பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, April 4, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 3 : பகுதி - 2


கேத்தரின் அடுத்த முறை சிகிச்சைக்கு வருவதற்கு முன் இதைப்பற்றி யோசித்தேன். சிகிச்சைக்கு முன், தான் கண்ட ஒரு கனவு பற்றி விவரித்தாள். பழமையான கற்களாலான படிகளில், தான் செக்கர் போர்ட் விளையாடியது போல் இருந்ததாகக் கூறினாள். அவளுக்கு அந்த கனவு நன்கு ஞாபகம் இருந்தது. இந்த முறை சிகிச்சையில், அவளுடைய பிறவிகளில், வரும் நிகழ்ச்சிகளுக்கும் இந்த கனவுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று அறியும்படி கூறினேன்.

“ஒரு கோட்டையை நோக்கிச் செல்லும் படிகளைக் காண்கிறேன். மலையையும், கடலையும் காண்பதற்கு வசதியாக, கோட்டை கட்டப்பட்டுள்ளது. நான் ஒரு சிறுவன். என் முடி மஞ்சளாக உள்ளது. அது எனக்கு மிகவும் வித்தியாசமாக உள்ளது. என் உடைகள் குட்டையாக உள்ளன. விலங்குகளின் தோலினால் அவை செய்யப் பட்டிருக்கின்றன. கோட்டையின்மேல் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் கோட்டைப் பாதுகாவலர்கள். மிகவும் அழுக்காகக் காணப்படுகிறார்கள். அவர்கள் செக்கர் விளையாட்டு விளையாடுகிறார்கள். . . . . . . இல்லை. அந்த போர்டு சதுரமாக இல்லை. வட்டமாக உள்ளது. அவர்கள் விளையாடும் பொருட்கள் மிகவும் கூராக உள்ளன. போர்டில் உள்ள பள்ளங்களில் அவை சரியாக பொருந்துகின்றன. அந்த காய்களுக்கு மிருகங்களைப் போல் தலைகள் உள்ளன.”
 
நான் அவள் வசிக்கும் இடத்தின் பெயரையும், வருடத்தையும் அவளால் பார்க்கவோ, கேட்கவோ முடிகிறதா என்று கேட்டேன்.
அவள் “நெதர்லாந்தில் இருக்கிறேன். வருடம் கிட்டத்தட்ட கி.பி 1473. நான் துறைமுகத்தில் இருக்கிறேன். பாதை கடலை நோக்கி செல்கிறது. கோட்டை உள்ளது. தண்ணீரைப் பார்க்கிறேன். ஒரு குடிசையைப் பார்க்கிறேன். . . . . . . என் அம்மா மண்பானையில் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் பெயர் ஜோகன்.” என்றாள். அந்தப் பிறவியில் இறப்பு நிலை வரை சென்றாள். அந்தக் கட்டத்தில் அவள் கனவுக்கும், பிறவிக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று அறிய விரும்பினேன். குறிப்பிடத்தக்க அளவு அவள் சம்பவங்களையும், காட்சிகளையும் விவரித்திருந்தாலும், அவள் கனவுக்கும், அப்பிறவிக்கும் என்னால் தொடர்புபடுத்த முடியவில்லை. கேத்தரினைவிட, மிகவும் பயங்கரமான மீண்டும், மீண்டும் வரக்கூடிய கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். சிறுவயதில் நிகழ்ந்த நிகழ்ச்சியா அல்லது வெறும் கனவா என்று பிரித்தறிய முடியாதவர்களும் உள்ளனர், வயதான பிறகும் அதே பயங்கரமான கனவு அவர்களை தொடர்ந்திருக்கிறது.  
 
தினம் தொடர்ந்து நிகழும், மனதுக்கு ஒவ்வாத சிற்சில நிகழ்ச்சிகளினால் ஒருவர் பாதிக்கப்படுவது, எப்போதாவது ஒரு தடவை நிகழ்ந்த பயங்கரமான நிகழ்ச்சியைவிட அவரை அது அதிக அளவு பாதிக்கும். உதாரணத்திற்கு, பெற்றோரால் தொடர்ச்சியாக இகழ்ந்து விமரிசிக்கப்படும் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள். இத்தகைய பாதிப்புகள் தினசரி வாழ்க்கையில் கலந்திருப்பதால், நினைவுக்கு கொண்டுவந்து அழிப்பதென்பது மிகவும் கடினமான செயல். தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகும் குழந்தை, எப்போதாவது மிகப்பெரிய கண்டனதிற்கு உள்ளான குழந்தையை விட மனதளவில் குறைவான சுயமரியாதையைக் கொண்டிருக்கும். தினசரி உணவு சரிவரக் கிடைக்காத குழந்தை எப்போதாவது ஒரு காலக்கட்டத்தில், பசியால் அவதியுற வேண்டிய அவசியத்தில் உள்ள குழந்தையைப் போல் மனதளவில் பாதிப்படைந்திருக்கும். தினசரி விடாமல் நிகழக்கூடிய எதிர்மறையான நிகழ்ச்சிகளையும் புரிந்து கொண்டு, பிரச்சினைகளை சரி செய்வதென்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். எப்பொழுதாவது நிகழும் பயங்கரமான நிகழ்ச்சிகளைப் போல, தினம் நிகழும், ஒவ்வாத நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சரிசெய்ய வேண்டும்.
 
கேத்தரின் பேச ஆரம்பித்தாள். “படகுகள், சிறிய ஓடங்கள் போல் பிரகாசமான வண்ணங்களுடன் காணப்படுகின்றன. மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம். எங்களிடம் ஈட்டி, அம்பு, கவண்கல் போன்ற ஆயுதங்கள் உள்ளன. ஆயுதங்கள் பெரியதாக உள்ளன. மிகப்பெரிய படகு உள்ளது. அதற்கு வினோதமான துடுப்பும் உள்ளது. அனைவரும் துடுப்பை இயக்க வேண்டும். இங்கு மிகவும் இருட்டாக இருக்கிறது. விளக்குகள் எதுவும் இல்லை. நாங்கள் வழிதவறி விடுவோமென்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது. எங்கள் படகுபோல் இன்னும் பல படகுகளைக் காண்கிறேன். படகுத் திருவிழா என்று நினைக்கிறேன். பொதுவாக எனக்கு விலங்குகளைக் கண்டால் மிகவும் பயம். ஆனால் நாங்களோ, நாற்றம் அதிகமுள்ள விலங்கின் தோலிலான விரிப்பில் படுத்திருக்கிறோம். நாங்கள் போர்த்தொழில் செய்கிறோம். மிகவும் வேடிக்கையான செருப்புகளை அணிந்திருக்கிறேன். தோலினால் ஆன கயிற்றை கணுக்காலில் கட்டியிருக்கிறேன். என் முகம் தீயின் அருகில் இருப்பதால் மிகவும் வெப்பமாக உணர்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்க்கிறோம். நான் ஒருவரையும் கொல்லவில்லை. கொல்ல விருப்பமும் இல்லை. என் கையிலும் கத்தி உள்ளது.”
 
திடீரென்று கேத்தரின் மூச்சுவிட திணறினாள். அவளை எதிரிப் படையிலிருந்த ஒருவன் பின்புறத்திலிருந்து பிடித்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாகக் கூறினாள். உயிர் விடுவதற்கு முன்பு கொலை செய்தவனைப் பார்க்கிறாள். அது ஸ்டூவர்ட்; கேத்தரினின் தற்போதைய காதலன். அப்பொழுது உடை அலங்காரங்களால் அவன் வேறுவிதமாக தோன்றினாலும், அவளால் அவனை அடையாளம் காணமுடிகிறது. இறக்கும்போது ஜோகனுக்கு வயது இருபத்தியொன்று.
 
இறப்புக்குப் பிறகு அவள் தனது உடலுக்குமேலே மிதப்பதுபோல் உணர்ந்தாள். கீழே நடப்பவைகளை, பார்க்க முடிகிறது. மேகம்வரை சென்றுவிட முடிகிறது. சீக்கிரத்தில் வெப்பமான இடத்துக்கு வருகிறாள். அடுத்த பிறவியை எடுக்கப் போகிறாள்.
 
“என்னை யாரோ பிடித்திருக்கிறார்கள்.” கனவில் இருப்பதுபோல் முணகினாள். “நான் பிறப்பதற்கு யாரோ உதவுகிறார்கள். பச்சை நிற ஆடையும், வெண்ணிற மேலாடையும் அணிந்திருக்கிறார். வெள்ளைத் தொப்பியும் அணிந்திருக்கிறார். தொப்பி இரண்டு பக்கங்களிம் மடித்து வைத்ததுபோல் இருக்கிறது. ஜன்னலும், கட்டிடமும் பார்க்க வேடிக்கையாக உள்ளது. கட்டிடம் கற்களால் கட்டப்பட்டுள்ளது. எனது அம்மா, நீண்ட கருத்த முடியுடன் இருக்கிறார். என்னைத் தூக்க விருப்பப்படுகிறார். அவர் வேடிக்கையான இரவு நேர உடை அணிந்திருக்கிறார். அம்மா என்னைத் தூக்கும்பொழுது, அவர் சட்டை உராய்வது எனக்கு வலிக்கிறது. மீண்டும் சூரிய வெளிச்சத்திலும், வெப்பத்திலும் இருப்பது சுகமாக உள்ளது. அந்த அம்மா, எனக்கு இப்பொழுது உள்ள அம்மாதான்.”
 
சென்றவார சிகிச்சையின்பொழுது கேத்தரின் முற்பிறவிகளில் வருபவர்களை ஞாபகப்படுத்தி அவர்களை இப்பிறவியில் உள்ளவர்களுடன் தொடர்பு படுத்த முடிகிறதா, அடையாளம் காணமுடிகிறதா, என்று அறியுமாறு கூறியிருந்தேன். நான் ஆராய்ச்சி கட்டுரைகளின் வழியாக அறிந்திருந்தபடி, ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் ஒரு குழுவாகவே பிறக்கின்றன. ஒரு பிறவியில் இருந்த கர்மாவை மறுபிறவியில் தீர்க்க வேண்டியுள்ளது. இதற்காக மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
 
உலகுக்குத் தெரியாத, எனக்கு நேர்ந்த இந்த வித்தியாசமான அனுபவத்தை என்னுடைய கிளினிக் அறையில் அமர்ந்தபடி உறுதி செய்ய விரும்பினேன். கடந்த பதினைந்து வருடங்களாக எனக்குள்ள ஆராய்ச்சி அனுபவத்தின் மூலம், காதரின் கூறிய வித்தியாசமான கருத்துக்களை விஞ்ஞான பூர்வமாக மதிப்பீடு செய்யவேண்டியிருப்பதை உணர்ந்தேன்.
 
ஹிப்னடைஸ் சிகிச்சை நடந்த காலக்கட்டங்களில் கேத்தரின் ஆருடம் சொல்பவள் போல் ஆகி விட்டாள். அவள் சமயங்களில், நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை சொல்வது உண்மையாகக் கூட இருந்தது. ஹிப்னடைஸ் சிகிச்சையின்பொழுது என்னுடைய கேள்விகளையும் சரியாக யூகிக்க ஆரம்பித்தாள். அவளுடைய கனவுகளும் முன்கூட்டியே நடப்பவைகளை தெரிவிப்பனவைகளாகவே இருந்தது.
 
ஒரு முறை ஹிப்னடைஸ் சிகிச்சையின்பொழுது கேத்தரின் அவளுடைய பெற்றோர்களை அழைத்து வந்தாள். அவள் தந்தை நிகழ்வன குறித்து நிறைய சந்தேகித்தார். கேத்தரின் தந்தையிடம் நிரூபிப்பதற்காக அவரை, அவள் குதிரை பந்தயத்திற்கு அழைத்துச் சென்றாள். தந்தையின் கண்ணெதிரே ஒவ்வொரு பந்தயத்திலும் வெற்றி பெறும் குதிரையை தேர்ந்தெடுத்துக் காட்டினாள். கேத்தரினின் தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்தார். தன் நிலையை நிரூபித்தபிறகு, குதிரைப் பந்தயத்தில் வென்ற அனைத்து பரிசு தொகையையும், தெருவுக்கு வந்தவுடன் பார்த்த முதல் பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டாள். தனக்கு கிடைத்த ஆன்மீக சக்தியை பொருளீட்ட உபயோகிக்கக் கூடாதென்று அவள் உள்ளுணர்வு அவளுக்கு உணர்த்தியது. தான் பெற்றுள்ள சக்தி, பொருளீட்டுவதைக் காட்டிலும் மிகவும் அர்த்தமுள்ளது என்று நம்பினாள். கேத்தரின் ஹிப்னடைஸுக்கு முதலில் பயந்ததாகவும், பிறகு நிலைமையில் முன்னேற்றமடைந்த உடன், திருப்தியுடன் மேலும் ஹிப்னடைஸுக்கு சம்மதித்தாக கூறினாள். நான் குதிரைப் பந்தயத்தில் அவளுடைய ஆருடம் சொல்லும் சக்தியைப் பார்த்ததும் மிகவும் அதிச்சியும், வியப்பும் அடைந்தேன். இது தெள்ளத்தெளிவான நிரூபணம். அவளால் அனைத்து பந்தயங்களிலும் வெற்றி பெறும் குதிரைகளைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. இது ஒரு தற்செயலான நிகழ்ச்சி கிடையாது. கடந்த சில வாரங்களாக நிகழும் நிகழ்ச்சிகள் மிகவும் புதுமையான அனுபங்களாக உள்ளன. அவை என்னுடைய சிந்தனைகளை நிலைகுலைய செய்கின்றன. அவளுடைய ஆரூடம் சொல்லும் திறமையை என்னால் மறுக்க இயலவில்லை. அவளுடைய இந்தத் திறமை உண்மையானால், அவள் தன்னுடைய பிறவிகள் பற்றி கூறியவைகளும் உண்மையாகத்தானே இருக்க வேண்டும்?
 
தற்போது மீண்டும் ஒரு பிறவி எடுத்திருக்கிறாள். இப்பிறவி சமீப காலங்களில் நிகழ்ந்தது போல் உள்ளது. அவளால் வருடத்தை கணிக்க இயலவில்லை. அவள் பெயர் எலிசபெத்.
 
“வீட்டில், நான்தான் பெரியவள். எனக்கு தம்பியும், இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள். எனது அப்பா இங்கே இருக்கிறார். அவர் எட்வர்ட். (என்னை சிபாரிசு செய்த டாக்டர்). அப்பாவும், அம்மாவும் சண்டை போடுகிறார்கள். உருளைக்கிழங்கும், பட்டாணியும் உணவு. உணவு சூடாக இல்லை என்று அப்பாவுக்குக் கோபம். எப்பொழுதும் சண்டை போடுகிறார்கள். அப்பா குடித்தபடியே இருக்கிறார். அம்மாவை அடிக்கிறார். (கேத்தரின் மிகவும் பயப்படுகிறாள், அவள் உடம்பு நடுங்குகிறது.) குழந்தைகளைத் தள்ளி விடுகிறார். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை. அவர் முன்புபோல் இல்லை. அவர் அங்கிருந்து போனால் நல்லது என்று நினைக்கிறேன்” அவள் ஒரு குழந்தையைப் போல் பேசினாள்.
 
நான் ஹிப்னாடிஸ சிகிச்சையின்பொழுது, கேத்தரினைக் கேள்விகள் கேட்பது என்னுடைய வழக்கமான முறையாக இல்லை. நான் கிட்டத்தட்ட ஒரு வழிகாட்டிபோல கேள்விகள் கேட்டேன். கேத்தரினுடைய பிறவிகளின் முழுவாழ்க்கையையும், ஓரிரு மணிநேரங்களில் அலசி ஆராய வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், அவளுடைய வாழ்க்கையில் நிகழும் ஏதேனும் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் போன்றவைகளை தற்போது அவளுக்குள்ள பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்த முடிகிறதா என்றும் கண்டுபிடிக்க முயற்சித்தேன். வழக்கமான சிகிச்சையை, இன்னும் பொறுமையாகவும், விரிவாகவும் செய்வதற்கு இயலும் நோயாளிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாக ஆராய்ந்து, அதில் மறைந்திருக்கக்கூடிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளையும், ஒவ்வொரு உடல் மொழிகளையும், பேசுவதில் வெளிப்படும் உணர்ச்சிகளையும், மிகவும் கவனமாக மதிப்பீடு செய்தல் வேண்டும். உணர்வுபூர்வமான மாற்றங்கள் அனைத்தையும் சோதனைக்கு ஆளாக்க வேண்டும். நோயாளிகளுடைய அனைத்து நடவடிக்கை மாற்றங்களையும், அலசி ஆராய்ந்து தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கேத்தரினை பொறுத்தவரை வருடங்கள் நிமிடத்தில் ஓடிவிடுகின்றன. அதாவது, மணிக்கு ஐநூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் காரில் இருந்துகொண்டு, கூட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க முயல்வதுபோல் உள்ளது.
 
நான் மீண்டும் என் கவனத்தை கேத்தரின்மீது செலுத்தி, காலத்தில் முன்னோக்கி செல்லுமாறு கூறினேன்.
 
“எனக்கு இப்பொழுது திருமணம் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் மிகப்பெரிய அறை ஒன்று உள்ளது. என் கணவருக்கு மஞ்சள் நிற முடி உள்ளது. அவரை நான் பார்த்திருப்பதாக ஞாபகம் இல்லை. (தற்போதைய பிறவியில்). எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார். நாங்கள் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம். எங்கள் வாழ்க்கை இன்பமாக உள்ளது.” அவளுடைய பிறந்தவீட்டு தொல்லைகளிலிருந்து, அவள் தப்பிவந்திருப்பது தெளிவாக தெரிகிறது. அவளுக்கு வசிப்பிடம் தெரிகிறதா என்று கேட்டேன்.
 
“பிரென்னிஸ்டன்?” கேத்தரின் முணுமுணுத்தாள். “வேடிக்கையான அட்டைகள் கொண்ட புத்தகங்களைப் பார்க்கிறேன். பெரிய புத்தகத்தை ரிப்பனால் கட்டி இருக்கிறார்கள். . . . . . . அது பைபிள். அது பெரிய எழுத்தில் உள்ளது. அது கயீலிக் (அயர்லாந்தில் ஒரு மொழி) மொழியில் உள்ளது.”
 
அந்த நேரத்தில் அவள் கூறிய சில வார்த்தைகளை எனக்கு அடையாளம் காணமுடியவில்லை. அது கையீலிக் மொழியாக இருந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை.
 
“நாங்கள் உள்நாட்டில் வசிக்கிறோம். கடலில் இருந்து மிகவும் தூரமாக உள்ளது. . . . . . . மாவட்டம். . . . . . . பிரென்னிஸ்டன்?. . . . . . . பன்றிகளும், செம்மறி ஆடுகளும் உள்ள ஒரு பண்ணை தெரிகிறது. அது எங்களுடைய பண்ணை.” இன்னும் காலத்தில் முன்னோக்கி சென்றாள். “எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். . . . . . . பெரியவனுக்கு திருமணம் நடக்கிறது. சர்ச்சின் கோபுரத்தைக் காண்கிறேன்.” திடீரென்று அவள் தலையில் அடிபட்டு விட்டது. வலியில் தலையைப் பிடித்துக் கொள்கிறாள். படிக்கட்டில் விழுந்துவிட்டதாகக் கூறினாள். ஆனால் குணமாகிவிடுகிறது. வயதானபிறகு, சுற்றிலும் உறவினர்கள் இருக்கும் சமயத்தில் உயிர் பிரிகிறாள். இறந்த பிறகு மீண்டும் மிதப்பதுபோல் உணர்கிறாள். இந்தமுறை அவளுக்கு பதற்றமோ, குழப்பமோ இல்லை.
 
“பிரகாசமான ஒளியைக் காண்கிறேன். மிகவும் இனிமையாக உள்ளது. அந்த ஒளி எனக்கு மிகுந்த சக்தி தருகிறது.” ஒரு பிறப்புக்கும் மறு பிறப்புக்கும் இடையில் ஓய்வெடுக்கிறாள். சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது. திடீரென்று பேச ஆரம்பித்தாள். எப்பொழுதும்போல் முணுமுணுப்பாக, பொறுமையாக பேசவில்லை. சத்தமாக, கரகரப்பான குரலில் தயக்கம் ஏதுமின்றி பேச ஆரம்பித்தாள். “ஞானத்தின் மூலம் இறைவனைப்போல ஆவது நமது கடமை. நாம் அறிந்தது மிகவும் குறைவானது. ஞானத்தின் வழி இறைவனை நோக்கி பயணிக்கிறோம். பயணம் முடிந்தவுடன் நாம் அமைதியாகலாம். பிறகு மீண்டும் இங்கு வந்து அனைவருக்கும் கற்பிப்போம்; உதவிகள் செய்வோம்.”
 
நான் வாயடைத்து நின்றேன். இறப்புக்கும், பிறப்புக்கும் இடையில் உள்ள நிலையிலிருந்து அறிவுரைகள் வருகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன? பேசியது கேத்தரின் போலவே இல்லை. இதுபோல வார்த்தைகளை அவள் உபயோகப்படுத்தியதே இல்லை. அவள் பேசிய தோரணையும், குரல் ஒலியும் முற்றிலும் வேறானதாக இருந்தது.
 
அத்தருணத்தில், கேத்தரின் பேசியிருந்தால் கூட, அந்த வார்த்தைகள் அவளிடமிருந்தோ, அவள் எண்ணங்களில் இருந்தோ உதித்ததாக எனக்குத் தோன்றவில்லை. யாரோ அவள் வழியாக கூறுவதைப்போல் உணர்ந்தேன். பிறகு அந்த வார்த்தைகள் மிகவும் மேன்பட்ட ஆன்மாக்கள், அவளை வழிநடத்துபவர்களாக (MASTER SPRITS) இருப்பவர்களிடமிருந்து உதித்த வார்த்தைகள் என்று கூறினாள். அந்த ஆன்மாக்கள் கேத்தரின் வழியாக என்னிடம் பேசமுடிந்தது. கேத்தரின் அவளுடைய பிறவிகளின் அனுபவங்களை கூறுவதைத் தவிர, இப்பொழுது மேன்பட்ட ஆன்மாக்களிடமிருந்தும் எனக்கு அறிவுரை கூற முடிகிறது. வரப்பிரசாதமான அறிவுரைகள்! என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை, என் நினைவில் நிறுத்துவது எனக்கு மிகுந்த போராட்டமாக உள்ளது.
 
புதிய பரிமாணம் துவங்கியுள்ளது. டாக்டர் ரேமண்ட், டாக்டர் எலிசபெத் இருவரும் இறப்புக்கு அருகில் இருந்தவர்களின் அனுபவங்களை எழுதி இருக்கிறார்கள். கேத்தரின் அவற்றை படித்திருக்கவில்லை. “திபெத்தியனின் இறந்தவர்களைப் பற்றிய புத்தகம்” என்ற புத்தகத்தையும் அவள் கேள்விப்பட்டதில்லை. இருந்தாலும் அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டிருப்பவைகளும், கேத்தரின் அனுபவங்களும் மிகவும் ஒத்துப் போகின்றன. இது ஒரு வகையில் நிரூபணமாகிறது.
 
இன்னும் உண்மைகளும், உறுதியான விவரங்களும் என்னால் சரி பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். என்னுடைய சந்தேகங்கள் இன்னும் ஊசலாடிக்கொண்டிருந்தன. கேத்தரின் ஏதாவது பத்திரிக்கையில் படித்திருக்கலாம், தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். ஆனால் அவள் தனக்கு நினைவிலிருந்தவரை இப்படிப்பட்ட அனுபவங்களை அறிந்ததில்லை என்று கூறினாள். இருந்தாலும் அவளது ஆழ்மனதில் அவளறியாமல் பதிந்திருக்கலாம். கேத்தரின் அறிவியலாளர்கள் எழுதியதையும் கடந்து, இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தபொழுது தகவல்களை அனுப்பினாள்; தகவல்களை அனுப்ப முடிந்தது. எனக்கு இன்னும் உறுதியாக உண்மைகள் தெரியவேண்டும்.
 
எப்பொழுதும்போல் கேத்தரின் இயல்பு நிலைக்கு வந்த பிறகு, அவளுடைய ஹிப்னடைஸ் அனுபவங்களை நினைவில் நிறுத்தியிருந்தாள். இருப்பினும், கேத்தரின் எலிசபெத்தாக இருந்த பிறவியில் இறந்தபிறகு எனக்கு கூறியவைகள் அவள் நினைவில் இல்லை. பிறகு நடந்த சிகிச்சைகளின்பொழுதும் இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தை அவளால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை மட்டுமே அவளால் நினைவில் நிறுத்த முடிந்தது.
 
“ஞானத்தின் மூலம் இறைவனை நோக்கி பயணிக்கிறோம்.” நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம்.
 
 
கொசுறு:
 
மனதை நெகிழ வைத்த நிகழ்ச்சி:
ஹைதராபாத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி ஒன்றில் 2010-ல் நிகழ்ந்த சம்பவம். பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. ஐம்பது மீட்டர் ஓட்டப்பந்தயம். கலந்து கொண்ட குழந்தைகள் பந்தயம் துவங்கியதும் ஓட ஆரம்பித்தார்கள். அனேக குழந்தைகள் பாதி தூரத்தைக் கடந்துவிட்டார்கள். பின்னால் ஓடிவந்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று கீழேவிழுந்து விட்டது. பலமாக அழஆரம்பித்து விட்டது. சாதாரண பள்ளியில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன். ஆனால் அந்த பள்ளியில் நிகழ்ந்தது என் மனதில் பதிந்துவிட்டது. ஓடிக்கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும், திரும்பி வந்து, கீழே விழுந்த குழந்தையை தூக்கிவிட்டு அவனையும் சேர்த்துக் கொண்டு ஒட்டப்பந்தயத்தை முடித்தனர். பந்தயம் முடிந்தவுடன் உண்டான கைத்தட்டல் முடிய நிறைய நேரம் பிடித்தது. பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
நடைமுறை முரண்பாடு:
இரண்டு பேர் காட்டுப்பாதையில் சேர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். சற்று தூரத்தில் புலி ஒன்று பதுங்கிப் பதுங்கி அவர்களை நோக்கி வருவதை கவனித்தார்கள். இருவரில் ஒருவன் ஓடுவதற்கு தயாராக ஷூ லேசை சரியாக கட்ட ஆரம்பித்தான். அடுத்தவன் அவனிடம் “எப்படி இருந்தாலும் நம்மால் புலியை விட வேகமாக ஓடிவிட முடியாது. ஏன் நேரத்தை விரயம் செய்கிறாய்?” என்றான். முதலாமவன் “நான் புலியைவிட வேகமாக ஓடமுடியாது என்று எனக்குத் தெரியும். இப்பொழுது நான் உன்னை விட வேகமாக ஓடினால் போதும்” என்று கூறிக்கொண்டே ஓடிவிட்டான். விரும்பியோ விரும்பாமலோ, நாமும், ஒப்பிடுகையில் அடுத்தவரைவிட வேகமாக ஓடவேண்டிய கட்டாயம் இன்று.

6 comments:

  1. சில நிகழ்வுகள் பற்றி கேத்தெரின் கூறுவது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. பதிவை படிக்கும்போது முன் ஜன்மம் பற்றி சிலர் கூறுவது சரிதானோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

    கொசுறுவில் தந்த இரு நிகழ்வுகளும் மனிதர்களின் இரு வேறுபட்ட குணத்தை காண்பித்தாலும் முதல் நிகழ்வு மனதை நெகிழவைத்தது என்பது உண்மை. .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், தொடருவதற்கும் மிகவும் நன்றி ஐயா !

      சில விஷயங்களை நம்புவது மிகவும் கடினம். நமக்கு ஏற்படும் அனுபவங்களையே, சில சமயங்களில் கிள்ளிப் பார்த்து, உறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்தவர் கூறுவதை நம்புவது என்பது அவரவர்கள் அனுபவங்களைப் பொறுத்தே அமையும். முடிந்தால் இந்த லிங்க்-ஐ நாடி ஜோதிடத்துக்குப் பார்க்கவும்.
      http://puthu.thinnai.com/?p=19333. அந்த வயதான அம்மாள் பொய் கூற வாய்ப்புகள் இல்லையென்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
    2. நீங்கள் தந்த Link இல் சென்று படித்தேன். அந்த அம்மாள் சொல்வதுசரிதான். ஆனாலும் கீழே நான் தந்துள்ள எனது பதிவுகளை படிக்கவும்.

      http://puthur-vns.blogspot.com/2011/04/1.html
      http://puthur-vns.blogspot.com/2011/04/2.html
      http://puthur-vns.blogspot.com/2011/04/3.html
      http://puthur-vns.blogspot.com/2011/04/4.html

      Delete
    3. நன்றி ஐயா! நீங்கள் அந்த பதிவு எழுதியது நினைவில் வந்ததாலும், முன்ஜென்மம் குறித்து ஐயம் ஏற்படுவது சரிதானோ என்று கூறியதாலுமே நான் அந்த லிங்க்-ஐ பார்க்குமாறு எழுதினேன். என்னைப் பொறுத்தவரை, மறுபிறவி உண்டோ இல்லையோ நான் யோசிப்பது கிடையாது. ஜோதிடம் பார்த்ததுமில்லை. ஆனால் இரண்டிலும் நம்பிக்கை உண்டு. இந்த பிறவியை நம்மால் முடிந்தவரை, குற்ற உணர்வின்றியும், முடிந்தவரை மகிழ்ச்சியுடனும், உடல் நலத்துடனும் வாழ முயற்சிப்பது நல்லது என்பது என் கருத்து. அப்படியும், சமயங்களில் நம்மைமீறி காரியங்கள் நடந்துவிடுகின்றன. பழியை விதியின் மீது சாட்டிவிட்டு பயணத்தைத் தொடர்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. சுவாரஸ்யமாகவும், வியப்பாகவும் இருக்கிறது...

    ~~~~~~~~

    மனவளர்ச்சி குன்றியுள்ளது குழந்தைகள் அல்ல... நாம் தான் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை "நடைமுறை முரண்பாடு" விளக்கியது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், தொடருவதற்கும் மிகவும் நன்றி தனபாலன் !
      நீங்கள் கூறுவது மிகவும் உண்மை. ஆனால், கலிகாலத்தில் (எக்காலத்திலும்) நடைமுறை வாழ்க்கையில் ஊரோடு ஒத்துப்போகாமல் வாழ்வது என்பது இயலாது. எண்ணங்களே மாறிவிட்டன. என்னதான் செய்ய முடியும்?

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete