பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, April 18, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 4 : பகுதி - 2


கேத்தரினுக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடைய மேசையில், என் பெண் சிறுகுழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இருந்தது. கொப்பளிக்கும் சிரிப்புடன், பொக்கை வாயில் இரண்டு கீழ்ப்பற்களுடன் காணப்படும் புகைப்படம் அது. என் மகனுடைய புகைப்படம் அதற்கு பக்கத்தில் உள்ளது. இதைத்தவிர கேத்தரினுக்கு என்னுடைய குடும்ப வாழ்க்கையையோ, தனிப்பட்ட வாழ்க்கையையோ பற்றி எதுவும் தெரியாது. நான் காலங்காலமாக செயல்படுத்தப்படும் மனோதத்துவ முறைகளை கற்றுத் தேர்ந்தவன். அதன்படி இங்கு நாங்கள் ஒரு வெற்றுக் காகிதம்போல செயல்பட வேண்டும். நோயாளிகள் தங்களின் உணர்வுகளை, எண்ணங்களை, நடவடிக்கைகளை, அந்த காகிதத்தில் பிரதிபலிக்க வேண்டும். அவற்றை விளக்கமாக, துல்லியமாக ஆராய்ந்து, குறைகளை களைய வேண்டியது மனோதத்துவ நிபுணர்களின் கடமை. எனவே டாக்டர் என்ற முறையில் மட்டுமே எனக்கும் கேத்தரினுக்கும் இடையில் தொடர்பு இருந்தது. நான் மனோதத்துவ டாக்டர் என்பதைத் தவிர, என் சொந்த வாழ்க்கையைப்பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. என்னுடைய பட்டங்களையும், என் அலுவலகத்தில் நான் விளம்பரப் படுத்தி வைத்திருக்கவில்லை.

1971 – ஆரம்பத்தில், பிறந்து இருபத்திமூன்று நாட்களிலேயே இறந்த என் முதல் மகன் ஆதாமின் இழப்பு என் வாழ்வில் நிகழ்ந்த மிகவும் துயரமான, மறக்க முடியாத நிகழ்ச்சி. எதிர்பாராதது. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பத்து நாட்களில் அவனுக்கு, மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருந்தது. வாந்தியும் இருந்தது. எப்படிப் பட்ட நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கடுமையான மெடிக்கல் வார்த்தைகளில் விளக்கம் தெரிவித்து, கோடியில், ஒரு குழந்தைக்கு வரும் நோய் என்று கூறினார்கள். ஆக்சிஜனை இதயத்துக்கு கொண்டு வரும் குழாய் தவறுதலாக இணைக்கப்பட்டிருப்பதாக மெடிக்கல் ரிப்போர்ட் கூறியது. அதாவது இதயம் முன்னுக்குப் பின்னாக அமைந்திருந்தது. மிகவும் அரிதாகவே இப்படி நிகழும். கோடியில் ஒன்று.

ஓப்பன் ஹார்ட் சர்ஜரியும், என் மகனை குணப்படுத்த முடியவில்லை. சில நாட்களிலேயே இறந்து விட்டான். எங்கள் கனவுகள், எதிர்பார்ப்புகளை சிதைத்து விட்டான். அவன் நினைவாக நாட்களைக் கழித்தோம். எங்கள் இரண்டாவது மகன் ஜோர்டான், ஒரு வருடத்துக்குப் பிறகு பிறந்து எங்கள் காயங்களை குணப்படுத்தி எங்களை இயல்பு நிலைக்கு அழைத்து வந்தான்.

என் மகன் ஆதாம் இறந்தபொழுது நான் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க முடிவெடுக்கும் நிலையில் இருந்தேன். நான் நவீன, புதிய மருத்துவ முறைகளில் மிகவும் கோபமாக இருந்தேன். மேன்பட்ட திறமையும், தொழில்நுட்பமும் கொண்ட மருத்துவமுறைகளினால், என்னுடைய சிறிய குழந்தையின் உயிர்பிரிவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் ஆதாம் மறைவிற்குப் பிறகு, நான் முழு மருத்துவ துறையிலிருந்து சற்று விலகி, மனோதத்துவத்தில் மேற்படிப்பு படிக்கவும், எதிர்காலத்தில் அதனை தொழிலாகக் கொள்ளவும் முடிவெடுத்தேன்.

எனது தந்தைக்கு 1979-ல் அறுபத்தொரு வயதில் திடீரென்று மிகப்பெரிய மாரடைப்பு வந்தது. அதுவரை அவர் உடல் நிலை மிகவும் நன்றாக இருந்தது. முதல் மாரடைப்பில் அவர் உயிர் பிழைத்தார். இருப்பினும், அவர் இதயம் பழைய நிலைக்கு வர முடியவில்லை. மீள முடியாத அளவு, பலகீனமாகி விட்டது. மூன்று நாட்களில் அவர் இறந்து விட்டார். அவர் இறப்புக்குப் பிறகு, ஒன்பது மாதங்கள் கழித்துதான், கேத்தரின் முதன் முதலாக என் கிளினிக்கு வந்தாள்.

என் தந்தை மிகுந்த மதப்பற்று உடையவர். ஆன்மீக சிந்தனைகளை விட சடங்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பார். அவருடைய யூதமொழிப் பெயர் ஏவ்ரம். அவருடைய ஆங்கிலப் பெயர் ஆல்வினை விட, யூதப்பெயர் ஏவ்ரம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. தந்தை இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, என் மகள் பிறந்தாள். தந்தை நினைவாக அவளுக்கு ஏமி என்று பெயரிட்டோம்.

இன்று 1982-ல் அமைதியான, இருள் நிறைந்த என் அலுவலகத்தில், சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் அலைஅலையாக வெளிவருகின்றன. நான் ஆன்மீகக் கடலில் நீந்துகிறேன். நான் என் தந்தையை மிகவும் நேசிக்கிறேன். புல்லரித்து நிற்கிறேன். கேத்தரினுக்கு இந்த விஷயங்கள் முன்பே தெரிவதற்கு, சாத்தியமே கிடையாது. எங்கு தேடியிருந்தாலும் அவளுக்கு தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. என் தந்தையின் யூதப்பெயர், சில நாட்களிலேயே மறைந்த என் மகன், கோடியில் ஒருவருக்கு மட்டுமே இருக்கக்கூடிய அவன் இதயக்கோளாறு, என் மகளின் பெயர்க்காரணம். . . . . . . துல்லியம்; சத்தியமான உண்மை. ஒன்றும் அறியாத இந்த லேபரேட்டரி டெக்னிசியன் ரகசியங்களுக்கு ஒரு தொடர்புக் கருவி. இவ்வளவு கூற முடிந்தால், வேறென்னவெல்லாம் கூறமுடியும்? எனக்கு இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும். “யார்?” குழறினேன். “யார் இருக்கிறீர்கள்? உனக்கு இதையெல்லாம் சொல்வது யார்?”

“ஆவிகள்.” முணகினாள். “மேன்மையான ஆவிகள் சொல்கிறார்கள். நான் எண்பதாறு முறை பிறவிகள் எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்”

கேத்தரின் மெதுவாக மூச்சு விட ஆரம்பித்தாள். அவள் தலையை பக்கவாட்டில் அசைப்பது நின்று விட்டது. அமைதியானாள். நான் இன்னும் தொடர விரும்பினேன். ஆனால் அவள் கூறியவைகளின் தாக்கங்கள் என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. அவள் உண்மையிலேயே எண்பத்தாறு பிறவிகள் எடுத்திருக்கிறாளா? யார் அந்த மேன்மையான ஆவிகள்? இப்படியும் இருக்குமா? நம் வாழ்க்கை உருவமில்லாத, அனைத்து உண்மைகளையும் அறிந்த மேன்பட்ட ஆவிகளால் வழிநடத்தப்படுகிறதா? இறைவனை அடையும்முன் கடக்க வேண்டிய படிகள் உள்ளனவா? நடப்பதெல்லாம் உண்மையா? நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தேன். ஆனால் என் இதயமும், சிந்தனைகளும் அவள் கூறுவது சரியென்று ஒத்துக்கொண்டன. கேத்தரின் கூறியவை அனைத்தும் உண்மைகள்.

என் தந்தையும், மகனும் என்னவானார்கள்? ஒரு வகையில் பார்த்தால் இன்னும் இறக்கவில்லை; இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உடலைப் புதைத்து பல ஆண்டுகளுக்குப் பின், எனக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மைகளைக் கூறுவது மூலம், அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. கேத்தரின் சொல்வது உண்மையானால், என் மகன் உயர்ந்த ஆவி நிலைக்கு சென்றுவிட்டானா? உண்மையில் எங்கள் பாவங்களைக் கழுவவே எங்களுக்கு மகனாக பிறந்து, பிறந்த 23 நாட்களில் இறந்து விட்டானா? அதைத்தவிர நான் மனோதத்துவம் படித்து மனித வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கின்றானா? பற்பல சிந்தனைகளால் என் இதயம் கனத்தது. சரீர நிலையில் இல்லாத, மகன் மற்றும் தந்தையின் இழப்பை உணர்கிறேன். அவர்களிடமிருந்து செய்திகள் வந்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. மனம் மிகவும் அதிர்ச்சியிலிருந்தாலும் பூவுலகுக்கும், மேலுலகுக்கும் இருக்கும் அன்பான, அணுக்கமான தொடர்பு எனக்கு ஒருவிதத்தில் மிகுந்த நிம்மதியை அளித்தது,

என் வாழ்வின் திசை மாறுகிறது. இனிவரும் வாழ்க்கை, இதுவரை வாழ்ந்ததைவிட வேறுபட்டு இருக்கப்போகிறது. வானுலகிலிருந்து நீண்ட ஒரு கரம், என் வாழ்க்கையை திரும்ப முடியாத அளவுக்கு மாற்றிவிட்டது. இதுவரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், கற்றுத் தேர்ந்த கல்விஅறிவு இருந்த இடம் தெரியவில்லை. கேத்தரினிடமிருந்து வந்த செய்திகளும், அவள் நினைவுகளும் முற்றிலும் உண்மை. கேத்தரினுடைய அனுபவங்களும், அவற்றின் துல்லியமான விளக்கங்களும் மிகவும் சரியாக உள்ளன. அனைத்து நிரூபணங்களும் என்னிடம் உள்ளன.

இதுவரை நான் தெரிந்தறியாத உண்மைகளை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் இருந்தாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில் என்னுடைய தர்க்கரீதியான அறிவு, எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. அவளுக்கு ஆருடம் சொல்லும் திறமை இருந்திருக்கலாம். . . . . . இல்லை. இந்த முறை நான் நன்கு அறிந்திருக்கிறேன். ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, குழந்தைகள் அறிந்திராத மொழியில் பேசுவதும், பிறப்பிலேயே முற்பிறப்பில் ஏற்பட்ட தழும்புகள் பெற்றிருப்பதும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், நூற்றாண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருந்த புதையல்கள் உள்ள விஷயங்களும் - அனைத்தும் கேத்தரினிடமிருந்து வந்த தகவல்களில் எதிரொலித்தன. எனக்கு கேத்தரினுடைய பண்புகளையும், குணநலன்களையும் பற்றி நன்றாகத் தெரியும். என்னுடைய தர்க்க ரீதியான மனம் இம்முறை என்னை ஏமாற்ற முடியாது. கிடைத்திருக்கும் நிரூபணம் மிகவும் உறுதியாக உள்ளது. இது உண்மை. இனிவரும் ஹிப்னடைஸ் தொடர்ச்சியில் இன்னும் உறுதி செய்யவேண்டும்.

தொடரும் நாட்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான் மறந்துவிடக்கூடும். தினசரி வாழ்க்கையில் ஏற்படும் நடைமுறை பிரச்சினைகளில் நான் மூழ்கிவிடக்கூடும். நாட்கள் செல்லச் செல்ல தர்க்கரீதியில் இருக்கும் எனது அறிவு, மீண்டும் வழக்கத்தில் உள்ள தத்துவத்துக்குத் திரும்பக்கூடும். நான் எனக்கு நேர்ந்த அனுபவங்களை நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். இருப்பினும் சொந்த அனுபவம் இல்லாமல் இப்படிப்பட்ட விஷயங்களை ஒத்துக் கொள்வதென்பது நடக்காத காரியம். அறிவுபூர்வமாக இக்கருத்துக்களை ஒத்துக் கொள்ள இத்தகைய அனுபவங்கள் மிகவும் உதவும். ஆனால் இந்த அனுபவங்களின் தாக்கம் காலம் செல்லச் செல்ல குறைவதற்குகான வாய்ப்புகள் உள்ளது.

ஆரம்பத்தில் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் உணரவில்லை. நான் முன்பைவிட பொறுமை மிக்கவனாகவும், அமைதியானவனாகவும் மாறியது எனக்குப் புரிந்தது. என்னைச் சேர்ந்தவர்கள் நான் சாந்தமாகவும், மகிழ்ச்சியுடனும் தோற்றமளிப்பதாகக் கூறினார்கள். நான் வாழ்க்கையின் மீது நம்பிக்கையும், வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாகவும், மகிழ்ச்சியாகவும், மிகவும் திருப்தியுள்ளவனாகவும் உணர்ந்தேன். மரணத்தைப் பற்றிய எனது எண்ணங்கள் மாறிவிட்டன. என்னுடைய இருப்பு, இறப்பைப் பற்றி எனக்கு எந்தவித அச்சமுமில்லாமல் ஆனது. சுற்றத்தார், உறவினர்கள் யாரும் இறந்து விடுவார்களோ என்ற கவலையும் இல்லாமல் போனது. இருந்தாலும் அவர்களின் சரீர நிலை இழப்பை உணர்வது நிச்சயம். மரண பயம் மிகவும் கொடுமையானது. அச்சத்தைப் போக்க மக்கள்தான் என்னென்ன செய்கிறார்கள்: - நடுவயதில் வரும் இக்கட்டான சூழல், உடற்பயிற்சியின் மீதான நாட்டம், இளமையானவர்களிடம் கூடா நட்பு, அழகுக்கு செய்யும் ஆபரேஷன்கள், பொருட்கள்மீது நாட்டம், பரம்பரை வறட்டு கௌரவம், இளமையை மீட்டெடுக்கும் முயற்சிகள், இன்னும் பல. மரண பயத்தினால் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை மறந்து விடுகிறோம்.

வாழ்க்கையில் மிகவும் பற்றற்றவனாக மாறினேன். நான் நினைத்தபடியே அனைத்தும் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது, வாழ்க்கையில் கவலையின்றி இருக்க முயற்சித்தேன். இருப்பினும் செயல்முறையில் இது மிகவும் கடினமானதாக இருக்கிறது. வாழ்க்கையில் நான் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் இன்னும் இருக்கின்றன.

கேத்தரின் கூறிய அனைத்தும் உண்மைகள் என்று மனப்பூர்வமாக உணர்ந்தேன். என் தந்தையையும், மகனையும் குறித்து அவள் கூறியது நமது புலன்களுக்கு அப்பாற்பட்டது. அவளுடைய ஆரூடம் கூறும் திறமை மனித இயல்புகளுக்கு அப்பாற்பட்டது. கேத்தரினை நம்புவதற்கு சரியான காரணங்கள் உள்ளன. இருப்பினும் வெளிவந்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்னை குழம்பவும் வைக்கின்றன. ஆரூடம் கூறுதல், இறப்புக்குப் பின்நிலையைப் பற்றி சொல்பவர்கள், ஆவியிடம் பேசுபவர்கள். . . . . யார் இவர்கள்? அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்பட்டார்களா? கேத்தரினிடம் எனக்கு ஏற்ப்பட்ட அற்புதமான அனுபவங்களுக்குப் பின்னரும் என்னுடைய தர்க்கரீதியான மனம் ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராய்வதை நிறுத்தவில்லை. நான் ஒவ்வொரு ஹிப்னடைஸ் அமர்வின்பொழுதும் ஏற்படும் அனுபவங்கள், ஆராய்ச்சி முறைப்படி ஒத்துவருகிறதா என்று உறுதி செய்வேன். எல்லாக் கோணங்களிலிருந்தும் நிகழ்பவைகளை ஆராய்வேன். ஏற்கனவே உள்ள அறிவியல் ஆராய்ச்சிகளின் கட்டமைப்பை விட்டு வெளிவர மாட்டேன்.

 

---தொடரும்.

 

யக்ஷ்யப்பிரச்சனை:
மகாபாரதத்தில் தன் சகோதர்களைக் காக்க யட்சனின் கேள்விகளுக்கு தருமர் அளித்த பதில்கள்.

பூமியைவிட கனமானது எது?-----------தாயன்பு.
ஆகாயத்தைவிட உயர்ந்தது எது?-----------தந்தையன்பு.
காற்றைவிட வேகமானது?-------------------மனம்.
புற்களைவிட அதிகமானது?-----------------கவலை.
தூங்கும்பொழுதும் எது கண்களை மூடாது?-------------------மீன்
பிறந்ததும் அசையாதது?--------------------முட்டை.
இதயம் இல்லாதது?--------------கல்.
வேகத்தால் வளர்வது?---------------நதி.
நாடு கடந்து செல்பவனுக்கு யார் நண்பன்?-------வித்தை.
வீட்டிலிருப்பவனுக்கு உற்ற தோழன்?-----------------மனைவி.
நோயாளிக்கு யார் தோழன்?-------------------மருத்துவன்.
மரணமடைகின்றவனுக்கு யார் தோழன்?-----------------தானம்.
அனைத்து உயிர்களுக்கும் யார் விருந்தினர்?-----------அக்னி.
எது அமிர்தம்?---------------------பால்.
யார் அனைவருக்கும் ஒருவனாகத் தோன்றுகிறான்?-----------சூரியன்.
பிறந்தவன் எவன் மறுபடியும் பிறக்கிறான்?--------------------------சந்திரன்.
பனிக்கு மருந்து?------------------------அக்னி
அனைத்தையும் அடக்கக்கூடிய பாத்திரம்?-----------------------பூமி.
தருமம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?--------------------முயற்சியில்.
புகழ் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?---------------------தானத்தில்.
சுகம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?--------------------நல்லொழுக்கத்தில்.
சொர்க்கம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?---------------சத்தியத்தில்.
மனிதனுக்கு ஆன்மா எது?--------------------------புதல்வன்.
தெய்வம் தந்த துணை?----------------------மனைவி.

 

---தொடரும்.

 

குழந்தைகளுக்கான கதை:

இரண்டு குட்டித் தவளைகள் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது வழிதவறி வேறு ஊருக்கு சென்றுவிட்டன. புதிய இடமாக இருந்ததால், இரண்டும் ஒரு பெரிய பள்ளத்தில் தெரியாமல் குதித்து விளையாடின. சிறிது  நேரத்துக்குப் பிறகு   பள்ளத்திலிருந்து வெளியேர முயற்சி செய்தன. வெளியே வரமுடியாமல் குதித்து, குதித்துப் பார்த்தன. சத்தம் கேட்டு பள்ளத்துக்கு வெளியே நிறைய குட்டித் தவளைகள் வந்து , கூடி நின்று வேடிக்கைப் பார்த்தன. மேலே இருந்த தவளைகள், கீழே இருந்த தவளைகளுக்கு உற்சாகமூட்டிக்கொண்டிருந்தன.

“உங்களால் முடியும்” “ஒரு கல்லின் மேல் நின்றுகொண்டு குதித்துப் பாருங்கள்” “நன்றாக மூச்சுப்பிடித்துக் குதித்தால் வந்துவிடலாம்” “தண்ணீரில் நிற்காமல் குதியுங்கள்” என்றெல்லாம் சத்தமிட்டன. 

நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. மேலேயிருந்த தவளைகளுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. ஒரு சமயத்தில், உற்சாகமூட்டுவதற்கு பதிலாக தன்னம்பிக்கையை இழக்கும்வண்ணம் கத்த ஆரம்பித்துவிட்டன.

“உங்களால் வரமுடியாது” “நீங்கள் இறக்கப்போகிறீர்கள்” “உங்களைவிட பெரிய தவளையே இந்த இடத்தில் இறந்திருக்கிறது” “உங்கள் முயற்சிகள் எல்லாம் வீண்” என்றெல்லாம் கூப்பாடுகள் போட்டன. 

கீழேயிருந்த இரண்டு தவளைகளில் ஒன்று அதனைக் கேட்டு சோர்ந்துவிட்டது. முயற்சியைக் கைவிட்டது. மற்றொன்று மட்டும், விடாமல் முயற்சி செய்து, ஒரு சமயத்தில் வெளியே வந்துவிட்டது. மேலே வந்ததும், மற்ற தவளைகளைப் பார்த்து “நீங்கள் மட்டும் இல்லாவிட்டால், நான் இறந்திருப்பேன். நானும் சோர்வடைந்துவிட்டேன். ஆனால் நீங்கள் தொடர்ந்து ஊக்குவித்ததால்தான், விடாமல் முயற்சி செய்து தப்பிவிட்டேன். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி” என்று கூறியது. கூடியிருந்த தவளைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. தப்பித்து வந்த தவளைக்கு, காது கொஞ்சம் சரியாகக்  கேட்காது. அதனால்தான் மேலே உள்ளவர்கள், தன்னை உற்சாகப்படுத்துகிறார்கள் என்று எண்ணி விடா முயற்சி செய்து மரணத்தை வென்றுவிட்டது. விஷயமறிந்ததும் கூடியிருந்த தவளைகள், தங்களுடைய தவறுதலான செய்கையை உணர்ந்து வெட்கப்பட்டன. 

வாழ்க்கையில் ஒரு செயலை செய்து முடிக்க முடியும் என்று எண்ணுபவர்கள், நிச்சயம் அச்செயலை செய்து முடிப்பார்கள். முடியாது என்று எண்ணுபவர்கள், அச்செயலை செய்து முடிக்க மாட்டார்கள். ஒரு செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கும், முடிக்காமல் இருப்பதற்கும் அவரவரது சிந்தனைகளே முக்கிய காரணம்.

4 comments:

 1. இதைப் படித்தபின் முன் ஜன்மம் பற்றிய செய்திகள் உண்மையாய் இருக்கலாமோ என்ற ஐயம் வருவது உண்மை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! கற்றல் என்பதே அடுத்தவர் அனுபவங்களை, ஆய்ந்து அறிவுக்கு சரியாக உணர்வதை ஏற்றுக் கொள்வது. பொறுத்திருந்து பாருங்கள்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete
 2. நுணுக்கமான ஆராய்ச்சி வியக்க வைக்கிறது...

  தருமர் பதில்கள் அருமை... தொகுப்பிற்கு நன்றி...

  கதை குழந்தைகளுக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே தேவை...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி தனபாலன்.
   ஆமாம். கதை அனைவருக்கும் தேவையான கதைதான்.

   அன்புடன்
   பக்கிரிசாமி நீலகண்டம்.

   Delete