பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 21, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 18

“நம் குழுவினரால் வெற்றி பெறமுடியாது என்று அனைவரும் நம்புவதற்கு இந்த ஆறு காரணங்களையே கூறுகிறார்கள்.” 1996-ல் பக்கனர் குழுவுக்கு பயிற்றுவிப்பாளராக பதவியேற்றவுடன் டங்கி அந்தக் குழுவினரிடம் கூறுகிறார். அமெரிக்கன் ஃபுட்பால் சீசன் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆட்டம் அது. ஊடகங்களின் வழியாக கிடைத்த தகவல்களின்படி டங்கி பட்டியலிட்டார். “குழுவின் நிர்வாகம் குழப்பமாக உள்ளது. பயிற்றுவிப்பாளர் புதியவர். விளையாடுபவர்களின் மனநிலை கெடுக்கப்பட்டுவிட்டது. சமூகம் இவர்களைக் கண்டுகொள்வது கிடையாது. விளையாடுபவர்களும் போதுமான திறமையைப் பெற்றிருக்கவில்லை.”


“ஆனால் இவையனைத்தும் மற்றவர்கள் நினைக்கக்கூடிய காரணங்கள் மட்டுமே. இன்னொரு உண்மையையும் கூறுகிறேன். இப்படிக் கூறுபவர்கள் நமக்கு எந்த விதத்திலும் உதவப்போவது கிடையாது.”


விளையாடுபவர்கள் தங்களது திறமையை தன்னிச்சையான செயல்களாக மாற்றுவதற்கான பழக்கங்களை டங்கி எடுத்துரைத்தார். குழுவினர் பல்வேறுபட்ட அனைத்து திறமைகளையும் நினைவுபடுத்திக்கொண்டு விளையாடவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. சில முக்கியமான விளையாடும் திறமைகளை அவர்கள் வளர்த்துக்கொண்டு, அவைகளை சரியான தருணத்தில் தவறின்றி உபயோகப்படுத்தினாலே போதும் என்று அவர் கூறினார்.


என்னதான் சொன்னாலும் அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டிலும் கொஞ்சமும் பிழையின்றி சரியாக திறமைகளை உபயோகிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. “ஒவ்வொரு விளையாட்டின் பொழுதும், தவறாமல், குழுவில், ஒருவராவது தவறாக விளையாடிவிடுவார்கள்.” ஹெர்ம் எட்வர்ட்ஸ் என்ற டங்கியின் உதவியாளர் கூறுகிறார். “அதிக நேரங்களில் அது மன வலிமையைப் பொறுத்ததே. உடல் திறமையைப் பொறுத்ததல்ல.” என்று தொடர்கிறார். விளையாட்டாளர்கள் பலதரப்பட்ட நுட்பங்களை யோசித்து, அதில் ஏதாவது ஒன்றை உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை, விளையாடும்பொழுது ஏற்படுகிறது. டங்கி விளையாட்டின்பொழுது இத்தகைய முடிவெடுக்கும் செயல்களை முற்றிலுமாக நீக்கிவிட விரும்பினார். தன்னிச்சையாக இந்த கட்டத்தில், இந்த மாதிரியான முடிவுகளையே எடுக்கவேண்டும் என்ற பழக்கத்தினை அவர்களிடத்தில் ஏற்படுத்த விரும்பினார்.


இதற்காக, முதலில் விளையாட்டாளர்களுடைய தற்போதைய பழக்கங்களை, அவர்களை உணரச்செய்ய வேண்டும். அப்படி உணர்ந்ததும் அவர்களிடம் புதிய செயல்முறைகளை போதித்து செயல்படுத்தவைக்கவேண்டும்.


முதலில் டங்கி தன்னுடைய குழுவினர் எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை உற்று கவனித்தார். அமெரிக்கன் ஃபுட்பாலில் எதிரணி உறுப்பினர்களும், தன்னுடைய அணியின் உறுப்பினர்களும் எந்த இடத்தில் இருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று கவனிப்பது மிகவும் முக்கியமானது. கண்களால் காண்பதே இங்கு துப்பாக உபயோகப்படுத்தப்படுகிறது. கண்டபிறகு தான் என்னசெய்யவேண்டும் என்று முடிவெடுப்பது அடுத்த செயல். அப்படி முடிவெடுப்பதற்கு, விளையாட்டாளர்களுக்கு சிந்திக்க அவகாசம் தேவைப்பட்டது. அந்த நேரவிரயமும், தவறான முடிவெடுத்தலும், டங்கியின் குழுவினருக்கு வெற்றி பெறும் வாய்ப்பைக் குறைப்பதை டங்கி உணர்ந்தார்.
டங்கியின் முக்கியமான குறிக்கோள் ஆட்டக்காரர்கள் விளையாட்டுத்திடலில் சிந்தித்து முடிவெடுப்பதைக் குறைக்கவேண்டும் என்று இருந்தது. ஒவ்வொரு ஆட்டக்காரர்களையும், இப்படிப்பட்ட தருணத்தில், இந்த மாதிரியான தொடர்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் பயிற்றுவித்தார்.


முன்பு இருந்த துப்புகளைக்கொண்டு அவர்கள் விளையாடும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினார். ஆட்டத்தின்பொழுது திடலில் முடிவெடுக்கும் நேரத்தினைக் குறைத்தார். இதனால் குழுவினரின் ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஒரேமாதிரியான செயல்களை செய்ததால், அவர்களுக்கு இந்த சூழ்நிலையில் இப்படித்தான் விளையாடவேண்டும் என்ற பழக்கம் உருவானது. பழக்கத்தின் காரணமாக அவர்களுடைய வேகமும் அதிகமானது.


ஆரம்பத்தில் பழக்கம் ஒரு நிலைக்கு வருமுன், டங்கி குழுவினர் ஆட்டத்தில் தோல்வியையே தழுவினர். ஊடகங்கள் டங்கி மனோவியல் வழிச்சென்று நேரத்தை விரயம் செய்கிறார் என்று கூற ஆரம்பித்தன. ஆனால் டங்கி குழுவினரின் ஆதிக்கம், தொடர்ந்து வந்த போட்டிகளில் மெல்ல மெல்ல உயரத்தொடங்கியது. பழக்கத்தின் காரணமாக டங்கி குழுவினரின் ஆட்டப்போக்கும், தன்னிச்சையாக இயங்கும் நிலையை அடைந்தது. கடந்த பதினைந்து வருடங்களாக விடாமல் தோல்விகளையே சந்தித்துகொண்டிருந்த பக்கனர் அணியினர், 1999-ல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளைப்பெற்று அவரகள் விளையாடிய டிவிஷனின் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர்.


டங்கியுனுடைய பயிற்றுவிக்கும் பாணி அமெரிக்காவில் தேசிய அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் டங்கியிடம் பேட்டியெடுக்க போட்டிபோட்டனர். மென்மையாகப் பேசும் தன்மையும், ஆன்மீகவாதியுமான டங்கி தொழிலையும் குடும்பத்தையும் சரியான விகிதத்தில் நிர்வகித்துவந்தார். ஊடகங்கள் டங்கியைக் குறித்து அதிக அளவில் அறிந்துகொள்ள முயற்சித்தன. இறுதியில் டங்கிக்கும், பக்ஸ் (பக்கனர்) அணிக்கும் அவர்கள் நினைத்த வெற்றி கிட்டியது.


தொடர்ந்து 2000, 2001 வருடங்களிலும் பக்ஸ் அணியினர் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டனர். இறுதி ஆட்டம்வரை, சூப்பர் பவுல் போட்டிகளில், பக்ஸ் அணி, ஒரு முக்கியமான அணியாகக் கருதப்பட்டது. அவர்கள் கனவுகள் அனைத்தும் நனவாகின.
பக்ஸ் அணியினர் மிகவும் சிறப்பான அணியாக உருவெடுத்தாலும் அவர்களுக்கும் பிரச்சனை உருவானது. சாதாரணமாக, டங்கியின் பயிற்சியின் கீழ் அவர்கள் திட்டமிட்டபடி சரியாக விளையாடி வெற்றி பெறுவார்கள். ஆனால் மிகவும் திறமைமிக்க குழுவுடன் விளையாடும்பொழுது, நெருக்கடியான நேரங்களில் அவர்களது அணியும் சிதறத் துவங்கிய நேரங்களும் உண்டு.


2000-ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பிடடெல்ஃபியா அணியுடன் மோதி, 21-க்கு 3-புள்ளிகளை மட்டுமே எடுத்து அவர்கள் படுதோல்வி அடைந்தனர். அதுபோலவே 2001-லும் இறுதிப்போட்டியில் ஈகிள்ஸ் அணியினை எதிர்த்து போட்டியிட்டு 31-க்கு 9 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றனர்.


“எங்கள் அணி எவ்வளவுதான் பயிற்சி பெற்று பழக்கத்தை உருவாக்கியிருந்தாலும், நெருக்கடியான சூழ்நிலையில் பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள்.” டங்கி தொடர்கிறார். “ஆட்டக்கார்களிடம் கேட்டதற்கு, தோற்றுவிடுவோம் என்று எண்ணியதால் நான் பழக்கத்திலிருந்து மாறுபட்டு முயற்சி செய்தேன் என்று சிலர் கூறினர். என்னை எல்லோரும் கைவிட்டுவிட்டதுபோல் உணர்ந்தேன் என்றும் சிலர் கூறினர்.” மொத்தத்தில் பழக்கம் காரணமாக சரியாக விளையாடினாலும், நெருக்கடியான நேரத்தில் பழக்கத்தைக் விட்டு அவர்கள் விலகிவிட்டார்கள். அதுவும் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.


2000, 2001-ல் தோல்வியடைந்த பிறகு டங்கி, பக்ஸ் குழுவினரின் பயிற்றுவிப்பாளர் பணியிலிருந்து விலக்கப்பட்டார். இருந்தாலும் டங்கியின் உதவியுடன் மேற்கொண்டிருந்த அதே பழக்க முறைகளை உபயோகித்து பக்ஸ் குழுவினர் சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப்பை அடுத்த வருடத்தில் வென்றார்கள். குழுவின் பயிற்றுவிப்பாளர் லம்பார்டியும் குழுவினருடன் சேர்ந்து வெற்றிக்கோப்பையைப் பெற்றுக்கொண்டார். 


டங்கி தோற்றாலும், பழக்கம் பக்கனர் அணியினரைக் கைவிடவில்லை.




- தொடரும்



கண்டு அதிர காணொளி :











6 comments:

  1. “அதிக நேரங்களில் அது மன வலிமையைப் பொறுத்ததே. உடல் திறமையைப் பொறுத்ததல்ல.” //

    உண்மைதான். இது நம்முடைய கிரிக்கெட் அணியினரின் சமீபத்திய விளையாட்டிலும் தெரிந்தது. ஆன்டர்சின் பிரச்சினைக்குப் பிறகு நம்முடைய அணியிலுள்ள பலரும் மனத்தளவில் பாதிப்படைந்துள்ளனர். அதுவே அடுத்து வந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியுறச் செய்தது போலும். அருமையான தொடர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      ஆமாம். உண்மையில் ப்ரொஃபஷனல் விளையாட்டு வீர்ர்களுக்கு, விளையாட்டு பயிற்சி அளவுக்கு, தனிப்பட்ட மனேவியல் பயிற்சியாளர்களின் உதவியும் மிகவும் அவசியம் என்று படித்திருக்கிறேன்.
      வெறும் விளையாடும் திறமை மட்டும் வெற்றியைத் தந்துவிடாது.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  2. மன வலிமை மகத்தான மாற்த்தைக் கொடுக்கும்
    கானொளி கண்டு உண்மையிலேயே அதிர்ந்தேன் நண்பரே

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete
  3. //“அதிக நேரங்களில் அது மன வலிமையைப் பொறுத்ததே. உடல் திறமையைப் பொறுத்ததல்ல.”//

    சரியான மதிப்பீடு. நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் தோல்வியுறுவதன் காரணம் இதுதான் என நினைக்கிறேன். நமது விளையாட்டு வீரர்களுக்கும் டங்கி போன்றவர் தேவையென நினைக்கிறேன்.

    காணொளியைக் கண்டேன். சர்க்கஸில் காணும் மயிர்கூச்செரியும் காட்சி போல் இருந்தது அந்த காட்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      இந்தியாவைப் பொறுத்தவரை, என்னுடைய அபிப்ராயப்படி, அதிகமானோர் தன்னுடைய புரஃபஷனை தங்களுடைய உண்மையான passion–க்கு ஏற்றபடி எடுத்துக்கொள்வதில்லை. உண்மையான passion-- இல்லாமல் ஒரு துறையில் உலக அளவில் முதன்மை நிலைக்கு வருவது என்பது இயலாத காரியம்.

      ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீர்ர், தன்னுடைய சொந்த முயற்சியாலேயே வென்றார் என்று படித்த்தாக நினைவு.
      தாங்கள் சொல்வது போல passion–உள்ள ஒரு பயிற்சியாளரும் வெற்றிக்கு ஒரு முக்கிய தேவைதான்.

      விபத்தின்பொழுது 80 கி.மீ வேகத்தில் சென்றிருக்கிறார்கள். பைக் ஓட்டியவர் பிரச்சனையின்றி பிழைத்துக்கொண்டாராம்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்.

      Delete