கூறிய, வெண்ணெய் கடைந்தெடுப்பது கேத்தரினுக்கும் புது அனுபவமாக இருந்தது. நான் அவளை இன்னும் முன்னோக்கி அழைத்து வந்தேன்.

“நான் யாருடனோ இருக்கிறேன். நாங்கள் சேர்ந்து வசிக்கிறோம். ஆனால் திருமணம் செய்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் எப்பொழுதும்   நாங்கள் சேர்ந்து வசிப்பதில்லை. ஆப்பிள் மரங்களும், வாத்துக்களும் தெரிகின்றன. தூரத்தில் மக்கள் தென்படுகிறார்கள். நான் ஆப்பிள் பறித்துக்கொண்டிருக்கிறேன். ஏதோ கண்களை உறுத்துகிறது.” கேத்தரின் கண்களைக் கசக்கிக்கொள்கிறாள். “ஒரே புகை; காற்று இந்தப்பக்கம் அடிக்கிறது. . . . . . . எரியும் விறகிலிருந்து புகை வருகிறது. மரப்பீப்பாய்களை எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.” இருமுகிறாள். “அடிக்கடி இதுபோல் நடக்கிறது. பீப்பாய்க்குள் எதையோ தடவுகிறார்கள். . . . . தார். . . . . . தண்ணீர் உட்புகாமல் இருப்பதற்காகத் தடவுகிறார்கள்.”

சென்ற வாரம் நிகழ்ந்த மயிர்கூச்செரியும் சம்பவத்திற்குப் பிறகு, நான் மீண்டும் இறப்புக்கும், மறுபிறப்புக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தை ஆராய விரும்பினேன்.  அவள் வேலைக்காரியாக இருந்த வாழ்க்கையில், ஏற்கனவே தொண்ணூறு நிமிடங்கள் பார்த்துவிட்டோம். படுக்கையை மடித்து வைக்கவும், வெண்ணெய் தயாரிக்கவும், பீப்பாய்களில் தார் பூசவும் நான் கற்றுக்கொண்டேன். ஆன்மீகத்தையும் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு அதிகமாக இருந்தது. பொறுமை இழந்து நான் அவளை இறப்பு நோக்கி அழைத்து வந்தேன்.

“மூச்சு விடமுடியவில்லை. நெஞ்சுவலி அதிகமாக உள்ளது.” கேத்தரின் மூச்சுவிட சிரமப்பட்டாள். வலியில் இருப்பது தெரிந்தது. “நெஞ்சு வலி தாங்க முடியவில்லை. இதயம் வேகமாக துடிக்கிறது. மிகவும் குளிருகிறது. . . . . . உடல் நடுங்குகிறது” கேத்தரின் உடல் நடுங்க ஆரம்பித்தது. “என்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள். ஏதோ இலையைப் போட்டு கஷாயம் தருகிறார்கள். வித்தியாசமான வாசனையாக இருக்கிறது. எனது நெஞ்சில் பச்சிலையைத் தேய்க்கிறார்கள். . . . . . காய்ச்சல். . . . . எனக்கு மிகவும் குளிருகிறது.” அமைதியாக இறந்தாள். மேற்கூரை வரை மிதந்தாள். அவளது உடலை அவளால் பார்க்க முடிகிறது. அறுபதுகளில் உள்ள சுருங்கிப்போன, தேகம் உடைய ஒரு முதியவள். கேத்தரின் மிதந்து கொண்டிருக்கிறாள். யாருடைய உதவிக்கோ காத்திருக்கிறாள். பிரகாசமான ஒளியை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள். ஒளியின் பிரகாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நாங்கள் அமைதியாக காத்திருந்தோம். நிமிடங்கள் கழிந்தன. திடீரென்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வேறோர் பிறவிக்கு சென்று விட்டாள்.

கேத்தரின் மென்மையாக முணுமுணுத்தாள். “எல்லா இடங்களிலும் பூண்டு, கதம்பம் போல் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். பூண்டின் மணத்தை என்னால் நுகர முடிகிறது. பூண்டு இரத்தத்தில் உள்ள தீயசக்திகளை அழிக்க உதவுகிறது. ஆனால் தினமும் சாப்பிட வேண்டும். வெளியிலும் பூண்டு தொங்கவிடப்பட்டுள்ளது. . . . . . தோட்டத்தில் பந்தலிலும் தொங்கவிட்டுள்ளார்கள். . . . . .  வேறு பச்சிலைகளும் காணப்படுகிறது. . . . . அத்தி, பேரீச்சை மற்றும் சில மருந்துகள். . . . . . இந்த தாவரங்கள் எங்களைக் காக்கின்றன. என் அம்மா பூண்டும், பிற மருந்துகளும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில், யாருக்கோ உடல் நிலை சரியில்லை. மிகவும் வித்தியாசமான வேர்களைப் பார்க்கின்றேன். சில சமயம், இந்த வேர்களை வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். சில சமயம் காதுகளில் செருகிக் கொள்ளவேண்டும்.”

“தாடியுள்ள ஒரு முதியவரைப் பார்க்கிறேன். அவர் கிராமத்து மருத்துவர்களில் ஒருவர். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறார். பிளேக் போன்ற நோய் இங்கு பரவியுள்ளது. . . . . . மக்கள் மடிகிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் பாதுகாக்கப்படவில்லை. நோய் பரவி விடுமென்று அச்சப்படுகிறார்கள். உடல்களை அப்படியே புதைத்து விடுகிறார்கள். உடல்கள் புதைக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. புதைக்கப்பட்ட ஆன்மா நற்கதியை அடைய முடியாது என்று நம்புகிறார்கள். ஆனால், ஏகப்பட்ட மரணங்கள் நிகழ்ந்துவிட்டன. கால்நடைகளும் மடிகின்றன. . . . . . தண்ணீர் . . . . . . வெள்ளம் . . . . . . மக்களுக்கு வெள்ளத்தால் நோய்கள் வருகின்றன. (கொள்ளை நோய் பரவுவதை உணர்கிறாள்.) எனக்கும் நீரினால் நோய் தொற்றிக் கொண்டது. வயிறு வலிக்கிறது. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோயாக உள்ளது. உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்துவிடுகிறது. நான் தாகத்துக்கு தண்ணீர் எடுக்க செல்கிறேன். ஆனால் அந்த நீரினால்தான் நோய் பரவுகிறது. நான் நீர் எடுத்து திரும்புகிறேன். என் அம்மாவையும், சகோதரர்களையும் பார்க்கிறேன். அப்பா இறந்து விட்டார். என் சகோதரர்கள் மிகவும் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார்கள்.”

சற்று இடைவெளி கொடுத்து, அவளை முன்னோக்கி அழைத்துச்சென்றேன். கேத்தரினின் ஒவ்வொரு பிறவியிலும், பிறப்பு, இறப்புக் குறித்து மக்களின் நம்பிக்கைகள் எவ்வளவு மாறுபட்டிருக்கின்றன என்று மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஆனால் இறப்பதற்கு முன்பு அவளுடைய அனுபவங்கள், ஒவ்வொரு முறையும் ஒரே விதமாக இருப்பதையும் உணர்ந்தேன். அவளைச் சேர்ந்த ஒரு உணர்ச்சியுள்ள பகுதி அவள் இறக்கும்பொழுது, அவளை விட்டு நீங்கி, மிதக்க ஆரம்பித்து விடுகிறது. பிறகு, பிரகாசமான, சக்தி தரக் கூடிய ஒளியை நோக்கி புறப்படுகிறது. யாருக்காகவோ அங்கு காத்திருக்கவும் செய்கிறது. தொடர்ந்து வேறு உடலை அடைந்து, பிரயாணத்தைத் தொடர்கிறது. பிணத்துக்கு நறுமணம் பூசுதல், புதைத்தல், எரித்தல் போன்ற சடங்குகள் எவையும் இதனைப் பாதிப்பதில்லை. இயல்பாக ஆன்மா தன் பயணத்தைத் தொடர்கிறது. எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் பள்ளத்தை நோக்கி நீர் செல்வதுபோல் இது நிகழ்கிறது.

“நிலம் தரிசாகக், காய்ந்து கிடக்கிறது. . . . . . இங்கு மலையோ, மேடுபள்ளங்களோ இல்லாத நிலத்தைப் பார்க்கிறேன். காய்ந்து போன, தரிசான சமதளமான நிலம். என்னுடைய சகோதரன் ஒருவன் இறந்துவிட்டான். எனது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் உடல்வலி இருந்து கொண்டே இருக்கிறது.” எனினும் அவள் அதிக நாட்கள் உயிர்வாழவில்லை. “நான் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறேன். என்னை ஏதோ ஒன்றினால் சுற்றி வைத்திருக்கிறார்கள்”. மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறாள். எந்த அளவான பூண்டும், பச்சிலைகளும், அவள் இறப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. விரைவில் அவள் உடலை விட்டு மிதக்க ஆரம்பித்துவிடுவாள். எப்பொழுதும்போல பிரகாசமான ஒளியை நோக்கிச் செல்வாள். யாரோ ஒரு வழிகாட்டிக்காகப் பொறுமையாகக் காத்திருப்பாள்.

அவள் தலையை இரண்டு பக்கங்களிலும், எதையோ பார்ப்பதற்கு முயற்சி செய்வதுபோல் மெதுவாக அசைக்க ஆரம்பித்தாள். கரகரப்பான குரலில், சத்தமாக பேச ஆரம்பித்தாள்.

“இறைவன் வேறுவேறு நிலைகளில் இருக்கிறான். ஒவ்வொரு மனிதரிலும் இறைவன் இருக்கிறான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.”

அவள் இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தேன். அந்த கரகரப்பான குரலை என்னால் நினைவுகூற முடிந்தது. ஆன்மீக தத்துவத்துடன் அந்த குரல் ஒலித்தது. அடுத்து கேத்தரின் கூறியது என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. என் இதயமே நின்று விடும்போல இருந்தது.

“உன்னுடைய தந்தையும், மகனும் இங்கிருக்கிறார்கள். உன் மகன் குழந்தையாக இருக்கிறான். உன் தந்தை உனக்கு அவரைத் தெரியும் என்று கூறுகிறார். அவருடைய பெயர் ஏவ்ரம். உன்னுடைய மகளுக்கு, உன் தந்தையை நினைவு படுத்தும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதயக்கோளாறினால் அவர் இறந்து விட்டார். பிறக்கும்பொழுதே உன் மகனுக்கு இதயம் சரியாக இல்லை. அவன் இதயம் கோழியின் இதயம்போல முன்பின்னாக அமைந்துவிட்டது. உனக்காக அவன் பெரிய தியாகம் செய்திருக்கிறான். அவன் ஆன்மா மிகவும் மேன்மையானது. . . . . அவன் இறப்பு, அவனது பெற்றோர்களின் பாவங்களைக் கரைத்துவிட்டது. மேலும், மருந்தும், மாத்திரைகளும் ஒரு அளவுக்குமேல் பலன் தராது என்று உன்னை உணர வைக்க விரும்பியிருக்கிறான்.”

கேத்தரின் பேசுவதை நிறுத்திவிட்டாள். நான் பேச்சிழந்த நிலையில் பிரமித்து அமர்ந்தேன். நாங்கள் இருந்த அறை மிகவும் ஜில்லிட்டு போனதுபோல் உணர்ந்தேன்.


---  தொடரும்.

 

 

 

கொசுறு:

·         நல்லவனாக இருந்து மற்றவர்களுக்கு இயன்ற நன்மைகளைச் செய்து வருவதே வாழ்வின் அடிப்படை நெறிமுறை.
·         பகை, பொறாமை போன்ற தீயகுணங்களை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடும்.
·         பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே சமயத்தின் நோக்கம்.
·         மன அமைதி பெற்று வாழ்வது தான் மதங்களின் அடிப்படை லட்சியம். மதத்தின் பெயரால் மனிதன் சச்சரவு செய்வது கூடாது.
·         தெய்வீகத்தன்மை இல்லாத மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் சக்தி படைத்தவை.
·         கைம்மாறு கருதாமல் பிறருக்குக் கொடுத்து மகிழுங்கள். அதுவே உண்மையான இன்பம்.
·         பார்க்கும் இடமெல்லாம் கடவுள் நிறைந்திருக்கிறார். எல்லாப் பொருள்களிலும் பரம்பொருளைக் காண்பதே பேரின்பம்.
·         குறிக்கோளுக்குச் செலுத்தும் முக்கியத்துவத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவது அவசியம்.
·         சிலநேரங்களில் இன்பத்தைவிடத் துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக அமைந்து விடுகிறது.
·         தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவன் உலகைச் சரிபடுத்தும் தகுதியைப் பெறுகிறான்.
·         நல்ல மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சரிசமமான இடத்தை வகிக்கின்றன.
·         உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.
·         உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.
·         பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்றுதான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.
·         சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.
·         உயிர்போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம்.
·         தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.
·         நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.
·         ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான்.
·         தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
·         குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.
·         பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
·         தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
·         தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.
·         கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.
·         எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.
 

-    சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்.

 

கணிதப் புதிர்: 

அயோத்தியிருந்து பிருந்தாவனத்துக்கு தினம் இரயில் செல்கிறது. எதிர் திசையில் பிருந்தாவனத்திலிருந்து அயோத்திக்கும் தினம் இரயில் வந்து கொண்டிருக்கிறது. அயோத்தியில் 1 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு புறப்படும் இரயில் பிருந்தாவனத்தை அடைய பத்து நாட்கள் பிடிக்கும். அதாவது 11 ஆம் தேதி காலை ஆறுமணிக்கு பிருந்தாவனத்தை அடையும். அதேபோல் பிருந்தாவனத்தில் 1 ஆம் தேதி காலை ஆறுமணிக்கு புறப்பட்ட இரயில் அயோத்தியை 11 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு வந்து சேரும். அதாவது பத்து நாட்கள் பிடிக்கும். எந்த விடுமுறைக்கும் இரயில் பயணம் தடைபடுவது கிடையாது. தினந்தோரும் இரண்டு திசைகளிலும் இரயில்கள் செல்கின்றன. ஒரு திசையில் இரயிலில் செல்பவர்கள் மறுதிசையில் வரும் இரயில்களைப் பார்க்க முடியும்.  

அயோத்தியிருந்து புறப்படும் ஒருவர், பிருந்தாவனத்தை அடையும்வரை எதிர்திசையில் வரும் இரயில்களில் அதிகப்பட்சமாக எத்தனை இரயில்களைப் பார்க்க முடியும்? 

சுலபமாகத் தோன்றினாலும் சிறிது குழப்பமளிக்கும் கேள்வி. பதில் தெரியும்பொழுது நாம் செல்லும் பஸ்நம்பர், எதிர்திசையில் அதிக அளவில் பார்ப்பது ஏனென்று புரியவரும்.

 

 

 

 

 

 

பதில்:

மொத்தம் இருபத்திரெண்டு ரயில்களைப் பார்க்க முடியும். ரயில் புறப்படும் நாளன்று ஒரு ரயிலைப் பார்க்க முடியும். அந்த நேரத்தில், பத்து ரயில்கள் பாதையில் வந்துகொண்டிருக்கும். புறப்பட்ட ரயில் சேரவேண்டிய இலக்கை அடைய பத்து நாட்கள் பிடிக்கும். இந்த பத்து நாட்களில் மேலும் பத்து ரயில்கள் எதிர் திசையிலிருந்து புறப்பட்டிருக்கும். எனவே 1+10+10+1 என்று மொத்தம் இருபத்திரெண்டு ரயில்களைப் பார்க்க முடியும்.


7 comments:

 1. இறைவன் வேறுவேறு நிலைகளில் இருப்பது உண்மையாக இருக்குமோ...? மேலும் சுவாரஸ்யம் கூடுகிறது...

  அருமையான, அறிந்து கொள்ள வேண்டிய பொன்மொழிகள்... நன்றி...

  நல்ல புதிர்...

  ஆவலுடன் அடுத்த பகிர்வை எதிர்நோக்கி....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி தனபாலன். வெள்ளியன்று அடுத்த பதிவை எதிர்பாருங்கள்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 2. //நான் பேச்சிழந்த நிலையில் பிரமித்து அமர்ந்தேன்.//

  நானும் தான். தொடர் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள் அருமையான மொழி பெயர்ப்புக்கு!

  கொசுறும் அருமை புதிரும் அருமை. ஆனால் நீங்கள் விடையை அடுத்த பதிவில் வெளியிட்டிருக்கலாம். விடை கீழே இருந்ததால் மூளைக்கு வேலை இல்லை!

  ReplyDelete
  Replies
  1. தொடர்வதற்கும், பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி ஐயா!

   அவசரமான யுகத்தில் இருக்கிறோம். யாரும் காத்திருப்பர்களா என்று எனக்கு சந்தேகம் வந்ததால் பதிலை உடனே தந்துவிட்டேன்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்

   Delete
 3. இன்றுதான் உங்கள் பதிவிற்குள் வர முடிந்தது. கேதரின் கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. சாவகாசமாகப் படித்து பின்பு தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! சாவகாசமாக படியுங்கள். ஆசிரியரின் கூற்றுப்படி இது கதையல்ல. உண்மை நிகழ்வுகள்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 4. அன்புள்ள பக்கிரிசாமி,

  உனது பதிவுகளை படித்து மறுமொழி இட்டுள்ள நண்பர்களின் வலைத்தளங்களை நான் அடிக்கடி படிப்பதுண்டு. தமிழ் மணம் எனது மதிய உணவின் கூட்டாளி. பழனி கந்தசாமியின் வலைத்தளத்தில் உன் மறுமொழி கண்டு உன் பதிவுக்குள் வந்தேன். நல்ல நடை. பணி தொடரட்டும்.

  அன்புடன் வெங்கட் (துபாய்)

  ReplyDelete